Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Karisal Kaathal - 30 (Final)

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 30:

காலமும், நேரமும் தனி ஒருவருக்காக, எப்போதும் காத்திருக்காது. அது தான் மதி - முகிலனின் வாழ்க்கையிலும் நடந்தது. காலத்தின் போக்கில் மட்டுமே சில தவறுகள் மன்னிக்கப்படும். அதன் போக்கில் மட்டுமே சிலரின் வாழ்க்கை மாறும்.

மதி அன்று ஆறுதல் தேடி முகிலனிடம் அடைக்கலம் புகுந்ததோடு சரி. அதன்பிறகு அவனிடம் பேசவேயில்லை. அவனிடம் என்று இல்லை, யாருடனும் சரியாக பேசவில்லை.முத்துவின் வாழ்க்கை சீர்கெட்டுப் போனதற்கு, தானும் ஒரு காரணம் என்று எண்ணி மனதிற்குள் குமைந்து கொண்டிருந்தாள்.

முகிலனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. எந்த ஒரு விஷயத்திலும், அவளாக தெளிந்து வர வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு தெளிய நேரம் தேவைப்படும் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவள் வீட்டிற்கு சென்றவள், மீண்டும் தங்கள் வீட்டிற்கு வராமல் இருந்த போது கூட, அவன் பெரிதாய் ஒன்றும் சொல்லவில்லை. இந்த ஒரு வார காலமாக பள்ளியும் செல்லவில்லை அவள்.

அன்று காலை முகிலன் ஹாஸ்பிட்டல் கிளம்பிக் கொண்டிருக்க,

“மதிக்கு என்னாச்சு முகிலா...? ஏன் அங்கயே இருக்கா...? அவளை எதுவும் சொன்னியா..?” என்றார் மலர். அவரின் கேள்வியில், அவரை முறைத்துப் பார்த்தான் முகிலன்.

மலரும், இந்த ஒருவார காலமாக இந்த கேள்வியைத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறார். கேள்விக்கு பதிலாய், அவனும் முறைத்துக் கொண்டு தான் இருக்கிறான்.

“அதை நான் கேட்கணும் உங்ககிட்ட. தினமும் நான் போன பிறகு, உங்க மருமக கூடவே தான இருக்கீங்க..?” என்றான் முகிலன்.

“மதி தான் வாயைத் திறந்து ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாளே...?” என்று சலித்தவர்,

“இன்னையில இருந்து அவளும் ஸ்கூலுக்கு போவான்னு நினைக்கிறேன். அவளையும் கூட்டிட்டு போ முகிலா..” என்றார்.

“உங்க மருமகளுக்கு, நான் என்ன டிரைவரா...?” என்றான் நக்கலாய். ஆனால் உள்ளுக்குள் உல்லாசமாய் இருந்தது அவனுக்கு.

“பச்சைக்கிளி இன்னைக்கு வர்றாளா...? வரட்டும் வரட்டும். இன்னைக்கு மாமனோட பெர்பார்மன்ஸ் சும்மா அதிர போகுது..!” என்று அவன் மனதிற்குள் பேசிக் கொண்டிருக்க,

“முகிலா...முகிலா..!” என்று மலர், இரண்டு முறை அழைத்த பின்னரே நினைவுக்கு வந்தான்.

அங்கு மதியின் வீட்டில்,

ரோஜா வண்ண நிறத்தில் காட்டன் புடவையும், அதற்கு ஏற்ற வண்ணத்தில், சிறு காதணிகளும்... நீண்டு தொங்கிய பின்னலும், அதில் சூடியிருந்த ஒற்றை ரோஜாவுமாய் அட்டகாசமாய் கிளம்பியிருந்தாள் வண்ண மதி. அவளின் பெயரில் இருந்த வண்ணம், இன்று வழக்கத்திற்கு மாறாய் அவள் முகத்திலும் இருந்தது.

“இன்னைக்கு என்ன விசேஷம்...? அக்காவைப் பார்க்க பார்க்க, சும்மா அள்ளுதே..!” என்றாள் சுமதி.

“என்னடி கிண்டலா..? எப்பவும் போல தான் கிளம்பியிருக்கேன்..!” என்றாள் மதி.

“இல்லையே...! ஏதோ இடிக்குதே..!” என்று அவளைச் சுற்றி வந்தவள்,

“இந்த ரோஜாப் பூ எது..? நம்ம வீட்ல இந்த கலர் பூ இல்லையே...?” என்றாள் ஆராய்ச்சியாய்.

“ஆமா...! ஆனா எங்க வீட்ல பூத்திருந்ததே....!” என்றாள் புன்னகையாய்.

“உங்க வீடா...?” என்று சுமதி அதிர்ந்து கேட்க,

“ஆமா...! பக்கத்து வீடு..அதாவது என் புருஷன் வீடு..!” என்றவள், பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப,

“என்னமோ, சண்டை போட்டுட்டு வந்தவ மாதிரி இருந்த. இப்ப என்னடான்னா...?” என்று சுமதி யோசிக்க,

“நீயெல்லாம் சின்னப் பிள்ளை. உனக்கு இது புரியாது..!” என்றாள் மதி.

“கிளம்பிட்டியா மதி..! இந்தா மதிய சாப்பாடு..!” என்றபடி வந்த பார்வதி, மகளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டார். எப்போதும் நீட்டாகத் தான் செல்வாள் மதி. ஆனால் இன்று அனைத்தையும் தாண்டிய ஒரு பொலிவு அவள் முகத்தில். அழகு பிம்பமாய் இருந்த மகளைப் பார்த்த பார்வதிக்கு கண்கள் பனித்து விட்டது.

