Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 15

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 15:

அவளைப் பார்த்த அந்த காவலாளிக்கு அடையாளம் தெரியவில்லை. டிவியில் காட்டிய போட்டோக்களில் அவள் பாவாடை தாவணி அணிந்திருந்தாள்.ஆனால் இப்பொழுது சேலையில் அவளை...அதுவும் இவ்வளவு அழகாக இருக்கும் அவளை அவருக்கு சுத்தமாக அடையாளம் தெரியாமல் போனது.

அதுமட்டுமின்றி...இந்த பிரச்சனைகள் நடந்த போது...அவர் டியூட்டியில் இருந்ததால்.. அவளை சரியாக பார்க்கும் வாய்ப்பும் அவருக்கு இல்லை.அதனால் வேற்று கிரகவாசியைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்தார் காவலாளி.

“யார் வேணும் உங்களுக்கு..?” என்று அவர் கேட்க...

இது எப்போதும் போல் கேட்க கூடிய கேள்வி என்று நினைத்த சக்தி....

“நாங்க அஜய்யை பார்க்கணும்..!” என்றாள்.

அவர் அவளை வினோதமாய்ப் பார்த்தார்.ஏற்கனவே நடந்த பிரச்சனையில்..இனி வீட்டின் முன்பு யாரையும் விடக் கூடாது என்ற உத்தரவு வேறு அவருக்கு.அவரும் என்ன செய்வார் பாவம்.

“அதெல்லாம் இங்க யாருமில்ல...கிளம்புங்க...கிளம்புங்க..!” என்றார் அவர்.

“என்னை அவனோட சேர்த்து வச்சு பிரச்சனை ஊர் சிரிச்சு கிடக்கு.. அப்படியும் இந்த ஆளு உள்ள விட மாட்டேங்குதுன்னா...என்ன
அர்த்தம்...அவன் அப்படி சொல்லி வச்சிருப்பான்..” என்று தப்பாக எடை போட்டாள் சக்தி.

“இல்லை...நான் பார்க்கணும்...நீங்க வேணுமின்னா..உள்ள போயி சக்தி வந்திருக்கேன்னு சொல்லி கேட்டுட்டு வாங்க..!” என்றாள் பொறுமையாக.

“அப்படியெல்லாம் கேட்க முடியாதும்மா..என் வேலைக்கே ஆப்பு வச்சுடுவிங்க போல...இங்க இருந்து கிளம்புங்க முதல்ல..” என்றார்.அவர் முகத்தில் அவர்களை அனுப்பிவிடும் குறிக்கோள் மட்டுமே தெரிந்தது.

“எங்களைப் பார்த்தா...உங்களுக்கு எப்படி தெரியுது...நாங்க அஜய்யை கண்டிப்பா பார்க்கணும்...வேற நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை...போய் கேட்டுட்டு வாங்க..!” என்று மகாலிங்கம் பொறுமையாக சொல்ல....அவர் முகத்தில் இருந்த பெரிய மனதிதத் தோரணையைக் கண்ட வாட்ச்மேன்...

“சரி..இங்கயே இருங்க..! நான் கால் பண்ணி கேட்குறேன்..!” என்று தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த டெலிபோனை நோக்கி சென்றார்.

“இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...” என்று சக்தி அவனை மனதிற்குள் வசைபாடிக் கொண்டிருந்தாள்.
வாட்ச்மேனோ...போனைப் போட...அங்கு சரியாக சாந்தா எடுத்தார்.

“மேடம்...அய்யாவைத் தேடி ஒரு பொண்ணும்...ரெண்டு பெரியவங்களும் வந்திருக்காங்க...அய்யாவைப் பார்த்தே ஆகணும்ன்னு சொல்றாங்க..!” என்று அவர் பயத்துடன் சொல்ல....

“ஆக்டர் வீடுன்னா..நாலு பேரு வரத்தான் செய்வாங்க..!இதெல்லாம் பெரிய விஷயம்ன்னு என்கிட்டே கேட்டு இருக்க...யாரையும் பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பு...” என்றார்.

“நான் சொன்னேன் மேடம்..அவங்க கேட்க மாட்டேன்கிறாங்க..! சக்தி வந்திருக்கேன்னு சொல்லுங்க..அவங்களுக்கு தெரியும்ன்னு சொல்றாங்க..!” என்றார் அவர்.

