Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலால் காதலாய் 2

Advertisement

பணத்துக்காக மகனை வித்தாச்சு ,ஒரு அப்பா பண்ணும் செயலா...?நல்ல அப்பா இவரு ?
இந்த மல்லிம்மா புருசருக்கு ஏன் இவ்ளோ பயம் ....ரொம்ப அப்பாவியா வேற இருக்காங்க ...
சூப்பர் ❤️
 
"என்ன பாலா! எப்படி இருக்கீங்க?" என்று அலைபேசியில் குணசீலன் கேட்க,

"நல்லா இருக்கேன் சார்! நீங்க எப்படி இருக்கீங்க?" என்றார் பால நாதன்.

"எங்க நல்லா இருக்குறது.. ஒரு பொண்ணை பெத்து செல்லமா வளர்த்து வச்சு.. அவளுக்கு கல்யாணம் பேசின அப்புறம் அவ மனசு கஷ்டத்துல இருந்தா நாம நல்லா இருக்க முடியுமா?" என்று சூசகமாக பேச, ஓரளவு விஷயத்தை யூகித்துக் கொண்டார் பால நாதன்.

'என்ன செய்து வைத்தானோ!' என்று மகனை மனதில் திட்டியபடியே,

"சார்! ஏதாவது பிரச்சனையா? ஜெய் அங்கே வந்தானா?" என்று அடக்கமாக பாலா கேட்க,

"அவன் வந்தா தான் பிரச்சனை இல்லையே! நம்ம வழிக்கே வர மாட்டுறானே! அது தான் பிரச்சனையே!" என்றார் கோபமாய் குணசீலன்.

"கொஞ்சம் புரியுற மாதிரி சொன்னா நான் என்னனு கேட்குறேன் சார்!" என்ற பாலாவின் குரல் இன்னும் கம்மி விட்டிருந்தது.

குணசீலனிடம் தான் வாங்கி இருக்கும் கடனின் அளவு அப்படி பேச வைத்திருந்தது.

வீட்டிற்கும் தெரியாமல், கடனை அடைக்கவும் முடியாமல் அவர் தவித்த நேரம் தான் கடனிற்கு பதில் மகனைக் கேட்டிருந்தார் குணசீலன்.

"என் பொண்ணுக்கு ஜெய பிரகாஷை புடிச்சி போச்சு.. இந்த கல்யாணம் நடந்தா எப்படியும் நான் மாப்பிள்ளைக்கு செய்யணும் தானே? அந்த கடனை அப்படியே முடிச்சி விட்டிடலாம்" என்று குணசீலன் கூற,

பால நாதன் அதிர்ந்தது என்னவோ சில நொடிகள் தான்.. தன் பிரச்சனைகள் தீரும் என்று தெரிந்ததும் உடனே சம்மதம் சொல்லிவிட்டார் மகனையும் கேளாமல்.

ஒன்றா இரண்டா? லட்சத்தில் ஆரம்பித்த கடன் இப்பொழுது கோடியில் வட்டியுடன் நிற்க வேறு வழி ஏதும் தெரியவில்லை அவருக்கு.

கேட்டாலும் மகனை அறிந்தவர் அவன் ஒத்துக் கொள்ள மாட்டான் என தெரிந்து தான் சம்மதம் கூறி இருப்பாரோ!

பிரேமா அருகில் சத்தமே இல்லாமல் நின்றிருந்தார் மல்லிகா. அவரை முறைத்தபடி நின்றிருந்தார் பிரேமா.

ஜெய் சாப்பிட்டு தூங்க சென்ற அரை மணி நேரத்தில் எல்லாம் வந்துவிட்டார் பால நாதன்.

வந்ததுமே, "எங்க அவன்? இன்னுமா வராமல் இருக்கான்.. இல்ல வந்துட்டு போய்ட்டானா? நான் பார்க்கணும்னு உன்கிட்ட சொன்னேன்ல?" என பதில் கூறும் முன்பே ஆட தொடங்கி விட்டார் பாலா.

"வந்தானா இல்லையா? மாடு மாதிரி நிற்காமல் பதிலை சொல்லு!" பாலா கேட்க,

"வந்தான்ங்க.. சாப்பிட்டு.. தூங்குறான்" என்று உண்மையையும் சொல்லி இருந்தார்.

