Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-24

Advertisement

praveenraj

Well-known member
Member
லவா குஷா இருவரும் ஜானகியிடம் செல்ல அவரைச் சுற்றியிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் அதிர்ச்சியில் தான் இருந்தனர். பிறகு தண்ணீர் தெளிக்கவும் சிறிது நேரத்தில் கண்விழித்தார் ஜானு. ஜானகி விழித்ததும் முதலில் தேடியது என்னவோ தன்னுடைய தவ புத்திரர்களையே! அவருக்கு இருபுறமும் இருந்த லவா குஷாவைக் கண்டவர்,
"ஏன்டா இப்படிப் பண்ணீங்க?" என்று கேட்கவும் தான் அருகிலிருந்தவர்களும் என்னவென்று கேட்டனர். ரகுவும் தன்னுடைய பங்கிற்கு அவர்களை முறைக்க நடப்பதெதும் புரியாமல் பார்த்த கனகாவிடம் அவர்கள் செய்த ஆள்மாறாட்டத்தைப் பற்றிச் சொல்ல ஏனோ அனைவரும் தங்கள் பங்கிற்கு கலங்கினார்கள்.
"கேட்குறோமில்லை பதில் சொல்லுங்கடா... இரு இரு இந்த விஷயம் அவங்களுக்கும் தெரியுமா?" என்ற கேள்வியுடன் மொட்டு மற்றும் அனுவைப் பார்த்தார் ஜானகி.
உண்மையில் இப்போது தான் லவா மற்றும் குஷா ஆகியோருக்கு பீதி கிளம்பியது. பின்னே அவர்கள் மட்டும் இல்லை என்று சொல்லிவிட்டால் இன்னும் என்னென்ன நிகழுமோ என்று அஞ்சியவர்கள் தயக்கத்துடனே அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்க குஷாவோ மொட்டு மறுத்துப் பேசினால் என்ன பேசலாம் என்று யோசிக்க விழைந்தான்.
அனு மொட்டு இருவரும் தங்களை ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு பின் அனு மட்டும் தனக்குத் தெரியும் என்பதைப்போல் தலை அசைத்தாள். இப்போது எல்லோருடைய கவனமும் மொட்டுவின் மீது திரும்ப அவளோ இன்னும் நடந்த நிகழ்வுகளின் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தாள்.
"சொல்லு மொட்டு உனக்கு இது தெரியுமா?" என்று கேட்க,
"என்ன நடந்ததுனு நான் சொல்றேன்மா... அது வந்து..." 'நானும் மொட்டுவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்' என்று சொல்ல வந்தவன் அந்தச் சூழல் கொடுத்த பதட்டத்தில்,
"மொட்டு என்னை தான் விரும்புறா... இன் பேக்ட் நீங்க எங்களுக்கு கல்யாணம் பேசுறோம்னு சொன்னதுமே நானும் கூட எனக்கும் மொட்டுவுக்கும் தான் கல்யாணம் பேசுவீங்கன்னு யோசிச்சேன்... ஆனா திடீர்னு நீங்க ஜோடியை மாத்திட்டீங்க... எங்களுக்கு என்ன பண்றதுனே தெரியில... அதான் இப்படி..." என்று அச்சு பிசகாமல் சரளமாகப் பேசியவனை லவாவே அதிர்ச்சியாகப் பார்க்க மொட்டு அதிர்ந்து நிமிர்ந்து ஒரு பார்வை ஒன்றைப் பார்த்தாள். அதை வெறும் பார்வை என்று மட்டும் சுருக்கி விட முடியாது. அதில் கோவம், வெறுப்பு, இயலாமை முதலிய எல்லாமும் இருந்தது.
குஷாவின் இந்தப் பதிலில் சித்ரா, நந்தா, மணவாளன் பாரி ஆகியோர் மொட்டுவைப் பார்க்க ஏனோ ஜானகியே குஷாவின் பதிலை நம்பாமல் மொட்டுவின் பதிலுக்காகவே காத்திருந்தார். இப்போது லவாவின் ப்ரெஸரை யாரேனும் கணக்கிட்டால் அவனை உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல நேரிடும். பின்னே அடுக்கடுக்காகப் பொய்ச்சொல்லும் தன்னுடைய தம்பியை அவனும் அதிர்ச்சியுடன் பார்த்தான்.
"எனக்கு பதில் சொல்லுமா... இவன் சொன்னதெல்லாம் உண்மையா? உனக்கிது முன்கூட்டியே தெரியுமா?" என்று ஜானகி கேட்க ஏனோ வைத்தியும் கூட வயித்தில் புளி கரைக்க மொட்டுவை நோக்கினார்.
