Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் மண்ணில் விழுந்த நட்சத்திரம் அத்தியாயம் 1

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 1

'அக்கா, பசிக்குது.' என்று கையைப் பிடித்து இழுக்கும் தம்பியின் குரல் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தாள் ஆறுமுகம்.
பொழுது பொல பொலவென்று விடிந்திருந்தது. தென்னங்கூரையின் ஒரு ஓரமாக கிழிந்திருந்த சிறு இடுக்கு வழியே சூரிய வெளிச்சம் சாய்வாய் தூசிப் படலமாய் விழுந்தது.
சட் என்று எழுந்து தம்பியைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். ஒரு ஓரமாய் அம்மா ஒருக்களித்து படுத்திருக்க, அவளை அடுத்து தங்கை செவ்வந்தியும், இன்னொரு தம்பி ராஜாவும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். மெதுவாக அவர்களைத் தாண்டி வாசல் பக்கம் வந்தாள். மூடியிருந்த பனம் படலை மெதுவாகத் திறந்து வாசலுக்கு வந்தாள். வாசலில் இருந்த பக்கெட்டை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த அடி பம்பை நெருங்கினாள். பக்கத்து குடிசை ராக்காயி அக்கா, 'செண்பகம் முழிச்சிருச்சா?' என, 'அம்மா தூங்கிட்டு இருக்கு.' என்று சொல்லியபடி குழாயடியில் பக்கெட்டை வைத்துக் கொண்டு அடிபம்பை ஒரு கையால் பிடித்து இடுப்பில் தம்பியை வைத்துக் கொண்டு அடித்தாள்.
தண்ணீர் சர் சர் என்று பக்கெட்டில் விழ, நிறைந்ததும் அதைத் தூக்கிக் கொண்டு வீட்டு வாசலுக்கு வந்தாள். தம்பியை பக்கத்தில் கிடந்த கல்லில் உட்கார்த்தி வைத்து விட்டு பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகிக் கொண்டு பத்து குச்சிகளே இருந்த விளக்குமாறை எடுத்து வாசலைக் கூட்டினாள். பின்னர் பக்கெட்டில் இருந்த நீரை வாசலில் 'ப்ளச் ப்ளச்' என்று தெளித்தாள்.
தெளித்து முடித்ததும், தம்பியை மறுபடியும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு குடிசையின் பின்பக்கம் போனாள். அங்கு வழக்கம் போல அவள் அப்பா ரங்கன் காலை அகட்டி வைத்து உள்ளாடை தெரிவதும் கூட தெரியாமல் வெயில் முகத்தில் சுள் என்று அடித்தும் உணராமல் வாயிலும், உடம்பிலும் மண் அப்பியிருக்க நேற்று குடித்த சாராயத்தின் மப்பு தீராமல் கண்ணை சுருக்கி தூங்கிக் கொண்டிருந்தான்.
அப்பனது வேட்டியை ஒழுங்காய் போட்டு விட்டு குடிசையினுள் நுழைந்தாள்.
திங்கள் கிழமை ஆனாலே இப்படித்தான். எங்கேயோ நண்பர்களுடன் போய் சாராயத்தை குடித்து விட்டு ராத்திரி எல்லாம் திண்ணையில் படுத்து வாயில் வரும் கெட்ட வார்த்தைகளை எல்லாம் சகட்டுமேனிக்குத் தூவி விட்டு பின்பு குடிசையின் பின்னால் போய் அங்கிருக்கும் கயிற்றுக் கட்டிலில் படுத்து விடும். விடியற்காலை ஆனால் இப்படித்தான் அலங்கோலமாய் தரையில் கிடக்கும். தலையில் ஏதோ காயம் பட்டிருந்தாலும் உணர முடியாத அளவுக்கு குடி போதையில் இருக்கும். ஆறுமுகம் சிறு வயதில் இருந்தே இவ்வாறு பார்த்து பழகியதால் பெரிதாய் ஏதும் அலட்டிக் கொள்ள வில்லை. அம்மா பார்த்தால் தான் கத்தி கூப்பாடு போடுவாள்.
