Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

POOKAL POOKUM THARUNAM - 16

Advertisement

SatyaSriram

Well-known member
Member
அத்தியாயம் 16

அவ்யுக்த் தன்னவளை காணும் ஆவலுடன், மனதில் உறுதியோடும், கண்களில் காதலோடும், நடையில் கம்பீரம் கலந்த வேகத்தோடும் உள்ளே சென்றான்.

பரத் கையை பிடித்து சென்று கொண்டிருந்த நளினாவின் மனதில், “சஹி அவ்யுக்தின் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்ற பிரார்த்தனையோடு உள்ளே சென்றாள்.

பரத்தின் மனதில், அவ்யுக்த்திற்கு தனிமை கொடுத்துவிட்டு, தானும் நளினாவுடன் தனிமையில் இனிமை காணப்போகும் மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றான்.

சஹியோ அங்கே, மனதில் பயத்துடன் கலந்த காதலோடும், இன்று கண்டிப்பாக தன் காதலை அவ்யுக்திடம் சொல்லும் உறுதியோடும் ஸ்விம்மிங்பூலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஹாய் சஹி” என்ற நளினாவின் குரலில் திரும்பி பார்த்த சஹி, அவ்யுக்த்தை பார்க்க துடித்த கண்களை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கி நளினாவை பார்த்து “ஹே பர்த்டே பேபி, ஹாப்பி பர்த்டே டியர்” என்றபடியே கையிலிருந்த கிப்ட் பார்சலை அவளிடம் கொடுத்தாள்.

நளினாவின் குரலில் திரும்பிப்பார்த்த தியாவை பார்த்து பிரமித்து அப்படியே நின்று விட்டான். வெள்ளை உடையில் தேவதை போலிருந்த சஹியை பார்த்து மயங்கினான்.

அவ்யுக்த்தை சாஹித்யாவிற்கு அறிமுக படுத்தும் பொருட்டு அவனை தேடிய பரத் பின்னால் திரும்பி பார்த்தான்.சஹியை பார்த்து மயங்கி இருந்த இடத்துலேயே நிற்கும் அவ்யுக்தின் அருகில் சென்று “ஓ! இதுக்கு பேர் தான் அளகுல(அழகு) மயங்கறதா?” என்று திரைப்பட நடிகர் வடிவேலு பாணியில் கேட்டான்.

“டேய் பரத், உனக்கு ஓனா டயலாக் எதுவும் வராதா?” என்றான் சிறிது கோபத்துடன்.

“டேய் நீயாவது ரொம்ப உருகாம ஒரு கெத்தா காதல சொல்லுவன்னு பார்த்தா.. சஹிய பார்த்ததுமே இப்படி உருகற.. அதான் டா உன்னை கிண்டல் செஞ்சேன்.”

“நான் ஏன்டா உருக கூடாது?”

பரத் சிரித்துக்கொண்டே,“அது இல்ல டா இந்த பொண்ணுங்க எல்லாம் எப்படி கெத்தா இருக்காங்க. நாம தான் டா உருகி உருகி அப்படியே கரைஞ்சு போயிடறோம்..எப்பவும் நாம தான் ரொம்ப வழிஞ்சு ...கெஞ்சி.. கொஞ்சின்னு செஞ்சுட்டு இருக்கோம்..நீயாவது அந்த பொண்ணுங்க மாதிரி ஒரு கெத்தா இருப்பேன்னு நினைச்சேன்... கௌத்திட்டியேடா .” என்றான்.

பரத்துடன் சேர்ந்து சிரித்தபடியே “அப்படியாடா இந்த நளினா எப்படி? நான் வேணும்னா அவ கிட்டயே கேட்டு சொல்லவா?” என்றான்.

“டேய் அவ ஏற்கனவே அடிக்கடி மலை ஏறிடுவா.. இதுல நீ வேற இதை சொன்னா அவ்ளோதான்.. இதெல்லாம் நமக்குள்ளேயே இருக்கட்டும்...நாம எப்பவும் போல பொண்ணுங்க கிட்ட கெஞ்சி கொஞ்சி வழிஞ்சு கிட்டே இருக்கலாம்டா... அது தான்டா நம்மள மாதிரி வீரமான ஆம்பளைங்களுக்கு அழகு.” ஹா!ஹா! என்றான் சிரித்துக்கொண்டே.

“ஹா!ஹா!ஹா! உனக்கு ரொம்ப தான் வீரம் பரத்.”

“சரி சரி வாடா ரொம்ப சிரிக்காத..உன்னோட வீரத்தை நான் பார்க்க தான போறேன்.” என்றபடியே நளினாவை நோக்கி சென்றான்.