"எனக்கு இது தெரியும். இன் பேக்ட் என்னுடைய சம்மதத்துடன் தான் இது நடந்தது..." என்று அவள் மொழிந்தாள். அவளுடைய இந்தக் கூற்றில் எவ்வித தயக்கமும் இல்லாமல் போக ஏனோ நடக்கும் எதையும் புரியாமல் லவா வைத்தியைப் பார்க்க அதற்குள் நந்தா,"இதைப் பற்றி முன்கூட்டியே எங்க கிட்டச் சொல்ல வேண்டியது தானே?" என்று தன்னுடைய கணீர் குரலில் அவளைக் கேட்க நந்தாவின் குணமறிந்து கனகா,
"டேய் எதுக்கிப்ப அந்தப் புள்ள மேல பாயுற? பெரியவங்க நாம தானே கல்யாணம் முடிவு பண்ணோம். அப்போ நாம தானே அவங்ககிட்ட இதைப் பத்தி தெளிவாப் பேசியிருக்கனும். நாம எடுத்த முடிவால் அவங்க எவ்வளவு துடிச்சிருப்பாங்க... அதும் போக இப்போ என்ன தப்பு நடந்திடுச்சு? சம்மந்தப்பட்ட நாலு பேருக்கும் இதுல எந்த வித ஆட்சேபனையும் இல்லைங்கற அப்போ நாம பேச என்ன இருக்கு? நிம்மி அவங்களைக் கூட்டிட்டுப் போய் ஆகவேண்டிய சம்பிரதாயம் எல்லாம் பாரு. நாங்க வரோம்..." என்று சொல்ல அனைவரும் அந்த இடத்தை காலி செய்தனர்.
ஜானு மற்றும் ரகு இருவரும் தங்கள் பிள்ளைகளை முறைக்க,"ஜானகி உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா? பசங்களா நீங்களும் அங்க போங்க..." என்று அவர்களை ரட்சித்தார் கனகா. ஆயிரம் இருந்தாலும் பெற்றோர்களுக்கு இதில் அவமானம் தானே? அதனாலோ என்னவோ சுசி நந்தா ஜானு ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் தவித்தனர். அதன் பிறகு எவ்வித சலசலப்பும் இல்லாமல் சடங்குகள் முடிய மணப்பெண்களை ஒரு அறையிலும் மணமகன்களை ஒரு அறையிலும் ஓய்வெடுக்க சொன்னார்கள்.
அனுவும் மொட்டுவும் ஓர் அறையில் இருக்க ஏனோ அனுவுக்குத் தான் மொட்டுவின் தற்போதைய நிலை கவலைகொடுத்தது. பின்னே தன்னுடைய சுயநலத்திற்காக மொட்டுவின் வாழ்க்கையை தான் பலிகொடுத்து விட்டோமோ என்ற குற்றயுணர்ச்சி அவளுக்குள் எழுந்தது. நிமிர்ந்து அவள் முகத்தைக் கூடப் பார்க்க முடியாமல் திண்டாடினாள் அனு. அவர்களுக்குள் மிகச் சமீபத்தில் தான் நல்ல புரிதலே உண்டானது. அதுவரை ஒரு மூன்றாம் நபர்களாகவே பழகி வந்தவர்கள் லவா குஷா இருவரும் கோவித்துக்கொண்டு சென்றதிலிருந்து தான் தங்களுக்குள் பரஸ்பரம் பழக ஆரமித்தனர். இப்போது என்ன செய்வதென்று புரியாமல் தவித்த அனு அறையைப் பூட்டிவிட்டு மொட்டுவிடம் பேச்சுக்கொடுத்தாள்.
"மொட்டு, என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்... எல்லாப் பிரச்சனைக்கும் நான் தான் காரணம்..." என்ற அனுவைப் புரியாமல் மொட்டு பார்க்க நடந்த அனைத்தையும் அனு அவளிடம் தெரிவித்தாள். ஏனோ அதைக் கேட்டதும் மொட்டுவுக்குச் சொல்ல முடியாத கோவம் எழுந்தது. அதே நேரம் இதனைத்தும் தங்கள் தாத்தாவிற்கும் தெரியும் என்ற அனுவின் கூற்று தான் அவளை அதிகம் கவலைக்குள்ளாக்கியது.
"தாத்தா என்கிட்ட ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்தார் மொட்டு. நான் செல்பிஷ்ஷா நடத்துகிட்டேனோன்னு எனக்குத் தோணுது..." என்று அவள் தயங்க மொட்டு தான் எதுவும் பேசாமல் இருந்தாள்.
"ப்ளீஸ் மொட்டு ஏதாவது பேசு... கோவம் வந்தா காட்டிடு... இப்படி அமைதியா இருக்காத... அண்ட் இதை நான் சொல்லணும். குஷா ஒன்னும் நீ நினைக்குற அளவுக்கு கெட்டவனெல்லாம் இல்ல... அவன் எவ்வளவு ஸ்வீட் தெரியுமா?" என்று அனு முடிக்கும் முன்னே,
"அப்போ ஏன் நீ அவனை லவ் பண்ணல?" என்று மொட்டு கேட்டிருந்தாள்.
