மனைவி 7

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 7

"ஆமா... நான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எல்லாம் உங்களுக்குத்தான்!" என்று வாஞ்சையோடு சொன்னான் பிரபாகரன்.

அரவிந்தும் சத்யாவும் அந்த வீட்டை ஆச்சரியமாக சுற்றிப் பார்த்தார்கள். விசித்திரமான அமைப்பு, ஆனால் வசதியாக இருந்தது. இரண்டு படுக்கை அறைகள், அதோடு இணைந்த 'அட்டாச் பாத்ரூம்', ஒரு பிரம்மாண்டமான ஹால், சமையல் செய்ய வசதியான பெரிய கிச்சன், அப்புறம் ஒரு டைனிங் ஹால், அமைதியான ஒரு பூஜை அறை என அந்த வீடு பார்க்கவே அவ்வளவு லட்சணமாக, அழகாக இருந்தது.

அதே நேரம், ஒரு பெண் அந்த வீட்டிற்குள் நுழைந்தாள். அந்தப் பெண்ணிடம் ஒரு கிராமத்து மணம் மாறாத அப்பாவித்தனம் தெரிந்தது. இளநிற பூனம் சேலையில் வந்தவள், கையில் ஒரு தட்டில் ஸ்நாக்ஸும், இன்னொரு தட்டில் பாலும் எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

பிரபாகரன் அவளைப் பார்த்ததும் ஏதோ வேலையாக சமையல் அறைக்குள் நகர, அவளோ அந்த இரு பசங்களையும் பார்த்துப் புன்னகைத்தாள்.

"உங்களுக்குத்தான் இதையெல்லாம் எடுத்துட்டு வந்தேன், சாப்பிடுங்க, சாப்பிட மறந்துடாதீங்க. நான் கீழே தான் இருப்பேன். உங்களுக்கு என்ன வேணுமோ அதை நானே பார்த்துக்கிறேன். என்னை யாரும் அந்நியமா நினைக்க வேண்டாம்," என்று உரிமையோடு சொல்லிவிட்டு, தட்டுகளை டேபிள் மீது வைத்துவிட்டு தரை தளத்திற்கு இறங்கிச் சென்று விட்டாள்.

அரவிந்த் மெதுவாக, "அப்பா, அவங்கதான் கீழ் வீட்டுல இருக்காங்களா?" என்று கேட்டான்.
பிரபாகரன் லேசான ஒரு தடுமாற்றத்துடன்,

"ஆமா... அங்கே ஒரு குட்டிப் பொண்ணு கூட இருக்குது, உங்க கூட நல்லா விளையாடும்," என்றான்.

"வாவ், பாப்பாவா!" என்று சத்யா குஷியானான். அவனுக்குச் சின்னக் குழந்தைகள் என்றால் உயிர், அதுவும் பாப்பா என்றால் சொல்லவே வேண்டாம், அத்தனை பிடிக்கும்.

அரவிந்தைப் பார்த்துப் பிரபாகரன் நிதானமாகப் பேசத் தொடங்கினார். "அரவிந்த், இப்பவும் சொல்றேன்... உன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து தான் உங்களை இங்க கொண்டு வந்து தங்க வச்சுட்டேன். ஆனா, உன் அப்பா கொடுத்த வாக்கை நீதான் காப்பாத்தணும். இங்கே இருக்கும் போது எந்தக் கெட்ட பழக்கமும் உங்களுக்கு உருவாகக் கூடாது. முக்கியமா கீழே இருக்கிறவங்க கிட்ட தப்பா எதுவும் பேசக்கூடாது. போகப் போக எல்லாமே உனக்கு புரியும். நீங்க ரெண்டு பேரும் ஒன்றும் சின்னப் பசங்க கிடையாது. படிப்புல மட்டும் நல்ல முறையில் கான்சன்ட்ரேட் பண்ணுங்க. உங்களைச் சுற்றி எது நடந்தாலும் அது உங்க எதிர்காலம் கிடையாது. இங்கே நடக்கிறது எல்லாம் நடக்கும், அதெல்லாம் உங்களுக்கு மட்டும் சொந்தம் கிடையாது. உங்க படிப்பும், உங்களுடைய சுய குணமும் தான் உங்க உண்மையான எதிர்காலம்," என்று ஒரு நல்ல தந்தையாக புத்திமதி சொன்னவன், ஏதோ ஒரு ரகசியத்தை அவர்களுக்கு உணர்த்தவும் செய்தார்.

