Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேன்மழை தூவுதடி 5

Advertisement

Nice
மழைத்துளி 5

கொடை விழாவின் இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்த வித்யா , அருகில் உறங்கிக் கொண்டிருந்த வருவை எழுப்ப ,

கண்கள் சிவக்க , கன்னங்களில் கண்ணீர் கரையோடு எழுந்தவளைப் பார்த்து ,

"வரு … நீ அழுவியா....." என வியந்துக் கேட்ட வித்யாவைப் பார்த்து முறைத்தவருவிடம் ,

"இல்ல நீ இங்க வந்ததிலருந்து எதுக்குமே வருத்தப்பட்டு பார்க்கலடி , எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துப்பியா… நிஜமா உன் குணத்துக்கு அழுவனு நினைக்கலடி …சும்மா விளையாட்டுக்கு பேசினதுக்கு நைட்லாம் அழுதியாடி … முகமெல்லாம் இப்படி வீங்கிப் போய் இருக்கு …"

" நீயும் கிண்டல் பண்றியா , முகமெல்லாம் வீங்கல.... அவங்க சொன்னது போல பட்டர்பன் போல தான் எப்பவும் இருக்கும் … " என உம்மென்று முகத்தை வைத்துக் கொண்ட வளைப் பார்த்ததும் வித்யாவுக்கு புன்னகை வர ,

"யார் சொன்னது ..... நிஜம் தான் பட்டர்பன் போல உன் கன்னமும் சாஃப்ட் , உன் குணமும் சாஃப்ட் " என அவளைச் சமாதானப்படுத்த , தோழியின் தோளில் சாய்ந்துக் கொண்ட வரு,

" உடம்பு இப்படி குண்டா இருக்கிறதுனால தான எல்லாரும் பட்டர்பன்… மசக்கை அப்படிலாம் சொல்லிக் கிண்டல் பண்றாங்க.." மறுபடியும் அழுகைக்கு தயாரானவளை,

"நீ குண்டாலாம் இல்ல. கொஞ்சம் பூசினாற் போல இருக்க அவ்வளவுதான்.... "

"புரியல...என்னது பூசினாற் போல இருக்கேன் வித்யா ... "

இரு கரங்களையும் தலைக்கு மேல் குவித்து ,
"வரு ப்ளீஸ்டி….இப்படிலாம் அர்த்தம் கேட்டா… நான் பாவம்டி, சும்மா எல்லாரும் சொல்றது போல நானும் சொல்றேன் … "

"ச் சூ" என்று சலித்து முகத்தை மறுபடியும் உம்மென்று வைத்துக் கொண்ட வருவிடம் ,

"என்னடி நீ …சும்மா யாரோ விளையாட்டுக்கு சொன்னத தப்பா எடுக்கலாமா.. கேர் பண்ணாம போய்ட்டே இருக்கிறத விட்டுட்டு … இப்படி அழுதுட்டு இருக்க. நானும் சிரிச்சதுக்கு சாரி கேட்டுக்கிறேன். சரி சரி வா கீழ அம்மா சித்திலாம் நம்மள கோவிலுக்கு கூட்டிட்டுப் போக வெய்ட் பண்றாங்க.. போய் கோலம் போடுவோம்" என்று விட்டு குளியலறையில் புகுந்துக் கொண்டாள்.

"அதானே வித்யா ..யாரோ கிண்டல் பண்ணினா கேர் பண்ணவே மாட்டேனே … ஆனா உங்கண்ணா கிண்டல் பண்ணும் போது கோபம் வந்தால் பரவால்லயே… அழுகை ஏன் வரணும்..." புரியாது குழம்பினாள்.

அனைவரும் கிளம்பி கோவில் அருகிருந்த மைதானத்தில் கோலமிட ஆரம்பித்தனர்.

