Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 20.2

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 2

ஒரு மாதம் கழிச்சு அந்த பொண்ணோட வக்கீல் வந்து சொல்றவரை இந்த விஷயம் எதுவும் அந்த பொண்ணுக்கு தெரியவே இல்லை. வக்கீல் கூட எவ்வளவோ எடுத்து சொல்லியும் வசியத்துக்கு கட்டுப்பட்டது போல சின்னய்யாவை விட்டு நகரவே இல்லை. வக்கீலை நம்பவும் இல்லை...”

“அதுக்கப்பறம் தான் சின்னைய்யாவுக்கு விஷயம் தெரிய வந்தது. உயில்ப்படி சொத்துல வரும் வருமானம் மட்டுமே பொண்ணுக்குனும், பொண்ணோட ஆயுசு வரை அதை அனுபவிக்கலாம்னும் அதன் பின்னால் சொத்து ட்ரஸ்ட்க்கு போய் சேர்ந்திடறது போலவும் எழுதியிருந்தது...”

“இது சுயசம்பாத்தியம் என்றதால சின்னைய்யாவால எதையும் செய்யமுடியலை. ஆனா அதை பத்தி அந்த பொண்ணு பெருசா எடுத்துக்கலை. எனக்கு என் புருஷன் மட்டும் போதும்னு சொல்லிடுச்சு...”
“இப்போவும் அந்த பொண்ணை வாழவும் விடாம சாகவும் விடாம வச்சிருக்கிறது மாதா மாதம் வரும் வருமானத்தை வச்சித்தான். அந்த வருமானமே கோடில வரும்ன்றதால அந்த பொண்ணு இன்னமும் உயிரோட இருக்கு. வக்கீல் இங்க கோவமா வந்து சண்டை போட்டு பேசினப்போதான் இந்த விவரங்களும் எங்களுக்கு தெரிஞ்சது...”

சத்தியமாக தீட்சண்யா இதை எதிர்பார்க்கவே இல்லை. கொலைகாரன், பெண் பித்தன், பணத்தாசை பிடித்தவன். இன்னும் அவள் கண்களுக்கு தெரியாதது எத்தனையோ.
கண்களை இருட்டிக்கொண்டு வர தரையில் அப்படியே சரிந்து அமர்ந்தாள். இப்போது என்ன செய்யவென புரியாமல் தலை வலித்தது. இதயம் பலமடங்கு வேகமாக துடித்தது. இவனை இப்படியே விட்டால் இன்னும் எத்தனை பேரின் வாழ்க்கையை நாசம் செய்வானோ என கொதித்தாள்.

அவளுக்கு இன்னும் தெரியவேண்டியது இருந்தது. அதையும் மங்களத்திடம் கேட்டாள்.
“உங்களை கல்யாணம் செய்துக்க காரணமா? அவரோட பழக்கவழக்கத்தை அரசல்புரசலா தெரிஞ்சவங்க யாரும் பொண்ணு கொடுக்க முன்வரலை. இரண்டாந்தாரம்னு சிலர் ஒதுக்கினாங்க. அதுல ரொம்பவே அவமானமா போச்சு அவங்களுக்கு...”

“அப்படி பொண்ணு பார்க்க வரும் போதுதான் உங்களை எங்கையோ பார்த்திருக்காங்க போல. பிடிச்சதும் வீட்டை பத்தி விசாரிச்சு உங்களை விட்டுடகூடாதுன்னு பேசி முடிச்சுட்டாங்க...”
“இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, பெரியம்மா சமீபத்துல ஜாதகம் பார்த்திருக்காங்க. சின்னைய்யாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்கனும், சீக்கிரம் குழந்தை பிறக்கனும்னும் இல்லைனா அவரோட உயிருக்கு ஆபத்து இருக்குன்னும் அதுவும் அவருக்கு பொருந்த கூடிய கோத்திரம் ரெண்டே ரெண்டு தானாம்...”

“ஜாதகம் பொருந்தினா பொண்ணு வீட்ல ஒத்துக்கலை. பொண்ணு கிடைச்சா ஜாதகம் பொருந்தலை. இப்போ நீங்க வந்துட்டீங்க. வேண்டாங்கம்மா. எப்டியாச்சும் நீங்க சூதானமா தப்பிச்சிடுங்க. குழந்தை பிறந்துட்டா உங்களோட வாழ்க்கை சூனியம் தான்...”

“இதுக்குமேல சொல்ல ஒண்ணுமில்லைங்கம்மா. ஏற்கனவே சின்னையா மேல உசுரையே வைச்ச பாவத்துக்கு அந்த பொண்ணு அனுபவிக்குது. குடிச்சிட்டே இருந்ததனால அந்த பொண்ணோட உடல்ல எல்லாமே குடிக்கிற தண்ணிதான் ஓடுதான். குழந்தைக்கு தாயாகிற வாய்ப்பு இல்லையாம். பாவம்...”

