Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

karisal kaathal -1

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காதல் 1:

வண்ணங்களில் பல வண்ணங்கள் இருப்பதைப் போல...மனிதர்களிலும் பலவகை மனிதர்கள்..அவர்களின் மனங்களிலும் பலவித எண்ணங்கள். இன்றைய நாள் சிலருக்கு பத்தோடு பதினொன்று,சிலருக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் நாள்,சிலருக்கு துக்கத்தை கொடுக்கும் நாள்,பலருக்கு நல்ல பாடங்களை புகட்டும் நாள்..

இப்படி ஒரு நாளின் பங்களிப்பு....ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு வித மாறுதல்.எல்லாருக்கும் ஒன்றாய் அமைவதில்லை.. அன்றைய நாளும் சரி,வாழ்க்கையும் சரி.

எதை நோக்கி செல்கிறோம் என்று தெரியாமல் சில மனிதர்கள்,எதற்காக செல்கிறோம் என்று தெரியாத சில மனிதர்கள்,செல்லும் இடம் தெரிந்தாலும் வழி தெரியாத சில மனிதர்கள்,அப்படியே இறுதியாக அங்கு சென்றாலும் எதற்காக அந்த இடத்தை அடைந்தோம் என்று அறியாத சில மனிதர்கள்.

இவர்களில் வெகு ஒரு சிலர் தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே.. வாழ்க்கைப் பாதையை கடக்கின்றனர்.கடந்து வந்த பாதையில் ஆயிரம் தடங்கல் இருந்தாலும்..கடந்துவிட்ட திருப்தி தான் அவர்களின் வாழ்வில் அனுபவமாய் கிடைக்கிறது.

எப்படியும் வாழ்ந்துவிட்டு போகலாம் என்ற சில மனிதர்களின் மத்தியில் இப்படித்தான் வாழவேண்டும் என்ற சில கட்டுப்பாடுகளும்,தங்களுடையை கடமைகளையும் மனதில் வைத்துக் கொண்டு வாழும் சில மனதர்களை நாம் காணப் போகிறோம்...

இயற்கை- தன்னுடைய அழகையும்,ஆபத்தையும் ஒருங்கே காட்டும் ஒரு அற்புத சக்தி.அதை அழகாய் பார்ப்பவர்களுக்கு அது அழகு.ஆபத்தாய் பார்ப்பவர்களுக்கு அது ஆபத்து.சீண்டியவர் வேண்டி நின்றாலும்..அது தன் கோர தாண்டவத்தை நிறுத்தியதில்லை.

இயற்கையை மாற்ற நினைத்தவர்கள்,நினைப்பவர்கள் ஓரு போதும் வென்றதாக சரித்திரம் இல்லை.இது இயற்கைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.அது நம் நாயகிக்கும் பொருந்துமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்று....

சேலம் அருகில் உள்ள சிற்றூருக்கு செல்லும் பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் மதி என்று அழைக்கப்படும் வண்ண மதி.பெயரில் உள்ள வண்ணம் அவள் வாழ்வில் இல்லை என்ற பிரம்மை அவளுள்.

பொதுவாக அந்த ஊருக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறைதான் சிற்றுந்து செல்லும்.

கனரக வாகனங்களின் வரத்து இல்லாமல் இருந்ததாலோ என்னவோ அந்த ஊரின் பசுமையும் செழிப்பும் அளவளாவிக் கிடந்தது.சாலையின் இருபுறங்களிலும் வாழைத் தோப்புக்களும்..வழி நெடுகிலும் சாலையை ஒட்டிய நீர் ஓடையும்,சாலையின் இருபுறமும் புளிய மரங்களும்..இப்படி பார்ப்பதற்கே ரம்மியமாக,மனதில் எவ்வளவு சுமை இருந்தாலும் குறைக்கும் வலி நிவாரணியாக காட்சி அளித்தது அந்த பகுதி.

“மலரின் கதவொன்று திறக்கின்றதா..
மௌனம் வெளியேறத் தவிக்கின்றதா..
பெண்மை புதிதாக துடிக்கின்றதா..
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா..
முத்தம் கொடுத்தானே,இதழ் முத்துக் குளித்தானே..
இரவுகள் இதமானதா...
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே..”

என்ற வைரமுத்துவின் வரிகள்..இளையராஜாவின் இசையில் ..மனதை வருடி செல்ல..வெளியே நிலவிய மேகம் கூடிய காலநிலையும்,தன்னைத் தழுவிச் சென்ற தென்றலும்,சுற்றி இருந்த பசுமையும்...இவை எதையும் உணராமல் ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள் வண்ணமதி.

