Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 4

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 4

வந்தனா - முரளி நிச்சய விழா ஆரம்பித்திருக்க, ‘கருடா...’ திருமண மண்டபமே அத்தனை கூட்டம் நிரம்பி வழிந்தது..

இத்தனை பேரை அழைத்ததற்கு திருமணமே செய்திருக்கலாம்.. என்று நினைக்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது என்பதாய் அத்தனை அழகாய் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தனர்.. வனமாலியும், கோவர்த்தனும் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை.

கண் காட்டினால் போதும் செய்வதற்கு ஆட்கள் அத்தனை பேர் இருந்தாலும், தாங்களே ஒவ்வொன்றையும் பார்த்து செய்தால் தானே அது தகும் என்பதுபோல் இருவரும் காலில் சக்கரம் கட்டியதாய் திரிய, வனமாலிக்கோ அவ்வப்போது பார்வை வாசலுக்கு சென்று வந்தது எனலாம்.

வனமாலிக்கு மட்டுமல்ல, மேடையில் அலங்காரத்தில் அமர்ந்திருந்த வந்தனாவும் சரி அவளருகே தோள் பெண்ணாய் நின்றிருந்த பமீலாவும் சரி அவ்வப்போது வாசலைப் பார்க்க, மணிராதாவும், இந்திராவும் கூட இதே தான் செய்துகொண்டனர்..

‘எப்போது வருவார்கள்...’ என்றும் ‘வந்துவிடுவார்களோ..’ என்றும் ஒவ்வொருவரின் உணர்வு ஒவ்வொன்றாய் இருக்க,

“என்ன மணி.. சிவகாமியை கூப்பிடலையா???” என்றார் உறவில் வயதான பெண் ஒருவர்.

இந்திரா அமைதியாய் இருக்க, “இந்திரா, நீ மட்டும் வந்திருக்க, எப்படி செய்முறை எல்லாம் சேர்ந்து செய்றீங்களா?? இல்லை தனி தனியாவா??” என்று மற்றொரு பெண் கேள்வி கேட்க,

“சொத்தெல்லாம் இன்னும் பிரிக்கலையே.. பின்ன எப்படி தனி தனியா செய்ய முடியும்...” எனும்போதே, இந்திரா மணிராதாவைப் பார்க்க, அவரோ நீ எதுவும் பேசாதே என்று சைகை செய்தார்.

“என்ன இருந்தாலும் தாய் மாமா வீட்டு சேலை வந்த அப்புறம் தான் மாப்பிள்ளை வீட்ல சேலை கொடுக்க முடியும்.. இந்திரா நீயும் தட்டு வச்சிருக்க போலவே.. ஆனா சிவகாமிதானே முதல்ல செய்யணும்...” என்று மணிராதாவின் கணவர் வழி உறவில் வந்து ஒருவர் சொல்ல, மண்டபத்தில் சல சலப்பு அடங்கி திடீரென ஒரு அமைதி சூழ்வதாய் இருக்க, என்னவென்று எல்லாம் திரும்பிப் பார்க்க, சிவகாமி முன்னே வர, அவருக்கு கொஞ்சம் தள்ளி பின்னே கமலி வர, அவர்களுக்கு பின்னே வரிசையாய் பெண்கள்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சீர் தட்டு வைத்திருக்க, சேலை, நகை, மாலை வைத்திருந்த தட்டு கமலி ஏந்தி வந்தாள். எப்படியும் ஐம்பத்தியோரு தட்டாவது இருக்கும். சிவகாமி ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் என்பது பார்த்ததுமே தெரிய, இத்தனை நேரம் ஆளுக்கு ஒன்றாய் பேசியவர்களின் வாய் அப்படியே மூடாது திறந்திருக்க, இந்திராவோ திகைத்துப் போய் பார்த்துக்கொண்டு இருந்தார்.

மணிராதா கூட உள்ளே அசந்துப் போனார் என்றுதான் சொல்ல வேண்டும். அழைத்ததற்கு என்று வெறுமெனே சிவகாமி மட்டும் வந்து செல்வார், இதையே சாக்காய் வைத்து வனமாலியிடம் பேசவேண்டும் என்று எண்ணியிருக்க, சிவகாமியோ இப்படி முறைப்படி அனைத்தும் செய்யவும் அவரால் எதுவுமே செய்ய முடியாது போனது.

