Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 3

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் - 3

மகுடேஸ்வரனுக்கும் கமலிக்குமான உறவு என்பது தாமரையிலை நீர் போலேதான். ஒட்டியும் ஒட்டாத ஓர் உறவு.. அதுவும் கூட சிவகாமிக்காக மட்டுமே இந்நிலை.. இல்லையெனில் கமலியைப் பொருத்தமட்டில் அதுவுமில்லை.

முதலில் எதுவும் தெரியவில்லை ஆனால் அப்பாவிற்கு அம்மாவும் நானும் மட்டுமல்ல, எங்களைப் போலவே இன்னொரு குடும்பமும் இருக்கிறது என்று தெரியவுமே, அப்பாவின் மீதிருந்த அந்த ஒரு பிணைப்பு முதலில் அறுந்தது.

மகுடேஸ்வரனோ பமீலாவையும், கமலியையும் ஒட்ட வைக்க எத்தனையோ முயன்றார். பமீலாவை இங்கு அழைத்து வருவார். கமலியை அங்கே அழைத்துப் போவார். ஆனால் அதெல்லாம் சிறிது நாட்கள் தான். ஒருமுறை பமீலாவை இங்கே சிவகாமி வீட்டிற்கு அழைத்து வர, அன்று இரவே அவளுக்கு காய்ச்சல் வந்து அவதிப்பட,

“அச்சோ பிள்ளைக்கு கண்ணு பட்டுப்போச்சே..” என்று இந்திராவை விட, அழுதது மணிராதா தான்.

அதன்பின்னோ இந்திரா அங்கே அழைத்து செல்ல ஒருபோதும் விடவில்லை. நேரடியாய் மறுக்கவில்லை என்றாலும் சொல்வதற்கு காரணங்களா இருக்காது.. ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுக்க, அது மகுடேஸ்வரனுக்கு புரிய கொஞ்சம் நாள் பிடித்தது.

“வீண் பிரச்சனை வேணாங்க..” என்று சிவகாமியும் சொல்லிட, கமலியோ கொஞ்சம் கொஞ்சமாய் மகுடேஸ்வரனிடம் இருந்து விலக தொடங்கினாள்.

தெரிந்தவர், உறவுகள் என்று யார் வீட்டு விசேசத்திற்கு போனாலும், கமலியிடம் யார் வீட்டு பெண் என்று விசாரிக்கையில் மகுடேஸ்வரனின் மகள் எனும்போது அடுத்த கேள்வி அம்பென பாய்ந்து வரும்.

“யாரோட மக.. சிவகாமியா?? இல்லை இந்திராவா??” என்று..

இக்கேள்வி அவளை எப்படி நோகடிக்கும் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

வீட்டு விசேஷங்கள் ஒவ்வொன்றிலும், சிவகாமி ஒதுக்கப்படும் போதெல்லாம், கமலி எதிர்க்கத் தொடங்கினாள் அதுவும் மகுடேஸ்வரனிடம்..

“இதுக்கு நீங்க அம்மாவை டைவர்ஸ் பண்ணிருக்கலாம்.. தனியா நிம்மதியா இருந்திருப்பாங்க..” என்பது தான் அவள் அவரிடம் கடைசியாய் பேசியது.

அதன்பின்னே பேசவுமில்லை.. அப்பா என்று அழைத்ததுமில்லை. ‘அவர்...’ என்ற அழைப்பு மட்டுமே மகுடேஸ்வரனை குறிப்பதாய் இருக்கும் அவளிடம். சிவகாமி எத்தனையோ சொல்லிப் பார்த்தார். மகளை கெஞ்சிப் பார்த்தார்.. அடித்து திட்டிப் பார்த்தார். ம்ம்ஹும் கமலி எதற்கும் மசிவதாய் இல்லை.

“விட்டுடு சிவா.. ஒருநாள் கமலிக்கு புரியும்...” என்று மகுடேஸ்வரன் சொல்ல, அந்த ஒருநாள் என்பது எப்போதுமே வராது என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

வயது கூட கூட, கமலி வீட்டில் அதிகம் பிடிவாதம் செய்ய, சிவகாமி பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவர் அவளை விடுதியில் சேர்த்துவிட்டார்.

