Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 25:

அன்று வழக்கம் போல் கிளம்பி,கல்லூரிக்குச் சென்றாள் வண்ண மதி. வினோதினிக்கு காய்ச்சல் என்பதால் அன்று அவள் கல்லூரி செல்லவில்லை.

காலையில் கிளம்பும் போதே, மதிக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது. இத்தனை வருடங்களில், அவளின் கவனம் வேறு எதிலும் சிதறவில்லை. ஆனால் அன்றைக்கு அவளின் நினைவில், முகிலன் வந்து வந்து போனான்.

“என்ன இது..? என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு முகிலன் மாமா முகமா தெரியுது..?” என்று தனக்குள் பேசியபடி சென்றாள்.

அவர்கள் வீட்டிலிருந்து சற்று தொலைவில் நடந்து வந்து தான், பேருந்து ஏற வேண்டும். அவள் ஏதோ நினைப்பில் நடந்து வர,

சாலையின் ஓரத்தில் நின்றிருந்த ஆம்னியில், கதவைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மணி முகிலன். அவனுடைய நண்பர்கள் உடன் இருக்க,மதியின் வரவுக்காக காத்திருந்தான்.

அந்த ஆம்னியை அவள் கடக்கும் போது, அவள் உள் மனம் உந்த, அவளையும் மீறி சற்று நிமிர்ந்து திரும்பிப் பார்த்தாள். அவள் பார்ப்பது தெரிந்தும், ஸ்டைலாக அமர்திருந்தான் முகிலன்.

“என்ன இது மணி மாமா...இங்க இருக்காக...நிஜமாவே மணி மாமா தானா..? இல்லை, என் கண்ணுக்குத் தான் அப்படித் தெரியுதா..?” என்று மீண்டும் கண்களை கசக்கி விட்டுப் பார்த்தாள்.

“எப்படிப் பார்த்தாலும், நான் தான் தெரிவேன்...!” என்றான் முகிலன்.

அவனின் குரலைக் கேட்டு அதிர்ந்தவள்...”இப்ப எதுக்கு இங்க வந்திருக்காக..பக்கத்துல போய் பேசுறதா..? இல்லை அப்படியே போகுறதா..?” என்று ஒன்றும் விளங்காமல் அப்படியே நின்றாள் மதி.

அவனும் ஒன்றும் பேசாமல் அவளையே பார்க்க,

“எதுக்கும் போய் ரெண்டு வார்த்தை பேசிடுவோம்.இல்லைன்னா, இதை வச்சு ஒரு பிரச்சனை வரும்..!” என்றபடி அருகில் சென்றாள் மதி.

அருகில் செல்ல செல்ல, முகிலனின் தோற்றம் அவளை ஆச்சர்யப் பட வைத்தது. அவள் பார்த்த அரும்பு மீசை முகிலன் இல்லை இவன். நன்றாக வளர்ந்த மீசை,வயது ஏற, அதனால் கூடிய அழகு, அவன் ஸ்டைல என்று அவனையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஏற்கனவே அவனைப் பற்றிய ஒரு பிரமிப்பு அவளுக்குள் இருக்கும். ஆனால் அதை அவள் தான் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

அவள் கண்கள், ஆச்சர்யமாய் பார்ப்பதைப் பார்த்த முகிலன்,

“எப்படி பார்க்குறா பாரு..! இவளுக்கு நான் புருஷன். அந்த நியாபகம் கொஞ்சமாவது இருக்கா..?” என்று மனதிற்குள் பேச,

“அது தான், அவ தாலியைக் கழட்டிக் குடுத்துட்டாலே..?” என்று மறக்காமல் கமெண்ட் அடித்தது, மனசாட்சி.

“எப்படி இருந்தாலும், நான் தாலி கட்டினது உண்மை தான். அவ என் மனைவி. இது எந்த காலத்திலும் மாறாது..!” என்று தன் மனதிற்கு பதில் சொன்னவன், மதியையே பார்த்தான்.

பதினைந்து வயதிலேயே அப்படி இருப்பாள். இப்போது சொல்லவா வேண்டும். ஆளை அசரடிக்கும் அழகும், படிப்பு கொடுத்த நிமிர்வும், பார்க்கத் தெவிட்டவில்லை அவனுக்கு.

