Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 11

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 11

“நான் இனிமே இங்க இருக்கவே மாட்டேன்.. யாராவது எனக்கு வந்து அட்வைஸ் பண்ணீங்க அவ்வளோதான்.. அவ இந்த வீட்டு மருமகளா வர்ரான்னா நான் இங்க இருக்க மாட்டேன்..” என்று காட்டு கத்தலாய் கத்திக்கொண்டு இருந்தாள் பமீலா..

வனமாலி வீட்டில் அனைவருமே இருக்க, ஒவ்வொருவர் முகத்திலும் ஒவ்வொரு பாவனை. இந்திராவோ கலங்கிய விழிகளோடு கைகளைப் பிசைந்துகொண்டு அமர்ந்திருக்க, மணிராதா கொஞ்சம் அதிர்ச்சியோடு தான் இருந்தார். வனமாலியிடம் அவர் இப்படியான ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை.

வந்தனாவும், கோவர்த்தனும் இதை நாங்கள் எதிர்பார்த்தோம் என்று ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்துக்கொள்ள, வனமாலியோ யார் என்ன செய்தாலும் யார் என்ன சொன்னாலும் என் முடிவென்பது இதுதான் என்று அமர்ந்திருந்தான்.

மணிராதா முகத்தினில் தெரிந்த அதிர்ச்சி அவனுக்கு சிறு சங்கடம் கொடுத்தாலும், என் முடிவில் மாற்றமேயில்லை என்றுதான் அவன் திண்ணமாய் இருக்க, பமீலாவோ அனைவர்க்கும் சேர்த்து கத்திக்கொண்டு இருந்தாள்.

“ம்மா ஏன் அமைதியா இருக்க.. வா.. இவங்கக்கிட்ட எல்லாம் நியாயமே கிடைக்காது.. எல்லாருமே சுயநலம்.. சுய லாபத்துக்காக ஆரம்பத்துல இருந்தே உன்னையும் என்னையும் வச்சு எல்லாம் விளையாடுறாங்க..” என்று மணிராதாவை முறைத்தபடி பமீலா சொல்ல,

இந்திராவோ “என்ன அண்ணி இதெல்லாம்.. ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் என்னையும் என் பொண்ணையும் அழ வைக்கிறீங்க.. உங்களோட சொல் பேச்சு கேட்டது தான் எங்க தப்பா? சொல்லுங்க...” என்று அவரும் இப்போது மணிராதாவை கேள்வி கேட்க,

இத்தனை வருடம் எதற்கும் தேவையற்று பேசாதிருந்த இந்திராவே இப்போது தன்னை கேள்வி கேட்பதை எண்ணி மணிராதாவிற்கு மிக மிக ரோசமாகிப் போனது.

ஆனால் அதுவும் யாரால்?? தான் பெற்ற மகனால் என்று நினைக்கையில் அவரின் அதிர்ச்சி தாண்டி கோபம் எல்லையை மீற,

“இது நடக்கவே நடக்காது வனா...” என்றார் உறுதியாய்.

“இது நடந்து தான் ஆகணும்மா...” என்றான் அவனும் உறுதியாக..

“பாத்தீங்களா.. பாத்தீங்களா... ஆரம்பத்துல இருந்து நான் சொன்னது சரியாப் போச்சா.. அவங்க எல்லாரும் ஒவ்வொன்னா ப்ளான் பண்ணி செய்றாங்க...” என்று பமீலா திரும்ப கத்த,

இம்முறை வனமாலி கோவர்த்தனைப் பார்த்தான் ‘உன் மனைவியை அடக்கி வை..’ என்பதுபோல்..

அண்ணனின் பார்வை உணர்ந்தவனோ “பமீ..” என்று எதுவோ சொல்லவர, “நீங்க பேசாதீங்க.. நீங்க பேசவே கூடாது..” என்று ஆங்காரமாய் அவனை நோக்கி விரல் நீட்டி கத்த, கோவர்த்தனின் முகம் அப்படியே வாடிப் போனது.