ராணியும் வந்திருந்தவர் வருவுக்கு உதவுவதில் இருந்தார்.வரு வரைந்த ரங்கோலியைக் கண்டு வியந்த வித்யா ,

"வரு.... எப்படி டீ இவ்வளவு திறமைய உனக்குள்ள வச்சிட்டு இருக்கிற , பாட்டிக்கிட்ட இருந்து அது செய்ய இது செய்யனு ஹேன்ட் ஓர்க் எல்லாம் கத்துக்கிட்டு அசத்துற , களிமண்ண கையில கொடுத்தா நம்ம கோவில் மினியேச்சர் வந்து நிக்கிது , இப்ப இந்த கோலம் … இன்னும் என்ன என்ன திறமைய ஒழிச்சு வச்சுட்டுருக்கனு தெரியலயே ….இதல்லாம் நினைச்சு சந்தோஷப்படுறத விட்டுட்டு , தேவையில்லாம உடம்ப நினைச்சு கவலைப்படுற , புறத்தோற்றத்த வச்சு ஒருத்தர மதிப்பிடுறவங்க தான் முட்டாள் .. சோ அதெல்லாம் நினைக்காத சந்தோஷமா முகத்தை வச்சுக்கோ....."

அதுவரை மனச்சுனக்கத்தோடு இருந்தவள் தோழியின் பேச்சில் மனம் மகிழ்ந்து , அந்த மகிழ்ச்சியோடவே வீடு சென்றாள்.

காலை ஏழு மணி போல் தனது தாத்தா வீட்டிற்கு வந்த வருவை வாசலிலேயே அரவிந்த் எதிர்கொண்டான்.

" அண்ணா " என்று வேகமாக ஓடி வந்து கட்டிக் கொண்டவள் ,

" எப்போ வாரேன்னு சொன்னீங்க … எப்ப வந்துருக்கீங்க.... அப்பா வர இன்னும் ரெண்டு நாளாகுமாம் … "

"அதுதான் நான் முதல்ல வந்துட்டேன்ல .... ….இன்விடேஷன் தர வந்தப் பெரியம்மாக்கூடவே திருவிழாப் பார்க்கணு வந்துட்ட … ஆமா இது என்னம்மா முகமெல்லாம் கலர் பூசி வச்சுருக்க … இப்ப ஹோலிக் கூட இல்லயே....." என அவள் முகத்தில் படிந்திருந்த வண்ணங்களை தன் கைக்குட்டைக் கொண்டு துடைத்துக் கொண்டே அரவிந்த் கேட்க …

அதை வாங்கி தானே முகம் துடைத்துக் கொண்டவள் , " இந்த வித்யா சரியா துடைச்சு விடலயா.... ரங்கோலி போட்டுட்டு வாறேண்ணா .. அப்புறம் வந்துப் பாருங்கண்ணா.... போட்டி வச்சாங்க , காலையிலயே நாங்கள்லாம் போய் போட்டுட்டு வாறோம்..."

தங்கை சொன்ன 'வித்யா' என்றப் பெயரை சத்தம் இல்லாது உச்சரித்துக் கொண்டவன் ,

"அழகா போட்டுருப்பமா … நீ தான் ஜெயிக்கப் போற ….அப்புறம் இந்த ஊர் உனக்கு ரொம்பப் பிடிச்சிட்டுப் போல.... என் பாப்பாவுக்கு இங்க நிறைய ஃபிரண்ட்ஸ் வேற கிடைச்சிட்டாங்க …."

"ம்... ஆமாம்னா … வித்யா , அம்மு , சாரு.. இப்படி நிறைய பேர் நம்ம மாமா பொண்ணுங்க , சித்தப்பா பொண்ணுங்கனு…இங்க ஏன் நாம அடிக்கடி வரதில்லை.... எனக்கு இந்த ஊர் … இந்த ஃபங்ஷன் அப்புறம் நம்ம ரிலேட்டிவ்ஸ் எல்லாரையுமே ரொம்ப பிடிச்சிருக்கு.... அப்புறம் உங்களுக்கு தெரியுமா … தமிழ் நாட்டுல எப்படி படிக்க போறோம்னு நினைச்சேன்.... இப்போ வித்யாவும் நானும் ஒரே காலேஜ்ல சேரலாம்னு முடிவு பண்ணியிருக்கோம். நான் எழுதுன எல்லா என்ட்ரன்ஸ் எக்ஸாமும் அவளும் எழுதியிருக்கா …. சோ எதுல எங்க ரெண்டு பேருக்கும் ஒரே காலேஜ் கிடைக்குமோ அங்கேயே ஜாய்ன் பண்ணப்போறாமே........ " அண்ணன் தந்த சாக்லேட்டை சுவைத்துக் கொண்டே சொன்னவளிடம் ,

