Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 1

Advertisement

Sameera?

Well-known member
Member
வணக்கம் மக்களே...!!!!

என்னை சிலருக்கு தெரியலாம்..தெரியவில்லை என்றாலும் இக்கதை மூலம் அறிமுகமாகி கொள்வோம் மக்களே..!!

போடிக்கான ‘மனைத்தக்க மாண்புடையாள்..’ கதையை பற்றிய அறிமுகம் போல் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்..படித்து உங்கள் கருத்துகளை சொல்லுங்க மக்களே..i am eagerly waiting ❤❤❤❤

********
அத்தியாயம் 1



உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமை கண்கள் தூங்காது


தலைவா என் தலைவா அகமரீவீரோ.. அருள்புரிவீரோ..

வாரம் தோறும் அழகின் பாரம்

கூடும் கூடும் குறையாது

உறவே என் உறவே




கீழ்வானம் சிவக்க ஆதவன் சோம்பலாய் தன் கதிர்களை புவியில் விரிக்க தொடங்கிய அதிகாலைப் பொழுதில் குயில்களின் இன்னிசைக்கு இணையாய் தன் தேன்குரலில் இப்பாடலை ஹம் செய்தப்படி சமையலறையில் வேலை செய்துக்கொண்டிருந்தாள் வெண்பா.



உதடுகள் பாடலோடு ஒன்றினாலும் அடுப்பில் ஒரு பக்கம் டீ கொதித்துக் கொண்டிருக்க மறுபக்கம் சாம்பார் தயாராக அதே சமயம் இட்லி ஊத்த பாத்திரத்தை எடுத்து கழுவியவள் மனமோ மதிய உணவிற்கு தொட்டுக்கை என்ன செய்யலாம் என்ற சிந்தனையில்.இப்படியாக அனைத்திலும் அவள் கவனம் இருந்தாலும் ஒரு பரபரப்போ பதற்றமோ இன்றி நிதானமாய் வேலை செய்யும் பாங்கு வெண்பாவிற்கே உரிய தனித்துவம்..!

சமையலில் மட்டும் அல்ல..எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் அப்படி தான்..செய்யும் வேலையை இரசித்து நிதானமாய் அதே சமயம் நேர்த்தியாகவும் செய்வதில் திறமைசாலி!!



அப்பொழுது வாசலில் நிழல் ஆடவும் நிமிர்ந்து பார்க்க முகத்தை அப்பாவியாய் வைத்துக்கொண்டு நல்ல பிள்ளையாய்,

"குட் மார்னிங் அண்ணி.." என்றபடி நின்றிருந்தாள் உதயா.ப்ளூ ஜெகின்ஸிற்குப் பொறுத்தமான வெள்ளை நிற டாப்ஸ் அவளின் நிறத்திற்கு அழகாய் இருக்க நெற்றியில் திருநீரையும் அதற்கு கீழ் கோடாய் குங்குமமும் இட்டு முகத்தை அக்மார்க் அப்பாவிப் போல வைத்து நின்றாள்.



அவளை ஆச்சரியமாய் பார்த்த வெண்பா அவளை தாண்டி பின்னால் சுவரில் தொங்கிய கடிக்காரத்தை பார்த்துவிட்டு,



"என்ன அதிசயம்..என்ன அதிசயம்..அலாரமே கத்தி கத்தி டயர்ட் ஆனாலும் அசராமல் தூங்குற புள்ள இன்னைக்கு ஊருக்கு முன்னாடி எழுந்து வந்திருக்கு..அதுவும் குளிச்சு சாமி கும்பிட்டு பக்திமயமாய்..இந்த எட்டாவது அதிசயம் நடக்க காரணம் என்னவோ.."



என்றபடி கண்களை சுருக்கி சந்தேகமாய் பார்க்க மான்விழியை உருட்டி இமைகளை படபடவென தட்டியபடி,



"மெச்சூரிட்டி வந்திடுச்சு அண்ணி.."

என்றாள் அதே பவ்வியத்தோடு..



"அது ஏன் திடீருனு வந்துச்சு.."



