Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை! அறிமுகம் மற்றும் டீசர்

Advertisement

miru and miru

New member
Member
வாசகத் தோழமைகளுக்கு வணக்கம்!

தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் நடைபெறும் நாவல் போட்டியில் பெயர் குறிப்பிடாமல் கலந்து கொள்ளும் எழுத்தாளர் நான். பெயர் இல்லை என்பதால் என் போட்டிக் கதையாகிய “வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை” யின் நாயகன் நாயகி பெயர்களையே இணைத்து “மிரு அண்ட் மிரு” என்ற பெயருடன் உங்களுடன் கதைப் பதிவுகளையும் கதை குறித்த அறிவிப்புக்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.

நான் உங்களுக்குப் புதியவள் இல்லை. என் எழுத்து உங்களுக்குப் பரிச்சயமானதுதான். என்றாலும் என் பெயர் இல்லாமல் எழுத்துக்கு மட்டுமே கிடைக்கும் வரவேற்பையும் விமர்சனங்களையும் காண உண்டான ஆவலே இந்த முடிவுக்குக் காரணம்.

ஒரு வேளை என்னைக் கண்டுபிடித்துக் கேட்டீர்கள் என்றாலும் ‘நான் அவனில்லை’ என்றே கூறுவேன். எனவே நான் யார் என்று தெரிந்து கொள்ள போட்டி முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் தோழமைகளே!

மே இறுதியிலோ ஜூன் முதல் வாரத்திலோ கதையை ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். ஆரம்பித்து விட்டால் வாரம் இரு அத்தியாயங்களாகக் கதை தொடர்ந்து வரும்.

438089881_404670645732678_2315941399178174797_n.jpg

கதையில் இருந்து இப்போதைக்கு ஒரு சின்ன டீசர்...

வீட்டிற்கு வந்து கசகசப்புப் போகக் குளித்து வந்தவள் ஒரு சிகப்பு நிறப் பருத்திப் (காட்டன்) புடைவையை அணிந்து கொண்டாள். மதியம் மூன்றரை மணி வரை காத்திருந்து பார்த்து விட்டு மிருத்யுஞ்சயன் வரவில்லை எனவும்தான் அவன் வெளியே எங்காவது மதிய உணவை உண்டிருப்பான் என்று முடிவு செய்து கிளம்பினாள். அவள் அந்தப் பக்கம் போக இந்தப் பக்கம் வந்திருந்தான் அவன்.


நேராக சமையல்கட்டுக்குச் சென்றவள் மிருத்யுஞ்சயன் சாப்பிட்டானா என்று கேட்க அவன் காஃபி கேட்ட கதை தெரிய வந்தது. உடனே வேகமாகக் காஃபியைக் கலக்கி எடுத்துக் கொண்டு மேலே சென்றவள் வாசலுக்கு அருகில் ஃப்ளாஸ்கை வைத்து விட்டு அறைக்குள் நடமாட்டம் தெரிகிறதா என சில நிமிடங்கள் காத்திருந்து பார்த்தாள்.

அரவம் இல்லை எனவும் உறங்குகிறான் போலும் என நினைத்தவள் எழுந்ததும் குடிக்கட்டும் என நினைத்துக் கீழே வந்து விட்டாள். இரவு எட்டு மணி வரை தாத்தாவின் அறையில் அவருடன் பேசிக் கொண்டிருக்க அப்போதும் அவன் கீழே வந்திருக்கவில்லை.

ஒன்பது மணி வரை பார்த்தவள் தானே உணவை எடுத்துக் கொண்டு மேலே சென்றாள். வாசலில் வைத்தவள் ஃப்ளாஸ்கை எடுத்துப் பார்க்க கனமாக இருந்தது. திறந்து பார்க்க அவன் ஃப்ளாஸ்கை எடுக்கவே இல்லை எனப் புரிய தயங்கி நின்றாள். சில நிமிடங்கள் கீழுதட்டைக் கடித்தவாறே யோசித்தவள் ஒரு முடிவுக்கு வந்து கதவை மெதுவாகத் தள்ள அது திறந்து கொண்டது.