"அது... அது அவன் எனக்கொரு பெஸ்ட் ஃப்ரண்ட்... வெல் விஷேர் தான். இன்னும் சொல்லப்போனா நீயும் லவாவும் எப்படிப் பழகுனிங்களோ அப்படித்தான் நானும் குஷாவும்..." என்று முடிக்கும் முன்னே,
"நானும் லவாவும் எப்படிப் பழகுனோம்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று மொட்டு கேட்ட நொடியில் அனுவிற்கு இதயம் தாறுமாறாகத் துடித்தது. பின்னே ஒருவேளை இவளும் லவாவை விரும்பியிருந்தால் என்று நினைக்கையிலே அனுவிற்கு துக்கம் தொண்டை அடைக்க அதைப் புரிந்து கொண்ட மொட்டு,
"வீணா தேவையில்லாததை எண்ணி பயப்படாத... நான் லவாவை விரும்பல. லவானு இல்ல நான் யாரையும் விரும்பல..." என்று சொன்னவள் அந்த யாரையும் என்பதில் ஒரு அழுத்தம் கொடுத்தாள்.
"நீயும் அவனும் லவ் பண்ற விஷயத்தை என்கிட்ட முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டியது தானே? இப்போ எதுக்கு என் வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்த? எந்த ஒரு உறவுக்கும் மூணு விஷயம் அடிப்படையானது. முதல்ல நம்பிக்கை. ரெண்டாவது புரிதல். மூணாவது அன்பு. இந்த மூணும் எவ்வளவு இருக்கோ அதன்படி தான் எந்த ஒரு உறவும் அமையும். குறைஞ்சது இது ரெண்டுல ஒருத்தர் கிட்டயாவது இருக்கனும். உனக்கு லவா மேல காதலும் இருக்கும் நம்பிக்கையும் இருக்கு. ஏன் புரிதல் கூட இருக்கலாம். ஆனா எனக்கு? எனக்கும் அவனுக்கும் எப்பயும் ஏழாம் பொருத்தம் தான். உனக்கொரு உண்மை சொல்லட்டா இதுவரை எனக்கு நினைவு தெரிஞ்சு நானும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிச்சிக்கிட்டது கூட இல்ல தெரியுமா? நீயும் லவாவும் செஞ்ச இந்தக் காரியத்தால் இப்போ எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் பெரிய கேள்விக்குறியாகிடுச்சு... அதுல என் நிலை தான் ரொம்ப மோசம்..." என்று சொன்ன மொட்டுவின் குரலில் கோவமும் இல்லை வருத்தமும் இல்லை. குறைந்தபட்சம் அவள் கோவப்பட்டிருந்தாளாவது அனு சற்று நிம்மதி அடைந்திருப்பாள். பின்னே கோவம் கொண்டு வரும் வார்த்தைகள் எல்லாம் மனதின் அடியிலிருந்து வராது என்பதை அனுவும் அறிவாள் தானே? ஆனால் மொட்டு இவ்வாறு நிதானமாகப் பேசியதைக் கேட்டவளுக்கோ உண்மையில் தன் செயலால் இவர்கள் இருவரின் வாழ்க்கையும் பாழாகிவிடுமோ என்ற அச்சமே மேலோங்கியது.
"அப்படியெல்லாம் சொல்லாத மொட்டு... நிச்சயம் குஷாவுக்கும் உன்னை பிடிக்கும். ஏன்னா எனக்குத் தெரிஞ்சு அவன் வாழ்க்கையிலும் எந்தப்பெண்ணும் இல்ல... சோ அவனுக்கு உன்மேல..." என்றவளை முடிக்க விடாமல்,
"சும்மா என்னை ஆறுதல் படுத்த எதையும் சொல்லாத அனு... எனக்குத் தெரியும்... என்னால கீழ கேள்வி கேட்ட அப்போவே இதெல்லாம் சொல்லியிருக்க தெரியாதா? அண்ட் அவன் கீழ சொன்ன எல்லாமும் சுத்த பொய்... நான் அவனை லவ் பண்ணல... பண்ணவும் போறதில்லை..." என்று இறுதியில் தீர்க்கமாய் உரைத்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அனு.