வனமாலிக்கே ஆச்சர்யம்தான். நம்ப முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏறக்குறைய அவனும் மணிராதா போலவே தான் எண்ணினான். அழைத்ததற்கு வருவார்கள் என்று எண்ணியவன், இதனை கொஞ்சமும் நினைக்கவில்லை. அதிலும் கமலி.. அவள் வருவாள் என்பது அவனுக்கு இப்போது வரைக்குமே நம்பிட முடியவில்லை.

“வா... வங்கத்தை....” என்று வனமாலி முதலில் சென்று அழைக்க, “ரொம்ப லேட்டாகிடுச்சா வனா??” என்றபடி சிவகாமி வர, அவனின் பார்வையோ அவருக்கு பின்னே வந்தே கமலி மீது படிந்து மீள,

அவளோ மேடையில் இருந்த வந்தனாவை பார்த்து லேசாய் புன்னகை சிந்துவதாய் இருந்தது.

“அண்ணி என்னண்ணி...” என்று இந்திரா கேட்க, அதற்குள் முரளி வீட்டினரும் அனைவரும் அங்கே வந்திட,

“வாங்க வாங்க...” என்று முரளியின் அப்பாவோ சிவாகாமியை அப்படியொரு வரவேற்பு செய்தார்.

“நல்லா இருக்கீங்களா??” என்று சிவகாமி விசாரிக்க, அந்த மனிதரோ தன் மனைவியிடம் “யார்னு தெரியுதா?? இவங்க அப்பாதான் முதன் முதல்ல எனக்கு தொழில் தொடங்கி கொடுத்தார்...” என, அவ்வளோதான் மணிராதா அங்கே வாய் திறக்கவே முடியாது எனும் சூழல்.

அதற்குள் பமீலா மேடையில் இருந்து இறங்கி இந்திராவிடம் வந்தவள் “ம்மா நீ வா.. முதல்ல வந்து வந்தனாக்கு சேலை எடுத்து கொடு..” என்றழைக்க, அதற்குள் சிவகாமி அங்கே கமலியை மேலே போ என்று சொல்ல,

கமலியோ பமீலாவையும், இந்திராவையும் தாண்டி மேடையின் படிகளை ஏற,

“என்ன வனா இது, வந்தனா மட்டும் தனியா இருக்கா?? இப்படிதான் விடுறதா??” என்று கேட்க, மணிராதாவோ பமீலாவை முறைக்க,

“அது.. அத்தை.. நீ.. நீங்களும் வாங்களேன்..” என்று சிவகாமியை அழைத்தபடி வனமாலியும் மேடையேற, வரிசையாய் அழகாய் அங்கே சீர் தட்டுகள் அடுக்கி வைக்கவும், சிவகாமி யாரையும் எதுவும் கேட்கவில்லை. மணிராதா இந்திரா என்று யாரையும் கண்டுகொள்ளவில்லை. செய்யட்டுமா என்றும் கேட்கவில்லை, வீண் பிரச்சனையோ என்று ஒதுங்கியும் நிற்கவில்லை, ஒவ்வொன்றையும் கமலியிடம் சொல்ல, அவளே அனைத்தையும் செய்தாள்.

“பரவால்லையே...” என்று பலர் வாய் முணுமுணுக்க,

வந்தனாவோ “தேங்க்ஸ் அத்தை.. தேங்க்ஸ் கமலி..” என, “அட இதென்ன..” என்றவர்,

“எப்பவும் நல்லாருக்கணும்..” என்றுசொல்லி வாழ்த்த, கமலியோ “ஆல் தி பெஸ்ட் வந்தனா...” என்றாள் நிமிர்வாய்.