"ஓஹ்! துரைக்கு தூக்கம் வேற!" என்றவர்,

"டேய் சூர்யா!" என்று அழைக்கவும் ஓடி வந்தான் அவன்.

"பெரியப்பா!" என்று கேட்க,

"அவனை நான் கூப்பிட்டேன்னு கூட்டிட்டு வா டா!" என்கவும், தயக்கமாய் பெரியன்னையைப் பார்க்க,

"இதோ போறேன் ப்பா!" என ஓடி இருந்தான் சூர்யா.

"உங்களை என்ன செய்யலாம் அக்கா! அவன் வரலன்னு சொல்லி இருக்கனும்.. இல்ல வந்துட்டு போய்ட்டான்னு சொல்லி இருக்கனும்.. ஏன் இப்படி இருக்கீங்க?" என பிரேமா அதட்ட,

"பயத்துல தானா வந்துடுச்சி பிரேமா!" என்றார் மல்லிகா.

"ண்ணா! டேய்!" என்று கத்த, மெதுவாய் அசைந்து கொடுத்தான் ஜெய்.

"டேய்! அப்பா கூப்பிடுறாங்க.. சீக்கிரம் வா!" என்று சூர்யா கூற,

"யாரு அப்பா டா? உன் அப்பான்னா சொல்லு சந்தோசமா மேல போறேன்" என்றான் கண்களை திறக்காமலே.

"அய்யோ விளையாடாத ண்ணா! எழுந்து வா" என கையைப் பிடித்து கிட்டத்தட்ட இழுக்க,

"இரு டா கண்ணாடி போட வேண்டாமா?" என எடுத்துப் போட்டுக் கொண்டவன்,

"மல்லி போட்டுக் குடுத்துருச்சா? கொஞ்சம் சத்தமா பேசினா போதும் திருடன்கிட்ட கூட லாக்கர் சாவியை குடுத்திடும்" என அன்னையை திட்டியபடி சூர்யாவோடு சென்றவன்,

"ஹாய் சித்தி! எப்படி இருக்கீங்க?" என்று பிரேமா அருகே செல்ல,

"அப்பா உன்கிட்ட பேசணும்னு தான் வெயிட் பன்றார் ஜெய்" என்றார் பிரேமா கண்ணைக் காட்டியபடி.

"சொல்ல சொல்லுங்க!" என்றான் அப்போதும் சித்தியிடமே!

"நாளைக்கு காலையில குணசீலன் வீட்டுல போய் அந்த பொண்ணை கூட்டிட்டு கார்டு வாங்கிட்டு வர்ற!" என்றார் முடிவாய்.

"ம்மா! அந்தாளைப் பாரேன்! உன்னை மாதிரியே அந்த பொண்ணு இந்த பொண்ணுன்றாரு" என்று அன்னையிடம் ஜெய் கூறி சிரிக்க,

"ஷ்ஷ்! சரினு சொல்லு டா" என்றார் மல்லிகா.

"நாளைக்கு சாட்டர்டே சூர்யா.. கிளினிக்கு நிறைய சில்ட்ரன்ஸ் வருவாங்க!" என்று ஜெய் கூற, அவன் மறைமுகமாய் மறுப்பது புரிந்து இன்னும் படபடப்பு கூடியது மல்லிகாவிற்கு.

"அப்படி ஒன்னும் அவன் கிளினிக்க திறக்க வேண்டாம்.. லீவ் விட சொல்லு!" பால நாதன்.

"லீவ் விட்டுட்டு? ஏன் மொத்தமா இழுத்து மூடவா?" என்று கோபமாய் கேட்க,

"ஜெய்!" என்று மல்லிகா.

"ப்ச் விடுங்க ம்மா! அது என் கிளினிக்.. எதுக்கு எப்ப லீவ் விடணும்னு எனக்கு தெரியும்.. என்னால எங்கேயும் போக முடியாது.." என்றான்.