அவனின் அருகில் சென்றவள், கொஞ்சம் தயங்கி..”நீங்க எங்க இங்க..?” என்றாள்.

“ஏன் இது உங்கப்பா வீட்டு ரோடா. நாங்க வரக் கூடாதா..?” என்றான் நக்கலாய்.

“இல்லை...ஊர்ல தானே இருந்திங்க. அதைக் கேட்க வந்தேன்..!” என்றாள் அவசரமாய்.

“அதுவா..இந்த ஊர்ல, என் பொண்டாட்டி ஒருத்தி இருக்கா. அவளைப் பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தேன்..!” என்றான் கூலாய்.

அவன் ‘பொண்டாட்டி’ என்று சொன்னவுடன், அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. நடந்த விஷயங்கள் நியாபகத்திற்கு வர,மீண்டும் இறுகிப் போனாள்.

“அது தான் அன்னைக்கே, ஓட்டும் இல்லை,உறவும் இல்லைன்னு ஆகிடுச்சே. இப்ப என்ன திடீர்ன்னு..?” என்றாள் கேள்வியாய்.

“நீதான வேண்டாம்ன்னு சொன்ன..! நான் சொல்லலியே..?” என்றான் அவளை முறைத்தபடி.

“அதுக்கு...?” என்றாள் கேள்வியாய்.

“வெரி சிம்பிள்....நீ சமத்தா என் கூட வரணும்.நமக்கு இன்னைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்..!” என்றான்.

“என்ன கிண்டலா..?” என்றாள்.

“ஆமாண்டி..! கிண்டல் தான். முன்னாடி எல்லாம் என்னைக் கண்டாலே பயப்படுவ. இப்ப எதிர்த்து முன்னாடி நின்னு பேசுற அளவுக்கு வந்துட்ட..!” என்றான்.

“ஆமாம்..! அதுக்கென்ன...?” என்றாள் தெனாவெட்டாய். ஆனால் மனதிற்குள் பயம் அப்பிக் கிடந்தது.

“சரி சரி வா..வந்து வண்டியில ஏறு..!” என்றான்.

“முடியாது..!”

“நீ வந்து தான் ஆகணும்..! இல்லன்னா, தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணுவேன்..!” என்றான்.

“நான் கத்தி ஊரைக் கூட்டுனா...கம்பி என்ன வேண்டியது தான்..!” என்றாள்.

“கத்துடி, கத்துடி.. நான் சொல்றேன்ல கத்து..இன்னைக்கு நீயா,நானான்னு பார்த்துடலாம்...!” என்று அவன் தன்னுடைய முழுக்கை சட்டையை, மேலே ஏற்ற...அதை கண்டு பயந்தவள்...

“கத்திடுவேன்..!” என்றவள் கத்தப் போக, அடுத்த நிமிடம், அவள் ஆம்னியினுள் இருந்தாள். அடுத்த நொடி, வண்டி கிளம்ப...இழுத்த வேகத்தில், முகிலனின் மடியில் வந்து விழுந்திருந்தாள் மதி.

“என்ன பண்றிங்க..? விடுங்க முதல்ல. வண்டியை நிறுத்துங்க...!” என்று அவள் திமிர, அவளின் சேட்டைகளை எல்லாம், அசால்ட்டாய் சமாளித்தான் முகிலன்.

“இது நல்லதுக்கு இல்லை..!” என்றாள் முகிலனைப் பார்த்து.

அவனோ, அவளை அருகில், அதுவும் தன் மடியில் கண்ட மயக்கத்தில், எதையும் காதில் வாங்கவில்லை.

“செம்ம பிகராயிட்டடி..!” என்றான், அவள் காதருகில். அதுவரை கத்திக் கொண்டிருந்தவள், அவனின் மூச்சுக் காற்றில், அவன் வார்த்தைகளில் அமைதியாகிப் போனாள்.

“இது தப்பு. எங்க வீட்ல தெரிஞ்சா...” என்று அவள் முடிக்கும் முன்,

“இதோ பார். நான் ஏற்கனவே சொன்னது தான். என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு வந்தவளுக்கு, வேற எந்த நினைப்பும் வர கூடாது. நான் எப்படி தனியா நிக்கிறேனோ, அதே மாதிரி தான் நீயும் இருக்கணும். உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான்.ஒன்னும் என்கூட வாழனும், இல்ல நான் சாகுற வரைக்கும், நீயும் சாகாம இருக்கணும். நீயே முடிவு பண்ணிக்க...” என்றவன், அவளை அருகில் தள்ளி விட்டான்.