“என்ன சிவா இதெல்லாம்???” என்ற மகுடேஸ்வரனுக்கோ,

“அவளுக்கு கொஞ்சம் உலகம் புரியணும்.. என்னையே சுத்திட்டு இருக்கா.. எனக்கு அப்புறம் அவளா நிக்கணும்...” என, மகுடேஸ்வரனுக்கு முதல் முறையாய் அப்போது தான் சிவகாமியின் ஆழ் மனத்தில் இருக்கும் வருத்தம் புரிந்தது.

“சிவா...!!!!” என்று அதிர்ந்தவரை,

“ஒன்னுமில்லைங்க... அவ யார்கிட்டவும் ஓட்டுறது இல்லைல அதான்...” என்றுவிட, அதன் பிறகு மகுடேஸ்வரன் மனதில் பெரும் கவலை பெருக்கு.

சுயநலமாய் இருந்துவிட்டோமோ என்று தன்னை தானே சுய ஆலோசனை செய்ய, பமீலா எப்படி வளர்கிறாள் என்பதும், கமலி எப்படி இருக்கிறாள் என்பதுமே அவருக்கு பெரும் வித்தியாசத்தை காட்டியது.

வனமாலி ஒருவன் மட்டுமே, சிவகாமி வீட்டிற்கு வருபவன்.. அதற்குமேல் அங்கே வந்து போவது என்பது சிவகாமி பக்கத்து உறவுகளும், சங்கிலிநாதன் குடும்பத்தினருமே..

‘எல்லாம் சரியாகும்...’ என்று காலத்தின் மீது பொறுப்பினை சுமத்தி சும்மாயிருந்தது தவறோ என்று அவருக்கு தோன்றிய நேரம் காலம் கடந்து விட்டிருந்தது.

அவருக்கான பூவுலக காலமும் முடிந்திருந்தது.

அந்த ஒரு மனிதரின் மரணம்.. பலருக்கு மனத்தில் பெரும் பாற்றங்களை உண்டு செய்தது. மணிராதாவிற்கு தம்பியின் இறப்பு என்பது ஒரு கை ஒடிந்தநிலை. இந்திராவிற்கோ இன்னும் மணிராதவை சார்ந்து நிற்கும் நிலை.

சிவகாமியோ, மரத்துப் போன உணர்வு.. இனி என்னாகும்??? இந்த கேள்வி அவருள் பூதாகாரம் பூண்டிருந்தது. வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தவர் தான். அழுதாரா என்பதுகூட தெரியவில்லை. கமலியும் அப்படியே.. துளி நீரளவு இல்லை கண்களில்.

சொந்தங்கள் எல்லாம் “அழுது தீர்த்துடுங்க..” எனும்போது, இன்னமும் மனம் இறுகியது கமலிக்கு என்றுதான் சொல்லுதல் வேண்டும்.

அப்பா என்ற உறவு... இன்றில்லை. அதன் பாதிப்பு இருந்தது. ஆனால் அதற்குமேல் பமீலா போல, கதறி அழுது.. மயக்கம் செய்ய எல்லாம் எதுவுமில்லை என்பதே கமலியின் நிலை. இந்திராவும் அப்படியே அவரின் சத்தம் தான் நிறைய இருக்க, சிவகாமியோ, மகுடேஸ்வரன் உடலருகே, அமைதியாய் அவரின் முகம் பார்த்து அமர்ந்திருந்தார்.

அந்த அமைதி.. ஆயிரம் பாசைகள் பேசியது, மகுடேஸ்வரனின் ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும்.

வனமாலி தான் அனைத்தும் எடுத்து செய்து பார்த்தது. கோவர்த்தன் அவனுக்கு உதவியாய் இருக்க, ஒருவழியாய் அனைத்து சாங்கியங்களும் நன்கு முடிய, அன்றைய இரவே சிவகாமி கிளம்பிவிட்டார்..

“அத்தை என்ன இது??” என்று வனமாலி அதிர்ந்து கேட்க, அவனைப் பார்த்தவர் ஒரு வெற்று சிரிப்பு அவ்வளவே.

“அத்தை இனிதான் நீங்க இங்க இருக்கணும்...” என்று வனமாலி கட்டாயம் செய்ய,

சங்கிலிநாதனோ “சிவகாமி.. இதுக்கு முன்னாடி எப்படியோ.. இனியும் நீயும் பொண்ணும் தனியா இருக்கக்கூடாது...” என,

“ம்ம்.. அவர் இருக்கும்போதே நாங்க தனிதான்.. இது அவர் வாழ்ந்த வீடு. தேவையில்லாத சச்சரவு எப்பவும் இருக்கக் கூடாது..” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.

