Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

24. (Final) Ivan Vasam Vaaraayo!

Advertisement

Annapurani Dhandapani

Well-known member
Member


24. (Final) இவன் வசம் வாராயோ!


தன் கையாலேயே தைத்த, டிசைனர் பிளவுசை போட்டு பச்சைப் பட்டுடுத்தி, அதற்கேற்ற அணிகலன்களை அணிந்து கொண்டு மல்லிகைப் பூவும் ரோஜாப்பூவும் சேர்த்து வைத்துத் தைத்த ஜடை வைத்துப் பின்னிக் கொண்டு, கண்ணாடி வளையல்களுடன் கூட வளர்மதி கொடுத்த தங்க வளையல்களையும் அணிந்து கொண்டு எழில் தேவதையாய் நடந்து வந்த நிரஞ்ஜனாவைப் பார்த்து ஊரே வியந்தது.

"யப்பா தமிளு.. உம் பொஞ்சாதி என்னா அளகு.. நீ இத்தன காலம் காத்துகிட்டிருந்தது வீண் போகலப்பா.." என்று ஒரு நடுத்தர வயது ஆள் வந்து தமிழின் காதில் சொல்லிவிட்டுப் போக,

"ஹூம்.. எல்லா கொள்ளிக் கண்ணும் எம் பொண்ணு மேலதான்.." என்று சொல்லிக் கொண்டே நிரஞ்சனாவின் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்தாள் வளர்மதி.

முத்தழகி, பாலா திரிபுரசுந்தரியின் மறு உருவமோ என்று எண்ணும்படி நிரஞ்சனா தைத்துக் கொடுத்த பட்டுப் பாவாடை சட்டையில் குட்டி தேவதையாய் அவளுடைய தாத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு தளிர் நடை போட்டு வந்தாள்.

"இப்டி நடந்தா தங்கத்துக்கு கால் வலிக்குமே.." என்று சொல்லி ஈஸ்வர பாண்டி தன் பேத்தியைத் தூக்கிக் கொண்டார்.

சொக்கலிங்கம் நிரஞ்சனாவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்க, மதுரமும் வளர்மதியும் முகம் கொள்ளாப் பூரிப்புடன் தமிழைப் பார்க்க, அவனோ தன் படிப்பும் பணியும் கொடுத்த மிடுக்குடன் இருப்பவன் இப்போது மனதுக்கினியவளுடன் கைகோர்க்கவிருக்கும் மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, வானுலகிலிருந்து இறங்கி வந்த கந்தர்வனைப் போன்ற தோற்றத்துடன் கம்பீரமாக நடந்து வந்தான்.

அழகுக்கு அழகு சேர்ப்பது போல அலங்கரித்துக் கொண்டிருந்த கயலும் அவளுக்குச் சற்றும் குறைவில்லாத அழகுடன் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த முகிலும் மனம் முழுக்க மகிழ்வுடன் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தனர்.

அந்த ஊரின் எல்லையிலுள்ள மாரியம்மன் கோவிலில் அனைவரும் ஒன்று கூடியிருக்க, மணமேடையில் தமிழும் அவனருகில் நிரஞ்சனாவும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

இவர்களின் திருமண விழாவைக் கண்டு வாழ்த்துவதற்காக தமிழின் அலுவலகத் தோழி ரக்ஷணாவும் ஜேக்கும் வந்திருந்தனர்.

"ஹே தமிழ்! இந்த பொண்ண தேடிதான.. நம்ம ட்ருச்சிக்கு போனோம்.. ஃபைனலி யூ ஃபௌண்ட் ஹர்.. க்ரேட் டா.." என்றாள்.

"தேங்க்ஸ் ரக்ஷணா.." என்றான் தமிழ்.

நிரஞ்சனா நல்வாழ்வின் வாசலில் அடியெடுத்து வைப்பதைக் கண்டு வாழ்த்த தேவகி டீச்சர் வந்திருந்தாள்.

"மேடம்.." என்று நிரஞ்சனா தேவகியின் கையைப் பிடித்துக் கொள்ள,

"ஷ்.. கண் கலங்கக் கூடாது.. நீ பட்ட கஷ்டம் எல்லாம் ஒரு முடிவுக்கு வரப் போகுது.. சும்மா அழக் கூடாது.. அப்றம் கண் மை கரைஞ்சி மேக்கப் வீணாய்டும்.. சந்தோஷமா இரு.. இது மாதிரி ஒரு குடும்பத்தில நீ மருமகளா வாழப் போறன்னு நெனக்கும் போதே எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா.. சந்தோஷமா இரு ரஞ்சனி!" என்றாள் தேவகி.

"மேடம்.. ஆனா.. ரொம்ப பயமா இருக்கு மேடம்.."

"என்ன பயம்?" என்று அதட்டினாள் தேவகி.

"இது சரி வராதுல்ல மேடம்.."

"எல்லாம் சரியா வரும் ரஞ்சனி. அமைதியா உக்காரு.. பாரு.. இந்த ஊரே இந்த குடும்பத்து மேல எவ்ளோ மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்காங்கன்னு.. இப்ப நீ எதாவது தத்து பித்துன்னு உளறிகிட்டிருந்தா.. அவங்களுக்குதான் அவமானம்.. அவங்க மேல மரியாதை இருக்கு.. அவங்க நல்லா இருக்கணும்னு நெனச்சா அமைதியா உக்காரு.." என்று புத்தி சொன்னாள் தேவகி.

நிரஞ்சனா தேவகியின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டு அமைதியாக அமர்ந்தாள்.

சோ.. நீ என்ன வெச்சி நடத்தற ட்ராமாவ இன்னும் முடிக்கல.. அப்டிதானே கடவுளே.. நடத்து நடத்து.. எனக்கு இப்டிதான் நடக்கணும்னு நீ நெனக்கும் போது என்னால என்ன செய்ய முடியும்..

அப்டீன்னா இந்த உதவியாவது செய் கடவுளே.. இந்த கல்யாணத்தினால எனக்கு நன்மை கிடைக்கிதோ இல்லையோ.. அவருக்கு நிறைய நன்மைய குடு கடவுளே.. அதையாச்சும் செய் கடவுளே.. ப்ளீஸ்.. என்று நிரஞ்சனா கடவுளிடம் புதிய மனு ஒன்றைப் போடத் தொடங்கினாள்.

எல்லாரும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க, குட்டையைக் குழப்புவதற்கும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள்.