தன் கையிலிருந்த மொபைலை எடுத்து அவள் அவனுக்கு அனுப்பியிருந்த ஃபோட்டோக்களைக் காட்டி ஏற்கனவே தங்கை சொல்லிக் கேட்டிருந்தாலும் அவள் தான் வித்யா என்பதை உறுதிப்படுத்த ,

"யார் உன் கூட சேர்ந்து இந்த குரங்கு சேட்டைப் பண்றப் பொண்ணா வித்யா ....." என தங்கையோடு ஆலமர வேர்களைப் பிடித்து தொங்கிக் கொண்டும் , அவளது நீண்ட ஜடைப்பின்னலை வருவிற்கு மீசையாக வைத்தும் விளையாடிய போது எடுத்த போட்டோக்களைக் காட்டியவனிடம் ,

" ஐ… அண்ணா … நீங்க நிஜமாவே பெரிய கோல்ட் மெடலிஸ்ட் தான்.... வித்யாவ கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்களே..... ரொம்ப நல்லவண்ணா.....அன்னைக்கே சொன்னேனே..... இங்க வந்தப்போ எனக்கு வயிறு வலி வந்து ரொம்பக் கஷ்டப்பட்டப்போ.. என்னை ரொம்ப நல்லா கவனிச்சிக்கிட்டானு ..... அத்தை , பெரியம்மா, சங்கீதா அண்ணி எல்லாரும் நல்லா பார்த்துக்கிட்டாலும் வித்யா மட்டும் நீங்களும்.. அப்பாவும் என்னை எப்படிப் பார்த்துக்குவிங்களோ அப்படிப் பார்த்துக்கிட்டா … இப்பவும் அப்படித் தாண்ணா … அதனாலயே இங்க தூங்காம அவக்கூடத்தான் போய்ப்படுப்பேன்…. "

மனதினுள் , "சாரி பாப்பா … முதல் தடவை அனுப்பின ஃபோட்டோல மட்டும் தான் உன்னைப் பார்த்தேன் அதற்கப்புறம் வந்த ஃபோட்டோஸ் எல்லாத்திலும் அவள மட்டும்தானேப் பார்த்தேன். அதும் நீ டெய்லி அவளைப் பத்திப் பேசி பேசி என் நெஞ்சு முழுசும் அவதான் நிறைஞ்சுருக்கா…என்னவோ பாப்பா … இந்தப் பொண்ண பார்த்ததிலிருந்து வேற எந்தப் பொண்ணையும் பார்க்கத் தோணல… இவளப் பார்க்கிறதுக்காகவே அப்பாவக் கூடப் போய் பார்க்காம லண்டன்லருந்து நேரா இங்க தான் வாறேன்.... " மனதில் நினைத்து முறுவலோடு மொபைலையேப் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ,

" ண்ணா … அவ எனக்கு ஒரு தமிழ் வேர்டுக்கு அர்த்தம் சொல்லல.... சோ உன்கிட்ட நோட்ஸ் வாங்கித் தர மாட்டேன்னு சொல்லிட்டேன் … அதுக்கு அவ நானே நேர்ல கேட்டுக்குவேன்னு சொல்லிட்டா.... அவ வந்துக் கேட்டா உடனே தாறேன்னு சொல்லிடாதீங்க ஓகே … " என்று விட்டுச் சிட்டாய் ஓடியத் தங்கையைப் பார்த்த அரவிந்திற்கோ … அவள் சொல்லிவிட்டுச் சென்ற செய்தியில் இதயத்தில் இடி இடித்து காதல் மழை பொழிய துவங்கியது ....

சிறிது நேரத்தில் அரவிந்தறைக்கு வந்தவள்,

" ண்ணா … இனி இப்படி நிறையச் சாக்லேட்ஸ் எனக்கு வேண்டாம் … நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிட்டு என் வெய்ட் ஏறிட்டேப் போகுது தெரியுமா … " என்று சோகம் போல முகத்தை வைத்துக் கொண்டாள்.

இதுவரை தன்னிடம் இப்படிப் பேசியிராத தங்கையிடம் ,

"என்னாச்சு பாப்பா … நீ குண்டாலாம் இல்லமா… அழகா பார்பி டால் போல இருக்க...."