'இப்படி சம்பாதிக்கிறதெல்லாம் கொண்டு போய் சாராயக் கடையிலேயே போய் கொட்டு. ஏதோ நான் சம்பாதிக்கிறதுனால இந்த குடும்பம் ஓடுது. இல்ல நாங்க எல்லாரும் பிச்ச தான் எடுக்கணும். ஏற்கனவே ரெண்டு பொம்பள புள்ளைங்க. வயத்துல இருக்றது ஆணா பொண்ணானு தெரியல. மூத்தவனாது பொறுப்பா இருக்றான்னா ஒன்ன மாதிரியே பொறுப்பில்லாம ஆயிட்டான். எப்ப வீட்டுக்கு வர்றான் போர்றான்னு தெரியல. ஏதோ இந்த ஆறு இருக்றதனால பரவால்ல. வேலைக்கு நிம்மதியா போயிட்டு வர முடியுது. அதுவும் பேறுகால சமயம் என்ன செய்யப்போறேன்னு தெரியல. அந்த மாரியாத்தா தான் கண்ணத் தொறக்கணும்..'
'ஏ சும்மா பொலம்பாத புள்ள.. இத்தன பெத்தவளுக்கு இன்னொண்ணு பெத்துக்கவா தெரியாது. எல்லாம் அந்த கடவுள் பாத்துக்குவான்.' என்று ரங்கன் வாய் கொப்பளித்தவாறு சொல்லுவான்.
'ஆமாம். செஞ்சதெல்லாம் நீயி. இத்த மட்டும் அந்த கடவுள் பாத்துக்கணுமாக்கும். அப்பன்னு ஒனக்கு பொறுப்பு வேண்டாம்.'
'ஐய. காலயிலேயே கூவாத. இன்னைக்கு தோவாள போணும். மூணு நாள் ஆவும் நான் வர. வீட்ட பாத்துக்க.'
'பொல்லாத வூடு. மழ பெஞ்சா ஒழுகுது. வெயில் அடிச்சா, பனி பெஞ்சா தாங்க மாட்டெங்குது. வூடாம் வூடு. எங்க அப்பா என்ன ஓட்டு வீட்ல வச்சிருந்தாரு. நீ என்ன குடிசைல தள்ளிட்ட. ஒரே பொண்ணோட வாழ்க்க இப்படி குடிகாரன்கிட்ட மாட்டிகிட்டேன்னு கண்ணீர் விட்டே சீக்கிரம் போயிட்டாரு...'
மூக்கை உறிஞ்சுக் கொண்டே சொல்லுவாள் செண்பகம்.
'இப்ப எதுக்கு பழசெல்லாம் இழுக்குற? சீக்கிரம் சோறு பொங்கி குழந்தைங்கள பள்ளிக்கூடத்துக்கு அனுப்பற வழிய பாரு.'
'ஏதோ இந்த பள்ளிக்கூடத்துக்கு போறாங்காட்டி புள்ளைங்க ஒரு வேள நல்ல சாப்பாடு சாப்டுது. ஒன்ன கட்டிகிட்ட பாவத்துக்கு நான் தான் கஷ்டப்படணும்னா நான் பெத்ததுங்களும் கஷ்டப்படுதே.'
'அப்படிப்பட்டவ நான் பக்கத்துல வர்றப்ப ஒதுங்கறது. நீயும் தான வந்து ஒட்டிக்கிற.'
'நான் செவப்புத் தோலுன்னு வீட்டு வாசல்ல தவம் கெடந்து கட்டிகிட்டது நீயா நானா? ஒரு பக்கம் கடமன்னு நெனச்சிக்றது. இன்னொரு பக்கம் நீ இத்த தேடி எங்கெயாவது போயிட்டென்னா என் கொழந்தங்க கதி என்னாவதுன்னு..' என்று மென்று முழுங்குவாள்.
'சரி சரி. போய் வென்னி வை. குளிச்சிட்டு போணும்.' என்று முற்றுப்புள்ளி வைப்பான் ரங்கன்.
வெளியூர் வேல என்றால் குஷியாக அனுப்புவாள் செண்பகம். ஏதோ சம்பாதிக்கும் பணத்தில் பாதியாவது வீடு வந்து சேரும். ரங்கன் மாதிரியே செண்பகமும் கட்டிட கூலி வேலை தான் பார்த்தாள். ரங்கன் மேசன். இவள் சித்தாள். உள்ளூர் என்றால் ரெண்டு பேரும் ஒரே கட்டடத்துக்கு போவார்கள். வெளியூர் என்றால் அவன் மட்டும் போய் வருவான். இவள் வேறு யாராவது சித்தாள் வேலைக்கு கூப்பிட்டால் போவாள். இல்லை என்றால் வீட்டில் இருப்பாள். அன்றாடம் ஏதோ சம்பாதித்தால் தான் அவள் வீட்டில் அடுப்பு எரியும்.