அங்கே பமீலாவிற்கும், இந்திராவிற்கும் தர்ம சங்கடமாய் போனது. இதற்குமேல் தாங்கள் போய் முறை செய்தால், அது அசிங்கமாய் இருக்கும். ஆனால் அப்படியே செய்யாது கிளம்பினாலும் இவர்களிடம் தோற்றதாய் ஆகிவிடும். என்ன செய்வது என்பது தெரியாது நிற்க, மணிராதாவோ அனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பதாய் பார்த்துகொண்டு இருந்தார்..

“பொண்ண, தாய் மாமா வீட்டு சேலை கட்டி வர சொல்லுங்கப்பா..” என்று பொதுவில் ஒருவர் சொல்ல, சிவகாமியோ “வந்தனா.. ஹெல்ப்க்கு ஆள் இருக்காங்களா??” என்று அவளைப் பார்க்கவும்,

“கமலி வரட்டுமே அத்தை..” என்றாள் வந்தனாவும்.

இதெல்லாம் கீழிருந்த பமீலாவின் உணர்வுகளை தூண்டிவிட, “ம்மா வா நம்ம கிளம்பலாம்..” என்று இந்திராவை அழைக்க, மணிராதாவிற்கு பக்கென்று இருந்தது.

“என்ன பேசற நீ???”

“இதுக்குமேல என்னால ஒரு நிமிஷம் இருக்க முடியாது அத்தை..”

“ஆமா பொசுக்குனு மேடைல இருந்து உன்னை யார் இறங்கி வர சொன்னது.. நீ வரவும் தானே அவ அங்க நிக்கிறா??” என்று கமலியை கை காட்டி சொல்ல,

பமீலாவோ “யார் நின்னாலும் சரி.. நான் இங்க நிக்க மாட்டேன்..” என்று பிடிவாதம் செய்யும் போதே, வனமாலி மேடையில் இருந்தே கோவர்தனுக்கு ‘இங்கே வந்து என்னவென்று பார்..’ என்று கண் காட்ட,

அவன் வந்தவனோ “ம்மா அடுத்து மாப்பிள்ளை வீட்ல இருந்து சீர் தட்டு அடுக்க வருவாங்க.. நீங்க எல்லாம் இப்படி நின்னா எப்படி.. போங்க மேடைக்கு போங்க.. பமீ நீ போ.. மேல போ..” என்று கொஞ்சம் அழுத்தம் திருத்தமாகவே சொல்ல, அப்போதும் இந்திராவும், பமீலாவும் தயங்கி நின்றனர்.

இந்திரா இப்போது வரைக்கும் சிவகாமியை நேருக்கு நேராய் முகம் பார்த்ததில்லை.. பேசியதுமில்லை.. திருமணமான சமயத்தில் இருந்தே இப்படிதான்.. மனதில் ஒரு நெருடல் ஆரம்பத்தில்.. பின் சிவகாமி வெளியேறியதும் ஒரு மிதப்பு.. இப்போதோ பயம்.. எந்த நேரத்திலும் சிவகாமியும் கமலியும் அந்த வீட்டிற்கு வருவரோ என்று.

இன்றோ அதற்கு ஏற்றார் போலவே சிவகாமி வந்து முறை செய்துவிட, அதுவும் யாரையும் சிறிதும் சட்டை செய்யாது அனைத்தையும் செய்துவிட, உள்ளே ஆடித்தான் போனார்.. மணிராதாவோ, இது மகளின் விசேசம் என்பதால் வாய் திறக்காது நிற்க, பமீலா முரண்டு செய்துகொண்டு இருந்தார்.

இங்கே இத்தனை நடக்க, அதற்குள் கமலி, வந்தனாவிற்கு புடவை மாற்றி அழைத்து மேடைக்கு வந்து அமர்த்திட, அதன் பின்னே தான் வனமாலி இறங்கியவன் “என்ன பண்றீங்க??” என்று அம்மாவைப் பார்த்து பல்லைக் கடிக்க,

“இல்ல வனா அது...”

“வந்தனா நிச்சயம் விட உங்களுக்கு மத்தது தான் முக்கியம்னா எல்லாரும் அப்படியே கிளம்புங்க.. என் தங்கச்சிக்கு எப்படி செய்யனும்னு எனக்குத் தெரியும்..” என்றவன், பமீலாவை ஒரு முறை முறைக்க, மணிராதாவோ மகன் தன்னையும் சேர்த்து கிளம்பு என்றதில் ஆடிப் போய்விட்டார்..

