Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நலங்கிட வாரும் ராஜா - 8

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 8

“என்னமா மது, ஏன் எப்படியோ இருக்க?? உடம்பு எதுவும் சரியில்லையா?? எழிலுக்கு கூப்பிட்டு வர சொல்லவா..” என்று அக்கறையாய் வேதாச்சலம் விசாரிக்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்து தான் போனாள் மதுஸ்ரீ.

என்ன சொல்வது என்று அவளுக்குமே தெரியவில்லை. எழிலரசனை விரும்பியே மணந்தாள். அவனுக்கும் அப்படியே. ஆனால் திருமணம் முடிந்த பிறகு அவர்களது வாழ்வு ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி இல்லையே. தாமரை இலை நீர்போல் ஒட்டி ஒட்டாமல் தானே இருக்கிறது.

அவளது மனம் தெளிவாய் தான் இருக்கிறது. எழிலரசனுடனான வாழ்வில் அவளுக்கு எவ்வித குழப்பமோ, பிரச்னையோ இல்லை. ஆனால் அவன் சில நேரம் நெருங்கி வருவதும், பல நேரம் எதையோ எண்ணி குழப்பத்தில் விலகி நிற்பதும் ஏனென்று அவளுக்கு புரியவில்லை.

அவனிடம் கேட்டாலோ இறுக்கமாய் முகத்தை மாற்றிக்கொள்வான், அவ்வளவே பத்தி எதுவும் வராது.

அவள் செய்தது தவறு தான். தூக்கில் தொங்க போவது போல் நடித்து வீட்டிலிருப்பவரை கலங்கடித்து இந்த திருமணத்தை செய்துகொண்டது தவறு தான்.

ஆனால் அவளது நிலையையும் எண்ணிப்பார்க்க வேண்டுமே. அவளுக்கு அந்த நேரத்தில் அந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை அவ்வளவே. அவள் ஒன்றும் சாக துணியவில்லை, அந்த நேரத்தில் அனைவரின் வாயை அடைக்கவே அப்படி அவள் செய்தது. ஆனால் அதுவே எழிலுக்கும் அவளுக்கும் பிரச்சனையை கிளப்பும் என்று தெரியாதே.

வேதச்சாலமும் எழிலை கவனித்துக்கொண்டு தான் இருந்தார். சில நேரங்களில் மதுவோடு சிரித்து நல்லபடியாய் பேசுகிறான். ஆனால் சில நேரங்களில் எதையோ எண்ணி கலங்குகிறான், மதுவை பார்க்கும் பார்வை கோவமாய் வேறு இருக்கிறது, ஏக்கமாகவும் இருக்கிறது.

சரி அவர்களுக்குள் இருக்கு சிறு சிறு சண்டைகள் என்று நினைத்தவருக்கு தினமும் இதே காட்சிகள் வீட்டில் இடம் பெறுவது சங்கடமாய் இருந்தது. மதுவின் ஏக்க பார்வைகள் எழிலை தொடர்வதும், எழிலின் குழப்ப பார்வைகள் மதுவை தொடர்வதும்
அவரும் கவனித்துக்கொண்டு தானே இருக்கிறார்.

மது எப்பொழுதும் வேதாச்சலம் வீட்டில் இருக்கும் நேரம் அவரோடு பேசிக்கொண்டே தான் இருப்பாள். எந்த ஒரு சின்ன விஷயம் என்றாலும் அவரையும் பேச்சில் இழுத்துக்கொள்வாள்.

அது எழிலுக்கும் சரி அவருக்கும் சரி மகிழ்ச்சியை தரும் விஷயம்.

ஆனால் இன்றோ அவள் அமைதியே உருவாய் அமர்ந்திருக்க, அவருக்கும் என்னவென்று விசாரிக்காமல் இருக்க முடியவில்லை. அதான் கேட்டுவிட்டார்.

மதுஸ்ரீக்கு முதலில் என்ன சொல்வது என்று தயங்கினாலும், பிறகு எழிலை பற்றி இவரிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வது, என்று தோன்ற, தன் வீட்டினரை சம்மதிக்க வைக்க தான் செய்த காரியமும், அதன்பிறகு எழிலின் மாற்றங்களும் என அனைத்தையும் கூற, சில நொடிகள் அமைதியில் கழிந்தது அங்கே.