"ச்சு சும்மா சொல்லாதீங்கண்ணா … பார்பி டால் கூட ஒல்லியா தான் இருக்கு.."

தங்கையை கட்டிலில் அமர்த்தி அருகில் அமர்ந்து தோளில் சாய்த்துக் கொண்டவன் ,

"யார் உன்னை என்ன சொன்னாங்க … உடம்பு வெய்ட் போடுறது சகஜம் தான் … அதற்கான எக்ஸர்சைஸ்லாம் பண்ணினா தானா குறைஞ்சிடும் , இனி காலேஜ் போகணும் படிக்கணும் அதை மட்டுமே யோசி மா… அண்ணனுக்கு தெரியாதா உனக்கு எது நல்லது எது கெட்டதுனு… இந்த சாக்லேட்ஸ் எப்பவோ சாப்பிடுறது தான, ஒன்னும் செய்யாது."

"ஓ .. அப்ப நான் தினமும் எக்சர்சைஸ் பன்றேன்.. அண்ணா இங்கப் பாருங்க இதெல்லாம் இங்க கனிப் பாட்டி சொல்லி தந்தாங்க.. நானே செய்தேன்" என்றவள் அந்த அறையில் பனை ஓலையில் செய்த பெட்டிகள் , பூக்கள் , யானை , ஒட்டகம் போன்ற உருவங்கள் என கைவினைப் பொருட்களைக் காட்டவும் , மலர்ந்த புன்னகையோடு ,

"என் பாப்பாவுக்கு இதெல்லாம் செய்றது பெரிய விஷயமா … நீ தான் எல்லாத்துலயும் எக்ஸ்பர்ட் ஆச்சே.... ரொம்ப அழகா இருக்குமா .... இப்படி இவ்வளவு திறமைகள் உனக்குள்ள இருக்கிறத நினைச்சு சந்தோஷப்படனும் மா … " என்றவன் எழுந்து அவற்றை கைப்பேசியில் படம் எடுத்துக் கொண்டான்.

அண்ணனை ஆச்சரியத்தோடுப் பார்த்தவள் , " ண்ணா எப்படி ண்ணா… வித்யாவும் இதேதான் சொன்னா " என்றவள் வித்யா சொன்னதை சொல்லி விட்டுச் செல்ல ,

அரவிந்துக்கோ மனமெல்லாம் பூரித்து , " உன்னை எப்போ பார்ப்போம்னு இருக்கு" என விழிகள் மூடி வித்யாவிடம் கேட்டுக் கொண்டான்.

ராணியின் கையில் சுடச் சுடத் தோசைகளை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே ,

"அரவிந்தா … இன்னைக்கு நைட் நம்ம ஊர் கலை நிகழ்ச்சில நம்ம செட் பசங்களும் பொண்ணுங்களும் மட்டும் கலந்துக்கிற நிகழ்ச்சிடா.. அதுவும் தாத்தா நம்ம வீட்டுப் பிள்ளைங்க எல்லாம் கட்டாயம் கலந்துக்கனும்னு சொல்லிட்டார். சோ சிலம்பு பிராக்டிஸ் பண்ணப் போறோம்… நீயும் வறியா … நீயும் சின்ன வயசுல சிலம்பு சுத்துன நியாபகம் "

" திலீபா … சின்ன வயசுல பழகினேன் அப்புறம் அப்படியே விட்டுட்டேன்... படிப்புல கவனம் போனதுல மற்றதெல்லாம் அப்படியே பாதில …." அரவிந்த் பேசிக் கொண்டிருக்கும் போதே , வரு வித்யாவுடனும் மேலும் சிலப் பெண்களோடும் உள்ளே வந்தவள் ,

" பெரியம்மா .. அங்க தாத்தா நல்லாத் தூங்குறாங்க , நாங்க மேல நான் இருக்கிற ரூம்ல போய் , பிராக்டிஸ் பண்றோம்."

