Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
கரிசல் 20:

அவர்கள் பேசியதைக் கேட்ட விநோதினிக்கும் கூட அதிர்ச்சிதான்.அவள் மதியைத் திரும்பிப் பார்க்க, அவளோ கண்கள் கலங்கி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.

“என்னடி இப்படி பேசுறாங்க..?” என்றாள் வினோ.

அவளின் கேள்விக்கு வண்ண மதி எந்த பதிலையும் சொல்லவில்லை. அவளுக்கே கேட்ட விஷயத்தை ஜீரணிக்க கொஞ்ச நேரம் தேவைப்பட்டது.

“இது உன்னைக் கட்டிக்க போற அந்த மாப்பிள்ளைக்குத் தெரியுமா..?” என்றாள் வினோ.

“தெரியலை..!” என்று தலையை ஆட்டினாள் வண்ண மதி.

“இதுக்கு என்ன தான் வழி..?” என்றாள்.

“விடு வினோ, எது நடக்கணும்ன்னு இருக்கோ அது தான் நடக்கும். நாம நினைக்கிறது எங்க நடக்குது..?” என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

“அதெப்படி அவரோட பையன் சொல்லாம இவர் சொல்லுவார். அப்ப எல்லாரும் சேர்ந்து உன்னை வீட்டுலையே இருக்க வச்சிடலாம்ன்னு பார்க்குறாங்களா..? இதை பார்வது பெரியம்மாகிட்ட சொல்லணும் முதல்ல..!” என்று வினோதினி சொல்ல,

‘வேண்டாம் வினோ..! அம்மாவுக்குத் தெரிஞ்சா ரொம்ப சங்கடப் படுவாங்க..! விடு நடக்கறது நடக்கட்டும்..!” என்று மதி அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.

“நடக்கறது எதுவுமே எனக்கு என்னமோ சரியா படலை மதி..? இப்ப உனக்கு என்ன வயசாகுது..? எதுக்கு இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்றாங்க..!” என்று வினோதினி கோபத்தில் கத்திக் கொண்டிருந்தாள்.

அங்கு மணி முகிலனோ எப்படி மதியைப் பார்ப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தான். யாராவது ஒருவர் அந்த வீட்டிற்குள் போய் கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர்.

கங்காவும், செல்வியும் அந்த படத்திலேயே லயித்து விட்டனர்.

“இதென்னப்பா தம்பி பொண்டாட்டின்னு தெரிஞ்சும் அண்ணன்காரன் இப்படி பண்றான்..?” என்று அந்த திரைப்படத்தின் கதையை ஆராய்ந்து கொண்டிருந்தனர் சிலர்.

சுற்றும் முற்றும் பார்த்த முகிலனுக்கு எரிச்சல் வந்தது தான் மிச்சம். அவன் தவித்துக் கொண்டிருக்க, அவனுக்காகவே அந்த நேரம் பவர்கட் ஆனது.

“நல்ல படம் ஓடுது..! இப்ப பார்த்து இந்த கரண்ட் காரனுக்கு நோக்காடு வரணுமா..?” என்று சில கிழவிகள் சகட்டு மேனிக்கு திட்டிக் கொண்டிருக்க, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டான் மணி முகிலன்.

“என்ன மதி..? கரண்ட் போய்டுச்சு..!” என்று வினோ கேட்க,

“மண்ணெணெய் விளக்கு வச்சிருப்பாங்க..! கொஞ்ச நேரத்துல ஏத்திடுவாங்க..!” என்று சொன்னாள் மதி.

“நான் போய் பார்க்குறேன்..!” என்று வினோ நகர..

“இரு வினோ..! எங்கயும் போகாத. கொஞ்ச நேரத்துல அவங்களே கொண்டு வருவாங்க..!” என்று மதி சொல்ல, அதைக் கேட்காமல் அவள் சுவரை தடவிக் கொண்டே வெளியே நடந்தாள். மதிக்கு இதெல்லாம் பழக்கம் என்பதால் அப்படியே அமர்ந்து விட்டாள்.

முகிலனும் இருட்டில் தட்டுத் தடுமாறி மதி இருந்த அறையை அடைந்தான். அந்த அறையின் ஜன்னல் வழியே லேசாக நிலவின் வெளிச்சம் தெரிய, அதில் மதி நிழல் உருவமாய் தெரிந்தாள்.