பெயருக்கு ஏற்ற மதி போன்ற முகம்.அழகி என்று ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று சொல்லக் கூடிய வசீகர முகம்.அவளுக்கு பிடிக்காத அந்த முகம்.ஆனால் அனைவருக்கும் பிடித்த அழகு முகம்.

சுடிதார் அணிந்திருந்தாலும்..அதை இருபுறமும் பின் செய்திருந்தாள். திருத்தப்படாத புருவங்கள்...திருத்தவே தேவையில்லை என்னும் அளவிற்கு வில்லாய் வளைந்திருந்தது.காஜல் இடப்படாத விழிகள்..அதன் தேவையே தெரியாத அளவிற்கு அழகாய் இருந்தது.

ஆனால் முகத்தில் இருந்த அமைதியும்,உணர்வும் மனதில் இல்லை என்பதை மெய்யாக்கும் விதத்தில் அவளின் முக பாவனைகள் இருந்தது.அந்த ஊரை நெருங்க நெருங்க...கண்ணில் பட்ட சில இடங்கள் அவள் மனதை ரணமாய் கீற..பல நியாபகங்கள் அவள் எண்ண இடுக்குகளில்.

அம்மா,அப்பா,தங்கை என அனைவரும் அவ்வூரில் தான் இருக்கின்றனர். ஆனால் அவளோ முழுதாக பத்து வருடங்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறாள்.

அவளின் வைராக்கியத்திற்காக அல்ல.அவள் அம்மாவின் ரோஷத்திற்காக. அவர் சொன்ன சொல்லுக்காக...பத்து வருடங்கள் கடந்த நிலையில் அந்த ஊருக்கு வருகிறாள்.அதற்காக அவர்களை இத்தனை வருடங்கள் பார்க்காமல் இருந்தால் என்று சொல்ல முடியாது.இவள் இருக்கும் இடம் தேடி அவர்கள் சென்று பார்த்தனர்.ஆனால் இவளை வரவிடவில்லை என்பதே உண்மை.

அந்த மினி பஸ்ஸில் இருந்த யாருக்கும் அவளை சுத்தமாக அடையாளம் தெரியவில்லை.ஆள் மாறவில்லை என்றாலும்,அவள் அழகும்,உடலும் வளர்ச்சி கண்டிருந்தது.கூர்மையாக பார்த்தாலே ஒழிய அடையாளம் தெரியாது.
அதுவே அவளுக்கும் வசதியாக போனது.யாரும் எதுவும் பேசவில்லை.சிந்தனைகளில் மூழ்கி இருந்தவளை கையில் இருந்த செல்போன் அழைத்தது.பட்டன் செல் தான்.

அழைத்தவள் அவளின் நண்பி வினோதினி.

ஒருநிமிடம் யோசித்தவள்..மெதுவாக அட்டென் செய்து காதில் வைத்தாள்.

“சொல்லு வினோ..!” என்றாள்.

“மதி..ஊருக்கு போயிட்டியா..?”
 
“இன்னும் இல்ல வினோ..போய்கிட்டே இருக்கேன்..!” என்றாள்.

“எதுக்கு குரல் ஒரு மாதிரி இருக்கு? எதையும் மனசுல போட்டு குழப்பாம இரு.இனி நடக்குறது எல்லாம் நல்லதா தான் நடக்கும் புரியுதா..?” என்றாள்.

“அறிவுக்கு புரியுது,மனசுக்கு புரியலை..!” என்றாள்.

“மறுபடியும் ஆரம்ப புள்ளிக்கே வந்து நிக்காத மதி..புரியும்ன்னு நினைக்கிறேன். வீட்டுக்கு போன உடனே எனக்கு போன் பண்ணு..!” என்றாள் வினோ.

“ம்ம் சரி வச்சிடுறேன்..!” என்றவள்...விநோதினியை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

ஒரு உண்மையான நட்பு.யாருக்கும் சீக்கிரம் கிடைப்பதில்லை.ஆனால் மதிக்கோ வாழ்வில் கிடைத்த எல்லா நட்புமே உண்மையான நட்பாகத் தான் இருந்தது.எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ.

புழுதி பறக்க...அந்த நிறுத்தத்தில் நின்றது அந்த மினி பஸ்.அவரவர் இடித்துக் கொண்டு இறங்க...

“ஏம்மா பாத்து இறங்குங்கம்மா...கீழ விழுந்துட போறீங்க..!” என்ற கண்டக்டரின் வார்த்தை யாரின் காதிலும் தெரிந்தபாடில்லை.