மணிராதாவோ “பமீலா...” என்று அதட்ட,

“என்னை ஏன் இப்போ எல்லாம் பேசாத சொல்றீங்க.. வனா மாமா சொல்றது சரியா? இல்லை அவர் பண்றதுதான் சரியா?? அவரை ஏன் யாரும் சொல்றதில்லை...” என்று மேலே மேலே குரலை உயர்த்திக்கொண்டு போக, வனமாலி எழுந்துவிட்டான்..

‘என்ன செய்யப் போகிறான்..’ என்று அனைவரும் பார்க்க, வனமாலியோ நேராய் மணிராதாவின் அருகே வந்தமர்ந்தவன், “ம்மா.. இதுதான் என் முடிவு.. இது மட்டும் தான் என் முடிவு.. சொல்லப் போனா சிவகாமி அத்தை என்கிட்டே கேட்கிறதுக்கு முன்னமே நான் கமலியை கல்யாணம் செய்யனும்னு நினைச்சிட்டேன்..” என,

வீட்டினர் அனைவரும் ‘ஆங்...!!!’ என்றுதான் வாய் பிளந்தனர்.

மணிராதா திகைத்துப் போய் மகனின் முகம் பார்க்க, “ம்மா சிலது நான் சொன்னா உங்களுக்கு கஷ்டமா தான் இருக்கும்.. ஆனா கேட்டுதான் ஆகணும் வேற வழியில்லை...” என்று அவரின் கைகளை பிடித்தவன்,

“நீங்க ஆரம்பத்துல ஒவ்வொரு விசயத்துக்கும் இப்போ உங்க பசங்க நாங்க பதில் சொல்லிட்டு இருக்கோம்.. நேரடியாவும்... இல்ல எங்க வாழ்க்கைல நடக்கிறது வச்சும்...” என்று சொல்ல, மணிராதாவின் மனதில் அடியாளத்தில் இருந்த ஒரு பயம் இப்போது மேலெழுந்து வந்தது.

‘சிவகாமிக்குத் தான் செய்தவைகள் எல்லாம் என் பிள்ளைகள் வாழ்வில் விளையாடுகிறதோ...’ என்ற எண்ணம் இந்த கொஞ்ச வருடங்களாகவே இருக்க, அதன்பொருட்டே வந்தனா நிச்சயத்தில் சிவகாமி வந்து சீர் செய்தபோதும், அத்தனை எதுவும் மறுக்கவில்லை.

அவர் வந்தது பிடிக்கவில்லை தான் ஆனால் மணிராதா நினைத்திருந்தால் அங்கேயே மறுத்திருக்க முடியும். செய்யவில்லை.. இருந்தாலும் பிறவி குணம் என்பது போகுமா?? கடைசியில் வார்த்தைகளை விட்டு, கமலியை சீண்டிவிட்டார்..

விளைவு.. இதோ அவள் இங்கேயே வரப்போகிறாள்.. சர்வ உரிமையோடு.. சர்வ அதிகாரத்தோடு.. வனமாலியின் மனைவியாக கமலி இங்கே வருகையில் அதன் பின் நடப்பவைகள் எல்லாம் மணிராதாவிற்கு நினைத்தும் பார்க்க முடியாது கண்களை இறுக மூடிக்கொண்டார்.

“அம்மா...” என்று வனமாலி திரும்ப அழைக்க, கைகளை உயர்த்தியவர், “போதும் வனா..” என்றுசொல்லி அப்படியே சாய்ந்துகொள்ள,

“ஆ ஊன்னா இப்படி கண்ணா மூடிக்கோங்க.. இல்லையோ வந்தனா கல்யாணம் அது இதுன்னு சொல்லுங்க..” என்று பமீலா மீண்டும் ஆரம்பிக்க,

கோவர்த்தனோ “பமீலா பேச்சை நிறுத்து...” என்று கத்தினான்.

“ஏன் ஏன் நான் பேசக்கூடாது.. இப்போ சொல்றதுதான்.. நல்லா கேட்டுகோங்க எல்லாம்.. யாருக்கு கல்யாணம் நடக்கது நடக்கலை, அது வந்தனாவா இருந்தாலும் சரி, இல்லை வனா மாமாவா இருந்தாலும் சரி, அது எனக்கு கவலையில்லை. ஆனா அந்த கமலி இங்க வரக்கூடாது..” எனவும்,

“பமீலா...!!!!!!” என்று வனமாலியும் சரி மணிராதாவும் சரி கத்தியே விட்டனர்..