“கூட யாரையும் காணோம்..?” என்றபடி மெதுவாக எட்டு வைத்து உள்ளே சென்றான் முகிலன்.

“என்ன வினோ ! விளக்கு எங்க..?” என்று மதி கேட்க,

“மதி..!” என்றான் முகிலன் ஆழ்ந்த குரலில்.

“மணி மாமா..!” என்றாள் அதிர்ச்சியாய்.

“தன்னுடைய குரலை அவள் உடனே கண்டு கொள்ளவும் அவனுக்குள் மகிழ்ச்சி ஊற்று.

“இங்க எதுக்கு வந்திங்க..? யாராவது பார்த்தா அவ்வளவு தான்..! கிளம்புங்க மாமா..!” என்று அவள் ஒரு பக்கம் பார்த்து சொல்லிக் கொண்டிருக்க, அவனோ அவளின் பின்னால் வந்து நின்றிருந்தான்.

பின்னிருந்து அவள் கையைப் பிடிக்க, மதிக்கு சர்வாங்கமும் ஒடுங்கியது. கைகால்கள் நடுக்கம் குடுக்க,

“விடுங்க மாமா..! இப்போ வினோதினி வந்திடுவா..! இங்க இருந்து கிளம்புங்க முதல்ல..!” என்று அவள் சொல்ல....காற்றாய் வந்தது அவள் குரல் பயத்தில்.

“வந்தா நான் பார்த்துக்கறேன்..! ப்ளீஸ் ரெண்டு நிமிஷம். இனிமேல் இது மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் வராது..!” என்று சொல்லியவன்..பின்னிருந்து அவளை அணைத்தான்.

அறியாத வயதில் ஒரு ஆணின் தொடுதல் அவளுக்குள் பல ரசாயன மாற்றங்களைக் கொடுக்க, அவனிடம் இருந்து விலக முற்பட்டாள்.ஆனால் முடியவில்லை. அவளின் காதோரத்தில் முத்தமிட்டவன்....முகத்தைத் திருப்பி முகம் முழுவதும் முத்தமிட...எதுவும் பேசவும், மறுக்கவும் திராணியற்று நின்றாள் மதி.

அவனிடம் மயங்கி நின்றவளுக்கு, சற்று முன் அவன் அப்பா பேசியது நினைவிற்கு வர, பட்டென்று அவனை உதறினாள் அவனை.
“மதி..!” என்று மீண்டும் அவளை அணைக்கப் போக,

“இப்ப கிளம்ப போறிங்களா..? இல்லை நான் சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடவா..?” என்றாள்.

“எதுக்கு இப்ப இப்படி கோவமா பேசுற..? இவ்வளவு நேரம் நல்லா தான இருந்த..?” என்றான் புரியாமல்.

அதற்குள் வினோவின் குரல் கேட்க,

“கிளம்புங்க மணி மாமா..!” என்றாள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு. அந்த அரை இருளில் அவளின் முகம் சரியாக தெரியா விட்டாலும், அவள் குரலில் இறுக்கம் இருந்தது முகிலனுக்கு நன்றாகத் தெரிந்தது.

அவன் கோபத்துடன் வெளியே செல்ல, பலமாக ஒருவர் மீது இடித்துக் கொண்டான்.

“ஸ்ஸா..!” என்று வினோ முகத்தை சுழிக்க, போன கரண்ட்டும் வந்தது.

அவனோ அவளிடம் மன்னிப்பு கூட கேட்காமல் போக, உள்ளே வந்த வினோ..

“ஹேய் யாருடி அது..! எருமை மாடு மாதிரி இடிச்சுட்டு ஒரு சாரி கூட சொல்லாம போறான்..!” என்றான் வினோதினி.

“ஐயோ கத்தாத வினோ..! அவர் தான் மணி மாமா..!” என்றாள் மதி.

“என்னது மணி மாமாவா..?” என்று வினோ முகத்தை சுருக்க, மதி தலை குனிந்த விதத்தில் அப்போது தான் விநோதினிக்கும் புரிந்தது.

அவள் வந்ததில் இருந்து முகிலனைப் பார்க்கவில்லை.இப்போது தான் பார்க்கிறாள்.

“இந்த பட்டிக்காட்ல இப்படி ஒரு ஹேண்ட்சம்..! எப்படி இருக்காரு..?” என்று மனதில் எண்ணியவள்,

“ஹேய் மதி..! நிஜமாவே மாமா செம்ம அழகுடி..!” என்றாள்.

