Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 25

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE


அத்தியாயம் 25



படுக்கையில் குப்புறப்படுத்து தலையணையில் முகம் புதைத்துக் கொண்டிருந்த ரேகா தூங்குகிறாளா இல்லை வெறுமனே படுத்திருக்கிறாளா என்று அவள் தந்தை சத்தியமூர்த்திக்கு புரியவில்லை.

வழக்கமாக ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வீட்டு வேலைகளை முடித்து எட்டரைக்கெல்லாம் அலுவலகம் கிளம்பி விடும் மகள் இன்று இன்னும் எழாமல் படுத்திருப்பது சத்தியமூர்த்திக்கு ஆச்சரியத்தை அளித்தது.



அத்துடன் முன்தினம் நண்பர் ஒருவர் ரேகாவைப் பற்றி சொன்ன விஷயம் வயிற்றில் புளியை கரைத்திருந்தது.



"ஏன் ஓய் சத்தியமூர்த்தி உன் மகளுக்கு எப்பவேய் கல்யாணம் பண்ணினீர்? எங்ககிட்ட சொன்னா சாப்பாட்டுக்கு வந்துருவோம்னு பயமாங்கானும்? அன்னிக்கொருநாள் யதேச்சையா உம் மகளையும் மருமகனையும் மகாபலிபுரம் ரிசார்ட்ல பார்த்தேன்.பரவாயில்லங்கானும்.

உம் மருமான் ராஜாவாட்டம் தான் இருக்கான்.புடிச்சாலும் புடிச்சீர் புளியங்கொம்பாத் தான் புடிச்சிருக்கீர்."



நண்பர் ஸ்லாகித்து சொன்ன வார்த்தைகள் சத்தியமூர்த்தியின் தலையில் இடியாய் இறங்கியது.



"என்ன ஓய் ஆடு திருடின கள்ளனாட்டம் முழிக்கிறீர்? இன்னிக்கு வகையாய் மாட்டினீர்வேய். கல்யாணத்துக்கு தான் கூப்பிடல.போகட்டும். இப்ப வாரும். பக்கத்து ஹோட்டல்ல சிரமப்பரிகாரம் பண்ணிட்டு வரலாம். காசு வெச்சிருக்கீர் இல்லே?"



கழுகுப்பிடியாய் வளைத்துக் கொண்ட நண்பரிடமிருந்து தப்பித்து வருவதற்குள் திணறிப் போனார் சத்தியமூர்த்தி.

எப்படியோ தப்பி வீட்டிற்கு வந்தவருக்கோ நிம்மதியில்லை. மனதில் கவலை

திருமணத்திற்கு முன்னே மகள் கண்டவனுடன் சுற்றுகிறாளே என்ற கவலையில்லை. காதல் கீதல் என்று மகள் கல்யாணம் செய்து கொண்டுவிட்டால் கைச்செலவுக்கு யார் பணம் தருவார்கள் என்ற கவலையில் தான் மயங்கிப் போனார் மனிதர்.



சத்தியமூர்த்தி பணத்திற்காக எதையும் செய்யக்கூடிய மனுஷன்.பத்து ரூபாய்க்காக ஆயிரம் பொய் கூட சொல்வார். இன்றைக்கும் அவர் நண்பர்கள்

"உனக்கு யாருவே சத்தியமூர்த்தினு பேர் வெச்சது? சரியான பொய்யனில்ல நீர்?" என்று கிண்டலடிப்பார்கள்.



சத்தியமூர்த்தி தன் வாழ்நாளிலேயே செய்த ஒரே நல்ல காரியம் ஆசைக்கு ஒரு மகளாய் ரேகாவை மட்டும் பெற்றுக் கொண்டதுதான். ஆனால் ரேகாவை அவர் ஆசையாய் வளர்த்தாரா என்பதும் கேள்விக்குறி தான்.ரேகாவைப் பெற்ற புண்ணியவதி திடீர் சுகவீனத்தில் இறந்து போயிருக்காவிட்டால் சத்தியமூர்த்தியின் வம்சம் இன்னும் பெருகியிருக்குமோ என்னவோ?