அதன் பின்னே கமலி சிவகாமி அச்சகத்தின் பொறுப்பினை ஏற்றுகொள்ள, சிவகாமிக்கு வீட்டு வாசம் மட்டுமே நிரந்தரமானது.

வந்தனாவிற்கு பேசி முடித்திருக்கிறார்கள் என்று தெரியும் ஆனால் வனமாலி வந்து அழைப்பு வைத்தது அதிசயமே.. அடிக்கடி வரவில்லை என்றாலும், வனமாலி இவர்களோடு சுமுகமாய் தானே இருப்பான். ஆக அவன் வந்து அழைத்தது சிவகாமிக்கு சந்தோசமே.

ஆனால் அந்த சந்தோசம், வனமாலி வீட்டினில் இல்லை.

அதிலும் அவன் சென்று கமலியையும் அழைத்திருக்கிறான் என்றதும் பமீலாவிற்கு பகீரென்றது.

அவள் வந்தால், உறவுகள் மத்தியில் அனைவருமே, சிவகாமியையும் கமலியையும் தான் முன்னிருத்துவர். என்னதான் பமீலா உடன் பிறந்தவன் மனைவி என்றாலும், அங்கே சிவகாமி கமலிகே அவர்களின் உறவில் மதிப்பு அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும்.

மணிராதா சொன்னதை கேட்டதுமே, பமீலாவிற்கு மனதில் ஒருவித பயமும் கோபமும் எழ,

“அத்தை.. வனா மாமா நல்லா கேட்டுக்கோங்க.. வந்தனா நிச்சயத்துக்கு அந்த கமலியோ இல்லை அவங்க அம்மாவோ வந்தா.. கண்டிப்பா நான் வர மாட்டேன்.. அப்போ.. அங்கவே எல்லார் முன்னாடியும் கிளம்பி வந்திடுவேன்...” என்று பமீலா கத்த,

வனமாலி அப்போதும் பதில் சொல்லாது, தன் தம்பியைத் தான் பார்த்தானே தவிர வேறொன்றும் பேசவில்லை.

அண்ணனின் பார்வை புரிந்தவனோ “பமீ.. சும்மா இரு.. இது நம்ம வீட்டு விசேசம்...” என்று மனைவியை அதட்ட,

“அதையே தான்டா நானும் சொல்றேன்.. இது நம்ம வீட்டு விசேசம். நமக்கு தேவையானவங்களை மட்டும் தான் கூப்பிடனும்... அவங்களை ஏன் கூப்பிட்ட..” என்று மணிராதா குரலை உயர்த்தினார்.

வந்தனவோ “ம்மா.. வீட்ல தேவையில்லாத சண்டை வேண்டாமே ம்மா.. அவங்க வந்தா வந்துட்டு போகட்டுமே... எத்தனையோ பேர் வர்றாங்க.. அப்படி நினைச்சுக்கோ...” என்றுசொல்ல,

“அதெப்புடி....” என்று வேகமாய் முன்னே வந்தாள் பமீலா..

கோவர்த்தனோ ‘இதெல்லாம் தேவையா..’ என்று வனமாலியைப் பார்க்க, அவனோ நீ சும்மா இரு என்று சைகை செய்துவிட்டான். வனமாலிக்கு தெரியும், இவர்கள் என்ன சொன்னால் அடங்குவார்கள் என்று. ஆனால் பேசட்டும் என்று விட்டுவிட்டான். பேசினால் தானே சில பல விஷயங்கள் எல்லாம் வெளிவரும்.

“பமீலா... இதெல்லாம் வேண்டாதா பிரச்சனை தரும். மாமா இருந்திருந்தா கூப்பிட்டிருப்போம் தானே..” என்று வந்தனா சொல்லிட,

“அப்பா தான் இல்லையே.. அப்புறம் என்ன??” என்றாள் பமீலா..