"நீங்க தானே அண்ணி சொல்லுவீங்க..படிப்பு முடிய போது..இன்னும் நீ சின்ன புள்ள இல்ல...பெரியவளாட்டம் நடந்துக்க..பொறுப்பா இருனு...அதான் இந்த நியூ இயர் ரிசொல்யூஷனாய் திருந்திட்டேன்"

என்றவள் புறம் பார்வையை திருப்பாமல் வேலையில் கவனமாய் இருந்தாலும்,



"ஓஓ அப்புடி...ம்ம்ம் நல்லது நல்லது..."

என்று நக்கலாய் தலையாட்டிய வெண்பாவிற்கு நாத்தனார் எதற்கு அடிப்போடுகிறாள் என்று தெரியும்.



மேலே எதுவும் கேட்காமல் வெண்பா தன் போக்கில் வேலையை தொடர ஏதோ கேட்க வருவதும் பின் தயங்கி நிற்பதுமாய் தடுமாறிய உதயா இறுதியில்,



"அண்ணி நேத்து ஒன்னு கேட்டேனே.."

என்று இழுக்க,



"நீ ஒரு நாளைக்கு ஓராயிரம் விசயம் கேட்ப..அதுல எத கேட்கற.."



"அதான்..ஷார்ட் ஃப்லீம் பத்தி..."

என்று அவள் கூறி முடிக்கும்முன்,



"நானும் நேத்தே சொல்லிட்டேன் உதயா..நமக்கு அதெல்லாம் சரிப்படாது..அந்த நினைப்பையே விட்று.."



என்று கறாராய் சொல்ல, "அண்ணீ.." என்று சிணுங்கியவள்



"ப்ளீஸ் அண்ணி.."

என்று கெஞ்ச,



"உனக்கு ஏண்டி இந்த திடீர் ஆசை..எம்.சி.ஏ படிக்கிற பொண்ணுக்கு எங்கேந்து இந்த நடிக்கிற ஆசை வந்துச்சு..இப்போ என்ன சினிமால ஹீரோயின் ஆகணுமா.."

என்று சாம்பார் கிண்டிய கரண்டியை எடுத்து அவள் புறம் அசைத்து வெண்பா கேட்க அதனை வாங்கி வைத்தவள்,



"அய்யோ அண்ணி அந்த ஆசை எல்லாம் இல்ல..ஜெஸ்ட் இந்த ஒரே ஒரு படம் தான்..நானும் ஃபஸ்ட் வேணானு தான் சொன்னேன்..ஸ்டோரிலைன் அப்புறம் அவங்க க்ரூ பத்தி தெரிஞ்சதும் எனக்கும் ஆசையா இருக்கு அண்ணி..ஆசிக் இல்ல அவன் தான் ஹீரோ..அவன் கேட்டதால தான் நானும் ஒத்துக்கிட்டேன்..ஒரேயொரு மூவி அண்ணி.." என்றாள்.



"அந்த ஆசிக் கிளப்பிவிட்டது தானா..நாள பின்ன அண்ணி மன்னின்னு வரட்டும்..புடிச்சு வாங்கி விடுறேன்.."



"அவனை என்னவேணாலும் சொல்லிக்கோங்க நோ ப்ராபளம்..ஆனால் இதுக்கு மட்டும் அலோவ் பண்ணுங்க அண்ணி.."



"நான் அலோவ் பண்ணி என்னடி ஆகப்போது..உங்க அப்பா,அண்ணனுங்க ஒத்துகணுமே..நீ பேஸ்புக்கில் ஃபோட்டோ அப்லோட் பண்ணாலே உன் பெரியண்ணனும் தயாவும் அர நாளைக்கு உட்கார வைச்சு அட்வெய்ஸ் பண்ணுவாங்க..இதுல மாமாவை பத்தி சொல்லவே வேணாம்..அவருக்கு இந்த சோசியல் மீடியாவில் இருக்க அவ்வளவா ஆர்வமில்ல..இல்லேனா உன்னை அந்த பக்கமே போக விடமாட்டார்..இப்படியா பட்ட மாயாண்டி குடும்பம் நம்மிது..இதில் ஸபோர்ட் பண்ணனும்னா நானும் ஜெகனும் தான் கொடி புடிக்கணும்.."



ஆம்..அவளுக்கு ஒன்றல்ல இரண்டல்ல மூன்று அண்ணன்கள்.

மதிவாணன்,தயாளன்,ஜெகனை அடுத்து கடைக்குட்டி சிங்கபெண்தான் நம் உதயா.மூத்தவன் மதிவாணனின் மனைவி வெண்பா.