அந்த பேரில் ஒரு நிமிடம் திகைத்த சாந்தா....பால்கனிக்கு வந்து வெளியே பார்க்க...அங்கு அவர்கள் நின்றிருக்க...
“இந்த பட்டிக்காட்டு கும்பல் எதுக்கு இப்போ இங்க வந்திருக்கு..?” என்ற யோசனை மனதில் ஓடியது அவருக்கு.

“யாரா இருந்தாலும் பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பு..” என்றார் சாந்தா.

“மேடம் யாரு மேடம்..?” என்றபடி கண்ணன் வர...

அவனை முறைத்த சாந்தா...”நீ வீட்டுக்கு போகவே இல்லையா..?” என்றார்.

“இல்லை மேடம் சார் தான் போக வேண்டாம்ன்னு சொல்லிட்டார்..!” என்றான்.

“அஜய் என்ன பண்றான்..?” என்றார்.

“தூங்குறார் மேடம்..!” என்று சொல்ல...

“இன்னைக்கு ஷூட்டிங் எதுவும் இல்லையா..?” என்றார்.

“இருக்கு மேடம்...ஆனா ஈவ்னிங் தான் இருக்கு...இன்னைக்கு நைட் சூட்...” என்றான்.

“சரி..நீ போ..!” என்றார்.

அவரை சந்தேகமாய் பார்த்துக் கொண்டே சென்றான் கண்ணன்.

“அதெல்லாம் பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்கம்மா...” என்றார் வாட்ச்மேன்.

“யார் சொன்னா..?” என்றாள்.

“உள்ள இருந்து தாம்மா...” என்றார் அவர் மொட்டையாய்.

“சக்தின்னு ஏன் பேரை சொன்னிங்களா....?” என்றாள்.

“உங்க பேரை சொன்னதுக்கு அப்பறம் தான்மா உள்ள விடக் கூடாதுன்னு சொன்னாங்க..!” என்று அவர் சொல்ல....சக்தி...காளியாக மாறிப் போனாள்.

“பார்த்தியா பாட்டி...அவனுக்கு எவ்வளவு நக்கல் இருந்தா இப்படி பண்ணுவான்.உள்ள விடக்கூடாதுன்னு சொல்லி இருக்கான்..!” என்று சக்தி பல்லைக் கடிக்க...

“என்னம்மா நீ..ஐயா வீட்டு முன்னாடியே நின்னு..அவரை...அவன் இவன்னு சொல்லிட்டு இருக்க..?” என்று அந்த வாட்ச்மேன் எகிற...

“அவனை நான் எப்படி வேணுமின்னாலும் சொல்லுவேன்...உங்க வேலையை நீங்க பாருங்க..!” என்றாள் அதிகாரமாய்.

“இதுக்கு தான் சக்தி நான் வீட்லயே சொன்னேன்...!இப்ப இந்த அசிங்கம் நமக்குத் தேவையா..? இவங்க அளவுக்கு இல்லைன்னாலும்...வசதி, வாய்ப்புல விட்டவங்க இல்லை நாம....பாரு உங்கப்பன..இப்ப கூட அமைதியாத்தான் நிக்குறான்..எல்லாம் உனக்காகத்தான..?” என்றார் பாட்டி.

“பாட்டி சொல்வதும் உண்மைதான்...அப்பாவை இன்னும் எவ்வளவு தான் அசிங்கப்படுத்துவது....?” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க...

சாந்தாவோ ஒரு பதட்டத்துடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.ஒரு வேலை அவர்கள் உள்ளே வந்துவிட்டால்...காரியம் கெட்டு விடுமோ...? என்ற எண்ணம் அவருக்கு.

“நீங்க கிளம்புங்கம்மா...மீடியாக்காரங்க பார்த்தா..அதுக்கும் கண்ணு,மூக்கு வச்சு பேசுவாங்க..!” என்றார் அவர்.

“மீடியா..” என்றவுடன் தான் அவளுக்கும் நியாபகம் வந்தது.

“நேத்து உங்க அய்யா ஒரு பொண்ணுக்கு தாலி கட்டுன வீடியோ.. பிரச்சனை ஓடுச்சே..தெரியுமா..? தெரியாதா..?” என்றாள்.

“அது தெரியுமே..!” என்றார்.

“அந்த பொண்ணு நான் தான்..!” என்றாள்.

“நீங்களா...?” என்று வாயைப் பிளந்தவர்..அவளை மேலும் கீழும் பார்க்க....

“பரவாயில்லை....ஐயா நல்ல பொண்ணைத்தான் கட்டியிருக்காரு...அம்சமா இருக்காங்க..!” என்று அவர் எண்ணிக் கொண்டிருக்க...

