Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மூவிலை - 2 | வினைப்பயன் & தேடல் துவங்கியதே! | கிருஷ்ணா பச்சமுத்து | திகில் நாவல்

Advertisement

writerkrishna

Member
Member
மூவிலை - 2
வினைப்பயன் & தேடல் துவங்கியதே!​
- கிருஷ்ணா பச்சமுத்து​
....................
வினைப்பயன்
````````````````````````​

அக்டோபர் 26, 2018. முன்னிரவு.

சண்முகவேல் திருவான்மியூர்-பாண்டி சாலையில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை பழைய அம்பாசிடரில் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். முன்னே ஒரு வெள்ளை நிற இன்னோவா சென்றுகொண்டிருந்தது. இன்னோவா கோவளத்தை கடந்து செல்லும்போது இன்னோவா காரிலிருந்து யாருக்கோ அலைபேசியில் அழைத்தார் வட்டச்செயலாளர் சுப்பிரமணி . அப்போது சண்முகவேலின் கையிலிருந்த பழைய நோக்கியா போன் அலறியது. அதனை அமைதிப்படுத்தி காதுக்கு கொடுத்தார் சண்முகவேல்.

"சொன்ன இடத்துக்கு இன்னும் ஹாப் அன் ஹவர் ல வந்துடுவேன்..." வட்டச்செயலாளர் சுப்பிரமணி சொன்னார்.

"ஆங்.. வாங்க சார். தனியா தான வரீங்க.. டீல் ரொம்ப பெருசு.. வெளிய லீக் ஆனா எனக்கு பெரிய ப்ராப்லம்.." சண்முகவேல் எச்சரிக்கையான குரலில் சொன்னார்.

"தனியா தான் வருவேன். அதெல்லாம் பாத்துக்கலாங்க.. நான் ரொம்ப வருசமா இந்த ரியல் எஸ்டேட் பண்ணிட்டு இருக்கேன். அரசியல் எல்லாம் அதிலிருந்துதா வந்தது. ரெஜிஸ்டர் ஆபிஸ் ல எல்லாம் நமக்கு தெரிஞ்ச ஆளுங்க தான். அசால்ட்டா முடிச்சிடலாம்..." சொல்லிவிட்டு டிரைவரை ஒருமுறை பார்த்தார் சுப்பிரமணி.

"ரொம்ப நன்றி சார்... அதான். இந்த டீலுக்கு நேரா உங்ககிட்ட வந்தேன்.."

"சரிங்க.. "

இருபுறமும் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சண்முகவேல் அலைபேசியை அமைதியான பயன்முறையில் போட்டு அதன்மீது நெகிழிப்பை சுற்றி நின்றுகொண்டிருந்த சரக்கு வண்டியில் போக போக எறிந்துவிட்டு பின் தொடர்ந்தார்.

சற்றுதூரம் சென்று டீ கடையில் இன்னோவா நின்றது. டிரைவர் மட்டும் இறங்கினான். வண்டி கிளம்பியது. சுந்தர மூர்த்தி வண்டியை ஓட்டினார். சீரான இடைவெளியில் சண்முகவேல் பின்தொடர்ந்தார். இன்னோவா வயலூர் ஆற்றுப்பாலத்தின் அடியில் சென்றது. பின்னே அம்பாசிடரும் சென்றது.

பத்து நிமிடம் கழித்து.

அம்பாசிடர் மட்டும் மேலேறி சாலைக்கு வந்தது. அம்பாசிடரின் டிக்கியில் சுப்பிரமணி மயக்கமாக கிடந்தார். இப்பொது சண்முகவேல் சற்று வேகமாக வண்டியை ஓட்டினார். முகம் இறுக்கமாய் இருந்தது. ரேடியோவை ஆன் செய்தார். ராஜாவின் "இது ஒரு பொன்மாலை பொழுது..." ஒலிக்க தொடங்கியது.



...............................
தேடல் துவங்கியதே!
'''''''''''''''''''''''''''''''​

நவம்பர் 18 , 2018. நண்பகல் !

கபிஸ்தலம் காவல் நிலயத்திற்கு மனித எலும்புகள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரம் கழித்து தலைமைக்காவலர் சுந்தரமும் உடன் ஒரு காவலர் செந்திலும் வந்தார்கள். செந்தில் கூட்டத்தை கவனிக்க சென்றார். சுந்தரத்தை மயிலப்பன் சண்முகவேலை பார்க்க அழைத்து சென்றார். இருபது நிமிடம் கழித்து சசுந்தரம் வெளிவந்து குழியை மேலும் தோண்ட சொன்னார். தோண்டியதில் மேலும் மனித உடலின் எலும்புகள் கிடைத்தன. விசாரித்துக்கொண்டிருக்கும் போது ஆய்வாளர் மதன்ராஜிடமிருந்து சுந்தரத்திற்கு அழைப்பு வந்தது பேசினார்.

"வணக்கங்கய்யா... ஆமாங்கய்யா... முதல்ல ஒரு மண்டை ஓடு கிடைச்சுருக்கு.. நான் ஸ்பாட்க்கு வந்து மேல தோண்டுனப்போ கை கால் எலும்புங்க கிடைச்சதுய்யா."

