Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இராவணத்தீவு - 1

Advertisement

துமி

Well-known member
Member
அத்தியாயம் 1

அரண்மனை இருந்த பகுதியை நோக்கி அந்த கார் வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. இரவு நேரத்தின் குளுமையை அனுபவிக்கவென்றே காரின் கண்ணாடியை இறக்கி விட்டிருந்தார் பர்வதம். வீசும் காற்று மடியில் படுத்திருந்த மகளுக்கு குளிரூட்ட, தன் சேலை முந்தானையால் மகளை போர்த்தினார்.

"என்ன மா சக்தி தூங்கிட்டாளா?" என பர்வதத்தின் கணவர், இராவணத்தீவின் மன்னர் நான்காம் இராஜாதித்யர் கேட்க,

"ஆமாங்க…" என்றவாறே மகளின் தலைகோதினார் இராவணத்தீவின் மகாராணி.

"தூங்கு போது மட்டும் தான் இவ வாய் அமைதியா இருக்கு…" என இராஜாதித்யர் தன் மகளை கிண்டல் பண்ணி சிரிக்க,

"நல்ல வேளை தூங்கிட்டு இருக்கா… இல்லைனா நீங்க கார் ஓட்ட முடியாதபடி பதிலுக்கு பதில் பேசியிருப்பா…" என்று விளையாட்டாய் சொன்னார் பர்வதம்.

"அதென்னமோ உண்மை தான். ஆனா இவளுக்கு முன்னாடி பொறந்த பொழில் எவ்வளவு அமைதியா இருக்கா." என்று தன் இன்னோர் மகளை பற்றி பெருமை பேசினார் இராஜாதித்யர்.

"போதுமே… விட்டா நாள் முழுக்க கூட உங்க பொண்ணுங்களை பத்தி பெருமை பேசிட்டே இருப்பிங்க… ரோட்டை பாத்து வண்டியை ஓட்டுங்க…" என்று சிறு சிரிப்புடன் சொன்னார் பர்வதம்.

"என் பொண்ணுங்களை பத்தி நான் பேசாம வேற யார் பேசுவா பர்வதம்?" என்று சிரிப்புடனே இராஜாத்தியர், பர்வதத்தை நோக்கி கேட்டுக் கொண்டிருக்க, அதே சமயம் எதிரில் லாரி ஒன்று வேகமாக வந்துக் கொண்டிருந்தது.

"பொழிலரசியும் நம்ம கூடவே இருந்திருந்தா நல்லா இருந்துக்கும்ங்க… நீங்க தான் உங்க ப்ரெண்டுக்கு வாக்கு குடுத்துட்டேன்னு அவளை தூக்கி குடுத்துட்டிங்க…" தாய்மனம் சற்றே ஆற்றாமையை வெளிப்படுத்தியது.

"கொடுத்ததை சொல்லி காட்டக் கூடாது பர்வதம்" கண்டிப்புடன் வார்த்தை வந்தது இராஜாதித்யரிடமிருந்து.

இராஜாதித்யருக்கும் பர்வதத்திற்கும், பொழிலரசி மற்றும் சக்தி என முறையே இரண்டு பெண் குழந்தைகள். பொழிலரசி சக்தியை விட இரண்டு வயது மூத்தவள். தன் நண்பன் குழந்தை பேறு இன்றி தவிப்பதால், பொழிலரசியை சுவிகாரம் செய்து கொடுத்திருந்தார் இராஜாதித்யர்.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அந்த லாரி அதிவேகமாக இவர்களை நோக்கி வந்தது.

"ஏங்க லாரிங்க…" என்று பர்வதம் அலற, அதை கேட்டுக் கொண்டே திரும்பிய இராஜாதித்யர், வண்டியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வதற்குள் எல்லாம் கைமீறி போய் இருந்தது.