"ஏந் தமிழு.. இந்த புள்ள நம்ம கயலு பெத்தது.. அந்தப் புள்ள யாருப்பா.. உம் பொஞ்சாதி பெத்ததுன்னு சொல்றாங்களே.. அப்டியா.. அந்தப் புள்ள.. எப்டி.. ம்.. ம்.. அப்டியா.. இல்ல.. ம்.. ம்.. இப்டியா.. எப்டிப்பா.." என்று ஒரு விவகாரம் பிடித்தவன் குரலில் தகுந்த ஏற்ற இறக்கத்துடன் கண்ணை உருட்டி தலையை ஆட்டி முகத்தை கோணலாக சுருக்கிக் கேட்டு வைக்க, அவனுடைய கைத்தடிகள் சிலர் கொல்லென்று சிரித்து வைத்தனர்.

சொக்கலிங்கத்துக்கும் ஈஸ்வர பாண்டிக்கும் கோபம் பொத்துக் கொண்டு வர, முகில் அந்த ஆளின் சட்டையைப் பிடித்துவிட்டான்.

நிரஞ்சனாவின் கண்களிலிருந்து கண்ணீர் துளி ஒன்று தமிழின் கையில் விழ, கயல் அவளுடைய கண்ணைத் துடைத்து மேக்கப்பை சரி செய்தாள்.

"பேசறவங்க ஆயிரம் பேசட்டும். அதுக்கெல்லாம் அழுதா நம்மளால இந்த உலகத்தில சந்தோஷமா வாழவே முடியாது.. நீ யார் என்னன்னு எங்களுக்கு தெரியும்.. அப்றம் ஏன் நீ கண்டவங்க சொல்றதுக்கும் கண் கலங்கற.." என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி அவளை அதட்டினாள்.

தமிழ் தன் கையில் விழுந்த நிரஞ்சனாவின் கண்ணீரைத் தன் நெஞ்சின் மேல் தடவிக் கொண்டு, முகிலைப் பார்த்து,

"வேண்டாம் முகில்.. பேசாம இரு.." என்று கூறினான்.

முகில் அவனை முறைத்தபடியே சட்டையை விட்டான்.

"ஹூம்.. மச்சானுக்கு நல்ல பொண்ண தேட முடியல.. இவருக்கு எம் மேல கோவம் வேற வருதாமா.." என்றான் நக்கலாக.

ஈஸ்வர பாண்டி தன் மகனைப் பார்த்து,

"முகிலு.. அந்த வீச்சருவாள எடுடா.." என்று குரல் கொடுக்க,

வம்பு பேசியவன் கூட்டதில் நைசாக நழுவினான்.

"அந்தாளுக்கு வெவரம் பத்தல.. அதான் வீச்சரிவாள எடுன்னு நீங்க சொன்னதும் பய நழுவிட்டான்.. ஆனா எனக்கு அப்டியில்ல.. இவ வண்டவாளம் மொத்தமும் தெரியும்..

மக்களே.. எல்லாம் நல்லா கேட்டுக்கங்க.. இவ ஏற்கனவே கல்யாணம் ஆனவ.. இவ புருசன்.. இவளுக்கு வயித்தில ஒரு புள்ளைய குடுத்துட்டு இவள கை கழுவிட்டு வுட்டுட்டு ஓடிட்டான்.. அந்த ஓடிப் போன புருசனுக்குப் பிறந்ததுதான் இந்தப் புள்ள.. அது மட்டுமில்ல.. இவ ஆறு மாசமா சென்னையில உங்க ஊர் பெரிய மனுஷன் வீட்லதான் இருந்தா.. அப்ப இந்த மாப்ள பையன இவ மடக்கிப் போட்டுட்டா.. யாருக்குத் தெரியும்.. வயித்தில வந்துடுச்சோ என்னமோ.. அதான் கல்யாணம் கட்டிக்கறாங்க போல.." என்று நாக்கில் நரம்பில்லாமல் பேசிக் கொண்டு அங்கு வந்தது நிரஞ்சனாவின் அம்மா ராஜாத்தியேதான்.

"யார் நீங்க.. ஏன் இப்டில்லாம் எங்க ஊர் பையன் மேல அபாண்டமா பழி போடறீங்க.." என்று கேட்டார் ஒரு பெரிய மனிதர்.

"சார்.. நாங்க யார்ன்னு அவளக் கேளுங்க சார்.. பெத்த அம்மாவையும் கூடப் பொறந்த அண்ணையும் இல்லன்னு சொல்லச் சொல்லுங்க சார்.." என்றான் நரேன்.

அவர்களுடன் வந்த பைரவி தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

இதைக் கேட்ட நிரஞ்சனா, நன்றி கடவுளே.. இவங்கள வெச்சே இந்த கல்யாணத்த நிறுத்திடுவேன்.. என்று தனக்குள் சொல்லிக் கொண்டு, தன் கண்ணைத் துடைத்துக் கொண்டு எழ முற்பட,

இவள் இப்படி எதையாவது செய்வாள் என்று ஊகித்த தமிழ், அவளுடைய கையைப் பிடித்து அமர வைத்தான்.

"அவங்க அப்டிதான் உளறிகிட்டிருப்பாங்க.. நீ உக்காரு நிரஞ்சனா.. காரியம் பெரிசா வீரியம் பெரிசான்னு கேட்டா காரியம்தான் பெரிசு.. நமக்கு இப்ப நம்ம கல்யாணம்தான் முக்கியம்.. யார் வேணும்னாலும் எது வேணும்னாலும் பேசட்டும்.. அமைதியா இரு.." என்று அன்புடன் கண்டிப்பு கலந்து சொல்லி விட்டு முகிலைப் பார்த்தான்.

"ஐயரே.. ஆளாளுக்கு அப்டிதான் பேசிட்டே இருப்பாங்க.. நீங்க ஆரம்பிங்க.. முகூர்த்தத்துக்கு நேரமாகுது பாருங்க.." என்று ஓங்கிக் குரல் கொடுத்தான்.

நிரஞ்சனாவால் தமிழை எதிர்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.

கடவுளே.. கடைசி வரைக்கும் எனக்கு நீ உதவியே செய்யாம என்ன ஏமாத்திட்டியே.. என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள்.

ஐயர் மந்திரங்கள் ஓதி தாலிச்சரட்டினை எடுத்து தமிழின் கையில் கொடுக்க, தமிழ் அதை வாங்கி நிரஞ்சனாவின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான்.

பெற்றோரும் உற்றாரும் உறவினர்களும் நண்பர்களும் அட்சதையும் வாச மலர்களும் தூவி வாழ்த்தினர்.

திருமணச் சடங்குகள் எல்லாம் முடிந்ததும் புதுமணத்தம்பதியர் இருவரும் கோவிலைச் சுற்றி வந்து அம்மனை வணங்கினர்.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக்கு தடபுடலான விருந்து தயாராகியிருக்க அனைவரும் விருந்துண்ண அழைக்கப்பட, உறவினர்களின் மேற்பார்வையில் பந்தி தொடங்கியது.