“கொஞ்ச நேரம் பேசாம இருடி..! யாராவது வந்து, அவங்க காதுல விழுந்தா, அப்பறம் அதுக்கு ஒரு பிரச்சனை பண்ணுவாங்க..!” என்றாள் மதி.

“அடிபோடி இவளே..! எதுக்கெடுத்தாலும் பயந்துகிட்டு...! யார் என்ன சொன்னலும் எனக்கு கவலையில்லை..!” என்றாள் வினோ.

“நீ மெட்ராஸ்ல இருக்க வினோ..! அதனால உனக்கு இதெல்லாம் சாதரணமா தெரியும். ஆனா இந்த ஊர்ல அப்படி இல்லை.
ஒண்ணுன்னா ஒன்போதுன்னு உடனே பரப்பிடுவாங்க..! யாருக்கும் கவலைப் படாம, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன். அதுக்கான பரிசுதான் இந்த கல்யாணம்..! இதெல்லாம் அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்..” என்றாள் மதி.

“சரி விடுடி..! கவலைப்படாத.எல்லாம் நல்லதே நடக்கும்..” என்றாள் வினோ ஆறுதலாக.

அங்கே அரசியின் வீட்டில்...

“நாளைக்கு கல்யாணத்துல மதிக்கு ஏதாவது செய்வோமா?” என்றார் வடிவேல்.

“என்ன சொன்னிங்க..? அவளுக்கு செய்யனும்ன்னு எனக்கு என்ன தலை எழுத்தா..? அதெல்லாம் செய்ய முடியாது..!” என்றார் அரசி திட்டவட்டமாக.

“நமக்கு இருக்குறது ரெண்டும் பையனுக தான..? அதனால..” என்று அவர் இழுக்க,

“அதனால..! சொல்லுங்க அதனால..! இருக்கறதை எல்லாம் போய் தூக்கிக் குடுத்துட்டு வந்துடுங்க..! யார் வேணாம்ன்னு சொன்னா..? ஏற்கனவே நான் பெத்த ரெண்டும் சொன்ன பேச்சு கேட்காம அங்க தான் எடுபிடி வேலை செஞ்சிட்டு இருக்கானுக..! இப்ப நீங்க இப்படி சொல்றிங்க..? உங்களுக்கும் சொக்குப் போடி போட்டாளுங்களா..?” என்று அரசி ஒரு சண்டைக்கே தயாராக,

இதற்கு மேல் அரசியிடம் பேச முடியாது என்று நினைத்த வடிவேலும் அந்த இடத்தை காலி செய்தார்.

“என்னாக்கா..? உங்க புருஷன் முகத்தை தொங்கப் போட்டுட்டுப் போறாரு..!” என்ற படி சரியான நேரத்திற்கு வந்தார் திலகா.

“அவரு தம்பி மகளுக்கு ஏதாவது செய்யணுமாம். என்கிட்டயே சொல்றாக. அதான் நாலு குடு குடுத்தேன்..!” என்றார் அரசி கோபமாக.

“என்னக்கா...! திடீர்ன்னு அவளுக மேல பாசம் பொங்குது..?” என்றார்.

“அது தான் எனக்கும் புரியலை திலகா. நேத்து வரைக்கும் அமைதியா இருந்த மனுஷன், இன்னைக்கு இப்படிப் பேசுறாருன்னு சொன்னா யார் காரணம்..” என்றார் அரசி.

“எல்லாம் அந்த மேனா மினுக்கிக சொல்லிக் குடுத்திருப்பாளுக..!” என்று திலகா மேலும் அரசிக்கு மகுடி ஊதினார்.
 
“நான் விடுவேனா..?” என்றார் அரசி. அவரின் முகத்தில் ஒரு இறுமாப்பு. உண்மையில் அரசி நல்லவர் தான்.

திலகாவின் போதனை இல்லாமல் இருந்தால் அவர் நல்லவர் தான்.

“ஆனா என்ன செஞ்சும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியலையே அரசி அக்கா...?” என்றார் திலகா.

“விடு திலகா..! எங்கிட்டோ கல்யாணம் பண்ணிக்கிட்டு, நம்ம உசுர வாங்காம இருந்தா சரி..!” என்றார்.

