Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

‘நான் என்ன செஞ்சிட்டேன்..’ என்று இன்னமும் அதே பிடியில் நின்றார்..

நரசிம்மனோ வனமாலிக்கு திரும்ப அழைக்க, அவன் அப்போது பார்த்து வந்த அழைப்பை ஏற்காது வேறு வேலையாய் இருக்க, இப்போது அவரோ கமலிக்கு அழைத்தார்.

“சொல்லுங்க சித்தப்பா..” என்ற கமலிக்கு அவர் எதற்கு அழைத்திருப்பார் என்று புரிந்தது..

“வனாக்கிட்ட அன்னிக்கு பேசினேன் ம்மா.. உனக்கிட்ட சொன்னானா..” என்று அவர் கேட்டதும் இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘இவர் எப்போ பேசிருப்பார்..’ என்றெண்ணியவள் “ஆ.. அது அது வந்து சொன்னார் சித்தப்பா..” என்று தயங்கி இழுக்க,

“நல்லதும்மா என்ன முடிவு பண்ணிருக்கீங்க..??” என்றார் அவரும்..

கமலிக்கோ என்ன பதில் சொல்வது என்பதே தெரியவில்லை. வனமாலியிடம் இவர் என்ன கேட்டார் என்பதே தெரியாதபோது இவள் என்ன பதில் சொல்லிட முடியும்.

“அது... அவரே சொல்றேன் சொன்னாரே சித்தப்பா.. வந்தனா மேரேஜ் வொர்க்ல பிசி.. அதான்..” என்றவள் மேற்கொண்டு அவர் பேச இடம் கொடாமல் “நான் அவரை கால் பண்ண சொல்றேன்...” என்றதும் “சரிம்மா ..” என்று அவரும் வைத்துவிட, அடுத்தநொடி வனமாலிக்குத்தான் அழைத்தாள்.

‘என்ன நினைச்சிட்டு இருக்கான்...’ என்ற எண்ணத்தில் தான் அழைத்தாள், அவனோ அப்போதும் எடுக்காது போக, சிறிது நேரத்தில் அவனே அழைத்துவிட்டான்.

“சொல்லு கமலி..” என, கொஞ்சம்கூட அவனின் குரலில் எவ்வித உணர்வுகளும் வெளிப்படவில்லை.

“நரசிம்மன் சித்தப்பா கால் பண்ணார்..” என்றுமட்டும் இவள் மொட்டையாக சொல்ல,

“ஓ..!!” என்றவன் “உனக்கு வேணும்னா நீ பேப்பர் மில் வாங்கிக்கோ..” என்றான் ஒரு வெற்று குரலில்.

என்னதான் அவன்மீது கோபம் இருந்தாலும், கமலிக்கு வனமாலியின் இந்த உணர்வற்ற தன்மை என்னவோ செய்தது நிஜம். அதிலும் அவன் நீ வங்கிக்கோ என்று சொன்னது ரொம்பவும் என்னவோ செய்ய, “என்ன விட்டு கொடுக்கிறதா நினைப்பா??!!” என்றாள் கொஞ்சம் கடுப்பாகவே..

“நான் அப்படி சொல்லலை.. எனக்கு இப்போ எதுவும் வாங்கனும்னு ஆசை இல்லை கமலி.. உனக்கு வேணும்னா நீ வாங்கிக்கோ.. அவ்வளோதான்...”

“ஓ..!!!”

“வேறெதுவும் சொல்லணுமா???”

‘என்னடா இது.. நான் சொல்ல வேண்டியதை இவன் சொல்றான்..’ என்று எண்ணியவள் “எனக்கும் வேணாம்.. நீங்க சொல்லி ஒன்னும் நான் வாங்கவேண்டியது இல்லை. எனக்கு இன்ட்ரெஸ்ட் போச்சு..” என்றாள் அவளும் இவனைப் போலவே..

“ஓகே கமலி.. உன் விருப்பம்..” என்றவன் போனை வைத்துவிட, இவளோ ‘என்னாச்சு இவருக்கு..’ என்றுதான் பார்த்தாள்.

‘பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ இப்படி இருந்தா என்ன அர்த்தம்..’ என்று யோசித்தவள் திரும்ப அவனுக்கு அழைக்க, “என்ன கமலி..” என்றான் ஒருவித தொய்ந்து போன குரலில்.. அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது அவனின் குரலில் இருந்த பேதம்..

‘என்னவோ சரியில்லை...’ என்று மனது சொன்னாலும் வேறெதுவும் பேசாது “எங்க இருக்கீங்க??” என்றாள்.