முகிலும் கயலும் அனைவரையும் விருந்துண்ண அழைத்துப் போய் அமர வைத்தனர். ரக்ஷணா, ஜேக் இருவரையும் கயல் அழைத்துப் போக, தேவகி டீச்சரை முகில் அழைத்துப் போனான்.

ராஜாத்தியும் நரேனும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க எங்கோ பார்த்தபடி நின்றிருக்க, நிரஞ்சனாவும் தமிழும் அவர்களின் அருகில் வந்தார்கள்.

"அப்டியே உங்கம்மா மாதிரியே நாடகமாடி இந்த பையன் வாழ்க்கைய கெடுத்துட்ட.. நீங்க ஏமாந்துட்டீங்க தம்பி.. இவல்லாம் குடும்பத்துக்கு ஏத்தவ இல்ல.. குடிய கெடுக்கறவ.." என்று வாய்க்கு வந்தபடி பேச,

"கொஞ்சம் நிறுத்தறீங்களா.." என்று கோபமாகக் கத்தினான் தமிழ்.

"சார்.. உங்களுக்குத் தெரியாது சார்.. இவ எங்கப்பாவுக்கு பொறக்கவேல்ல.. ஆனா எம். நிரஞ்சனான்னு இனிஷியல மட்டும் உரிமையோட போட்டுகிட்டா.. அதோட வலி என்னன்னு அவரு பெத்த புள்ள எனக்குதான் சார் தெரியும்.." என்று உளறினான் நரேன்.

"எனக்கு தெரியும் மிஸ்டர் நரேன்! இவ உங்கப்பாவோட இனிஷியல வேணும்னே போட்டுக்கல.. உங்கப்பாதான் இவள தன் மகளா ஏத்துக்கிட்டு தன் இனிஷியல இவளுக்கு கொடுத்திருக்கார்.. அத இவ இப்ப வரை மதிக்கறா.. எப்பவும் மதிப்பா.. இவ மனசில உங்கப்பா இப்ப வரை வாழ்ந்துகிட்டுதான் இருக்கார்.. ஆனா அவரு உயிரோட இருக்கும் போதே அவரை உதாசீனப்படுத்தி சாகடிச்சது நீங்களும் உங்கம்மாவும்.. உங்களால அவர் எப்பவோ நடை பிணமா ஆகிட்டாரு.. ஆனா இவளுக்காக உயிர் வாழ்ந்தார்.. அதனாலயே இவ மனசில இன்னும் வாழ்ந்துகிட்டிருக்கார்..

அவரு பெத்த புள்ளன்னு சொல்லிக்கறீங்களே.. அவரோட ரத்தம்தானே உங்க உடம்பில ஓடுது.. அப்ப அவரோட நல்ல மனசு உங்களுக்கு ஏன் இல்லாம போச்சு.. அவரோட ரத்தம் இவ உடம்பில ஓடல.. ஆனாலும் எம். நிரஞ்சனான்னு பெருமையா சொல்லிக்க இவளுக்கு எல்லா தகுதியும் இருக்கு..

ஆனா உங்களுக்கு.. அவரோட மகனா எம். நரேந்திரன்னு சொல்லிக்கற அளவுக்கு அவர் பெயர காப்பாத்தற மாதிரி நீங்க இது வரைக்கும் என்ன செய்தீங்க..

அவர மாதிரி நிபந்தனையில்லாத அன்பு செலுத்த முடியுமா உங்களால.. உங்க தங்கச்சிதானே இவ.. இவ மேல பாசம் வேண்டாம்.. மனிதாபிமானமாவது இருந்துச்சா.. ஐயோ பாவம்.. இவளும் ஒரு மனுஷிதானேன்னு ஒரு முறையாவது யோசிச்சி பாத்தீங்களா..

இவங்கம்மா உங்கம்மாவுக்கு துரோகம் செய்துட்டதா சொல்றீங்களே.. அது உங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுல.. புருஷன் பொண்டாட்டி சண்டை.. அத நீங்க ஏன் உங்க தலையில தூக்கி சுமந்தீங்க..

உங்கப்பா இவம்மாவுக்கு தாலி கட்டலன்னாலும் இவ உங்களுக்கு தங்கச்சி தானே.. உங்க தங்கச்சி மேல உங்களுக்கு பாசம் ஏன் இல்லாம போச்சு..

உங்கப்பாவோட பெயரை வெறுமே இனிஷியலா போட்டுகிட்டா அவரோட புள்ளையா ஆக மாட்டீங்க.. அவரோட நல்ல குணம் உங்களுக்கும் இருக்கணும்.. அப்பதான் அவர் பெயரை நீங்க காப்பாத்தறீங்கன்னு அர்த்தம்..

அப்படிப்பட்ட நல்ல மனுஷனுக்கு இப்டி ஒரு புள்ள..

இப்ப நான் சொல்றது கூட உங்களுக்கு தப்பாதான் தோணும்.. ஆனா நாளைக்கு உங்களுக்கு பொறக்கப் போற குழந்தை உங்க கிட்ட வராம, உங்கள அப்பான்னு கூப்பிடாம இருந்தாதான் உங்கப்பா அனுபவிச்ச வலி என்னன்னு உங்களுக்கு புரியும்.." என்று நரேனிடம் கூறிய தமிழ், ராஜாத்தியிடம் திரும்பினான்.

"உங்ககிட்ட பேசல்லாம் எனக்கு எந்த அவசியமும் இல்ல.. ஆனா இப்ப வரைக்கும் நிரஞ்சனா உங்களதான் அம்மான்னு நெனச்சிகிட்டிருக்கா.. இவளப் பெத்த அம்மாவுக்கு கிடைக்காத பாக்கியம், உங்கள அம்மான்னு இவ கூப்பிடற பாக்கியத்த ஆண்டவன் உங்களுக்கு ஏன் குடுத்தானோ..

உங்க புருஷன் உங்க பொறந்த வீட்டு மனுஷங்களுக்காக செய்த தியாகத்த கூட உங்களால புரிஞ்சிக்க முடியல.. அவரு உங்க மேல எவ்ளோ அன்பு வெச்சிருந்தா உங்க தங்கச்சிக்கு எந்த கெட்ட பெயரும் வந்துடக் கூடாதுன்னு நெனச்சிருப்பாரு..

வேற எவனாவது இருந்தா.. உங்களையும் உங்க தங்கச்சியையும் உங்க குடும்பத்தையும் தப்பா பேசிப் பேசியே காலம் முழுக்க உங்கள கொடுமை படுத்தியிருப்பான்.. ஆனா அவரு உங்க குடும்பத்துக்கு நன்மை செய்யப் போய் தன் வாழ்க்கையையே இழந்துட்டார்..

