மனைவி - 15

Advertisement

Nivi Ammu

Well-known member
Member

மனைவி - 15​

பிரபாகரன் தன் பிடரியை அழுத்திப் பிடித்துக் கொண்டான். ராதை இனி யார் பேச்சையும் கேட்கப் போவதில்லை என்பதும், அவள் வைரம் போல உறுதியாகிவிட்டாள் என்பதும் அவனுக்குப் புரிந்தது.​

"சரி ராதை, நீ என் வீட்டுக்கு வர வேணாம். ஆனா நான் ஒரு பாதுகாப்பான இடமா, குறைஞ்ச வாடகையில பேசி உனக்கு ஒரு இடம் பார்த்துத் தர்றேன். அங்க நீயும் பொண்ணுங்களும் பத்திரமா இருங்க" என்று சொல்லி, அவர்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றான்.​

அவனிடம் வேலை செய்த ஒருவரின் வீட்டின் மேல் பகுதி வாடகைக்கு இருந்தது. மாதம் 3,000 ரூபாய் வாடகை. ஒரு சிறிய அறை, ஒரு சமையலறை, ஒரு ஹால், வெளியே ஒரு சின்ன வராண்டா.​

"இது போதும்... இந்த உலகம் எங்களுக்கு இதுக்குள்ள அடங்கிடும்" என்று அவளுக்குத் தோன்றியது.​

"அண்ணா எங்களுக்கு இந்த வீடே போதும். ஆனா ஹவுஸ் ஓனர் அட்வான்ஸ் கேட்பாங்களே?"​

"அதெல்லாம் நான் பேசிட்டேன் ராதை. நாளைக்கு அட்வான்ஸ் கொடுத்தா போதும். நான் இப்போவே போய் உன் நகையையும் சர்டிபிகேட்டையும் எடுத்துட்டு வந்துடுறேன்."​

ராதை தன் மகள்களை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தாள். குழாயில் இருந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து, தன் புடவை முந்தானையை நனைத்து, அழுது சிவந்திருந்த தன் மகள்களின் முகத்தை மென்மையாகத் துடைத்துவிட்டாள்.​

இவர்களைப் பெற்று 12 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், ஆசை தீர ஒரு முறை கூட அவளால் அவர்களைக் கொஞ்ச முடிந்ததில்லை. பத்து நிமிடம் கூட நிம்மதியாகப் பேச முடிந்ததில்லை.​

வெள்ளிக்கிழமை தோறும் அவர்கள் படிக்கும் பள்ளிக்கு ரகசியமாக சென்று, அவர்களை பார்த்து ரெண்டு நிமிடம் பேசிவிட்டு ஏங்கித் தவித்துக் கொண்டே வந்துவிடுவாள். பிள்ளைகளும் தாயை தவிப்பாக பார்த்து நிற்பார்கள்.​

கண்களில் இருந்து கண்ணீர் அருவியாகக் கொட்டியது. சீதா தன் தாயின் கண்ணீரைத் தன் பிஞ்சு விரல்களால் துடைத்தாள். "அம்மா அழாதீங்க... நீங்க அழுதா எங்களுக்கும் அழுகையா வருதுமா..." என்றாள் விம்மிக் கொண்டே.​

அந்த வார்த்தை ஒரு தாயின் மனதை அப்படியே பிசைந்து எடுத்தது. தன் இரு மகள்களையும் தன் மார்போடு சேர்த்துக் கட்டி அணைத்துக் கொண்டவள், இத்தனை காலத்து வலியையும் கண்ணீராய் மாற்றி மீண்டும் ஒருமுறை கதறி அழுதாள். அந்தச் சின்னஞ்சிறு வீடு அந்தத் தாயின் அழுகைச் சத்தத்தால் நிறைந்திருந்தது​

தைரியமா ஒரு முடிவெடுத்துட்டேன். இதே தைரியத்தோட கடைசி வரைக்கும் என் பொண்ணுங்களை நான் ஒருத்தியாவே நின்னு பார்த்துக்கணும்.​

எனக்குத் தெரியும், இந்தச் சமுதாயத்துல ஒரு பொண்ணு தனியா வாழறதுக்கு எவ்வளவு கஷ்டப்படணும்னு... அதுவும் ரெண்டு பொம்பள பிள்ளைகளை வச்சிருக்கேன். யார் துணையும் இல்லாமல் நான் தனியா தான் வாழ்ந்து ஆகணும்னு விதி இருந்தா, அதை நான் ஏத்துக்கிறேன்.​

