Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன்-அத்தியாயம் 24

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 24
அந்த அதிகாலைப் பொழுதில் சூரியன் தன் செங்கதிர்கரங்களை நீட்டி சோம்பல் முறிப்பது போல் லேசாக மலைகளின் பின்னே இருந்து எட்டிப்பார்த்து , குன்னூரின் அடர்ந்த பனிமூட்ட திரளை கொஞ்சமாக சூடுபண்ணிக்கொண்டிருந்தது..

அந்த மலையின் அடிவாரத்தில் இன்ஃபோடெக்கின் கேம்ப் வாசிகள் உறக்கம் நீங்காத கண்களை தேய்த்துக்கொண்டு ட்ராக் பாண்ட் மற்றும் டீ ஷர்ட் சகிதம் குழுமி இருந்தனர் .
அருண் அபியின் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான் ,முதல் நாள் இரவில் நடந்த காட்சிகள் அனைத்தும் ஒரு வெள்ளித்திரை படம் போல மனதில் விரிய ,உள்ளம் காற்றில் பறக்க ,உற்சாகம் கரைபுரண்டு ஓடியது ,பைத்தியம் போல் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான் .

அபிக்கு திரும்பி பார்க்காமலேயே அருண் அவளைப் பார்ப்பது தெரிந்தது.. இருப்பினும் மறந்தும் அவனைப் பார்க்ககூடாது என்று சபதம் எடுத்தவள் போல் அவனைக் கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

அருண் திரும்ப திரும்ப மனதில் உருப்போட்டுக்கொண்டிருந்தான்
“கம் ஆன் ..திரும்பி பாரு ..திரும்பி பாரு…”

அதற்கு மேல் தாங்க மாட்டாதவள் போல் அபி ஒருவழியாக அவன் புறம் பார்த்தாள்.
அவன் பார்வையில் சட்டென்று முகம் சிவந்து கன்னங்கள் சூடாவதை உணர்ந்து உடனே முகத்தை தாழ்த்திக்கொண்டாள்..அருணின் புன்னகை சிரிப்பாக மலர்ந்தது..
மீண்டும் அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தபோது அவள் கண்களில் தெரிந்த பதற்றமா, கவலையா ஏதோ ஒன்று அவனைத்தாக்கியது..

அவள் ஏன் பதற்றமாகிறாள்..? ஒருவேளை நேற்றைய நிகழ்விற்காக வருந்துகிறாளா?அந்த எண்ணமே அவனை குத்திக்கிழித்தது..

இல்லை,அபியின் கவலைக்கு நிச்சயமாக அது காரணமில்லை, அவள் கண்களில் அவன் கண்டது அவளின் தூய்மையான காதலை ,இது வேறு ஏதோ விஷயம் ஒருவேளை அந்த ஃபோன் காலாக இருக்குமோ?அந்த நேரதுல அவளுக்கு யாரு கால் பண்ணி இருப்பா ?என்று குழம்பினான் .

அதற்குள் அன்றைய பயிற்சியைப் பற்றி பயிற்சியாளர் விளக்கத்தொடங்கவே அதில் கவனம் செலுத்தினான் அருண்..

“இப்போ நீங்க எல்லாரையும் நாலு பேர் கொண்ட டீமா பிரிய போறீங்க ,ஒவ்வொரு டீமுக்கும் ஒவ்வொரு கலர் ஃப்ளாக் கொடுப்போம் …நீங்க இந்த மலைமேல ஏறி அங்க உச்சியில நாங்க நட்டு வச்சிருக்கற, அதே கலர் ஃப்ளாக எடுத்துகிட்டு கீழ இறங்கிவரணும்,எந்த டீம் ஃபர்ஸ்ட் வரீங்களோ அவங்க தான் வின்னர்ஸ் .இதுல யாரும் ச்சீட்டிங் பண்ணாம இருக்க ,மேல போனதும் உங்க டீம்மேட்ஸ் எல்லாரும் ஒன்னா ஒரு செல்ஃபி எடுத்து எனக்கு செண்ட் பண்ணனும் ..பார்க்கலாம் எந்த டீம் வின் பண்றாங்கன்னு…” என்றுவிட்டு போட்டித்தொடங்குவதன் அறிவிப்பாக விசில் ஊதினார்..