"கத்துக்கிட்டிங்களா அதுக்குள்ள.... " என்ற ராணியிடம் ,

"பாட்டி சொல்லித் தந்தாங்க பெரியம்மா....வித்யாவுக்கும் சாருவுக்கு மே நான் ட்ரைனிங் தாறேன்னாப் பாருங்க ….நாங்களாம் அசத்திருவோம்ல…"

அதுவரை சாப்பிட்டுக் கொண்டே திலீபனிடம் பேசிக் கொண்டிருந்த அரவிந்த் 'வித்யா' என்றப் பெயரில் சட்டென்றுத் திரும்பிப் பார்க்க , அவர்கள் அனைவரும் மாடியேறிக் கொண்டிருந்தனர். ஆனாலும் முகம் தெரியாவிட்டாலும் நீண்டப் பின்னல் ஆட தங்கையிடம் பேசிக் கொண்டே மாடியேறியவளைப் பார்க்கும் ஆவல் தோன்ற , சாப்பிட்டு எழப்போனவனை ,

"நான் இதுக்கப்புறம் யு.எஸ் கிளம்பிடுவேன் , திரும்ப இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது.. அப்புறம் வேலை குடும்பம்னு போயிரும்.... முடிஞ்சா நீயும் ஏதாவது செய்… , பார் பொண்ணுங்க எல்லாம் ஏதாவது செய்ய ரெடியாகிட்டு இருக்காங்க .. நாமளும் ஏதாவது செய்யணும்டா.... சரி வா நாம கிளம்பலாம் " என்று வெளியே வாசல் சென்ற திலீபனிடம் ,

"ஓ… பார்க்கிறேன்... நீ கிளம்பு … எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு , இதோ வந்துடுறேன்" என்றவன் மொபைலில் எண்களை அழுத்திக் கொண்டே மாடியேற ஆரம்பித்தான்.

மொபைலில் பேசிக் கொண்டே தங்கை இருந்த, பாதி திறந்திருந்த அறைக்கதவைத் தட்ட , முதலில் உள்ளேக் கேட்ட பாட்டுச்சத்தத்தில் கதவு தட்டியது கேட்கவில்லை எனவும் , வேகமாகத் தட்ட அந்தக் கதவு விரியத் திறந்துக் கொண்டது …

அவன் எதிர்பாராததால் வெளியே நின்றே ,

"சாரி .... சாரி...." என்றவாறே நேராகப் பார்க்க,

சுடிதார் துப்பட்டாவை நடனமாட வசதியாக முன்புறம் கட்டி தங்கைகளுடன் ஒரு கிராமத்துப் பாடலுக்கு கைகளைத் தட்டி ஆடிக்கொண்டிருந்த வித்யா அப்படியே நின்று விட்டாள் , பாடுவதை நிறுத்திய வருவும் ,

" என்ன அண்ணா…" என ,

"பாப்பா அப்பா பேசணும்னாங்க … " என்று ஃபோனை நீட்ட ,வரு அதை வாங்கிக் கொண்டு நகர , வித்யாவைப் பார்த்துக் கொண்டே ,

"இங்க அமுதா …சாரு .. யார் .. அவங்கள பெரியம்மா கூப்பிட்டாங்க … " என்ற அரவிந்திடம் ,

"அப்படியா இதோ போறோம்ணா .. " என அவர்கள் கிளம்ப , தனியாக எப்படி இருப்பது என்ற எண்ணத்தில் , வித்யாவும் துப்பட்டாவை சரியாகப் போட்டுக் கொண்டே ,அவர்கள் பின்னால் செல்ல இருக்க , வாசலருகே வந்தவன் , வாசல் நிலையில் சாய்ந்து குறுக்காக நின்று கொண்டான்.

அவள் இடப் புறம் செல்ல முற்பட இடப்பக்கம் நகர , வலப்புறம் செல்ல முற்பட வலப்புறம் நகர….இருபுறமும் செல்ல முடியாதவாறு வழி அடைக்கப்படவும் , அவனை நிமிர்ந்துப் பார்க்க , குறும்பு பார்வையும் , முகத்தில் அழகிய புன்னகையோடும் கைகளைக் கட்டி கதவு நிலையில் ஒரு புறம் சாய்ந்து நின்றவன் ,

"நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை …
நீருக்குள் பூத்திடும் தாமரை .....
சட்டென்று மாறுது வானிலை …
பெண்ணே உன் மேல் பிழை ...." என்று அவள் காதருகே குனிந்து மெதுவாகச் சொல்லி நிமிர்ந்து ...

