Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 98

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அதைக் கண்ட அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டனர்.

“எங்க வீட்டு மருமகளாகிட்ட ம்மா!” என்று அவளை மென்மையாக
அணைத்துக் கொண்டார் கவிபாரதி.

அதில் புன்சிரிப்பை உதிர்த்த ருத்ராக்ஷியும், ஸ்வரூபனும் அங்கேயிருந்த பெரியவர்கள் கால்களில் விழுந்து எழுந்தார்கள்.

அவர்களை ஆசீர்வதித்து விட்டு,”எங்க சார்பாக உங்களுக்குத் துணி எடுத்துருக்கோம்” என்று சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவிடம் தாங்கள் கொண்டு வந்திருந்த துணிப் பைகளைக் கொடுத்தனர் ஸ்வரூபன், கவிபாரதி மற்றும் மிருதுளா, வித்யாதரன்.

அதைச் சற்றும் பொறாமையின்றி பார்த்துக் கொண்டு இருந்தனர் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சன்.

அவர்களது மருமகளுக்கு மட்டுமில்லாமல், தங்களது மகள் மஹாபத்ராவிற்கும் சேர்த்து உடையை எடுத்துக் கொண்டு வந்ததைப் பார்த்துப் பூரித்துப் போனார்கள் அவளது பெற்றோர்.

அவற்றைப் பார்த்ததும், அவர்களது அன்புப் பரிசைக் கண்டு நெகிழ்ந்து போய் விட்டார்கள் ருத்ராக்ஷியின் வீட்டார்.

“இதையெல்லாம் எப்போ வாங்கினீங்க?” என்று அவர்களிடம் கேட்டார் சந்திரதேவ்.

“ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே வாங்கிட்டோம் சம்பந்தி. இங்கே வந்தால் நீங்க எங்களை எதையுமே வாங்க விட மாட்டீங்க தானே!” என்று அவரிடம் கேட்டுச் சிரித்தார் கவிபாரதி.

“ஹாஹா! அது என்னவோ உண்மை தான் ம்மா” என்று கூறிப் புன்னகைத்தார் ருத்ராக்ஷியின் தந்தை.

“உங்களோட பட்ஜெட் எவ்வளவுன்னு எங்களுக்குத் தெரியாது! ஏதோ எங்களால் முடிஞ்சதை வாங்கிட்டு வந்திருக்கோம்” என்று அவர்களிடம் சங்கடத்துடன் உரைத்தான் ஸ்வரூபன்.

“அச்சோ மாப்பிள்ளை! என்ன இப்படி சொல்லிட்டு இருக்கீங்க? நீங்க வாங்கித் தந்தது எப்படி சோடை போகும்? எல்லாமே சூப்பராக இருக்கு” என்று அவனிடம் சொன்னான் காஷ்மீரன்.

அவனது வார்த்தைகளைக் கேட்டதும் தான், ‘அப்பாடா’ என்றிருந்தது அந்த நால்வருக்கும்.

“ஹேய் உன்னோடதைக் காட்டு டி” என்று தன் மகளிடம் கேட்டார் கனகரூபிணி.

“இதோ ம்மா” என அவரிடம் தன்னுடைய உடையைக் காட்டினாள் மஹாபத்ரா.

“ம்ம்! ரொம்ப நல்லா இருக்கு!” என்றவரோ, தங்கள் சார்பிலும் அவர்களுக்கு நன்றி கூறினார் அவளது அன்னை.

அதன் பின்னர், ஸ்வரூபன், கவிபாரதி மற்றும் மிருதுளா, வித்யாதரனையும் மதிய உணவைச் சாப்பிட வைத்து விட்டு,

“பூ வைக்கிற ஃபங்க்ஷன் நல்லா நடந்து முடிஞ்சது. இனிமேல் நிச்சய வேலைகளைப் பார்க்கனும்” என்று கவிபாரதி கூறவும்,

அதைக் கேட்டவுடன் தனது தாயைத் தான் பார்த்தாள் மஹாபத்ரா.

அதைக் கண்டு,“என்னடி?” என்று அவளிடம் வினவினார் கனகரூபிணி.