"ஓஹ்! அவ்ளோ பெரிய ஆளாகிட்டயா? பாக்குறேன்!" என்ற பாலா,

"மல்லிகா! நாளைக்கு அவன் நான் சொன்னதை செய்யணும்.. இல்லைனா! என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது" என்று கூறி சென்று விட,

"உஃப்!" என்று அமர்ந்தார் பிரேமா.

"ஏன் டா இப்படி பண்ற? அப்பா சொன்னா சரினு கேட்க மாட்டியா?" மல்லிகா ஜெய்யை கேட்க,

"கேட்டதனால தான் இந்த வீட்ல இருக்கேன்" என்றான் அலட்டல் இல்லாமல்.

"ப்ச்! போ டா!" என்று அமர்ந்துவிட்டார் மல்லிகாவும்.

"சூர்யா! ஜெய்ன்றவனும் மனுசன் தான்.. அவனுக்கும் மனசு, மனசுல பீலிங்ஸுன்னு இருக்குறது ஏன் டா இந்த வீட்டுல யாருக்குமே தெரியல?" ஜெய் கேட்க,

"ண்ணா! என்ன ண்ணா நீ?" என்றான் சூர்யா.

"கல்யாணத்துக்கே சரினு சொல்லியாச்சு.. இன்னும் என்ன வேணுமாம் உன் பெரியப்பாக்கு?" என்றவன்,

"அந்த அட்ரஸ்ஸ வாங்கி வை உன் பெரியம்மாகிட்ட" என்று விட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

கண்ணீரோடு அமர்ந்திருந்த மல்லிகா அருகே அமர்ந்து அவரை சமாதானம் செய்ய ஆரம்பித்தான் சூர்யா.

சிறு வயதில் இருந்தே தந்தைக்கும் மகனுக்கும் ஆகாது. பள்ளியில் இது தான் படிக்க வேண்டும் என்ற தந்தையை எதிர்த்து அவன் ஒன்றை தேர்வு செய்ய, கல்லூரி முதற்கொண்டு கல்லூரி பாடத்திலும் அவருக்கு எதிராய் தான் செயல்பட்டான் ஜெய்.

தங்களுக்கென சொந்த வீடு கட்ட வரைபடம் ஒன்றை கொண்டு வந்து பால நாதன் வீட்டில் காட்டிய போதும்

"இவ்வளவு ஆடம்பரமா வீடு எதுக்கு? சிம்பிளா கட்டினா ஆகாதா?" என்று ஜெய் கேட்க, அதை கேட்காமல் கட்டி முடித்து அந்த வீட்டில் தான் வசித்து வருகின்றனர் அனைவரும்.

"அப்பா பிஸினஸ் எப்படி போகுது ம்மா?" என்று அன்னையிடம் ஜெய் கேட்ட பொழுது அதைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை அன்னைக்கு.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாய் இருந்து தன் எந்த விருப்பதையும் தந்தை கைக்கு கொடுக்காமல் பார்த்து வந்த ஜெய், அவன் திருமணத்தை மட்டும் எதிர்பாராமல் அவர் கைகளில் விட்டுவிட்டான்.

மருத்துவ குழு ஏற்பாட்டின் படி நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள ஜெய் மலேசியா சென்ற நேரம் திருமணத்திற்கான நிச்சயத்தை நடத்தி முடித்து இருந்தனர் பால நாதனும் குணசீலனும்.

அறைக்கு வந்தவனிற்கும் மனம் ஒரு நிலையில் இல்லை. நிதானம் தவறும் நேரங்களில் எல்லாம் தனிமை தேடி வந்து விடுவான்.

இந்த நேரம் தனிமையும் அவனுக்கு ஆறுதல் தரவில்லை. சிறு சிறு விஷயங்களிலேயே கருத்தாய் தனக்கென யோசித்து முடிவு செய்பவன், வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணத்தை மட்டும் விட்டுவிட்டு அமைதி இன்றி நின்றான்.

அஞ்சலி! கொஞ்சமும் தனக்கு சரிவராத பெண்.. முதன்முதலில் பார்த்த உடனே தெரிந்து கொண்டான் அதை.

