Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் நித்யகல்யாணி அத்தியாயம் 5

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 5

கண்களைத் திறந்து பார்த்தபோது சுற்றிலும் கிராமத்து முகங்கள் தெரிந்தன. நித்யா தான் முதலில் கண் திறந்தாள். மேரி டீச்சர் நின்றிருந்தார்.
'நித்யா!'
'அம்மா!'
'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'
நித்யா பக்கத்தில் படுத்திருந்த கல்யாணியைப் பார்த்தாள். அவள் இன்னும் கண்களை மூடி இருந்தாள். முத்தம்மாள் வயிற்றைப் பிடித்து அழுத்த வாய் வழியே குடித்த தண்ணீர் வழிய லொக் லொக் என்று இருமிக்கொண்டு மெதுவாய் நிமிர்ந்தாள் கல்யாணி.
பக்கத்தில் நின்ற திருடனைப் பார்த்து முத்தம்மாளின் கையைப் பிடித்துக் கொண்டாள் கல்யாணி.
'பயப்படாத கல்யாணி. ஒங்கள குளத்துல குதிச்சு காப்பாத்துனதே பெருமாள் தம்பி தான்'
ஆச்சர்யத்துடன் நித்யாவும் கல்யாணியும் அந்தத் திருடனைப் பார்த்தனர். பேரு பெருமாளா? இவன் எப்படி எங்களைக் காப்பாற்றினான்?
அந்தப் பெருமாள் மெல்ல தலையை குனிந்து பேசினான்.
'பாப்பா! ஏதோ தெரியாம நகைக்கு ஆசப்பட்டு அன்னைக்கு ஒங்கள பயமுறுத்தினேன். நான் ஒண்ணும் திருடன் இல்ல. அன்னைக்கு உள்ள போன சாராயம் அப்படி நடந்துக்க வச்சிருச்சி. சும்மா பேசலாம்னு தான் இப்ப உங்க கிட்ட வந்தேன். நீங்க பயந்து கொளத்துல விழுந்துட்டீங்க. கொளத்துல குதிச்சு ஒங்கள வெளில கொண்டு வந்து சைக்கிளயும் மீட்டி என் பாவத்துக்கு பிராயசித்தம் தேடிக்கிட்டேன். என் தண்டன முடிஞ்சுது. நான் என் ஊருக்குப் போறென். என்ன மன்னிச்சிருங்க.எனக்கும் கூடப் பொறந்த தங்கச்சி, அக்காலாம் இருக்கு.' என்று கண்ணீர் மல்க முத்தம்மாளிடமும், மேரி டீச்சரிடமும் மன்னிப்பு கேட்டான் பெருமாள்.
முத்தம்மாள் 'இருக்கட்டும்பா. இனியாவது ஒழச்சு சாப்பிடு என்ன?' என மேரி டீச்சரும் அதை ஆமோதித்தாள்.
பெருமாள் விடை பெற்றுப் போக, குளத்தின் கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பெரியவர் 'திருடனாப் பாத்து திருந்தா விட்டா திருட்டை ஒழிக்க முடியாது' என்று பாடினார்.
ஆயிற்று இரண்டு வருடங்கள்.
நித்யாவும், கல்யாணியும் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் இருவரும் ஸ்கூலுக்குப் போகும்போது அரும்பு மீசை முளைத்த வாலிபன் ஒருவன் அவர்களை வழிமறித்தான்.
'ஏய் ஒரு நிமிஷம்!'
கல்யாணியும் நித்யாவும் என்ன என்பது போல் பார்க்க, அவன் ஒரு கடிதத்தை அவர்களிடம் நீட்டினான்.
கருப்பாய் சுருட்டை முடியுடன் வேட்டி சட்டை அணிந்திருந்தான் அவன்.
'இந்த லெட்டர ஒங்க கூட ஒங்க ஊர்ல இருந்து வருமுல்ல. மீனா! அதுட்ட குடுத்துறியா?'
கல்யாணி சட் என்று அதை வாங்கினாள்.
'சரின்னா'
அவன் முகத்தில் சந்தோசத்தோடு சைக்கிளை மிதித்துக் கொண்டு போக, நித்யா கல்யாணியைத் திட்டினாள்.
'ஏண்டி வாங்கின அவன் கிட்டருந்து. நமக்கு இதெல்லாம் தேவயா?'