“அது சரி தான்..!” என்ற திலகாவிற்கு மனது அடங்கவேயில்லை. மதிக்கு கல்யாணம் நடப்பது அவரின் பிரச்சனை அல்ல. முகிலனுடன் நடப்பது தான் பிரச்சனை.

“இந்த கோபியும், லட்சுமியும் இருக்குற இடமே தெரியலை. பிழைக்கத் தெரிஞ்சவக்கா...சைசா ஒதுங்கிகிட்டா பாருங்க..!” என்று திலகா சொல்ல,

“அவ என்னைக்கு எதுல மூக்கை நுழைச்சிருக்கா..? அவளை விடு திலகா..!” என்றபடி வீட்டிற்குள் செல்ல, அவர்களை நம்பினால் கதைக்கு ஆகாது என்று திலகாவிற்கு உறுதியாக தெரிந்து போனது.

டெக்கில் போட்ட படம் முடிய,

“படம் நல்லா இருந்துச்சு முகிலா..!” என்று ஆளாளுக்கு ஒன்றை சொல்லிக் கொண்டு எழுந்து சென்றனர்.

ஆனால் படத்தைப் போடும் போது இருந்த மகிழ்ச்சி, இப்போது இல்லை அவன் முகத்தில். அதற்கு காரணம் வண்ண மதி தான்.

அவள் பேசிய விதமும், தோரணையும் அவனுக்கு சரியாகப் படவில்லை.அவளைப் பார்க்க போகும் போது எவ்வளவு ஆசையாக சென்றானோ...அதே அளவு தவிப்புடன் வெளியே வந்தான்.

“ஒருவேளை அவளுக்கு நம்மளைப் பிடிக்கலையோ..?” என்று அவன் யோசிக்க,

“பிடிக்காமதான் நீ முத்தம் குடுத்தப்ப வாங்கிட்டு நின்னாளா..?” என்றது மனதின் குரல்.

“என்கிட்டே இருக்குற ஒரு தவிப்பு, ஒரு ஆசை இதெல்லாம் அவகிட்ட இல்லை. என்னைப் பார்த்தாலே பயந்து தான் ஓடுறா...ஒதுங்குறா..?” என்று யோசிக்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

அதற்கு மேல் தீவிரமாக யோசிக்கும் வயசு அவனுக்கும் இல்லை. அந்த வயதிற்கான துடிப்பு மட்டுமே அவனிடம். எதையும் புதிதாய் தெரிந்து கொள்ளப் போகும் ஒரு ஆர்வம், படபடப்பு இதெல்லாம் சேர்ந்து அவனை மற்ற யோசனையில் இருந்து தள்ளி வைத்தது.

“முகிலா போய்த் தூங்கு..! காலையில சீக்கிரமே எழுந்திருக்கணும்..!” என்று மலர் சொல்ல, தட்டாமல் எழுந்து சென்றான் அவனுடைய அறைக்கு.

அங்கு மதியின் நிலையோ சொல்லவே வேண்டாம். அவன் அணைத்த இடமும், அவன் இதழ் பட்ட இடங்களும்...அவளுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த வயதின் கோளாறு, படிப்பையும் தாண்டி முன்னால் வந்து நின்றது.

“படம் சூப்பரா இருந்துச்சு மதி..!” என்றாள் கங்கா.

“ம்ம்..” என்றாள் மதி. வினோதினி வாய்க்குள் சிரிக்க,

“எதுக்கு வினோ சிரிக்கிற..?” என்றாள் செல்வி.

“அது வந்து...” என்று அவள் மீண்டும் சிரிக்க,

“சொல்லு வினோ..!” என்று மேலும் ஊக்கினாள் கங்கா.

“முகிலன் மாமா..அங்க உங்க எல்லாருக்கும் படம் போட்டு காட்டிட்டு, இங்க வந்து தனியா ஒரு படம் ஓட்டிட்டு போய்ட்டார். பவர்கட் காதல்...!” என்றாள் வினோ சிரித்தபடி.

“நிஜமாவா மதி..!” என்றாள் கங்கா நம்பாமல்.

“ம்ம்..!” என்றபடி மதியும் தலை ஆட,

“உங்க வீடல பார்த்து பேசுனது பத்தாதுன்னு இப்ப இங்க வேறயா..?” என்றாள் கங்கா.