“வனா??!!!!”

“ஒண்ணு அமைதியா எல்லாம் இருக்கணும்.. இல்ல கிளம்புங்க..” என்றவன், முரளியின் அப்பா அழைக்கிறார் என்று ஒருவர் வந்து சொல்லவும் அவரைப் பார்க்க செல்ல,

“பமீலா நீ மேடைக்கு போ..” என்று கோவர்தனும் சொல்ல, இந்திரா என்ன நினைத்தாரோ “போ பமீ..” என, அவளோ வேண்டா வெறுப்பாய் போய் வந்தனாவின் மறுபக்கம் நிக்க,

சிவகாமி மகளைப் பார்த்தவர், நான் கீழ இருக்கேன் என்பதுபோல சொல்லி இறங்கி வந்து முதல் வரிசையில் அமர்ந்துவிட்டார். வனமாலி இப்படி சொல்லிச் செல்லவும், மணிராதாவும் இந்திராவும் வேண்டா வெறுப்பாய் அங்கேயே அமர, மேடையிலோ பமீலா முகத்தை தூக்கி வைத்து நிற்க, கமலியோ புன்னகை முகமாய் நின்றிருந்தாள்.

சிவகாமிக்கே இது ஆச்சர்யம் தான்.. ஏனெனில் கிளம்பும் வரைக்கும் கூட கமலி ஒருவித இறுக்கத்தில் தான் இருந்தாள்.

‘ம்மா இப்போவே சொல்லிட்டேன். அங்க வந்து எதுக்கும்... எதுக்குமே என்னை கம்பல் பண்ணக் கூடாது...’ என்று அத்தனை சொன்னவள், இங்கேயே அனைத்தையும் சொல்ல சொல்ல அழகாய் செய்வது கண்டு சிவகாமிக்கு ஆச்சர்யமே. அதிலும் மேடையில் வந்தனாவோடு வேறு நிற்கிறாள் என்றால்??

‘கடவுளே பெரியவங்க பிரச்சனை பெரியவங்களோட போகட்டும்.. சின்ன பசங்களாவது ஒத்துமையா இருக்கட்டுமே...’ என்று அவர் எண்ணும்போதே,

“சிவகாமி... உன் பொண்ணு அப்படியே மகுடனும் நீயும் கலந்த கலவை.. ரெண்டுபேர் ஜாடையுமே அப்படியே இருக்கு...” என்று சிவகாமியிடம் ஒரு பெண்மணி சொல்ல, இது அத்தனையும் இந்திராவின் காதிலும் விழுந்து வைத்தது.

அவருக்கோ முள் மீது நிற்கும் நிலை போல் இருக்க, அதற்குள் மாப்பிள்ளை வீட்டினர் வந்து வந்தனாவிற்கு நிச்சய புடவை கொடுத்து முறை செய்ய, அடுத்து அடுத்து என்று அனைத்துமே நல்லவிதமாகவே நடந்துக்கொண்டு இருந்தது.

பமீலாவின் முகத்தினை பார்த்து வந்தனாவே சொல்லிவிட்டாள் “கொஞ்சம் சிரியேன் பமீ...” என்று,

அவளோ “அதான் சிரிச்சிட்டே நிக்க, ஒருத்தி இருக்காளே.. பின்ன என்ன??” என்று நேரடியாவே கமலியைப் பார்த்து சொல்ல, கமலியோ நீ பேசுவது எல்லாம் என் காதில் விழவே விழாது என்பதுபோல் நின்றிருந்தாள்.

இதெல்லாம் கீழிருந்தே கவனித்துக்கொண்டு இருந்த சிவகாமிக்கு அப்போது தான் புரிந்தது மகள் எதையோ மனதில் வைத்தே இங்கே வந்திருக்கிறாள் என்று. தாய் அறியாத சூழா.. அடுத்த நொடி சிவகாமி மனதிலோ கமலி எப்போது என்ன செய்ய காத்திருக்கிறாளோ என்றே கவனமிருக்க,

முரளி வந்து மோதிரம் போட்டு, வந்தனா சென்று அவளின் நிச்சய புடவை கட்டி வந்து முரளியும் அவளும் ஜோடியாய் அமரவும், சிவகாமி மகளை “கீழ வா...” என்று சைகை செய்தார்..