வேதாச்சலதிற்கும் இதை கேட்டு சில நொடிகள் முகம் மாறியது. ஒன்றும் கூறாமல் கண்களை மூடி அமைதியாய் இருந்தார்.
ஆனால் இவளுக்கு தான் தவித்தது.

“தாத்தா.. என்னாச்சு தாத்தா உடம்புக்கு ஏதாவது செய்யுதா??”

“ஹ்ம்ம் நீ ஏன் மா அப்படி பண்ண??” என்றவரின் குரலில் அத்தனை வேதனை.

“அது.. அது...தப்பு தான் தாத்தா.. ஆனா அப்போ என்ன செய்றதுன்னு தெரியலை. நான் மட்டும் அப்படி செய்யலைனா இந்நேரம் நான் இங்க நின்னு இப்படி உங்ககிட்ட பேசிகிட்டே இருக்க மாட்டேன்...”

“ஹ்ம்ம் எல்லாம் சரிதான் மா.. ஆனா...” என்று எதுவோ கூற வந்தவர்,

“இதை நீ அவன்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாமே மா..” என்றார் வருத்தம் நிறைந்த குரலில்.

“ஏன் தாத்தா... இதை இதை எப்படி மறைக்க முடியும்...???”

“ஹ்ம்ம்....” என்றவருக்கு எண்ணிலடங்கா நினைவுகள்..

“தா.. தாத்தா.. நான்... அது.. வேற எதுவும் பிரச்சனையா???”

“பிரச்சனைன்னு பார்த்தா பிரச்னை தான் மா.. ஆனா... ஹ்ம்ம் இதை உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும். ஆனா, இதை இப்பவும் உன்கிட்ட சொல்லிதானே மா ஆகணும்..” என்றவர் தொடர்ந்தார்.

“எழில் ஓட அப்பாக்கும், அம்மாக்கும் வயசு வித்தியாசம் ஜாஸ்தி.. ஆரம்பத்துல இருந்தே அடிக்கடி பிரச்சனை வரும்.. ஏன் மகனை எழில் அம்மா தன் கண்ட்ரோல்ல வச்சுக்க செய்ற ஒரே விஷயம் தற்கொலை மிரட்டல் தான். ஒரு சின்ன பிரச்சனைன்னா கூட உடனே கயித்துல தொங்க போவா, இல்லை கைய அறுத்துக்க போவா.. அதெல்லாம் நடிப்புன்னு தெரிஞ்சும் நாங்க பதறுவோம்.

இதையெல்லாம் பார்த்து பார்த்து வளர்ந்த எழிலுக்கு எப்படி இருக்கும்மா..?? சின்ன பையனா இருக்கும் போது பயந்து அழுவான். கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பிறகு அவனுக்கு அவ்வளோ கோவம் வரும்.

சில நேரம் வீட்டுக்கே வர மாட்டான். அவங்கப்பாவும் எவ்வளவோ பொறுமையா தான் போனான். என்னவோ என் மருமகளுக்கு நல்லா இருந்த வாழ்கைய நாசம் பண்ணி பார்க்கணும்னு ஆசை போல. ஏன் மகனும் பொறுமையை விட்டு ஒருநாள் சண்டை போட, பதிலுக்கு எழில் அம்மாவும் நான் சாகத்தான் போறேன்னு வேகமா கதவை சாத்தினா..

நான் எழில் எல்லாருமே பதறி போயி கதவை தட்ட பார்த்தோம், ஆனா யார் போதாத காலமோ, ஏன் மகன் ‘விடுங்கப்பா, கொஞ்ச நேரத்துல அவளே கதவை திறந்து வருவா. எத்தனை வருசமா நம்மளும் பாக்குறோம்.. தினம் தினம் இவ இப்படி பண்றது தானேன்னு..’ சொல்லிட்டு வெளிய போயிட்டான்..