“இப்ப நான் உள்ள போகலாமா..?” என்ற அவள் கேள்வியில் நடப்பிற்கு வந்தவருக்கு... அப்பொழுது தான் நியாபகம் வந்தது ....

”சாந்தா அவளை உள்ளே விடக் கூடாது என்று சொன்னது..!”

“இல்லமா...எனக்கு அதுக்கு அனுமதி இல்லை..உங்களை விடக் கூடாதுன்னு தான் சொன்னாங்க..!” என்றார் அவர் கொஞ்சம் பணிவாய்.

“அப்ப..நீங்க விட மாட்டிங்க..!”

“ஆ..ஆமாம்மா..” என்றார்.

“அப்ப சரி..நான் இந்த ஏரியா போலிஸ் ஸ்டேஷன் போறேன்..!” என்று அவள் குண்டைத் தூக்கிப் போட்டுக் கொண்டிருக்க...அப்போது அங்கே வந்தான் கண்ணன். வந்தவனுக்கு சக்தியை அங்கே பார்த்தது பெரிய அதிர்ச்சி.அதுவும் காலையில்...”இவங்க எல்லாரும் எதுக்கு வந்திருக்காங்க..?” என்று யோசனையுடன் பார்க்க..அவனைப் பார்த்த சக்தி....

“நான் உள்ள போகலாமா..?” என்றாள்.

“ஓ..ஷியர்...வாங்க..!” என்று அவன் அழைக்க...வாங்க பாட்டி... வாங்கப்பா...என்றபடி உள்ளே சென்றாள்.

இதைப் பார்த்த சாந்தா....”எல்லாம் இந்த மடையனால் வந்தது..இவனை யாரு இப்ப வெளிய போக சொன்னா..? இவ வந்து அஜய்யை பார்த்தா..காரியம் கெட்டுடுமே..!” என்று எண்ணியவர் வேகமாய் கீழே இறங்கி வரத் தொடங்கினார்.
அவர்கள் வீட்டிற்குள் நுழைய....”அங்கயே நில்லு..!” என்றார் அதிகாரமான தோரணையில்.

ஆனால் சக்தியோ சட்டை செய்யாமல் உள்ளே செல்ல..அவருக்கு முகம் எல்லாம் ஆங்காரமாய் மாறியது.

“சொல்லிட்டே இருக்கேன்..திறந்த வீட்டுக்குள்ள நாய் நுழைஞ்ச மாதிரி நுழையறிங்க...பட்டிக்காடுகளா...!” என்று கத்த...

“நாய் இருக்குற இடத்துக்கு நாய் தான் வரும்...வேறென்ன வரும்..?” என்றாள் திமிராய்.

“சக்தி..!” என்று அவள் பாட்டியும்,அப்பாவும் சேர்ந்த மாதிரி அதட்ட...அவர்களைத் திரும்பிப் பார்த்த சக்தி...”நான் பார்த்துக்கறேன்..” என்பதைப் போல இமைகளை மூடித் திறந்தாள்.

“தேவையில்லாம பேசாதிங்க...?” என்றார் மகாலிங்கம்.

“சீ..வாயை மூடு...நீயெல்லாம் என் கண் முன்னாடி நின்னு பேசக் கூட தகுதியில்லை...” என்று பேசவும்...தன் அப்பாவை பேசக் கண்ட சக்தி பொங்கி எழுந்தாள்.

“அப்பா..நீங்க உட்காருங்க..! பாட்டி நீங்களும் தான்..!” என்றாள்.

“யார் வீட்ல யார் உட்காருவது..?” என்றாள்.

“ஏன் என் வீட்ல தான் உட்கார சொன்னேன்...!” என்றாள் சக்தி தோரணையாய்.

“ஹிம்..உன் வீடா....? இது எப்ப இருந்து..?” என்றார் எகத்தாளமாய்.

“அது உங்க பையனைக் கூப்பிட்டு கேளுங்க..!” என்றாள் விடாமல்.

“அவனுக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கலை...போ இங்க இருந்து...” என்று விரட்ட...

சாந்தாவின் பேச்சில் திகைத்தான் கண்ணன்.சார் எப்ப அப்படி சொன்னார்..? என்று யோசித்துக் கொண்டிருக்க...

“அதானால் என்ன...? பிடிக்குது,பிடிக்கலை..அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை..!” என்றபடி...திமிராய் அங்க இருந்த சோபாவில் அமர... அவளை முறைத்துக் கொண்டு நின்றார் சாந்தா.