மூன்று அண்ணன்மார்களால் பொத்தி பொத்தி பூப்போல் வளர்க்கப்பட்டாள் என்று சொல்ல ஆசை தான்.ஆனால் அவள் மூன்று மகன்களுக்கு அடுத்து நான்காவதாய் ஒரு மகன்போல் தான் வளர்ந்தாள்.மென்மை..வென்மையெல்லாம் கிடையாது.நாள்தோறும் அராத்து அடிதடி தான்.விளையாட்டில் கூட பெண்ப்பிள்ளை விளையாட்டுகளை ஒதுக்கி விட்டு அண்ணன்களோடு தொற்றிக் கொண்டு அவர்கள் விளையாடும் விளையாட்டுகளில் தான் ஆர்வம் காட்டுவாள்.பிறகு உதயா பெரியமனுஷி ஆனதும் அவள் தாய் நாகஜோதி தான் அதட்டி உருட்டி அவர்களோடு திரியாமல் நிறுத்தி வைத்தார்.ஆதலால் இயற்கையிலே மிகவும் துணிச்சலான பெண்.எதர்க்கும் அஞ்சாமல் செயல்படுவதால் பிரச்சனைகளை வஞ்சனை இன்றி அவள் இழுத்துவர,

எந்த வம்பு தும்பிலும் மாட்டிக்கொள்ளாமல் அவளை காப்பதற்கே பல விஷயங்களில் அவளிடம் கண்டிப்பாக தான் இருப்பர்.அதுவும் நாகஜோதியின் இறப்பிற்கு பின் இன்னும் அதிக பொறுப்பாய் அவளிடம் நடந்துக்கொள்வர்.



"அதை தான் நானும் கேட்கறேன்..நீங்க எனக்கு ஸபோர்டா நின்னால் போதும்..மிச்ச எல்லாரையும் ஒத்துக்க வைச்சிடலாம்.."



"நான் இந்த ஆட்டத்துக்கு வரல ஆள விடும்மா.."

என்று அவள் சொன்னதும் வராத கண்ணீரை விரலால் குத்தி வரவைத்து,

"போங்க அண்ணி..எங்க அம்மா இருந்திருந்தால் இப்படி விட்று வாங்களா...இதே எடத்துல என் அம்மா மட்டும் இருந்திருக்கணும்.."



என்னும்போதே, "உன்னை ஓட விட்டு அடிச்சிருப்பாங்க..."

என்று பட்டென்று பதில் வர, 'இன்னும் பயிற்சிவேண்டுமோ..' என்று புலிகேசி பாணியில் நினைத்துக் கொண்டவள் வெளியே அசடு வழிய, "அண்ணி.." என்று சிணுங்கினாள்.அந்நேரம்,



"ஆஹா நாத்தனாரே..என்ன கிட்சன் பக்கம் எல்லாம் வந்திருக்கீங்க..அதுவும் இவ்வளவு காலைல எழுந்து..தூக்கத்துல தெரியாம நடந்து வந்துட்டீங்களோ.."

என்றபடி நம் கதையில் அடுத்து நுழைகிறாள் லாவண்யா அவ்வீட்டின் இளைய மருமகள்.



"ஆமா..ஆமா..நாங்க மணிக்கணக்கா தூங்குவோம்..இவங்க தான் சூரியனையே எழுப்பி விடுவாங்க..போவீங்களா அங்குட்டு.."



என்று உதயா நொடித்துக் கொள்ள,

"பாருங்க அக்கா..அண்ணினு கொஞ்சமாவது மதிக்கிறாளா.."

என்றாள் வெண்பாவிடம் குறையாய்..



"ஹலோ..நீங்க அண்ணினா நான் நாத்தனார் ஆக்கும்..நாத்தனார் ரவுசு தெரியும்ல.."

