Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 4

Advertisement

அன்று அத்தனை பேசியவள், இன்று வந்து பாந்தமாய் நிற்பது அதிசயமோ அதிசயம் தான் அவனைப் பொருத்தமட்டில். இதுநாள் வரைக்கும் நின்று முகம் பார்த்துக்கூட பேசிடாத ஒருத்தி, இது இப்படியொரு விழாவில், அதுவும் பொறுமையாகவே மேடையில் நிற்பது... ஹ்ம்ம்... இதுவே தொடர்ந்தா சரி என்ற வனமாலிக்கு வலுப்பெறும் நேரம், கமலி இறங்கி அவளின் அம்மாவிடம் வந்துவிட்டாள்..

“என்னம்மா...??”

“உக்காரேன்...”

“ஏன் உனக்கு தனியா இருக்க மாதிரி இருக்கா??” என்றவள் சுத்தி முத்தி பார்ப்பதுபோல் வேண்டுமென்றே பார்த்துவிட்டு “அதான் இவர் இருக்காரே.. கூப்பிட்டது இவர்தானே..” என்று வனமாலியை பார்த்து கேட்டபடி அம்மாவின் இந்த பக்கம் அமர,

‘ஆரம்பிச்சிட்டா...’ என்று அடுத்த நொடி மற்ற இருவருக்குமே தோன்றியது.

சிவகாமியோ “ஒண்ணுமில்ல சும்மாதான் உட்காரு...” என்றுசொல்ல, வனமாலிக்கு உடனே எழுந்து சென்றாலும் நன்றாய் இராது என்று அவனும் அத்தைக்கு அருகேயே அமர, மணிராதாவோ, வந்திருப்பவர்களை கவனித்துக்கொண்டு இருந்தவருக்கு இந்த காட்சி மனதில் ஒரு எச்சரிக்கை மணியை அடித்தது.

சிவகாமி எதுவோ கேட்க, அதற்கு வனமாலி ஒரு பதில் சொல்வதும், இருவரையும் பார்த்தபடி கமலி அமர்ந்திருப்பதுமாய் இருக்க, தன் மகன் தன்னை மீறுகிறானோ என்ற எண்ணமே அவருக்குத் தோன்ற, எப்போதடா விசேசம் முடிந்து கூட்டம் குறையும் என்று பார்த்துக்கொண்டு இருந்தார்..

மகளின் நிச்சயம்.. அந்த சந்தோசத்தை கூட இந்த சிவகாமி வந்து முழுதாய் அனுபவிக்க விடவில்லையே என்ற கோபம் கூட மணிராதாவிற்கு அப்போதும்.

சிறிது நேரத்தில் சிவகாமியோ “சரி வனா நேரமாச்சு.. நாங்க கிளம்புறோம்..” என, கமலியும் ‘அப்பாடி...’ என்று ஒரு பாவனைக் காட்ட,

“என்ன அத்தை.. சாப்பிட்டுத் தான் போகணும்...” என்ற வனமாலியோ, கோவர்தனைப் பார்த்தான் ‘எங்கே இவன்..’ என்று..

கமலியும் “ம்மா கிளம்பலாமா??” என்று திரும்ப கேட்க,

“இரு கமலி...” என்று வனமாலி பதில் சொன்னவன், கோவர்தனை எங்கேயும் காணவில்லை எனவும், “சரி வாங்க சாப்பிட போகலாம்...” என்றழைக்க,

“அட உனக்கு ஏன் வனா இந்த வேலை.. நீ இங்க இருக்கணும்.. நாங்க போய் பாத்துக்கிறோம்..” என்று சிவகாமி எழுந்துவிட்டார்..