“என்னது அங்க வேறயா..?” என்று வினோ மீண்டும் சிரிக்க,

“ஆமாம்..! அங்க காவலுக்கு நான் நின்னேன். இங்க இருட்டே சாதகமா இருந்திருக்கு... மதி..ம்ம்..ம்ம்..” என்று அவர்கள் கிண்டல் செய்ய, அவர்களிடம் எதுவும் பேச முடியாமல் அவர்களைப் பார்த்து முறைத்தாள் வண்ண மதி.

மதிக்கும், முகிலனுக்கும் அது விடியாத இரவாகத்தான் போனது. தூக்கமும் வரவில்லை. விடியவும் இல்லை.

எப்போதடா விடியும் என்று முகிலனும், விடிஞ்சிடுமா..? என்று மதியும் தவித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன முத்து, தூங்கலையா..?” என்றார் முத்துவின் அம்மா.

“இல்லம்மா தூக்கம் வரலை..!” என்றான்.

“என்ன முத்து..? ஏன் ஒரு மாதிரி இருக்க..?” என்றார்.

“இந்த மதி என்கிட்டே ஒரு வார்த்தைகூட பேசலைம்மா..அதை நினைச்சாதான் கவலையா இருக்கு..!” என்றான்.

“டேய்..! அவளுக்கு விடியக்காலம் கல்யாணம்டா. கல்யாணப் பொண்ணு உன்கூடயா பேசிகிட்டு இருக்கும். கிறுக்குப் பயலே..பேசாம போய் தூங்குடா..!” என்றபடி அவரும் படுத்துவிட, முத்துவுக்கு ஏனோ மதியைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது.

ஏற்கனவே பார்க்க போய், அவளிடம் பேச முடியவில்லை. கங்கா அவனைத் திட்டி அனுப்பிவிட்டாள். இந்த நேரத்திற்கு மேல் போனால் சரியாக இருக்காது.. என்று நினைத்தவன், தூங்காமல் அப்படியே அமர்ந்தான்.

மதியுடன் பள்ளி சென்றது, அவள் பேசியது, சிரித்தது என்று ஒவ்வொன்றாய் அவனின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்க, அந்த நினைவிலேயே அமர்ந்திருந்தான் முத்துகிருஷ்ணன்.

நேரம் அதிகாலை நான்கு மணியைக் காட்ட, மதியை யாரோ தட்டி எழுப்பினர்.

“மதி எழுந்திரு..!” என்று அத்தை முறையில் ஒருவர் எழுப்பிக் கொண்டிருந்தார். அதற்குள் அவளுக்கு சுடு தண்ணீரைக் கொண்டு வந்த மலர்...

“மதி..! எந்திருச்சு பல் தேச்சுட்டு குளிச்சுட்டு வாம்மா...!” என்று சொல்லி விட்டு செல்ல, தூக்கக் கலக்கத்தில் எழுந்து அமர முடியாமல் எழுந்தாள் மதி.

“இப்ப தான தூங்குனேன்..! அதுக்குள்ள எழுப்பி விடுறிங்க..? நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் அத்தை..!” என்றபடி அவள் படுக்கப் போக,

“அடியேய் உனக்கு கல்யாணம்டி..! கொஞ்சமாவது பொறுப்பிருக்கா பாரு..! எழுந்திரி..!” என்று அவர் அதட்ட, அப்போது தான் நியாபகம் வந்தவளாய் எழுந்தவள்,

“ஆமாம்ல எனக்கு கல்யாணம்..!” என்றபடி முகத்தைத் தேய்த்தாள். சத்தத்தில் எழுந்த கங்காவும்...

“அப்படியே சொல்லிட்டே இரு..! எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம்ன்னு..! எவடி இவ..? வா போகலாம்..!” என்று அவளை அழைத்துச் சென்றாள்.

வினோதினியும், செல்வியும் அடுத்தடுத்து எழுந்து சென்றனர். அதிகாலை ஐந்து மணிக்கே, மீண்டும் மைக் செட்டில் பாடல்கள் ஒலிபரப்பப் பட, அந்த வீடே கல்யாண கோலம் கொண்டது.

குளித்து விட்டு வந்தாலும், தூங்கித் தூங்கி விழுந்து கொண்டிருந்தாள் வண்ண மதி.

“என்னடி இவ இப்படி தூங்கி வழியறா..?” என்று கங்கா கேட்க,

“தெரியலைடி..! நாளைக்கு நமக்கும் கல்யாணம் வைக்கிறப்போ இப்படிதான் தூங்கி விழுவோமா..?” என்று செல்வி, தன்னுடைய முக்கியமான சந்தேகத்தைக் கேட்டாள்.