"நீ லவ் பண்ணல ஓகே... ஆனா ஏன் பண்ணவும் போறதில்லைனு சொல்ற? ஒருவேளை நாளைக்கு அவனுக்கு உனக்கும் நல்ல புரிதல் அன்பு நம்பிக்கை எல்லாம் வரலாமுல்ல?" என்று சொல்ல அவளுக்கு ஒரு வேற்று சிரிப்பை உதிர்த்தாள் மொட்டு. ஏற்கனவே குற்றயுணர்ச்சியில் தத்தளிக்கும் அனு மொட்டுவின் இந்த பிடித்தமில்லாத பதிலில் அதிர,
"என்னைப் பத்தியெல்லாம் குழப்பிக்காம உன் லைஃப நல்ல படியா ஆரமிக்குற வழியைப் பாரு..." என்றவள் சிறிது தூங்க முயற்சிக்க,
"மொட்டு நீ பேசுறதைக் கேக்க பயமா இருக்கு... அப்போ உங்க லைஃப்?" என்ற அனுவிடம்,
"வேண்டிக்கோ... கடவுள் நம்பிக்கை இருந்தா வேண்டிக்கோ... எங்களுக்குள்ள நடக்குற எந்த விஷயமும் உங்க வாழ்க்கையையும் இந்தக் குடும்பத்தோட நிம்மதியையும் எந்த விதத்திலும் பாதிக்கவே கூடாதுனு வேண்டிக்கோ..." என்றவள் கண்ணயர்ந்தாள்.
'இவ என்ன இப்படிப் பேசிட்டு இவ்வளவு நிம்மதியா தூங்குறா?' என்று எண்ணி குழம்பினாள் அனு.
அங்கே சகோதரர்கள் இருவரும் இதேபோல் தங்களுக்குள் உரையாடினார்கள்.
"நீ ஏன்டா அப்படிச் சொன்ன?" என்றான் லவா.
"எப்படிச் சொன்னேன்?"
"மொட்டு உன்னை விரும்புறானு ஏன் சொன்ன?"
"அப்படியாச் சொன்னேன்? நான் மொட்டுவ லவ் பண்றேன்னு தான் சொல்ல வந்தேன்... ஏதோ ஞாபகத்துல அவ என்னை லவ் பண்றதா சொல்லிட்டேன்..."
"குஷா தயவு செஞ்சு விளையாடாத? நீ என்ன செய்யுறேன்னு தெரிஞ்சு தான் செய்யுறையா? நீ தானே அவளை லவ் பண்ற?"
"ஆனா அவ நான் சொன்னதைத் தானே ஆமோதிச்சா?" என்றதும் லவாவும் அந்தக் குழப்பத்திற்குச் சென்றான்.
"அதான் எப்படிடா சொன்னா? எனக்கு எவ்வளவு ஷாக்கிங்கா இருந்தது தெரியுமா? என்ன பண்ண நீ? டேய் உண்மையைச் சொல்லு உன் லவ்வை நீ அவகிட்டச் சொல்லிட்டியா?" என்ற லவாவை உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாமல் பார்த்தான் குஷா.
"இப்போ எதுக்கு நீ இதெல்லாம் யோசிச்சு டென்ஷன் ஆகுற? இனிமேல் இது என் பிரச்சனை... நான் பார்த்துக்கறேன். நீயும் அனுவும் உங்க லைஃபை மட்டும் பாருங்க..." என்றவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல் ஓய்வெடுத்தான்.
"டேய் இப்படிச் சொன்னா எப்படி? அப்போ உங்க வாழ்க்கை?"
"எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்..." என்று சொன்னாலும் குஷாவிற்கு இதிலுள்ள சிக்கல் விளங்கியது. பின்னே இன்று நிலையைச் சமாளிக்க இவனோ மொட்டுவின் தன்மானத்தை அல்லவா சீண்டிவிட்டான்? நிறைந்த சபையில் அவளுக்கு முன்பாக அவள் தன்னை விரும்புவதாகச் சொன்னால் அவள் மேற்கொண்டு எந்தப் பிரச்சனையையும் கிளப்பமாட்டாள் என்று தெரிந்தே தான் பொய்யுரைத்தான். ஆனால் அவள் தலை மட்டும் அசைப்பாள் என்று எண்ணியிருக்க அவளோ வாயைத் திறந்து பதிலளித்தது இவனுக்குள்ளும் கேள்விகளை எழுப்பியது தான்.
அங்கே பெரியவர்கள் எல்லோருக்கும் நிம்மதியாக இருக்க பாரியும் மணவாளனும் மட்டும் நடந்த இந்நிகழ்வுகளை நம்ப தயாராக இல்லை. அதிலும் மணவாளனோ தன்னுடைய அக்காவின் சின்ன சின்ன அசைவிற்கும் அர்த்தம் தெரிந்தவன் ஆயிற்றே? அதைப் பற்றி அவன் பாரியுடன் பேசி உண்மையைக் கண்டறிய முயற்சித்தான்.
மாலை நெருங்க வீட்டில் பெரியவர்கள் அடுத்தகட்ட ஏற்பாடுகளைத் தயார் செய்ய அதைக் கண்ட லவாவும் குஷாவும் உள்ளுக்குள் கலங்கினார்கள். பின்னே இதுவரை இவர்கள் தங்கள் மனைவிகளிடம் எதையும் பேசவில்லையே!