என்றவள்,



"ஏன் அண்ணியாரே..எப்போவாது பெரிய அண்ணி மாதிரி எல்லா வேலையும் இழுத்து போட்டு செஞ்சிருக்கீங்களா..??சிக்குச்சு அடிமைனு உங்க வேலையும் சேத்து அண்ணி தலைல கட்டிட்டு ஆளு எஸ் ஆகிடுவீங்க..அப்புறம் உங்களை சாப்புடுற நேரத்தில் தான் பாக்க முடியும்..இதுல நானும் ஆபிஸ் போறேன்..நானும் ஆபிஸ் போறேன்னு தம்பட்டம் தான் பெருசா இருக்கே தவிற அங்கையும் ஓபி தான் அடிக்கிறீங்கன்னு உளவுதுறை சொல்லுது..உங்க மாமியார்..அதான் என்ர அம்மா நாகஜோதி மட்டும் இருந்து இதெல்லாம் பாத்திருக்கோணும் அவ்வளவு தான் வாயாலே வறுத்து எடுத்திருப்பாங்க..இதுல நீங்க என்னை கலாய்கிறீங்க.."



என்று அவள் புட்டு புட்டு வைக்க திருதிருவென முழித்த லாவண்யா, 'இவளுட்ட வாயே விட்றுக்க கூடாதோ..'

என்று எண்ணினாள்.

உண்மையிலே லாவண்யா அப்படி தான்.பிறவி சோம்பேறி.அவள் பிறந்த வீட்டிலும் செல்லமாய் குழந்தையாகவே வளர்த்துவிட திருமணமாகி ஒரு வருடமான பின்னும் அவளுக்கு அந்த பொறுப்பு மட்டும் வரவில்லை.



முகத்தை பாவமாய் வைத்து வெண்பாவை பார்த்தாளே அன்றி உதயா மீது கோபமோ எரிச்சலோ வரவில்லை.அதே போல் அவளை பதிலுக்கு வார நினைத்த உதயா மனதிலும் வன்மம் இல்லை.ஏனெனில் அவர்கள் பந்தம் வாயளவில் தான் நாத்தனார்-அண்ணி உறவே அன்றி மனதளவில் அக்கா-தங்கை போல் தான் நினைத்தனர்.



"காலங்காத்தாலே ஏன் பஞ்சாயத்தை கூட்டுறீங்க..இந்தா லாவண்யா உனக்கும் தயாக்கும் டீ எடுத்துட்டுப் போ...சாப்பாடு கட்டிட்டேன்..உருளகிழங்கு எடுத்து வைக்கிறேன்..வந்து பொரியல் மட்டும் பண்ணு..நான் வந்து எல்லாருக்கும் இட்லி ஊத்துறேன்..அப்புறம் உதயா, மாமா முழிச்சிட்டார்ப்போல அவருக்கு இதை கொடுத்துடு..அப்படியே ஜெகனை எழுப்பி விடு..."

என்று அடுத்தடுத்து செய்ய வேண்டியவையை பட்டியலிட்டு அவர்களை அனுப்பி வைத்தாள்.



தந்தை ஆழிக்கண்ணனை தேடி வந்த உதயா அவர் திண்ணையில் அமர்ந்திருக்கவும்,



"ப்பா..குட் மார்னிங்..என்ன எப்பவும் காலைலே உங்க ப்ரெண்ட்ஸோட வாக்கிங் கிளம்பிடுவீங்க..இன்னைக்கு இங்க உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க..என்ன மம்மியோட கனவுல டூயர்ட் ஆ.."

என்று கண்சிமிட்டலோடு கேட்டவள் அவருக்கு டீயை கொடுத்துவிட்டு அருகிலே அமர்ந்துக்கொண்டாள்.



"ஏய்..வாலு.." என்று அவள் தலையில் மெல்லமாய் கொட்டிய அழிக்கண்ணன்,

"காலைல எழுந்ததுமே முழங்கால்லேந்து ஒரே வலிடா..நடக்க முடியல அதான்.."

என்று அவர் கூற, "ரொம்ப வலிக்குதா ப்பா..இருங்க உங்க மூட்டு வலி தைலம் எடுத்துட்டு வரேன்.."

என்று அவள் எழும்ப,



"நான் தேய்சுகிறேன் கண்ணு..நீ போய் காலேஜ் கிளம்பு..நேரம் ஆகுதுல.."



"என்ன ஒரு அஞ்சு நிமிஷம் ஆகுமா..இருங்கப்பா.."

என்றுவிட்டு உள்ளே சென்றவள் தைலம் எடுத்து வந்து அதனை அவருக்கு தேய்த்து மெல்ல அவர் காலை பிடித்து விட்டாள்.