சக்தியின் கண்கள் மாமியாரை எடைபோட்டது.நவநாகரிகமான ஒரு சேலை...வயதுக்கு மீறிய மேக்கப் முகத்தில்...குட்டையாய் வெட்டிய முடி...அகங்காரம் குறையாத முகம்...!” என அவள் எடை போட்டுக் கொண்டே வர....

சக்தியின் செய்கையைப் பார்த்த கண்ணன் திகைத்தான்.இப்படி ஒரு தைரியத்தை அவளிடம் அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகமே காட்டிக் கொடுத்தது.

“ஆப்ட்ரால்..நீ ஒரு பட்டிக் காடு...உனக்கு என் மகன் கேட்குதா..?” என்றார்.

“இந்த பட்டிக்காடு தான் வேணுமின்னு உங்க மகன்...தாலியைக் கட்டினார்..நியாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்..!” என்றாள்.

“பொண்ணை திமிரா வளர்த்துட்டு...உன்கூடவே வந்து அமைதியா உட்கார்ந்திருக்கப்பவே தெரியுது...உன் குடும்பத்தோட லட்சனம்..” என்றார்.

“விருப்பம் இல்லாத பொண்ண தூக்கிட்டு போய்..தாலியைக் கட்டிட்டு..அப்பறம் அவ யாருன்னே தெரியாதுன்னு சொல்ற...உங்க குடும்ப லட்சணத்தை விட...குறைஞ்சது இல்லை எங்க குடும்ப லட்சணம்..” என்றாள்.

“அட்ரா சக்கை..!” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.
சக்தியின் பாட்டியுமே அவளை வியந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவளுக்கு இப்படி எடுத்தெறிந்து பேசத்தெரியும் என்பதே அவர்களுக்கு இப்போதுதான் தெரியும்..நடந்த சம்பவங்களும்...சாந்தாவின் பேச்சு மட்டுமே அவளை இப்படி பேசத் தூண்டுகிறது..” என்று எண்ணிய பாட்டியும் பேசாமல் இருக்க....

மகாலிங்கம் மட்டுமே...”வேண்டாம் சக்தி..பெரியவங்களை எதிர்த்து பேசாத..!” என்று அதட்டினார்.

“யாருப்பா...இங்க பெரியவங்க..?” என்றாள் எதிர்கேள்வியாய்.

”மகாலிங்கம் நீ பேசாம இரு..! அவ பேசுறது தான் சரி..!ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்..” என்றார் பாட்டி.

“இப்ப வெளிய போகப் போறிங்களா இல்லையா..?” என்று சாந்தா கத்த...

“முடியாது..!” என்றாள் தீர்க்கமாய்.

“முடியாதா...நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..?” என்றார்.

“உங்களால என்ன முடியுமோ...நீங்க பண்ணிக்கலாம்...!” என்று கண்ணனின் புறம் திரும்பியவள்...

“நாங்க இன்னும் சாப்படலை..எங்கப்பா உடம்புக்கு முடியாதவர்..நேரத்துக்கு சாப்பிடனும்..ஏற்பாடு பண்ணுங்க...அப்பறம்...அஜய் எங்க...?” என்றாள் பல நாள் பழகியவளைப் போல.

கண்ணனுக்குத் தான் ஆச்சர்யமாய் இருந்தது.”என்னடா இது...இந்த பொண்ணு இந்த வாங்கு வாங்குது...அவங்க ஊருல..ஒன்னும் தெரியாம திரிஞ்ச வெகுளிப் பொண்ணா இது..?” என்று எண்ணிக் கொண்டான்.

“அண்ணா...உங்களைத்தான் கேட்டேன்..!” என்று இயல்பாய் அண்ணா என்று அழைக்க....அதைக் கேட்ட சாந்தா முகம் சுழித்தார்.

“அஜய் சார்...மேல அறையில் இருக்கார்..சாப்பாடு நான் உடனே ரெடி பண்ண சொல்றேன் மேடம்...! என்ன செய்ய சொல்லணும்...” என்று சொல்லிக் கொண்டிருக்க..அவனைப் பார்த்து கத்தினார் சாந்தா.

“டேய்...!என்ன பண்ணிட்டு இருக்க..முதல்ல...அவங்களைக் கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ளு..!” என்று சொல்ல...கண்ணனோ..இருதலைக் கொல்லியாய் நின்றான்.