“உங்களுக்கு ஞாபகம் இருக்கா? என்னோட பூ வைக்கிற ஃபங்க்ஷன் முடிஞ்சதுக்கு அப்பறம் நீங்களும் இப்படித் தான் எல்லாத்தையும் டக்கு, டக்குன்னு முடிவு பண்ணிட்டு இருந்தீங்க!” என்று கூறி அவரைக் கிண்டல் செய்தாள் அவரது மகள்.

“ஆமாம். அப்பறம் எல்லாத்தையும் இப்போ இருந்தே ஆரம்பிச்சா தான், அவசரம் இல்லாமல் நல்லபடியாக நடக்கும் டி!” என்று அவளிடம் விளக்கிக் கூறினார் அவளுடைய தாய்.

“அவங்க சொல்றதும் வாஸ்தவம் தான் ம்மா. ஏன்னா, இன்னும் நிறைய நாள் இருக்குன்னு நினைப்போம். ஆனால், நாள் நெருங்கி வர்றதே தெரியாமல் போயிடும். அப்பறமென்ன, அவசர அவசரமாகப் பண்றா மாதிரி இருக்கும். அதான் இதையெல்லாம் முன்னாடியே லிஸ்ட் போட்டு நாள் கணக்கு வச்சு செஞ்சு முடிக்கனும்” என்று அவளுக்குப் புரிய வைத்தார் மிருதுளா.

“ஓஹ்ஹோ! சரிங்க க்கா” என்று அதை ஏற்றுக் கொண்டாள் மஹாபத்ரா.

“அப்போ நிச்சயத் தேதியை நாங்களே குறிச்சு சொல்லவா சம்பந்தி?” என்று சந்திரதேவ்விடம் கேட்டார் கவிபாரதி.

“ம்ம். நீங்களே குறிச்சு சொல்லிடுங்க. இவங்களோட நிச்சயத்தார்த்தை இந்த ஊரில் தானே நடத்தப் போறோம்?” என்றார் சந்திரதேவ்.

“ஆமால்ல! பொண்ணோட சொந்த ஊரில் தானே நடக்கனும்?” என்று தானும் கேட்டுக் கொண்டார் மிருதுளா.

“அப்போ நாம இங்கே வந்துடலாம்!” என்று தன் மனைவியிடம் மட்டுமின்றி மற்ற மூவரிடமும் கூறினார் வித்யாதரன்.

“ஆமாம். பத்து நாள் இல்லைன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்துருங்க. அப்போ தான், சரியாக இருக்கும்” என்று அவர்களிடம் சொன்னார் பிரியரஞ்சன்.

“என்னடா?” எனத் தன் மகனிடம் கேட்டார் கவிபாரதி.

அதற்கு அவனும்,”ம்ம். அவங்க சொன்னா மாதிரியே வந்துடலாம் மா” என்று அதற்கு ஒப்புதல் அளித்தான் ஸ்வரூபன்.

“ஆனால், இவங்களோட கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ஊருக்கு இல்லப் போகனும்?” என்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள் மஹாபத்ரா.

“ஆமா மஹா. நாமளும் சீக்கிரமே அங்கே போயாகனும்” என்று அவளிடம் கூறினான் காஷ்மீரன்.

“அதில் உங்களுக்கு ஏதாவது சங்கடம் இருந்தால், இவங்க கல்யாணத்தை இங்கேயே நடத்திடலாமா?” என்று ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தாரிடம் வினவினார் கவிபாரதி.

“என்ன சம்பந்தி இந்த மாதிரி வார்த்தை எல்லாம் பேசுறீங்க? மாப்பிள்ளையோட ஊரில் தான் கல்யாணம் நடக்கும். அதானே முறை?” என்று அவரிடம் உறுதியாக கூறினார் சந்திரதேவ்.

அதைக் கேட்ட பிறகு தான், ஸ்வரூபனுடைய வதனத்தில் மலர்ச்சியைப் பார்க்க முடிந்தது.