வழக்கம் போல் நம் நால்வர் அணி ஒன்றாக சேர்ந்து மலையேற தொடங்கினர் ..
டேய் மச்சான் ,விடிய காலைல எழுப்பிவிட்டு இப்படி மலையற வைக்கறானே இந்த ட்ரைனர் போன ஜென்மத்துல ஹிட்லரா இருந்திருப்பான் போல ..”என்று புலம்பினான் விக்கி.

“பேசாம நட விக்கி ,பேசினா மூச்சு வாங்கும் ..அப்புறம் சீக்கிரமா ஏறமுடியாது, எல்லாரும் கேட்டுக்கோங்க ,என்னவானாலும் சரி ,இந்த போட்டில நாம தான் வின் பண்றோம்..”என்றாள் பூர்ணா தீர்மானமாக ,அவள்தான் அந்த நால்வர் அணியின் தலைவியும் கூட

“இதுவேறையா ?அந்த ஆளு விட்டாலும் இவ விடமாட்டா போலையே …”என்று முணுமுணுத்தான் விக்கி..

“அங்க என்ன சத்தம் ?”என்று பூர்ணா கேட்க

“ஓன்னுமில்லை .. நம்ம டீம் தான் ஜெயிப்போம்ன்னு சொன்னேன்…ஜெயம் நமதே..சத்யமேவ ஜெயதே..”என்று கையை உயர்த்தி விக்கி உணர்ச்சி பொங்க கூவ அங்கே சிரிப்பொலி பரவியது..

“என்னடா உளர்ற..?என்று பூர்ணா தலையில் அடித்துக்கொண்டாள்.

அது சற்று பெரிய மலைதான் ,மலையேறி பழக்கமில்லாதவர்களுக்கு கரடுமுரடான பாதையில் ஏறுவது சிரமமாகவே இருந்தது ..சிறிது நேரம் ஏறியபின்னர் ,ஓர் இடத்தில் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர் .
அபி மிகவும் களைத்து தெரிந்தாள்,அவள் மற்றவர்களைவிட்டு பின்னடைவதைக் கண்ட அருண் ,பூர்ணாவையும் ,விக்கியையும் முன்னே போக சொல்லிவிட்டு தன் வேகத்தை குறைத்துக்கொண்டு அவளுடன் சேர்ந்து நடந்தான் ..

“என்ன ஆச்சு அபி ?ரொம்ப டயர்டா இருந்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டு போகலாம் ..” என்றான்

“அதெல்லாம் ஒன்னும் இல்லை போலாம் “என்றுவிட்டு வேகமாக நடக்க முயன்று மூச்சு வாங்கினாள்.

அருண் அவள் கையைப் பிடித்து நிறுத்தி
“உனக்கு என்ன ப்ராப்ளம் அபி …?எதுவா இருந்தாலும் என் கிட்ட ஷேர் பண்ணலாம் தெரியுமில்லையா..?”என்றான் மென்மையாக …ஒரு கணம் அலைபாய்ந்த அவள் கருவிழிகள் மறுகணமே கடினமுற்றது..

“அதான் நான் ஒன்னும் இல்லைன்னு சொல்றேன் இல்லை ? அப்புறம் ஏன் சும்மா தொல்லை பண்ற?” என்றாள் எரிச்சலாக

அவளது பாவனையில் சுருக்கென்று கோபம் ஏறியபோதும் அவள் வேண்டுமென்றே அவனை வாயடைக்க செய்யவே அந்த தொனியில் பேசுகிறாள்..என்பதும் அவனுக்கு புரியாமல் இல்லை ..

இந்த முறை அவளைவிடக்கூடாது என்று முடிவெடுத்து ,மீண்டும் மீண்டும் அவளை தோண்டித்துருவினான் .அப்போதும் அவள் “ஒன்னுமில்லை “என்ற பல்லவியையே பாடவும் ,கடுப்பான அருண்

“திரும்ப வேதாளம் முருங்கைமரம் ஏறிடுச்சி “என்று அவளுக்கு கேட்கட்டுமென்றே சத்தமாக முணுமுணுத்தான் ..

“என்னை பார்த்தால் வேதாளம் மாதிரி இருக்கா? நான் என்ன அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன் ?”என்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டாள்..