“எதுக்கும்மா...??!!” என்று அவள் மேலிருந்தே கேட்க,

“போதும் வா...” என்று கையை சிவகாமி காட்ட, இதெல்லாம் அந்த பக்கம் வந்த வனமாலியின் கண்களில் விழுந்து, ஒருவேளை கிளம்புகிரார்களோ என்று தோன்றியது..

“அத்தை என்ன கிளம்பப் போறீங்களா???” என்றபடி வந்து சிவகாமியின் அருகே அவன் அமர,

“இல்ல வனா.. கமலிய கீழ வந்து உட்கார சொன்னேன்..” என,

“ஏன்?? நிக்கட்டுமே...” என்றவன் பார்வையும் மேடையில் இருந்த கமலியை தொட்டது.
 
அன்று அத்தனை பேசியவள், இன்று வந்து பாந்தமாய் நிற்பது அதிசயமோ அதிசயம் தான் அவனைப் பொருத்தமட்டில். இதுநாள் வரைக்கும் நின்று முகம் பார்த்துக்கூட பேசிடாத ஒருத்தி, இது இப்படியொரு விழாவில், அதுவும் பொறுமையாகவே மேடையில் நிற்பது... ஹ்ம்ம்... இதுவே தொடர்ந்தா சரி என்ற வனமாலிக்கு வலுப்பெறும் நேரம், கமலி இறங்கி அவளின் அம்மாவிடம் வந்துவிட்டாள்..

“என்னம்மா...??”

“உக்காரேன்...”

“ஏன் உனக்கு தனியா இருக்க மாதிரி இருக்கா??” என்றவள் சுத்தி முத்தி பார்ப்பதுபோல் வேண்டுமென்றே பார்த்துவிட்டு “அதான் இவர் இருக்காரே.. கூப்பிட்டது இவர்தானே..” என்று வனமாலியை பார்த்து கேட்டபடி அம்மாவின் இந்த பக்கம் அமர,

‘ஆரம்பிச்சிட்டா...’ என்று அடுத்த நொடி மற்ற இருவருக்குமே தோன்றியது.

சிவகாமியோ “ஒண்ணுமில்ல சும்மாதான் உட்காரு...” என்றுசொல்ல, வனமாலிக்கு உடனே எழுந்து சென்றாலும் நன்றாய் இராது என்று அவனும் அத்தைக்கு அருகேயே அமர, மணிராதாவோ, வந்திருப்பவர்களை கவனித்துக்கொண்டு இருந்தவருக்கு இந்த காட்சி மனதில் ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது.

சிவகாமி எதுவோ கேட்க, அதற்கு வனமாலி ஒரு பதில் சொல்வதும், இருவரையும் பார்த்தபடி கமலி அமர்ந்திருப்பதுமாய் இருக்க, தன் மகன் தன்னை மீறுகிறானோ என்ற எண்ணமே அவருக்குத் தோன்ற, எப்போதடா விசேசம் முடிந்து கூட்டம் குறையும் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்..

மகளின் நிச்சயம்.. அந்த சந்தோசத்தை கூட இந்த சிவகாமி வந்து முழுதாய் அனுபவிக்க விடவில்லையே என்ற கோபம் கூட மணிராதாவிற்கு அப்போதும்.

சிறிது நேரத்தில் சிவகாமியோ “சரி வனா நேரமாச்சு.. நாங்க கிளம்புறோம்..” என, கமலியும் ‘அப்பாடி...’ என்று ஒரு பாவனைக் காட்ட,

“என்ன அத்தை.. சாப்பிட்டுத் தான் போகணும்...” என்ற வனமாலியோ, கோவர்தனைப் பார்த்தான் ‘எங்கே இவன்..’ என்று..