எனக்காக இல்லைன்னாலும், என் பொண்ணுங்க சந்தோஷமா இருக்கணும்னாவது நான் இதைச் செஞ்சுதான் ஆகணும்!" தனக்குள் எரிந்து கொண்டிருந்த போராட்டத்தை அணைக்க, ராதை தன்னைத்தானே இப்படிச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.​

அவளது கண்கள் கலங்கினாலும், அதில் ஒரு வைராக்கிய மின்னல் தெறித்தது.​

தன் பிள்ளைகளை அணைத்துக் கொண்டவள், "இனிமேல் தான் நீங்க , அம்மா... நாம மூணு பேரும் இனி ஒண்ணா தான் இருக்கப் போறோம். அம்மா எப்பவும் உங்க கூடவே இருப்பேன். இனிமேல உங்களை அம்மா கண்ணுக்குள்ள வச்சு நல்லாப் பார்த்துப்பேன்" என்று தழுதழுத்த குரலில் உறுதி அளித்தாள்.​

மஹா தன் பிஞ்சு முகத்தில் தேங்கிய கண்ணீரோடு, "அப்பா உங்களை ஏத்துக்கவே இல்லையாம்மா?" என்று விம்மி விம்மி கேட்டாள்.​

அந்த ஒரு கேள்வி ராதையின் இதயத்தில் ஆயிரம் ஊசிகளை ஒரே நேரத்தில் இறக்கியது போல இருந்தது.​

அந்தப் பெற்றவள் என்ன பதில் சொல்வாள்? உள்ளுக்குள் அவளது ஆன்மா கதறியது.​

திக்கற்று நிற்கும் இந்த நிலையில், மீண்டும் மீண்டும் தன் பிஞ்சுக் குழந்தைகள் முன்னால் இப்படி அநாதையாய் நிற்பதற்கு அவளுக்குக் கூச்சமாகவும் இருந்தது, அதே சமயம் ஒருவித பயமாகவும் இருந்தது.​

"காலம் எல்லாத்தையும் ஒரு நாள் சரி பண்ணும்டா... இப்போதைக்கு நாம எல்லாரும் ஒண்ணா இருக்கோம்ல? அது போதும். ஒருவேளை எதிர்காலத்தில் உங்க அப்பா நம்ம கூட வந்து சேரலாம்... ஆனா இப்போதைக்கு நம்ம கையில எதுவும் இல்லை" என்று தேம்பி அழுத மகள்களைத் தன் மார்போடு சேர்த்து அணைத்து ஆறுதல் சொல்லித் தேற்றினாள்.​

சிறிது நேரம் கழித்து, "ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள் ராதை.​

சீதா மெல்லிய குரலில், "சாப்பிட்டோம்மா..." என்றாள்.​

ஆனால் மஹா உண்மையைத் தாங்க முடியாமல், "இல்லைம்மா" என்று தலையாட்டினாள்.​

ராதை திடுக்கிட்டு இருவரையும் பார்க்க, குழந்தைகள் இருவரும் பிடிபட்ட திருடனைப் போல திருதிருவென விழித்தனர்.​

"அம்மாகிட்ட பொய் சொல்லக் கூடாது சீதா, சொல்லுங்க என்ன நடந்தது?"​

"இல்லைம்மா... நாங்க சாப்பிடவே இல்லை. நேத்து மதியம் தான் அத்தை எங்களுக்குக் கொஞ்சம் சாப்பாடு கொடுத்தாங்க. அதுவும் பழைய சாதம்தான். மகா ரொம்பப் பசிக்குதுன்னு அழுதுகிட்டே இருந்தா. அவளுக்குக் கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு வரலாம்னு போனேன்... அதுக்குத்தான் அவ்ளோ அடி அடிச்சாங்க" என்று சீதா விம்மி விம்மிச் சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ராதையின் தாய் மனம் சுக்குநூறாக உடைந்து கதறியது.​

'என் பிள்ளைகள் ஒருவேளை சாப்பாட்டுக்கு இப்படித் துன்பப்படும் நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டுட்டேனே! இவர்களை விட எனக்கு என் வாழ்க்கை அத்தனை முக்கியமா? பெத்த பிள்ளைகளைக் கண்ணீர் விட வச்சுட்டு அப்படி வாழ்ந்து நான் என்ன சாதிக்கப் போகிறேன்? இனி எனக்கு இந்தத் திருமண வாழ்க்கையே வேண்டாம்!' என்று அந்தச் நிமிடமே உறுதியான முடிவெடுத்தாள்.​

மறுபுறம், பிரபாகரன் நேராக ஸ்ரீராம் வீட்டிற்குச் சென்றான். அங்கே வாசலில் தன் கணவனைக் கண்டதும் அலர் முகம் வெளுத்துப் போனாள். நெஞ்சுக்குள் ஒரு பயம் கவ்விக் கொண்டது.​