ஆழிக்கண்ணன் ஓய்வுப்பெற்ற பள்ளி கணித ஆசிரியர்.இவர் பெயரை கேட்டாலே மாணவர்கள் பயந்து கப்சிப்பென்று ஆகுமளவு கடுமையான மனிதராய் இருந்தவர் மனைவி மறைவிற்கு பின் முற்றிலும் மாறிப்போனார்.நாகஜோதியின் இறப்பு அவ்வீட்டில் உள்ள அனைவரையும் ஒவ்வொரு விதத்தில் மாற்றி இருக்க கோபக்காரரான இவரை சாந்தமாய் மாற்றியது.இருந்தும் சில நேரங்களில் பழைய வாத்தியார் எட்டி பார்ப்பார்.



லாவண்யா,உதயா சென்றதும் தன்னறைக்கு வந்த வெண்பா அங்கே மதிவாணனின் கைவளைவில் அமைதியாய் தூங்கிக்கொண்டிருக்கும் தன் ஒன்பது வயது மகள் நிலாவை கண்டு புன்னகைப் பூத்தாள்.



இரவு உதயாவுடன் உறங்கி காலையில் முழித்ததும் இங்கு வந்து தந்தையின் தோளில் சாய்ந்துக் குட்டித் தூக்கம் போடுவது அன்றாட வழக்கமாய் கொண்டுள்ள மகளை எண்ணி நகைப்போடு

கையில் இருந்த ட்றேவை மேசைமீது வைத்துவிட்டு மதியை தாண்டி நிலாவை,



"நிலா..நிலாக்குட்டி..எழுந்துக்கோங்க.."

என்று தட்டி எழுப்ப மகள் விழித்தாளோ இல்லையோ அருகில் படுத்திருந்த கணவன் மதியின் உறக்கம் கலைந்தது.



விழிப்புத்தட்டிய நொடி அவன் உணர்ந்தது மனைவியின் அருகாமையை தான்.கனவோ என்று வியந்த மதிவாணனிற்கு காலைப்பொழுது இதனைவிட அழகாய் அமைய வாய்ப்பே இல்லை.



வெகு நாட்களுக்கு பிறகு மிக அருகில் கிடைத்த மனைவியின் பிரத்யோகவாசமும் அருகாமையும் மதிவாணனின் மனதை மயக்கினாலும் கண்களை மட்டும் திறக்கவில்லை.பின்னே தான் விழித்தது தெரிந்தால் பத்தடி தள்ளி சென்றுவிடுவாள் என்று அறிந்தவன் ஆகிற்றே..!!



"ம்மா..ஃபை மினிட்ஸ் ம்மா.."

இன்னும் மதியின் தோளில் முகத்தை புதைத்து நிலா செல்லமாய் கெஞ்ச,



"அந்த ஃபை மினிட்ஸ்..ஃபிஃப்டீ மினிட்ஸ் ஆனாலும் முடியாதுனு தெரியும்..போதும் தூங்கினது.."



"என்ன மட்டும் திட்ற..அப்பாவும் தானே தூங்கிறாரு..அவர முதல்ல எழுப்பு போ.."



என்று தூக்க கலக்கத்தோடே கூறிய மகளின் வார்த்தையில் சிரிப்பு வந்தது.அதற்கு வெண்பா என்ன பதில் சொல்வாள் என்று ஆர்வமாய் காதை தீட்ட அவளோ,



"எழுந்திரு..நிலா..இப்ப ஸ்கூல் போகபோறீயா..இல்லையா.."



என்று சொல்லவும் புஸ்ஸென்று ஆனது.

'என்னை பத்தி பேச்சுக்கூட எடுக்கமாட்டாளா..' என்று மனம் சுணங்கியது.



வெண்பாவின் தொடர் முயற்சிக்குப்பின் ஒருவழியாய் சோம்பலாய் நிலா எழுந்தமர்ந்ததும் அதன்பின் இருவரும் அறையை விட்டு வெளியேறுவதும் கண்களை திறவாமலே கவனித்த மதி கதவு மூடும் சத்தம் கேட்டதும் தான் விழி மலர்ந்தான்.வழக்கம் போல் மேசையின் மீது அவனுக்கான டீ காத்துக்கிடக்க அதனை கணடதும் பெருமூச்சு விட்டான்.