“மகுடா இருந்திருந்தாலும், நான் என் பொண்ணு விசேசத்துக்கு அவங்களை கூப்பிட்டு இருக்கமாட்டேன்.. எனக்கு தேவையில்லாத உறவு வேண்டவே வேணாம்..” என்று மணிராதாவும் சொல்லிட,

“அத்தை, வந்தா விசேசத்துக்கு அம்மாதான் முறை செய்வாங்க.. அவங்க முன்னாடி நிக்க தயங்குவாங்க.. அதனால நானும் இவரும்தான் அப்பா வீட்டு சார்பா செய்வோம்..” என்று பமீலா சொல்ல,

“சரி அப்போ என் சார்பாவும் எல்லாமே நீயே பண்ணிடு கோவர்த்தனா...” என்றபடி வனமாலி எழ,

அனைவருமே ‘என்ன சொல்றான்...’ என்று திகைத்துப் பார்க்க,

“என்ன?? என்ன பாக்குறீங்க எல்லாம்... என் தங்கச்சிக்கு நான் முன்ன நின்னு செய்ற முதல் விசேசம்.. நம்ம வீட்டு விசேசம்.. அதான் கூப்பிட்டேன்.. மாமா இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி அவங்களும் நம்ம சொந்தம் தான். அதையும் மீறி நான் அங்க நிக்கணும்னா...” என்றவன் மேற்கொண்டு பேச்சினை முடிக்காமலேயே அங்கிருந்து நகர்ந்துவிட,

“வனா.. வனா...” என்று மணிராதா அழைத்த அழைப்பிற்கு பதிலே இல்லை.

“பார்த்தீங்களா அத்தை... விசேசத்துக்கு கூப்பிட்டு வந்ததுக்கே நம்ம வீட்ல இப்போ இவ்வளோ நடக்குது.. இனி அவங்க வந்து போயிட்டா என்னென்ன நடக்குமோ?? எங்கப்பா பாவம் நீங்க சொன்ன வார்த்தையை கேட்டுதான் இப்போ வரைக்கும் இருக்காங்க.. ஆனா இதெல்லாம் என்னத்தை??” என்று பமீலா கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க,

“ம்மா... முதல்ல உங்க பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கப் போகுதுன்னு சந்தோசப்படுங்க.. எல்லார் ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்கனும்னு நினைங்க.. அதைவிட்டு...” என்று எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த வந்தனாவோ, அவளும் வனமாலி போலவே பேச்சை முடிக்காது நகர்ந்துவிட,

மணிராதாவோ செய்வது அறியாது அமர்ந்துவிட்டார்.. பிள்ளைகளின் இருமுனை தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை.. வந்தனா எப்போதாவது ஏதாவது சொல்வாள் தான். ஆனால் இன்று அவளும் வனமாலியோடு சேர்ந்து பேசவும், இதை மேலே வளர விடக்கூடாது என்றே தோன்றியது மணிராதாவிற்கு.

அவர் அப்படியே யோசனையாகவே அமர்ந்திருக்க, வந்தனாவோ வனமாலியிடம் சென்றவள்,

“என்னண்ணா நீயும் இப்படி பேசிட்ட??” என,

“சாரி வந்தனா.. உனக்கு ஒரு நல்லது நடக்குது.. நமக்கு எல்லார் வாழ்த்தும் வேணும்.. குடும்பத்துல ஒருத்தரை விட்டு எப்படி நல்லது பண்றது.. அப்படியே பண்ணாலும் வர்றவங்க எல்லாம் சும்மா இருப்பாங்களா??” என்று அவனும் வருந்த,

“ஹ்ம்ம் இதையே தான் இப்போ நானும் சொல்லிட்டு வந்தேன்.. ஆனா உனக்குத்தான் இவங்களைப் பத்தி தெரியுமேண்ணா..” என்றாள் வந்தனாவும்..

“அதுக்காக அப்படியே விட முடியுமா?? மாமா இதெல்லாம் சரி பண்ணிருக்கணும்.. ஆனா விட்டுட்டார்...”

“ம்ம்ம்...” என்று வந்தனா லேசாய் சிரிக்க, “என்ன???” என்றான் இவனும்..
 
“மாமா குடும்பத்து மேல என்ன திடீர் அக்கறை???!!!!” என்று என்று வந்தனா இரு புருவங்களையும் கிண்டலாய் தூக்கி சிரிக்க,

“ஏய் வாலு.. என்ன??!! என்ன??!!” என்று வனமாலியும் சிரிக்க,

“அதே தான் என்னன்னு நானும் கேட்கிறேன்...” என்று வந்தனா இன்னும் சத்தமாய் சிரித்தாள்.