அவர் எழவும் கமலியும் எழ, “என்ன சிவா கிளம்பிட்டியா??” என்று உறவுகள் சிலர் கேட்க,

“ம்ம் நேரமாச்சே...” என்று சிவகாமி சொல்லும்போதே, “அட இரேன்... எப்போ பாக்குறது நம்ம எல்லாம்.. இப்படி ஏதாவது விசேசத்துல தான்.. நீயும் யார் வீட்டுக்கும் போறதில்ல.. இரேன்..” என்று ஒரு பாட்டி அவரை அமர வைக்க,

வனமாலியோ “அத்தை இன்னும் கொஞ்சம் நேரம் இருங்களேன்..” என்றான் பணிவாகவே. இதற்குமேல் சிவகாமி மறுக்க முடியாதுபோக, கமலியின் முகம் பார்த்தார். அவளோ கண்களில் ஒரு கண்டனம் தெரிவித்து திரும்ப அமர,

‘போறவளை பிடிச்சு ஏன் நிறுத்துறான் இவன்...’ என்றெண்ணிய மணிராதாவோ, தக்க நேரத்திற்காக காத்திருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டமும் குறைய ஆரம்பித்தது.

மணிராதா நேரம் பார்த்துக்கொண்டே இருக்க, “மணி பேசாம வனமாலிக்கு கமலிய பேசி முடியேன்.. ஜோடிப் பொருத்தம் நல்லா இருக்கு.. அவனும் ஆளு வாட்ட சாட்டமா இருக்கான்.. இந்த பொண்ணும் நல்லா கம்பீரமா இருக்கு...” என்று மணிராதாவின் நாத்தனார் சொல்ல, அவ்வளவுதான் பொறுத்தது போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார் அவர்.

பாதி பேர் கிளம்பியிருக்க, ஒரு பகுதி கூட்டம் பந்தியில் இருக்க, வனமாலியோ “அத்தை இருங்க.. இடமிருக்கான்னு பார்த்துட்டு வர்றேன்...” என்று அங்கிருந்து இடத்தை காலி பண்ணிய அடுத்த நொடி, மணிராதா சிவகாமி நோக்கி வர, அனைவரும் என்னவோ என்ற வேடிக்கை மட்டுமே பார்த்துகொண்டு இருந்தனர்..

“என்ன சிவா.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில என்கிட்டயே உன் வேலையை காட்டுறியா??” என்று மணிராதா, சத்தம் எழுப்பாது ஆனால் அழுத்தம் திருத்தமாகவே கேட்க, மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்றாலும், அது அங்கே சிவகாமி அருகே அமர்ந்திருந்த கமலிக்கும், மற்றும் ஒரு சிலருக்கும் நன்றாகவே கேட்டது.

சிவகாமி பதில் சொல்லாது ஒரு திகைத்த பார்வை பார்க்க, கமலியோ முதலில் அதிர்ந்தாலும் பின் சுதாரித்து, “ம்மா வா போலாம்...” என்று சொல்ல,

“என்னது போலாமா??? இவ்வளோ நேரம் நீங்க ரெண்டு பெரும் பண்ணதை எல்லாம் நான் அமைதியா தானே பார்த்துட்டு இருந்தேன்... இப்போ நான் பேசுறதையும் கேட்டுதான் ஆகணும்..” என்ற மணிராதா,

“என்ன சிவகாமி நான் சொல்றது புரியலையா??” என்றார் நக்கலாய்..

“நீங்க என்னவோ சொல்லிட்டு போங்க.. ஆனா அதெல்லாம் நின்னு கேட்கனும்னு எங்களுக்கு எதுவுமில்லை... ம்மா வா போலாம்..” என்று கமலி இழுக்க,

“அடேங்கப்பா.. என்னா பேச்சு.. அம்மா அமைதியா இருந்து காரியம் சாதிக்கிற ரகம்னா.. பொண்ணு பொரிஞ்சு தள்ளிடுவா போல...” என்ற மணிராதாவின் முகத்தில் குரோதமே தெரிந்தது.