ஆனா நீங்க எவ்ளோ கோவப்பட்டாலும் புள்ளைய பிரிச்சி வெச்சாலும் வார்த்தையால நோகடிச்சாலும் உங்கள விட்டுப் பிரிய அவர் நெனக்கல..

கடைசியா உங்க தப்பான வார்த்தைதான் அவரோட உயிரப் பறிச்சது..

வாழறப்பவும் சரி.. சாகறப்பவும் சரி.. அவர் செத்தப்பறமும் சரி.. உங்க புருஷனை நீங்க கடைசி வரை புரிஞ்சிக்கவேயில்ல.. உங்க தங்கச்சியையும் புரிஞ்சிக்கல.. உங்களையே அம்மான்னு நம்பிட்டிருக்கற இவளையும் நீங்க புரிஞ்சிக்க விரும்பல.. உங்க புள்ள வாழ்க்கையையும் உங்க தப்பான எண்ணங்களால கெடுத்துட்டீங்க.. அவனோட அப்பாகிட்டேந்து அவனப் பிரிச்ச பாவம் உங்கள சும்மா விடாது..

நீங்க செய்த பாவத்தை விட இவ எந்த பாவத்தையும் செய்யல.. சொல்லப் போனா புண்ணியம்தான் செய்துட்டிருக்கா இவளால இப்ப அந்த புண்ணியத்தில கொஞ்சம் எனக்கும் பங்கு வரப் போகுது..

போங்க.. இனிமேல நீங்க திருந்தி யாரையும் காப்பாத்த போறதில்ல.. அப்டியே எங்கியாவது போய் யாரையாவது பாத்து சாபம் வுட்டுகிட்டு கிடங்க.. பாக்கறவங்கல்லாம் கல்லால அடிக்கட்டும்.." என்று சொல்லிவிட்டு நிரஞ்சனாவின் கையை உரிமையுடன் பிடித்துக் கொண்டு விருந்துண்ணச் சென்றான்.

"அவன் கிடக்கான்.. புதுசா கல்யாணம் கட்டிருக்கான்ல.. அதான்.. புதுப் பொண்டாட்டி மோகத்தில.. அவ என்னமோ தேவகன்னிகைன்னு நெனச்சிகிட்டு உளறிட்டுப் போறான்.. நீ வாடா.." என்று தன் மகனின் கையைப் பிடித்தாள் ராஜாத்தி.

"கைய வுடுமா.." என்று தன் தாயின் கையை உதறினான் நரேன்.

"டேய்.. என்னடா.." என்று அதிர்ந்து போய் ராஜாத்தி கேட்க,

"என்ன வார்த்தை சொன்னாரு.. கேட்டல்ல.. அப்பா ரத்தம்தானே என் உடம்பில ஓடுது.. அப்டீன்னா என் மனசில எவ்ளோ அன்பு இருக்கணும்னு.. அவரு சொன்னது அத்தனையும் உண்மை..

நான் பண்ணின மாதிரியே நாளைக்கு என் குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடாம போனா.. என்னால அத தாங்கவே முடியாது.. அப்பாவாவது அத சகிச்சிகிட்டு உயிர் வாழ்ந்தார்.. நா அடுத்த நிமிஷமே செத்துடுவேன்.. எனக்கு என் குழந்தை முக்கியம்..

அதனால இனிமே நா உன் கூட இருக்க மாட்டேன்.. எனக்கு என் குழந்தையும் என் பொண்டாட்டியும் என் வாழ்க்கையும்தான் முக்கியம்.. நீ வா பைரவி.." என்று கூறி விட்டு மேடிட்ட வயிற்றுடன் நிற்கும் தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால நடக்க,

"ஏங்க.. திரும்பவும் தப்பு பண்ணாதீங்க.. பெத்த அம்மாவ வயசான காலத்தில கைவிட்டா அந்தப் பாவம் நம்மள சும்மா விடாது.." என்று பைரவி புத்தி சொன்னாள்.

"சரி! ஆனா இனிமே அவங்க நம்ம வீட்ல எதையும் யாரையும் தப்பா பேசவே கூடாது.. வாய மூடிகிட்டு போட்டத தின்னுகிட்டு மூலையில இருக்கறதுன்னா நம்ம கூட வரட்டும்.. இல்லன்னா எங்கியாவது போகட்டும்.. எனக்கு கவலையில்ல.." என்றான் நரேன்.

ஒரே நிமிடத்தில் தன் வாழ்வு இப்படி மாறிப் போனதைக் கண்ட ராஜாத்தி பெருங்குரலில் எதையோ கூற வர,

"இததான் சொன்னேன்.. நீ என் கூட வரணும்னா வாய மூடிட்டிருந்தாதான் வர முடியும்.. இல்லன்னா.." என்று நரேன் கோபமாகக் கூற, ராஜாத்தி கப் சிப்பென்று தன் வாயைப் பொத்திக் கொண்டு அவன் பின்னால் சென்றாள்.

நரேன் நேராக தமிழிடம் சென்றான்.

"சார்.. என்ன மன்னிச்சிடுங்க.. இவ்ளோ நாள் கண்ணிருந்தும் குருடா இருந்துட்டேன்.. தலவலியும் சங்கடமும் தனக்கு வந்தாதான் தெரியும்ன்னு சொல்வாங்க.. எனக்கு வந்துடுமோங்கற பயத்திலயே நா பண்ணின தப்பை புரிஞ்சிகிட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் சார்.. ரஞ்சனி.. என்ன மன்னிச்சிடு.." என்று அவன் மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு, தன் கழுத்திலிருந்து இரண்டு பவுன் சங்கிலி ஒன்றை எடுத்து தன் தங்கையின் கையில் கொடுத்தான்.

இதைப் பார்த்த ராஜாத்தி திரும்பவும் கத்தத் தொடங்க, அவளை முறைத்து அடக்கிவிட்டு நிரஞ்சனாவிடம் பேசினான்.

"உன் கல்யாணத்துக்கு இந்த அண்ணனால முடிஞ்ச சீதனம்.. இப்போதைக்கு இத வெச்சிக்க.. உனக்கு பிறந்த வீட்டு சீதனம் சீக்கிரமே அனுப்பி வெக்கிறேன்.." என்று கூறிவிட்டு நகர்ந்தவனை கைபிடித்து நிறுத்தினான் தமிழ்.

என்ன என்பது போலப் பார்த்தவனிடம்,

"என்ன மச்சான்.. பொறந்த வீட்டு சீதனம்லாம் குடுத்துட்டு கை நனைக்காம போறீங்க.. அப்ப எங்க உறவு வேணாமா.. சாப்பிட்டு போங்க மச்சான்.." என்று உரிமையுடன் கூறிய தமிழை கண்ணீருடன் தழுவிக் கொண்டான் நரேன்.