“நீங்க என்னை சக்தின்னே கூப்பிடுங்க..! இந்த மேடம்..கீடம் எல்லாம்..எனக்கு ஒத்து வராது.அது தான் வேணுமின்னு தொங்குறவங்களை மட்டும் அப்படிக் கூப்பிடுங்க..!” என்றாள்.

தனது பெட்டியைக் கையிள் எடுக்க...”ஐயோ..! நீங்க எதுக்கு இதையெல்லாம் எடுக்குறிங்க? நான் எடுத்துட்டு வரேன்..!” என்றான் கண்ணன்.

“இல்லை..என் வேலையை நான் செஞ்சு தான் பழக்கம்..” என்றாள்.

அவளை என்ன செய்வதென்று தெரியாமல் சாந்தா முழிக்க.. சக்தியோ..அப்படி ஒருத்தர் அங்கே இல்லை என்பதைப் போல அவரைக் கடந்து சென்றாள்.

அப்போது தான் கவனித்தாள் அந்த வீட்டின் பிரமாண்டத்தை.ஒவ்வொரு இடமும்..அணு அணுவாய் ரசித்து கட்டியிருப்பார்கள் போல..! என்று எண்ணிக் கொண்டாள்.

“நீங்க சென்னைக்கு எப்படி ..?” என்று கண்ணன் இழுக்க..

“ஏன் சென்னைக்கு நானாக எல்லாம் வரக்கூடாதா..?” என்றாள்.

“அப்படியில்லை..!” என்று இழுக்க...

“சரி..பரவாயில்லை..ரொம்ப யோசிக்காதிங்க..?” என்றபடி அவள் செல்ல..அஜய்யின் அறையின் முன் நின்றான் கண்ணன்.

“இங்க இவ்வளவு கலவரம் நடந்ததே...உங்க சாருக்கு கேட்கலையா..?” என்றாள் நக்கலாய்.

“கேட்காதும்மா...சவுன்ட் புரூப் டோர்...அதனால..எதுவுமே கேட்காது..!” என்றான் கண்ணன் வேக வேகமாய்.
என்னதான் தைரியமாக வந்துவிட்டாலும்..ஏனோ அந்த நிமிடம் தயக்கமாக இருந்தது சக்திக்கு.

“முதன் முறையாக..அடுத்தவர்கள் வீட்டிற்கு....ஒரு அந்நிய ஆடவன் அறைக்குள் நுழைகிறோமே...” என்று அவள் என்ன...

“இப்படியே திரும்பி போ..அந்த அம்மா...உன்னைக் சல்லிக் காசுக்கு மதிக்காது.வீராப்பா வசனம் மட்டும் பேசுனா பத்தாது..அதுக்கு ஏத்த மாதிரி தைரியமா நடக்கத் தெரியனும்..!” என்று மனசாட்சி கிண்டல் அடிக்க...

“எனக்கு என்ன பயம்..நியாப்படி பார்த்தா..அவன் தான் என்னைப் பார்த்து பயப்படனும்..!” என்று எண்ணியவள்..

“கண்ணன் அண்ணா...!” என்றாள்.

“சொல்லுங்கம்மா..!” என்றான்.

“இல்லை...கீழ..அப்பாவையும்,பாட்டியும் கொஞ்சம் பார்த்துக்கறிங்களா..நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்..!” என்றாள்.

“இதை நீங்க சொல்லனுமா..? நான் பார்த்துக்கறேன்..!” என்று சொல்லி சென்றவன் தயங்கி நின்றான்.

“என்ன..?” என்பதைப் போல் அவள் அவனைப் பார்க்க...

“இல்ல..அஜய் சார் மேல எந்த தப்பும் இல்லை..!” என்று அவன் ஏதோ சொல்ல வர..

“நான் பார்த்துக்கறேன்..!” என்று முடித்துக் கொண்டாள்.

மெதுவாக கதவைத் திறக்க...அது லேசாக உள்ளே சென்றது.கொஞ்சம் கைகால் நடுங்கினாலும்..சமாளித்து..உள்ளே காலை எடுத்து வைத்தாள். உள்ளே சென்றவள்..கதவில் இருந்து கையை எடுக்க..அது பட்டென்று சாத்திக் கொண்டது.அந்த சத்தத்தில் அதிர்ந்தாள் சக்தி.

“ச்ச்ச..கதவு சத்தம்...” என்று நெஞ்சில் கையை வைத்தவள்...