***

"இந்தியாவிற்கு அருகில் இருக்கும் தீவான இராவணத்தீவின் மகாராஜா நான்காம் இராஜாத்தியரின் கார் நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானது. உடன் அவரது மனைவியும் மகளும் இருந்தனர். சம்பவ இடத்திலேயே மகாராஜா இராஜாதித்யரும் மகாராணி பர்வதமும் இறந்து விட்டனர். அவர்களின் மகள் சக்தி உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்." என தொலைகாட்சியில் செய்தி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. இந்தியா முழுவதும் பேசு பொருள் இதுவே.

***

"இராவணத்தீவின் மகாராஜா ஐந்தாம் இராஜாதித்தியன் இன்னும் சில விநாடிகளில் இந்தியாவுடனான சில புதிய கொள்கைகளில் ஒப்பந்தமிட போகிறார்."

"இராஜாத்தித்ய மகாராஜாவின் இந்தியாவுடனான புதிய கொள்கைகள் என்னவாக இருக்கும்?"

"புதிய கொள்கைகள் பற்றி இதுவரை எந்த தகவல்களையும் இராவணத்தீவோ அல்லது இந்தியாவோ வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆகையால் இந்த புதிய கொள்கை ஒப்பந்தம் எதற்கு என புரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர்."

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் சார்பாக செய்தி தொகுப்பாளர்கள், இந்தியாவின் பிரதமர் அலுவலகத்தின் வெளியே நின்று செய்தி சேகரித்து கொண்டிருந்தனர். அனைத்தும் லைவ்வாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆறடி மூன்று அங்குல உயரத்தில், தன்னை சுற்றி இருப்பவர்களை குட்டையாக்கி கொண்டு, கருப்பு நிற கோட் சூட்டில் கம்பீரமாக படி இறங்கிக் கொண்டிருந்தான் இராவணத்தீவின் மகாராஜா ஐந்தாம் இராஜாதித்தியன்.

பரந்த நெற்றி, அதன் மீது வந்து விழும் கற்றை கூந்தல், கட்டையான புருவமும் அதன் கீழே இருக்கும் கூர்மையான இரு கண்களும் அவனை அழுத்தக்காரனென பறைசாற்றும். அந்த நீண்ட நாசி இவனது கோபத்தினை எடுத்து சொல்லும். இவனுக்கு ஏற்றாற் போல கம்பீரம் மிளிரும் வகையில் தாடியினை ட்ரிம் செய்திருப்பான். அவன் உருவத்திற்கும் உடல் வாகிற்கும் ஒரு ராஜா என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என சொல்லும்படியாக இருப்பான்.

இராஜாதித்யனை தூரத்திலிருந்தே பல காமிராக்கள் ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தன. ஆனால் அதற்குள் அவனது பாதுகாவலர்கள் கேமராக்கள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு நின்றனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பு படையுடன் தான் இராஜாதித்யன் எப்பொழுதுமே வலம் வருவான். இராவணத்தீவில் வேண்டுமானல் ஓரடுக்கு பாதுகாப்புடன் வலம் வருவான். ஏனென்றால் அவன் நாட்டில் அவன் கண் படும் இடமெல்லாம் அவனுக்கு விஸ்வாசமான ஆட்களே உள்ளனர். பாதுகாப்பு விசயத்தில் மட்டும் அவன் எவ்வித அலட்சியமும் காட்டுவதில்லை.

கம்பீரமான அவனின் முகம் ஒரு விநாடி திரையில் தோன்ற, ஊடகங்கள் அதையே போட்டு போட்டு தேய்த்துக் கொண்டிருந்தன.

"வாட் அ ஹேண்ட்சம் மேன்?" பூர்ணா உருகிக் கொண்டிருந்தாள்.

பூர்ணாவின் தலையிலே தட்டினான் துவாரகேஷ். இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

"எதுக்குடா நாயே இப்போ என்னை அடிச்ச?" என சீறினாள் பூர்ணா.

"பின்ன சக்தியோட அத்தை பையனை நீ இப்படி சைட் அடிச்சா? பாவம் ப்ரெண்டுனு அவ உன்னை அடிக்க மாட்டா… அதான் அவளுக்கு பதிலா நான் உன்னை அடிச்சேன்." என்று வெகு கூலாக சொன்னான் துவாரகேஷ்.