கமலியும் “ம்மா கிளம்பலாமா??” என்று திரும்ப கேட்க,

“இரு கமலி...” என்று வனமாலி பதில் சொன்னவன், கோவர்தனை எங்கேயும் காணவில்லை எனவும், “சரி வாங்க சாப்பிட போகலாம்...” என்றழைக்க,

“அட உனக்கு ஏன் வனா இந்த வேலை.. நீ இங்க இருக்கணும்.. நாங்க போய் பாத்துக்கிறோம்..” என்று சிவகாமி எழுந்துவிட்டார்..

அவர் எழவும் கமலியும் எழ, “என்ன சிவா கிளம்பிட்டியா??” என்று உறவுகள் சிலர் கேட்க,

“ம்ம் நேரமாச்சே...” என்று சிவகாமி சொல்லும்போதே, “அட இரேன்... எப்போ பாக்குறது நம்ம எல்லாம்.. இப்படி ஏதாவது விசேசத்துல தான்.. நீயும் யார் வீட்டுக்கும் போறதில்ல.. இரேன்..” என்று ஒரு பாட்டி அவரை அமர வைக்க,

வனமாலியோ “அத்தை இன்னும் கொஞ்சம் நேரம் இருங்களேன்..” என்றான் பணிவாகவே. இதற்குமேல் சிவகாமி மறுக்க முடியாதுபோக, கமலியின் முகம் பார்த்தார். அவளோ கண்களில் ஒரு கண்டனம் தெரிவித்து திரும்ப அமர,

‘போறவளை பிடிச்சு ஏன் நிறுத்துறான் இவன்...’ என்றெண்ணிய மணிராதாவோ, தக்க நேரத்திற்காக காத்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டமும் குறைய ஆரம்பித்தது.

மணிராதா நேரம் பார்த்துக்கொண்டே இருக்க, “மணி பேசாம வனமாலிக்கு கமலிய பேசி முடியேன்.. ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு.. அவனும் ஆளு வாட்ட சாட்டமா இருக்கான்.. இந்த பொண்ணும் நல்லா கம்பீரமா இருக்கு...” என்று மணிராதாவின் நாத்தனார் சொல்ல, அவ்வளவுதான் பொறுத்தது போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் அவர்.

பாதி பேர் கிளம்பியிருக்க, ஒரு பகுதி கூட்டம் பந்தியில் இருக்க, வனமாலியோ “அத்தை இருங்க.. இடமிருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்...” என்று அங்கிருந்து இடத்தை காலி பண்ணிய அடுத்த நொடி, மணிராதா சிவகாமி நோக்கி வர, அனைவரும் என்னவோ என்ற வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தனர்..

“என்ன சிவா.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என்கிட்டயே உன் வேலையை காட்டுறியா??” என்று மணிராதா, சத்தம் எழுப்பாது ஆனால் அழுத்தம் திருத்தமாகவே கேட்க, மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்றாலும், அது அங்கே சிவகாமி அருகே அமர்ந்திருந்த கமலிக்கும், மற்றும் ஒரு சிலருக்கும் நன்றாகவே கேட்டது.

சிவகாமி பதில் சொல்லாது ஒரு திகைத்த பார்வை பார்க்க, கமலியோ முதலில் அதிர்ந்தாலும் பின் சுதாரித்து, “ம்மா வா போலாம்...” என்று சொல்ல,

“என்னது போலாமா??? இவ்வளோ நேரம் நீங்க ரெண்டு பெரும் பண்ணதை எல்லாம் நான் அமைதியா தானே பார்த்துட்டு இருந்தேன்... இப்போ நான் பேசுறதையும் கேட்டுதான் ஆகணும்..” என்ற மணிராதா,

“என்ன சிவகாமி நான் சொல்றது புரியலையா??” என்றார் நக்கலாய்..

“நீங்க என்னவோ சொல்லிட்டு போங்க.. ஆனா அதெல்லாம் நின்னு கேட்கனும்னு எங்களுக்கு எதுவுமில்லை... ம்மா வா போலாம்..” என்று கமலி இழுக்க,

“அடேங்கப்பா.. என்னா பேச்சு.. அம்மா அமைதியா இருந்து காரியம் சாதிக்கிற ரகம்னா.. பொண்ணு பொரிஞ்சு தள்ளிடுவா போல...” என்ற மணிராதாவின் முகத்தில் குரோதமே தெரிந்தது.