"ரொம்ப தேங்க்ஸ் மாப்ள.." என்று சொல்லிவிட்டு பந்தியில் மனைவியையும் தாயையும் அழைத்துக் கொண்டு அமர்ந்தான்.

பைரவிக்கு மனமெல்லாம் பூரித்தது.

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. அவர திருத்திட்டீங்க.. எனக்கு அது போதும்.." என்று சொல்லிவிட்டு விருந்துண்ணச் சென்றாள்.

- ctd...
 
- ctd...

எந்தப் பிரச்சனையுமின்றி திருமணம் வெகு விமரிசையாய் நடந்து, விருந்தும் எல்லார் மனதை நிறைக்கும் வண்ணம் நடந்து முடிந்தது.

எல்லாரும் தமிழையும் நிரஞ்சனாவையும் மனதார வாழ்த்திச் சென்றனர்.

விருந்தினர்களும் உறவினர்களும் ஒவ்வொருவராகக் கிளம்ப, ரக்ஷணாவும் ஜேக்கும் இங்கிருந்து சுருளியருவி, மேக மலை என்று சுற்றுலா கிளம்பிவிட்டனர்.

நரேனும் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான். தேவகி டீச்சர் வந்து நிரஞ்சனாவிடமும் தமிழிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பும் போது அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

யாரோ ஒரு அரசியல் பலம் கொண்ட பெரிய மனிதர் கோவிலுக்கு வருவதாகச் சொல்லி அந்தப் பிரமுகருடைய அல்லக்கைகள் கோவிலில் கெடுபுடி செய்ய, ஆர்பாட்டமாக உள்ளே நுழைந்தார் அவர்.

அவரைப் பார்த்ததும் தேவகி டீச்சர் உள்ளுக்குள் அதிர்ந்தாள். ஆனாலும் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தாள்.

அந்த மனிதர் இறை வழிபாடு முடித்துவிட்டு வெளியில் போகும் போது கோவிலில் திருமணம் நடந்திருப்பது கேள்விப்பட்டு, மணமக்களை வாழ்த்த அவர்களருகில் வந்தாள்.

தேவகிக்கு மனதுக்குள் வெறுப்பாய் வந்தது. இப்ப இந்தாள் வாழ்த்தலன்னா இவிங்க நல்லா வாழ மாட்டாங்களாமா.. என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த மனிதர் மணமக்களை வாழ்த்திவிட்டு தன் கையால் எதையோ பரிசாகத் தர எத்தனிக்க, அவருடைய அல்லக்கைகள்,

"அண்ணன் தர்மப்பிரபு வாழ்க!"

"மருத்துவ உலகின் முன்னோடி வாழ்க!"

"எஸ் என் மருத்துவமனை டீன் அண்ணன் எஸ் டி ராஜ் வாழ்க!" என்று பலவாறாகக் கோஷமிட்டனர்.

நிரஞ்சனாவுக்கு வந்திருப்பது யாரென்று அப்போதுதான் புரிந்தது. அருகில் நின்றிருந்த தேவகியிடம்,

"மேடம்! இவருதானா அந்த வரலட்சுமியக்கா சொன்ன ஆசுபத்திரி டீன்.." என்று கேட்டாள்.

"ஆமாமா.. இந்த நாய்தான்.." என்றாள் தேவகி மனம் முழுக்க வெறுப்புடன்.

அதற்குள் அந்த மனிதர் இவர்கள் கையில் திருமணப் பரிசைத் தர,
ஈஸ்வர பாண்டியும் சொக்கலிங்கமும் அது வேண்டாம் என்பது போல மறுக்க, அந்த மனிதர் இவர்களை நிமிர்ந்து பார்த்து அதிர்ந்தார்.

ஆனாலும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து நகரப் போனவரை நிறுத்தினாள் நிரஞ்சனா.

"சார்.. சார்.. கொஞ்சம் நில்லுங்க சார்.." என்ற மணமகளின் குரல் கேட்டு அந்த மனிதர் வேறு வழியின்றி நிற்க,

மதுரத்தின் கையிலிருந்த வரலட்சுமியின் குழந்தையை வாங்கிக் கொண்டு அவரருகில் சென்றாள் நிரஞ்சனா.

தேவகி அதிர்ச்சியுடன் பார்க்க, நரேனும் அவன் குடும்பமும் குழப்பத்துடன் பார்க்க, முகில் கயல் இருவரும் வேண்டாம் என்பது போல தவிக்க, இவள் அடுத்துச் செய்யப் போகும் காரியதை ஊகித்த சொக்கலிங்கமும், தமிழும் அவளருகே ஓடினார்கள்.

"சார்.. இந்தக் குழந்தைய வாங்கிக்கோங்க சார்.." என்று நிரஞ்சனா சொல்லும் போதே ஓடி வந்து தமிழ் அந்தக் குழந்தையை கிட்டத்தட்ட பிடுங்கினான்.

தேவகிக்கும் கயல் மற்றும் முகிலுக்கும் ஹப்பாடாவென்று இருந்தது.

"வேணாம் நிரஞ்சனா.. இந்தாள் கிட்ட குழந்தைய குடுக்காத.. இவன் இந்தக் குழந்தைய தொடவே கூடாது.." என்று வேறு கூறினான்.

"எ.. என்ன.. சொ.. சொல்றீங்க.." என்று நிரஞ்சனா அதிர்ந்து போய்க் கேட்டாள்.

"இந்தாள் இந்தக் குழந்தைய தொடக் கூட அருகதை இல்லாதவன் மா.." என்றார் சொக்கலிங்கம்.

"என்ன மாமா சொல்றீங்க.. ஆனா வரலட்சுமி அக்காவுக்கு நா வாக்கு குடுத்திருக்கேனே.."

இதைக் கேட்ட அந்த மனிதர்,

"என்ன வரலட்சுமியா.. உனக்கு வரலட்சுமிய தெரியுமா.. அப்ப நீதான் என் மக வரலட்சுமியோட குழந்தைய காப்பாத்தின நிரஞ்சனாவா.." என்று அடுத்தடுத்துக் கேட்டான்.

மகள் என்று அவன் சொன்னதும் நிரஞ்சனா மேலும் அதிர்ந்தாள்.

"வரலட்சுமியக்கா உங்க மகளா.. உங்க மகளா இருந்துகிட்டா அவங்க அவ்ளோ கொடுமை அனுபவிச்சாங்க.." என்று கேட்டாள் நிரஞ்சனா.

