Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

விழியாக நான் இமையாக நீ- 29

Advertisement

TNWContestWriter080

Well-known member
Member
29

ரவியை விடுவிக்கச் சொல்லியபடி , தீபக் வாசுவை நெருங்கி வந்தான், அவனது கைகளில் பிஸ்டல் இருந்தது. " கமான் வாசு,தப்புக்கு மேல தப்புப் பண்ணிட்டு இருக்கே நீ வேணாம், சரண்டர் ஆயிடு " என்ற அவனது வார்த்தைகளுக்கு, வாசு சிறிதும் செவி மடுக்கவில்லை.

நீ, முதல்ல உன் மொத்த போலீஸையும் வெளியே போகச் சொல்லு, அப்புறமா தான் நான் இவனை விடறதைப் பத்தி யோசிக்க முடியும் " என்று மிரட்டினான் வாசு.

அப்போது தீபக்கின் கைகளில் இருந்த ரவியின் அலைபேசி ஒலித்தது. தீபக் அதனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான். மறு முனையில் ஒலித்தது ஒரு பெண்ணின் குரல்,வெண்ணிலாவின் குரல் தான்.

" கொஞ்சம் உதவி பண்ணுங்க யாராவது, எனக்கு உதவி பண்ணுங்க பிளீஸ் என்னைக் காப்பாத்துங்க " என்று கதறினாள் வெண்ணிலா.

" ஐயோ, நிலா நீ எங்கே இருக்கேம்மா. நிலா நான் பேசறது உனக்குக் கேக்குதா? நான் தான் ரவி வந்திருக்கேன் " என்ற ரவியின் அலறல் ஓசை, சாரதாவை ஏதோ செய்தது.

சட்டென சுஷ்மியைக் கீழே இறக்கி விட்ட அவள் , தனக்கு அருகில் இருந்த, மரக்கட்டையை எடுத்து வாசுவை நோக்கி வீசினாள்.எதிர்பாராத, இந்தத் தாக்குதலால் நிலை குலைந்து போன வாசுவின் கைகளில் இருந்து கத்தி கீழே விழுந்து விட்டது. உடனே, அவனை நெருங்கி வந்த தீபக், அவனது கைகளுக்கு விலங்கு பூட்டினான்.வெண்ணிலாவுக்கு எப்படி மீண்டும் அலைபேசி, கிடைத்தது?

தனசேகரன், அந்த இடத்தை விட்டு அகன்று சென்றதும், தைரியமாக வெளியே வந்த வெண்ணிலா, அங்கே இருந்த உயிரற்ற குழந்தைகளின், உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, நகர்ந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு, குழந்தையின் கேஸ் ஷீட்களையும் ஆராய்ந்த படியே நகர்ந்து வந்து கொண்டிருந்த அவளுக்கு, அவர்கள் அனைவருமே தண்டு வடத்தின் ஏற்பட்ட தசை நார்களின் சிக்கல் காரணமாகவே இறந்து விட்டார்கள் என்பது நன்கு புலப்பட்டது. நாற்பத்தி ஆறு குரோமோசோம்கள் மட்டுமே இருக்க வேண்டிய கருத்தரித்த மூட்டைகளில் அதிகம் ஒரு குரோமோசோம் காணப்பட்டதால், விளைந்திடும் சிக்கல் தான் எது. அது இயற்கையாகவே, ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு எங்கோ நிகழக் கூடியது தான். சில நேரங்களில், பரம்பரை நோயாகவும் இந்நோய் நேரக் கூடும்.ஆனால் இப்போது வாசு ஐவிஎப் சிகிச்சையின் போது ( சோதனைக் குழாய் குழந்தை) தானே, கூடுதலாக ஒரு குரோமோசோமினை,ஊசி மூலமாகச் செலுத்திக் கருத்தரிக்கச் செய்து விடுகிறான். அப்படிப்பட்ட குழந்தைகளை சுமக்கத் தான் , வாடகைத் தாய்களாக, பெண்களும் இங்கே கடத்தி வரப் படுகிறார்கள். இதனை எல்லாம் அறிந்து கொண்ட வெண்ணிலா, இறுதியாக இருந்த குழந்தைக்கு அருகில் வந்த போது அங்கிருந்த கணினி மேஜையில் ஒரு அலைபேசி இருப்பதைக் கண்டாள்.ஆவலுடன் அதனை நெருங்கி வந்து பார்த்த போது தான், அது தன்னுடைய அலைபேசி என்பது அவளுக்குத் தெரிந்தது. அதனைக் கண்டதும் தான் அவளுக்குத் தன் உயிரே மீண்டு வந்தது போல இருந்தது. சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த தனது அலைபேசிக்கு உயிர் கொடுத்தாள் அவள்.

முதலில் தனது தந்தையை அழைத்துப் பேசலாம் என்று எண்ணிய அவள், பின் தன் முடிவை மாற்றிக் கொண்டவளாய் அதில் தான் இன்னமும் சேமித்துக் கொள்ளாத எண்களில் முதலில் இருந்த எண்ணைத் தட்டினாள். அது ரவியின் எண்களே!