அப்போது இவர்களின் அறைகளை ஏற்பாடு செய்த நிர்மலா கோபி தம்பதியினரைக் கண்ட குஷா,"என்ன பண்றீங்க? எதுக்கு இந்த ஏற்பாடெல்லாம்? எப்படியும் இந்த பூவெல்லாம் காலையில வேஸ்ட்டா தான் போகப்போகுது..." என்றதும்,
"ஏன்டா இப்படிச் சொல்ற?" என்றார்.
"எப்படியும் எல்லாம் காலையில வாட தான் போகுது..." என்றதும்,
"காலையில வரை வாடாத மாதிரி பூ எதாவது இருக்கா என்ன?" என்றவர் சிரித்தபடியே வெளியேற குஷா தான் எதுவும் விளங்காமல் பார்க்க, அவனை பின்னிருந்து அடித்த லவா,"பெரியவங்க கிட்ட இப்படியாப் பேசுவ?" என்றான்.
"அப்படி நான் என்ன தப்பாப் பேசுனேன்?" என்றவன் தன்னுடைய சித்தி சிரித்ததற்கானக் காரணத்தை எண்ணி,"ஐயோ சாரி டா... சாரி டா..." என்றதும்,
"குஷா பி கேர்புல் டா... தேவையில்லாம பேசி பிரச்சனை இழுத்திடாத..." என்று எச்சரித்தான் லவா.
***************
பெரியவர்களின் நச்சரிப்பில் விருப்பமே இல்லை என்றாலும் மொட்டுவும் அனுவும் தங்களை அலங்கரித்துக்கொண்டு சென்றனர். குஷாவோ கண்டிப்பாக இன்றொரு புயலை எதிர்பார்த்தான். பின்னே, மொட்டுவின் அமைதி ஏனோ அவனுக்கு புயலுக்கு முன்னான அமைதியாகவே பட்டது. இதுநாள் வரை அவனும் அவளும் ஒரு சுமுகமான உரையாடலையே கையாண்டதில்லையே? அவனுக்கு என்னவோ உள்ளுக்குள் தவறாகவே பட அப்போது தான் உள்ளே வந்தாள் மொட்டு.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தினுள் யாருக்கும் அஞ்சாத துணிவு என்ற பாரதியின் வரிகளுக்கு நியாயம் சேர்க்கும் விதமாகவே வந்தவள் எதையும் பேசாமல் இருந்தாள். இவனும் எப்படி அவளிடம் பேச்சை ஆரமிப்பது என்று இருக்க,
"அடுத்து என்ன பிளான் பண்ணலாம்னு யோசிக்கறயா?" என்று வந்தது வார்த்தை.
இவன் என்னவென்று புரியாமல் விழிக்க,
"இப்படிப் பார்த்தா நீ யோக்கியன்னு நம்பணுமா? உனக்கு என்னை சுத்தமாவே பிடிக்காது. என் அப்பாவைப் பிடிக்காது. என்னை எப்போடா சமயம் கிடைக்கும் பழிவாங்கலாம்னு இருந்த... இப்போ அதுக்கு வாய்ப்பும் கிடைச்சிடுச்சு. ஆனா நீ எவ்வளவு தந்திரமானவனு இப்போ தான் தெரியுது... என்னை வெச்சே நீ என்னை மடக்கிட்ட இல்ல? எப்படியெப்படி நான் உன்னை காதலிச்சேன்? ஏன் அதோட நிறுத்திட்ட நான் மூணு மாசம் ப்ரெக்னெண்டா இருக்கேன்னு சொல்ல வேண்டியது தானே?" என்று இறுதியில் அவள் மொழிந்த வார்த்தையின் வீரியம் குஷாவிற்கும் புரிந்தது.
"வாயை மூடு மொட்டு..." என்று கர்ஜித்தான் குஷா.
"என் வாழ்க்கையில இன்னைக்கின தினத்தைப் போல என்னைக்கும் நான் அவமானப்பட்டதில்லை தெரியுமா? எந்த ஒரு பொண்ணுக்கும் மேரேஜ் எவ்வளவு ஸ்பெஷல் மொமெண்ட் தெரியுமா? எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். ஏன் உனக்கும் இருந்திருக்கும் தானே? முதல்ல உனக்கு என் மேல அப்படி என்ன வெறுப்பு? சின்ன வயசுல தான் எப்போ பாரு என் படிப்பை வெச்சு என்னை டார்ச்சர் பண்ணுவ... ஆமா உங்க அம்மா மேல எனக்கு கோவம் தான். ஏன்னா நீ என்னைக்காவது தாத்தா ஃபீல் பண்ணி பார்த்திருக்கையா? நான் பார்த்திருக்கேன்... அது போக என் மேல அன்கண்டிஷனல் லவ் வெச்சிருக்க ஒரே நபர் அவர் ஒருத்தர் தான். அவருக்காக நான் தான் பேசுவேன். அதுக்கு பிறகு லவா என் வாழ்க்கையில இன்னொரு ஸ்பெஷல் பெர்சன். ஆனா நீ ஏதேதோ சொல்லி அவனையும் என்கிட்டப் பேசவிடாம பண்ணிட்ட... இப்போ என்னைக் கல்யாணம் பண்ணி உன்னுடைய வெஞ்சேன்ஸ் எல்லாம் தீர்த்துக்கப்போற... சரியா? எப்படியோ என் வாயாலே நான் உன்னை லவ் பண்ணேன்னு சொல்ல வெச்சுட்ட... சோ இனி நானா போய் உன்னைப் பத்தி வெளிய எதைச் சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க... உன் இஷ்டம் போல என்னை நீ டார்ச்சர் செய்யலாம்..." என்று மேலும் மொட்டு தன்னுடைய ஆதங்கத்தை எல்லாம் கொட்டினாள்.