அவள், அவனுக்கு அருகில் எக்குத் தப்பாய் விழுந்து, பிறகு நேராய் அமர்ந்தாள்.

“இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப..” என்றாள்.

“பரவாயில்லை..! அப்ப கூட உன்னையும் கூட சேர்த்துப்பேன். ஆனா, இப்ப மட்டும் நீ ஏதாவது கலாட்டா பண்ணினா, அப்பறம் நீ ஊரு பக்கமே வர முடியாது. என்ன செய்யனும்ன்னு எனக்குத் தெரியும். பார்த்துக்க..” என்றான்.

அவனை முறைத்தவளுக்கு, அழுகை தான் மிஞ்சியது. ஒரு மனம் அவனை வேண்டாம் என்று சொல்ல, ஒரு மனம் அவனை வேண்டும் என்று ஏற்றுக் கொண்டது. இத்தனை வருடங்கள் கழித்துப் பார்த்ததும், அவளுக்கு பழைய நியாபகங்கள். எப்பொழுதும் அவள் முகிலனை வெறுத்தது இல்லையே.

அதற்கு பிறகு அமைதியாய் வந்தாள். அவளின் முகத்தைப் பார்த்த முகிலனுக்குக் கூட பாவமாய் போனது. ஆனால் அவனுக்கும் வேறு வழி தெரியவில்லை.

பிறகு நடந்த எதற்கும் மதி பொறுப்பாகவில்லை. ரிஜிஸ்டர் ஆபீசில், ஏற்கனவே அவன் பக்காவாய் எல்லாம் தயார் செய்து வைத்திருந்தான். அவள், அவனை கேள்வியாய் பார்க்க,

“நேத்தே எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்..!” என்றான்.சுற்றி இருந்த அவன் நண்பர்கள் யாரையும் தெரியவில்லை அவளுக்கு.

அவர்கள் மாலையைக் குடுக்க, அவர்கள் போட சொல்ல, முகிலன் மீண்டும் தாலியைப் கழுத்தில் போட, கையெழுத்து போட சொல்ல...இப்படி எல்லா நிகழ்வுகளிலும் முகிலன் மட்டுமே ஒன்றி இருந்தான். மதியோ...விதியே என்று தான் இருந்தாள்.

அவள் நினைத்திருந்தால் ஒரு நிமிடத்தில் அதை நிறுத்தியிருக்க முடியும். அவள் முகிலனை அவமானப் படுத்தியிருக்க முடியும்.
ஆனால் அவள் செய்யவில்லை. அப்படி செய்ய அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் கழுத்தில் தொங்கியத் தாலியைக் கண்டு சிரித்துக் கொண்டாள்.

மதியின் மனநிலை முகிலனுக்கு தெரிந்ததாலோ, என்னவோ..அவனும் ஒன்றும் பேசவில்லை. ஆனாலும் அவனுக்கு ஆச்சர்யம் தான். மதியை சம்மதிக்க வைக்க, கஷ்ட்டப்பட வேண்டியிருக்கும் என்று நினைத்தான். ஆனால் அவளோ..அதிகப்படியான சிரமத்தை அவனுக்குக் கொடுக்கவில்லை.

எல்லாம் முடிந்து, அவளைத் தனியாக அழைத்து சென்றவன், என்ன நினைத்தானோ தெரியவில்லை...அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவனின் அணைப்பின் இறுக்கத்தில், மதி மேலும் இறுகிப் போனாள். அவனுக்குள் புதைந்து கொள்ள ஆசைப் பட்ட, தன்னுடைய மனதை எண்ணி வெட்கம் கொண்டாள்.