அவர்கள் அருகே சென்றதும் நளினாவின் கையில் இருந்த கிப்டை பார்த்ததும் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தான் அவ்யுக்த்.ஏனென்றால் அவன் கொடுத்த கிப்டும் இந்த கிப்டும் ஒன்றாக இருந்தது தான்.

அவ்யுக்த் மனதில் “ஒருவேளை நான் கொடுத்த கிப்டை தியாவிடம் நளினா காட்டியிருப்பாளோ” என்று நினைத்தான்.

நளினாவின் அடுத்த கையிலிருந்த கிப்ட் பக் ஓபன் செய்யாமலே இருந்தது.அதை கவனித்த அவ்யுக்த், “இது தான் நான் கொடுத்தது இதை இன்னும் நளினா பிரிக்கவில்லை அப்படியென்றால் இந்த கிப்டை தியா தான் கொடுத்திருக்க வேண்டும்.. இருவரது ரசனையும் நன்றாக தான் ஒத்து போகிறது.” என்று நினைத்துக்கொண்டான்.

“என்ன நளினா கிப்ட் பிடிச்சிருக்கா?” என்றான் வேண்டும்மென்றே.

“அண்ணா இது தான் சஹி, இந்த கிப்ட் அவ கொடுத்தது தான்.. நல்லா இருக்கா?” என்றபடியே கிப்டை நீட்டினாள்.

“ம்ம் நல்லா இருக்கும்மா பட் இது நான் வாங்கிட்டு வந்ததும்மா ..நீ கிப்ட் பக் மாத்தி பிரிச்சுட்டன்னு நினைக்கிறேன்” என்றபடியே சாஹித்யாவை பார்த்து “ஹலோ!சாஹித்யா “என்று சொல்லிவிட்டு கைகுலுக்கும் பொருட்டு சஹியின் முன்னால் கையை நீட்டினான்.

கைகளை நீட்டிய படியே நின்றிருந்தவனையே கண்கள் இமைக்காமல் பார்த்தாள் சஹி. அவ்யுக்த் அருகில் வந்தவுடனேயே தன்னிலை இழந்த சஹி அவன் பேசிய ஒரு வார்த்தையை கூட கவனிக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

இதை எதுவுமே கவனிக்காமல் தன்னுடைய கையிலிருந்த கிப்டை ஓபன் செய்து கொண்டே “அண்ணா, நாங்க எங்களுக்கு கொடுத்துக்கிற கிப்ட் எல்லாம் பக் செய்யவே மாட்டாம்.. இது சஹி கொடுத்த கிப்ட் தான்.” என்றாள் நளினா.
கிப்டை பிரித்த நளினா, “ வாவ்! சஹி இங்க பாரு” என்று கிட்ட தட்ட அலறினாள்.

நளினாவின் குரலில் தன்னிலை மீண்ட சஹி, “என்னடி ஏன் இப்படி கத்தற?” என்றாள்.
அப்பொழுதும் கை நீட்டியபடியே இருந்த அவ்யுக்த்தை பார்த்து லேசாக புன்னகைத்து விட்டு அவனின் கையை பற்றினாள் சஹி.

“இங்க பாருடி நீயும் அண்ணாவும் ஒரே மாதிரியே கிப்ட் கொடுத்திருக்கீங்க” என்றபடியே இரண்டு கிப்டையும் காண்பித்தாள் நளினா.அது ஒரு லேடீஸ் வாட்ச்.கற்கள் பதித்து பார்க்க மிக அழகாக இருந்தது,இருவரும் ஒரே நிறத்திலும் ஒரே டிசைனிலும் கொடுத்திருந்தனர்.

“டேய் அவ்யுக்த்,என்னடா ரெண்டு பேரும் சொல்லிவச்சு வாங்கிட்டு வந்தீங்களா? என்றான் பரத்.

தியாவின் கைகளின் மென்மையை ரசித்துக்கொண்டிருந்த அவ்யுக்த் மனமில்லாமல் அவள் கையிலிருந்து தன் கையை எடுத்தான்.

“இல்லை” என்று இருவருமே ஆரம்பித்து பின் நிறுத்தி, தியா சொல்லட்டும் என்று அவ்யுக்தும், அவ்யுக்த் சொல்லட்டும் என்று சாஹித்யாவும் அமைதியாய் இருந்தனர்.

“அய்யோ! நீங்க ரெண்டு பேரும் சொல்லி முடிக்கறதுக்குள்ள சிறுகுடலை பெருங்குடல் தின்னுடும் போல இருக்கு, நீங்க பதிலே சொல்லவேண்டாம் நாம இப்போ சாப்பிட போலாம்.” என்றான் பரத்.