"அப்பா, நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதீங்க. உங்க பேரு கெட்டுப் போற மாதிரி நாங்க ஒரு காலமும் எதுவும் பண்ண மாட்டோம். நாங்க நல்ல முறையில படிப்போம்," என்று உறுதி கொடுத்த இரு மகன்களும் ஓடி வந்து தந்தையை இறுக்கி அணைத்துக் கொண்டனர்.

தாய் பாசம் முழுமையாக கிடைக்காமல் ஏங்கி தவித்த அந்த இருவருக்கும், இந்த இடத்தில் ஒரு நல்ல தாய் கிடைக்கப் போகிறாள் என்பது அந்த நிமிடம் அவர்களுக்குத் தெரியவில்லை.

அப்பொழுதும் மகன்களைப் பார்க்க அலர் வரவே இல்லை. எங்கே இங்கே வந்தால் கணவன் தன்னை விடமாட்டாரோ, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வ மாட்டாரோ என்ற பயத்தில் அவள் தன் தாய் வீட்டிலேயே தங்கிவிட்டாள்.

அலரின் அம்மா கலை கேட்டார், "ஏண்டி அலர், ஏதாவது பேசி மாப்பிள்ளை மனசை மாத்தி இருக்கக் கூடாதா நீ?"

அதற்கு அலர் அசால்ட்டாக, "அம்மா, இப்ப நாம என்ன பேசினாலும் அவருக்கு மேல மேல கோபம் தான் வரும். அதனால் கொஞ்ச நாளைக்கு அவரை அப்படியே விட்டுப் பிடிப்போம். அவரே தானா ஒருநாள் நம்மளைத் தேடிட்டு வருவாரு. எப்படி அந்த ரெண்டு பசங்களையும் வச்சுக்கிட்டு அவரால தனியா சமாளிக்க முடியும்? இவருக்கு கிச்சனுக்குள் போய் ஒரு டீ போடத் தெரியாது, தனக்குத் தேவையானதை கூடத் தாமாவே செஞ்சுக்க தெரியாது. ஒண்ணுக்கும் பொழைக்கத் தெரியாத மனுஷன்... வரட்டும்! அங்க ஆகிற செலவெல்லாம் பார்த்துட்டு, காசு பத்தாம திணறும் போது அவரே பசங்களை இழுத்து பிடிச்சுட்டு நம்ம வீட்டு வாசலில் வந்து நிப்பாரு, பாருங்களேன்," என்றாள்.

அலரின் தங்கை மலரும் சேர்ந்துகொண்டாள். "அம்மா, அக்கா சொல்றதுதான் சரி. அவனுங்க ஒண்ணும் விவரம் தெரியாத சின்னப் பசங்க இல்லை. 15 வயசுலயே வீட்டை விட்டுத் தனியா போகணும்னு முடிவு பண்ணி இருக்காங்கன்னா, அப்போ அவனுங்களுக்கு எவ்வளவு நெஞ்சு அழுத்தம் இருக்கும்? இன்னைக்கு இவனுங்க இப்படி ஒரு முடிவை எடுக்குறாங்கன்னா, எதிர்காலத்தில் இன்னும் எப்படி எப்படியெல்லாம் யோசிப்பாங்க? அவங்ககிட்ட இப்ப நாம கெஞ்சிட்டு போகக்கூடாது. அதுவும் இப்ப மாமாகிட்ட கெஞ்சிக்கொண்டே போனோம்னா, ஃபியூச்சர்ல அவர் நம்மளை மதிக்கவே மாட்டார்.

ஏற்கனவே உன்னை மதிக்கிறது கிடையாது, இப்ப நீ போய் கெஞ்சிட்டு இருந்தா கால்ல விழுந்த மாதிரி ஆகிடும். விட்டுப் பிடி... அவங்களே தேடி வரட்டும், அப்பதான் நம்ம அருமை பெருமை என்னன்னு அவங்களுக்கு உறைக்கும். நீ வீட்டுக்குள்ளேயே வச்சுக்கிட்டு எல்லா நல்லது கெட்டதும் பார்த்து சோறு போடுறல்ல, அதனால்தான் அவர் உன்னை உடனே எடுத்து எறிஞ்சு பேசுறாரு. கொஞ்சமாவது நீயும் உங்க மாமியார் கெத்துல இரு," என்று உசுப்பேற்றினாள்.