வனமாலியை தங்களுக்கு எதிராய் திருப்பிடுவரோ என்ற பயமே, இப்படியெல்லாம் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட, அதன் வெளிப்பாடே இந்த கோபமும் குரோதமும்..

சிவகாமியோ கிளம்பிடலாம் என்று எழுந்தவர் “அண்ணி.. நடந்துட்டு இருக்கிறது உங்க பொண்ணோட விசேசம்.. அதைமட்டும் மனசுல வைங்க..” என்றுவிட்டு கமலியோடு கிளம்ப,

“அடேங்கப்பா.. அறிவுறையா??? என் தம்பியைத் தான் கடைசி வரைக்கும் உன் பிடியில வச்சு அவன் நிம்மதியை கெடுத்த, இப்போ என் பையனா??” என்றார் மணிராதா அடிக்குரலில்..

இப்படியொரு பேச்சினை அவர் பேசுவார் என்று கமலியும் சரி, சிவகாமியும் சரி எதிர்பார்க்கவேயில்லை என்பது அவர்களின் அதிர்ச்சியில் தெரிய, “மணி என்ன பேச்சு இதெல்லாம்..” என்று அருகில் இருந்த ஒருவர் கேட்க,

“சும்மா இருங்கக்கா.. உங்களுக்கு இவங்களைப் பத்தி தெரியாது.. நான் அவ்வளோ சொல்லியும் என் மகன் போய் கூப்பிட்டிருக்கான்.. சரி அவனுக்குத்தான் பெருந்தன்மை கூப்பிட்டான்.. இவங்களுக்கு தெரியவேணாம் போகனுமா போகக்கூடாதான்னு...” என்று பொரிய,

“ஹலோ என்ன விட்டா ரொம்ப பேசுறீங்க.. நீங்க இப்படித்தான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்... உங்களுக்காக நாங்க வரலை போதுமா??” என்று கமலியும் பதில் கொடுக்கத் தொடங்கிவிட்டாள்..

“ஷ்... கமலி.. போலாம் வா...” என்று சிவகாமி இழுக்க,

“அதான் தெரியுதே.. எங்களுக்காக வரலைன்னும்.. எதுக்கு வந்தீங்கன்னும்.. என் பையனை வளைச்சுப் போடத்தான...” என்று மணிராதாவும் நொடிக்க,

சிவகாமி “அண்ணி...!!!” என்று அதிர,

கமலியோ “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க...” என்று விரல் நீட்டிவிட, இந்திராவும் பமீலாவும் இதெல்லாம் அமைதியாய் வேடிக்கைப் பார்க்க, மேடையிலிருந்த வந்தனாவிற்கோ அனைவரும் பேசுகிறார்கள் என்பதும், சிவகாமியும் கமலியும் கிளம்புகிறார்கள் என்பதும் எதுவோ நடக்கிறது என்பதும் மட்டும் புரிய ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது மட்டும் ஒன்றும் விளங்கவில்லை.

‘அண்ணன் எங்க போனான்..’ என்று வனமாலியைப் பார்க்க, அவனோ அப்போது தான் அங்கே வந்துகொண்டு இருக்க, மேடைக்கு கீழே வீட்டு பெண்கள் அனைவரும் இப்படி நிற்பது கண்டு

“என்னாச்சு??” என்றபடி வர, கமலியோ அவனை பகீரங்கமாகவே முறைத்துப் பார்க்க, அவளின் கண்களோ அப்படியொரு சிவப்பையும் ஜொலிப்பையும் காட்டியது.

சிவகாமியும் கமலியும் எதுவும் சொல்லாது நடக்க, “அத்தை என்ன அத்தை இது.. சாப்பிட்டு போகலாம்...” என, “ம்மா இனி யார் என்ன சொன்னாலும் இங்க ஒரு நிமிஷம் நிக்க கூடாது...” என்ற கமலியோ சிவகாமியை அழைத்துக்கொண்டு விடுவிடுவென நடந்துவிட்டாள்.
 
Top