'ஆன்' என்று விழித்தவளிடம் கண் சிமிட்ட , இப்போது மிரண்டப்பார்வை பார்த்த வித்யாவிடம் சத்தம் இல்லாது புன்னகையோடு வாயசைக்க ,

பின்னால் வந்த வரு , " அண்ணா நான் பேசிட்டேன்....." என்றவள் , வித்யாவிடம் ,

" எங்க வித்யா எல்லாரும்…." என்றவாறு அறைக்குள் செல்ல ,

தோழியைப் பார்த்தவள் … " கீ.. கீழ …" என வெறும் காற்றாக மட்டும் குரல் வர , மேலும் பேச முடியாது …

"நான் வாறேன்" என்று அவனைச் சுற்றிக் கொண்டு ஓடியவள் படியிறங்கும் முன் சட்டென்று திரும்பிப் பார்க்க , இப்போது வெளிப்புறமாக நிலையில் சாய்ந்திருந்த அரவிந்த் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க , அவள் திரும்பிப் பார்க்கவும் மறுபடியும் ஒரு கண் சிமிட்டலையும் வாயசைப்பையும் தர, ஆடிக் களைத்து வியர்வை வழிய நின்றவளுக்கு இதயம் வேகமாகத் துடிக்க மேலும் வியர்வைப் பெறுக , வேகமாக படியிறங்க ஆரம்பித்தவள் , அவர்கள் வீட்டுக்கு வந்து தான் தன்னைச் சமன் செய்தாள்.

" வித்யா" என்று அழைத்தவாறு திரும்பிய வரு, அவளைக் காணாது…அரவிந்த் அருகே வந்து ,

"எங்கண்ணா … அவளும் கீழப் போய்ட்டாளா....."

"பாப்பா இந்தப் பொண்ணு தான் நோட்ஸ் கேட்டாளா....."

"ஆமாம்ணா ….இன்னைக்கு சாயந்திரம் தான் திருவிழால முக்கியமான நாளாம் .... அதுதான் பிராக்டிஸ் பண்ணிட்டு இருந்தோம். நிறைய புரோக்ராம்ஸ் இருக்கும் … நீங்களும் சீக்கிரமே வந்துருங்க"

"சரி "என்பதாக தலையாட்டியவன் அவனுக்கவனே...

" தெரிஞ்சே தெரியாதது போல காட்டிக்கிறது.... ப்பா " என்று தலையை உலுக்கிச் சிரித்துக் கொண்டவன் திலீபனைத் தேடிச் சென்றான்.

வீட்டிற்கு வந்த வித்யாவிற்கோ கை கால்கள் நடுங்க ஆரம்பித்தாலும் முகத்தில் முறுவல் அரும்பியது. இயல்பிலயே மிகவும் அமைதியான பெண் வித்யா … அரவிந்தின் கண் சிமிட்டலும் , அவனது குரலும் இன்னும் காதுக்குள் ஒலிப்பதுப் போன்ற உணர்வு ,

சுவரைப் பார்த்துக் கொண்டு புன்முறுவலோடு அமர்ந்திருந்தவள் ,

"எங்கண்ணா நல்லாப் பாடுவாங்க சொல்வா ,நிஜம் தான் போல … "

அவன் நடந்துக் கொண்ட விதத்திற்கு அவளுக்கு கோபமும் வரவில்லை… ஏனென்று யோசித்தவளை ,

" வரு வரலயா , அவ மொபைல சார்ஜ் போட்டவ மறந்துட்டுப் போய்ட்டா , அவ கிட்டக் கொடுத்துரு…" என்றவாறு வருவின் கைப்பேசியைத் தந்து விட்டுச் செல்ல ,

அங்கிருந்த சங்கீதாவின் பேச்சு நிகழ்விற்கு அழைத்து வரவும் யோசனையைக் கைவிட்டாள்.