சில வருடங்களுக்குமுன் காதலோடும் அந்நோன்யத்தோடும் அவர்கள் அனுபவித்து வாழ்ந்த அழகிய நினைவுகள் மனதில் படமாய் விரிய அவை மீண்டும் கிட்டாதா என்று ஒருமனம் ஏங்கினாலும் அதற்கு இனி வாய்ப்பில்லை என்ற நிதர்சனம் முகத்தில் அறைய தலையை கோதியப்படி எழுந்தவன் தனது அன்றாட வேலைகளை செய்ய தொடங்கினான்.



மதிவாணன்..வயது முப்பதி ஆறு என்றாலும் இன்னும் இரண்டு வயது கூட்டிக்காட்டுவதுப்போல் சற்று ஓய்ந்த தோற்றம்..வீட்டின் தலைமகனாய் பொறுப்பான பிள்ளையாய் தம்பிகளுக்கும் தங்கைக்கும் எடுத்துகாட்டாய் சிறுவயதில் இருந்தே இருப்பவன்..படித்து முடித்ததுமே நிட்சிட்டி என்று அழைக்கப்படும் அவர்கள் ஊரான திருப்பூரிலே புகழ்பெற்ற கார்மெண்ட் இண்டெஸ்ரி ஒன்றில் வேலையில் சேர்ந்து படிப்படியாய் உயர்ந்து இன்று அவர்கள் கிளையின் ஜி.எம் ஆக பணிப்புரிகிறான்.



அவன் அலுவலகத்திற்கு தயாராகி தங்கள் அறையில் இருந்து கீழே வந்தப்போது எல்லாருமே அவரவர் பணிகளுக்கு தயாராகி டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க மலர்ந்த முகத்தோடு அனைவருக்கும் காலை வணக்கம் கூறி அவர்களுடன் இணைந்துக் கொண்டான்.



அங்கிருந்தவர்களில் இன்னும் நமக்கு அறிமுகமாகாத இருவரையும் தெரிந்துக்கொள்வோம்..!!



தயாளன்- ஆழிக்கண்ணனின் இரண்டாவது மகன்..மென்பொருள் நிறுவனம் ஒன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவில் தொடங்கியது இன்று ஓரளவிற்கு வெற்றிப்பெற்று இயங்கி வருகிறது.இதில் தன் நிறுவனத்தில் பணிப்புரிந்த லாவண்யாவை விரும்பி மணந்துக் கொண்டான் என்பது குறிப்பிடத்தக்கது.



அடுத்தது ஜெகன்..சென்ற வருடம் தான் படிப்பை முடித்து தற்போது வி.ஐ.பியாக இருக்கும் நல்லவன்..வல்லவன் நாலும் தெரிந்தவன்.இவ்வளவு தான் இவர்கள் குடும்ப அறிமுகம்!!



உணவு பதார்த்தங்களை டேபிளில் எடுத்து வைத்துக் கொண்டிருந்த வெண்பாவின் ஊடே நடந்தபடி, "அண்ணி..சொல்லுங்க அண்ணி..ப்ளீஸ் அண்ணி.."

என்று உதயா கெஞ்ச,



"ஸ்ஸ்..பேசாம போய் சாப்பிட உட்கார்..போ.."

என்று வெண்பா விழியுருட்ட மிரட்டவும் வேறு வழியின்றி தொங்கிய முகத்தோடு சென்று அமர்ந்தாள்.

உணவை எடுத்து வைத்துவிட்டு நிலா அருகில் வந்து தானும் அமர்ந்த வெண்பா அவளுக்கு வேண்டியதை எடுத்து வைத்தப்படி தானும் சாப்பிட அமர்ந்தாள்.

அனைவரும் அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருக்க 'கேட்போமா..வேண்டாமா..' என்று தனக்குள்ளே விவாதமிட்டுக் கொண்டிருந்த உதயா கடைசியில் சொல்ல விழைந்த போது,



"ஜெகா..நேத்து இண்டெர்வியூ போனியே..என்னாச்சு..."

என்று மதிவாணன் நிமிர்ந்தும் பார்க்காமல் உணவில் கவனம் வைத்தபடி ஜெகனை கேட்க அனைவரின் கவனமும் ஜெகனிடம் திரும்பியது.

அண்ணியின் கைவண்ணத்தை இரசித்து ருசித்து உண்டுக்கொண்டிருந்த ஜெகன் அண்ணனின் கேள்வியில் வாயிற்கு கொண்டு சென்ற கை அந்தரத்தில் நிற்க அப்படியே முழித்தான்.



