Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 2

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 2ND EPISODE. PLS LIKE COMMENT N SHARE UR THOUGHTS FRIENDS




அத்தியாயம் 2

நமஸ்தேஸ்து மகாமாயே ஸ்ரீபீடே சூரபூஜிதே

சங்க சக்கர கதாஹஸ்தே மகாலஷ்மி நமோஸ்துதே

பூஜையறையில் அம்மா மகாலஷ்மி அஷ்டோத்திரம் படிப்பது ராஜீவுக்கு துல்லியமாகக் கேட்டது. ஒரு நாள் தவறாமல் அம்மா அப்படி என்ன தான் வேண்டுகிறாள் அந்த ஆண்டவனிடம் என்ற கேள்வியில் சிரிப்பும் வந்தது.

"என்னடா கண்ணா உனக்கு நீயே சிரிச்சுக்கறே? பார்க்கறவா பைத்தியம்னு நினைச்சுடப்போறா.."

படிக்கும் மேஜையில் பால் டம்ளரை வைத்துவிட்டு, தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கேசத்தை மெதுவாகத் துடைத்தாள் லலிதா.

காம்பஸ் வைத்து வரைந்தது போல் வட்டமுகம், ஆழ்கடலென அமைதியான அழகான விழிகள், செப்பு உதடுகளில் சிங்காரப் புன்னகை, பிறை நெற்றியில் நீண்ட திலகம், எண்ணெய்குளியலில் மினுமினுத்த தங்க நிற சருமம், இடுப்பைத் தழுவியிருந்த சாதாரண கொரநாட்டு காட்டன் புடவையிலும் கூட அம்மாவின் அழகு அற்புதமாய் ஜொலிப்பதை பிள்ளை ரசித்துப் பார்த்தான்.

"ரொம்ப அழகும்மா நீ........."

"போறும் போறும் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் வேறு வேலையே இல்லை. இதே பாட்டை இன்னும் எத்தனை நாளைக்குடா படிப்பிங்க?"

"எத்தனை நாள்?..........ம்..." மோவாயில் கை வைத்து யோசித்தான் ராஜீவ்.

"குறைந்தபட்சம் எனக்குக் கல்யாணம் ஆற வரைக்கும் தான்........"என்றவனின் விழிகளில் சட்டென்று குறும்பு கொப்பளித்தது.

"ஆனால் அப்பாவுக்கு அந்த சான்சே இல்லம்மா. அவர் ஆயுசுக்கும் இந்தப் பாட்டைப் படிச்சேயாகனும். இல்லேன்னா அவர் பாடு திண்டாட்டமாயிடாது?"

"ஏய்......உதை வாங்கப் போறே நீ........"லலிதா செல்லமாக மிரட்டினாள்.

"பின்ன என்னம்மா? உண்மையைச் சொன்னா பாட்டுன்றியே. ஏம்மா உனக்கு ஞாபகம் இருக்கா? நான் பள்ளியிறுதி படிக்கறப்போ பெற்றோர்களைக் கூட்டிட்டு வரச் சொல்லி என்னோட தலைமை ஆசிரியர் சொல்ல, நீ என்னவோ ஏதோன்னு பதறிப் போய் வந்து நிற்க, எங்க ஹெச் எம் உன்னை ஏற இறங்கப் பார்த்துட்டு நான் ராஜீவோட அம்மாவைத் தானே வரச் சொன்னேன். நீயென்ன அக்கா வந்து நிக்கறேன்னாரே........அந்த சம்பவம் இன்னும் எனக்கு மறக்கலேம்மா. கடைசி வரை அந்த ஹெச் எம் உன்னை என் அம்மான்னே நம்பலேம்மா....."

லலிதாவின் முகம் பெருமையில் சற்றே விகசித்தது.

ராஜீவ் சொல்வது முற்றிலும் உண்மை. லலிதா மட்டுமில்லை அவளுடைய கணவன் சுந்தரம் கூட பெயருக்கேற்றாற் போல் அதிரூப சுந்தர சுந்தரியாய், ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என்று இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னும், கட்டுக் குலையாத மேனியோடு, ஐம்பதைத் தொடும் வயதிலும் இளமை மாறாமல் அப்படியே இருந்தது அந்த ஆண்டவனின் அனுக்கிரகத்தால் என்று தான் சொல்ல வேண்டும்.

சுந்தரம் மருத்துவராய் இருந்ததால், இயல்பாகவே இருந்த ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும், கணவன் மனைவி இருவரிடமும் இருந்த சுத்தம் சுகாதாரம் பேணும் பழக்கவழக்கங்களும், கட்டுப்பாடான வாழ்க்கையுமாக அந்த தம்பதியர் இருபத்தைந்து ஆண்டு மணவிழா காணவேண்டிய இந்தக் காலகட்டத்திலும், இளவயது தம்பதியரின் இளமைக்கு ஒரு

சவாலாகவே தோற்றமளித்தனர்.