கலைக்கு தன் மகள்கள் இருவரும் சொல்வது சரியாகத்தான் பட்டது. 'இப்ப அவர் பின்னாடி போய் செஞ்சிகிட்டு இருந்தா, காலத்துக்கும் நான் அவர் காலடியிலேயே கிடக்கணுமா? நான் என்ன குறை வச்சேன் அவருக்கு? அவர் சம்பளத்தில் இருந்து எனக்குப் போடுன்னு கேட்டிருக்கேனா? வீட்டு நிர்வாகம் முழுவதையும் நான் தான் பார்க்கிறேன், அப்புறம் எதுக்கு அவர் இப்படிப் பிடிவாதம் பண்றாரு? அனுபவிக்கட்டும்,' என்று அவரும் பிடிவாதமாக விட்டுவிட்டார்.

ஆனால், இந்தச் சின்ன இடைவெளி அவர்களுக்குள் ஒரு பெரும் பிரிவை உண்டாக்கும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. ஒரு தாயாக மகள்களுக்கு நல்லதை நினைக்க வேண்டியவர், தவறான முடிவை எடுத்தார்.

இறைவன் அதற்கு அத்தனை சீக்கிரம் விடை கொடுக்க மாட்டான்.

இவர்கள் பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டு ராதை தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள். அவள் மனது மட்டும் அந்தப் பிள்ளைகளுக்காகத் துடித்துக் கொண்டிருந்தது. 'அந்தப் பிள்ளைங்க சரியாச் சாப்பிட்டாங்களா? இப்ப என்ன பண்றாங்கன்னு தெரியலையே? பெத்தவ இல்லாம எப்படித் தனியா இருப்பாங்க?' என்று அவள் மண்டைக்குள் அதே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.

ராதையின் நிலைமை இவர்களை விட மோசம், ஆனால் அவளோ அடுத்தவர் பிள்ளைகளுக்காகத் தவிக்கிறாள். இதுதான் அந்தத் தாய் மனமோ?
மாலை நேரம் பிரபாகரன் வீட்டிற்குள் வந்தபோது, அலர் அவரை ஒரு அலட்சியப் பார்வையோடு பார்த்தாள்.

பிரபாகரன் வழக்கம் போல அலரை அங்கே இருக்கும் ஒரு சோபா என்று நினைத்துக் கொண்டு கடந்து சென்றான். அங்கே தவிப்போடு நின்று கொண்டிருந்த ராதையைப் பார்த்தான்.

"பசங்க பாதுகாப்பா இருக்காங்க. ஒரு நல்ல இடத்துல தான் அவங்களை விட்டுட்டு வந்துருக்கேன். இனி என் பசங்க எந்தக் குறையும் இல்லாம நிம்மதியா இருப்பாங்க," என்று ராதைக்கு மட்டும் கேட்கும்படி மெதுவான குரலில் சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அவன் பின்னாடியே வந்த அசோகன், ராதையை ஒரு மாதிரியான பார்வையில் பார்த்தான். அவனுடைய அந்தப் பார்வை பிடிக்காமல், அவள் உடனே பின்வாசல் வழியாக வெளியே சென்றுவிட்டாள்.

"அங்க என்ன அப்படிப் பார்த்துட்டு இருக்கீங்க?" என்று மலரின் அதட்டல் சத்தம் கேட்டது.

சலிப்போடு முகத்தைச் சுளித்த அசோகன், "உங்க வீட்டுல அப்படிப் பார்த்து ரசிக்கிற அளவுக்குப் பெருசா ஒன்னும் இல்லை. எங்கேயாவது மனுஷன் எதையாவது பார்த்துட்டு நின்னா, உடனே உனக்கு மூக்கு வேர்த்து வந்து நின்னுட வேண்டியது. ஆபீஸ் முடிஞ்சு களைப்பா வந்தவனுக்கு ஏதாவது குடிக்கக் கொடுப்போம்னு இல்லாம, எப்பப் பார்த்தாலும் கடுகடுன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு..." என்று கையில் இருந்த பையை அவளிடம் வீசி எறிந்துவிட்டு, அறைக்குள் சென்று கதவை இழுத்து மூடிக்கொண்டான்.

ராதை மூச்சு வாங்கச் சுவரில் சாய்ந்து நின்றாள். அவளுக்குத் தன் உடம்பைப் பார்த்தாலே அருவருப்பாக தோன்றியது. அசோகனின் பார்வை எப்பொழுதும் தன் மீது தவறாக படுவதை அவள் ஒவ்வொரு நாளும் உணர்கிறாள். ஆனால், இதை யாரிடம் போய்ச் சொல்வது? வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் அவளுக்கே தப்பான பட்டம் கட்டி விடுவார்கள், யாரும் அவளை நம்ப மாட்டார்கள்.