'நிம்மதியாய் சாப்பிட விடமாட்டாய்ங்களே..' என்று பாவமாய் அவன் பார்க்க

இங்கு உதயாவோ, 'போச்சு..இனி கண்டிப்பா பேச முடியாது..' என்று மானசீகமாய் தலையில் தட்டிக்கொண்டாள்.ஏனெனில் தற்போது ஒரு கலவரம் வெடிக்க வாய்ப்புள்ளது என்று தெரியும்..!



"சொல்லு ஜெகா..அண்ணன் கேட்கிறான்ல.."

என்ற ஆழிக்கண்ணனிற்கு மனதில்,



'இருப்பா..ஒரு காரணத்தை யோசிக்க வேண்டாமா..'

என்று கவுண்டர் கொடுத்தவன் மெல்ல,



"இல்லண்ணா..நேத்து இண்டர்வியூ கேன்சல் ஆகிடுச்சாம்..டேட் தள்ளி வைச்சிருக்காங்க.."



"எல்லாருக்குமா..இல்ல உனக்கு மட்டுமா...?"

என்று கேட்டவன் தொனியில் அவன் திருதிருவென விழிக்க நிமிர்ந்து அவனை முறைத்த மதி,



"பொய் சொல்ல வேற கத்துக்கிட்ட..!!! ஏண்டா இப்படி இருக்க நீ..அவனவன் வாய்ப்பு தேடி அலையறான்..உனக்கு எல்லாம் பண்ணி வைச்சா ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ண கசக்குதா...என் ஃப்ரெண்ட் அங்க தான் மேனெஜரா இருக்கான்..உன்னை நான் தான் சிபாரிசு செஞ்சேன்..அவன் கண்டிப்பா வேல கிடைக்கும்னு சொன்னான்..ஆனால் துரை இண்டர்வியூக்கூட அட்டென் பண்ணல..அப்படி எங்க போனீங்க.."



"அது வந்து ண்ணா.."

என்று இவன் இழுக்க அதற்குள் தயா,



"ஏண்டா இப்படி பண்ற..வெளியே வேலை பார்க்க பிடிக்காட்டி எங்க கம்பெனியில் வந்து ஜாயின் பண்ணிக்கனா அதுவும் கேட்க மாட்ற.."

என்றவனை,

'ம்க்கும்..எதுக்கு நீ ஓட்ற ஈயை சேர்ந்து ஓட்டவா..'

என்று மீண்டும் சலித்துக் கொண்டு காரணம் சொல்ல விழையும் போது,



“நான் சொல்லவா நேத்து உன் தலைவனோட படம் ரிலீஸ்..ஃபஸ்ட் டே ஃபஸ்ட் ஸோ பார்க்க வேண்டி இண்டர்வியூவ டீலில் விட்ட..கரெக்ட்டா..”

என்று கூர்மையாய் பார்த்தபடி மதி சொன்னதில் ஜெகன் உண்ட உணவு அவன் தொண்டையில் சிக்கியது.



‘அண்ணே எப்படி தான் எல்லாத்தையும் கண்டு பிடிக்குதோ..ஒருவேளை பின்னாடி ஆள் விட்டு பாக்குமோ..’

என்ற அவன் மைண்ட் வாய்ஸிற்கு,



“நான் ஏண்டா உன்ன ஃபாலோ பண்றேன்..நீ தான் ஸ்டெட்ஸ்ல ஊருக்கே போட்டு இருந்தியே..”



என்று அவன் பல்லை கடிக்க, ‘தட் மண்டமேல உள்ள கொண்டைய மறந்துட்டோமே மொமெண்ட்..’இல் அசடு வழிய



“மதி சொல்றது உண்மையாடா...”

என்று கேட்ட ஆழிக்கண்ணன் குரலிலும் கோபம் எட்டி பார்க்க,



‘ஐயையோ மீச டென்ஷன் ஆகுதே...’

என்று விழித்தான்.





அவ்வீட்டில் மதியும் தயாவும் ஒருவகை என்றால் ஜெகனும் உதயாவும் ஒருவகை..முதல் இரண்டும் பொறுப்பாய் இருக்க மற்ற இரண்டும் கூட்டு களவாணிகளாய் எதாவது அசட்டுதனம் செய்வதே அவர்கள் வேலை.