"அவளே எதுவும் சொல்லாம சைலண்ட்டா இருக்கா… உனக்கு என்ன டா வந்துச்சு பன்றி??" என அவனை இரண்டு போடு போட்டாள் பூர்ணா.

"புக்கும் லேப்டாப்பும் மட்டும் கையில கிடைச்சிட்டா மேடம் ஆஃப் தி வோர்ல்ட்க்கு போய்டுவாங்க… சுத்தி என்ன நடக்குதுனே தெரியாது. அதை சாக்காக வச்சிக்கிட்டு நீ மகாராஜா வை சைட் அடிக்கற... இப்ப கூட பாரு இவ்வளவு கலவரம் நடக்குது உக்காந்து லேப்டாப்பை நோண்டிட்டு இருக்கா…" என்று சக்தியை கிண்டல் செய்து கொண்டிருந்தான் துவாரகேஷ்.

துவாரகேஷ் சொன்னது போல தான் மடிக்கணினியோடு ஒன்றியிருந்தாள் சக்தி. கண்களை மடிக்கணினியிலே ஒட்டி விட்டாற் போல அதையே உத்து பார்த்துக் கொண்டிருந்தாள்‌. இவர்கள் பேச்சு எதுவும் அவள் காதுகளை எட்டாதது போல அமர்ந்திருந்தாள்.

சட்டென மடிக்கணினியை மூடினான் துவாரகேஷ். அவன் அப்படி மூடியதில் அதிர்ந்து போய் திருதிருவென விழித்தாள் சக்தி. படிக்கும் பொழுதும், மடிக்கணினியில் வேலை பார்க்கும் பொழுதும் மட்டும் கண்ணிற்கு கண்ணாடி அணிந்திருப்பாள். அடிக்கடி ஜூன்ஸ் பேன்ட், சர்ட்டிலும், அரிதாக சுடிதாரிலும் அவளை காணலாம்.

"நாங்க என்ன பேசிட்டு இருக்கோம் தெரியுமா?" என துவாரகேஷ் கேட்க, தெரியாது எனும் விதமாக தலையாட்டினாள் சக்தி.

"அந்த டீவில வர்றது யார்னு தெரியுதா?" என்று தொலைக்காட்சியில் தெரிந்த இராஜாதித்யனின் உருவத்தை சுட்டிக் காட்டி கேட்டான்.

சில விநாடிகள் பிடித்தன சக்திக்கு அது யாரென்று புரிய.

"மகாராஜா…" என்றாள் மெல்லிய குரலில். அவ்வளவு தான் அவளது குரலே எனும் விதமாக‌.

"அது எங்களுக்கு… உனக்கு அவர் முறைப்பையன் தானே?" என்று கேட்க, எதுவும் புரியாமல் இமைகளை மூடி மூடி மட்டும் திறந்து கொண்டிருந்தாள்.

"நாங்க அவரை மகாராஜான்னு கூப்பிடறோம் சரி, நீயும் எதுக்கு அவரை மகாராஜான்னு கூப்பிடற? அழகா அவர் பேரை சொல்லி கூப்பிட வேண்டியது தானே?" என்று சக்தியை நோக்கி துவாரகேஷ் கேட்க,

"அது எங்க அப்பா பேரு…" மூக்கில் இருந்து நழுவிய கண்ணாடியை ஏற்றிக் கொண்டே சொன்னாள் சக்தி.

"சுத்தம்…! நீ ஏன் இப்படி இருக்க சக்தி? நியாயமா அது நீ இருக்க வேண்டிய இடம். உங்க அப்பாக்கு அப்பறம் நீ தான் இந்த நாட்டை ஆளனும்! ஆனா இப்படி எதுவுமே வேண்டாம்னு இருக்க?" என்று தோழியின் நலனுக்காக அக்கறைப்பட்டான் அந்த தோழன்.