அவனை பார்த்து முறைத்த அவ்யுக்த் மனதில் “டேய் நேத்து உன் கிட்ட என்ன சொன்னேன் நீ இப்படி பண்ற?மவனே இரு நீ பேசினது எல்லாம் நளினா கிட்ட சொல்லி மாட்டி விடறேன்.” என்றுபடியே நேற்று பரத்திடம் பேசியதை நினைத்து பார்க்க தொடங்கினான்.

“பிரதர் உடனே பிளாஷ் பாக்குக்கு போய்டாதீங்க, அதுக்கு இன்னும் டைம் இருக்கு..நம்ம வியுவர்ஸ் எல்லாம் வெயிட் பண்ணுவாங்க.. இப்போ சாப்பிட போலாம்.

“டேய் உன்னை” என்ற வார்த்தைகளை பற்களுக்கிடையே கடித்து துப்பினான் அவ்யுக்த்.

அனைவரும் ரெஸ்டாரன்ட் உள்ளே நுழைந்தனர்.ரிசர்வ் செய்த டேபிள் அருகே சென்ற பரத், “சஹி, சாரிமா, இன்னிக்கு நான் ரெண்டு டேபிள் ரிசர்வ் பண்ணி இருக்கேன்..நளினா கூட தனியா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்ங்கற ஐடியால தான் இப்படி செஞ்சேன்..ப்ளீஸ் நீயும் அவ்யுக்தும் சேர்ந்து சாப்பிடறதுல ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையேம்மா?டேய் அவ்யுக்த் உனக்கும் ஒண்ணும் பிரச்சினை இல்லையே?”

இருவருமே மனதில் பரத்திற்கு நன்றி சொல்லிவிட்டு “நோ ப்ராப்ளம்” என்றனர் ஒரே குரலில்.

அவ்யுக்த் மனதில் “நண்பேண்டா “ என்று சொல்லிக்கொண்டான் “பரதா நீ நளினாவோட சேர்ந்ததுலேர்ந்தே கொஞ்சம் புத்திசாலியா மாறி இருக்க டா..கொஞ்சமே கொஞ்சம் தான்” என்று அழுத்தி சொல்லியபடியே சிரித்துக்கொண்டான்.

அவ்யுக்தின் முகத்தில் அரும்பியிருந்த புன்முறுவலை கண்ட பரத் சஹி எங்கே கவனிக்கிறாள் என்று பார்த்தான், நளினாவிடம் எதையோ தீவிரமாக பேசுவதை கவனித்து விட்டு அவ்யுக்தின் அருகே சென்று “என்னடா என்னை கிண்டல் செஞ்சு முடிச்சிட்டியா? என்றான்.

“டேய் உன்னை போய் கிண்டல் செய்வேனா? நீ என் “நண்பேண்டா” என்று பரத்தின் தோளை தழுவிக்கொண்டான்.

“அய்யோ ! சாமி ! இது உலக மகா நடிப்புடா” என்றான் பரத் கௌண்டமணி ஸ்டைலில்.

இருவரும் சிறிது நேரம் சிரித்தனர்.

“டேய் இப்போ புரியுதா இது ரொமான்ஸ் நேரம்... அதான் பிளாஷ் பாக்குக்கு நோ சொன்னேன், நீ லவ் சொல்லுவியோ இல்ல சும்மா இருப்பியோ எனக்கு தெரியாது பட் லஞ்ச் முடிஞ்சு கிளம்பற வரைக்கும் எங்க ரொமான்ஸ்க்கு குறுக்க வராத சரியாடா” என்றான் பரத்.

“என்ன சொன்னான் அண்ணா.. இப்படி சிரிக்கிறானே” என்றபடியே அங்கே வந்தாள் நளினா.

அவ்யுக்தின் காதருகே சென்ற பரத் “இவ என்னை எப்போ அவன் இவன் ன்னு சொல்றா? எப்போ மரியாதையா பேசறா? ன்னே தெரிய மாட்டேங்குது... இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்கவே முடியல இந்த பொண்ணுங்க இல்லாம இருக்கவும் முடியல.” என்று தத்துவம் பேசினான்.

இதை கேட்டதும் சிரித்துக்கொண்ட அவ்யுக்த்,” அதுவா நளினா, இந்த பொண்ணுங்கள புரிஞ்சுக்க முடியலையாம் அப்புறம் இந்த பொண்ணுங்க இல்லாம இருக்க முடியலையாம்” என்றான் பரத்தை பார்த்து கண் சிமிட்டுக்கொண்டே.