அவளின் நெற்றியில்... ஒரு காதல் முத்தத்தை வைத்தவன்,

“இனி நான் நிம்மதியா இருப்பேன். உனக்கு எப்ப என்கிட்டே வரணும்ன்னு தோணுதோ வா. நானா உன் கண்ணுல பட மாட்டேன். ஆனா, நீ என் கண்ணுல பட்டா...அன்னைக்கு இருந்து என்னோட உரிமையை நீ தந்தாகணும். அதாவது புருஷன்கிற உரிமையை..!” என்றவன்,
“இதை உங்க வீட்ல சொல்றதும், சொல்லாததும் உன் விருப்பம்...!” என்றான்.

மதியோ எதுவும் பேசவில்லை. அவளைப் பார்த்த அவனுக்கு கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது.

அவளை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்றவன்,

‘மதி, உன்னோட செயினைக் கழட்டு..!” என்றான்.

“எதுக்கு செயினைக் கேட்கிறான்..?” என்று தன் கழுத்தைப் பார்த்தாள் மதி. அப்போது தான் புரிந்தது, அவள் கழுத்தில் இருந்தது, தங்கத் தாலி என்று. அதுவும் அவள் அணிந்திருந்த அதே செயின் மாடலில் இருந்தது.

“நான் தான், அதே மாடல்ல புது செயின் போட்ருக்கேன்ல. உன்னோட பழைய செயினைக் கழட்டித் தா.. அதுக்கும் இதுக்கும் சரியா போய்டுச்சு..!” என்றான். அவளும் வேறு வழியில்லாமல், கழட்டிக் கொடுத்தாள்.

“என்னோட செயின் மாடல், இவனுக்கு எப்படித் தெரியும்..?” என்று அவள் யோசிக்க,

“இந்த தாலியை நீ கழட்டனும்ன்னு நினைச்சா, அப்பறம் நான் செத்த பொணம் தான். நியாபகத்துல இருக்கட்டும். இனி எந்த விதத்துலயும் என் தொந்தரவு இருக்காது..!” என்றவன், அவளை ஏற்றிய இடத்திலேயே இறக்கி விட்டான்.மனதில் இருந்த பாரத்தையும் இறக்கி வைத்து விட்டான்.

செல்லாத கல்யாணம் என்று சொன்னவர்கள் மத்தியில், மீண்டும் அதே கல்யாணத்தை செல்லும் படி ஆக்கிவிட்டான்.

“தாலி கட்டிட்டா மட்டும் புருஷன் ஆக முடியாது..!” என்றபடி அவள் திரும்பி நடக்க,

“தாலியை கட்டிக்கிட்டா மட்டும் ஒருத்தி பொண்டாட்டியும் ஆகிட முடியாது..!” என்றான் அவனும் பதிலுக்கு.

இருவரும் அன்று பிரிந்தது, அதற்கு பிறகு...மதி ஊருக்கு வந்த பிறகு தான் அவனைப் பார்த்தாள். அவன் சொன்ன படி அதற்கு பிறகு அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

ஆனால், எத்தனையோ முறை...அந்த செயினைக் கழட்ட வேண்டும் என்று முயற்சி செய்திருக்கிறாள். ஆனால் அது வெறும் முயற்சியாக மட்டும் தான் இருந்தது. மனதார, அந்த செயலை அவளால் செய்ய முடியவில்லை.

“சாப்பிட வாக்கா..!” என்ற சுமதியின் குரலில் நினைவுக்கு வந்தவள், இன்று நடந்ததையும் யோசித்துப் பார்த்தாள். தெளிவாக ஒன்று விளங்கியது. முகிலன், அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறான். அதைத் தெரிந்து கொள்ள, இத்தனை வருடங்கள் பிடித்திருக்கிறது.

“இப்ப என்ன செய்யப் போற மதி..?” என்று மனம் கேட்க,

“தெரியலையே..! மணி மாமாவைப் பிடிக்குது. ஆனா, என்னை அவ்வளவு அசிங்கமா பேசின அவங்க அப்பா முன்னாடி, நான் எப்படி போய் இருக்குறது...?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

“மன்னிப்புக் கேட்கிறவன் மனுஷன். மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்..!” என்ற பார்வதியின் குரலில், திடுக்கிட்டு திரும்ப,
“அம்மா..!” என்றாள்.

“நீ என்ன யோசிக்கிறன்னு, உன் முகமே சொல்லுது..! இப்படியே யோசிச்சுட்டு இருந்தா, உனக்கு அடுத்து சுமதி இருக்குறா..?” என்றார்.