நேரம் ஆக ஆக அவ வெளிய வரவேயில்ல. கதவை ஒடைச்சு பார்த்தோம், நாங்க பார்த்த காட்சி... அன்னிக்கி நிஜமாவே என் மருமக தூக்குல தொங்கிட்டா.. அவ சாவுக்கு தான் தான் காரணம்னு நினைச்ச என் மகனும் அடுத்து தூக்கமாத்திரையை விழுங்கிட்டு படுத்துட்டான்.

இதையெல்லாம் நேர்ல பார்த்த எழிலுக்கு எப்படி இருக்கும்..?? ஊருக்குள ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி பேச ஆரம்பிச்சாங்க.. போற வர இடத்துல எல்லாம் இந்த பேச்சே காதுல விழ நான் எப்படியோ பொறுமையா போயிட்டேன். ஆனா எழில்... அந்த கோவத்துல தான் அவன் இருபது வயசுலயே ராணுவத்துக்கு போனது..

அவனுக்கு கால் இப்படி ஆனதுனால மட்டும் அவனுக்கு பொண்ணு கிடைக்காம போகல,அப்பா அம்மா எப்படி இறந்தாங்கன்னு யாராவது கேட்கும் போது இதை பத்தி சொல்லாமையும் இருக்க முடியல. இந்த விஷயம் ஏற்கனவே உங்க அப்பாக்கும் தெரியும்மா...

அதான் நீ அப்படி பண்ணவும் உடனே சம்மதம் சொல்லிட்டார் போல. ஆனா நீயே சொல்லுமா, இதை கேள்விபட்டதும் எழிலுக்கு எப்படி இருந்திருக்கும்னு. நீ செஞ்சது அவனுக்கு பழசை எல்லாம் நியாபகம் படுத்திடுச்சு போல..” என்று நீளமாய் பேசியவருக்கு அதற்குமேல் பேச முடியவில்லை.

துக்கம் ஒருபுறம், உடல்நிலை ஒருபுறம், பேசவிடாமல் செய்ய, இதையெல்லாம் கேட்டவளுக்கோ கண்ணீர் பெருகியது.

‘நான் தூக்கில் தொங்க போனேன்...’ என்று அவள் சொல்லும் பொழுது அவனுக்கு எப்படியிருந்திருக்கும். அந்த நொடி அவன் முகம் காட்டிய மாற்றத்தை இப்பொழுதும் அவள் மனம் எண்ணியது.

அத்தனை வலி, வேதனை, நீயுமா?? என்ற கேள்வி....

‘என் எழிலின் வேதனைக்கு மருந்தாக வேண்டிய நானே அதை கிளறி விட்டேனே...’ என்று நொந்தது மதுவின் மனம்.

“போதும் தாத்தா.. நீ.. நீங்க.. எதுவும் சொல்ல வேண்டாம்.. சாரி... ரொம்பவே சாரி தாத்தா... நான்.. நிஜமா எனக்கு அப்படியெல்லாம் எந்த எண்ணமும் இல்ல. ஆனா, ம்ம்ச் விடுங்க தாத்தா... நம்ம இதை பத்தி இதுக்குமேல பேசவேண்டாம். ஆனா நான் பண்ணது தப்புதான்.. அதை நானே சரி பண்ணிக்கிறேன்.. நீங்க எங்களை நினைச்சு கவலை படவேண்டாம்.. நீங்க வேணா பாருங்களேன் நிச்சயம் எங்க வாழ்க்கை நல்லா இருக்கும்...” என்றவள் முகத்தை துடைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
வேதாச்சலதிற்கும் மதுவிடம் சொல்லிய பிறகே மனம் சற்று நிம்மதியானது போல் இருந்தது.

‘இனி எதுவென்றாலும் மதுஸ்ரீ பார்த்துக்கொள்வாள்..’ என்ற நம்பிக்கை தோன்ற, எழிலரசனின் வாழ்வில் இனியாவது நிம்மதி வரவேண்டும் என்று இறைவனை வேண்டினார்.