பமீலாவின் இப்பேச்சைக் கேட்டு மணிராதா மனதில் பயப்பந்து உருளத் தொடங்கியது.. வந்தனாவின் திருமணம்.... கோவர்த்தனுக்கும் பமீலாவிற்கு ஒரு பிள்ளை... வனமாலியின் வாழ்வு... இதெல்லாமே முற்றுப்பெறாது அப்படி அப்படியே நிற்கிறது... இதற்கான பதில்கள் யார் சொல்வது?

அப்படியிருக்கையில் இவளே இப்படி பேசினால் எப்படி?? என்னமாதிரி பேச்சு இது.. அனைவருமே வந்தனாவைப் பார்க்க, இத்தனை நாள் இல்லாது அவள் விழிகளில் லேசாய் கண்ணீர் கோடுகள் தெரிய, வனமாலியின் பொறுமை எல்லைக் கடந்துவிட்டது.

“நல்லா கேட்டுக்கோங்க.. வந்தனா கல்யாணம் நடக்கும்.. சீரும் சிறப்புமா நடக்கும்... நான் மட்டுமில்ல, நானும் கமலியும் சேர்ந்து நின்னு அதை நடத்திவைப்போம்..” என்றவன்

“கண்டிப்பா எனக்கும் கமலிக்கும் அடுத்த வாரம் கல்யாணம் நடக்கும்.. யார் சரின்னு சொன்னாலும் சரி இல்லைன்னாலும் சரி..” என்றுவிட்டு வந்தனாவிடம் வந்தவன் “நீ எதுக்கும் அழக் கூடாது...” என்று சொல்லி வெளியே கிளம்பிவிட்டான்.

வனமாலி கிளம்பியதும் வீட்டினில் அப்படியொரு அமைதி.. புயல் வருவதற்கு முன்னிருக்கும் ஓர் அமைதியா?? இல்லை புயல் வந்தபின்னே இருக்கும் அமைதியா?? யாராலும் இனம் காணமுடியவில்லை.

ஆனால் எதோ ஒன்று நடக்கப் போகிறது என்பது மட்டும் அனைவர்க்கும் உறுதியாய் புரிந்தது..

கோவர்த்தன் பமீலாவிடம் “நீ பேசுற எல்லாத்துக்கும் எல்லாருமே பதில் சொல்லவேண்டி இருக்கு...” என்று கடிய,

“நான் இங்க இருக்கவே போறதில்லை...” என்று மறுபடியும் ஆரம்பித்தாள்.

“பமீலா கொஞ்சம் வாய் மூடு...” என்று மணிராதாவும் கத்த, இந்திராவோ “ஏன் அண்ணி நீங்களும் இப்படி மாறிப் போனீங்க...” என்றார் ஒருவித இயலாமையில்.

வந்தனா யாரோடும் எதுவும் பேசாது அவளின் அறைக்குள் சென்றுவிட, கோவர்த்தன் “ம்மா நீங்க கொஞ்சம் பொறுமையா யோசிங்க.. அண்ணன் சொல்றான்னா ஏதாவது ஒரு ரீசன் இருக்கும்.. அவன் எப்பவும் தப்பா செய்ய மாட்டான்...” என,

“அப்போ நாங்க எல்லாம் தப்பா?? நாங்க பண்றது எல்லாம் தப்பா??” என்றாள் பமீலா..
 
“உனக்கு சொன்னாலும் புரியாது பமீ.. கொஞ்சம் அமைதியா யோசி நீயும்..” என்றவன் அவனும் கிளம்பிவிட்டான்.

ஆண்களுக்கு இது ஒன்று சாதகம், வீட்டினில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் செருப்பை மாட்டிக்கொண்டு வெளியேறி விடுவது. ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அப்பிரச்சனையினுள்ளேயே உழன்று, கடந்து இல்லையோ தனக்குள்ளே விழுங்கி எழுந்து வரவேண்டும். வந்தே தான் ஆகவேண்டும்.. இல்லையெனில் குடும்பச் சக்கரம் ஓடாது.