"இப்பதான் இந்தாள் இத ஒத்துக்கறான் ரஞ்சனி.. இப்பதான் வரலட்சுமி தன் மகள்னு ஒத்துக்கறான்.. இதுக்கு முன்னாடி அவ இவனுக்கு தப்பா பொறந்த பொண்ணாதான் சமூகத்துக்கு முன்னால தலை குனிஞ்சி நின்னுட்டிருந்தா.. பாவி.. படுபாவி.. உன்னால அவ எவ்ளோ கொடுமை அனுபவிச்சிருப்பா.. அப்பல்லாம் உன்னோட பண பலத்தை வெச்சி அவளக் காப்பாத்தினியா.. பாவம்.. அழுது அழுதே அவ வாழ்க்கை கரைஞ்சிடுச்சி.. ஆனா கடைசியா கூட உன்னதான் நம்பினாளே தவிர தன் புருஷனை நம்பல.. உன் கிட்டதான் தன் குழந்தைய கொடுக்கணும்னு சொன்னாளே தவிர தன் புருஷன் கிட்ட இந்த குழந்தைய குடுத்து தைரியம் சொல்ல அந்தப் பாவி பொண்ணுக்கு மனசு வரல.." என்று கோபமாகச் சொன்னாள் தேவகி.

அந்த மனிதர் தவிப்புடன் தமிழிடமிருந்து குழந்தையை வாங்க முயற்சிக்க, நிரஞ்சனா அவருக்காக பாவம் பார்த்து குழந்தையை அவரிடம் கொடுக்கும்படி தமிழிடம் பரிந்து பேசினாள்.

"பாவம்ங்க.. குடுங்க.. என்ன இருந்தாலும் இவன் இவரோட பேரன்தானே.." என்றாள்.

"வேணாம் நிரஞ்சனா.. இவன் யார்னு தெரிஞ்சா நீயே இவன் மூஞ்சியில காறி துப்புவ.." என்றான் தமிழ்.

"ஐயோ.. ஏங்க இப்டிலாம் பேசறீங்க.." என்று நிரஞ்சனா தவிப்புடன் கேட்க,

"தமிழ் சொல்றது சரிதாம்மா.." என்றார் ஈஸ்வர பாண்டி.

"அப்பா.. என்னப்பா.." என்றாள் நிரஞ்சனா.

"அப்பான்னு என்ன வாய் நெறைய கூப்பிடற.. ஆனா உன்னோட சொந்த அப்பாவ இல்லாம பண்ணின பாவிம்மா இவன்.. பாவி.. படுபாவி.." என்றார் ஈஸ்வர பாண்டி.

நிரஞ்சனா தன் தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள்.

"என்னோட நண்பனும் உங்கப்பாவுமான ராம்மோகனை உறவாடிக் கெடுத்து அவன் கல்யாணத்தில குழப்பம் பண்ணி நிறுத்தி அவன மயக்க ஊசி போட்டு கொலை பண்ணின பாவி அந்த தர்மராஜ் இவந்தான்." என்றார் சொக்கலிங்கம்.

தர்மராஜ் அதிர்ச்சியுடன் சொக்கலிங்கத்தைப் பார்க்க,

"என்னடா.. அதிர்ச்சியா இருக்கா.. நீ யாரை எதிரின்னு நெனச்சி இந்த உலகத்தில இருந்தே அழிச்சியோ.. அதே ராம்மோகனோட மகள்தான் இந்த நிரஞ்சனா.. உன் எதிரியோட மகளா இருந்தாலும் உன் மகளை காப்பாத்தினவ இவ தான்.. உன் மகளோட மகனை காப்பாத்த தன் உயிரையே பணயம் வெச்சி போராடிட்டும் இருக்கா..

கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே..

இப்பவாவது புரிஞ்சுக்கோ.. பணம் காசு பதவின்னு நீ ஓடின..

அந்தப் பொண்ணு ரேணுகாவ கெடுத்த.. அவள வெச்சி குணசுந்தரியோட வாழ்க்கைய கெடுத்த.. ராம்மோகனை கொலை செய்த.. இதனால என்ன கிடைச்சது உனக்கு..

உனக்கு பார்வையில்லாத பொண்டாட்டி கிடைச்சா.. மன நலம் பாதிக்கப்பட்ட மகன் பிறந்தான்..

ரேணுகா தன் தோழிக்குப் பண்ணின பாவத்துக்கு அவ மகள் கூன் முதுகோட சூம்பிப் போன காலோட பிறந்தா.. நல்லா படிச்சிருந்தும் நல்ல குடும்பத்தில வாக்கப்பட்டும் புருஷன் குழந்தை குட்டின்னு நல்லபடியா வாழக் குடுத்து வெக்கல.." என்றார் சொக்கலிங்கம்.

"சொக்கலிங்கம்.. என்ன மன்னிச்சிடு.. அந்தக் குழந்தைய என்கிட்ட குடுத்துடு.. என் எல்லா சொத்துக்கும் ஏக போக வாரிசு அவன்தான்.. ப்ளீஸ்.. எனக்கும் இப்ப வயசாயிடுச்சி.. நோய் தாக்கிடுச்சு.. என் மனைவி மகன் எல்லாரும் செத்துட்டாங்க.. இந்தக் குழந்தை பத்தி சொல்லிட்டு ரேணுகாவும் கண்ண மூடிட்டா.. இவனதான் நானும் தேடிட்டிருந்தேன்.. இவன் என் வாரிசு.. என்கிட்ட குடுத்துடு ப்ளீஸ்.." என்றான் தர்மராஜ்.

"சொத்து எல்லாத்தையும் இவன் பேர்ல எழுதிடணும்னு நீ இவனத் தேடின.. ஆனா இவன் பேர்ல சொத்த நீ எழுதிடப் போறன்னு இவனப் போட்டுத்தள்ள ஒரு கும்பலே நிரஞ்சனாவ தேடிட்டிருந்தது உனக்கு தெரியுமா.." என்று கேட்டான் தமிழ்.

நிரஞ்சனாவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.

"அப்ப என்னத் தேடினது வரலட்சுமியக்காவோட புருஷன் வீட்டு ஆளுங்க இல்லையா.." என்றாள்.

"அவனுங்க கொஞ்ச நாள் தேடிட்டு விட்டுட்டாங்க.. வரலட்சுமியோட போட்டோவ வெச்சி பூஜை செய்து அவ புருஷனை சமாதானம் செய்து வேற பொண்ண அவனுக்கு கல்யாணம் செய்து வெச்சிட்டாங்க..

இந்தாளோட சொந்தக்காரங்கதான் இந்தக் குழந்தைய கொலை செய்ய தேடினாங்க.. சென்னையில உன்ன பிடிச்சி வெச்சவனும் இவன் சொந்தக்காரனோட அல்லக்கைதான்.."

"ஆனா நா அவன அந்த பாலன் சாரோட தம்பி ஆளுங்களோட பார்த்த ஞாபகம் இருக்கே.."