ஆனால் நல்லவேளை இப்பவாவது தந்தையை மட்டுமே காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ரேகாவிற்கு. இன்னும் தம்பி தங்கைகள் என்று குடும்பம் பெருகியிருந்தால் அவள் பாடு திண்டாட்டமாய் தான் போயிருக்கும். விதை விதைத்தவுடன் விலகி விட்ட அப்பா பெற்று போட்டவுடன் கடமை முடிந்தது என்று கண்ணை மூடிவிட்ட அம்மா, இப்போழுது தேன் குடித்த வண்டாய் அவள் பெண்மையை கவர்ந்துவிட்டு கை கழுவத் துடிக்கும் முரளி…ரேகாவின் கதை ஒரு சோக கவிதை.



அறைகடிகாரம் ஏழு முறை அடித்து விட்டு ஓய்ந்ததும் அரக்கப பறக்க எழுந்தாள் ரேகா.புடவையை ஒழுங்குபடுத்திக் கொண்டு எதிரிலிருந்த கண்ணாடியில் பார்த்த பிம்பம் தான் தானா என்ற சந்தேகம் எழுந்தது.

கண்ணீர் கோலமிட்ட கன்னங்கள் இனி சிந்துவதற்கு மிச்சமில்லை என்பது போல வரண்டு கிடந்த கண்கள், கலைந்த தலை.



அடடா! அழகுச்சிரிப்பும், குளிர்ச்சியூட்டும் பார்வையும், ஆட்களை அசரடிக்கும் அழகுமாக பவனி வந்த ரேகாவா இவள்?

ஓரே நாளில் இருபது வயது கூடிவிட்டாற் போன்ற தன் தோற்றத்தை காணச் சகிக்காது கண்களை மூடிக் கொண்டாள் ரேகா.



"ரேகா!"



அப்பாவின் குரலில் திடுக்கிட்டவளாக முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு திரும்பினாள்.



"ஸாரிப்பா ! லேட்டாயிடுச்சு.ஆபீஸ்ல வேலை ஜாஸ்தி.அதான் களைப்பில் ரொம்ப நேரமா தூங்கிட்டேன்.இதோ

நிமிஷத்தில் சமையலாயிடும்."



சமையலறையை நோக்கி நகர்ந்தவளை தடுத்தார் சத்யமூர்த்தி.



"இந்தா நில்லு. இப்போ சாப்பாட்டுக்கொண்ணும் அவசரமில்லை.எனக்கொரு விஷயம் தெரிஞ்சாகனும். யாரோ ஒரு பையனோட அங்கே இங்கேனு சுத்தறயாமே? என்ன நிசம் தானா?"



"இதெல்லாம் உங்களுக்கு யார் சொன்னது?"



அப்பாவிற்கு தன்னைப் பற்றி தெரிந்து விட்டதே என்று ரேகா மயங்கவில்லை. தயங்கவில்லை.மாறாக நிதானத்துடன் கேட்டவளை முறைத்தார் பெற்றவர்.



"யார் சொன்னான்றதா இப்ப முக்கியம்? சேதி உண்மையா இல்லையா அதைச் சொல்லு ."



"உண்மைதான்."



.அவள் அலட்சியமாக சொல்ல சத்யமூர்த்தி கோபப்பட்டார்.



"பேஷ்! அப்பா கிட்டவே இப்படி சொல்றதுக்கு உனக்கு வெட்கமாயில்லே? எல்லாம் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கற திமிர்.இதோ பார் ரேகா கலயாணமாகாத பொண்ணு இப்படி கண்டபடி ஊர் சுத்தினா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க.நம்ம குடும்ப மானமே போயிடும்.""



"போறதுக்கு இன்னும் மிச்சம் மீதி மானம் இருக்காப்பா? பணம் கையாடல் பண்ணினதுக்காக என்னிக்கு உங்களை வேலையிலிருந்து தூக்கினாங்களோ அன்னிக்கே எல்லா மானமும் போயிடுச்சேப்பா.."



"ரொம்ப சாமர்த்தியமா பேசறதா நெனப்பு?

ம்..இப்படி ஊர் சுத்தற கழுதையை எவன்டி மதிச்சு கல்யாணம் கட்டிக்குவான்? நான் எந்த மூஞ்சியை வெச்சுகிட்டு உனக்கு மாப்பிள்ளை தேடறது?"



"ஏன்பா பொய் சொல்றிங்க? நான் ஊர் சுத்தலேன்னா மட்டும் மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்ணி வெச்சிடுவிங்களா?