அதுவும் இந்த குடும்பத்தில் அச்சாணியான மணிராதாவிடமே பிசகு இருக்கையில் குடும்பத்து உறுப்பினர்களின் வாழ்க்கை பயணம் என்பது சுமுகமாய் இருக்காதல்லவா..

இப்போது அந்த நிலைதான் அங்கே.. யாருக்கும் யாரோடும் சுமுகமில்லை.. முன்னே அனைத்துமே நன்றாய் இருப்பது போல் இருந்தது எல்லாம் இப்போது கழுத்தை நெரித்து. யார் யாரின் பக்கம் நியாயம்.. யார் யாரின் பக்கம் பேசுவது.. யார் யாரை தள்ளி வைப்பது.. யார் யாரை வேண்டாம் என்பது இதெல்லாம் ஒருநொடியில் மாறிப்போனது..

இது யாரால்?? யாரின் செயலால்..?? இந்த ஆராய்ச்சி எல்லாம் செய்தாலும் கூட இப்போது அதற்கான விடையும் சரி வினாவும் சரி என்பது கமலி என்ற உருவத்தில் தான் வந்து நிற்கிறது. அவள் என்ன செய்கிறாள் என்ன செய்யவில்லை என்பதெல்லாம் இல்லை. காலம் அவளை ஒரு கருவியாய் வந்து ஆடத் தொடங்கிவிட்டது.

சிவகாமியின் வாழ்வில் ஆட்டம் கொடுத்தவர்கள் எல்லாம் இப்போது அடுத்தது என்ன நடக்குமோ என்று ஆடிப் போய் இருக்கும் நிலை.

ஆனால் மருத்துவமனையில் இருக்கும் சிவகாமியோ மகளின் முகத்தினை பாவமாய் பார்த்து அமர்ந்திருந்தார். கமலி வனமாலியோடான திருமணத்திற்கு சம்மதம் என்றவள் அதன்பின்னே யாரோடும் பேசவில்லை. அம்மா திருமணம் செய்யக் கேட்டதும் சரி என்றவள், அது வனமாலியோடு என்று தெரியவும் ஒருவித உணர்வு குவியல்..

அதைவிட அதற்கு சட்டென்று யோசிக்காது வனமாலி சம்மதம் சொன்னதும் கூட அனைவருக்குமே ஒரு ஆச்சர்யம்.. சிவகாமி தன் ஆச்சர்யத்தை அவரின் கண்களில் காட்ட,

“நீங்க கேட்கலைன்னா நானே கேட்டிருப்பேன் அத்தை..” என்றான் ஒரு மெல்லிய புன்னகையோடு..

சிவகாமிக்கு ஆறுதல் அளிக்கும் புன்னகை அது.. தெம்பளிக்கும் புன்னகை அது.. நான் இருக்கிறேன் என்று சொல்லும்விதமாய் அவன் புன்னகை சிந்தியது, நிச்சயம் கமலிக்குமே கூட ஒருவித இம்சையை கொடுத்ததுதான்.. ஆகமொத்தம் அவனின் புன்னகை மற்றவரை வசீகரித்தது.

“நி... நிஜமாவா வனா??!!” என்று சங்கிலிநாதன் நம்பாமல் கேட்டுவிட,

“நிஜமா தாத்தா... நான் நேத்தே கமலிக்கிட்ட கேட்டுட்டேன்... மே பீ அதுனால கூட உங்கக்கிட்ட கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு சொல்லி பேச்சை மாத்திருப்பா அத்தை..” என்று இவன் அப்படியே பேச்சை உல்டாவாக மாற்றிவிட,

‘ஐயோ பொய்..’ என்று பார்த்தாள் கமலி..

ஆனால் அதைதான் யார் நம்புவர்..??

“ஆமா.. நீ ப்ரெஸ்க்கு வந்துட்டு போனதா வாட்ச் மேன் சொன்னான்..” என்று சங்கிலிநாதன் சொல்ல, சிவகாமியோ “அப்படியா கமலி...” என்றார் மகளை ஆவலாய் ஒரு பார்வை பார்த்து.

“ம்மா நீ கேட்ட நான் சரின்னு சொல்லிட்டேன்.. இவர்னு இல்லை.. நீ யாரை கல்யாணம் பண்ணுனு சொல்லிருந்தாலும் செஞ்சிருப்பேன்..” என்றவள் முகத்தினை திருப்பிக்கொண்டாள்.