“நீ கிளம்பிட்ட...! இன்னும் உங்க அப்பாவைக் காணோமே..?” என்று பார்வதி சொல்ல,

“அப்பாவா...!!!!!” என்று மனதிற்குள் வழிந்தவள்,

“அப்பாவுக்கு எதுக்கும்மா சிரமம். நான் மணி மாமா கூடவே போய்க்கிறேன்..!” என்றாள் மதி.

“அப்படி வாடி மகளே..!!!” என்று மனதிற்குள் நினைத்தவர்,

“முகிலன் தம்பி அப்பவே கிளம்பிடுச்சே...!” என்றார் வேண்டுமென்றே.

“என்னது கிளம்பிட்டாரா...? எப்போ கிளம்பினார்...? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லவே இல்லை...? யாரைக் கேட்டுக் கிளம்பினார்...?” என்றாள் மூச்சு விடாமல்.

“ஒருவேளை, இன்னைக்கும் நீ லீவ்ன்னு நினைச்சாரோ என்னவோ...?” என்றார் பார்வதி.

“அதெப்படி அவரா நினைக்கலாம்...!” என்றவள், கோபமாக மலரைத் தேடி சென்றாள்.

“அத்தை...அத்தை..!” என்று கத்திக் கொண்டே உள்ளே செல்ல,

“மலரு மேல இருக்காம்மா...!” என்றார் பெரியசாமி.

அவரையும் முறைத்துக் கொண்டே சென்றாள் மதி. பெரியசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.

“அத்தை..அத்தை..!”

“என்ன மதி..கிளம்பிட்டியா...?” என்றார் மலர்.

“என்ன கிளம்பிட்டியா...? உங்க மகன் கிட்ட சொன்னிங்களா இல்லையா...? நான் தான் காலையிலையே உங்ககிட்ட சொல்லிட்டு தான போனேன். இருந்தும், என்னை விட்டுட்டு போயிருக்காருன்னா என்ன அர்த்தம்...? சொல்லுங்க என்ன அர்த்தம்..?” என்றாள் மூச்சு விடாமல்.

“கொஞ்சம் பொறுமையா பேசு மதி.முகிலன் இன்னும்...!” என்று மலர் முடிக்கக் கூட இல்லை,

“என்னத்த பொறுமையா பேசுறது. நானா எங்க அப்பா கூடவே போய்க்கிறேன். என்னை சொல்லணும், என் புத்திய சொல்லணும். சொல்லி வச்சுக்கங்க உங்க புள்ளை கிட்ட. நான் எல்லா நேரமும் இப்படி நல்லவளாவே இருக்கமாட்டேன்...” என்ற மதி, திரும்பி கீழே செல்ல எத்தனிக்க, அவளின் நீண்ட பின்னலை, உள்ளிருந்து இழுத்தான் முகிலன். மலர் சிரித்துக் கொண்டே கீழே செல்ல, அவர் சென்றவுடன் கதவை அடைக்க, திடீரென்று அவனைப் பார்த்ததில் முழித்துக் கொண்டு நின்றாள்.

அவளை சாத்திய கதவின் மேல் சாத்தியவன், மேலிருந்து கீழாக...ஒரு மார்க்கமாகப் பார்த்து வைக்க,

அவன் இல்லை என்ற தைரியத்தில் பேசியவளின் வாய், இப்போது தந்தி அடிக்க ஆரம்பித்தது.காலையிலேயே, இப்படி ஒரு தரிசனத்தை முகிலன் எதிர் பார்க்கவில்லை.

“நீ..நீங்க..இ..இன்னும் கிளம்பலையா..?” என்றாள் திக்கித் திணறி.

முகிலனோ பதில் சொல்லும் நிலையில் இல்லை. அவன் முற்றிலும் மதியின் நினைவில் தொலைந்து போயிருந்தான்.அவனுடைய இதழ்கள் முத்தத்தை வேண்டி நிற்க, மதிக்கு தான் படபடவென்று அடித்துக் கொண்டது. அவளின் இடுப்பில் பதிந்திருந்த அவனின் கைகள், அவளின் மனதிற்குள் வர்ணஜாலம் காட்டிக் கொண்டிருக்க, அவளின் இதழ் அருகில் நெருங்கியவன்...

“கிளம்பலாமா....??” என்றான்.

எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவள் போல,

“என்ன சொன்னிங்க..??” என்றாள் திக்கி.

“கிளம்பலாம்ன்னு சொன்னேன்...!” என்றான். அவன் சொன்னது தான் மாயம், பட்டென்று அந்த அறையை விட்டு சென்றாள் மதி. அவள் சென்றபின், ஆசுவாசமாய் மூச்சு விட்டவன், முன்னுச்சி முடியைக் கோதிய படி,

“ஆத்தி...இவ செம்ம ஹாட் பிகர். பக்கத்துல வந்தாலே, மனசுக்குள்ள என்னென்னவோ தோணுதே. முகிலா...ஸ்டெடி,ஸ்டெடி...!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் கீழே வர, அங்கே மதியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

“அவன் இருக்குறது தெரியாம போய் பேசி, இப்படி சிக்கி...இதெல்லாம் தேவையா மதி உனக்கு. பார்வையிலையே எப்படி பீல் பண்ண வைக்கிறான். மதி ஸ்டெடி, ஸ்டெடி..!” என்று அவளும் உள்ளே உறுப் போட்டுக் கொண்டாள்.

அவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு வரும் வரை, அவளின் தவிப்பு அடங்கவில்லை.அவனைப் பார்த்ததும், ஒரு வித வெட்கம் வந்து அவளை சூழ்ந்து கொள்ள,ஏதோ முதன் முறையாக அவனுடன் பைக்கில் செல்வதைப் போல உணர்ந்தாள்.

“போகலாமா..?”

“ம்ம்ம்..!”

அவர்கள் கிளம்பியவுடன்,

“என்ன மதினி..? இப்போ சந்தோஷமா..?” என்றார் மலர்.

“சந்தோஷமா...சொல்ல வார்த்தையே இல்லை மதினி. ரெண்டு பேருக்கும் அப்படி ஒரு ஜோடிப் பொருத்தம். சாயங்காலம் ரெண்டு பேருக்கும் சுத்தி வைக்கணும்...!” என்றார் பார்வதி.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்தார் திலகாவின் கணவர் கணபதி. பல வருடங்களுக்குப் பிறகு தம்பி வீட்டிற்கு வருகிறார்.

“வாங்க அண்ணா..!” என்றார் மலர்.

“வாங்க...!!” என்றார் பார்வதி.

“மனோகர் இல்லையாம்மா...?” என்றார்.

“வெளிய ஒரு ஜோலியா போயிருக்கார். எதுவும் முக்கியமான விஷயமா..?” என்றார் பார்வதி.

“ஆமாம்..!”என்றவர்,

“அவ செஞ்சதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டா மட்டும் பத்தாதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இப்போதைக்கு மன்னிப்பு மட்டும் தான் என்னால கேட்க முடியும்..! முடிஞ்சா ரெண்டு பேரும் மன்னிச்சிடுங்க. மலர் நீயும் மன்னிச்சிடும்மா..!” என்றார் கணபதி.

“மன்னிக்கக் கூடிய காரியமாண்ணா அது. உங்க முகத்துக்காக மட்டும் தான் பேசாம இருக்கோம்..!” என்றார் மலர்.

“அது எனக்கும் தெரியும்மா..!” என்று அவர் சொல்ல,

“துர்காவுக்கு இப்போ எப்படி இருக்கு...?” என்றார் பார்வதி.

“இப்போ நல்லா இருக்காம்மா...! அவ விஷயமா பேசத்தான் வந்தேன்...!” என்றார் கணபதி.

“துர்கா விஷயமாவா...?” என்று இருவரும் புரியாமல் பார்க்க,

“துர்காவுக்கு, முத்துவைப் பேசி முடிக்கலாம்ன்னு இருக்கேன். அது மட்டும் தான் முத்துவுக்கு நான் பண்ற நல்லதா இருக்க முடியும்..!” என்றார்.

“இதுக்கு அவங்க ரெண்டு பேரும் சரின்னு சொல்லணுமே...?” என்றார் மலர்.

“துர்கா சரின்னு சொல்லிட்டாம்மா..! மாட்டேன்னு சொன்ன பிள்ளைய, திலகா தான் வம்படியா எல்லாமே பண்ண வச்சிருக்கா....!” என்றார் கணபதி.

“இது சரியா வரும்ன்னு எனக்குத் தோணலை அண்ணா..!” என்றார் மலர்.

“திலகாவுக்கு இது மட்டும் தான் பெரிய தண்டனை. அது மட்டும் இல்லாம, இவ்வளவு பிரச்னைக்கு அப்பறம், துர்காவை வெளிய கட்டிக் குடுக்கவும் எனக்கு மனசில்லை..” என்றார்.

“முத்து அம்மாகிட்ட பேசிப்பாருங்க அண்ணா..!” என்றார் மலர்.

“அதான்...பார்வதி பேசுனா...அவங்க கேட்பாங்க..” என்றார்.

“நான் என்ன பேசுறது...? இப்போ கூட உங்க சுயநலம் தான் இதுல இருக்கு. உங்க பொண்ணு வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாதுன்னு வந்திருக்கிங்க. பொண்ணப் பெத்த தகப்பனா, உங்க யோசனை சரி தான். ஆனா முத்து, இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டான். அப்படியும் மீறி அவன் சரின்னு சொன்னாலும், துர்காவை பார்க்கும் போதெல்லாம், அவ அம்மா செஞ்சது தான் அவனுக்கு நினைப்புக்கு வரும். அதனால துர்காவுக்கு வெளிய பார்த்து முடிக்கிறது தான் சரியா வரும்..!” என்றார் பார்வதி.

“மதினி சொல்றதும் சரிதாண்ணே..! இன்னைக்கு ஒரு வேகத்துல கல்யாணத்தைப் பண்ணி வச்சுப் போட்டு, பின்னும் பிறகும் அவதிப் படக் கூடாது. துர்காவுக்கு நல்ல இடமாப் பார்ப்போம். கொஞ்ச நாள் போகட்டும்..” என்றார் மலர்.

“அப்போ சரிம்மா...! எது நடக்கணுமோ..அது தான நடக்கும்..!” என்றபடி சென்று விட்டார் கணபதி.