இவர்கள் இருவரின் சிரிப்பு சத்தமும் வெளியே இருப்பவர்களுக்கு கேட்க, ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அதுமட்டுமே அப்போதைக்கு அவர்களால் செய்ய முடியும். கோவர்த்தன் நியாயமாய் பேசுபவன் தான். ஆனால் எங்கே அதட்டி பேசவேண்டும் என்பது அவனுக்கு தெரியாது.

அதுமட்டும் இல்லாது பமீலா லேசாய் கண்ணை கசக்கினாலே போதும், அதிலும் மணிராதா பேச்சிற்கு அவனிடம் என்றுமே மறுப்பும் இருந்ததில்லை ஆக, அவனின் நியாயங்கள் எல்லாம் அவனின் மனதளவே.

வனமாலி அப்படியில்லை. ஆரம்பத்தில் இருந்தே, மகுடேஸ்வரனோடு இருந்து இருந்து தொழில் பழகி, வெளியே ஆட்களின் பழக்கமும் நிறைய, என்ன ஒரு விஷயமென்றாலும் வீட்டிலும் சரி, வியாபாரத்திலும் சரி எதுவென்றாலும் அது வனமாலியின் பார்வைக்கு வராது நடக்காது, நடக்கவும் முடியாது என்பதால், தன்னபோலவே அவனுக்கு எப்போதும் ஒரு நிமிர்வு இருக்கும்.

பேசும்போது எங்கே எப்படி பேசவேண்டும் என்பதும், தட்டியம் காட்டுவது எங்கே என்றும், தட்டிக்கொடுத்து செல்வது எங்கே என்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.

ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லை அல்லவா.. அதுபோலவே ஒரு குடும்பத்தில் இருக்கும் ஆட்களும்.. உருவங்கள் வேறு எப்படியோ அதுபோலவே குணங்களும் வெவ்வேறாய் இருக்கும்.. என்ன சிலர் சிலரை சார்ந்து இருக்கவேண்டிய நிலை. அந்த சார்பு தன்மை என்பது நீங்கும் பட்சத்தில் ஒருவரின் சுயம் எப்படி என்பது வெட்ட வெளிச்சம் ஆகும்..

ஆனால் சிவகாமியோ எப்போதுமே, யாரோடு சார்ந்து இருந்திருந்தாலும் கூட தன் சுயம் என்பது எங்கேயும் அழியாது தான் பார்த்துக்கொண்டார்.. அதுபோலவே கமலியையும் வளர, இப்போது அதுவே தவறு எனப்பட்டது சிவகாமிக்கு.. அவரைப் பொருத்தமட்டில் தன்னுடைய காலம் இதோ பாதிக்கு மேல கடந்துவிட்டது. ஆனால் கமலிக்கு??

அவளுக்கு இனிமேல்தான் வாழ்வே.. அப்படியிருக்க அவளோ யாருமே தனக்கு தேவையில்லை என்பதுபோல் இருப்பது மனதினில் ஒரு வருத்தம் கொடுக்க, நல்ல நேரம் வனமாலி அப்போது வந்து வந்தனா நிச்சயத்திற்கு அழைப்பு விடுக்க, கண்டிப்பாய் கமலியை அழைத்துக்கொண்டே சென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உறுதியானது.

“கமலியை ஒருவார்த்தை கூப்பிடேன் வனா..” என்று அனுப்பி வைத்தவரும் அவரே.. அனுப்பியதுமில்லாது, சங்கிலிநாதனுக்கு அழைத்தும் கூட சொல்லிவிட்டார்..

ஆனால் கமலியோ இப்போது அம்மாவை முறைத்தபடி இருக்க சிவகாமியோ “நம்ம சீர் தட்டு வைக்கணும் கமலி.. சேலை எடுக்கணும்.. நகை போடணும்... வந்தனாக்கு என்ன கலர் பிடிக்கும்னு கேட்டு எடுத்துப்போம்.. இல்லை வனாக்கிட்ட சொன்னா அவளை கடைக்கே கூட கூட்டிட்டு வருவான்... அவளுக்கு பிடிச்சதை எடுத்து கொடுத்துடலாம்..” என்று பேசிக்கொண்டே போக,

கமலியோ இந்த அம்மா எத்தனை பட்டாலும் திருந்தவே மாட்டார்களா என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்..

“என்ன கமலி??? நான் பேசிட்டே இருக்கேன்...”

“தேவையே இல்லாத பேச்சும்மா...” என்றவள், “இனிமே இப்படி பண்ணாதீங்க.. என்னை பார்க்க யாரையும் அங்க அனுப்பாதீங்க...” என்றாள் இறுகிப் போன குரலில்..