“நீங்க இங்க இருந்து கிளம்புங்கம்மா. நான் வேற வழியா வீட்டுக்குள்ள போய்டுவேன்...” அதிர்ச்சியில் உறைந்திருந்தவளை நெட்டி தள்ளி அனுப்பிய மங்களம் தானும் சென்றுவிட்டார்.
மெதுவாக தனக்கு கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்த தீட்சண்யா மீண்டும் மீண்டும் யோசித்தும் அவளுக்கு கிடைத்த பதில் ஒன்றே ஒன்றுதான். மனதை திடமாக்கி நினைத்ததை செயல்படுத்த திட்டமிட்டாள்.

ஹர்ஷூவும் நிஷாந்தும் அவளின் மனக்கண் முன்னாள் வந்து சிரித்தனர். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வேண்டாம் அழுதால் மனம் மாறிவிடும். வேதனைகள் கண்ணீரில் கரைந்துவிடும். அழக்கூடாது அழக்கூடாது என மந்திரம் போல ஜபித்துகொண்டு மனதை இறுக்கினாள்.

மாலை மயங்கி இருள் கவிந்துவிட்ட நேரம் ஹர்ஷூ அழைக்க ஒரு நொடி எடுக்கலாமா வேண்டாமா என யோசித்தவள் எடுத்துவிட்டாள்.
“ஹாய் அழகி. என்ன உன் ஹப்பியோட இருக்கும் போது கரடியா வந்துட்டேனா?...” அவளது உற்சாக குரலில் தீட்சண்யாவின் தொண்டை வரை வந்த கேவல் அவசரமாக உள்ளிளுக்கப்பட்டது.

குரலை சாதாரணமாக்கி, “சொல்லுடா ஹர்ஷூ. வீட்டுக்கு போயாச்சா?...”
“லூசா நீ தியா? மணியை பாரு ஏழரை ஆகிடுச்சு. நாங்க கிளம்பு போதே பன்னிரெண்டுக்கு மேல. இவ்வளோ நேரமா வராம இருப்போம்?...”

இதுதான் ஹர்ஷூ. சில நேரம் ஒற்றை வார்த்தையில் பதில் வரும். சில நேரம் பதில் சொல்வதற்கு பதிலாக கேள்வியால் திணறடிப்பாள். எந்த நேரம் எப்படி இருப்பாளேன்றே வரையறுக்க இயலாதவள் ஹர்ஷூ.
அவளை நினைத்த அவளது தியாவின் முகத்தில் வேதனை புன்முறுவல் தோன்றியது. இனிமே இவளது பேச்சுகளையும் செல்ல சேட்டைகளையும் ரசிக்கவே முடியாது.

தன் நிலையை எண்ணி கசந்துகொண்டவள், “சாரிடா ஹர்ஷூ. சரி சொல்லு நிஷாந்த் எங்க? நாளைக்கு பார்ட்டிக்கு எல்லாம் தயாரா?...”
“ஆங் எல்லாம் இனிமேதான் ரெடி பண்ணனும். நைட் நானும் நிஷாவும் சேர்ந்து பண்ணிடுவோம்....”

மறுநாள் நிஷாந்தின் பெற்றோர்களின் திருமணநாள். அதை வருடா வருடம் மறக்காமல் கொண்டாடுவார்கள். கடந்த வருடம் அவர்களோடு தீட்சண்யாவும் கலந்துகொண்டதால் அந்த நாளின் ஏக்கங்கள் அவளது மனதில் வலம் வந்தது.
“ஹே வாலு எத்தனை தடவை உங்ககிட்ட சொல்றது? அவனை நிஷான்னு கூப்பிடாதேன்னு. உதய் வாங்கப்போற?...”

“நீ வேற தியா. வீட்டுக்கு வந்ததும் நான் கேட்டேன் நிஷூக்கிட்ட. லவ் பெயிலியர் ஆனா சரக்கடிக்கனும். அப்போதான் அவன் ஒரிஜினல் லவர். நான் வேணும்னா உனக்காக வாங்கித்தாரேன், உன்னோட சோகத்தை ஆத்திக்கோன்னு. பையன் ரொம்பத்தான் உஷ்ணப்பட்டுட்டான்...”

சலிப்பாக கூற அந்த நேரத்திலும் அவளது பேச்சை தீட்சண்யா வெகுவாக் ரசித்தாள்.
“நீ மாறவே மாட்ட. சரி. என்னோட விஷ் அப்பாக்கிட்டையும், அம்மாக்கிட்டயும் சொல்லிடு ஹர்ஷூ...”
“ஏன்? நாளைக்குத்தான வெட்டிங் டே. நாளைக்கு நீயே சொல்லு. உன்னால வரத்தான் முடியலை. போன்லையாச்சும். சொல்லிடு இல்லைனா வெட்டிங்க்டே பார்ட்டி கட்டிங் டே பார்ட்டியா மாறிடும்...”