"இங்க பாரு துவா… எனக்கு இந்த அரியணை மேலலாம் இன்ட்ரெஸ்ட் இல்ல. எங்கப்பா அம்மா இறந்தப்பே எனக்கு எல்லா ஆசையும் போய்டுச்சு. பத்தாததுக்கு என்னோட அக்கா எங்க இருக்கா? எப்பிடி இருக்கா? நல்லா இருக்காளா இல்லையான்னு கூட தெரியல…

இப்போ நாம ஆரம்பிச்சிருக்க ஸ்டார்ட் அப் கம்பெனியை வச்சி எனக்கு தேவையான பணம் கிடைக்குது. எனக்கு அது போதும்! இன்னும் கொஞ்சம் பணம் சேத்திட்டு என் அக்காவை தேடனும். அவ கிடைச்சதும் அவ கூட போய் சேர்ந்திடுவேன்.

எனக்கு இந்த பதவி, பணம் மேல எல்லாம் ஆசையே இல்ல…" என்றாள், அப்படியே டேபிளில் தலையை சாய்த்து படுத்துக் கொண்டு.

"உண்மையாலுமே உனக்கு ஆசையே இல்லையா? இதே நானா இருந்தா பண்ணுற அலப்பறையே வேற மாதிரி இருந்துருக்கும். அட்லீஸ்ட் மகாராவோட கசின்னாச்சும் இங்க இருக்கவங்ககிட்ட சொல்லலாம்ல…"

"வேண்டாம் துவா. எனக்கு மகாராஜோட பேர் சொல்லி அவரோட புகழ்ல வளர பிடிக்கலை. எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. என்னோட செலவுக்கு என்னால நேர்மையான முறையில பணம் சம்பாதிக்க முடியுது. அப்பறமும் எதுக்கு அவரோட நிழல்?

மகாராஜாவோட கசின்னு சொன்னா என் மேல மரியாதை வைக்கிறவங்களை விட, பொறாமை படறவங்க தான் ஜாஸ்தியா இருப்பாங்க… நான் நானா இருந்துட்டு போறேனே. இப்போ நான் எவ்வளவு ஃப்ரீயா இருக்கேன். என் விருப்பப்படி இருக்கேன். இதே மகாராஜாவோட கசின்னு சொன்னா இந்த ப்ரைவசி இருக்குமா சொல்லு?" இன்னமும் டேபிளில் இருந்து நிமிராமலே அவள் கேட்க,

"அதென்னமோ வாஸ்தவம் தான். ஆனாலும் நீ உன் உரிமையை விட்டுக் கொடுத்துட்டு இருக்கிறதை பாக்கும் போது…" என்றவனை இடைமறித்த சக்தி,

"துவா இராவணத்தீவுல இருக்கோம். அதுவும் இராவணத்தீவோட யுனிவர்சிட்டி கேன்டீன்ல‌.‌.. இங்க நீ மகாராஜை பத்தி என்ன பேசினாலும் அவர் காதுக்கு போய்டும். எது பேசுறதா இருந்தாலும் கவனமா பேசு! அதோட இதை பத்தி இனி என்கிட்ட பேசவே பேசத… எனக்கு இந்த மாதிரி பேச்சு சுத்தமா பிடிக்கல…" என்று தாடையை மட்டும் டேபிளில் வைத்துக் கொண்டு, படுத்திருந்த அதே நிலையிலே முகத்தை மட்டும் உயர்த்தி, நண்பனை அதட்டினாள். அப்படி தான் அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அது பார்க்கவும், கேட்கவும் படு காமெடியாக இருந்தது துவாரகேஷிற்கு.

"ஓகே ஓகே…" என்றவன் தான் இனி இதை பற்றி தான் இனி‌ பேச போவதில்லை எனும்விதமாக, வாய்க்கு ஜிப் போடுவது போல் சைகை செய்ய, மெல்ல சிரித்தாள் சக்தி. பூர்ணா இன்னும் தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டு உருகிக் கொண்டிருந்தாள்.