“அசிங்கமாவா ?ச்ச..ச்ச..உன்னைப்போய் அப்படி சொல்வேனா..?நீ அழகான வேதாளம் ..போதுமா ?”என்றுவிட்டு அவள் முகம் போன போக்கை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிகொண்டான் ..

அவனை முறைத்துபார்ப்பதில் மும்முரமாக இருந்தவள் பாதையில் கவனமில்லாமல் ஏதோ கல் தடுக்கி கீழே விழப்போனாள். அருண் நொடியில் அவளை தாங்கிபிடித்தான் ,ஆனால் அவள் அவனது கையை தட்டிவிட்டுவிட்டு மடமடவென்று மேலே ஏறத்தொடங்கினாள்..

ஏதோ ஒரு வேகம் உந்தித்தள்ள கொஞ்சநேரம் மடமடவென்று ஏறியவள், திடீரென்று மூசெடுக்க முடியாமல் திணறிப்போனாள்…அபி அன்று காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாமல் வெறும்வயிராக இருந்தாள்..அன்றுமட்டுமல்ல சிலநாட்களாகவே எப்போதும் மனதை அழுத்தும் தீராத வலியால் அவள் சரியாக ஊண் உறக்கமின்றி தவித்திருந்தாள் ,,அது போதாதென்று அருணைக்காணாமல் நேற்று அனுபவித்த வேதனை வேறு சேர்ந்துகொள்ள அவள் உடல் மிகவும் பலவீனப்பட்டுப்போயிருந்தது…

வாயை திறந்து மூச்சை உள்ளிழுக்க முயன்றாள் ,ஆனால் சுவாசப்பாதையே அடைபட்டது போல் காற்று உள்புக மறுத்து தொண்டைக்குழியிலேயே அப்படியே நின்று போனது ..
கால்கள் தடுமாற கண்கள் இருட்டிகொண்டு வர அப்படியே சரிந்து விழுந்தாள்,அவள் தரையை வேகமாக இடித்துக்கொள்ளும் முன் பின்னாலேயே வந்த அருண் அவசரமாக அவளைத் தன் கைகளில் பிடித்தான் ..

அவளை தன் மடியில் படுக்க வைத்து ,”அபி அபி என்ன ஆச்சு ?”என்று பதற்றமாக கேட்டான் ..

ஆபியால் பேசமுடியவில்லை ,வாயை திறந்து திறந்து மூடினாள்..அவள் மூச்சுவிட சிரமப்படுவதை பார்த்து , செய்வதறியாது திகைத்துபோனான் , மற்றவர்கள் அனைவரும் எப்போதோ அவர்களைக் கடந்து மேலே சென்றிருந்தனர் ,அவர்கள் திரும்பி வரும் வரை காத்திருக்கமுடியாது என்று உணர்ந்தவன் வேகமாக யோசித்தான் ..
கேம்பின் தொடக்கதில் அவசர உதவிக்கு அழைப்பதற்காக ஒரு டாக்டரின் எண்ணை கொடுத்திருந்தனர்,சட்டென்று மொபைலை எடுத்து அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டான் .

மறுமுனையில் “ஹலோ..” என்ற சத்தம் கேட்டதும்

“டாக்டர் எமர்ஜென்ஸி ப்ளீஸ் காப்பாதுங்க..” என்றான் அவசரமாக

ஹலோ மொதல்ல யாரு பேசறதுன்னு சொல்லுங்க “என்றான் அவர்

“டாக்டர் ,என் பேர் அருண்குமார் ,இன்ஃபோ டெக்ல இருந்து கேம்ப் வந்திருக்கோம் ,இங்க மலையேறும்போது என்னொட கொலீக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மூச்சுவிட ரொம்ப கஷ்ட்டபடுறாங்க ,ஷீ ஈஸ் டையிங் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க “என்று முடிக்கும்போது அவன் குரல் உடைந்து தளுதளுத்தது ..

“சரி இப்போ அவங்க கண்டிஷன் என்னன்னு சொல்லுங்க ..”

அபியின் நிலையைப் பார்த்து தொண்டையில் அடைத்ததை சிரமதுடன் விழுங்கிக்கொண்டு பேசினான் ..

“மூச்சுத்திணறல் இருக்கு ,கண்ணு மேல போயிருக்கு ,முகமெல்லாம் வேர்த்திருக்கு டாக்டர்..”