“இந்த சத்தத்துக்கே...இப்படி மிரண்டு போயி முழிக்கிற...இதுல வெட்டி பேச்சு வேற..?” என்று தன்னைத் தானே கிண்டல் அடிக்க...அப்போது தான் அந்த அறையைப் பார்த்தாள்.

கொஞ்சம் பிரம்மாண்டம் ஆகவும்..அதீத சுத்தமாகவும் இருந்தது.

“ஆத்தாடி..எவ்வளவு பெரிய ரூம்....இது மட்டும் மாட்டுக் கொட்டகையா இருந்தா ஒரு அம்பது மாட்டைக் கட்டலாம்..” என்று என்ன...

அவள் நினைப்பு போன போக்கு மட்டும் அஜய்க்கு தெரிந்தால்....அந்த அறையை அவ்வளவு பெரிதாக கட்டியதற்காக நொந்து விடுவான். அந்த அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டே சென்றவள்...அங்கே நடு நாயகமாக...கட்டில் படுத்திருந்த அஜய்யைக் கண்டவுடன்..கால்கள் ஏனோ நகர மறுத்தது.அதற்கு மேல் அவளால் ஒரு எட்டு கூட எடுத்து வைக்க முடியவில்லை.

கல்யாண வாழ்க்கை பற்றி தெரியாத முட்டாள் பெண்ணோ..இல்லை விளையாட்டுப் பெண்ணோ அவள் கிடையாது.இருந்தாலும் பெண்களுக்கே உரித்தான ஒரு தயக்கம்..சிறிது பயம் கலந்து அவளை ஆட்டுவிக்க....

“இப்படியே போய்டலாமா..?” என்று எண்ணினாள்.

“வேண்டாம் சக்தி..கீழ இவன் அம்மா இருப்பாங்க..! எப்ப எப்பன்னு எதிர்பார்த்துட்டு இருப்பாங்க..உன்னை அசிங்கப் படுத்தியிருக்காங்க..! நீ அமைதியா போனா அவங்க சொன்னது உண்மைன்னு ஆகிடாது...இவன் உனக்கு தாலி கட்டியிருக்கான்..” என்று ஒரு மனம் சொல்ல..

“எங்க தாலியைக் காட்டு..?” என்று ஒரு மனம் கேள்வி கேட்டது.

“கழுத்தில் இல்லைன்னாலும்..கட்டினது கட்டினது தான்..!” என்று ஆணித்தரமாக பேசியது இன்னொரு மனம்.

“இவ்வளவு பிரச்சனை நடக்க போயித்தானே...கட்டியது தாலின்னு பேசுறிங்க...இதுவே எந்த பிரச்சனையும் நடக்காம இருந்திருந்தால்.. சக்தியைப் பொறுத்தவரை..அது வெறும் கயிறு தானே..அப்படி சொல்லித்தானே அன்னைக்கு கழட்டி எறிந்தாள்..” என்று மனசாட்சி ஆணித்தரமாக பேச...

அதற்கு சக்தியிடம் பதில் இல்லை.கழுத்தைப் பார்த்துக் கொண்டாள்.அவன் அறைக்கு வரும் போது தெரியாத உணர்வு...உள்ளே வந்த உடன் தோன்றியது.

“இதைதான் பாட்டி...வீட்ல படிச்சு படிச்சு சொன்னாங்க..! நான் எங்க கேட்டேன்..!” என்று நொந்து கொண்டாள்.
யோசித்துக் கொண்டே அவள் கால்கள் நகர்ந்து கொண்டிருக்க.... அவளையும் அறியாமல்...அந்த கட்டிலின் அருகில் சென்றிருந்தாள்.

“அஜய்யோ....” குப்பறப்படுத்து ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

“மணி ஒன்பது ஆகப் போகுது...இவன் இன்னும் இந்த தூக்கம் தூங்குறான்..? படத்துல மட்டும் காலைல சீக்கிரமே எந்திருச்சு ஜிம்முக்கு எல்லாம் போறான்..நிஜத்துல..ஒன்பது மணி வரைக்கும் தூங்குறான்..இவன் வாழ்க்கையே ஒரு நடிப்புதான் போல..” என்று எண்ணிக் கொண்டாள்.

தூங்கும் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க..நேரம் தான் போயிக் கொண்டிருந்தது.அவன் எழுந்த பாடில்லை.அவளுக்கு பசி வேற வயிற்றைக் கிள்ள...என்ன செய்வதென்று தெரியாமல்...முழித்துக் கொண்டு நின்றாள்.
 
Top