முதலில் தன்னைப் பற்றி பொறுமையாகப் பேசி ரவிக்குப் புரிய வைக்க எண்ணிய அவள், அங்கே தனக்கு மிகவும் நெருக்கத்தில் நின்று கொண்டிருந்த தனசேகரனைக் கண்டதும் தான் அவளிடம் இருந்து இப்படி ஒரு அலறல் வெளிப்பட்டது .

தனசேகரன், " நெனச்சேன், இந்த ரூமில யாரோ இருக்காங்கன்னு எனக்கு சந்தேகம் இருந்ததினால தான் நான், வெளியே போற மாதிரி போயிட்டுத் திரும்பவும், உள்ளயே வந்தேன். வாசு பிரதரோட ஆள் தானே நீ. ஏன் உன்னால, அடங்கிப் போக முடியாதா. எதுக்கு உனக்கு இந்த வீணான ஆராய்ச்சி எல்லாம். போனை என் கிட்ட கொடுத்துட்டு நீ உன் இடத்துக்குத் திரும்பிப் போயிடு. போ, மத்த விஷயங்களை நாம அப்புறமா பேசிக்கலாம் " என்று அலட்சியக் குரலில் சொன்ன அவனுக்கு அப்போது தெரியவில்லை, தங்களது இடத்தைக் காவல் துறையினர் வளைத்து விட்டனர் என்பது.

வெண்ணிலா, " டேய், நீங்க எல்லாரும் டாக்டர்களா? அப்படி சொல்லிக்கிறதுக்கே எனக்கு அருவருப்பா இருக்கு . இப்போ எதுக்கு இப்படி ஒரு குழந்தைகளைத் தயாரிக்கிற தொழிற்சாலை இதனால உங்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுது. இப்படி சாகறதுக்குன்னே பிறந்திருக்கற குழந்தைகளைப் பார்க்கவே என் மனசு கொதிக்குது. " என்று பெருங்குரலில் அவனைத் திட்டி விட்டு, அருகாமையில் இருந்த அறைக் கதவைத் திறந்து கொண்டு அதற்குள் புகுந்து கொண்டாள்.

அந்த அறையில் அவள் கண்ட காட்சிகள், அதற்கு மேல் கொடூரமானதாக இருந்தது. கண் கொண்டு அதனைக் காண சகித்திடாமல், இரு கண்களையும், இறுக மூடிக் கொண்டு, அப்படியே சரிந்து, அமர்ந்தபடி அழத் தொடங்கினாள் .

' பெண் என்னும் மகாசக்தி;
அதுவே இன்னொரு
உயிர் சுமந்திடும் அற்புத சக்தி
இங்கே அதனையும்
இழிவு செய்திடும் மாந்தரும்
உளரே!!!
மங்கையராகப் பிறந்திடவே
செய்த மாதவங்களும்
இங்கே விழலுக்குப் பாய்ச்சிய
நீர் என்று ஆனதோ 'என்று

அவளது நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்தது.

தன் பிறந்த வீட்டில், தாயும், தந்தையும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அன்பைச் செலுத்தி அவளை வளர்த்தது என்ன? தான் இப்படி வரக் கூடாத இடத்திற்கு வந்து செய்வதறியாது சிக்கித் தவிப்பது என்ன?

அம்மா, சின்னதாக ஏதாவது வேலை சொன்னாலும் கூட, அப்பா அவளைக் கண்டிப்பதென்ன? " ஏய், மேனகா. அதுங்க ரெண்டும் புகுந்த வீட்டுக்குப் போனா கண்டிப்பா வீட்டு வேலை எல்லாம் பார்க்கத் தானே போகுதுங்க, அப்புறம் எதுக்காக இப்பவே பிடிச்சு வேலை வாங்கிட்டு இருக்கிறே. விடுடி, மீன் குஞ்சுகளுக்கு நீந்தக் கத்துத் தரணுமா என்ன? " என்று கேட்டு, அவளை அடக்கி விடுவார்.

அங்கே நடப்பவைகளை எல்லாம் பார்த்த போது, அவளுக்குத் தன் தந்தையின் நினைவு தான் வந்தது. ' அப்பா , எப்படி இருக்கீங்க அப்பா. காலமெல்லாம் உங்க காலடியிலேயே விழுந்து கிடக்கணும்னு தான் எனக்கு இந்த நிமிஷம் தோணுது. நான் திரும்ப வீட்டுக்கு வரும் போது என்னை ஏத்துக்குவீங்களா அப்பா ? ' என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்து கொண்டு, அழுது கொண்டிருந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. திடீரென்று ஒரு மென் கரம் அவளது தோளில் கை வைத்து அழுத்தியது.அவள் அந்தக் கரத்தின் மென்மையும், இளஞ்சூட்டினையும் ஒரு கணம் தனது, மனத்திற்குள் வாங்கிக் கொண்டாள்.

" வெண்ணிலா, எழுந்திரு வா! உனக்கு ஒன்னுமில்லை. நீ பத்திரமா இருக்கே! வாம்மா " என்று அழைத்தது ஒரு குரல். தலை கவிழ்த்தபடி அழுது கொண்டிருந்த வெண்ணிலா சற்று நிமிர்ந்து பார்த்தாள். அங்கே நின்று கொண்டு இருந்தது, ரவிச்சந்திரன்!