“இப்ப இது ரொம்ப முக்கியமா..?” என்றாள் கங்கா.

அதற்குள் இரண்டு பெண்கள் வந்தனர். மதி பொம்மை போல் நிற்க, அவளுக்கு சேலையைக் கட்டத் தொடங்கினர்.

இந்த அழகு நிலைய பெண்கள் எல்லாம் அப்போது இல்லை. அண்டை வீட்டுக்கார பெண்கள் தான் அழகு நிலையைப் பெண்கள் போல் அலங்கரிப்பார்கள்.

அவர்கள் இடுப்பில் சேலையை சொருகும் போதெல்லாம், மதி கூச்சத்தில் நெளிய,

“நேரா நில்லு மதி..!” என்ற அதட்டலுடன் அவளுக்கு சேலையைக் கட்டி முடித்தனர்.

ஜடையைப் பின்ன ஆரம்பிக்க, அதற்குள் அவளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. அந்த ஜன்னலைத் திறந்து விடு செல்வி.

காத்து வரட்டும்..! என்று சொல்லியபடி அவளுக்கு ஜடை அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

குஞ்சம் வைத்து ஜடை பின்னி, தலையில் மேல், மல்லிகை, கனகாம்பரம் அடுக்காக சுத்தி, அதை ஜடையிலும் சுத்தி, அவளின் தலையில் நன்றாக கனத்தை ஏற்றி, ஒருவழியாக அலங்காரத்தை முடித்தனர்.

தங்க நிறத்தில் பெரிய கரை வைத்த சிவப்பு வண்ண பட்டுப் புடவையும், அதற்கு மேட்சாக ஜாக்கெட்டும் அணிந்து, ஜடை அலங்காரம் செய்து அம்சமாக இருந்தாள் மதி.

முகத்தில் அந்த குழந்தைத் தனம் மாறாமல் இருந்தது. அதை ஒன்றைத் தவிர கொஞ்சம் பெரிய பெண்ணாகவே தெரிந்தாள். அவளுக்கு அவர்கள் அலங்காரத்தை முடிப்பதற்குள், செல்வி, கங்கா, வினோ என மூவரும் தயாராகி வந்தனர்.

“மதி..சூப்பர்..!” என்று செல்வி சொல்ல,

“நீ வெள்ளைக் கலருன்னு தெரியும். ஆனா இம்புட்டு வெள்ளைன்னு இன்னைக்கு தான் தெரியுது..!” என்றாள் கங்கா.

சிகப்பு நிற புடவை அவள் நிறத்தைத் தூக்கிக் காட்டியது. அதனால் கூடுதல் அழகோடு தெரிந்தாள்.

“நிஜமாவா..? நல்லாயிருக்கா..?” என்றாள்.

“நிஜமாவே சூப்பரா இருக்கடி..!” என்றனர் தோழிகள். அந்த வயதிற்கு உரிய ஆர்வத்தில் அவள் கேட்டுவிட, அவர்கள் சொன்ன பதிலில் மதிக்கும் கொஞ்சம் நிறைவாகத்தான் இருந்தது.

அங்கு முகிலனோ வேட்டியுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தான்.

“இன்னும் என்ன முகிலா செய்ற..?” என்றபடி மலர் வர...

“அம்மா..! இந்த வெட்டி இடுப்புல நிக்கவே மாட்டேங்குது..!” என்றான்.

“இது கல்யாண வேஷ்ட்டி..கொஞ்சம் வழுவழுன்னு இருக்கறதால நிக்காது. பொறுமையா கட்டிட்டு வா..!” என்று சொல்லிவிட்டு சென்றார் மலர்.

ஒரு வழியாக போராடி.. அந்த வேட்டியை கட்டி முடித்தான் முகிலன். பட்டுவேட்டியும், பட்டு சட்டையுமாக அவன் கிளம்பி கண்ணாடியைப் பார்க்க, அவனுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை.

“சும்மா சொல்லக் கூடாது முகிலா.நீயும் கொஞ்சம் அழகா தான் இருக்க..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன்... சீவிய தலையை மேலும் சீவிக் கொண்டிருந்தான்.

இங்கே இவனும், அங்கே அவளும் தயாராக இருந்தனர்...திருமண பந்தத்தில் இணைவதற்கு.

 
Top