குஷாவிற்குத் தான் அவளுடைய இந்தப் பேச்சு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. முதலில் தன்னைப் பற்றிய அவளுடைய கணிப்பு இவ்வளவு கீழாக இருக்கிறதே என்று வருந்தியவன் இதையெல்லாம் தான் என்னவோ திட்டமிட்டு செயல்படுத்தியதைப் போல் சொல்லவும் அவன் உள்ளம் துடித்தது. அதே நேரம் எவ்வளவு முயன்றும் அவன் கட்டுப்படுத்திய கோவம் வெளியேறியது,
"இவ்வளவு பேசுற நீ காலையில என் அம்மா கேக்கும் போதே இதுக்கும் எனக்கும் சம்மந்தமில்லைனு சொல்லியிருக்க வேண்டியது தானே?" என்று கேட்டது தான் தாமதம்,
"சொல்லியிருந்தா என்ன நடந்திருக்கும்? நம்ம பக்கத்துல நிக்குறது யாரு நம்ம கழுத்துல தாலி கட்டுனது யாருங்கற சின்ன விஷயத்தைக் கூடத் தெரியாம இருக்காளேன்னு எல்லோரும் என்னைக் கேவலமாவும் கழிவிரக்கத்தோடும் பார்த்திருப்பாங்க... சத்தியமாச் சொல்றேன் எந்த ஒரு பொண்ணுக்கும் இது போல ஒரு அவல நிலை வரவே கூடாது..." என்னும் பொழுதே காலையில் தானிருந்த அந்த நிலை நினைவுக்கு வர கலங்கிய தன்னுடைய கண்களை முயன்று தடுத்தாள்.
அவள் கண்கள் கலங்குகிறது என்பதை குஷாவும் கண்டுகொண்டான். ஏனோ அவளுடைய இந்தக் கண்ணீர் அவன் இதயத்தைச் சுருக்கென்று குத்தியது. அவளிடம் அவனுக்குப் பிடித்ததே அவளுடைய திமிரும் அந்த கெத்தும் தான். எத்தனையோ முறை அதை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அவளுடன் வம்பிழுத்து இருக்கிறான். ஆனால் அதே திமிர் தான் அவனை அறியாமலே அவள் பால் அவன் மனதைக் கொள்ளையும் கொண்டது. அப்படிப்பட்டவள் இன்று தன்னுடைய ஆளுமையை இழந்து இயலாமையை வெளிப்படுத்தும் போது அவனால் இலகுவாக இருக்க முடியவில்லை.
"இப்போ ஏன் அழற? நான் உன்னை என்ன பண்ணேன்?" என்று பழைய குஷாவாகவே அவளைச் சீண்டினான்.
அவளிடம் பதிலில்லை.
"சரி, காலையில நானே எல்லோரையும் கூப்பிட்டு இதைப் பத்தி பேசுறேன்... நடந்ததுக்கும் உனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லைனு சொல்லி..." என்று முடிக்கும் முன்னே,
"கல்யாணம் ஆன ஒரே நாள்ல என்னை அறுத்து விடச் சொல்ற? சூப்பர் இது பழைய பிளானோட இன்னும் சூப்பரா இருக்கு. ஏன்னா காலத்துக்கும் நான் வாழாவெட்டியாவே ஊர் வாய் பேசுறதைக் கேட்டு அவமானப்படணும் ரைட்? நீ செய்... உன் மனசுக்கு என்னவெல்லாம் செய்யணும்னு தோணுதோ அதையெல்லாம் செய்... இப்போ நான் தான் நீ ஆட்டுவிக்குற பொம்மை ஆகிட்டேன்னில்ல?" என்றதும் உண்மையில் குஷா சோர்ந்து போனான்.
"இப்போ நான் என்ன தான் பண்ணனும்? நீயே சொல்லு..." என்று கேட்ட கேள்வியில் எந்த உணர்வும் இல்லை. ஏனோ காலையிலிருந்து இதைப்பற்றிய யோசித்தால் அவளும் அதிக சோர்வுக்குள்ளானாள். எதையும் பேசாமல் அவள் அந்தக் கட்டிலில் உறங்க குஷாவோ அடுத்து என்ன செய்யலாம் என்ற கவலையில் திரிந்தான்.