“ஆமாம் அத்தை. எனக்கும் அந்த ஊரில் தான் கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆசை” என்று கூறி அந்தத் தாய் மற்றும் மகனின் உள்ளத்தைக் குளிர வைத்தாள் ருத்ராக்ஷி.

“சந்தோஷம் மா” என்று கூறிப் புன்னகை புரிந்தார் கவிபாரதி.

அதைப் போலவே, யாரும் அறியாதவாறு, அவளிடம் விழிகளால் நன்றி தெரிவித்தான் ஸ்வரூபன்.

ருத்ராக்ஷி தங்கியிருந்த ஊருக்கு எப்போதாவது தான் போய் வருவார்கள் சந்திரதேவ் மற்றும் காஷ்மீரன்.

அப்போதும் கூட, இம்மூன்று (ருத்ராக்ஷியின் குடும்பம், கவிபாரதி மற்றும் ஸ்வரூபன், வித்யாதரன், மிருதுளா தம்பதியர்) குடும்பங்களும் இவ்வளவு புரிதல் உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்களே? என்று இவர்களது ஒற்றுமை மற்றும் புரிதலைக் கண்டு பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணியும் அதிசயித்துப் போனார்கள்.

சிறிது நேர உரையாடலுக்குப் பிற்பாடு, மாப்பிள்ளை வீட்டாரும், மஹாபத்ராவின் பெற்றோரும் கிளம்பும் நேரம் வந்து விட்டதை அறிந்தவர்களோ,

“நீங்க எல்லாரும் எப்பவும் இப்படியே ஒற்றுமையாக இருக்கனும்” என்று கூறிய கனகரூபிணியிடம்,

“நாம எல்லாரும்ன்னு சொல்லுங்க சம்பந்தியம்மா. நீங்களும் எங்க குடும்பம் தானே?” என்று சொன்னார் சந்திரதேவ்.

“ஆமாம் சம்பந்தி” என்று அவரது கூற்றை ஆமோதித்துக் கொண்டார் மஹாபத்ராவின் அன்னை.

“சரி நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம் ங்க” எனத் தங்களது மகளின் புகுந்த வீட்டாரிடமும், மற்றவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டு சென்றனர் பிரியரஞ்சன் மற்றும் கனகரூபிணி.

அவர்கள் போன பிறகான சிறிது நேரத்திலேயே, தாங்களும் விடைபெற எண்ணினர் கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் மிருதுளா, வித்யாதரன்.

“இங்கே கெஸ்ட் ஹவுஸில் தங்கிட்டு நாளைக்குப் போகலாம்ல?” என்று அவர்களிடம் வினவினான் காஷ்மீரன்.

“சரி தம்பி. அப்படியே செய்றோம்” என்று அவனது பேச்சிற்கு மறு பேச்சுக் கூறாமல் ஒப்புக் கொண்டார்கள்.

அன்றைய தினம் முழுவதும், இவர்கள் அனைவரும் தங்களுடைய விருந்தினர் இல்லத்தில் தான் தங்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது ருத்ராக்ஷியின் விழிகள்.

எனவே, தனது தலையில் சூடி இருந்த மல்லிகைப் பூவின் வாசத்தை சுவாசித்து ரசித்தபடியே அனைவரிடமும் விடைபெற்றுச் செல்லும் ஸ்வரூபனைக் காதலுடன் பார்த்து வழியனுப்பி வைத்தாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
ஸ்வரூபா அதுதான் பூ வச்சு confirm பண்ணிட்டாங்கல்ல இனி நீங்க போனுல பேச தடையில்லப்பா, மணிக்கணக்கா நீ பேசினாலும் யாரும் தடுக்கப்போறது இல்ல.😍😍😍😍😍😍😍😍😍
 
ஸ்வரூபா அதுதான் பூ வச்சு confirm பண்ணிட்டாங்கல்ல இனி நீங்க போனுல பேச தடையில்லப்பா, மணிக்கணக்கா நீ பேசினாலும் யாரும் தடுக்கப்போறது இல்ல.😍😍😍😍😍😍😍😍😍
Adhe dha sis 🤩 thank you so much ❤️
 
Top