அவர் சென்ற அடுத்த நிமிடம், உள்ளே இருந்து வந்த சுமதி,

“அம்மா..! நான் வேணுமின்னா முத்து மாமாவ கட்டிக்கவா..??” என்றாள். அவளை அதிர்ந்து பார்த்தனர் இருவரும். அவள் அறிந்து சொன்னாளா..? இல்லை அறியாமல் சொன்னாளா..? என்று பார்வதிக்குத் தெரியாது. ஆனால் அவரின் மனதில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயத்திற்கு ஒரு முடிவைச் சொல்லியிருந்தாள்.


*******
 
“என்ன மதி...? ஒரே ரொமான்சா...அதான் லீவ்வா..?” என்றாள் வினோ.

“பேசாம போயிரு.! நானே கொலைவெறில இருக்கேன்..!” என்றாள் மதி.

“இன்னும் என்னடி பஞ்சாயத்து...? அதான் எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடுச்சே...?” என்றாள் வினோ.

“எல்லாம் முடிவுக்கு வந்தாலும், இந்த மணி மாமா ஓவரா பன்றாங்கடி..!” என்றாள்.

“கொஞ்சம் கெத்தான ஹீரோ உங்க ஆளு. அப்ப, அப்படித்தான் இருப்பாரு..! நீ பேச வேண்டியது தான ” என்றாள் வினோ.

“எங்க....? பார்த்தாலே, இங்க பேச்சு வரலை. இதுல நான் பேசணுமாம்ல..” என்று உள்ளுக்குள் முனங்கிக் கொண்டிருந்தாள்.

“நான் ஒரு ஐடியா சொல்லவா...?” என்றாள் வினோ.

“சொல்லித் தொலை..!”

“எப்படியும் ஈவ்னிங் அவருதான் உன்னைக் கூப்பிட வருவாரு..! கட்டிப் பிடிச்சு, முத்தம் குடுத்து, ஐ லவ் யு சொல்லிடு..! அப்பறம் பாரு...” என்றாள் வினோ.

“அப்பறம் பார்க்குறதுக்கு நீயும் இருக்க மாட்ட, நானும் இருக்க மாட்டேன்..!” என்றாள் மதி.

“உனக்குப் போய் ஐடியா சொன்னேன் பாரு..! என்னைச் சொல்லனும். இந்த ஜென்மத்துல நீங்க உருப்படப் போற மாதிரி எனக்குத் தெரியலை..” என்றபடி சென்றுவிட்டாள் வினோ.

மதியின் இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம், காலையில் வரும் போது, முகிலன் நடந்து கொண்ட முறைதான். எப்போதும் வண்டியில் அவளை உரசிக் கொண்டே வருபவன், இன்று சற்று தள்ளியே அமர்ந்து வந்தான்.

அவள் விலகினாலும், அவன் எப்போதும் விலகியதில்லை. ஆனால், இன்று அவன் நடந்து கொண்டது எல்லாமே வித்யாசமாய் இருந்தது. மதியும், தானாகவே நெருங்கிப் பார்த்தாள். ஆனால் முகிலனோ, அவளிடம் பேசக் கூட இல்லை.

“எதுக்கு அப்படிப் போனாங்க...?” என்று யோசித்துக் கொண்டே, அன்றைய நாளைக் கடத்தினாள் மதி.

எப்போதும் சாயந்தரம் அழைக்க வருபவன், ஏனோ அன்று வரவில்லை. அதைப் பார்த்த மதிக்கு கண்கள் கலங்கிப் போனது.

“என்னடி ஆச்சு...? கிளம்பலையா...? எங்க ஹீரோவைக் காணோம்...?” என்றாள் வினோ.

“நீ கிளம்பலையா...?” என்றாள் மதி.

“நானும் கிளம்பிட்டேன். எனக்கு ஹாஸ்ட்டல் பக்கம் தான். நடந்தே போய்டுவேன். நீ பத்திரமா போய்டுவா தான..?” என்றாள் வினோ.

“ஏன்..? இத்தனை நாள், நீயும், அவனும் தான் துணைக்கு வந்திங்களா..? போடி வேலையைப் பார்த்துகிட்டு..!” என்றாள் கோபத்தில்.

“நீ மாமனைப் பாக்க முடியாத கோபத்துல இருக்க. இதுக்கு நான் பொறுப்பில்லை. பார்த்து பத்திரமா போயிட்டு வா..!”என்றபடி கிளம்பிவிட்டாள் வினோ. மதிக்கு தான், எதுவும் சரியாக படவில்லை. ஏதோ ஒரு யோசனையில், பஸ்ஸில் ஏறி, அமர்ந்தும் விட்டாள்.

“என்ன மனுஷன் இவனெல்லாம்...? பொண்டாட்டி பொண்டாட்டின்னு வாய்கிழிய சொல்ல மட்டும் தான் தெரியுது. ஆனா, கொஞ்சம் கூட பொறுப்பில்லை... இவன் கூட பேசவே கூடாது..!” என்று அவனைத் திட்டியபடியே அமர்ந்திருந்தாள் மதி.

அவனைத் திட்டிக் கொண்டிருந்தவளுக்கு தெரியவில்லை, முகிலன் அருகில் வந்து அமர்ந்ததும், பேருந்து புறப்பட்டதும்.

“போதும்டி..! எவ்வளவு நேரம் தான் திட்டுவ..?” என்று அவளின் காதருகில், அவனுடைய உதடுகள் முனுமுனுக்க, அவனின் பேச்சில் தூக்கிவாரிப் போட, நிமிர்ந்து பார்த்தாள் மதி.