*************
மறு அறையில் உள்ளே வந்த அனுவின் முகமும் களையிழந்து காணப்பட்டது. லவாவுக்கு அடுத்த அறையில் இருக்கும் தன்னுடைய தம்பியின் நிலையை எண்ணியே குழம்பியிருக்க, அப்போது வந்த அனுவைக் கண்டவன் அவளுடைய கவலையில் தானும் வாடினான். இப்போது யோசிக்கையில் நடந்த இந்த அனைத்துப் பிரச்சனையையும் தான் நினைத்திருந்தால் மிக இலகுவாகவே சரிசெய்திருக்க முடியும் என்று தோன்றியது. பின்னே என்று குஷாவின் காதலைத் தெரிந்துகொண்டனோ அன்றே அவனிடமும் பெற்றோரிடமும் பேசியிருந்தால் இன்றைய நிலை வந்திருக்காதோ என்று யோசிக்க எப்படியும் குஷா மொட்டுவைச் சமாளித்து விடுவான் என்ற நம்பிக்கை பிறந்தது. அதே நேரம் அனுவை எப்படியாவது தேற்ற எண்ணியவன் அவளிடம் பேசுவதற்காக நெருங்கினான்.
அனுவிற்கோ காலை மொட்டு கூறிய அந்த வார்த்தைகளே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. எப்போது கடவுள் நம்பிக்கை இருந்தால் வேண்டிக்கோ என்றாளோ அப்போதிருந்து அனு வேண்டாத கடவுளில்லை. மொட்டு குஷா வாழ்வில் நிகழும் சிறிய விரிசலும் தங்களுடைய வாழ்வு மட்டுமின்றி தங்கள் குடும்பத்தின் நிம்மதியிலும் எதிரொலிக்கும் என்ற ஐயம் அவளை ஆட்கொண்டது. ஆங்கிலத்தில் ரிப்ப்ளிங் எபெக்ட் என்று ஒன்று உண்டு. ஒரு அமைதியான குளத்தில் கல்லை எறிந்தால் அதிலிருந்து எழும் அலைகள் எவ்வாறு பல இடங்களுக்கு பயணிக்குமோ அது போல் தங்களுடைய வாழ்க்கை மாறிவிட்டதாகவே எண்ணினார்கள்.
நீண்ட நேரம் கடந்தும் அவர்கள் இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் தங்களுடைய கவலைகளில் உழன்றனர். முதலில் நிகழ்வுக்கு வந்த லவா அனுவிடம் பேசுச்சுக்கொடுத்தான்.
"அனு, ஏன் இப்படி டல்லா இருக்க?" என்றதும் எதையும் மறைக்காமல் மொட்டு தன்னிடம் கூறியதை எல்லாம் சொல்லிவிட்டாள் அனு. ஏனோ அதைக் கேட்ட நொடியே லவாவுடைய குற்றயுணர்ச்சி மேலும் அதிகரித்தது. ஒரு வகையில் அவர்களின் இந்நிலைக்கு தாங்கள் இருவரும் தான் காரணமோ என்று யோசித்தவர்கள் ஏதும் பேசாமல் அன்றைய இரவைக் கடத்தினார்கள்.
மறுநாள் காலையில் விழித்தவர்களோ ஆளுக்கொரு எண்ணத்தில் இருக்க குஷா தான் எந்த முடிவும் எடுக்கமுடியாமல் தவித்தான். ஒரு பக்கம் அவளிடம் தன்னுடைய காதலைச் சொல்ல நினைக்க,'அந்த பிளான் சொதப்பிடுச்சினு அடுத்த பிளானா?' என்று ஒற்றை வாக்கியத்தில் அவ்வளவு விஷம் கக்குவாள் என்று அவனுக்குப் புரிந்தது. இந்தக் குழப்பத்தில் அவன் தோட்டத்தில் நடக்க அப்போது மணவாளனும் பாரியும் தங்களுக்குள் தனியாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டான்.
மொட்டு இங்கே தங்குவதற்காக குஷாவிடம் பணம் வாங்கியதை மனதில் வைத்து தான் குஷா அவளைப் பழிவாங்கிவிட்டான் என்றும் அதற்கு லவாவும் உடந்தை என்றும் அவர்கள் பேசிக்கொண்டனர். மேலும் நேற்று மொட்டு அவ்வாறு பேச நிர்பந்திக்கப் பட்டிருக்கிறாள் என்றும் பேசிக்கொள்ள அவர்கள் முன்பு சென்று நின்றவனைக் கண்டு அவர்கள் திகைத்தனர்.