ஜெகனிற்கு வேலைக்கு செல்வதில் பிரச்சனை இல்லை.அவன் திறமைக்கு பல இடங்களில் வாய்ப்புகள் வந்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால் அவனை பொருத்தமட்டில் கிடைத்த வேலையை செய்வதைவிட பிடித்த பணியை செய்ய வேண்டும்..அதனாலே இதற்கும் முன் கிடைத்த இரண்டு வேலைகளிலும் சேர்ந்து மனம் ஒப்பாமல் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் விலகியிருந்தான்.சரி அப்படி என்ன வேலை செய்ய தான் சாருக்கு விருப்பம் என்று நீங்கள் கேட்டால் ஸாரி..அதற்கான விடையை தான் ஜெகனும் தேடிக்கொண்டிருக்கிறான். அவனுள் ஒரு தேடல் எப்பொழுதும் இருந்துக்கொண்டே இருக்க அதற்கு விடை கிடைக்கும்வரை அவன் தேடல் முடியாது.தற்போது அண்ணன் சொன்னதும் அவன் ஏற்கெனவே வேறு நிறுவனத்தில் பார்த்த அதே வேலை தான்.அதில் அவனுக்கு விருப்பம் இல்லை.இருந்தும் அண்ணன் வார்த்தையை மறுக்க முடியாமல் போவதாக ஒப்புக்கொண்டான்.



ஆழிக்கண்ணனின் கேள்விக்கு பதில் வெண்பாவிடம் இருந்து வந்தது.



“சாப்பிடுற நேரத்தில இந்த பேச்சு தேவைங்களா மாமா..விடுங்க..”

என்று அவள் அவரிடம் சொன்னாலும் செய்தி மதிக்கு தான் என்பது எல்லாருக்குமே தெரியும். உதவிக்கு வந்த வெண்பாவை ‘தெய்வமே..’ என்பதுப்போல் பார்த்தான் ஜெகன்.



“இப்படியே அவன காப்பாதிட்டே இருந்தால் அவன் உருபட்டுடுவான்..”
என்று மதி முணுமுணுக்க அதற்கு வெண்பாவிடம் எந்த எதிரொலியும் இல்லை.கர்மமே கண்ணாய் உண்டுக்கொண்டிருந்தாள்.



இப்படி எதிரெதிராய் இருக்கும் மூத்த மகனையும் மருமகளையும் கண்டு ‘இவர்கள் காலத்திற்கும் இப்படியே இருந்திடு வாங்களோ..’

என்று கவலைக்கொண்டார் ஆழிக்கண்ணன்.

இவர்களின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதால் அவருக்கு இன்னும் குற்றவுணர்வாய் இருந்தது.எத்தனையோ முறை அவர்களுக்குள் சமரசம் செய்ய முயன்றாலும் பலனில்லை. அனைத்திலும் பொறுப்பான மருமகளாய் நாகஜோதி மறைவிற்குபின் அவரிடத்தில் இருந்து அவ்வீட்டை தாங்கினாலும் வெண்பா இவ்விசயத்தில் இறங்கி வருவதாய் இல்லை.ஏன் யாருக்காகவும் தன்னை போலியாக கூட அவனோடு இணக்கமாய் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

‘இது தான்..நான் இப்படி தான்..’ என்று அவள் ஸ்திரமாய் இருக்க நிலாவில் இருந்து அனைவருக்குமே இவ்விசயம் பழகிவிட்டது.

இருந்தாலும் இப்பொழுதெல்லாம் இவர்கள் பற்றிய கவலையே ஆழிக்கண்ணன் மனதை நெருட ‘இந்த பிள்ளைங்க வாழ்க்கையை சீர்ப்படுத்திக்கொடு முருகா..’ என்று இறைவனையே நம்பியிருந்தார்.இவரது தொடர் வேண்டுதல்கள் இறைவனை எட்டியதோ விரைவில் விதி தன் சதிராட்டத்தை தொடங்க காத்திருந்தது.
 
Last edited:
உங்களுடைய "மனைத்தக்க
மாண்புடையாள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சமீரா டியர்
 
Last edited:
உங்களுடைய "மனைத்தக்க
மாண்புடையாள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சமீரா டியர்
நன்றி சிஸ் ??
 
Top