'ஒருவேளை எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்டு வந்திருப்பாரோ? இல்லைன்னா இந்த நேரத்துக்கு வர மாட்டாரே! இவரு முகமே சரியில்லையே...' எனத் தன் மனதுக்குள் ஆயிரம் கணக்குகளைப் போட்டுக் குழம்பினாள்.​

ஆனால் பிரபாகரன் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. எல்லாம் தெரிந்தும் தெரியாதவன் போல அமைதியாக அறைக்குள் சென்றான். அங்கே மறைத்து வைத்திருந்த ஒரு பையை மட்டும் எடுத்துக் கொண்டு, மீண்டும் வெளியேறினான்.​

அலரின் தங்கை மலர் இதைப் பார்த்துவிட்டு, "அக்கா, மாமா வந்து என்ன எடுத்துட்டுப் போறாரு?" எனக் கேட்டாள்.​

அலர் சமாளித்துக் கொண்டு, "அவர் ஆபீஸ் பைல் ஏதாவது மறந்து வச்சிட்டுப் போயிருப்பாரு... அதைத்தான் வந்து எடுத்துட்டுப் போறாரு" என்றாள்.​

"நீ என்னக்கா ஒருத்தி குத்துக்கல் மாதிரி உக்காந்து இருக்க... ஆனா உன்னை அவரு கண்டுக்கவே மாட்டேங்குறாரு?" என்று மகர குத்தலாக கேட்டாள்.​

"அவர் கல்யாணம் ஆனதிலிருந்து அப்படித்தான். வேண்டா வெறுப்புக்கு என்னைக் கல்யாணம் பண்ணிட்ட மாதிரியேதான் எப்பவும் இருப்பார்" என்று அலுத்துக்கொண்டாள் அலர்.​

கலை மகளை புரியாமல் பார்த்தாள். "என்ன சொல்ற நீ? எப்பவுமே மாப்பிள்ளை உன்கிட்ட இப்படித்தான் நடந்து கொள்வாரா?"​

"ஆமாம்மா... என்கிட்ட எப்பவும் இப்படித்தான் இருப்பாரு. அதைப் பத்தி நான் இப்போ பெருசா கவலைப்படப் போறதில்லை."​

"என்னடி இது? காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... இப்ப என்னடான்னா இப்படிச் சொல்ற?"​

அலர் முகம் நொடியில் கறுத்தது.​

"காதலிச்சுக் கல்யாணம் பண்ணிட்டோம்... அதுக்காக சாகுற வரைக்கும் காதலிச்சுட்டேவா இருக்க முடியும்? இத்தனை வருஷத்துல மனுஷன் மாற மாட்டாரா? சும்மா என்னை நோண்டிட்டு இருக்காதே... போ, போய் அண்ணனைப் பாரு!" என்று எரிந்து விழுந்தாள்.​

ராதைக்கு வீட்டில் சமைக்கவும் எதுவும் இல்லை, பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கவும் கையில் காசு இல்லையே என்று நெஞ்சு துடித்துக் கொண்டிருந்தது.​

அந்தச் சமயம் பார்த்து, பிரபாகரன் ஒரு கையில் சூடான உணவுப் பொட்டலத்தோடும், மற்றொரு கையில் ஒரு பையோடும் அங்கே நுழைந்தான்.​

"சீதா, மகா... முதல்ல வந்து சாப்பிடுங்க. கடையில இருந்து வாங்கிட்டு வந்துட்டேன்" என்றவன், அந்தப் பொட்டலங்களை ஒவ்வொன்றாகப் பிரித்து, சாம்பார் ஊற்றி அவர்களுக்குப் பரிமாறினான்.​

சீதாவும், மகாவும் தயக்கத்தோடு தங்கள் தாயைப் பார்க்க, பிரபாகரன் புன்னகையுடன்,​

"பயப்படாதீங்கம்மா... நானும் உங்களுக்கு ஒரு மாமா தான். உங்க அப்பாவுடைய தங்கச்சியைக் கல்யாணம் பண்ணியிருக்கேன். தயங்காம வந்து சாப்பிடுங்க. ராதா, நீயாவது சொல்லு அவங்ககிட்ட" என்றான்.​

ராதை அந்தப் பார்சலை இழுத்து, சாதத்தைப் பிசைந்து தன் மகள்களுக்கு ஒவ்வொரு உருண்டையாக ஊட்டி விட்டாள். 12 வருடங்கள் ஆகிவிட்டது தன் பிள்ளைகளுக்கு இப்படி ஊட்டி விட்டு. பிள்ளைகள் வளர்ந்துவிட்டாலும், அந்தப் பெற்றவளின் கண்கள் ஈரமானது; அவர்களுக்கு அவள் என்றும் தாய்தானே!​