"ஏன் நிறுத்திட்டீங்க? இன்னும் பேசுங்க?" என்றான் குஷா. அவர்களோ இவனை எதிர்பார்க்காமல் விழிக்க,
"எப்படி அக்காவும் தம்பியும் இப்படி ஒரே மாதிரி யோசிக்கறீங்க? அண்ட் நீங்க எல்லோரும் நிறைய சினிமா பார்த்து ஆண்ட்டி ஹீரோ கதை படிப்பிங்களா டா? சரி உங்க லாகிக்குக்கே வருவோம்டா... உங்க அக்கா வாழ்க்கையைப் பழிவாங்க நான் கல்யாணம் பண்ணா அதோட சேர்ந்து என் வாழ்க்கையும் தானே பாழாகும்? அண்ட் இந்த விஷயம் நாளைக்கு எங்க வீட்ல தெரிஞ்சா என் அப்பாவும் அம்மாவும் தானே அதிகம் பாதிப்படைவாங்க?" என்று கேட்கவும் அவர்கள் இருவரும் அமைதி காத்தனர்.
"ஆமா உங்க அக்கா பண்ண விஷயத்துல எனக்குக் கோவம் இருந்தது தான். ஆனா அதைவிட அதிகம் காதல் இருக்கு..." என்றவன் அவள் மீது அவனுக்கிருக்கும் காதலைச் சொன்னான். அதும் போக அனுவுக்கு லவா மீதிருக்கும் காதலைச் சொல்ல ஜோடி மாறியதற்கானக் காரணம் அவர்களுக்கு விளங்கியது.
"இதை ஏன் உங்ககிட்ட இப்போ சொன்னேனா இங்க எல்லா விஷயமும் தெரிஞ்சவங்க நீங்க ரெண்டு பேர் மட்டும் தான்..." என்னும் போது அங்கே வந்த வைத்தி,
"என்னை விட்டுட்டியே குஷா?" என்றார்.
"கடைசியா சொல்றேன்டா, நேத்து உன் அக்கா பொய் தான் சொன்னா... ஆனா கூடிய சீக்கிரம் அதை உண்மையாக்கிக் காட்டுறேன்..." என்று அங்கிருந்து சென்றான். அவனுடைய இந்தப் பேச்சிலே நேற்று என்னவோ நடந்திருக்கிறது என்று அவர்களுக்கும் விளங்கியது.(நேரம் கைகூடும்...)
நெட் பிரச்சனை தான் மக்களே! நான் இருப்பது ஒரு கிராமத்தில். சமீபமா சுத்தமா டவர் எடுப்பதே இல்லை?
 
அச்சோ மொட்டு பாவம். குஷா சொல்றத ஒழுங்கா சொல்லலாம்ல. ரெண்டுபேரும் லவ் பண்றோம் அப்படியாவது சொல்லிருக்கலாம். குஷா உன்னோட கிரைம் ரேட் கூடிட்டே போகுது. வாவ் லாஸ்ட்ல குஷா செம்ம ??? பொய்யை உண்மையாக்குறேன்னு சொன்னது. லவா அண்ட் அனு ரெம்ப ஃபீல் பன்றாங்க. எபி????
 
உங்களுக்கு மொட்டு மேல என்ன கோவம் பாஸ். அந்த புள்ளையா இப்டி பண்றீங்க. அடேய் குஷா உன் வாய் இருக்கே வாய்.... போ பாவம் இனிமே நீ. பாரி மணி என்னமா யோசிக்கிறாங்க?????... நிறைய சினிமா பார்த்தா இப்படி தான் யோசிக்க தோணும். தாத்தா கிட்ட மொட்டு என்ன பேச போற..... அவரு மேல கோவபடுவாளா......
அனு நீ ஃபீல் பண்ணாத சீக்கிரமா லவா கூட சேர்ந்துடு இல்லன்னா உன் வாழ்க்கையில ஏதாச்சும் பண்ணிவிடுவாரு... இந்த ரைட்டர். யாரை நம்பினாலும் நம்பு இந்த ரைட்டர மட்டும் நம்பிடாத ?????.
 
இத்தன நாள் வெரப்பா சுத்திக்கிட்டிருந்த குஷா இனிமே கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே பணிஞ்சு போகணும் ??
 
உங்களுக்கு மொட்டு மேல என்ன கோவம் பாஸ். அந்த புள்ளையா இப்டி பண்றீங்க. அடேய் குஷா உன் வாய் இருக்கே வாய்.... போ பாவம் இனிமே நீ. பாரி மணி என்னமா யோசிக்கிறாங்க?????... நிறைய சினிமா பார்த்தா இப்படி தான் யோசிக்க தோணும். தாத்தா கிட்ட மொட்டு என்ன பேச போற..... அவரு மேல கோவபடுவாளா......
அனு நீ ஃபீல் பண்ணாத சீக்கிரமா லவா கூட சேர்ந்துடு இல்லன்னா உன் வாழ்க்கையில ஏதாச்சும் பண்ணிவிடுவாரு... இந்த ரைட்டர். யாரை நம்பினாலும் நம்பு இந்த ரைட்டர மட்டும் நம்பிடாத ?????.
கடைசில சொன்னீங்க பாருங்க அதான் செம்ம ?????
 
Top