Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 14.1

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 14 Part 1

ஹர்ஷூவிற்கு இரண்டு நாளாக தன்னிடம் பேசாமல் முறுக்கிக்கொண்டு திரிந்த தனது கணவன் மேல் கோபம் கோபமாக வந்தது. ஆனாலும் தன் மனமே அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல தன்னையே தப்பு சொல்லி சாடும் பொழுது தன் தவறை உணராமல் தப்ப முடியவில்லை அவளால்.

காலையில் அவன் அலுவலகம் கிளம்பும் போது கூட எவ்வளவோ பேச முயற்சி செய்தாள் ஹர்ஷூ. ஷக்தி அவளுக்கு இடம் கொடுத்தால் தானே? இன்றைக்கு ஒரு நாளாவது பேசாமல் இருந்துவிட்டு மாலை பேசிக்கொள்ளலாம் என நினைத்தவாறே கிளம்பிவிட்டான்.

புருஷோத்தமன் இவர்களின் ஊடலை கண்டும் காணாமல் உணர்ந்துதான் இருந்தார். ஆனாலும் அவர்களுக்கிடையே நுழையாமல் தள்ளியே நின்றுகொண்டார். ஷக்தி அனைத்தையும் பார்த்துகொள்வான் என்பது அவரது நம்பிக்கை.

ஹர்ஷூவோ அவளது செயல்களால் ஷக்தியின் பொறுமையை சோதித்துகொண்டே இருப்பதை அவர் உணரவில்லை. அவனது பொறுமை இன்று கரையை கடக்க இருப்பதையும் அறியவில்லை.

ஷக்தியிடம் இன்றைக்கு எப்படியாவது பேசி ஒரு சமாதானமான முடிவுக்கு வரவேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தவளுக்கு கண்பார்வையற்றோர் இல்லத்திலிருந்து அழைப்பு வந்தது.

அதை பார்த்ததுமே தலையில் சம்மட்டி கொண்டு யாரோ ஓங்கி அடித்தது போன்ற ஒரு வலி உடலெங்கும் பரவியது. அழைப்பை ஏற்றவள் அந்த பக்கம் பேசியதை கேட்டதும் இன்னமும் தனக்குள் இறுகிபோனாள்.

பேசி முடித்தவள் நேராக நாட்காட்டியை பார்த்து சோர்ந்துபோய் அமர்ந்திருந்தவளின் முகம் சொல்லொண்ணா வேதனையை பிரதிபலித்தது.
“எப்படி தன்னால் இது முடிந்தது? நாளைய தேதியை, அன்று நடந்த அந்த சம்பவத்தை எப்படி இந்த முறை என்னால் மறக்க முடிந்தது? இதே நாளில் தானே என் வாழ்க்கை திசை மாறியது...”

“இதற்கு காரணமானவர்கள் இப்போதும் நன்றாக தானே வாழ்கிறார்கள். ஆனால் என்னால் மட்டும் அதை மறக்கமுடியவில்லையே? அவர்களை இன்னமும் நான் விட்டு வைத்திருக்கிறேனே?...” தனக்குள் அரற்றியவள்,
“தீட்சண்யா, ஆகாஷ், மஞ்சரி. தீட்சண்யா, ஆகாஷ், மஞ்சரி...” என இந்த பெயர்களையே மாற்றி மாற்றி சொல்லி பித்துபிடித்தவள் போல புலம்பிக்கொண்டே இருக்க தலையில் சுளீரென்ற ஒரு வலி மின்னல் போல வெட்டி சென்றது.

வேகமாக தனது ஹேண்ட்பேக்கை திறந்தவள் அதிலிருந்த மாத்திரைகளை பிரித்து வாய்க்குள் போட்டு தண்ணிரை அருந்திவிட்டு படுத்துவிட்டாள். மதியம் மூன்றுமணி அளவில் அன்னமா வந்து சாப்பிட எழுப்பும் வரை உறக்கத்திலேயே இருந்தாள்.