உடல் வெடவெடக்க..ஒரு சின்ன பயம் மனதிற்குள் பூக்க...மதியும் இறங்கினாள்.

அதுவரை அவளை கண்டுகொள்ளாத பல கண்கள்..அவர்கள் ஊர் நிறுத்தத்தில் இறங்கவும் அவளை யோசனையுடன் பார்த்தது.

நாடும்,விஞ்ஞானமும் எவ்வளவு வளர்ந்திருந்தாலும்..நாங்கள் வளர மாட்டோம் என்று அடம்பிடிக்கும் வர்க்கத்தினர் அவர்கள்.

“ஏம்மா யாரு வீட்டுக்கு வந்திருக்க..? வயசுபிள்ள தனியாவா வந்திருக்க?” என்று சில பெண்கள் கேட்க..

“யாருடி இவ..எந்த காலத்துல இருக்கீங்க? நீங்கதான் அப்படியே இருக்கிங்கன்னா...எல்லாரும் அப்படியே இருக்கனுமா என்ன?” என்று கொஞ்சம் விவரமான பெண் கேட்க..

“அதைச் சொல்லு..!” என்று உடனே ஏற்றுக் கொண்டனர்.அவர்களுக்கும் மாற ஆசைதான்.அவர்களின் வாழ்க்கை முறையும்,உறவுகளும் விட்டால் தானே.

அவங்க இப்படி சொல்லுவாங்க..இவங்க அப்படி சொல்லுவாங்க என்று ஊராரின் வாய்க்கு பயந்தே வாழப் பழக்கப்பட்டவர்கள்.இவர்களைப் பார்த்தால் பலருக்கு சிரிப்பாக இருக்கும்.ஆனால் அவர்களின் கஷ்ட்டம் அவர்களோடு.

“உன்ன எங்கையோ பார்த்த மாதிரி இருக்கேம்மா..? உன் பேரென்ன..?” என்று ஒரு வயசான பாட்டி கேட்க..

“என்னை அடையாளம் தெரியலையா பணியாரக்கார பாட்டி..நான் தான் வண்ண மதி..!” என்றாள் கணீர் குரலில்.

“ஆத்தி...மனோகரன் மக வண்ணம்மாவா நிய்யி...ஆளே அடையாளம் தெரியலை தாயி..நல்லாயிருக்கியா..?” என்று கேட்க..
“நல்லாருக்கேன் பாட்டி.நீங்க நல்லா இருக்கிங்களா?” என்றாள்.

“எனக்கென்ன ஆத்தா..புள்ளையா குட்டியா..நல்லாத்தான் இருக்கேன்.!” என்றார் அந்த பாட்டி சலிப்புடன்.

பணியாரக்கார பாட்டியைப் பார்த்த உடன் அவள் நெஞ்சில் அலை அலையாய்,ஆழிப் பேரலையாய் பழைய நினைவுகள்.அவளின் வாழ்க்கை வரலாறில் இந்த பாட்டிக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.

“பார்த்தியாடி பார்வதி மகளை..? எவ்வளவு பெரிய பொண்ணாயிட்டா.. ஆளும் பார்க்க அம்சமா இருக்கா...”என்று மற்றவர்கள் பேசிக் கொண்டு நடக்க..அதைக் கேட்டும் கேட்காத மாதிரியே நடந்து கொண்டிருந்தாள் வண்ண மதி.

அந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அவர்களின் ஊருக்குள் செல்ல இரண்டு மைல் தூரம் நடக்க வேண்டும்.அமைதியாக நடந்து கொண்டிருக்கும் போதே..அவளின் அருகில் வந்து நின்றது அந்த டிவிஎஸ் பிப்டி.அவளின் அப்பா மனோகர் அவளை கூப்பிட வந்திருந்தார்.

வண்டிக்கு முன்னே புல்லுக் கட்டு இருக்க...அவரைப் பார்த்தவுடன் கண்களில் தேங்கிய கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டாள் மதி.

“வா மதி..புல்லருக்க போயிருந்தேனா..அதான் கொஞ்சம் நேரமாகிட்டது..வண்டில ஏறுமா..!” என்று சொல்ல..தனது லக்கேஜை மடியில் வைத்துக் கொண்டு அப்பாவின் பின்னால் அமர்ந்தாள் மதி.