“ஏன்?? நான் ஏன் பேசக்கூடாது???”

“வேண்டாம்.. பேசி எதுவும் ஆகப் போறதில்ல.. நீ இதெல்லாம் வாங்கினாலும் உன்னை அங்க செய்ய விடப் போறாங்களா என்ன??”

“நான் செய்யலை.. ஆனா நீ செய்யணும்...” என்றார் சிவகாமி திண்ணமாய்..

“ம்மா!!!” என்று கமலி அதிர்ந்து பார்க்க,

“இது சொந்தத்துக்காக மட்டும் நான் போகணும் சொல்லலை கமலி.. வனா வந்து கூப்பிட்டது ஒருப்பக்கம் சந்தோசம் தான்.. ஆனா... யார் நம்மல மதிச்சாலும் இல்லைன்னாலும், நம்ம நம்மளோட நிலைல இருந்து எங்கயும் இறங்கல.. அவர் இல்லைன்னா கூட நாம் செய்றதை சரியா செஞ்சுத்தான் ஆவோம்னு காட்டனும்...” என்று சொல்ல,

அம்மாவின் பேச்சில் கொஞ்சமே கொஞ்சம் வியந்தவள், “நிஜமா இது மட்டும்தான் காரணமா??” என்று கேட்க,

“வேறென்ன நினைச்ச நீ??” என்றார் சிவகாமி பட்டென்று..

“ம்ம்.. ஒண்ணுமில்ல... கடைக்கு போகணும்னா போயிட்டு வாங்க...” என்றவள் எழுந்து சென்றுவிட,

அம்மா மகள் இருவரின் பேச்சையும் அத்தனை நேரம் அமைதியாய் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்த சங்கிலிநாதனின் மகள் ராணி, “என்ன சித்தி.. நிஜமா இதான் காரணமா??” என்று கேட்க,

“கமலி இப்படி சொன்னாதான் வருவா..” என்றார் மெதுவாய் சிரித்து.

“அதானே பார்த்தேன்.. நீ என்னிக்கு இப்படி எல்லாம் யோசிச்சு இருக்கீங்க.. அவங்க என்ன காயப்படுத்தினாலும் சரின்னு தானே இருப்பீங்க..”

“இப்போ ஏன் அந்த பேச்சு ராணி.. எனக்கு அப்புறம் என் பொண்ணுக்கு யார் இருக்கா?? எதோ வனா நல்லா பழகறான்.. அவன் வந்து கூப்பிட்டு நம்ம போகலைன்னா அது அவனுக்கு கஷ்டம் தானே.. அதுவுமில்லாம அவர் பக்கத்து சொந்தம் எல்லாம் வரும்... அதுவும் ஒரு காரணம்..” என்றவர் அடுத்து ஆக வேண்டிய வேலைகளை பார்க்க,

கமலியோ வெகுவாய் சிந்தனையின் பிடியில் சிக்கியிருந்தாள். என்னதான் அம்மா சொன்னதற்கு ஒருவிதமாய் சரி என்று சொல்லி வந்துவிட்டாலும், அவளுக்கு மனது சரியாகவேயில்லை.. அங்கே விசேச வீட்டில் போனால், அனைவரின் பார்வையும் இவர்களின் மேல்தான் இருக்கும்.

என்ன செய்கிறார்கள் என்று ஆரம்பித்து, மணிராதா, இந்திரா எல்லாம் எப்படி பேசுகிறார்கள், அவர்களின் முக மாற்றங்கள் என்று ஒவ்வொன்றாய் இவர்கள் அனைவரையும் வைத்து ஒரு மேடை நாடகம் காண்பர். அதிலும் கமலி, பமீலா ஒப்பீடுகள் எல்லாம் கேட்கவே இவளுக்கு நாராசமாய் இருக்கும்.

ஒருசிலர் வந்து “உன் அக்கா கூட பேசுவியா??” என்று இவளிடமே சின்னதனமாய் கேள்வி எல்லாம் கேட்டு இருக்கிறார்கள்.

பமீலா என் அக்காவா??? ஹா ஹா ஹா என்று சத்தமாய் சிரிக்கத் தோன்றும் இவளுக்கு..

இப்போதும் அது நினைவில் வர, தானாய் சிரித்துக் கொண்டாள் ‘அக்காவா...’ என்று சொல்லியபடி..

 
Top