“அதுக்காக, அவங்க வீட்டுக்கு எப்படிம்மா..? எப்படி எல்லாம் பேசுனார், பெரியசாமி மாமா..?” என்றாள்.
 
“இப்பவும் சொல்றேன் மதி. அவர் பேசினது தப்புத் தான். ஆனால் அதுக்காக, இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம். முகிலனைப் பார்த்தாலும், உன்னை லேசில விடுற மாதிரித் தெரியலை... உங்க பெரியப்பா குடும்பம், எப்ப நம்ம வீட்ல, என்ன பஞ்சாயத்து வரும்...அதை ஊதிப் பெருசாக்கலாம்ன்னு காத்திட்டு இருக்காங்க...இதுல நீயும் இப்படிப் பண்ணினா நான் என்ன தான் பண்றது..?” என்றார் பார்வதி இயலாதவராய்.

“கடைசில எல்லாத்தையும் மறந்துட்டு, பொண்ணுங்க தான் தணிஞ்சு போகணும், அப்படித்தானம்மா..!” என்றாள்.

“நடக்குறது நல்லதுங்கறப்போ, தணிஞ்சு போறதுல தப்பில்லை. எல்லா இடத்துலையும் நிமிர்ந்து நிக்க முடியாது.

அதுவும் வாழ்க்கையில சுத்தமா முடியாது. கொஞ்சம் வளைஞ்சு கொடுத்து பாரு....வாழ்க்கையும் உனக்கு ஏத்த மாதிரி வளையும்...” என்றார்.

“நான் என்ன பண்ணனும்..?” என்றாள்.

“நீ அந்த வீட்டுக்கு வாழப் போகணும். ஊர்ல தப்பா பேசின வாயெல்லாம்....உன்னைப் பார்த்து, நீ வாழுற வாழ்க்கையைப் பார்த்து வயிறு எறியணும்...” என்றார் பார்வதி.

“இப்ப கூட ஊருக்காகத் தான், இல்லையாம்மா...? எனக்காக இல்ல, அப்படித்தான..!” என்றாள்.

“நீ இப்படித் தர்க்கம் பண்றதைப் பார்த்தா, எனக்கே சந்தேகம் வருது மதி. உனக்கு முத்துவைத்தான் பிடிச்சிருக்கோ..!” என்றார்.

“அம்மா..!!!!” என்றாள் அதிர்ந்து.

“நீ சொல்றது உண்மைன்னா....நீ வாழப் போற வழியைப் பாரு. இதுக்குமேல சொல்றதுக்கு ஒன்னும் இல்லை..!” என்று முடித்துக் கொண்டார் பார்வதி.

“அம்மா சொல்றதைக் கேளுக்கா...முகிலன் மாமா சூப்பர்க்கா...எனக்கும் கூட மாமாவைப் பிடிச்சிருக்கு..!” என்றாள் சுமதியும் சேர்ந்து கொண்டு.

இரண்டு நாளைக்கு முன்னாடி வரை, யாருக்கும் யாரைக் கண்டாலும் ஆகாது. ஆனால், நிலைமை இப்போது தலை கீழாய் மாறி இருப்பதை கண்டு, தனக்குள் சிரித்துக் கொண்டாள் வண்ண மதி.

அவள் சாப்பிட ஆரம்பிக்க, அப்போது பார்த்து வந்தார் மலர்.

“வாங்க மதினி..!” என்றார் பார்வதி.

“மதிகிட்ட சொல்லிட்டிங்களா மதினி..!” என்று மலர் கேட்க,

“சொல்லிட்டேன் மதினி. இனி அவ பாடு, உங்க பாடு.” என்று விலகிக் கொண்டார் பார்வதி. அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்று தெரிந்தாலும், அமைதியாகவே இருந்தாள் மதி.

“உட்காருங்க மதினி...!” என்று பார்வதி சொல்ல,

“இருக்கட்டும் மதினி, கருவாட்டுக் குழம்பு செஞ்சேன். மதிக்குப் பிடிக்குமேன்னு எடுத்துட்டு வந்தேன்..!” என்றபடி மலர் பாத்திரத்தை நீட்ட, அவரின் அன்பில், பழைய நியாபகங்களில் கண் கலங்கியது மதிக்கு.