“அப்பாடா...வந்துட்டான்..!” என்று ஒரு மனது பெரிய நிம்மதி அடைய, அந்த உணர்வு அவளின் முகத்தில் தெரிந்திருக்க வேண்டும்...அதைப் படித்த முகிலன்...

“ரொம்ப தேடுனியா...?” என்றான், ஆழ்ந்த குரலில்.

“ரொம்ப..!” என்று வாய்த் தவறி சொன்னவள், பிறகு “இல்லை” என்றாள் வேகமாக.

“அப்ப சரி..! என்னையே தேடாதவளுக்கு, நான் அவசியம் இல்லை.. .என்னால எதுக்கு உனக்கு மனஉளைச்சல்..!” என்றபடி அவன் அந்த இடத்தை விட்டு நகரப் போக,

அவனின் கையை இறுகப் பிடித்திருந்தால் வண்ண மதி. முகமோ அவனைப் பார்க்காமல் குனிந்திருக்க, அவளின் அவஸ்தையைப் பார்த்த முகிலனுக்கு, அதற்குமேல் தாள முடியவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டான்.

“இன்னமும் என்கிட்டே உனக்கு தயக்கம் ஏன் மதி..? இல்லை இன்னமும் என் மேல கோபம் இருக்கா...?” என்றான் அமைதியான குரலில்.அவனின் கைகள், அவளின் தோளை சுற்றி வளைத்திருந்தது. அவனின் அணைப்பில் அவள் இருந்தாள்.

ஜன்னலோரம் வீசிய காற்று, மனதிற்கு இதமான மாலை நேரம், மனதிற்கு இனியவனின் அருகாமை, அணைப்பு...வேறென்ன வேண்டும் மதிக்கு. அப்படியே ஆனந்த உலகத்தில் லயித்திருந்தவளை, முகிலனின் கேள்வி மீட்டது.

“என்ன கேட்டிங்க...?” என்றாள்.

“என்மேல என்ன கோபம்..?” என்றான் சின்ன சிரிப்புடன். அந்த சிரிப்பு கூட அவளை மயக்கியது.

“ஏன் என்னை கூப்பிட வரலை..?” என்றாள்.

“அதுவா விஷயம்...! வேலையை விட்டுட்டேன். அப்படியே மதியம் வீட்டுக்கு போயிட்டேன். எப்படியும் என் பொண்டாட்டி என்னைத் தேடுவான்னு தெரியும். அதான் மறுபடியும் கிளம்பி வந்துட்டேன். மழை வர்ற மாதிரி இருந்தது..அதான் பஸ்ல வந்தேன்..!” என்றான், அவளைப் பார்த்து சிரித்தபடி.

“வேலையை விட்டுட்டிங்களா..?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“ஏன்..? என்னைய கண்கலங்காம பார்த்துக்க மாட்டியா...?” என்றான் கண் அடித்து.

“விளையாடாதிங்க மணி மாமா..! எதுக்காக வேலையை விட்டிங்க...?” என்றாள் புரியாமல்.

“இது ஏற்கனவே முடிவு பண்ணின விஷயம் தான் மதி. இப்போ விட வேண்டிய அவசியம்..” என்றான் இழுத்து.

“அதான் ஏன்..?” என்றாள்.

“ஏன்னா...இதுக்காகத்தான்..!” என்ற முகிலன், அவளிடம் ஒரு கவரை நீட்டினான். அது அவன் அரசு மருத்துவமனையில், மருத்துவனாய் நியமிக்கப் பட்டிருந்தான்.

“நிஜமாவா...?” என்றாள் மதி.

“பின்ன..? என் பொண்டாட்டிகிட்ட போய் சொல்லுவேனா..?” என்றான் மந்தகாசமான குரலில்.

“ரொம்ப சந்தோசம் மாமா..! அத்தை, மாமாகிட்ட சொன்னிங்களா...?” என்றாள்.

“இன்னும் இல்லை..! இப்ப போய் தான் சொல்லணும்..!” என்றவன்,

“சரி..மாமனுக்கு என்ன ட்ரீட்...? எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன்..?” என்றான், அவளை மேலும் நெருங்கி அமர்ந்தபடி.

“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. ஒழுங்கா தள்ளி உட்காருங்க. காலையில என்னமோ அப்படி பிகு பண்ணிங்க..? இப்ப எதுக்கு உரசுறிங்க..?” என்றாள்.

“என் பொண்டாட்டி..நான் உரசுவேன்...!” என்றான்.

“அப்போ காலையில, பொண்டாட்டி கண்ணுக்குத் தெரியலையா..?” என்றாள்.

“அடியேய்..! உனக்கே இது நியாயமா..? ஒருவாரமா பார்க்காம பார்த்தா..மனுஷனை உசுப்பேத்துற மாதிரி, அப்படியே செம்ம பிகரா கண்ணுக்கு முன்னாடி வந்து நிக்குற..? நானும், அவ்வளவு கண்ட்ரோல இருக்க டிரை பண்ணேன். அப்படியும் விட்டியா நீ..! பைக்ல எப்பவும் தள்ளித் தள்ளி போறவ..இன்னைக்கு நெருங்கி நெருங்கி வர்ற...என்னன்னு நினைக்க நான்..?” என்றான்.