ராஜீவ் மட்டுமா அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் என்று எத்தனை பேர் அவளிடம் நேரிடையாகவே கேட்டிருக்கிறார்கள்?

வருஷம் ஏற ஏற எல்லாருக்கும் வயசும் தான் ஏறும்பாங்க. ஆனால் அதென்ன லல்லி உனக்கும் உன் வீட்டுக்கார்ருக்கும் மட்டும் வருஷம் ஏற ஏற வயசு குறைஞ்சுகிட்டே வருது?

லலிதா பதிலே சொல்லாமல் வெறுமனே முறுவலிப்பாள். முகம் மட்டும் அவள் அணிந்திருக்கும் எட்டுக் கல் வைரத் தோடுடன் போட்டி போட்டுக் கொண்டு பிரகாசிக்கும். இப்பொழுதும் மகனின் கூற்று பெருமையளித்தாலும் லலிதா ஒப்புக்காய் விசாரித்தாள்

"இன்னிக்கென்ன ஒரு ஐஸ் பாரையே தூக்கி என் தலையிலே வைக்கறே? என்ன காரியம் ஆகனும் உனக்கு என்கிட்ட? சட்னு சொல்லு......"

ல்லிதாவின் கிண்டலில் ராஜீவ் சிணுங்கினான்.

"என்னம்மா நீ என்னை இன்னும் பச்சைப் புள்ளையாகவே நினைச்சுட்டிருக்கே. பாக்கெட் மணிக்காகக் கூட உன்னிடம் வரவேண்டிய அவசியமில்லை எனக்கு. ஐயா இப்பொ தனியாப் ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சு, ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும் வேலை பார்க்கறேன்றதை

அடிக்கடி நீ மறந்து போயிடறே."

"மறக்கலேடா கண்ணா. நீ என்னதான் தோளுக்கு மேல உசந்துட்டாலும், இந்த அம்மாவுக்கு நீ என்னிக்குமே பிள்ளை தாண்டா."

தாய்மைப் பரிவில் லலிதாவின் பார்வை கனிந்து, மகனின் தலைக் கேசத்தை செல்லமாய் கோதியவள், வரவேற்பறையிலிருந்து வந்த கணவனின் குரலில் சட்டென்று மனைவியாய் மாறி, அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

"சட்டுன்னு தயாராகி சாப்பிட வா. அப்பாவோட நேரந்தவறாமை பற்றி உனக்கும் தெரியும் தானே?"

காலை பலகாரமும், இரவு உணவும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாப்பிட வேண்டுமென்பது அந்த வீட்டின் எழுதாத உடன்படிக்கை. கல்லூரி நாட்களில் இளையவர்கள் இருவரும் சினிமா, நட்பு வட்டாரத்துடன் ஷாப்பிங், என்று என்றாவது அந்த அட்டவணையை தவற விட்டாலும், பெரும் பாலும் கூடுமானவரையில் அந்தத் தவறு நிகழாமல் தவிர்க்கவே பார்ப்பார்கள்.

அதிலும் ராஜீவாவது கொஞ்சம் முன்னே பின்னே இருப்பான். ஆனால் அவன் தங்கை வித்யா வெகு சமர்த்தான வீட்டுப் பறவை. கணிணியிலும் தொலைகாட்சி பார்ப்பதிலும் தன் நேரத்தை செலவிடுவாளே தவிர அநாவசியமாக ஊர் சுற்ற மாட்டாள்.

வாய் சதா எதையாவது அரைத்துக் கொண்டிருக்க, தொலைகாட்சிப் பெட்டியின் முன் தன்னை மறந்து அமர்ந்திருப்பவளைப் பார்த்து ராஜீவ் எரிச்சலில் கத்துவான்.

"அம்மா இவளுக்கு சாப்பிடக் கூட கையில் கொண்டு வந்து கொடுத்து கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டிருக்கே நாளைக்கு இவ கல்யாணமாகிப் போனால் இவ மாமியாரும் உன்னை மாதிரியே தங்க தட்ல வெச்சுத் தாங்குவாளா?"

"ஏன் உனக்கேன் வலிக்குது? அம்மா எனக்குப் பண்ணினால் உனக்கேன் எரியுதுன்றேன்?"

வித்யா வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருவாள். லலிதாவிற்கு அவர்களிருவரையும் சமாதானப்படுத்தவே நேரம் சரியாயிருக்கும்.

"பெண் குழந்தைகள் சுதந்திரமா சந்தோஷமா இருக்கறது இந்த வயசுல தான்டா. அப்புறம் தான் இருக்கவே இருக்கு கல்யாணம் குடும்பம் குழந்தைங்கன்னு வரிசையா சுமைகள் இப்பவாவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே......."

"அப்படிச் சொல்லும்மா. இவன் ஏன் தான் இப்படிப் பெண் பிள்ளை மாதிரி

பொறாமைப்படுகிறானோ தெரியலே?"

மகள் சலித்துக் கொள்ள பெற்றவள் அவளைக் கண்டிப்புடன் பார்ப்பாள்.