பெரியசாமி எப்படி இருந்தாலும், கடைசி வரை மதிக்கு ஆதரவாய் இருந்தவர் தானே மலர். அவரின் மேல் மதிக்கு எப்போதும் வெருப்பு வந்தது கிடையாது. சின்ன கோபம் அவ்வளவே.

சாப்பிடாமல் அப்படியே எழுந்தவள்,

“அத்தை, சாரி அத்தை..!” என்றபடி அவளைக் கட்டிக் கொண்டாள்.

“என்கிட்டே எதுக்கு மதி மன்னிப்பு எல்லாம். நீ நான் பார்க்க வளர்ந்த பிள்ளை. உன்மேல் எனக்கு எந்த கோபமும் இல்லை..!” என்று மலர் சொல்ல, அதைப் பார்த்த பார்வதிக்கு நிம்மதியாய் இருந்தது.

“கையெல்லாம் காயுது. நீ போய் சாப்பிடு மதி..!” என்றார் மலர்.

“நீங்களும் சாப்பிடுங்க அத்தை..!” என்று அவள் சொல்ல,

“இருக்கட்டும் மதி, அங்க முகிலன் சாப்பிட்டு இருக்கான். நான் போயிட்டு வரேன்..!” என்றபடி மலர் கிளம்ப போக,
“ஒரு நல்ல நாள் பாருங்க மதினி. மதி அங்க வருவா..!” என்று உறுதி அளித்தார் பார்வதி.

அதைக் கேட்ட மலருக்கு, சந்தோசம் போங்க....

“நிஜமாவா மதினி..!” என்றார் மீண்டும்.

“சந்தேகம்ன்னா, உங்க மருமகளையே கேட்டுக்கோங்க..” என்ற பார்வதி, மதியைப் பார்க்க, அந்த பார்வையில், ‘சரி’ சொல்லு என்ற அத்தமே பொதிந்திருந்தது.

“ஆமாம்..” என்பதைப் போல மதி தலையை ஆட்ட, இதற்கு மேல் என்ன வேண்டும் மலருக்கு, அப்படி ஒரு சந்தோசம்.
“நான் போய் உடனே முகிலன்கிட்ட சொல்றேன்..!” என்று மலர் சொல்ல,

“வேண்டாம் அத்தை. இப்ப சொல்ல வேண்டாம்..!” என்றாள் வேகமாய் மதி.

அவளின் முகத்தைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ,

“சரிம்மா...சொல்லலை..!” என்றபடி, மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் சென்றார்.

இதையெல்லாம் அறியாத முகிலனோ, அங்கு தன்னுடைய அறையில்....சுற்றிக் கொண்டிருந்த மின்விசிறியை பார்த்துக் கொண்டிருந்தான்.

“நாளைக்கு எப்படி அவளைப் பார்க்குறது...?” என்ற யோசனையில் இருந்தவன், எப்பொழுது உறங்கினான் என்று தெரியாமல் உறங்கினான்.

ஓர் இரவு நீண்டு முடிய,

அதிகாலையில் எழுந்து வேகமாய் கிளம்பினான் முகிலன். மனதில் அவனுடைய வேலையைப் பற்றிய எண்ணம் மட்டுமே இருக்க, கிளம்பி கீழே வந்தான்.

“என்னப்பா கிளம்பிட்டியா...?” என்றபடி மலர், காபி டம்ளரை நீட்ட,

“தேங்க்ஸ்ம்மா...! இந்த குளிருக்கு, உங்க காபி எனெர்ஜி டானிக்..!” என்றபடி அதைக் குடித்து முடித்தவன், நேரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

“என்ன முகிலா...? கிளம்பலையா, நேரம் ஆச்சு..!” என்று மலர் சொல்ல,

வெளியே வந்தவன், பக்கத்து வீட்டு வாசலைப் பார்க்க, அங்கு யாரையும் காணவில்லை.

“எதுக்கு வாசலைப் பார்க்குறான்..?” என்று புரியாமல் மலரும் அவனுடன் வந்து பார்க்க, அவன் பார்வை போனப் போக்கைக் கண்டு, உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.

“என்னாச்சு முகிலா...?” என்றார்.