பிரபாகரனிடம் சொல்லலாம் என்றால், அவனிடம் இதுவரை அவள் அதிகமாகப் பேசினதே இல்லை. 'கணவன்' என்று ஒருவன் இருக்கிறான் தான், ஆனால் அவனிடம் கூடப் பேச முடியாது என்ற நிலையில் நொந்து போய் அங்கேயே அமர்ந்துவிட்டாள்.

வாழ்க்கையை ஒவ்வொருவருக்கு ஒரு மாதிரி கடவுள் கொடுக்கிறான். சிலருக்குத் தென்றல் போல, சிலருக்கு பூப்போல, சிலருக்கு முள் போல, சிலருக்கு நெருப்பு போல, சிலருக்குப் புயல் போல... எல்லோருக்கும் ஒரே மாதிரி வாழ்க்கை அமைந்து விடுவதில்லை.

ஒருவரை ஒருவர் பார்த்து ஏக்கம் கொள்வது சகஜம் தான். ஆனால் இறுதி வரை வாழ்க்கை இப்படியே நீடிப்பதில்லை, ஏதோ ஒரு கட்டத்தில் எல்லாமே மாறித்தானே ஆக வேண்டும்?

"அம்மா... அண்ணா கால் பண்றான்!" என்று மலர் தன் தாயின் கையில் போனைத் திணித்தாள்.

"ராமு... எப்படிப்பா இருக்க? கண்ணு..." என்று பாசம் பொங்கப் பேசிய கலையை, அக்காவும் தங்கையும் ஆசையாகப் பார்த்தனர்.

கலை போனை ஸ்பீக்கரில் போட்டு பேசியதால், அந்த அறையில் இருந்த ஆண்களின் காதுகளிலும் விழுந்தது. வெளியே இருந்த அந்தப் பெண்ணின் காதிலும் ஜன்னல் வழியாக அந்தக் குரல் கேட்டது.

அவன் குரலைக் கேட்ட அடுத்த விநாடி, அவள் உடல் முழுவதும் இருந்த ரத்த நாளங்கள் கூட விழித்துக் கொண்டது போல உணர்ந்தாள். இந்த 13 வருட பந்தத்தில், அவனின் குரலை போனில் இப்படிக் கேட்டு தான் அவள் மனதைத் தேற்றிக் கொள்கிறாள்.

நீண்ட மாதம் ஆகி விட்டது கணவன் குரலை கேட்டு, உள்ளம் நடுங்கியது அவன் குரலில்.

தொடரும்......
 
கானாத கணவன் மேலேய இவ்வளவு காதலா ராதைக்கு.

பிரபாகரன் இது என்ன இப்படி ஒரு சிக்கல். பசங்களையும் ஒப்படைக்கும் அளவுக்கு உரிமையை கொடுத்திருக்கும் பெண் யாரா இருக்கும்?

ஆக ஒன்னு மட்டும் நல்லா தெரிகிறது, இவங்க அம்மா மக்கள் எல்லாம் சேர்ந்து போடும் பிளான் எல்லாம் பூமராங்கா ஆகப்போகுது. எதிரில் இருப்பவங்க மேல பட்டு தெரிச்சி இவங்க தலையில் விழப்போகுது.

ராதையின் ராமன் வனவாசம் முடிய இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு.
 
நைஸ் எபிசோட் 🤩🤩
பிரபாகரன்..⁉️⁉️⁉️

கலை.... தன் வினை தன்னைச் சுடும் 😠😠😡😡😠
 
கானாத கணவன் மேலேய இவ்வளவு காதலா ராதைக்கு.

பிரபாகரன் இது என்ன இப்படி ஒரு சிக்கல். பசங்களையும் ஒப்படைக்கும் அளவுக்கு உரிமையை கொடுத்திருக்கும் பெண் யாரா இருக்கும்?

ஆக ஒன்னு மட்டும் நல்லா தெரிகிறது, இவங்க அம்மா மக்கள் எல்லாம் சேர்ந்து போடும் பிளான் எல்லாம் பூமராங்கா ஆகப்போகுது. எதிரில் இருப்பவங்க மேல பட்டு தெரிச்சி இவங்க தலையில் விழப்போகுது.

ராதையின் ராமன் வனவாசம் முடிய இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு.
இன்னும் ஒரு அத்தியாயம் sis
 
பிரபாகரன்.. இந்த மாதிரி பொண்டாட்டி இருந்தா ராங்க் ரூட் தான் போவான்....
 

Advertisement

Advertisement

Back
Top