"அல்லக்கைங்கதானே.. அவன மாதிரியே பரட்ட தலையோட பான்பராக் வாயோட எவனாவது இருந்திருப்பான்.." என்றான் தமிழ்.

நிரஞ்சனா தர்மராஜை ஒரு புழுவைப் பார்ப்பது போல பார்த்து விட்டு,

"என்ன வளர்த்த எங்கம்மா ராஜாத்தியோட கோவம் கூட நியாயம்னு ஒத்துப்பேன்.. ஆனா நீ எனக்கும் எங்கப்பா அம்மாவுக்கும் பண்ணினது துரோகம். நம்பிக்கை துரோகம்.. உன்ன தண்டிக்க ஆண்டவன் இருக்கான்.. ஆனா நா என் பங்குக்கு தர தண்டனை என்ன தெரியுமா.. நா எப்டி எங்கப்பாம்மாவ பாக்காம துடிச்சேனோ அதே மாதிரி நீயும் துடிக்கணும்ல.. இந்தக் குழந்தைய உன் கண்ணில கூட காட்ட மாட்டேன்.. இவனுக்காக நீ காலம் முழுக்க கண்ணீர் வடி.. அப்ப கூட எங்கம்மா வடிச்ச கண்ணீருக்கு ஈடாகாது.. உன்னப் போய் எங்கப்பா நம்பினாரே.. நீல்லாம் மனுஷனா.. த்தூ.." என்று துப்பிவிட்டு அங்கிருந்து விடுவிடுவென்று நடந்தாள் நிரஞ்சனா.

அவள் அங்கிருந்து நகர்ந்ததும் அவளைப் பின் தொடர்ந்து தமிழ், முகில், கயல், ஈஸ்வர பாண்டி, சொக்கலிங்கம், மதுரம், வளர்மதி, தேவகி டீச்சர் என அனைவரும் சென்றனர்.

இங்கு நடந்து கொண்டிருந்த அனைத்தையும் பார்த்த ராஜாத்தி, எதையோ யோசித்தாள்.

நரேனுக்கும் பைரவிக்கும் இப்போதுதான் நிரஞ்சனாவின் பூர்வ கதை புரிந்தது.

தன் தாயை அழைத்துக் கொண்டு அவன் நடக்கத் தொடங்க, ராஜாத்தி நிரஞ்சனாவிடம் ஓடினாள்.

நிரஞ்சனா ராஜாத்தியை கேள்வியாகப் பார்க்க,

"அப்ப.. உன் குழந்தை என்னாச்சு.." என்று கேட்டாள்.

"அது.. நம்ம வீட்லேர்ந்து போன அன்னிக்கு ராத்திரியே கலைஞ்சிடுச்சி.." என்றாள் சலனமின்றி.

ராஜாத்தி அதிர்ந்து போய் நிரஞ்சனாவைப் பார்க்க, நிரஞ்சனா அங்கே காத்திருந்த வண்டிக்குள் ஏறி அமர்ந்தாள்.

அனைவரும் நரேனிடமும் அவன் குடும்பத்திடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினர்.

தேவகி டீச்சரும் கிளம்பிவிட, ராஜாத்தி சித்தம் கலங்கியது போல அங்கேயே நின்றாள்.

கண்ணுக்கு மறையும் வரை அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்த நிரஞ்சனாவை குழந்தையின் அழுகை நிகழ்வுக்குக் கொண்டு வந்தது.

வளர்மதி பால் பாட்டிலை எடுத்து குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கினாள்.

"உங்க எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரியுமா.. தெரிஞ்சிதான் எல்லாரும் அமைதியா இருந்தீங்களா.." என்று கேட்டாள்.

மதுரம் அவளுடைய தலையை அன்புடன் கோதிவிட்டு,

"எதையும் நெனச்சி மனசப் போட்டு குழப்பிக்காத ரஞ்சீ.. இதெல்லாமே நடந்து முடிஞ்சது.. இனிமே நடக்கப் போறதப்பத்தி மட்டும் நெனப்போம்..

முதல்ல இவனுக்கு நல்ல பேர் வெக்கணும்.. அப்றம் அதவிட முக்கியமா விட்டுப் போன தடுப்பூசில்லாம் போடணும்.." என்று மதுரம் சொல்ல, அவளுடைய தோள்களில் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள் நிரஞ்சனா.

நீங்கல்லாம் ஏன் இப்டி என் மேல இவ்ளோ அன்பு செலுத்தறீங்க.. என்று அவர்களிடம் கேட்பதாய் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

எல்லாம் நல்லபடியா முடிஞ்சிது.. ஆனா என் தலைக்கு மேல தொங்கற கத்தி.. அது இன்னும் அப்டியேதானே இருக்கு.. என்ன சொல்லி அத நா சரி செய்வேன்.. என்று திரும்பவும் தவிக்கத் தொடங்கினாள் நிரஞ்சனா.

வீடு வந்து ஓய்வெடுத்து பேசிச் சிரித்து உண்டு களித்து எல்லாம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகளை தனியறைக்கு அனுப்பி வைத்தனர்.

நடுக்கத்துடன் வந்தவளை, அன்புடன் கைப்பிடித்து தன்னருகில் அமர வைத்துக் கொண்டான் தமிழ்.

"ம்.. இப்ப சொல்லு.." என்றான்.

"என்ன சொல்லணும்.." மெல்லிய குரலில் கேட்டாள்.

"அன்னிக்கு ட்ரெய்ன்ல வரச்சே என் கிட்ட என்னமோ சொல்லணும்னு தவிச்சியே.. என்ன.. சொல்லு.."

நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள் அன்றை விட இன்று இன்னும் அழகாகத் தெரிந்தான்.

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

"ஹே.. ஏன் அழற.." என்று கேட்டு அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொள்ள, அவள் அவனிடமிருந்து நகர்ந்தாள்.

"சரி.. ஓகே.. சொல்லு.." என்றான்.

"எல்லாத்தையும் சொன்ன நா உங்க கிட்டேந்து முக்கியமான விஷயத்த மறைச்சிட்டேன்.. உங்க வாழ்க்கைய நா கெடுத்துட்டேன்.." என்று அழுகையுடன் சொன்னாள்.

"ம்.. அப்றம்.." என்றான் புன்னகையுடன்.

"என்ன அப்றம்.. உங்க வாழ்க்கைய கெடுக்கற அளவு விஷயத்தை நா உங்க கிட்ட சொல்லாம மறைச்சிட்டேன்னு சொல்றேன்.. உங்களுக்கு ஷாக்காகலயா.."

"நா அப்டியே ஷாக்காயிட்டேன்.." என்று வடிவேல் போல கூறியவனை முறைத்தாள்.