அப்படி கல்யாணம் பண்ணிட்டா கேட்கறப்பல்லாம் பணம் கொடுக்க இந்த ரேகா இல்லாமல் நீங்க கஷ்டப்படுவிங்கல்ல?"



"வாயை மூடு…"



பளாரென்று அறைந்த தந்தையை விரக்தியுடன் ஏறிட்டாள் ரேகா.



"அடிங்கப்பா. நல்லா அடிங்க. ஒரு நல்ல அப்பாவா உங்க கடமையை பண்ணலேன்னாலும் அடிச்சு உங்க உரிமையை நிலைநாட்டறிங்களே அதுக்காவது நான் சந்தோஷப்பட்டுக்கனும்

அப்பா! எனக்கு ஒரு கல்யாணம் காட்சினு நீங்க கஷ்டப்பட வேண்டாம் .ஆனால் நான் மாடா உழைச்சு கொண்டு வர்ற பணத்தையும் நீங்க சூதாட்டம் ரேஸூன்னு போய் தொலைச்சுட்டு வர்றிங்களேனு தான் வருத்தமாயிருக்கு."



ரேகா ரேஸ் என்று நினைவுபடுத்தவும் சத்யமூர்த்தி சட்டென்று முகத்தை பரிதாபமாக வைத்துக கொண்டு கெஞ்சினார்.



"ரேகா! எனக்கு அவசரமாய் ஒரு ஐநூறு ரூபாய் வேணும் .தாயேன்."



அவரை புழுவைப் பார்ப்பது போல் பார்த்தாள் ரேகா.



"எங்கிட்ட பணமில்ல.."



"ஏனில்ல? நேத்து ஒண்ணாந்தேதி சம்பளம் வாங்கியிருப்பியே.அதிலிருந்து குடும்மா."



"நான் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்.எப்படி சம்பளம் கிடைக்கும்?"



"என்னது வேலையை விட்டுட்டியா?"



கிட்டத்தட்ட அலறினார் சத்யமூர்த்தி.



"ஏண்டி உனக்கென்ன பைத்தியமா? சொளையா இருபதாயிரம் சம்பளம் வர்ற வேலையை தொலைச்சுட்டு வந்து நிக்கறயேடி?"



ஆழாதகுறையாக புலம்பியவரை வேதனையுடன் வெறித்தாள் ரேகா.



'ஒரு பொண்ணுக்கு எது ரொம்ப முக்கியமோ அதையே நான் தொலைச்சுட்டேன். இந்த வேலை தொலைஞ்சதா பெரிசு?'



ரேகா அப்படியே மடிந்து உட்கார்ந்து அழ ஆரம்பிக்க, சத்யமூர்த்தி அவள் அழுகையை லட்சியமே செய்யாமல் வெளியேறினார்.

இன்றைய ரேஸிற்கு எப்படி பணம் புரட்டுவது என்று தவியாய் தவித்தவருக்கு ரேகாவின் அலுவலகம் சென்று அவள் சம்பளம் ஏதும் பாக்கியிருந்தால் வாங்கிக் கொள்ளலாமே என்ற யோசனை தோன்றவும் அதை செயல்படுத்தினார்.



அந்த பெரிய கட்டிடத்தின் எட்டாவது மாடியில் இருந்த ஹைடெக் சல்யூஷன்ஸ் கம்பெனியின் நடுவே இருந்த அந்த பெரிய அறையின் முகப்பில் ஜி எம் முரளி MBA என்ற எழுத்துக்கள் பளிச்சிட்டன.

ஹால் வெண்ணிற டைல்ஸின் உபயத்தில் கண்ணாடியாய் பளபளத்தது.காபின்களில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்களின் மிடுக்கான தோரணையும் ஆங்காங்கே சீராக வைக்கப்பட்டிருந்த இன்டோர் ப்ளான்ட்ஸின் அழகும் கண்டு மிரண்டார் சத்யமூர்த்தி .தன் கசங்கிய உடையையும் பஞ்சத்தில் அடிபட்டவர் போன்ற தன் தோற்றத்தையும் நினைத்து வெட்கப்பட்டவர் ஒரு கணம் ஒரே ஒரு கணம் வெளியே போய் விடலாமா என்று கூட யோசித்தார்.



