Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ தான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-17

Advertisement

daisemaran

Well-known member
Member
அத்தியாயம்-17

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் அவர்களை அத்துமீறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான ஒன்றாக மாறி விட்ட இந்த சூழலில், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 78 பேரையும், மீனவர்களுக்கு சொந்தமான 38 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி தற்போது சிறைப்பிடித்து வைத்திருக்கும் குமரி மாவட்ட மீனவர் ராஜேந்திரன் மற்றும் அவருடன் சென்ற நான்கு பேரையும் விடுதலை செய்து அவர்களுடைய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு இந்தியா வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மீனவர்களை விடுதலை செய்யும்படி அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது அனேகமாக இரண்டு நாட்களில் விடுதலை செய்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

கார்த்திக் உறுதியாக சொன்ன மறுநிமிடம் வள்ளி வினோத்தின் முகங்களில் மத்தாப்பு ஜொலித்தது.

"ரொம்ப நன்றிங்க ஐயா!!... அப்போ நாங்க ஊருக்கு போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரட்டுங்களா.. ஏன்னா நாங்க வந்து ரெண்டு மூணு நாள் ஆகுது. எத்தனை நாளைக்குத்தான் உங்களுக்கு கஷ்டத்தை கொடுக்கிறது?? எங்களால உங்களுக்கும் சிரமம் வரக்கூடாது பாருங்க ... அதனால தான் சொல்றேன்."

"அதெல்லாம் உங்களால எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. நீயா எதையாவது நினைச்சுக்கிட்டு பேசாதே வந்ததுதான் வந்தீங்க ரெண்டு நாளில் இருந்து ராஜேந்திரனையும் கூட்டிகிட்டு ஊருக்கு போங்க..." என்று குரலை உயர்த்தி சொன்ன சுந்தரியம்மா தன் மகன் பக்கம் திரும்பி,

"கார்த்திக் இந்த மீனவர்களை இந்தியத் கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையான ஒன்னா மாறி விட்டது." என்றாள்.

"இந்தியத் தரப்பில் அதிக அழுத்தம் தரப்பட்டால் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும், அவர்களுடைய படகுகளை இலங்கை அரசே வைத்துக் கொண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை நிரந்தரமாக பறிப்பதும் தொடர்கதையாகி விட்டதும்மா. இத்தகைய நிகழ்வுகளைக் கண்டித்து அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிடுவதும், பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதுவதும், அக்கடிதம் பிரதமர் அலுவலகக் கோப்பில் உறங்குவதும் வழக்கமான சுழற்சியாகி விட்டதே தவிர மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டு மீனவர்களின் துயரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன." என்று விரக்தியுடன் கூறினான் கார்த்திக்.


"இத்தகைய சூழலில் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்கள் தான் பெரிதும் பாதிக்கப்படுது கார்த்திக்..."

"ஆமாம்மா...தமிழக மீனவர்களை இலங்கை கடற்படைகள் கைது செய்தால் மூன்று மாதங்களுக்கு சிறையில் அடைத்து வைத்திருப்பார்கள்... அதன்பின்னர் விடுதலை செய்து விடுவார்கள்.

இதில் நாம் பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை என்ற மனப் போக்கிலிருந்து மத்திய அரசு மாற வேண்டும். இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது இந்திய இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதை உணர்ந்து, அதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மத்தியஅரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாகவும் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. என்னை பொருத்தவரை அவ்வாறு எல்லை தாண்டுவது தவறில்லை என்றுதான் சொல்வேன்."

" நீ சொல்வது ஒருவிதத்தில் சரிதான். ஆனாலும் சட்டத்துக்கு புறம்பாக நாம் எதையும் சொல்லவோ செய்யவும் முடியாது இல்லையா? அதுமட்டுமல்ல நீ ஒரு போலீஸ் அதிகாரி சட்டத்தைக் காக்கும் இடத்தில் இருக்கிறாய் மனதளவில் கூட இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது"

"ஆமாம்மா நீங்க சொல்றது கரெக்ட் தான்... ஆனாலும்..."

தாயும் மகனும் பேசிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் உள்ளே இருந்த செல்போன் அழைத்தது.