'இதுல என்னடி இருக்கு? மீனாட்ட குடுப்போம். அவளாச்சு அவனாச்சு.'
'அம்மாக்கு தெரிஞ்சா திட்டும்.'
'தெரிஞ்சாத்தானே. ஏன் நித்யா? அவன் என்ன எழுதி இருக்கலாம்னு பாக்கலாமா?'
'வேண்டாம்டி! வீணா வம்பு.'
'சும்மா வாடி!' என்ற கல்யாணி ஒரு மரத்தடியில் அமர்ந்தாள். லெட்டரைப் பிடித்து படித்தாள்.
'அன்புள்ள மீனா!
உன் ராஜு எலுதுவது.
எப்படி இறுக்க? நான் நல்லா இறுக்கேன். நெதமு ஒண் பிண்ணல வாறென். சிறிக்க. ஆணா எதுவும் பேச மாட்டுங்கரியே? நேத்து காதல் பரிசு பாத்தேன். ராதாக்கு பதிளா நீ தான் தெரிஞ்ச. நானும் நீயும் காதல் மவரானி பாட்டுக்கு ஆடுர மாதிறி கனவு வந்துச்சி. என்ன ஒனக்கு புடிச்சிருகு தானா? புடிச்சிருந்தா நீ நாளைக்கு கனகாம்பறம் தலைல வச்சிட்டு வா. இல்லன்னா வேண்டாம். ஒன் தலலதான் என் தலவிதியே இறுக்கு.
உன் காதாலன்
ராஜு. '
சிரித்தாள் கல்யாணி.
'அந்த மீனாக்கா எவ்ளொ நல்லா படிக்கும். இவன் என்னடான்னா எத்தன தப்பு தப்பா லெட்டர் எழுதி இருக்கான்? இதப் பாத்தா அந்த அக்கா காரித் துப்பிரும்.'
நித்யாவும் சிரித்தாள்.
அப்போது அங்கு வந்த மாணவியர் கும்பலில் மீனா வந்தாள். நீல கலரில் தாவணி பாவாடையும், வெள்ளை பிளவுசும் அணிந்திருந்தாள். கொஞ்சம் புத்தகங்களை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்தாள். பக்கத்தில் கூட வரும் பிள்ளைங்களோடு சிரித்துப் பேசி வந்து கொண்டிருந்தாள்.
இவர்களைப் பார்த்ததும் சிநேகமாய் சிரித்தாள்.
'என்ன வாலுங்களா? இங்க உக்காந்திட்டீங்க? காலு வலிச்சிருச்சா?'
'இல்லக்கா. ஒங்கள பாக்கத்தான் உக்காந்திருக்கோம்.'
அவள் மற்ற மாணவியருடன் சொன்னாள்.
'நீங்க போங்கடி! நான் வர்றென்.' என்றாள்.
அவர்கள் தொடர்ந்து நடக்க இவர்களிடம் திரும்பினாள்.
'என்ன கல்யாணி?'
கல்யாணி சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு புத்தகத்தின் நடுவில் வைத்திருந்த அந்த லெட்டரை எடுத்து நீட்டினாள்.
'இந்தாக்கா! ராஜு அண்ணன் இத ஒன்கிட்ட தரச் சொல்லிச்சு.'
'ராஜு அண்ணனா?'
'அதாங்கா. ஒன் பின்னாலயே ஆலமரத்துலருந்து சைக்கிள மெதுவா ஓட்டிட்டு வருமே அந்த சுருட்ட முடி. அதும் பேரு தான் ராஜு.'
மீனா அதிர்ச்சி ஆனாள். ஆனால் வெளிக்காட்டாமல் 'என்ன சொல்லி தந்துச்சி.' என்றாள்.
'ஒண்ணூம் சொல்லலக்கா. குடுக்கச் சொல்லி தந்துச்சு.'
அவள் டக் என்று அதை வாங்கி தனது ரெக்கார்டு நோட்டில் வைத்துக் கொண்டாள்.
'இங்க பாரு கல்யாணி. யார்ட்டயும் இத சொல்லக் கூடாது. அது பக்கத்து ஸ்கூல் சாரதா தந்தது. வேற யாருக்காவது தெரிஞ்சா ஏதாவது சொல்லப் போறாங்க.'
கல்யாணியும் நித்யாவும் அவளது பொய்யைக் கேட்டு சிரிப்பு வந்தும் சிரிப்பை அடக்கிக்கொண்டு 'சரிக்கா' என்றார்கள். மீனா தன் ஜாமெண்டரி பாக்ஸைத் திறந்து அம்பது பைசா எடுத்து அவர்களிடம் நீட்டினாள்.
'இந்தாங்க! கல்கோனா வாங்கித் தின்னுங்க.'
நித்யா அதை வாங்கிக் கொள்ள மூவரும் வேக வேகமாய் பள்ளிக்குச் சென்றார்கள்.