பூர்ணா இந்தியாவின் வட மாநிலத்தை சேர்ந்தவள். அவளது முழுப்பெயர் பூர்ணா பாஜ்பாய். துவாரகேஸ் ஒரு மலையாளி. இருவருக்கும் உள்ள பல்கலைகலகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு பெற அனுமதி கிடைத்திருந்தது. இராவணத்தீவுயின் கல்வி வளம் இந்தியா முழுவதும் பிரசித்தம். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இராவணத்தீவு மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது அந்த சமஸ்தானத்தின் கட்டளை. அதையும் மகாராஜா ஐந்தாம் இராஜாதித்தியன் தான் பிறப்பித்திருந்தான். அவர்கள் நிரப்பியது போக மீதமிருக்கும் இடங்களையே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்குவார்கள். கல்வி செலவு மிகவும் குறைவு என்பதால் பல வெளிநாட்டு மாணவர்கள் போட்டி போட்டி இங்கு படிக்க வருவார்கள்.

அப்படியாக தான் இராவணத்தீவுக்கு துவாரகேஷூம், பூர்ணாவும் படிக்க வந்திருந்தனர். இதோடு அவர்கள் இங்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் இருவரும் இளங்கலை படிப்பு முடித்ததும் இராவணத்தீவுயில் தான்.

இராவணத்தீவுயில் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என எழுதப்படாத சட்டம் இருப்பதால், இங்கு சேருவதற்கு முன்பே இருவரும் தமிழை பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் நன்கு கற்றுக் கொண்டு தான் வந்தனர்.

"இதெல்லாம் திருந்தாது…" என பூர்ணாவை பார்த்து தலையில் அடித்துக் கொண்டான் துவாரகேஷ்.

"விடு துவா…" மெல்லிய சிரிப்பினூடே சொன்னாள் சக்தி.

இவர்களது வகுப்பில் பூர்ணாவும், துவாரகேஷூம் மட்டும் தான் வெளிநாட்டு மாணவர்கள். மற்றபடி அனைவரும் இராவணத்தீவுயினை சேர்ந்தவர்கள். ஏனோ அவர்களுடன் மனம் ஒட்ட மாட்டேன் என முரண்டியது இவளுக்கு. அப்படியாக தான் இவள் பூர்ணாவிடமும் துவாரகேஷிடமும் சிநேகமானது. நாளடைவில் இவர்கள் மூவரது நட்பும் இறுகியது.

மூவரும் சேர்ந்து ஆறு மாதத்திற்கு முன்பு தான் சின்னதாக ஸ்டார்ட் அப் ஒன்றை தொடங்கி இருந்தனர்‌. பூர்ணாவும் துவாரகேஷூம் மூலதனம் போட, சக்தி தன் மூளையை போட்டாள். அவர்களது பேராசிரியர் ஒருவரது உதவியுடன் சில க்ளையன்ட்கள் கிடைக்க, இவர்களுக்கு அது பேருதவியாக இருந்தது. சக்தியின் மூளையும் மூவரது உழைப்புமென இன்னும் சில புதிய க்ளையன்ட்டுகளும் கிடைக்க, அவர்களுக்கு தேவையான பணத்தை அவர்களே சம்பாதித்துக் கொள்ள ஆரம்பித்தனர்.

பூர்ணா உடை வாங்குவது, ஆபரணம் வாங்குவது, உடல் அலங்காரத்திற்கு என செலவிட்டால், துவாரகேஷ் நேர் மாறாக பணத்தை தன் பெற்றோர்களுக்கு கொடுத்து விடுவான். சக்தியோ இது பற்றிய எந்த கவலையும் இல்லாமல் தன் செலவு போக மீதமிருப்பதை புத்தகங்கள் வாங்க செலவிட்டுவிடுவாள்.

புத்தகங்கள் தான் அவள் மகிழ்ச்சி! புத்தகங்கள் தான் அவளின் உலகம்! புத்தகங்கள் தான் அவளது தந்தை அவளுக்கு விட்டுவிட்டு போன சொத்துக்கள்!
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கார் விபத்தா இல்லை திட்டமிட்டு பண்ணுனதா?
அடேங்கப்பா ராஜதோரணை வெகு பிரமாதம் 🫤🫤🫤🫤🫤
சக்தி அக்கா பொழில் எங்க இருக்காளோ?
ஜீ வாசிக்க ஆரம்பிச்சதும் முடிஞ்ச மாதிரி ஃபீல் ப்பா.
 
Top