"வினோத் செல்லை கொஞ்சம் எடுத்துட்டு வாப்பா..."

சற்று நேரத்தில் வினோத்திடமிருந்து செல்லை வாங்கியவளின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

முக்கியமான விஷயம் ஏதாவது பேசுவாங்க நாம ஏன் நந்தி மாதிரி நிக்கணும் என்று மகனை கண்ஜாடை கட்டி அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் வள்ளி.

"கார்த்திக்... அபிநயா அம்மா தான் கால் பண்ணியிருக்காங்க பேசிட்டு வரேன்..‌."

சற்று தூரம் சென்று ஐந்து நிமிடம் போனில் பேசிவிட்டு திரும்பி வந்த அம்மாவின் முகத்தில் பழைய கலகலப்பு திரும்பியிருந்தது. நல்ல விஷயமாகத்தான் இருக்கும். ரொம்ப நாளுக்கு அப்புறம் அம்மாவோட முகத்தில் பழைய கலகலப்பு தெரியுது என்று எண்ணியவன் அவங்களா சொல்லட்டுமேன்னு அமைதியா இருந்தான்.


"எல்லாமே நல்ல விஷயந் தாம்பா நாளைக்கு மறுநாள் நாம எல்லாரும் கோயமுத்தூர் போறோம்..." இவனுடைய பொறுமையை சோதிக்கும் வண்ணமாக அவனுடைய தாய் சொல்லவே,

"என்ன விஷயம் சொல்லுங்கம்மா... நீங்க சொல்றது தலையும் புரியல வாலும் புரியல.." என்றான் பொறுமை இழந்தவனாக,

"எல்லாம் உன்னுடைய கல்யாண விஷயமாகத்தான்." என்றாள் மறுபடியும் பீடி கையோடு,

"அம்மா ப்ளீஸ் என்ன சொன்னாங்கன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..."

"அபிநயா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளாம். உடனே வந்து ஒரு ஒப்பு தாம்பூலம் மாத்திக்கலான்னு அவங்க அம்மா சொல்றாங்க. இத விட்டா வேற நல்ல முகூர்த்தம் இல்லையாம். அதனால தான் நாளைக்கு நம்ப ரெண்டு ஃபேமிலி சிம்பிளா ஒப்பு தாம்பூலம் மாத்திடலாம்...

கார்த்திக்கு ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போலிருந்தது.

உடனே அபிநயாவுக்கு கால் பண்ண வேண்டும் என்று தவித்த மனதை அடக்கினான்.

பேசணும் உடனே அபிநயாவிடம் பேசணும் ஆனா அம்மாவுக்கு எதிரில் பேச முடியாது. எதையாவது சாக்குபோக்கு சொல்லிட்டு வீட்டிலிருந்து கிளம்பி எங்கேயாவது அமைதியான ஒரு இடத்திற்கு போய்தான் பேசணும். ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் மனசுக்குள்ளேயே கிடந்து உறுத்திக்கிட்டே இருக்கு அந்த சந்தேகத்தை மட்டும் தீர்த்துக்கனும். யாரையோ தேடி போனீங்களே அவங்களை பார்த்தீங்களா? அப்படி முக்கியமான நபரா அவர்? அப்படின்னா அது யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா!! என்று மனதில் உள்ள அந்த சந்தேகத்தை மட்டும் தெளிவு படுத்திக்கனும்.


ராகவன் சார் சொன்ன மாதிரி அவள புரிஞ்சுக்காம இருந்துடக்கூடாது. அவ மனசுல என்ன இருக்குதுன்னும் யாரை தேடி போனேன்னும் கண்டிப்பா கேட்டு தெளிவுபடுத்திக்கனும். அதுதான் வாழ்க்கையில் இணையபோகிற இண்டு பேருக்குமே நல்லது.

போர்டிகோவில் நின்ற காரை எடுத்துக்கொண்டு மனம் போன போக்கில் ஓட்டிக்கொண்டு வந்தவன் ஒரு வழியாகும் அந்த ரோட்டோர பூங்கா அருகில் வந்து காரை நிறுத்தினான்.