“ஹோ..அதைக் கூட நான் தான் சொல்லித் தரணுமா..? இந்த லட்சணத்துல டாக்டர் வேற..?” என்று தலையில் அடித்தாள்.

அவள் தோளின் மேல் போட்டிருந்த கையை மேலும் இறுக்கி, நெருங்கி அமர்ந்தவன்...”மாமனை அவ்வளவு ஈசிய எடை போட்டுடாத..? பிராக்டிகல் கிளாஸ்ல எப்பவும் நான் தான் பர்ஸ்ட்..!” என்றான் அவளின் காதோரத்தில்.

“ஐயோ மணி மாமா..இது பஸ்..கொஞ்சமாவது நியாபகம் இருக்கட்டும்..!” என்று அவனை அவள் அடிக்க,

“அதனால தாண்டி பேச்சோட நிறுத்தியிருக்கேன்..! இல்லைன்னா...” என்றவன், அவள் முகத்தை நோக்கிக் குனிய,

“சார் டிக்கெட்..!” என்றார் கண்டெக்டர்.

“அதான பார்த்தேன்...!” என்று அவரை முறைத்தபடி டிக்கெட் வாங்கினான்.

“பஸ்ல இப்படி பண்ணினா...உங்களை என்ன நினைக்க மாட்டாங்க...?” என்றாள், பல்லைக் கடித்துக் கொண்டு.

“என்ன நினைப்பாங்க...பொண்டாட்டி மேல ரொம்ப பிரியம் போல, அதான் உரசிகிட்டே வரான்..அப்படின்னு நினைப்பாங்க..! அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. ஏற்கனவே வருஷம் ஓடிடுச்சு.இப்போ இருந்து வேலையை ஆரம்பிச்சா தான், இன்னும் நாலு வருஷத்துல, பிள்ளைய ஸ்கூல்ல சேர்க்க முடியும். அதுக்கே, தீயா வேலை செய்யணும்..!” என்று சட்டைக் காலரைத் தூக்கி விட,

“ஐயோ, வாயை மூடுங்க..! எல்லாரும் நம்மளைத் தான் பார்க்குறாங்க..! மானம் போகுது..!” என்று அவனின் வாயை மூடினால் வண்ண மதி.

“நீ அப்பவே என்னை விட்டுப் போகாம இருந்திருந்தா...இந்நேரம் நமக்கு ரெண்டு குழந்தைங்க இருந்திருக்கும் மதி..!” என்றான் அவளின் கையை, தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு.அவனின் முகத்தைப் பார்த்த அவளுக்கும் கூட, கண்கள் கலங்கித்தான் போனது.
 
“சாரி மாமா..! எனக்கு அப்போ, வேற வழி தெரியலை. ஆனா, உங்களை எனக்கும் ரொம்ப பிடிக்கும். அந்த வயசுல தெரியலை. ஆனா, சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன் மாமா..!” என்றவள், அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

எனக்கும் அது தெரியும் மதி. அதான், தேடி வந்து, மறுபடியும் மேரேஜ் பண்ணேன். எப்படி இருந்தாலும், இந்த முகிலனுக்கு நீ மட்டும் தான் மனைவி...அப்படிங்கிற ஒரு விஷயத்துல நான் உறுதியா இருந்தேன்.

“என்மேல உங்களுக்கு கோபம் வரலையா..?” என்றாள்.

“கோபம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா, உன்னோட முகத்துக்கு முன்னாடி, என்னோட கோபம் எல்லாம் புஸ்வானம் தான். யோசிச்சுப் பார்த்தா, நடந்த எல்லா பிரச்சனைக்கும் நீ காரணமில்லை. சுத்தி இருந்த உறவுகள் தான் காரணம். நானும் கூட ஒருவகையில் காரணம். அதனால இனி மனசைப் போட்டுக் குழப்பிக்காம, முகிலன் மனைவி மதியா மட்டும் இரு. நம்மளைப் பத்தி மட்டும் யோசி..!” என்றான்.

“ம்ம் சரி மாமா..! ஆனா, முத்து பாவம் இல்லையா..?” என்றாள், அப்போதும் நண்பனை விட்டுக் கொடுக்காமல்.

“உண்மைதான்...ஆனா, அதுக்கும் வழி பிறந்திடுச்சு. உன் தங்கச்சி சுமதி...முத்துவைக் கட்டிக்கிறாளாம்..! மதியம் அம்மா சொன்னாங்க..!” என்றான்.

“என்ன மாமா சொல்றிங்க..? சுமதியா...?” என்றாள் அதிர்ச்சியுடன்.

“ஆமா...! எனக்கும் கேட்டப்ப, உன்னை மாதிரி அதிர்ச்சியா தான் இருந்தது. ஆனா, சுமதி உறுதியா சொல்லும் போது...நம்ம என்ன செய்ய முடியும்...?” என்றான்.

“சுமதிக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆரம்பிக்கலை..!” என்றாள் யோசனையுடன்.

“இப்போ பேசி முடுச்சுட்டு, ஆறு மாசம் கழிச்சு கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு பேசியிருக்காங்க..!” என்றான்.