"உனக்கெத்தனை தரம் சொல்றது வித்யா? சாண்பிள்ளைன்னாலும் ஆண்பிள்ளைன்னு சொல்வாங்க. அதிலும் வீட்டுக்கு மூத்த பிள்ளை. பெரிய படிப்பு படிக்கற பிள்ளை. அவனைப் போய் ஏகவசனத்தில் பேசாதேன்னு உனக்கு நூறு தரம் சொல்லியாச்சு. ஏன் தான் கேட்கமாட்டேன்றியோ தெரியலே?"

அடுக்களைக்குள் செல்லும் அம்மாவைக் குறும்புடன் பார்த்து விட்டு அண்ணனிடம் திரும்புவாள் வித்யா.

"சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளையாம் அம்மா சொல்றா. ஆஃப்டர்ஆல் ப்ளஸ் டூ படிக்கிற மதுரா கிட்டயே இந்த ஆண்பிள்ளையோட பருப்பு வேகலேன்னு அவளுக்குத் தெரியுமா?"

"ஏய்.......நீ ரொம்ப பேசறே வித்யா......." அடிக்குரலில் அதட்டுவான் ராஜீவ்

"என்னடா அங்கே அண்ணனும் தங்கையும் கிசுகிசுங்கறிங்க?"

"அது ஒண்ணுமில்லேம்மா. அவ பாடத்தில ஏதோ சந்தேகம் கேட்டா. அப்புறமா தெளிவுபடுத்தறேன்னேன்......."

.அம்மாவிடம் சொன்ன அடுத்த நிமிஷம் தங்கையிடம் சீறுவான் அவன்.

"இராட்ச்சசி........அம்மா கிட்ட மாட்டிவிடனும்னு எத்தனை நாளா ஆசை?"

"அப்பா.....என்ன பயம்? அம்மா கிட்டயே தைரியமா மனசிலிருக்கறதைச் சொல்ல முடியலே. நீ எப்ப மது கிட்ட உன் காதலைச் சொல்லி.. எப்ப கல்யாணம் பண்ணி......ஊகூம் எனக்கு சுத்தமா நம்பிக்கையேயில்லை. நீயெல்லாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டத் தான்ணா லாயக்கு."

வித்யாவிடம் வாய் கொடுத்து யாரும் மீண்டதாக சரித்திரமே கிடையாது. ஆனால் அப்படியெல்லாம் அவனிடம் வம்படியாய் மல்லுக்கு நின்றாலும் உள்ளுக்குள் அவன் மீது அலாதியான பாசமும் உண்டு.

மாதந்தோறும் பெற்றோர் தரும் பாக்கெட் மணியை மாசம் முடியுமுன்னரே ராஜீவ் மானாவாரியாய் செலவழித்துவிட்டு, அவளிடம் வந்து கடன் கேட்டு நிற்பான். முதலில் பிகு பண்ணிக் கொண்டாலும் தன் சேமிப்பு மொத்தத்தையுமே கூட அண்ணனுக்கு தாரை வார்க்கும் ப்ரியமான தங்கை தான் வித்யா.

இருவருக்கும் ஓரிரு ஆண்டுகளே இடைவெளி என்பதால் வித்யா அவனை டா போட்டுப் பேசுவதை யாரும் விகல்பமாய் எடுத்துக் கொள்ளவில்லை. முக்கியமாய் ராஜீவ் அவள் தன்னை ஒருமையில் அழைப்பதை மரியாதைக்குறைவாக நினைத்ததேயில்லை.

தங்கையைப் பற்றிய நினைவுடனேயே எழுந்த ராஜீவ், குளித்து, உடைமாற்றிக் கொண்டு சாப்பாட்டறைக்கு வந்த பொழுது, அங்கே அவனுக்காக காத்திருந்த சுந்தரம் காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்

"வித்யா மும்பையிலிருந்து கடிதம் எழுதியிருக்கா ராஜீவ். அவளோட பெரிய நாத்தனார் .பெண்ணோட போட்டோ அனுப்பியிருக்கா. பொண்ணு நல்லா தானிருக்கா. உனக்கும் பிடிச்சிருக்கான்னு பார். எல்லாம் சரியா வந்தால் அப்புறமா ஆக வேண்டியதைப் பார்க்கலாம்."

அப்பா சொன்ன விவரங்களைக் கேட்ட ராஜீவ்வின் முகத்தில் லேசாக விசனம் படர்ந்தது. தட்டிலிருந்த பொங்கலைச் சிறு கரண்டியால் கிளறிக் கொண்டிருந்தவன் மெதுவாய் நிதானமாய் சொன்னான்.

"நான் மதுவைப் பார்த்தேன்........"

பிள்ளையின் அறிவிப்பைக் கேட்டு பெற்றவர்கள் பதட்டத்துடன் நிமிர்ந்தார்கள்.
 

அப்புறம்..... மதுவையும் சம்மதிக்க ஆவலாய் இருக்கோம்..... 💞 💞 💞
 
Top