“என்னம்மா இவ..? எப்பவும் இந்த நேரத்துக்கு கோலம் போட வெளிய வந்திருப்பாளே..இன்னும் ஆளைக் காணோம்..!” என்று எரிச்சலுடன் புலம்பினான்.

“தெரியலையே...?” என்ற மலர், உள்ளுக்குள் சிரிக்க,

அவனை மேலும் கடுப்பேற்ற, அன்று சுமதி வந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்தாள்.

போகும் போது பார்த்துவிட்டு செல்லலாம் என்று எண்ணிய முகிலனின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டிருந்தாள் மதி. அவளுக்கு தான் முகிலனின் பயணம் பற்றித் தெரியாதே.

“உங்களுக்கு என் நிலைமையைப் பார்த்து சிரிப்பா இருக்குல்ல... போயிட்டு வந்து பார்த்துக்கறேன்..!” என்றபடி கிளம்பிவிட்டான்.ஆனால் மதியின் வீட்டைக் கடக்க முடியவில்லை அவனால்.

ஒருமுடிவுடன் இறங்கிவன்,

“உங்க அக்கா எங்க..?” என்றான் சுமதியிடம்.

அவனுடைய திடீர் குரலில் பயந்தவள்,

“உ..உள்ள தூங்குறா மா..மாமா..!” என்றாள்.

“விலகு..” என்றபடி உள்ளே சென்றான்.

பார்வதி அடுப்படியில் இருக்க, மனோகர் அப்போது தான் எழுந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவன் கொஞ்சமும் சட்டை செய்யாமல், வேகமாய் மதி இருந்த அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

“என்ன சத்தம்..?” என்றபடி வந்த பார்வதிக்கு, மனோகர் விஷயத்தை சொல்ல...அவர் மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்து கொண்டார்.

மதியின் அறைக்குள் முகிலன் வந்ததைக் கூட அறியாமல், அப்படி ஒரு தூக்கத்தில் இருந்தாள். கலைந்திருந்த முடிகள், அவள் முகத்தில் கோலம் போட்டுக் கொண்டிருக்க, அவள் அணிந்திருந்த நைட்டி, சற்று முன்கழுத்து இறங்கி, மோன நிலையில் படுத்திருந்தாள் மதி.

அவளைப் பார்த்தவனுக்கு, உணர்வுகள் மேலெழும்ப,

“ஒருத்தனோட தூக்கத்தைத் கெடுத்துட்டு,எப்படித் தூங்குறா பாரு..!” என்று தனக்குள் முனங்கியவன்...குனிந்து அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அதோடு நிமிரப் போனவனை, அவளுடைய இதழ்கள் கவர்ந்திழுக்க, ஒரு நிமிடம் அவள் முகத்தையே பார்த்தவன்....பின் அவள் இதழ்களோடு, தன் இதழ்களைப் பூட்டினான். மதியோ கனவில் நடப்பதைப் போல லேசாக சிரித்தாள். அதைப் பார்த்தவன், தன்னை மீட்டுக் கொள்ள, அவளோ அதே மோன நிலையில் இருந்தாள்.

“இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தோம்... நடக்குறதுக்கு நாம பொறுப்பில்லை..” என்று எண்ணியவன், ஆசை தீர அவளின் முகத்தை,மனதிற்குள் நிறைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

அதுவரை பார்வதி அவனை கண்டு கொள்ளாதவர் போல இருக்க, வெளியே செல்ல முற்படும் போது....

“காபி குடிக்கிறிங்களா மருமவனே..!” என்றார்.

‘மருமவனே’ என்ற வார்த்தையில், அவரின் உள்ளம் புரிய...

“இப்போதான் குடிச்சேன் அத்தை..! நான் வரேன்..!” என்றபடி சென்று விட்டான்.

இதை அறியாமல் ஒருத்தி, இன்னமும் தூங்கிக் கொண்டிருந்தாள்.




 
Sema ud sis:love: Apa oru valiya mathiku mani adichruchu!!!! Mathi ipidiya ma thungu va un mama vanthathu kuda theriyama???
 
Last edited:
அடப்பாவமே
முகிலன் வந்தது கூட தெரியாமல் இப்பிடி வண்ணமதி தூங்குறாளே
இந்த பார்வதியாவது அவளை எழுப்பி விடலாமில்லே
 
Last edited:
Top