கீழே செல்லும் போது புருஷோத்தமன் தனக்காக காத்திருப்பதை பார்த்து, “நீங்க சீக்கிரமே சாப்பிட்டிருக்கலாமே மாமா. ஏன் எனக்காக இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணிட்டிருந்தீங்க?. என்ன அன்னம்மா நீங்க? முதல்லையே எழுப்பிருக்கலாமே?...” குற்ற உணர்வோடு அமர்ந்திருந்தவளை கரிசனையாக பார்த்தவர்,

“அதுக்கென்னடாம்மா, வீட்ல இருக்கிறது நீயும் நானும் மட்டும் தான். ஆளுக்கொரு நேரமா சாப்பிட முடியும்? அதுவும் நீ வந்ததில இருந்து ரெண்டு பேருமா தானே சேர்ந்து சாப்பிடுவோம்...”

“இன்னைக்கு தனியா சாப்பிட ஒரு மாதிரியா இருந்தது. அசந்து தூங்கற உன்னையும் எழுப்ப மனசு வரலை. அதான் வெய்ட் பண்ணினேன். நான் கவனிக்காத நேரமா பார்த்து அன்னம்மா வந்து உன்னை எழுப்பிவிட்டுட்டா...” அன்னம்மாவையும் ஒரு முறைப்பான பார்வை பார்த்துக்கொண்டே சொல்லவும் ஹர்ஷூவிற்கு கண்களை கரித்துகொண்டு வரும் போல இருந்தது.

புருஷோத்தமனின் பாசத்தில் தனது பிரச்சனைகள் அனைத்தையும் அப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு அவரது மருமகளாக தன் கலகலப்பை மீட்டெடுத்து சமாளித்துவிட்டு அவரோடு சேர்ந்து வளவளத்துகொண்டே சாப்பிட்டு முடித்தாள்.

ஹாலில் அமர்ந்து இன்னும் கொஞ்ச நேரம் அவளோடு பேசிக்கொண்டிருந்த புருஷோத்தமனுக்கு தூக்கம் கண்களை சுழற்ற,
“ஹர்ஷூடா, மாமாவுக்கு இப்போ தூக்கம் வந்திருச்சு. ஈவ்னிங் பார்ப்போம். நீ போய் ரெஸ்ட் எடு. தூக்கம் வந்தா தூங்கு. இல்லைனா டிவி பாரு...” என வாயினுள் அடைபட்டிருந்த கொட்டாவியை விடுவித்துவிட்டு அவரது அறையை நோக்கி சென்றார்.

அவர் சென்றதுமே ஹர்ஷூவிற்கு தனிமைப்பட்ட உணர்வு ஏற்பட நிஷாந்திடம் பேசலாமே மொபைலை எடுக்க மீண்டும் அவளது போனில் அழைப்பு வந்தது. அழைத்திருந்தது மீனு திருமண விஷயத்தை பற்றி தெரிந்துகொள்ள தான் உதவி கேட்டிருந்த பெண்.

நொடியில் அழைப்பை ஏற்று காதுக்கு கொடுக்க, “ஹர்ஷூ நீங்க கேட்ட டீட்டயில்ஸ் கிடைச்சது. அவங்க அட்ரஸ் உங்களுக்கு வாட்ஸ் ஆப்ல அனுப்பிருக்கேன். எவ்வளவோ ட்ரை பண்ணியும் பையனோட போட்டோ எதுவும் கிடைக்கலை...” இன்னும் சில விஷயங்களை கூறிவிட்டு அந்த பெண் தொடர்பை துண்டித்ததும் அடுத்து என்ன செய்யவேண்டுமென்று திட்டமிட ஆரம்பித்தாள்.

அதில் முதல் வேலையாக அந்த அட்ரெஸ்க்கு சென்று பார்ப்போமென தனது கேமராவோடு கிளம்பிவிட்டாள். கீழே வந்து அன்னாம்மாவிடம் தான் வெளியே செல்வதாக மாமாவிடம் சொல்லிடுமாறு தகவலை கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் கூட தனது ஸ்கூட்டியில் பறந்துவிட்டாள்.

நேராக அவள் சென்ற பங்களாவின் பிரம்மாண்டத்திலும் அதன் பாதுகாப்பையும் பார்த்து கொஞ்சம் அசந்துதான் போனாள். ஆனால் இதையெல்லாம் பார்த்து திகைத்து நின்றால் அவள் ஹர்ஷூ அல்லவே.

கொஞ்ச நேரம் அங்குமிங்குமாக நோட்டம்விட்டு அங்கே காவலுக்கு நின்றவனிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள். பேசுவதற்கு ஹர்ஷூவிற்கா சொல்லித்தரவேண்டும்?