“பார்த்திங்களா அக்கா...மக நடக்க கூடாதுன்னு...மனோகரன் வந்து வண்டில கூட்கிட்டு போறதை..” என்றாள் ஒரு பெண்.
“இருக்காதா பின்ன..அவ்வளவு கஷட்டப்பட்ட காலத்துலயே மகளைத் தாங்குவான்..இப்ப சொல்லவா வேணும்..எப்படியோ நல்லா இருந்தா சரிதான்..!” என்று அந்த பெண் பேச்சை முடித்துக் கொண்டாள்.

“அதெப்படி நல்லா இருக்க முடியும்..அவனுக இருக்க வரைக்கும் நல்லா இருக்க விட்டுடுவானுகளா? எப்படியோ..இனி ஊருக்குள்ள அடிக்கடி ஓரு கச்சேரி இருக்கு..!” என்று..வம்பு பேச விஷயம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த பெண் நடக்க...

இவர்கள் யாரைப் பேசிக் கொண்டு நடக்கிறார்களோ.. அவர்களைப் பார்த்துவிட்டு வந்து விடுவோம்.

மனோகரன்-பார்வதி தம்பதிக்கு இரண்டு பெண்கள் மூத்தவள் வண்ண மதி.இளையவள் சுமதி.

மனோகரனுக்கு இரண்டு அண்ணன்கள் வடிவேல்-அரசி,கணபதி-திலகா.மற்றும் ஒரு தம்பி கோபி-லட்சுமி.

கல்யாணம் ஆவதற்கு முன்பு இருந்த ஒற்றுமை அதற்கு பிறகு அண்ணன் தம்பிகளிடம் இல்லாமல் போனது தான் கொடுமையிலும் கொடுமை.

அதிலும் நிரந்தர பகையாளி ஆன கதை எல்லாம் உண்டு.அண்ணன்கள் மற்றும் தம்பி ஆகியோருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் வீதம் இருக்க...மனோகரனுக்கு மட்டும் இரண்டும் பெண்ணாகிப் போனதில் மனோகரனுக்குமே சற்று வருத்தம் என்பதை விட..அதுவே ஏக்கமாகிப் போனது.

“வாரிசு அத்தவன்..” என்ற குத்தல் பேச்சுக்களை அதிகம் தாங்கி பழக்கப்பட்டவர மனோகரன்.அந்த மாதிரியான நேரங்களில் பார்வதி தான் அவரிடம் சிக்கிக் கொள்வார்.
 
ஆண் பிள்ளை இல்லை என்றாலும்...அந்த குறையை மனதில் வைத்துக் கொண்டு அவர் வண்ணமதியையும்,சுமதியையும் ஒரு நாளும் பார்த்ததில்லை.அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்துப் போய்விடுவார்.

அதிலும் மூத்த பெண் வண்ணமதி மீது அவருக்கு அளவற்ற பாசம் என்று கூட சொல்லலாம்.

பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள்..நிலங்களாக இருந்தது அவர்களுக்கு.ஆனால் பிரிக்கபடாமல் இருந்தது.

அண்ணன்,தம்பிகளுக்குள் ஒற்றுமை இல்லாத ஒரே காரணத்தினால் அந்த நிலங்கள் முழுவதும் எதற்கு உபயோகப்படாமல் இருந்தது.விட்டுக் கொடுக்கும் மனம் அங்கே யாருக்கும் இல்லை.

இதில் மனோகரன் கொஞ்சம் விதிவிலக்கு.தனக்கு சேர வேண்டியது வந்தால் போதும் என்று என்னும் ராகம்.ஆனால் அதை அவ்வளவு சீக்கிரம் பிரித்துக் கொள்ள யாரும் முன் வரவில்லை.

ஊருக்குள் பேர் சொல்லும்படி ஒரு காலத்தில் வாழ்ந்த குடும்பம்.இன்று நாறிக் கிடக்கிறது.

அண்ணன்களின் பிள்ளைகள் அண்ணனைப் போலவே குணத்திலும் இருக்க...தம்பியின் பிள்ளைகளும் தம்பியின் குணத்தை நகல் எடுத்திருக்க...அவர்களின் சண்டையும்,சச்சரவுகளும் ஊர் அறிந்த ஒரு விஷயம்.

இவர்களுக்கு வாய்த்த மனைவிகளில் பார்வதி மட்டும் கொஞ்சம் விதி விலக்கு.யாருடனும் சண்டைக்கு போக மாட்டார்.வீண் வம்புகளை இழுக்க மாட்டார்.சண்டை என்றாலே பத்தடி தள்ளி நிற்கும் குணம்.

இதனால் அந்தா ஊருக்குள் அவருக்கென்று ஒரு நல்ல பெயர் இருந்தது.அது தான்...பொறுமையானவள் என்ற பெயர்.