மறு நாள் காலையில்...
இவர்கள் இருவரும் மீனாவுக்காக காத்திருக்க, மீனா வந்தாள் மற்ற நண்பிகளோடு தலையில் கனகாம்பர சகிதமாய். இவர்கள் நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார்கள்.
கல்யாணி கேட்டாள்.
'மீனாக்கா! ஒனக்குத்தான் கனகாம்பரப் பூவே பிடிக்காதே. இன்னைக்கு என்ன தல கொள்ளாத பூவு?'
ஒரு நிமிடம் 'ஙீ' என்று முழித்த மீனா 'சும்மா வச்சுப் பாக்கலாமேன்னு தான்.' என டிங் டிடிங் என்று மணி ஓசையோடு சைக்கிள் வந்தது. ராஜு தான். மாணவியர் கூட்டத்தில் ரெண்டு மூணு பேர் கனகாம்பரப்பூ வைத்திருக்கவே குழம்பிய அவன் அவர்களைத் தாண்டிச் சென்று சிறிது தூரத்தில் சைக்கிளை நிறுத்தி ஏதோ ரிப்பேரானது போல் நடித்தான். அதை சிறிது நேரம் பார்த்தவன் மீனாவின் தலையைப் பார்த்து முகம் வாடினான். சிரித்துப் பேசி வந்த மீனா இவன் முக வாட்டத்தை கவனித்து இரட்டைப் பின்னலில் கனகாம்பரம் வைத்திருந்த பின்னலைத் தூக்கி முன்பக்கம் இட்டாள். ராஜு கண்ணில் சூரிய பிரகாசம்.
அவன் சைக்கிள் பக்கம் வந்த மாணவியரில் கல்யாணி தான் ராஜுவைக் கேட்டாள்.
'என்னண்ணே! ரிப்பேரா?'
'ஆ..ஆமாம். பஞ்சராச்சுன்னு நெனக்கறேன்.'
'பூவப் பாத்த ஒடனே பஞ்சராயிரிச்சா?'
ராஜு அதிர்ந்து 'என்ன கல்யாணி?' என, 'இல்லண்ணே! பக்கத்துல பாருங்க. ஆவாரம்பூவுக்குப் பக்கத்துல முள்ளுச்செடி. அதச் சொன்னேன்.'
மீனா ராஜுவை ஒரு பார்வை பார்த்து விட்டு நகர, ராஜு கல்யாணி, நித்யாவை நிறுத்தி 'அந்த லெட்டர மீனாட்ட குடுத்தியா?' என்று கேட்க நமுட்டு சிரிப்போடு 'இல்லயே' என ராஜுவின் முகத்தில் சந்தோஷம் வடிந்தது.
'இல்லியா?'
அப்போ தற்செயலா கனகாம்பரம் வச்சுட்டு வந்துருப்பாளோ?
அவனது தவிப்பை ஒரு நிமிடம் ரசித்து விட்டு 'இல்லண்ணே, கொடுத்துட்டேன். சும்மா சொன்னேன்.' என்று சொல்லி விட்டு இருவரும் ஓடினார்கள்.
மறு நாள் காலை...
பட பட என்று கதவு தட்டப்பட, தூக்கக் கலக்கத்தில் எழுந்து கலைந்த தலையை சுருட்டி கொண்டை போட்டுக் கொண்ட மேரி டீச்சர் மணியைப் பார்த்தாள். காலை ஐந்து மணி.
யாரு இந்த நேரத்தில்?
கதவைத் திறந்தாள்.
அங்கே முத்தம்மாள் படபடப்புடன் நின்றிருந்தாள்.
'டீ..டீச்சர்! கல்யாணி.. கல்யாணி...'
டக் என்று திகில் புகுந்து கொண்டது மேரி டீச்சர் மனதில்.
'கல்யாணி... கல்யாணிக்கு என்ன?'

(தொடரும்)
 
Nice epi.
Theeya vela seythu immediate epi kodutha author ji.ku nandri.
Kalyani periya ponnu aagitala athukku 5 manikku thoonga vidathu disturb pananuma??( oooh engalukku suspense ah).
Ivalavu spelling mistake odu oru letter ah??
Thirudan sir romba nalla ullam kondavaro????
 
கல்யாணி பெரியவளாகிட்டாளா. அதற்கு எதற்கு ்அவ்வளவு காலையில் மேரி வீட்டுக்கு வரணும். ஒவ்வொரு எபி கடைசியிலும் எங்களை பயமுறுத்தனும் என நினைக்கிறீங்க
 

Advertisement

Top