“அத்தை விடுங்க.. இப்போ ஏன் இவ்வளோ ஸ்ட்ரைன் பண்றீங்க..” என,

ராணியும் கூட “ஆமாக்கா.. ஒரேதா ரொம்ப அலட்டிக்காதீங்க..” என, அனைவருமே கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்கும் சூழல் வந்தது.

சண்டை மட்டுமே போட்டுக்கொண்டு இருந்தவர்களின் நடுவில் இப்படியொரு சங்கதி இருக்குமென்று யாரும் நினைக்கவுமில்லை. ஆனால் சிவகாமிக்கு மகளின் நிலை எண்ணி கவலை வந்திட, தனக்கு பிறகு அவளுக்கு யார்?? யார் அவளை பார்த்துக்கொள்வர் என்ற கேள்வியே பெரும் விஸ்வரூபன் எடுத்து அவரை கலங்க செய்துவிட்டது.

கண்களை திறந்ததும் வேறெதுவும் சிந்திக்கவில்லை, வனமாலியைப் பார்த்தவர், அந்த நொடி வேறெதுவும் நினைக்காது கமலியின் பாதுக்காப்பான வாழ்வை மட்டுமே எண்ணி அவனிடம் கேட்டுவிட்டார். கேட்க கூட இல்லை, அவரின் முடிவினை சொல்லிவிட்டார்.

ஒருவேளை வனமாலி மருப்பானோ என்று பார்க்க அவனும் உடனே சம்மதம் சொல்ல, கமலியும் அவள் முகத்தினில் எதுவும் காட்டாது சம்மதம் என்று சொல்லிவிட, வனமாலி வேறு இதைப்பற்றி ஏற்கனவே கமலியிடம் பேசியதாய் சொல்ல, ஒருவேளை இருவருக்கும் இதில் விருப்பம் இருக்கிறதுவோ என்று அதன் பின் தான் ஒரு பெரிய விசயமே அங்கிருப்பவர்களுக்கு நினைவு வந்தது.

ஆனால் வனமாலியோ “நான் பேசிக்கிறேன் அத்தை.. நீங்க யாரும் எதுவும் வொர்ரி பண்ணிக்க வேணாம்..” என்றவன் தான் வீட்டினில் வந்தும் தன் முடிவினை சொல்லிவிட்டு திரும்ப மருத்துவமனைக்கு வந்துவிட்டான்..

குளித்து முடித்து உடை மாற்றியே வனமாலி வந்திருக்க, கமலி அப்படியே இருப்பதைப் பார்த்தவனோ “நீ போய் பிரெஷ் ஆகிட்டு வரவேண்டியது தானே..” என்றான் இயல்பாய்..

“எனக்குத் தெரியும்..” என்று கமலி முணுமுணுக்க, சிவகாமியைப் பார்த்தான், அவரோ நல்ல உறக்கத்தில் இருந்தார்.

சங்கிலிநாதன் அச்சகம் சென்றிருப்பார் என்று தெரியும், ராணியும் கமலியும் மட்டும்தான் இருந்தனர்.. கமலியோ இன்னும் உண்டுகூட இருக்கமாட்டாள் என்பது அவளின் முகத்திலேயே தெரிந்தது.

“நான் பாத்துக்கிறேன் நீ வீட்டுக்கு போயிட்டு பிரெஷ் ஆகிட்டு வான்னு சொன்னா கேட்க மாட்டேன்கிறா...” என்றார் ராணியும்..
 
“ம்ம்... அத்தை முழிச்சதும், அடுத்த வாரம் சிம்பிளா ஒரு கோவில்ல வச்சு கல்யாணம் வச்சுக்கலாம்னு சொல்லிடுங்க.. மத்தது நான் வந்து பேசிக்கிறேன்..” என்றவன் கமலியை பார்த்து

“வெளிய வா பேசணும்..” என்றுவிட்டு போய்விட்டான்..

‘என்ன இவனா வந்தான்.. ஒரு வாரத்துல கல்யாணம்னு சொல்றான்..’ என்ற கடுப்புடனே வெளியே சென்றவள்,

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க?? கல்யாணம் நீங்களே முடிவு பண்ணிக்கிட்டா ஆச்சா?” என்று எகிறிக்கொண்டு தான் வந்தாள்..