இந்த விஷயம் தெரிந்தது முதல் மதுஸ்ரீ அமைதியாய் தான் இருந்தாள். ஏனோ அவளுக்கு எழிலின் முகம் பார்க்கவே கஷ்டமாய் இருந்தது. தனக்காக ஒவ்வொன்றும் செய்தவனை இப்படி ஒருநொடியில் கலங்கடித்து விட்டோமே என்ற குற்றவுணர்வு அவளை போட்டு வாட்டியது என்னவோ உண்மை தான்.

ஆனாலும் இது அவள் வாழ்வு மட்டுமல்ல, அவள் மதுஸ்ரீ மட்டுமல்லவே,

திருமதி.எழிலரசன் அல்லவா...??

மது அமைதியாய் இருக்கும் ஒவ்வொரு நொடியும் எழிலரசன் மனமல்லவா குழம்பித்தவிக்கும். என்ன செய்வது?? எதை செய்து அவன் மனதில் நானும் அப்படியெல்லாம் செய்துவிட மாட்டேன், என்னை புரிந்துக்கொள் என்று நம்ப வைப்பது என்று யோசித்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

முதலில் அவனை எப்படி நெருங்குவது என்று தெரியவில்லை.

இப்படியான சிந்தனையோடே அவள் இருக்க, எழில் தான் இவளை பார்த்து என்னவோ ஏதோ என்று தவித்து போனான்..

“என்னாச்சு??? நல்லாதானே இருந்தா???” இப்படியே அவனும் சிந்திக்க, முடிவில் யார் தான் முதலில் வாய் திறப்பது என்ற நிலை.
இரவின் தனிமையில் அருகருகே இருவரும் படுத்திருந்தாலும், என்ன பேசிக்கொள்வது என்று புரியவில்லை. ஆனாலும் எழிலுக்கு மதுஸ்ரீ இப்படியிருப்பது பிடிக்கவில்லை.

ஏதாவது பேசுவாள், தான் கோவப்பட்டாலும் எதையாவது கேட்பாள், வாய் மூடாமல் இருக்காது மதுவிற்கு.
கேட்டால், “உங்ககிட்ட என்னவேணா எப்போவேணா பேசுற உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு...” என்று புருவம் உயர்த்தி சற்றே கர்வமாய் அவள் கூறும் பொழுது இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல் தான் இருக்கும் எழிலுக்கு.

ஆனாலும் எதுவோ ஒன்று தடுக்கிறதே.

அன்று மதுஸ்ரீ மட்டும் அப்படி செய்திறாவிட்டால், நிச்சயம் இத்திருமணம் இத்தனை விரைவில் நடந்திருக்காது தான். ஆனாலும் சற்று தாமானாலும் கண்டிப்பாய் ஒரு நாள் நடந்திருக்கும், ஆனால் இப்படியொரு இடைவெளி இருவருக்கும் இருந்திருக்காது.
இந்த எண்ணம் இருவரின் மனதிலுமே ஓட, ஒருவரின் முகத்தை ஒருவர் ஒரே நேரத்தில் பார்த்துக்கொண்டனர்.

இடைவெளி என்னவோ உடலுக்கு தான். மனம் ஒன்றோடு ஒன்று பின்னியல்லவா இருக்கிறது.

என்ன கேட்பது?? என்ன சொல்வது ?? என்ற தயக்கம் விழிகள் சந்தித்துக்கொண்ட பின் இப்பொழுது இல்லை போல..

“என்னங்க.... ” என்று அவளும்,

“மது... ” என்று அவனும் ஒருசேரக் கூற,

அவ்வளவு தான், அடுத்தநொடி மதுஸ்ரீ அவன் மார்பில் முகம் புதைத்து “சாரி... சாரி சாரிங்க..” என்று நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்தாள்.

எழிலரசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இரண்டு நாட்களாய் சற்று அமைதியாய் இருக்கிறாள் என்றே எண்ணியிருந்தவனுக்கு மது இப்படி கண்ணீரோடு மன்னிப்பு கேட்கவும் சங்கடமாய் போனது.