மே பி அவங்களுக்கு ஹைப்பர் வென்டிலேஷன் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கறேன் ..நார்மலா கொஞ்சம் உயரம் அதிகமா போகப்போக ஆக்ஸிஜன் குறைவா இருக்கும் ,ஹெல்த் ப்ராப்ளம்ஸ் இருக்கவங்களுக்கு இது பிரச்சனைய இழுத்துவிட்டுடும்…அவங்களுக்கு வீசிங் ..ஆஸ்துமா மாதிரி ஏதாவது ப்ராப்ளம் இருக்கா ?

“நோ ஐடியா டாக்டர்..

“வேற யாராவது கூட இருகாங்களா ?”

“இல்லை டாக்டர் நான் மட்டும் தான் இருக்கேன் ..என்ன பண்ணனும்ன்னு சீக்கிரம் சொல்லுங்க ,ஷீ ஈஸ் சிங்க்கிங் டாக்டர் ..”
என்று கிட்டத்தட்ட கதறினான்..

“சரி ஒரு நிமிஷம் இருங்க..” என்றவர் மறுமுனையில் யாரிடமோ “காலைல டிஃபனுக்கு இட்லி தக்காளி சட்னி பண்ணிடுமா “என்று மெனு ஆர்டர் செய்துகொண்டிருந்தார் …

அருண் அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் “யோவ் இங்க ஒரு உயிர் போய்ட்டு இருக்கு உனக்கு சாப்பாடு வக்கணையா கேக்குதா ?என்று கோபமாக கத்திவிட்டு
மறுகணமே தன் தவறை உணர்ந்து பதறிப்போனான்..

“ஐயோ சாரி டாக்டர்… டென்ஷன்ல கத்திடேன்..” என்று ஆவசரமாக மன்னிப்புகேட்டான்

“இட் ஈஸ் ஒகே.. எனக்கு புரியுது ,இப்போ பேஷன்ட் எங்க இருக்காங்க ?”

“என்னொட மடியில படுக்க வச்சிருக்கேன்…”

“சரி இப்போ உங்க ஃபோன ஸ்பீக்கர்ல போட்டுட்டு நான் சொல்றதை செய்ங்க
மொதல்ல அவங்களை கீழ படுக்க வைங்க ..”

அருண் அவர் கூறியது போல் செய்தான் …

“அவங்க ச்செஸ்ட சுத்தி டைட்டா ட்ரெஸ் இருந்தா தளர்த்தி விடுங்க” என்றார்
“என்னது ?”என்று அதிர்ந்தான் அருண்.

“ஹலோ மிஸ்டர் ,நீங்க பண்ணப்போறது ஒரு மருத்துவ உதவி அவ்ளோ தான் ,வேற எதுவும் யோசிக்கவேண்டாம் ,சீக்கிரம் பண்ணுங்க அவங்க ப்ரீத் பண்ண கொஞ்சம் ஈஸியா இருக்கும்…” என்றார் டாக்டர்..

அதற்கு மேல் தயங்காமல் அவளது கழுத்துவரை மூடி இருந்த டீ ஷர்ட் ஃஜிப்பை திறந்தான்..உள்ளே அவள் அணிந்திருந்த கருப்பு நிற ஸ்போர்ட்ஸ் உள்ளாடை அவளது பொன்னிறத்தை பளிச்சென்று எடுத்துக்காட்டியது, அதற்கும் கீழே கண்களை ஓட்டினால் தெரியக்கூடிய அவளது மெல்லிய இடுப்பு எதையும் கண்டுகொள்ளும் நிலையில்லை அவன் ..
“என்ன பண்ணிடீங்களா?”என்றார் டாக்டர்.

“யெஸ் டாக்டர் ..”

“சரி இப்போ உங்க கைய வச்சி அழுத்தி அவங்க ஹார்ட்ட பம்ப் பண்ணுங்க ..”

அவன் கையை அவள் மார்பில் வைக்க போனபோது ,அபி அந்த அரைமயக்க நிலையிலும் அவன் கையை பிடித்து தடுத்தாள்…ஒருகணம் சற்று தயங்கினாலும் மறுகணம் அவளது கையை விலக்கிவிட்டு ஒரு வேக பெருமூசெரிந்து தன்னை திடப்படுத்திகொண்டு தன் ஒரு கையின் மேல் மற்றொரு கையை வைத்து ,என் சீ சீ யில் முதலுதவி வகுப்பில் கற்றுகொண்டது போல் அவளது மார்பின் மத்தியில் வேகமாக அழுத்தினான் ..
அப்போதும் அவளது சுவாசம் சீராகாததைக் கண்டு கவலையடந்தான்
“இப்போ பரவாயில்லையா..?” என்ற டாக்டரிடம்

“இல்லை டாக்டர் எந்த இம்ப்ரூவ்மென்டும் இல்லை “என்றான்.