ஒரு கணம், அவளுக்குத் தான், எங்கு இருக்கிறோம்; இரண்டு தினங்களாக தனது வாழ்வில் நடந்தவை அனைத்தும், வெறுங் கனவா? என்ற எண்ணம் தான் எழுந்தது. ரவியைத் தவிர, அவளது பார்வையில் அங்கிருந்த எதுவும் தெரியவில்லை.

சட்டென எழுந்து கொண்ட வெண்ணிலா, " ரவி, ரவி; நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நான் இங்கே இருக்கேன்னு எப்படி தெரிஞ்சுது? நான் இனிமே, உயிரோட இருப்பேன்னு நம்பிக்கை கொடுக்கறதுக்குக் கூட இங்கே நான் பார்த்த சம்பவங்கள் இடம் கொடுக்கலை. பிளீஸ், ரவி முதல்ல என்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுங்க. எனக்கு இந்த இடம், ஏதோ மாயக் குகைக்குள்ள புகுந்துட்ட மாதிரியான எண்ணத்தைக் கொடுக்குது. இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் நான் இங்கே இருந்தேன்னா எனக்குப் பைத்தியமே பிடிச்சுடும் " என்று தலையைப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

" நிலா, என்ன இது அமைதியா இரு, நர்ஸிங் படிச்சிருக்கே, தைரியமா நோயாளிகளோட உன் நாட்களை ஓட்டியிருக்கே, அப்புறம் எதுக்காக உனக்கு இத்தனை பயம். வா, வா போகலாம் " என்று அவளை அணைத்தபடி ஆறுதல் கூறினான் ரவி.

வெண்ணிலாவின் மனத்திலும் அதே கேள்வி தான் எழுந்தது. ' ஆமாம், என் தைரியம் எல்லாம் எங்கே போச்சுன்னு தெரியலியே. ரவி நான் உன் கையைப் பிடிச்சுக்கவா ? உன்னை ஒட்டியே நானும் நடந்து வர்றேனே. எனக்கு இப்ப , உன்னோட தைரியமும் ஆளுமையும் தான், ரொம்பவே தேவைப்படுது ' என்று எண்ணியவள் அவனது மார்பில் சாய்ந்தபடி, அவனுடன் இணைந்து நடக்கத் தொடங்கினாள் .
-----------------------------------------------------------------------------------------------------

சில நிமிடங்களுக்கு முன்

வாசுவையும், ஷீபாவையும் கைது செய்த பின், அங்கே இருந்த நிலவறைக் கதவைத் திறந்து, உள்ளே புகுந்தனர், தீபக்கும் , ரவியும். பின்னோடு வந்து காவல் படை வீரர்கள், ஒவ்வொரு இடமாக அலசித் தேடத் தொடங்கினார்கள். முதன்முதலில், வெண்ணிலா
அடைக்கப்பட்டு இருந்த அறைக்குள் வந்த தீபக், அங்கிருந்தபடியே கதவுத் துவாரத்தின் வழியாக, உற்றுப் பார்த்த போது தான் தெரிந்தது, அடுத்ததாக இருந்த அறை தான் வாசுவின் ஆராய்ச்சிக் கூடம் என்பது. உடனே பலம் கொண்ட மட்டும், அந்தக் கதவின் தாழ்ப்பாளைத் தனது பிஸ்டலைக் கொண்டே உடைத்துக் கதவைத் திறந்து விட்டான் தீபக். அங்கு அவன் கண்டது, டிரிப் ஏறியவாறு, மயக்க நிலையில் இருந்த பெண்கள் ஐவரை.

" ரவி, இங்கே பாரு; இந்தப் பெண்கள்ல யாராவது உன் ...னோட வெண்ணிலா, இருக்காங்களான்னு பாரு.." என்று தயங்கிய குரலில் கேட்டான்.

ரவிக்குப் பயத்தில் உடல் முழுவதும் வியர்த்துப் போய் விட, பின் தைரியத்தைத் தன் மனத்தினில் சேர்த்த படி, அங்கிருந்த பெண்களைப் பார்வையால் அலசினான். நல்ல வேளையாக அந்தப் பெண்களில் வெண்ணிலா இல்லை!

இப்படியாக முன்னேறிச் சென்ற போது தான், அந்த அறையின் மறு புற வாசலுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த வெண்ணிலா, ரவியின் கண்களில் விழுந்தாள்! உடனே அவளை நெருங்கி, அவளை சமாதானம் செய்திட வேண்டும் என்ற, எண்ணத்துடன் அவளை நெருங்கி வந்தான் ரவி.

அந்தப் பெண்கள் யார்? வெண்ணிலா எந்த விதமான சிக்கலும் இன்றி தன் வீடு திரும்பிவிடுவாளா?

( வரும்)

ஹாய் ஃபிரெண்ட்ஸ், அடுத்த எபி போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸை சொல்லுங்க
 
அப்போ வாசுவா வில்லன்....?
சூப்பர் 😀
 
Top