“இங்க இத்தனை பேர் முன்னாடி சீன் கிரியேட் பண்றது உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகே தான்..” என்று வனமாலி தோள்களை குலுக்க,

“திஸ் இஸ் டூ மச்...” என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு..

“சரி அப்போ என்னோட வா.. உன்னை வீட்ல டிராப் பண்றேன்.. பிரெஷ் ஆகிட்டு சொல்லு, திரும்ப கூட்டிட்டு வர்றேன்.. நீ கேட்கணும் நினைக்கிறதைப் போறப்போ பேசிக்கலாம்..”

“நீங்க என்ன எனக்கு டிரைவரா...”

“புதுசா ஏதாவது கேளேன்.. இதெல்லாம் ஓல்ட் ஆகிடுச்சு...” என்றவன், திரும்ப அந்த அறைக்குள் எட்டிப்பார்த்து

“கமலியை வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்டு வர்றேன் அத்தை...” என்று ராணியிடம் சொல்லிவிட்டு வர, “நீங்க நினைக்கிறது போல எல்லாம் என்னை ஆட்டி வைக்க முடியாது..” என்று பிடிவாதமாய் நிற்பவளிடம்,

“நான் ஆட்டி வைக்க நீ என்ன அரிசி மாவா?? என் மாமா பொண்ணு... ஒழுங்கா வா.. இல்லை குளிக்காம ப்ரெஸ் பண்ணாம இப்படி கப்போட தான் நிப்பன்னா.. ஹாஸ்பிட்டல் நாறிடும்...” என்று வனமாலி பார பச்சமே பார்க்காது அவளின் காலை வார,

“என்னது என்ன சொன்னீங்க... என்னா??” என்று கோபமாய் கேட்க ஆரம்பித்து பின் அவன் சொன்னதில் அவளுக்கே சிரிப்பு வந்திட, அதனை அடக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டே அவனோடு நடந்து வந்தாள்.

‘ம்ம் இப்படி அதட்டி உருட்டினா தான் வழிக்கு வருவாளோ..’ என்றெண்ணியபடி வனமாலி காரை கிளப்ப,

“டிராப் மட்டும் பண்ணினா போதும்.. நானே வந்துப்பேன்..” என்றாள் அடுத்து..

“லைப்ல நமக்கு நெக்ஸ்ட் ஸ்டேஜ் இப்போதான் பிக்கப் ஆகப் போகுது... நீ என்னடான்னா டிராப் மட்டும் செய்னு சொல்ற..” என்றபடி பக்கவாட்டு கண்ணாடியை வனமாலி பார்க்க,

“ஹா ஹா ஹா...” என்று கொஞ்சம் சத்தமாகவே சிரித்துவிட்டாள் கமலி..

வனமாலியோ அவளை திரும்பிப் பார்த்துவிட்டு எதுவும் கேட்காமல் இருக்க, “எனக்கு உங்கம்மா மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.. அதைவிட பமீலா மேல..” என்று சொல்லி இன்னும் சிரித்தாள்..

ஆக வனமாலிக்கு இப்போது தான் புரிந்தது இவள் எப்படி எதற்கு சம்மதம் என்று சொன்னாள் என்று. நிச்சயம் இதை மணிராதாவோ பமீலாவோ இல்லை இந்திராவோ யாரோ ஒருவர் நடக்க விடமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தான் சரியென்று சொல்லியிருக்கிறாள் என்று.

‘ஓஹோ..!!!’ என்று அவளைப் பார்க்க,

“அம்மா கேட்கிறப்போ முடியாது சொல்ல முடியலை.. ஆனா இது நடக்காது இல்லையா.. சோ தேவையில்லாத நம்பிக்கை அம்மாக்கு கொடுக்கவேணாம்..” என்றாள்..

“யார் சொன்னது நடக்காதுன்னு..”

“யார் சொல்லணும்..”

“கண்டிப்பா நடக்கும் கமலி...”