“ம்ம்ச் எதுக்கு கால் பண்ண??”

“பேசிட்டு இருக்கபோ வைச்சா என்னர்த்தம்.. கோவமா இருக்கவேண்டியது நான்.. நீங்கயில்லை..” என்றவள் “என்ன குடிச்சிருக்கீங்களா???” என்றாள் பட்டென்று.

அவனுக்கு அப்படியான பழக்கங்கள் எதுவுமில்லை என்று தெரியும். ஆனாலும் அவனின் குரலில் தெரிந்த பேதம் அவளை அப்படி கேட்க வைக்க, அவனோ “ம்ம்ம் அதான் செய்யணும்.. ரொம்ப ஒருமாதிரி இருக்கு..” என்றுவிட்டு திரும்ப வைத்துவிட்டான்..

கமலிக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவும் விளங்கவில்லை.. அவன் பேசியது சொன்னது எதுவும். அவளை சமாதானம் செய்ய முயல்கிறான் தான். ஆனாலும் இது அவளுக்கு எப்படியோ இருக்க, கோவர்த்தனக்கு அழைத்து “என்னாச்சு அவருக்கு...” என்றாள் மொட்டையாக..

அவனோ “அது... எல்லாம் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..” என்றான் அவனுமே கொஞ்சம் ஒருமாதிரி.

கமலியோ வனமாலிக்குத்தான் என்னவோ ஏதோவென்று பதறி “அச்சோ..” என்று எழுந்துவிட, “இல்ல,, பமீலா...” என்றான் கோவர்த்தன்..

மனதில் ஒரு சிறு ஆசுவாதம் தோன்றினாலும், அவளுக்கு என்னானது என்ற கேள்வி வர “அவளுக்கு என்ன??” என்றாள்..

“ம்ம்ச் ஒரு சின்ன சண்டை.. பேசிட்டு இருக்கவோ கையை கட் பண்ணிட்டா...”

“என்னது..??!!”

“ஹ்ம்ம் ஹாஸ்பிட்டல்ல இருக்கோம்..”

“எந்த ஹாஸ்பிட்டல்...” என்று கேட்டவள், அவன் சொன்னதும் அடுத்த நொடி வேறெதுவும் யோசிக்காது கிளம்பிவிட்டாள்.. மனதில் அந்தநொடி வேறெதுவுமே தோன்றவில்லை. பமீலா.. சரியான முட்டாள் என்பதை தவிர..

‘ச்ச்சே என்ன பொண்ணு இவ..’ என்ற கோபம் இருந்தாலும், என்னவோ முன்னிருந்த அந்த வெறுப்பு என்பதும், ‘அவளுக்கு என்ன ஆனா எனக்கென்ன..’ என்ற எண்ணமும் இப்போதில்லை.. அது அன்றே, மாறிப்போனது. பமீலாவின் கண்களில் இவளைப் பார்த்ததும் முதலில் தோன்றி மறையும் அந்த பயம்,

பின் அதுவே கோபமாக மாறி, அவளையும் மீறி என்ன பேசுகிறோம் என்பதையும் உணராது கத்த வைக்கும் நிலை. இதெல்லாம் கமலிக்கு இப்போது தான் புரிந்தது. ஆக அவள் மனதில் என்னவோ ஒன்று ஆரம்பத்தில் இருந்தே போட்டு உறுத்திக்கொண்டு இருந்திருக்கிறது, இன்றென்னவோ அது ஒரு சிறு விசயத்தில் வெளிவந்து இப்படி செய்திருக்கிறாள் என்றே தோன்றியது கமலிக்கு.

அவள் மருத்துவமனை செல்லும்போதே, சிவகாமி அழைத்து “நீ எங்க இருக்க??” என்று கேட்க,

“ஹாஸ்பிட்டல் போறேன் மா..” என்றுசொல்லி விஷயம் சொல்ல,

“நல்லது நானும் அதுக்குதான் கூப்பிட்டேன்.. நீ போ நானும் வர்றேன்..” என்றவர் வைத்துவிட்டார்..

பிடித்தமோ இல்லையோ சில உறவுகளை, நாம் உறவுகள் என்று ஏற்காவிடினும், இல்லை நம்மை யாரும் ஏற்காவிடினும் கூட, இப்படியான சில தருணங்களில் சந்திக்க வேண்டியும் இருக்கிறது, சகித்துக்கொண்டு போகவேண்டியாதாகவும் இருக்கிறது.