அவனுக்கு அவள் மீதிருந்த கோவம் போய், தயக்கம் தீர்ந்து, “ என்ன டா?? என்ன மது?? என்னாச்சு...” என்று ஆறுதலாய் கேட்க,

“ம்ம்.. எனக்கு எல்லாம் தெரியும்... நீ.. நீங்க.. உங்களுக்கு நானும் அப்படி செஞ்சேன்னு சொல்லும் போது எப்படியிருந்திருக்கும்.. சாரிங்க... ரொம்ப சாரி..” என்றாள்.

அடுத்த நொடி எழிலரசனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. வேதாச்சலம் அல்லாமல் வேறு யார் இதை சொல்லியிருக்க முடியும். கண் முன்னே. நடந்த அனைத்து அனர்த்தங்களும் வந்து போக, உடல் இறுகியது, வேதனை தாளாமல் கண்களை இறுக மூடினான்.

அவன் சிரமப்பட்டு வேதனையை அடக்குவது மதுஸ்ரீக்கு தான் அத்தனை வலித்தது.

“என்னங்க என்னைய இன்னும் ரெண்டு அடி கூட அடிச்சுக்கோங்க.. ஆனா அதுக்காக இப்படி இருக்காதீங்க.. எதுனாலும் என்கிட்டே மனசு விட்டு பேசுங்களேன்..”

“ம்ம்ச் விடு மது....” என்று அவளிடம் இருந்து விலகி படுத்தவனுக்கு, மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

சிறுவயதில் இருந்தே இவ்விசயம் பற்றி அவனிடம் பேசினால் அவனது பதில் மௌனம் தான்.

ஆனால் மதுவிற்கோ அவன் மௌனம் சுத்தமாய் பிடிக்கவில்லை. எத்தனை நாளைக்கு இவன் இப்படி இருந்திட முடியும். இவ்விசயத்தில் இருந்து எழில் தன்னை விடுவித்து வெளியே வந்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் முளைத்தது.

“ம்ம்ச் இப்போ எதுக்கு தள்ளி போறீங்க..??” என்றவள் மேலும் அவனிடம் ஒண்டினாள்.

“என்ன மது????”

“பழசை நினைச்சு இன்னும் எத்தனை நாளைக்கு நீங்க இப்படி இருக்க போறீங்க?? வீனா போறது நம்ம வாழ்க்கை தான் புரியுதா??”

“ம்ம்ம்.....”

“என்ன ம்ம்ம்..?? நானும் பாத்திருக்கேன், நீங்க என்னை ஏக்கமா பாக்குறதும் நான் பார்த்தா திரும்பிக்கிறதும்னு இன்னும் எத்தனை நாளைக்கு கண்ணாமூச்சி ஆட்டம்??”

“ம்ம்ம்ம் ப்ளீஸ் மது.... நான்....”

அவன் வாய் மீது விரல் வைத்து, “நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. இவ இதே போல தான் எல்லா விஷயத்துக்கு செய்வாளோனு நீங்க நினைக்கிறீங்க. அதுனால தானே எங்கிட்ட நெருங்கி பழக உங்களுக்கு தயக்கம்..??” என்று விழிகள் உயர்த்தி அவன் கண்கள் பார்த்து கேட்டவளுக்கு,

“ம்ம் ஆமா...” என்று பதில் கூறினான்.

“ஆனா என்கிட்டே பழகி பார்த்தா தானங்க என்னை பத்தி தெரியும். நம்ம ரெண்டு பேரும் பாத்து ஒரு ரெண்டு மூணு மாசம் இருக்குமா?? அப்படி ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி நம்ம பேசியும் பழகல தான...”

“ஆமா....”

“எதுவுமே ஒருத்தர்கிட்ட பழகி பார்த்தா மட்டும் தான் தெரியும். சும்மா நான் செஞ்ச இந்த ஒரு தப்பை மட்டும் வச்சு நான் இப்படிதான்னு நீங்களா எப்படி முடிவுக்கு வரலாம்...” என்று கேட்கும் போது இவன் என்னை புரிந்துகொள்ளவில்லையே என்ற கோவம் லேசாய் எட்டி பார்த்தது.