வனமாலியை தங்களுக்கு எதிராய் திருப்பிடுவரோ என்ற பயமே, இப்படியெல்லாம் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிட, அதன் வெளிப்பாடே இந்த கோபமும் குரோதமும்..

சிவகாமியோ கிளம்பிடலாம் என்று எழுந்தவர் “அண்ணி.. நடந்துட்டு இருக்கிறது உங்க பொண்ணோட விசேசம்.. அதைமட்டும் மனசுல வைங்க..” என்றுவிட்டு கமலியோடு கிளம்ப,

“அடேங்கப்பா.. அறிவுறையா??? என் தம்பியைத் தான் கடைசி வரைக்கும் உன் பிடியில வச்சு அவன் நிம்மதியை கெடுத்த, இப்போ என் பையனா??” என்றார் மணிராதா அடிக்குரலில்..

இப்படியொரு பேச்சினை அவர் பேசுவார் என்று கமலியும் சரி, சிவகாமியும் சரி எதிர்பார்க்கவேயில்லை என்பது அவர்களின் அதிர்ச்சியில் தெரிய, “மணி என்ன பேச்சு இதெல்லாம்..” என்று அருகில் இருந்த ஒருவர் கேட்க,

“சும்மா இருங்கக்கா.. உங்களுக்கு இவங்களைப் பத்தி தெரியாது.. நான் அவ்வளோ சொல்லியும் என் மகன் போய் கூப்பிட்டிருக்கான்.. சரி அவனுக்குத்தான் பெருந்தன்மை கூப்பிட்டான்.. இவங்களுக்கு தெரியவேணாம் போகனுமா போகக்கூடாதான்னு...” என்று பொரிய,

“ஹலோ என்ன விட்டா ரொம்ப பேசுறீங்க.. நீங்க இப்படித்தான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்... உங்களுக்காக நாங்க வரலை போதுமா??” என்று கமலியும் பதில் கொடுக்கத் தொடங்கிவிட்டாள்..

“ஷ்... கமலி.. போலாம் வா...” என்று சிவகாமி இழுக்க,

“அதான் தெரியுதே.. எங்களுக்காக வரலைன்னும்.. எதுக்கு வந்தீங்கன்னும்.. என் பையனை வளைச்சுப் போடத்தான...” என்று மணிராதாவும் நொடிக்க,

சிவகாமி “அண்ணி...!!!” என்று அதிர,

கமலியோ “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க...” என்று விரல் நீட்டிவிட, இந்திராவும் பமீலாவும் இதெல்லாம் அமைதியாய் வேடிக்கைப் பார்க்க, மேடையிலிருந்த வந்தனாவிற்கோ அனைவரும் பேசுகிறார்கள் என்பதும், சிவகாமியும் கமலியும் கிளம்புகிறார்கள் என்பதும் எதுவோ நடக்கிறது என்பதும் மட்டும் புரிய ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது மட்டும் ஒன்றும் விளங்கவில்லை.

‘அண்ணன் எங்க போனான்..’ என்று வனமாலியைப் பார்க்க, அவனோ அப்போது தான் அங்கே வந்துகொண்டு இருக்க, மேடைக்கு கீழே வீட்டு பெண்கள் அனைவரும் இப்படி நிற்பது கண்டு

“என்னாச்சு??” என்றபடி வர, கமலியோ அவனை பகீரங்கமாகவே முறைத்துப் பார்க்க, அவளின் கண்களோ அப்படியொரு சிவப்பையும் ஜொலிப்பையும் காட்டியது.

சிவகாமியும் கமலியும் எதுவும் சொல்லாது நடக்க, “அத்தை என்ன அத்தை இது.. சாப்பிட்டு போகலாம்...” என, “ம்மா இனி யார் என்ன சொன்னாலும் இங்க ஒரு நிமிஷம் நிக்க கூடாது...” என்ற கமலியோ சிவகாமியை அழைத்துக்கொண்டு விடுவிடுவென நடந்துவிட்டாள்.
Questions
Nice Ep
 
Top