கமலி மருத்துவமனை செல்ல, அங்கேயோ அனைவரும் இருக்க, இவள் வந்ததுமே அனைவருக்குமே ஆச்சர்யம்தான். கோவர்த்தன் கூட சொன்னான் ‘கமலி வருகிறாள்..’ என்று. ஆனால் மணிராதாவோ ‘அவ எங்க வரப்போறா..’ என்ற எண்ணத்தில் இருக்க, வனமாலி மனதளவில் மிக மிக காயம் பட்டுப் போனான்.

ஒரு விதத்தில் பமீலாவின் இந்த செயலுக்கு அவனும் காரணம்.. ஏற்கனவே கமலியின் மனதை நோகடிதுவிட்டேன் என்றிய வலி, இப்போது இதுவும் சேர்ந்து அவனுக்கு தன்னிலை மறந்து போனால் என்ன என்ற நிலையில் இருந்தான். கமலி கேட்கையில் அதனால் அப்படி சொல்ல, கமலியோ இங்கே வந்ததும்

கோவர்த்தனிடம் “டாக்டர் என்ன சொன்னாங்க.?” என்று கேட்க, “இன்னும் வெளிய வரலை..” என்றான் அவன்.

அடுத்து அவளின் பார்வை இந்திரா பக்கம்தான் சென்றது, மணிராதாவிற்கும், வந்தனாவிற்கும் இடையில் அமர்ந்து அழுதுகொண்டு இருந்தார். பார்க்க பாவமாய்தான் இருந்தது.

‘இவர் கொஞ்சம் திடமாய் இருந்திருக்கக் கூடாதா?? முதுகெலும்பில்லாது இப்போது மகளையும் இந்நிலையில் நிறுத்தி..’ என்றுதான் நினைத்தாள். அவர்களிடம் செல்ல, இந்திராவோ இவளைப் பார்த்து ஒருமுறை திகைக்க, அவரையே ஒருநொடி பார்த்தவள், “சரியாகிடுவா..” என்றுமட்டும் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தாள்.

வனமாலி எங்கேயும் காணவில்லை. கண்கள் ஒருமுறை அந்த இடத்தையே அலசி ஆராய்ந்தது. ஆனாலும் அவன் எங்கேயும் இல்லை. வந்தனாவோ அவளின் பார்வை கண்டு,

“அண்ணா அந்த சைட் போய் உக்காந்து இருக்காங்க..” என்று சொல்ல,

‘எல்லாம் இங்க இருக்கப்போ இவங்க ஏன் தனியா போனாங்க..’ என்றெண்ணியவளின் கால்கள், வனமாலியை தேடி செல்ல, அவனோ இவர்கள் எல்லாம் இருந்த இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி, ஒரு ஓரத்தில் ஜன்னல் பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்..

அன்று கமலி எப்படி சிவகாமியை அட்மிட் செய்திருந்த போது, ஜன்னலில் கன்னம் பதித்து அமர்ந்திருந்தாளோ இன்று வனமாலி அதேபோலவே அமர்ந்திருக்க, அவனின் முகத்தினில் அப்படியொரு வலி, வேதனை ஒருவித கசங்கிய உணர்வு.

இதுநாள் வரைக்கும் வனமாலியை இப்படியான ஒரு தோற்றத்தில் கமலி அவனை பார்த்ததில்லை.. மனதில் கோபங்கள் இருந்தாலும், அதெல்லாம் தாண்டி வனமாலியை அப்படி பார்க்கையில் கமலிக்கு மனது என்னவோ செய்தது. அவளையும் மீறி அவனருகே சென்று அமர்ந்தவள், அவனின் கரங்களைப் பிடித்து,

“என்னங்க ஆச்சு??” என்று கேட்க, அவளின் தொடுகையில் திரும்பியவன், பற்றியிருந்த அவளின் கரங்களை இன்னொரு கரத்தினால் இறுகப் பிடித்துக்கொண்டான்.

“என்னங்க..??!!” என்றவள் அவனின் முகத்தினைப் பார்க்க,

“எனக்கு தெரியலை கமலி.. எனக்கு சுத்தம்மா தெரியலை.. நான் என்ன செஞ்சா? இல்லை நான் எப்படி நடந்துக்கிட்டா எல்லாம் சரியாகும்னு.. எனக்கு சுத்தமா தெரியலை.. நானும் எல்லாருமே நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.. என்னால முடிஞ்ச அளவு நியாயமா நடந்துக்கப் பாக்குறேன்.. ஆனா எல்லாமே தப்பா போகுதே..” என்றவன் கண்களோ அவளின் கண்களில் அவனின் வினாக்கான விடையை தேடியது..
 
Top