அபிநயாவுக்கு கால் பண்ணலாம் என்ற எண்ணத்தோடு போனை கையில் எடுத்தவன் அப்போதுதான் ரோட்டை க்ராஸ் பண்ணி கொண்டிருந்த ராகவனை பார்த்தான். மிக தொலைவில் அதுவும் இவ்வளவு தூரம் இங்கு வர வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்?

நேற்று கூட அவரிடம் போனில் பேசினேனே!! இந்தப் பக்கம் வருவதாக ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே??

இந்தப்பக்கம் எங்கே போகிறார் என்ற பலவித சந்தேத்தோடு காரிலிருந்து இறங்கினான்.

குரலை உயர்த்தி அவரை அழைக்க முயன்றபோது அதிகப்படியான வாகன இரைச்சலால் உயர்ந்த அவனுடைய குரல் அவனுக்கு மட்டுமே இரைச்சலாய் மாறி அடங்கிப்போனது.

போனை எடுத்து அழைக்கலாம் என்று எண்ணியவன் அந்த எண்ணத்தை உடனே கை விட்டான். அடுத்து அவர் எங்கே போகிறார் என்பதில் கவனத்தை செலுத்தத் தொடங்கினான்.

ரோட்டை கிராஸ் பண்ணியவர் வேகவேகமாக அந்த நவநாகரீக ஹோட்டல் அருகில் சென்றார். சென்றதும் உடனே உள்ளே நுழையாமல் வெளிப்புறமாக யாரையோ தேடினார். பாக்கெட்டில் இருந்து செல்லை எடுத்து பார்த்துவிட்டு திரும்பவும் அதே இடத்தில் வைத்தார் பிறகு சுற்றிலும் ஒருமுறை பார்வையை சுழல விட்டவர், சட்டென்று கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

கார்த்திக் அவர் பார்வையில் படாமல் தன்னை மறைத்துக் கொண்டான். அவர் இயல்பாக இல்லை என்பது மட்டும் இவனுக்கு தெளிவாக தெரிந்தது. அவர் நடந்துகொண்ட விதத்தை வைத்துப் பார்த்தால் அவர் இயல்பாக இல்லை அவரிடம் ஏதோ ஒரு பதற்றம் இருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

நல்லவேளை அந்த நேரம் பார்த்து எட்டு பேர் கொண்ட ஒரு கும்பல் ஹோட்டலுக்குள் நுழையவும் அவர்கள் பின்னால் இவனும் இணைந்து ஓட்டலுக்குள் நுழைந்தான்.

கார்னர் இருக்கையில் முதுகை காட்டியபடி அமர்ந்தவன் தன்னுடைய செல்போனை காதில் வைத்தபடி மெல்ல திரும்பி ராகவனை நோட்டமிட்டான்.

அவர் வேறு யாருக்காகவோ காத்திருப்பது போல் தோன்றியது காரணம் ரிசர்வ் செய்யப்பட்ட அந்த டேபிளில் எதிர் இருக்கை வெறுமையாக இருந்தது.

சற்று நேரத்தில் மெல்லிய காலடி ஓசை கேட்கவே கர்ச்சீப்பால் முகத்தைப் உடைப்பது போல் கழுத்தை திருப்பி பார்த்தான் கார்த்திக். இப்போது ராகவனின் எதிர் இருக்கையில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள் அவள் முகத்திற்கு முக்காடிட்டிருந்தாள். அவள் அமர்ந்தவுடன் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் சற்று நேரம் அமைதி காத்தனர். பின் அந்தப் பெண் மெனு கார்டை எடுத்தாள்.

அது ஒரு நவநாகரீக ஹோட்டல் . அன்னைக்கு சனிக்கிழமை என்பதால ஏ சீ ஹால்ல கூட நிறைய கூட்டம் இருந்தது . டேபிள் ஏற்கனவே ரிசர்வ் பண்ணியிருந்ததால் ராகவனும் அந்தப் பெண்ணும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அந்தப் பெண்தான் ஆடர் குடுக்க ஆரம்பித்தாள் .