“அய்யோ!” என்று தலையில் கை வைத்தான் பரத். மனதில், “டேய் அவ்யுக்த் உனக்கு தனிமை கொடுக்காம அறுக்கிறேன்னா...ஜாடை காட்டி இருக்கலாமே டா, அதை விட்டுட்டு இந்த என் செல்ல வேதாளத்து கிட்ட போட்டு கொடுத்துட்டியே ... இன்னும் கொஞ்ச நேரத்துக்கு அது மலை இறங்கவே இறங்காது ... உனக்கு இருக்கு டா” என்று சொல்லிக்கொண்டான்.

நீண்ட பெருமூச்சு விட்டு தான் கோபமாக இருப்பதாக காட்டிக்கொண்ட நளினா, “அப்படி உனக்கு எத்தனை பொண்ணுங்கள தெரியும் டா?” என்றாள்.

அவள் பரத்தை “டா” போட்டதும் சிரித்துக்கொண்ட அவ்யுக்த் “டேய் பரத், என்ஜாய்டா, உங்களை டிஸ்டர்ப் பண்ண நாங்க விரும்பலை...நாங்க எங்க டேபிள் க்கு போறோம்.. என்ன தியா போலாமா?” என்றான்

தன்னை அவ்யுக்த் “தியா” என்று அழைத்ததை மிகவும் ரசித்தாள் சஹி,அவனுக்கு நாம் செல்ல பேர் வைக்கவே இல்லையே என்ன பேர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தளேயொழிய , ஏன் அவன் அப்படி அழைக்கிறான் அவனுக்கும் தன் மேல் காதலா? என்று யோசிக்கவில்லை.

“அவ்யுக்த், நீ ரொம்ப நல்லவன் டா” என்றான் பரத்.

“தன்க் யு டா”

“டேய் !!!!!!!!!!!!!!!!!” என்று பல்லைக்கடித்தான் பரத்.

“தியா கம், எஸ்கேப்” என்று கத்தியபடியே அவர்களுக்கு ரிசர்வ் செய்த டேபிளை நோக்கி சென்றனர்.

“அம்மா! தாயே கொஞ்சம் மலை இறங்கும்மா, எனக்கு இந்த பொண்ண தான் தெரியும் இந்த பொண்ணு இல்லாம தான் இருக்க முடியாது” என்று நளினாவை நோக்கி கை காட்டியபடியே சொன்னான்.

“அது அந்த பயம் இருக்கட்டும்” என்று சிரித்துக்கொண்டாள் நளினா.

தனியே அமர்ந்த சஹியும், அவ்யுக்தும் பரத் ,நளினாவை பார்த்து மெளனமாக சிரித்துக்கொண்டனர்.

“வீடு எல்லாம் செட் செஞ்சாச்சா?” என்ற குரலில் திரும்பிய சஹி அவனை பார்த்ததும் பேச்சிழந்தாள்.

“இவன் கிட்ட ஒழுங்காவே பேச முடியல...இதுல நான் எங்கே லவ் சொல்றது”... வேணும்ன்னா “வெறும் காத்துதாங்க வருதுன்னு” சொல்ல்லலாம் என்று நினைத்துக்கொண்டாள்.

“ஹலோ !தியா இங்க தான இருக்க?”

“ம்ம் “

“இவளுக்கு தன்னுடன் தனியே அமர்ந்தது பிடிக்கவில்லையோ இதில் எப்படி என் காதலை சொல்லுவது?” என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டு தலையை கோதிக்கொண்டான்.

“கௌசி ஆன்டி எப்படி இருக்காங்க?”

“ம்ம்” என்றான் அவளை போலவே.

அவனின் செய்கையில் சிரித்த சஹி “நான் உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுட்டே வந்தேன்..பட் இப்போ என்னால பேசவே முடியல” என்றாள்.

“ஓ! உங்க அப்பா பிஸ்னஸ் பத்தி ஏதாவது பேசணுமா?” என்றான் வேண்டும்மென்றே.

அவன் கேள்வியில் கடுப்படைந்த சஹி, “இல்ல உங்க தலைல மூளை என்னும் சாம்பல் நிற பொருள் இருக்கா? என்று கேட்க நினைத்தேன்” என்றாள்.

அவள் கேள்வியில் சிரித்த, “ஓ! அதெல்லாம் நான் கடனாக கொடுப்பதில்லை தியா” என்றான்.

“யூ!யூ !யூ !!” என்று ஏதோ சொல்ல வந்தாள் சஹி.

“என்ன தியா என்ன சொன்ன?” “ஐ லவ் யூ” வா?”

“இ....இ ..இல்லை, ஆ..ஆ.. ஆமாம்”

“இப்போ என்ன சொல்ல வர? இல்லையா? ஆமாமா?”

மனதில் ஒரு உறுதியுடன் கண்களை இறுக மூடி திறந்து, அவனை உற்று நோக்கிய சஹி, “ஆமாம்” என்றாள்.
 
Top