“சரி பயப்படாதீங்க ,இந்த முறை சரி வரலைன்னா ,ஆர்டிஃபிஷியல் ப்ரீத்திங்க் ட்ரை பண்ணுங்க “என்றார்.

“அப்படினா ?”

“உங்க மூச்சுக்காத்த அவங்க வாய் வழியா குடுத்து ப்ரீத் பண்ணவைங்க “
“டாக்டர் அது எப்படி பண்ணனும்னு எனக்கு தெரியாது..”
என்றான்.

“இங்க பாருங்க மிஸ்டர் அருண் ..இப்போ நீங்க மட்டும் தான் இருகீங்க அவங்களுக்கு ஹெல்ப் பண்ண,தெரியுதோ தெரியலையோ நீங்க தான் இதை செஞ்சாகணும் ..வேறவழியில்லை..” என்றார் சிறு கண்டிப்பான குரலில்..

அருண் மனதை திடப்படுத்திக்கொண்டு ,காற்றை நன்றாக உள்ளிழுத்து வாயில் நிரப்பிகொண்டு ,அபியின் உதட்டைப் பிரித்து ,கற்றை முடிந்த அளவிற்கு பலமாக உள்ளே செலுத்தி அவள் சுவாசப்பாதையை நிறைத்தான் ..

அபியின் மென்மையான இதழ்களைத் தொட்டதும் அவனுக்கு உடல் சிலிர்த்தது ,முந்திய நாள் நினைவும் சேர்ந்து வந்தது ,நேற்றும் அவள் இதழின் தீண்டலில் உடல் சிலிர்த்து,ஆனால் இரண்டிற்கும் எவ்வள்வு முரண்? நேற்று சிலிர்த்தது காதலினால் இன்றோ அவளை இழந்துவிடுவோமோ என்ற தவிப்பினால் ..

மூச்சுவிட அரும்பாடு பட்டுகொண்டிருந்தபோதும் அபிக்கு நினைவு தப்பவில்லை அவளைசுற்றி நடப்பவை அனைத்தும் அவளுக்கு தெரிந்தது… அருணின் தவிப்பு அவளை சரி செய்ய அவன் செய்யும் முயற்சிகள் அனைத்தையும் கையாலாகாத்தனதுடன் ஒரு பார்வையாளர்போல் பார்த்துக்கொண்டிருந்தாள்..அருணின் சூடான மூச்சுக்காற்று உள் நுழைந்துஅவளது நுரையீரலை வெப்பமடைய செய்வதை உணரமுடிந்து அவளால்..
ஓரிரு முயற்சிகளிலேயே அபியின் மூச்சுத்திணறல் சரியாகி அவள் சுவாசம் சீரானது ..அருண் போன உயிர் திரும்பி வந்தவன் போல் ,நிம்மதி பெருமூச்செரிந்து அவள் வாய் மீது வாய் வைத்து அப்படியே சிறிது நேரம் இருந்தான் ,அவனுக்கு விலகத்தோன்றவில்லை .அபியின் சுவாசத்தை உணர்ந்தபடி அப்படியே இருந்தான் ...

மறு முனையில் டாக்டரின் பொறுமையிழந்த ”ஹலோ..ஹலோ” அவனை சுயஉணர்வு பெறசெய்தது..

“மிஸ்டர் அருண் அவங்க எப்படி இருகாங்க ?”

“ஷீ ஈஸ் ஃபைன்,ரொம்ப தாங்க்ஸ் டாக்டர் ..”
மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே கன்னத்தில் சுரீலென்ற வலியில் “ஸ்ஸ்..”என்ற வேக மூச்சிழுப்புடன் திரும்பினான் .