"அண்ணா, நீங்க சாப்டீங்களா?" என்று ராதை கேட்டாள்.​

"நான் சாப்பிட்டேன்மா... நீங்க மூணு பேரும் முதல்ல சாப்பிடுங்க" என்றான் பிரபாகரன்.​

பிள்ளைகளுக்கு ஊட்டி முடித்துவிட்டு, கையை அலம்பிவிட்டு வந்தாள் ராதை.​

"ராதா, நீயும் கொஞ்சம் சாப்பிடு" என்று பிரபாகரன் வற்புறுத்தினான்.​

"அண்ணா, இப்போதைக்கு எனக்குப் பசிக்கல. வீட்டுக்கு அத்தியாவசியப் பொருள் எல்லாம் வாங்கணும். அதுக்கு முதல்ல நான் என்னுடைய நகையை அடகு வைக்கணும்னு நினைக்கிறேன்" என்றாள் ராதை சங்கடத்துடன்.​

"வேண்டாம் ராதா... என் கையில ஒரு பத்தாயிரம் இருக்கு. இந்தப் பணத்தை இப்போதைக்கு வச்சுக்கோ. நீ வேலைக்குப் போய் சம்பளம் வாங்கும்போது என்கிட்ட கொடுத்துரு. நகையை எதையும் அவசரப்பட்டு அடகு வைக்காதே. உன்கிட்ட இருக்கிறது கொஞ்ச நகை தான். அதிகமா இல்லை. நீ வேலைக்கு போறப்போ அதெல்லாம் தேவைப்படும். கையில ரெண்டு பொம்பளைப் பிள்ளைகளை வச்சிருக்க... அவங்களுக்குன்னு எப்பவும் உன் கையில ஒரு பத்து ரூபாய் இருக்கணும். கூச்சப்படாதே... நான் இதை உனக்குக் கடனா தான் தர்றேன்" என்று பணத்தை நீட்டினான்.​

"அண்ணா, பத்தாயிரம் மட்டும் பத்தாதுன்னு நினைக்கிறேன்..."​

"அது எனக்குத் தெரியும் ராதா. அந்தப் பணத்துல வீட்டுப் பொருள் மட்டும் வாங்கிக்கோ. மளிகை சாமான், காய்கறி எல்லாத்தையும் நானே வாங்கிட்டு வர்றேன்" என்றான் அந்த அண்ணன்.​

ராதை தன் மகள்களைப் பார்த்து, "நீங்க ரெண்டு பேரும் வீட்டுல பத்திரமா இருக்கணும். அம்மா போய் வீட்டுக்குத் தேவையானதை வாங்கிட்டு வந்துடுறேன், சரியா? கதவைத் திறந்துட்டு வெளியில வரக்கூடாது" என்று அறிவுறுத்தினாள்.​

"ராதா, பசங்களையும் கூடவே கூட்டிட்டு வா. நான் ஆட்டோ சொல்லியிருக்கேன். ஆட்டோல போயிட்டு அப்படியே எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திடலாம்" என்றான் பிரபாகரன்.​

ராதை தயங்கித் தன் மகள்கள் அணிந்திருந்த அழுக்கான ஆடையைப் பார்த்தாள்.​

தொடரும்....​

 
Last edited by a moderator:
அம்மாடி ராதை பிள்ளைகள் அழுக்கான துணியைப் பார்த்து தயங்காதே. அங்க தூணிக்கடையில போய் dressing roomஇல் புதுசா போட்டுக்கட்டும் தங்கங்கள்👗👗. அதுசரி ஸ்ரீராம் கண்ணுல இப்போ இவங்க வெளியில் போகும் போது பட்டுட்டாங்கனா என்ன ஆகும் 🤔🤔🤔🤔
 
Last edited:
pavam radhai 12 yr ponnugale pirinju irunthurukanga ithu ellam kodumai ana sriram suththa waste pillai poranthathu kuda theriyama muttala irukane🤮🤮🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️
 
இந்த கதை ஏதோ மனசுக்குள்ள பிசையுது ... தினம் எதிர்பார்த்து படிக்கிறேன். ராதை எப்படி மெதுவா மாறப் போறான்னு பாக்க ஈகரா வெயிட்டிங் மா ..
 
கணவன் எப்படி மனைவி குழந்தைகளைப் பிரித்தான்.அப்படி என்ன தான் நடந்தது.
 

Advertisement

Advertisement

Back
Top