“புரியலையா தியா செல்லம்? நீ பேசாத சோகத்துல நிஷூக்கு ஜூஸ்ல கட்டிங்கை கலந்து குடுத்துடுவேன்...” அசால்ட்டாக கூறியவளை எண்ணி இங்கே வெதும்பிக்கொண்டிருந்தாள்.
ஹர்ஷூவிடம் சமாதானமாக பேசியும் அவள் மசியவில்லை எனவும் சரி என கூறி துக்கம் நெஞ்சடைக்க இனியும் பேசினால் கண்டிப்பாக உளறிவிடுவோம் என எண்ணியவள் இன்னும் சில நொடிகள் பேசிவிட்டு தொடர்பை அணைத்தாள்.

தீட்சண்யா நினைத்தால் இந்த நிமிடம் ஆகாஷ் பற்றி ஹர்ஷூவிடம் சொல்லி அவனை தண்டிக்கமுடியும். ஆனால் தீட்சண்யா அதை விரும்பவில்லை.
அவனுக்கும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் தானே ஏதாவது செய்யவேண்டும் என முடிவெடுத்தும் விட்டாள். இந்த முறை நிதானமாக முடிவெடுத்துவிட்டாள். தீட்சண்யா அனைவருக்கும் பாடம் கற்றுக்கொடுக்காமல் ஓயப்போவதில்லை.

நிச்சயம் ஹர்ஷூ என்னை புரிந்துகொள்வாள் என நினைத்தவள் நிஷாந்த் ஹர்ஷூவை பார்த்துக்கொள் என மனதிற்குள் கேட்டுக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் அங்கே வந்த சுசீலா,” என்ன தீட்சு இப்படி மாச மசன்னு உட்கார்ந்திட்டு இருக்க? சடங்குக்கு ஏற்பாடெல்லாம் ஆகி ரூம் அலங்காரம் எல்லாம் முடிஞ்சது. நீ இன்னும் தயாராகாம இருக்கியே? ஒன்னொண்ணுக்கும் உன்கிட்ட சொல்லிட்டே இருக்கனுமா?...” என கடிந்துகொள்ள பதில் பேசவில்லை அவள்.

“இன்னும் அதையே மனசுல போட்டு புழுங்கிட்டு இருக்காதே. நான் சொன்னது நியாபகத்துல வச்சுக்கோ. நீதான் உன் புருஷனுக்கு முதல் மனைவின்னு நினச்சுக்கோ. அவரை பத்தின உண்மை உனக்கு தெரிஞ்சிடுச்சுன்னு கான்பிச்சுக்காதே. அப்போதான் உனக்கு தெரிஞ்சிடகூடாதேன்ற ஒரு பயம் அவருக்குள்ள எப்பவும் இருக்கும்...”

மகளுக்கு பாடம் எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட அவரின் பின்னால் வந்த தீட்சண்யாவிற்கு தனது மாமியார் அவசரமாக அங்கிருந்து ஓடுவது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
அதை கண்டு ஒரு ஏளன புன்னகை புரிந்தவள் மீண்டும் அறைக்குள் செல்ல சிறிது நேரத்தில் மங்களம் வந்து சேர்ந்தார்.
“அம்மா உங்களுக்கு அலங்காரம் செய்ய உதவி பண்ண சொல்லி அனுப்பினாங்க பெரியம்மா...” தலை குனிந்துகொண்டே கூறியவரை கண்டுகொள்ளாமல் தயாராக ஆரம்பித்தாள்.

அலங்காரம் முடிந்ததும், “நீங்க இங்க இருந்து தப்பிக்க எந்த வழியும் எனக்கு கிடைக்கலைங்கம்மா...” என கண் கலங்க,
“மங்களம்மா எனக்கு எந்த வழியும் வேண்டாம். ஆனா அஒரே ஒரு உதவி மட்டும் செய்ங்க...” என கூறவும் தீட்சண்யா சொன்னதற்கு சம்மதித்து மங்களம் ஆவன செய்துவிட்டார்.

ஆகாஷ் என்னும் மிருகத்தை பழிதீர்க்க தீட்சண்யா வீறுகொண்டு எழுந்துவிட்டாள். ஆனால் அவளுக்கு முன்பே அவனை தனது தாய் பழிதீர்த்துவிட்டதை அறியவில்லை.

ஜாதகத்தை ஆகாஷ் குடும்பத்தினர் அனுப்பி வைத்த நேரத்தில் அதற்கு ஏற்றவாறு பொருத்தமான ஒரு போலி ஜாதகத்தை தீட்சண்யாவிற்கு தயாரித்து அதை கொடுத்தனுப்பிவிட்டார் சுசீலா. அதுவும் அவர்களுக்கு சந்தேகம் வராத அளவிற்கு.
தீட்சண்யா எடுத்திருக்கும் முடிவு நடக்குமா?
அது வெற்றியா? தோல்வியா?

நதி பாயும்...
 
ஒரு நாடு நல்லா இருக்கணுமுன்னா
ஒரு வீட்டை/ஒரு குடும்பத்தை பலி
கொடுக்கணும்
ஒரு குடும்பம் நல்லா
இருக்கணுமுன்னா ஒரு நபரை
பலி கொடுக்கணும்
இங்கே யாருக்காக யாரின்
நலனுக்காக தீட்சண்யா தன்னை
பலி கொடுக்கப் போறாள்?
 
Last edited:
Top