அபி அவனிடமிருந்து விலகி வாரி சுருட்டிக்கொண்டு தூரப்போய் ஒரு பாறையின் மீது சாய்ந்து கொண்டு கால்கள் இரண்டையும் கையால் இறுக்கிப்பிடித்துக்கொண்டு முழங்காலின் நடுவே முகம் புதைத்து விம்மிக்கொண்டிருந்தாள்.

அருணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை ,அபி அவனை அறைந்தாளா?கன்னதில் காந்திய வலி மட்டும் இல்லாதிருந்தால் அவனால் நம்பி யிருக்க கூட முடியாது .
இவ்வளவு நேரமும் அவளுக்காக தவியாய் தவித்து,எங்கோ மூழ்கிகொண்டிருந்தவளை மீட்டெடுத்ததற்கான பரிசா இது? முகத்தில் விழுந்த அடியைவிட மனதில் விழுந்த அடி ரணமாய் வலித்தது.

இருப்பினும் சிறுகுழந்தை போல் தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தவள் மீதும் கோபம் கொள்ளமனம் வரவில்லை..

ஏனோ அபியின் இந்த முடிவில்லா அழுகையின் முடிவில் அவள் இவ்வளவு நாள் பூட்டிவைத்த மனக்கதவின் வாசல் திறக்கப்பட போவதாக அவன் உள்ளுணர்வு சொல்லியது..

அவள் அழுது முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தான் ,அழுகையின் வேகம் அடங்கி அது வெறும் விசும்பலாக குறைந்த போது அருண்
மெதுவாக “அபி “என்று அழைத்தான்.
அவள் தயக்கதுடன் அவனை நிமிர்ந்து பார்த்தபோது ,

“ட்ரெஸ்ஸ சரி பண்ணிக்கோ ..”என்றான் எங்கோ பார்த்தபடி ,அவசரமாக வேறுபுறமாக திரும்பி ஃஜிப்பை இழுத்து சரி செய்தாள்,

“தாங்க்ஸ் “என்றாள் கம்மிய குரலில்

“தாங்க்ஸ் தான் நீ மொதல்லையே சொல்லிட்டியே “என்றான் தன் கன்னத்தை தடவியபடி

கழிவிரக்கம் தாக்க தலைகுனிந்தாள் அபி

“நான் வந்து …ஏதோ ஒரு கோபத்துல ,ஆத்திரத்துல என்ன செய்யறோம்ன்னு தெரியாம பண்ணிட்டேன் …எப்படி இருந்தாலும் தப்பு தப்பு தான் ஐ யம் ரியலி சாரி அருண் “என்றாள் மன்றாடும் குரலில்

“அவ்ளோ தானா?”என்றான் அவன் கூர்பார்வையுடன் ..

அபிக்கு புரிந்தது அவன் என்னை சந்தித்த நாள் முதலாக முன்னுக்கு பின் முரணாக நான் நடந்துகொள்ளுவதன் காரணத்தை கேட்கிறான் , அவள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதா .. பகிர்ந்து கொள்ள விரும்பாத அவள் வாழ்கையின் இருண்ட பக்கங்களை பற்றி கேட்கிறான் ..

இவ்வளவிற்கு பின்னும் அவனிடம் மறைக்க ஏதுமில்லை ,இருப்பினும் ஏதோ தொண்டயில் முள் மாட்டியவள் போல் வாய்திறக்க முடியவில்லை அவளால்..

அருணும் அபி இன்றைக்கு சொல்லுவாள் நாளைக்கு சொல்லுவாள் என் மீது நம்பிக்கை வந்ததும் சொல்லுவாள் என்று காத்திருந்து காத்திருந்து ஏமாந்தது தான் மிட்சம் ,அவள் இம்மியும் அசைவதாக தெரியவில்லை.இனி எப்போதும் அவள் சொல்லவேண்டாம்… என்று மனம் வெறுத்தவனாக திரும்பி மேலே நடக்கத்தொடங்கினான் ..

“நாளைக்கு எனக்கு கல்யாணம் ..”
என்ற அபியின் மரத்த குரல் அவனை திடுகிட்டு நிற்கவைத்தது ..

நொடியில் திரும்பி அதிர்ச்சியுடன் அவளை பார்த்தான் அருண்..அபியின் முகம் உணர்ச்சிதுடைத்திருந்தது..
தொடரும்..
 
மிகவும் அருமையான பதிவு,
கலாராணி பாஸ்கர் டியர்
 
Last edited:
Top