ஆனால் பார்வதி மனதளவில் மிகத் திடமானவர்.அவரின் கஷ்ட்டம் அவர் சொன்னாலே ஒழிய..அவர் முகத்தில் கூட தெரியாது.எல்லாவற்றையும் மனதிற்குள் போட்டு மறுகும் ரகம்.

இரண்டு பெண் குழந்தைகளின் தாய் என்ற பொறுப்பு அவர் நடத்தையிலும்,அவர் பேச்சிலும் தெரியும்.மிகவும் கண்டிப்பானவர்.அதற்கு பின் பல காயங்கள் அடங்கியுள்ளது என்பதை அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

வீட்டின் முன்னால் வண்டி நிற்க...வண்டியிலிருந்து இறங்கினாள் வண்ண மதி.

“வீட்டுக்குள்ள போமா..! நான் புல்லுக்கட்டை மாட்டுக் கொட்டகையில் போட்டுட்டு வந்துடுறேன்..” என்றபடி மனோகரன் செல்ல...வீட்டினுள் அடியெடுத்து வைக்க போன மதிக்குள்...பல நியாபகங்கள்.

“ஹைய் அக்கா...வாக்கா...நீ எப்போ வருவ வருவன்ன அம்மாகிட்ட கேட்டுகிட்டே இருந்தேன்..” என்றபடி ஓடி வந்த அவளின் தங்கை சுமதி அவளை அணைத்துக் கொண்டாள்.

“எப்படி சுமதி இருக்க..?” என்றாள் பாசமாய்.

“எனக்கென்னக்கா நீ இல்லைங்கிற ஒரு குறையைத் தவிர நான் நல்லா இருக்கேன்..!” என்றாள் வெகுளியாய்.
“நீதான்க்கா ஆளே மாறிப் போயிட்ட ..! ரொம்ப அழகா வேற ஆகிட்டக்கா..” என்றாள் சிரிப்புடன்.

“வா மதி..!” என்றார் பார்வதி.

“அம்மா..!” என்று ஒரு நிமிடம் கண் கலங்கியவள்...தன் தாயை அணைத்துக் கொண்டாள்.

“இப்ப எதுக்கு கண் கலங்கிட்டு இருக்க...போ..போய் குளிச்சுட்டு வா..” என்றார்.

அவகளின் வீடு ஓட்டு வீடு.ஆனால் விசாலமான வீடு.நடுவில் முற்றம்,பின்னால் மாட்டுக் கொட்டகை என கொஞ்சம் பழமையாக..அதே சமயம் அழகாக இருக்கும்.வீட்டை சுற்றிலும் இருக்கும் மரங்கள்,பூச்செடிகள் தான்...அந்த வீட்டிற்கு அழகே.

பத்து வருடங்களுக்கு முன்னால் வீடு எப்படி இருந்ததோ..இப்பவும் அப்படியேதான் இருந்தது.மரம் செடி,கொடிகள் தான் வளர்ந்திருந்தன.வேறு எந்த மாற்றமும் இல்லை.

வீட்டின் கொள்ளை புறத்தில் (பாத்ரூம்) குளித்து விட்டு வந்த வண்ண மதிக்கு...சூடாக சாதத்தை பரிமாறினார் பார்வதி.

தட்டில் மீன் குழம்பைப் பார்த்த மதிக்கு கண்களில் கண்ணீர்.அம்மாவின் கையால் சாப்பிடும் மீன் குழம்பின் ருசி அறிந்தவள் அவள்.பல வருடங்கள் கழித்து மீண்டும் அதே மணத்துடன் இருந்தது சாப்பாடு.

கண்களில் தேங்கிய கண்ணீருடன்..அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நின்று விட்டார் பார்வதி.சுமதியும் தட்டை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர...மனோகரனும் வந்தார்.

அப்பா,பிள்ளைகள் என மூவரும் சாப்பிட..பார்வதிக்கு பார்க்க பார்க்க..மனம் நிறைந்து போனது.

அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது...

”டேய் முத்து இங்க வாடா..!” என்ற குரல் கேட்க...

அந்த பெயரில் திகைத்து...எடுத்த கவளம் வாய்க்குள் செல்லாமல்..பாதியில் நின்றது.

கண்ணில் இருந்து...கண்ணீர் வெளியேறத் தயாராய் இருந்தது.பார்வதி முறைத்துப் பார்க்கவும் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

ஆனால் மனதை..?

காதல் தொடரும்...
 
Top