"சரி.. பாரின்சீக்கு அனுப்பிடீங்களா ? " கண்டிப்பான குரலில் மதன்ராஜ்.

"ஆங்.. அனுப்பியாச்சுங்கயா."

"முன்னாடி இந்த இடம் சுடுகாடா கீது இருந்திருக்க போது.. அத முதல்ல விசாரிங்க.. "

"அது விசாரிச்சாச்சு சார். அப்டி ஏதுமில்லை.. முன்னாடி இது விவசாய நிலம் தான்.. சண்முகவேல் ஓட அப்பா தான் இத விலைக்கு வாங்கி பண்ணைய பாத்துகிட்டு இருந்திருக்கார். சண்முகவேல் கு இங்க இருக்குறது பத்தி ஒன்னு பெருசா தெர்லயா.. எப்போவோ ஒரு தடவ தான் வருவாரு போல.. வேலைக்காரன் தான் பாத்துகிறான்."

"சரி.. நம்ம கான்ஸ்டபிள அங்க விட்டுட்டு நீங்க லட்சுமி கேஸ போய் பாருங்க.. நான் 2 அவர்ஸ் ல அங்க வர்றேன்.."

"சரிங்கய்யா.. " இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்த இரண்டு மணிநேரத்தில் மதன்ராஜ் நிகழ்விடத்திற்கு வந்தார். நேராய் சென்று குழியை பார்வையிட்டார். வருகை கேள்விபட்டு சண்முகவேல் வெளிவந்தார்.

"நீங்க சென்னைல என்ன பண்றீங்க ?"

"கன்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் சார். ஐ அம் அ சிவில் என்ஜினீயர் "

"இந்த தோப்பு பண்ணை எல்லாம் உங்க பூர்வீகமா ?"

"இல்ல சார் .. எங்க அப்பா தான் அம்மா இறந்தவுடனே வேற லைப் புடிக்காம இங்க வந்து தோட்டம் வாங்கி இங்கேயே கடைசி வரைக்கும் வாழ்ந்தார் "

"நீங்க ஏன் இங்க அடிக்கடி வர்றதில்லை "

"அங்க நெறைய கன்ஸ்டருக்ஷன் ஒர்க்..ரொம்ப பிஸி.. அதுமட்டும் இல்லாம.. எனக்கு இதுல பெருசா இன்டெரெஸ்ட் ஒன்னு இல்ல! மயிலண்ணந்தான் எல்லாமே "

"இவர் தானா ?"சண்முகவேல் உடனிருந்த மயிலப்பனை கைகாட்டி மதன்ராஜ் கேட்டார்.

"நான்தானுங்க " மயிலப்பன் முன்னே வந்தார்.

அதேநேரம் பின்னால் நின்றுகொண்டிருந்த காவலர் செந்திலை அருகிலுள்ள குழிகளை தோண்ட சொன்னார் மதன்ராஜ்.

"எவ்ளோ நாளா இங்க வேலை பாக்குறீங்க ?"

"ஆறேழு வருஷமா இங்க தான் இருக்கேன் சார்.. "

"அப்ப நீங்கதான் இந்த தென்னை மரத்தெல்லாம் வச்சதா ?"

"இல்ல சார்.. நான் வேலைக்கு சேரும்போதே எல்லாம் ஒரு வருஷ கண்ணுங்க சார் "

"டெஸ்ட் ல ஏஜ் தெரியட்டும் அப்புறமா உன்கிட்ட வர்றேன்" சொல்லிவிட்டு குழிகளை சுற்றி நடந்தார். மமுன்பு எழும்பு கிடைத்த இடத்திற்கு பக்கவாட்டிலுள்ள குழியினை தோண்டிக்கொண்டிருந்தவனிடம் "என்ன! ஏதும் இல்லயா?!" என கேட்டார்.

"இல்ல சார் "

"அப்போ அந்த ஒரு குழிதானா ?"என தனக்குள் கேட்டுக்கொண்டு அலைபேசி எடுத்து தலைமைக்காவலர் சுந்தரத்தை அழைத்தார்.

"சுந்தரம்.. இது ஒன்னும் பெருசா இல்ல.. நான் கிளம்புறேன். நீ வந்து ஒன்ஸ் மோர் பாத்துட்டு ரிப்போர்ட் குடுத்துடுங்க.." சொல்லிவிட்டு இருசக்கர வாகனத்தில் கிளம்பினார்.

கிளம்பி அரைமணிநேரத்தில் காவலர் செந்திலிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றார். காவலர் செந்தில் பதற்றமான குரலில்

"சார்... ஏற்கனவே எலும்பு கிடைச்ச குழியிலருந்து கொஞ்சதூரம் தள்ளி இன்னொரு பாடியோட எலும்புங்க கிடைச்சிருக்கு சார்....."



தொடரும்...
அடுத்த அத்தியாயம் 18 - ஜூன் - 2020 அன்று.
`````````````````````````````````````````````````````````````````````
நான் உங்களிடம் பேச ஓரிடம்!
இந்த அத்தியாயம் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
பகிருங்கள்! விமர்சியுங்கள்! மதிப்பீடளியுங்கள்!
ஆதரவிற்கு நன்றிகள்!!!
*வினை மட்டுமே உயிர்*
- கிருஷ்ணா பச்சமுத்து
 
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கிருஷ்ணா பச்சமுத்து தம்பி
 
Last edited:
Top