“ம்ம்ச்... நான்தான் சொன்னேனே..” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே, காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், அவள் முகத்தினை பற்றி தன்னை நோக்கி வெகு அருகில் கொணர்ந்து,

“நடக்கும்... நடந்தே தீரும்.. யாரா இருந்தாலும் சரி நம்ம கல்யாணத்தை நிறுத்த முடியாது...” என்று ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அவள் கன்னத்தில் கொடுத்த அதே அழுத்தத்தை கொடுத்து கூற,

கமலிக்கோ ‘இவன் லேசு பட்டவன் இல்லை..’ என்றே தோன்றியது..

ஒருவாரம்.. எழு நாட்கள்.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் போனது அனைவர்க்கும்.. எப்போது என்ன நடக்கும்?? யார் என்ன சொல்வார்?? யார் என்ன செய்வார்?? என்று ஒவ்வொருவர் மனதில் ஒவ்வொரு எதிர்பார்ப்பு.. அந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் பொய்யாகையில் மனதில் ஒரு ஏமாற்றம்..

கமலியின் வீட்டினில் ஒருவித அமைதியான சூழலே என்றால், வனமாலியின் வீட்டிலோ எப்போது பார் சண்டை, சச்சரவு, கண்ணீர், சத்தம் இப்படிதான் இருந்தது. வனமாலி வீட்டிற்கு வருவதே அரிதாகிப் போன நிலையில், நாளைக்கு விடிந்தால் திருமணம் அதுவும் மிக மிக எளிதாய்..

“அத்தை எனக்கு கிரான்டா செய்றதுல அவ்வளோ இஷ்டமில்லை.. உங்களுக்கு கமலிக்கு எல்லாம் இஷ்டம்னா நம்ம பண்ணிக்கலாம்..” என்றுசொல்ல,

“இல்ல வனா.. இப்போதைக்கு உங்க கல்யாணம் நடந்தா போதும். வேறெதுவும் வேண்டாம்..” என்று சிவகாமியும் சொல்லிட, அவன் பக்கத்து வேலைகள் எல்லாம் அவன் மட்டுமே பார்த்துகொண்டான்..

இங்கே சிவகாமிக்கு உதவியாய் சங்கிலிநாதனின் குடும்பம் வந்துவிட, மமிக மிக நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. ஆகமொத்தம் இச்செய்தி கேட்டு, அனைவர்க்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்..

‘அட இதெப்படி சத்தியம்...’ என்றும் ‘இனியாவது எல்லாம் ஒத்துமையா இருந்தா சரி..’ என்று பலவேறு கருத்துக்கள்..

இதோ நாளை விடிந்தால் திருமணம்.. வனமாலியோ அவனின் அறையில் இருந்தான். அன்று மாலை தான் வீட்டிற்கு வந்திருந்தான்.. அவனுக்கான உதவிகளை எல்லாம் கோவர்த்தன் செய்ய, வீட்டினில் செய்ய வேண்டிய சில உதவிகளை எல்லாம் வந்தனா செய்தாள்.

மணிராதா மகனோடு பேசவேயில்லை.. ஆனாலும் அவரிடம் பெரிய மறுப்பு வராது என்று இவனுக்கும் தெரியும்.. பமீலா பிறந்த வீடு சென்றுவிட்டாள். நாளைக்கு யார் யார் திருமணத்திற்கு வருவர் என்றுகூட தெரியாது.. இப்படியொரு நிலையிருக்க, கமலி அழைத்தாள் அவனுக்கு..

வெகு நாட்களுக்குப் பிறகான அழைப்பு அவளிடம் இருந்து.. அனைத்தையும் தாண்டி இது ஒருவித துள்ளல் கொடுத்தது வனமாலிக்கு, அழைப்பை ஏற்றவனோ அவள் சொன்ன செய்தி கேட்டு, கண்களை சுறுக்கி, முகத்தினை இறுக்கி நின்றிருந்தான்..

“தெரியும்.. நல்லா தெரியும்.. நீ இப்படிதான் சொல்வன்னு...” என்று வனமாலி பல்லைக் கடித்து வார்த்தைகளை கடித்துத் துப்பினாலும்,

‘நான் இதையும் செய்து காட்டுவேன்..’ என்ற வீம்பு அவனிடம் வெளிப்பட்டது.

 
Top