"அப்பா உன் நல்லதுக்கு தான் டா செய்வாங்க..பையனுக்கு கல்யாணம் பண்ணனும்னு நினச்சதும் இல்லாம எவ்வளவு பெரிய இடமா பார்த்திருக்காங்க பாரு!" என்று அன்னை பெருமை பட,

"ம்மா! கல்யாணம் எல்லாம் நிறுத்தி நிதானமா யோசிச்சு பண்றது ம்மா.. இவ்வளவு வேகமா நான் ஊர்ல இல்லாத நேரம் பார்த்து நீங்களா பண்ணிட்டு வந்தா அது பெரு நிச்சயதார்த்தமா? என் முடிவை எப்படி அவர் எடுக்கலாம்? இப்ப எனக்கு அந்த பொண்ணை பிடிக்கலைனு சொன்னா எல்லாரும் என்ன பண்றதா இருக்கீங்க?" என அன்னையை கேள்வி கேட்க, அங்கே தான் தவறு புரிந்தது அன்னைக்கு.

"யாரு ம்மா அது? அன்னைக்கு இந்த பொண்ணை உனக்கு பார்த்திருக்கேன்னு அவரு சொல்லும் போதே எனக்கு இப்ப அந்த ஐடியா இல்லைனு சொன்னேன் தானே? இப்படி எனக்கு தெரியாம நீங்க செஞ்சு வச்சா என்ன அர்த்தம்? இல்ல எனக்கு புரியல?" என்று ஜெய் கேட்க,

"என்ன புரியல.. நீ அந்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணனும்னு அர்த்தம்.. நல்ல இடம், படிப்பு, அழகுனு என்ன இல்ல?" என்று பாலா கேட்க,

"எனக்கு இதெல்லாம் வேண்டாம் ம்மா.. மனசுன்னு ஒன்னு வேணும்.. எனக்கு புடிச்சா தானே கல்யாணம் பண்ண முடியும்?" என்று ஜெய் எவ்வளவோ தன் பக்கத்தை எடுத்து கூற,

"இந்த கல்யாணம் நடக்கலைனா இன்னைக்கு தான் நீங்க எல்லாரும் என்னை பாக்குற கடைசி நாளா இருக்கும்" என்று சொல்லிவிட, அவ்வளவு தான் மல்லிகாவிற்கு மகனிடம் கெஞ்ச அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் தாயின் மீதான பாசத்தில் அவரின் கெஞ்சலுக்கு செவி சாய்த்து அமைதி காத்தவனுக்கு அஞ்சலியின் சில பேச்சுக்களும் நடைமுறையும் என அவனை மீண்டும் இது சரி வராதோ என யோசிக்க வைத்திருந்தது.

அதை சொல்ல தான் முடியவில்லை. கேட்க ஆள் இருந்தாலும் தந்தையை எதிர்க்க யாரும் இல்லை. தாயை எதிர்க்க ஜெய் தயாராய் இல்லை.

தனக்கு தானே சமாதானம் செய்ய முயற்சி செய்து தோல்வி தான் என்றாலும் மனதை ஒருநிலைக்கு கொண்டு வந்து கதவை திறந்து வெளிவந்த போதும் பால நாதனை தவிர அனைவரும் அதே இடத்தில் தான் நின்றனர். கூடவே நிவிதாவும்.

"என்ன? இப்ப என்னன்றேன் எல்லாருக்கும்? அதான் உத்தரவு போட்டுட்டு போய்ட்டார் இல்ல? சரினும் சொல்லியாச்சு.. வேற என்ன வேணும் உங்களுக்கு எல்லாம்?" என்று ஜெய் கேட்க, அமைதி.

"ப்ச்! சாரிம்மா! கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் இல்ல? சரி வாங்க ஜூஸ் குடிச்சி செலிப்ரேட் பண்ணலாம்.. நிவி போய் ஜூஸ் எடுத்துட்டு வா" என்று கூற, கண்ணீர் கண்களை நிறைத்தது மல்லிகாவிற்கு.

தொடரும்..
 
ஜெய் அப்பா ??நீங்க seirathu சரியே இல்ல அவன் மனசும் paaka தானே வேணும் கடன் பட்டு அதை அடைக்க உங்க மகன் a vikkiringa ??
 
Top