“அதுக்குள்ளவா...? என்கிட்டே ஒரு வார்த்தை கூட சொல்லலை..!” என்று மதி முகத்தைத் தூக்க,

“இப்ப எதுக்கு மூஞ்சியைத் தூக்குற..? நல்ல விஷயத்தை எப்ப பண்ணினா என்ன...? அவங்க என்னை வச்சு தான் பேசுனாங்க..! அதுக்காகத் தான், மதியமே வீட்டுக்குப் போனேன். அப்பா, போன் பண்ணியிருந்தார்.இல்லைன்னா, ஈவ்னிங் வரைக்கும் இருந்து, உன்னைக் கூட்டிட்டு வந்திருப்பேனே..?” என்றான்.

“முத்து சம்மதம் சொன்னானா மாமா..?” என்றாள்.

எங்க..? அவனை சமாளிக்கிறது தான் கொஞ்சம் கஷ்ட்டமா போய்டுச்சு. கடைசி வரைக்கும் அவன் தலையை ஆட்டவே இல்லை. கடைசியா, இது மதியோட விருப்பம்ன்னு நான் சொன்ன உடன் தான், சரின்னு சொன்னான்.

“அடப்பாவிங்களா..?”

“உங்க அம்மா தான் அப்படி சொல்ல சொன்னாங்க..! நானும் சொன்னேன். அவனும், உன் பேரை சொன்ன பிறகு தான் சரின்னு சொன்னான்..!” என்றான்.

“இது நடந்தா சந்தோசம் தான். ஆனா, நல்லா படியா நடக்கணும். எந்த பிரச்சனையும் இல்லாம..” என்றாள்.

“நம்மை மீறி, இனி எதுவும் நடக்காது..!” என்று உறுதியளித்தான் முகிலன்.

“நான் வீட்டுக்குப் போன உடனே, சுமதியைப் போய் பார்க்கணும்..!” என்றாள்.

“அடியேய்..! இதுவரைக்கும் மனுஷனா இருக்கேன். என்னை மிருகமா மாத்திடாத. இன்னைக்கு மாமன் புல்பார்ம்ல இருக்கேன்..! அதனால, உன்னோட கவனம் வேற எங்கயும் போக கூடாது. மாமன் மேல மட்டும் தான் இருக்கணும்..!” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, பேருந்து நிறுத்தமும் வந்து விட்டிருந்தது.

அவளுடன் இறங்கி, அந்த சாலையில் நடப்பது கூட அவனுக்கு புது விதமான ஒரு அனுபவம்.

“இப்படியே, உன்கையைப் பிடிச்சுகிட்டே...காலம் முழுசுக்கும் நடக்கணும் மதி..!” என்று அவன் காதலுடன் சொல்ல,

“கால் வலிக்கும் மாமா..!” என்றபடி அவளை அப்பாவியாய்ப் பார்த்தாள்.

“இந்த காதல் வசனம் உனக்குத் தேவையா..?” என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன்,

“அப்படியா மதி..! நான் வேணுமின்னா தூக்கிக்கவா...?” என்றபடி, அவளை பட்டென்று தூக்கி விட்டான்.

“இறக்கி விடுங்க..! யாராவது பார்த்தா..என்ன நினைப்பாங்க..?” என்றாள் கூச்சத்துடன்.

“அட சும்மா இருடி..! எவன் பார்த்தா எனக்கென்ன..?”என்றபடி, அவளைத் தூக்கிக் கொண்டு நடக்க, அவனின் காதலில் கரைந்து தான் போனாள் வண்ண மதி.

“நான் உங்களை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன் மாமா..!” என்றாள், அவனைப் பார்த்தபடி.

“இன்னும் நினைக்கத்தான் செய்றியா..? ஆனா, நான் உன்னை ரொம்ப லவ் பண்றேண்டி. என் உயிர் இருக்குற வரைக்கும், என் மூச்சுக் காத்தே நீதான்..!”

“மணி மாமா..! ஐலவ் யு...!” என்றவள், அவனின் கன்னத்தில் முத்தமிட, அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் திலகா. அவரால் இனி பார்க்க மட்டும் தான் முடியும்.

அருகில் வந்தவுடன், அவர் திலகா தான் என்று கண்டு கொண்ட மதி...

“மாமா..! எனக்கு ரெட்டைப் புள்ளைங்க வேணும்..!” என்றாள் சத்தமாக.

“பொண்டாட்டி கேட்டு, நிறைவேத்த தானே, இந்த மாமன் இருக்கேன்..பிராக்டிகல் கிளாசை ஸ்டார்ட் பண்ணிடுவோம்..!” என்றபடி அவன் சிரிக்க, அந்த காட்சியைப் பார்க்க, அந்திவானமாய்... வண்ணங்களாய் இருந்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு...........

“என்னப்பா...? எல்லாரும் வந்தாச்சா...?” என்று ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க,

“இன்னும் முகிலனும், மதியும் தான் வரணும்..!” என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நேரம் ஆகுதுப்பா...! சீக்கிரம் வர சொல்லுங்க..!” என்று கத்திக் கொண்டிருந்தனர்.

“ஏங்க..! விடுங்க..!எல்லாரும் கிளம்பிட்டாங்க..!” என்று முகிலனிடம் இருந்து தப்பிக்கும் வழி தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் வண்ண மதி.

மதியின் முகத்தில், முகிலன் உதடுகள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்க,

“மாமன் வேலையா இருக்கேன்..! தொந்தரவு பண்ணாம பேசாம இருடி..!” என்றவன், அவன் வேலையைத் தொடர,

“மதி..!” என்று மலரின் குரல் அருகில் கேட்க, பட்டென்று அவனை விட்டு விலகினால் மதி.

“அத்தை..!”