அவ்வீட்டில் யார் யார் இருக்கின்றனர் என்பதில் ஆரம்பித்து இப்போது நடக்கவிருக்கும் திருமணம் வரை ஓரளவிற்கு தனக்கு தேவையான விஷயங்களை சேகரித்ததும் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் போது வேலை பார்ப்பவன் போகிற போக்கில் சொல்லியதை வைத்து இந்நேரம் மாப்பிள்ளை வழக்கமாக செல்லும் ஹோட்டலுக்கு சென்று சேர்ந்தாள்.

மாலை மயங்கி இருள் கவிழ ஆரம்பித்திருந்த நேரத்தில் ஷக்தியிடம் எந்தவிதமான தகவலையும் கூறாமல் இங்கு வந்ததை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் தன் தேடலில் தீவிரமாக இருந்தாள்.

அங்கிருக்கும் பணியாளரை அழைத்து பெயர் தெரியாத அவனின் தந்தை பெயரை கூறி கேட்க முதலில் மறுத்தவன் ஹர்ஷூ கொடுத்த பணத்தில் அவள் தேடி வந்தவன் ஹோட்டலின் பின்புறம் இருக்கும் அறையின் எண்ணை கொடுத்துவிட்டு தன்னை இதில் மாட்டிவிட்டுவிடவேண்டாம் என கூறி சென்றுவிட்டான்.

“இன்னைக்கு மாட்டினடா மாப்பிள்ளை...” என சூளுரைத்துகொண்டவள் தன் ஹேண்டி கேமராவினை எடுத்து,
“ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு உனக்கு செம விருந்துதான் போ. பெருமைப்பட்டுக்கோ செல்லம். எல்லாமே என்னாலதான்...” என அதற்கும் ஒரு அழுத்தமான முத்தத்தை பதித்துவிட்டு முகத்தை நொடியில் தீவிரமாக்கி அந்த அறையை தேடி பின்புறமாக சென்றாள்.
அவள் செல்லும் போதே பார்த்துவிட்ட சேகர் என்னவென புரியாமல் அவளை பின்தொடர்ந்து சென்றான்.

ஹர்ஷூ அறையின் பின்பக்கத்தை பார்த்ததும், “இதுக்குன்னே இங்க ஒரு ஜன்னல் வச்சிருக்கனுமே?...” என யோசித்துக்கொண்டே ஆராய அவள் எதிர்பார்த்ததுபோல அதுவும் இருந்தது அங்கே.

“இந்தா இருக்குல அந்த ஜன்னல். அதெப்படி ஹர்ஷூவோட கால்குலேஷன் மிஸ் ஆகும்?...” என தன்னையே சில்லாகித்துகொண்டே சத்தம் எழுப்பாமல் அந்த ஜன்னலை திறக்க அது முடியாமல் போனது.

முதலில் குழம்பியவள் பின் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்பதுபோல ஜன்னலை உற்றுப்பார்க்க திறப்பதற்கான வழி புலப்பட்டது. அது தாழ் போடப்படாமல் வெறுமனே மூலையில் மட்டும் துருப்பிடித்திருந்ததால் சற்று இறுகி அடைபட்டிருந்தது. கொஞ்சம் அழுத்தி திறக்கவும் திறந்துகொண்டது.

மெதுவாக ஸ்க்ரீனை விலக்கி கேமராவை மட்டும் கொஞ்சமாக நுழைத்து இவள் வெளியே பார்க்கும் போது அவனது முகம் முதலில் தெரியவில்லை. அந்த மாப்பிள்ளைக்காரனோ இன்னொரு பெண்ணின் நெருக்கத்தில் தன்னை மறந்து நின்றிருந்தான்.

ஹர்ஷூவோ இதை பார்த்து கொந்தளித்து கொண்டிருந்தாள். இப்போதைக்கு திருமணத்தை நிறுத்த தனக்கான ஆதாரம் கிடைக்கட்டும். பின் இவனை ஒரு வழியாக்கலாம் என நினைக்கும் போதே அவன் அப்பெண்ணின் கூந்தலிலிருந்து கொஞ்சாமாக முகத்தை திருப்ப ஹர்ஷூ அதிர்ந்து போனாள்.
 
Top