ஏசியின் குளுமை அவளை இதமாய் அரவணைக்க இருளடைந்து இருந்த அறையில் மெதுவாகத் தொட்டுத் தடவி இரவு விளக்கைப் போட்டாள். அவன் அறையில் எது எங்கே இருக்கிறது என்பது கண்டுபிடிப்பதா அவளுக்குக் கஷ்டம்!

மெலிதான நீல ஒளியில் அவள் கட்டிலைப் பார்க்க அங்கே கவிழ்ந்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தானவன்.

போவதா இருப்பதா எனக் குழப்பம் அவளுக்கு...

மதியம் உண்டானோ தெரியவில்லை...மதியம் பணியாட்கள் கொடுத்த காஃபி அவனுக்குக் கண்டிப்பாகப் பிடித்திராதென அவளுக்குத் தெரியும். மாலையும் காஃபியோ சிற்றுண்டியோ உண்ணவில்லை... இப்படி உறங்கிக் கொண்டே இருந்தால் உடல்நலம் என்னாவது என சிந்தனை நீள காலையில் அவன் அவளிடம் கோபமாக என்றாலும் பேசினான் என்ற எண்ணம் கொடுத்த தைரியத்தில் மெதுவாக அவனருகே நெருங்கி “அத்தான்!” என்று அழைத்தாள். அசைவில்லை அவனிடம்...

இன்னும் சற்று நெருங்கி “அத்தான்!” என்றாள்...ம்ஹூம்...அடித்துப் போட்டது போல் உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் தோளைத் தொட்டு லேசாக அசைக்க முற்பட்டவாறே ‘அத்தான்’ என்று கொஞ்சம் சத்தமாக அழைக்க மெல்ல அசைந்தவன் இவள் நின்றிருந்த பக்கமாகத் திரும்பி அவள் கைபற்றி இழுத்துப் படுக்கையில் போட்டு அவள் மேல் படர்ந்தான்.

...............................................................................................................................................

மதியமும் மாலையும் சேர்த்து உறங்கி இருந்தவனுக்கு இப்போது உறக்கம் பிடிக்கவில்லை. எழுந்து பால்கனியில் வந்து நின்றான்.

இருளாக இருந்த தோட்டத்தில் யாரோ உலவுவது தெரிந்தது. அறையை விட்டு வெளிவந்து கீழே சென்றான். வாசலில் சில நிமிடங்கள் நிதானித்தவன் அந்த இருளில் உலவுவது யார் என விழிகளால் விசாரணை செய்ய அங்கோ பகல் முழுவதிலும் அவனைப் பைத்தியம் போல் அலைய விட்டவள் இப்போது பரதேவதையாய் தோட்டத்தில் பின்னல்நடையிட்டுக் கொண்டிருந்தாள்.

வாசலைக் கடக்காமல் அங்கிருந்த பெரிய தூணில் சாய்ந்தவன் அவளையே பார்க்க, அதை அறியாதவளாய் தன் கழுத்துச் சங்கிலியில் கோர்த்திருக்கும் இதய வடிவ டாலரைப் பற்களில் வைத்துக் கடித்த வண்ணம் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்கள் நின்றவன் அவளை நோக்கி நடந்தான்.

“க்கும்”

திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க கோட்டோவியமாய் இருளில் நின்றிருந்தவனின் வரி வடிவத்தைக் கண்டு கொண்டவள் திகைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“இங்க என்ன பண்றீங்க? தூங்கலையா?”

“நான் கேட்க நினைச்சதை நீ கேக்குற? தூங்காமப் பேய் மாதிரி ‘நானே வருவேன்’ ன்னு உலாத்திகிட்டு இருக்கே...உன்னைப் பார்த்துட்டுதான் நான் கீழ இறங்கி வந்தேன்”

“ஓ, சாரி! என்னாலதான் உங்க தூக்கம் கெட்டுடுச்சா? இதோ நான் போறேன். நீங்களும் போய்த் தூங்குங்க” என்றவள் வீட்டின் பின் வாசல் வழியாக உள்ளே செல்ல எண்ணி அவன் பக்கமே வராமல் எட்டி நடை போட,


“இன்னிக்கு மட்டும்தானா என் தூக்கம் உன்னால கெட்டுச்சு? நீ பிறவி எடுத்ததே என் தூக்கத்தைக் கெடுக்கத்தானே!”

கதையில் சந்திக்கலாம் நண்பர்களே!

உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

மிரு & மிரு
 
Top