ஆனால் பணத்தேவை அவரை கொக்கி போட்டு உள்ளே இழுத்தது. வரவேற்புப் பெண்ணிடம் அனுமதி வாங்கிக்கோண்டு முரளியின் அறை நோக்கி நடந்தார்.

அவர் அவன் அறையில் கதவில் பொருத்தியிருந்த சிறு கண்ணாடி துவாரத்தில் உள்ளே பார்த்தபொழுது முரளி தன்னருகில் நின்றிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தான்.



அறுவெறுப்பில் கண்களை மூடிக்கொண்டார் சத்யமூர்த்தி.



'சே! என்ன மனுஷன் இவன்? நாலு பேர் வரப் போக இருக்கும் இடத்தில் கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் நடந்துக்கறானே'



அயோக்கியர் சத்யமூர்த்திக்கே ஆத்திரம் வந்ததென்றால் உள்ளேயிருந்த முரளியின் லீலை அந்த லட்சணத்தில் இருந்தது.



கதவை தட்டியவருக்கு அனுமதி கிடைத்து அவர் உள்ளே நுழைந்தபொழுது நல்லவேளையாக அவர்கள் பிரிந்திருந்தார்கள்.

அவள் கண்ணாடியால் தடுக்கப்பட்ட கேபினில் கம்ப்யூட்டரில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, முரளி அவரை புருவம் சுருக்கி ஆராய்ந்தான்





"என்ன விஷயமா வந்திருக்கிங்க?"



சத்யமூர்த்தி தடுமாற்றத்துடன் பேசினார்.



"வந்து….நான் என் பேர் சத்யமூர்த்தி. என் பொண்ணு ரேகா இங்கே உங்க ஆபீஸில் தான் வேலை பார்த்தாள். அவ சம்பளபாக்கி ஏதும் இருந்தால் வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்."



அவன் இன்டர்காமில் கணக்காளரிடம் பேசினான்.



"மிஸ்டர் ராகவன்! என் பி எ ரேகாவோட அக்கவுண்ட்ஸ் செட்டில் பண்ணியாச்சா? ஜஸ்ட் செக் இட்.அப்படி எதாவது அமௌண்ட் பாக்கியிருந்தால் ரேகாவோட அப்பா கிட்ட கொடுத்தனுப்பிடுங்க.ரைட் "



அவன் இன்டர்காமின் தொடர்பை துண்டித்த கையோடு சத்யமூர்த்தியிடம் கத்தையாய் ஒரு பணக்கட்டை நீட்டினான்.



"இது ரேகாவிற்கு நான் தரும் அன்பளிப்பு"



ஒரு ஜி எம் தன் பர்சனல் அஸிஸ்டெண்டிற்கு எந்த வகையில் அன்பளிப்பு தர முடியும் என்ற யோசனையெல்லாம் சத்யமூர்த்தியின் மூளைக்கு எட்டவில்லை.



வெட்கமின்றி அதை கை நீட்டி வாங்கிக் கொண்டதுமில்லாமல் விஷயத்தை அப்படியே வந்து ரேகாவிடமும் பறைசாற்ற, அவள் அவரைப் பார்த்து காறித் துப்பினாள்.



"அவன் பணத்தை அன்பளிப்புனு கொடுத்தால் வெட்கமில்லாமல் வாங்கிட்டு வர்றிங்களே. எனக்கு தாலியாய் ஒரு மஞ்சள்கயிறை கொடுக்க வேண்டியவன் அன்பளிப்புனு பணத்தை கொடுத்திருக்கான்னா அவன் என்னை எந்தமாதிரி நெனச்சிருக்கான்னு உங்களுக்கு புரியலையா? உங்க பொண்ணை ஒரு வேசியா நினைச்சு அன்பளிப்பு கொடுத்திருக்கான்.நீங்களும் வெவரம் புரியாமல் வெட்கமில்லாமல் அதை கை நீட்டி வாங்கிட்டு வந்திருக்கீங்க.

கடவுளே! ஒரு அயோக்கியனை நம்பினதுக்கு நான் இன்னும் என்ன பாடு படனுமோ தெரியலையே…."



தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்த மகளை செய்வதறியாமல் வெறித்துப் பார்த்தார் சத்யமூர்த்தி.
 
Top