" சார் ஆர்டர் எடுத்துக்கங்க . முதல்ல ஸ்டார்டர் குடுத்துடுங்க . இரண்டு நான்வெஜ் சூப் , 2 வெஜ் சூப் , ஒரு முழு தந்தூரி , 1 மட்டன் பக்கெட் பிரியாணி , அப்பறம் . . . ' '


“ போதும் போதும் லிஸ்ட் பெருசா போய்கிட்டிருக்கு ” னு ராகவன் சொல்ல அந்தப் பெண் அமர்ந்த குரலில் சிரித்தாள்.

இந்த ராகவனுக்கு இப்படி ஒரு தொடர்பா?? அந்தப் பொண்ணோட வயசைப் பார்க்கும்போது இவருடைய பொண்ணு வயசுதான் இருக்கும். அப்படி இருக்கும்போது இந்த வயசில் எப்படி இதெல்லாம்.??
முகத்துக்கு நேராக கேட்டுவிட எண்ணிய மனதை அடக்கினான்.

பொறுமை பொறுமை என்று மனதுக்குள் உரு போட்டான். இந்த விஷயத்தில் வீரத்தை விட விவேகம்தான் வேண்டும் என்று எண்ணினான்.

குடிப்பதற்கு சூடான மட்டன் சூப் கொரிப்பதற்கு சிக்கன் லாலிபாப்பையும் ஆர்டர் பண்ணிவிட்டு சாப்பிடுகிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு அவர்களை கவனிக்கத்தொடங்கினான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரம் இருவரும் எதையோ பேசி சிரித்தபடி சாப்பிட்டு முடித்தார்கள் பிறகு பில்லை செட்டில் பண்ணிவிட்டு இருவரும் இணைந்து ஹோட்டலுக்கு வெளியில் சென்றார்கள்.

இவனும் அவசரம் அவசரமாக எழுந்து பில்லுக்கு உரிய தொகையை கொடுத்து விட்டு வெளியில் வந்தான்.

வெளியில் நின்றிருந்த அந்த வெண்ணிற ஷிப்ட்டில் ராகவனை ஏற்றிக்கொண்டு ஹோட்டலை விட்டு வெளியில் வந்தவள் அடுத்த நிமிடம் காரின் வேகத்தை அதிகப்படுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் யூடேன் போட்டு எதிர் திசையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றாள்.

அவன் செய்வதறியாது அப்படியே நின்றான் ஏனென்றால் அவர் செல்லும் காரை துரத்திக்கொண்டு போய் ராகவனைப் பிடிப்பதில் அவனுக்கு விருப்பமில்லை காரணம் இந்த விஷயத்தை பொறுத்தமட்டிலும் யாரந்த பெண் என்று கேட்டாலே விஷயத்தை சொல்லி விடுவார். துரத்திப் போய் பிடித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.


ராகவனை விசாரித்தாலே எல்லாம் தெரிந்துவிடப்போகிறது. என்று கார்த்திக்கின் வாய்தான் முணுமுணுத்ததே தவிர மனம் வேறு ஒன்றை பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தது.
 
ஹா ஹா ஹா
ராகவன் கூட உட்கார்ந்து சாப்பிட்டது யாருன்னு தெரிஞ்சுக்க கார்த்திக்குக்கு ஆர்வமும் இருக்கு பொறுமையும் இருக்கு
அவள் அபிநயாதானே
அப்போ அபி ஏன் முகத்தை முக்காடு போட்டு மூடிக் கொண்டு வரணும்?
நாளைக்கு ஒப்புத் தாம்பூலம் மாற்றும் முன்னாடி அபிநயாவிடம் பேசி விடு, கார்த்திக்
 
Last edited:
ஹா ஹா ஹா
ராகவன் கூட உட்கார்ந்து சாப்பிட்டது யாருன்னு தெரிஞ்சுக்க கார்த்திக்குக்கு ஆர்வமும் இருக்கு பொறுமையும் இருக்கு
அவள் அபிநயாதானே
அப்போ அபி ஏன் முகத்தை முக்காடு போட்டு மூடிக் கொண்டு வரணும்?
நாளைக்கு ஒப்புத் தாம்பூலம் மாற்றும் முன்னாடி அபிநயாவிடம் பேசி விடு, கார்த்திக்
ம்கூம்...நல்ல வேளை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
Top