“சீக்கிரம் வாங்கம்மா..! முகூர்த்ததுக்கு நேரம் ஆச்சு..!” என்றார் மலர்.

“இதோ கிளம்பிட்டோம் அத்தை..!” என்று அவள் அசடு வழிய, அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார் மலர்.

தனப்பாண்டிக்கும், குணப்பாண்டிக்கும் அன்று திருமணம். அதனால் எல்லாரும் கிளம்பியிருந்தனர்.

சுமதி கிளம்பி வெளியே வர, முத்துவும் வெளியே வந்தான். ஆனால் சுமதியிடம் பேசவில்லை. அவனுக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கவே செய்தது.

“முத்து மாமா..! இந்த சட்டை உங்களுக்கு நல்லா இருக்கு...!” என்றாள் சுமதி, எந்த விகல்பமும் இல்லாமல்.

“தேங்க்ஸ் சுமதி..! உனக்கும் கூட, இந்த புடவை நல்லா இருக்கு..!” என்றான் முதன் முறையாக.

“நிஜமாவா மாமா..!” என்றவளுக்கு அப்படி ஒரு சந்தோசம். பார்வதியும்,வினோதினியும் வெளியே வரவும், வாயை மூடிக் கொண்டாள்.

இந்த திருமணத்தில், எல்லா சொந்தங்களும் ஒன்று கூடியிருந்தது. திலகாவும் வந்திருந்தார். ஆனால், யாரின் வம்புக்கும் போவதில்லை. அதற்காக திருந்திவிட்டார் என்று சொல்ல முடியாது. கணபதியின் கட்டுப் பாட்டில் இருந்தார். பிறவி குணத்தை மாற்றவா முடியும்.

“மதி ..! ஒரு விஷயத்தை நோட் பண்ணியா..?” என்றான் முகிலன்.

“என்ன விஷயம்..?”

“பெரிய பொண்ணு வீடு இந்த பக்கம், சின்ன பொண்ணு வீடு அந்த பக்கம், நடுவுல உங்க அம்மா வீடு. யாருக்காவது இப்படி ஒரு குடுப்பினை வாய்க்குமா..? இல்லை, இப்படி இரண்டு அடிமைகள் தான் சிக்குவோமா...?” என்றான் முகிலன் சிரிக்காமல்.

“உங்களை..!” என்று மதி முறைக்க,

“நானும் யோசிச்சேன் முகிலன் அண்ணா..!” என்றான் முத்து.

“நம்மால யோசிக்க மட்டும் தாண்டா முடியும் தம்பி...” என்று முகிலன் சிரிக்க, அவர்களுடன், மதியும், சுமதியும் இணைந்து கொண்டனர்.

“இன்னும் நான் மட்டும் தான் முரட்டு சிங்கிளா இருக்கேன்..! என்னோட பாவம் உங்களை சும்மா விடாது..!” என்றாள் வினோதினி முறைத்தபடி.

“என்ன வினோ, இப்படி சொல்ற..?”

“பின்ன என்னடி..? என்னைவிட சுமதி எவ்வளவு சின்னவ. அவளுக்கே கல்யாணம் பேசி முடுச்சுட்டிங்க..? என்னைப் பத்தி யோசிச்சிங்களா..?” என்றாள், வராத கண்ணீருடன்.

“உனக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்துடலாம்..!”

“நோ..! நான் எப்பவும் சிங்கிள் தான்.எனக்கு, வேற தனிக் கதை வேணும்...உங்க டிராக்ல நான் ஓட மாட்டேன்..!” என்றாள்.

“அவ்வளவு தான...? செஞ்சிடுவோம்..!” என்றாள் மதி.

அவர்கள் பேசி சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தப் பார்வதிக்கும் ஆனந்தத்தில் கண்கள் கலங்கிப் போனது. பெற்றவர்களுக்கு இதைத் தவிர வேறென்ன வேண்டும்..???

முகிலினங்களுக்கு இடையில் தோன்றும் மதி நிலவாய், மணி முகிலனின் வாழ்வில், வண்ணம் சேர்க்க...அவனுள் வந்தவள் தான் வண்ண மதி. வெண்மதியில் இருந்து வேறுபட்ட வண்ண மதி. அவளின் பெயரைப் போலவே, இனி அவள் வாழ்வும் வண்ணங்களால் ஜொலிக்கும்.

வாழ்த்தி விடை பெறுவோம்...!!!!









 

ஹாய் பிரண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க...?

அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்.

கரிசல் காதல் – பயணம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த கதைக்கு தொடக்கம் முதல், இப்பொழுது வரை, கருத்துக்கள் சொல்லி..ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த அனைத்துத் தோழிகளுக்கும் நன்றிகள் பல.

வாசகர் என்ற வட்டத்தையும் தாண்டிய ஒரு தோழமை, ஒரு உரிமை, எப்போ பதிவு என்று நீங்கள் கேட்டும் உரிமை பேச்சுக்கள்..இப்படி நிறைய புது தோழிகள், இந்த கரிசல் காதல் பயணத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

இன்பாக்ஸிலும், முகநூலிலும் எனக்குக் கருத்துக்கள் சொல்லிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஆன்லைனில் வராத என்னுடைய..

”தாவணி குடை பிடிப்பாயா..?” என்ற கதை,

விரைவில் புத்தகமாய்...அதையும் படித்து விட்டு, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் அன்புத் தோழி...



உமா சரவணன்
 
Top