குடிசையின் உள்ளே சென்ற ஆறுமுகம் சமையல் அறை போல் ஒரு ஓரமாய் ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் சென்று வரிசையாய் வைக்கப்பட்டிருந்த அலுமினியப் பாத்திரங்களில் ஒன்றைத் திறந்து பார்த்தாள். நீத்தண்ணி தெரிந்தது. கையை உள்ளே விட்டு அளைந்தாள். கொஞ்சம் சோறு தட்டுப்பட்டது. உடனெ பக்கத்தில் ஒரு பேப்பரில் வைக்கப்பட்டிருந்த வெங்காயம் இரண்டை உரித்தாள். ஒரு டம்பளரை எடுத்து அதில் கொஞ்சம் நீத்தண்ணீயோடு தம்பியை அருகில் தரையில் உட்கார வைத்தாள்.
தம்பளரை தம்பியின் வாய் அருகே வைத்து 'குடிர்ரா' என்றாள். அது வாய் வைத்து ஒரு வாய் குடித்தது. இவள் நறுக்கி வைத்திருந்த வெங்காயத் துண்டுகளில் இரண்டை எடுத்து தம்பிக்கு கடிக்க குடுத்தாள்.
ஆறுமுகத்திற்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் பதினான்கு வயதிருக்கும். அவள் அண்ணன் சேகருக்கு 18. தங்கச்சி செவ்வந்திக்கு 12. தம்பி ராஜா 8. ஒக்கலில் இருக்கும் சிவாவுக்கு 4.
மூத்தவள் என்பதாலோ பெண் என்பதாலோ செண்பகத்திற்கு பொறுப்பு ஜாஸ்தி. அந்த குப்பமே ஆறுமுகம் இருக்றதால செண்பகத்திற்கு பரவால்ல. இல்ல திண்டாடி இருப்பா என்று பேசும். தம்பி, தங்கச்சிகள் மேல் அவளுக்கு பாசம் அதிகம். அண்ணனின் மீதும் தான். ஆனால் அவன் எங்கே வீட்டில் தங்குகிறான்? நினைத்தால் வருவான். பொங்கி வைத்ததை தின்பான். தூங்குவான். அப்பனிடம் காசு கேட்டு நச்சரிப்பான். அப்புறம் கொஞ்ச நாள் ஆளைக் காணாது.
தம்பி சிவா ஒரு டம்பளரோடு நிறுத்திக் கொள்ளவே, அவனை உட்கார வைத்து ஒரு கார் பொம்மையை கையில் கொடுத்து விளையாடச் சொல்லி விட்டு தம்பி, தங்கையை எழுப்பினாள்.
அப்போது குடிசையினுள் நுழைந்த பக்கத்து குடிசை ராக்காயி அக்கா அலறினாள்.
'ஏ செண்பகம்! எந்திரிடி! இங்க வந்து ஒன் புருஷனைப் பாரு. பேச்சு மூச்சு இல்லாம கெடக்குறாரு.'
செண்பகம் சத்தம் கேட்டு எழுந்து 'ஙீ' என்று முழித்து விட்டு அப்புறம் ராக்காயி சொன்னது உறைக்க முடியை அள்ளி முடித்துக் கொண்டு வயிற்றில் பிள்ளை இருப்பதனால் மெல்ல எழுந்து கொண்டே சொன்னாள்.
'என்னடி காலைலெ என்னென்னமோ சொல்ற? எங்க அது?'
'பின்னால படுத்துருக்கு. வெயில் மூஞ்சுல சுள்னு அடிச்சும் எந்திருக்க மாட்டேங்குது. தண்ணிய மூஞ்சில ஊத்திப் பாத்தேன். அப்பவும் எந்திருக்க மாட்டேங்குது. எனக்கென்னமோ பயமா இருக்குடி.'
'ஐயோ மகமாயி. என்ன இது சோதன?'
செண்பகம் எழுந்து வெளியே போவதைப் பார்த்த ராஜாவும், செவ்வந்தியும் அம்மா கூட வெளியே ஓட, ஆறுமுகம் சிவாவைத் தூக்கி ஒக்கலில் உட்கார வைத்து எழும்புவதற்குள் 'ஐயோ போயிட்டீங்களா? இனி நான் இந்த குழந்தைங்கள வச்சிகிட்டு என்ன பண்ணுவேன்?...' என்ற ஓலம் அவள் காதை வந்து அடைந்தது.
(தொடரும்)
 
எத்தனை பிள்ளைகள்
பொறுப்பு இல்லாத அப்பா
பாவம் ஆறமுகம்
என்ன ஆச்சு அப்பனுக்கு
 
இத்தனை பிள்ளைகள். இனி எப்படி சமாளிக்க போறாங்களோ. பாவமா இருக்கு
 
Top