தன்னை முறைப்பவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தவன், அவளுடைய தோளில் கை போட்டுக் கொண்டு,

"அடியே வெங்க்கி.. இவ்ளோ உண்மைகளை தெரிஞ்சிகிட்ட நா நீ மறைச்ச உண்மைய மட்டும் தெரிஞ்சுக்காமலா இருப்பேன்.." என்று கேட்டான்.

"அப்டீன்னா உங்களுக்கு என்னப்பத்தி தெரியுமா.."

"தெரியும்டீ.. என் மக்குப் பொண்டாட்டி.."

"எனக்கு அபார்ஷன் ஆனப்ப ஏதோ பிரச்சனை வந்து அப்ப குடுத்த மருந்தால என் கருப்பைல கட்டி வந்து, அந்த கட்டிய ஆபரேஷன் பண்றப்ப, கருப்பைல ஏதோ டேமேஜ் ஆகிடுச்சி.. அதனால என்னால இனிமே குழந்தை பெத்துக்க முடியாதுங்கறது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா.. தெரிஞ்சிதான் என்ன கல்யாணம் செய்துகிட்டீங்களா.."

"எஸ்.. நல்லா தெரியும்.. இதையும் தேவகி டீச்சர் எனக்கு ஏற்கனவே சொல்லிட்டாங்க.. போதுமா.." என்று நிதானமாகக் கேட்டான்.

அவள் அழத் தொடங்கினாள்.

"ஏன் இப்டி.. நீங்கல்லாம் ஏன் இப்டி இருக்கீங்க.."

"எங்கப்பா அந்த காலத்திலயே லவ் மேரேஜ் செய்தவரு.. கல்யாணம் பண்ணி குழந்தை பெத்தப்பறம் அதாவது நான் பிறந்தப்றம் எங்கம்மாவ காலேஜ் அனுப்பி படிக்க வெச்சவரு.. அதோட நிக்காம எங்க ஊர்லயே முதல் முதல்ல வேலைக்குப் போன பெண் எங்கம்மாதான். அப்டி புரட்சி பண்ணவர் மகன் நான்.. என் பங்குக்கு நா எதாவது புரட்சி செய்ய வேணாமா.." என்றான் தமிழ்.

"அப்ப புரட்சி செய்யதான் என்ன கட்டிகிட்டீங்களா.. என்னமோ என்ன பாத்ததும் பிடிச்சதுன்னு சொன்னீங்க.."

இப்பதான் பழைய வாய் வருது.. என்று தன் மனதுக்குள் மகிழ்ந்தபடி,

"மை டியர் வெங்க்கி.. உன்ன முதல் முதல்ல பாத்தப்ப உன்னோட குழந்தைத்தனமான பேச்சும் சிரிப்பும் என்னை அப்டியே கட்டி போட்டுடுச்சி.. விதி வசத்தால நீ அந்த ரெண்டையும் தொலைச்சிட்ட.. அந்த சிரிப்பை உனக்கு திருப்பித் தரணும்னு தோணிச்சி.. அதுக்காகதான் உன்ன கட்டிகிட்டேன்.. போதுமா.."

"ஆனா.. என்னால.. உங்களுக்கு குழந்தை.." இழுத்தாள்.

"ஒருத்தருக்கு குழந்தை குடுக்கணுமா வேணாமான்னு எல்லாம் யோசிக்க வேண்டியது கடவுளோட வேலை.. நாம எதுக்கு அவரோட வேலையில தலையிடணும்.. நமக்குதான் எக்கச்சக்க வேலையிருக்கே.. நாம நம்ம வேலைய பாக்கலாம்.. வா.." என்று கூறி அவளை அணைத்துக் கொண்டான்.

அவள் சிணுங்கியபடி அவனிடமிருந்து விலக முயற்சிக்க,

"ம்ஹூம்.. அன்னிக்கே சொன்னேன்.. எனக்கு எப்பல்லாம் வேணும்னு தோணுதோ.. அப்பல்லாம்.. உன்கிட்ட பர்மிஷன்ல்லாம் கேக்க மாட்டேன்னு சொன்னேன்ல.." என்றான். அவள் புன்னகைத்தாள்.

அவளை அணைக்க வந்தவனை நிறுத்தி,

"ஆமாம்.. என்னப் பாத்து வெங்க்கின்னு ஏன் கூப்படறீங்க.."

"அது இப்ப ரொம்ப முக்கியமா.." பொய்க்கோபத்துடன் கேட்டவனிடம், அதே பொய்க்கோபத்துடன் அவளும், ஆமாம் என்றாள்.

"வெங்க்கி இஸ் த ஷார்ட் ஃபார்ம் ஆஃப் வெங்காயம்.. அதாவது வெங்க்கி என்பது வெங்காயத்தின் சுருங்கிய பெயர்.." என்று ஒப்பித்தான்.

அவளுக்குப் புரியவில்லை..

"அப்டீன்னா.."

"அப்டீன்னா.. உன்ன முதல் முதல்ல பாத்தப்ப.. நீ வெங்காயத்த ரோட்டுல கொட்டிட்டு.. பிடிங்க.. பிடிங்கன்னு ஓடி வந்தியா.. நா யாரோ ரௌடியதான் பிடிக்கச் சொல்றாங்கன்னு திரும்பி பாத்தா நீ தரையில உருண்டுகிட்டிருந்த வெங்காயத்துக்கு பின்னால ஓடிட்டிருந்தியா.. அப்ப உனக்கு நா வெச்ச பேர் தான் இந்த வெங்க்கி.. போதுமா.. விம் பார்.. எக்சோ பார்.. ப்ரில் லிக்விட் போட்டு விளக்கிட்டேன்.. இனிமேலாவது நம்ம வேலைய.." என்று அவன் கேட்டு அவளுடைய முகம் பார்க்க,

அவன் சொன்னதை வைத்து அன்று தான் எப்படி நடந்து கொண்டோம் என்பது அவளுக்கு நினைவுக்கு வர, முதன் முதலாக அவளுடைய முகம் வெட்கத்தைப் பூசிக் கொண்டது.

"வெங்க்கி.."

"ம்.."

"ம்ம்.."

".."

செல்லமாய்ச் சிணுங்கியவளின் இதழ்களை தன்னுடைய இதழ்களால் சிறை பிடிக்க, அவளுடைய தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி மாயமாய் மறைந்ததைப் போல உணர்ந்தாள்.



அவர்கள் இருவரும் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி நாமும் விடை பெறுவோம்!

நன்றி. வணக்கம்.

 
சூப்பர் ???
தர்மராஜுக்கு தண்டனை இல்லையா, ராம்மோகனை கொன்றதற்கு...
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அன்னபூரணி தண்டபாணி டியர்
 
Last edited:
Top