ஒரு குழந்தைக்கு எடுத்து சொல்வது போல் சொல்வதும், அவளது அருகாமையும், மென்மையான, தெளிவான பேச்சும் எழில் மனதிற்கு அமைதியை கொடுத்தது என்றால், அவளது இந்த உரிமையான கோவம் சிரிப்பை தான் கொடுத்தது. அவனது இதழ்களில் லேசாய் புன்னகை எட்டி பார்க்க,

“என்ன?? என்ன சிரிப்பு?? நான் பேசுறது எல்லாம் சிரிப்பா இருக்கா???” என்று கேட்டபடி ஒரு செல்ல சண்டைக்கு தயாரானாள் மதுஸ்ரீ.

“ம்ம்ச் மது.. இப்போ என்ன சண்டை வேண்டிக்கிடக்கு..” என்றபடி தன் மீது அவளை சாய்த்தவன்,

“மத்த எல்லா விஷயத்துலையும் நான் தெளிவா தான் மது இருந்தேன். நான் வர வரைக்கும் நீ அங்க கொஞ்சம் சமாளிச்சிருக்கலாம். ஆனா நீ டக்குனு இப்படி செய்வனு யாருமே நினைக்கல. ஏன்னா இதே மாதிரி ஒரு செய்கையாள நான் இழந்தது நிறைய.. அதான் அந்த வேதனை எல்லாம் உன்மேல ஒரு கோவமா மாறிடிச்சு.. ஆனா எனக்குமே உன்னோட இயல்பு புரிய புரிய என் மது அப்படி இல்லன்னு தோணும். ஆனாலும் எதோ ஒரு தயக்கம், குழப்பம்..”

“அதெல்லாம் நீங்களா கற்பனை பண்ணிகிறது.. உங்க கூட வாழ்றதுக்காக தான் அப்படி செஞ்சேனே தவிர வேறெதுக்கும் இல்லை. எனக்கு நீங்க முக்கியம். நம்மளோட இந்த வாழ்க்கை முக்கியம்..”

“எனக்கும் தான் மது.. நீ... நம்ம வாழ்க்கை ரொம்பவே முக்கியம்..”

“இப்போவாது புரியுதா...???”

ஆர்வமாய் ஏக்கமாய், இப்பொழுதாவது என்னை புரிந்தாயா?? என்ற கேள்வியோடு பார்க்கும் தன் மனைவியை ஆசையாய் கட்டிக்கொண்டான்.

“ஹ்ம்ம் நீ இவ்வளோ நாள் பொறுமையா போனது.... தப்புன்னு தெரிஞ்சு மன்னிப்பு கேட்டது.. இப்போ இவ்வளோ தெளிவா பேசுறது... இதெல்லாம் சொல்லுதே என் மது எப்படி பட்டவனு...” என்றவனின் அணைப்பு இறுகியது.

மதுவும் இதற்கு தானே ஆசைபட்டாள். எழிலரசன் தன் இறுக்கத்தில் இருந்து வெளிவரவேண்டும். அவர்களது உறவு மேம்படவேண்டும்.

மேலும் பேச்சு தொடர்ந்தது. அவளது கதை, அவனது கதை என்று இன்று தான் பேசுவதற்கு கடைசி நாள் என்பது போல ஏதேதோ பேசினார் இருவரும் மாற்றி மாற்றி. எத்தனை நேரம் தான் இப்படியே பேசுவது, உறக்கம் என்று ஒன்று இருக்கிறதே.

எழில் மதுவின் முதுகை வருடியபடி பேசிக்கொண்டிருக்க, மதுவோ அவன் கரம் தந்த இதத்தில் கண்ணயர்ந்தாள். எழிலுக்கு சில நேரம் கழித்தே தெரிந்தது தான் மட்டுமே அவளோடு பேசுவது.

“ஹ்ம்ம் தூங்கிட்டாளா????” என்று எண்ணியவன் மெல்ல அவள் நெற்றியில் இதழ் பதித்து தானும் கண்கள் மூடினான்.
குழப்பமென்னும் மெல்லிய திரை விலகி, புரிதலென்னும் வெளிச்சம் இருவரின் நெஞ்சத்திலும் பரவ, அந்த இரவு அவர்களது நெருக்கத்திற்கு இன்னுமொரு மலர் மாலை சூட்டியது.
 
Top