ஆனால் யோசனையின் நாயகன் கையில் இருந்த கைப்பேசி வாயிலாக வந்து நின்றான். "அண்ணா" என்ற ஆங்கில எழுத்துக்கள் ஒளிர தங்கையுடன் அழகான புன்னகையுடன் நின்றவனைப் பார்த்துக் கொண்டிருக்க , நின்று மறுபடியும் ஒலிக்க , எடுத்துக் காதினில் வைத்தவள் ,

"ஹ... ஹலோ" எனத் தடுமாறும் போதே ,

" வித்யா ஏன்டி இவ்வளவு நேரம் … நான் மொபைல அங்க வச்சுட்டு வந்துட்டேன் , அப்பா நிறைய தடவக் கூப்பிட்டுருக்காங்க, நீயும் பாதிப் பிராக்டிஸ்லயேப் போய்ட்ட"

" கும்மியடிக்க பிராக்டிஸ் பண்ற ஒரே ஆள் நீதான்டி, அங்க வா தானா அவங்களோட சேர்ந்து நமக்கும் வந்துரும்….ஃபோன் இங்கயே இருக்கட்டுமா கொடுத்து விடவா…"

"நானே வந்து வாங்கிக்கிறேன். அதுதான் அண்ணன் ஃபோன் இருக்கே .. " என்றவள் வைத்து விட்டாள். மறுபடியும் அழைப்பு வர எடுத்த வித்யாவிடம் , மாலை விழாவுக்கான சில சந்தேகங்களை வரு கேட்க, அதற்கும் பொறுமையாக பதிலளித்த வித்யா , கைப்பேசியை வைத்து விட்டு நகரப் பார்க்க ,

இப்போதும் அவளது கைப்பேசி பாட ஆரம்பிக்க , எடுத்துக் காதில் வைத்தவள்,

"இப்ப உனக்கு என்ன தான் வேணும் … நேர்ல வா உனக்கு இருக்கு ...."

மறுமுனையில் அமைதி , "வரு " என்று வித்யா அழைக்க ,

"நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை

பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை ...."

பாடலைக் கேட்டவள் மெய்மறந்து நிற்க , அவளது மெளனமே அவள் தன்னைக் கண்டுக் கொண்டாள் என்பதை அரவிந்துக்கு உணர்த்திவிட… மென்மையான வசியக் குரலில் ,

"எனக்கு நீ தான் வேணும்… நேர்ல வந்தா எனக்கு என்ன தருவ… "

"நான் … நான்… வி.. வித்…" என்றுத் தடுமாறியவளிடம்,

"நீ வித்யா … செல்வா மாமா பொண்ணு ,என் தங்கச்சிக்கு இந்த ஊர்ல கிடைச்சிருக்கிற அழகான , அன்பான தோழி … உன்னைய பத்தி என்கிட்ட சொல்லாத நாளே இல்லனு சொல்லலாம் ..... அதேப்போல எங்கப் பாப்பா குணத்துக்கு என்னைப் பத்தின அத்தனை டீடெய்லும் உன் காதுக்கு வந்திருக்கும் … அப்படித்தானே.... " என்று புன்சிரிப்புடன் அவன் கேட்க , வித்யாவிற்கும் இங்கு புன்னகைப் பூத்தது. அவனே மேலும் ,

"உனக்கு காதுக்கு மட்டும் தான் வந்துருக்கும்… ஆனா எனக்கு காது வழியா போன உன்னைப் பத்தினப் பேச்சுக்கள் என் இதயத்துல வந்து தங்கிருச்சு...."

"நா… நான் ஃபோனை வைக்கிறேன்.... " என்றவள், ஏசியறையின் குளிரையும் மீறி வியர்க்க ஆரம்பிக்க , கைப்பேசியை மெத்தையில் போட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

திரும்ப இரு முறை அடித்து ஓய்ந்த கைப்பேசியையேப் பார்த்துக் கொண்டிருந்தவள் , மூன்றாம் முறை எடுத்துக் காதில் வைத்து ,

" இப்படிலாம் பேசாதீங்க வருஅண்ணா … இது தப்பில்லயா.... எனக்கு … எனக்கு என்னவோ போல இருக்கு … நான் ஃபோன் வச்சிடட்டுமா … " என அழுவது போல் நடுங்கும் குரலில் பேசவும் ,

ஒரு நொடிக் கண்மூடித் திறந்த அரவிந்த் ,

"சாரி … என் தங்கச்சி வயசுதான் உனக்கும் … உங்கிட்ட இப்படிப் பேசுறது எனக்கும் தப்புனு தெரியுது. அதுவும் முதன் முதலா பார்க்கும் போதே இப்படி நடந்துக்கிறது …. உனக்கு தப்பா தெரிஞ்சா என்னை மன்னிச்சிரு , ஆனா நான் உன்னைய எப்போ ஃபோட்டோலப் பார்த்தேனோ அப்போருந்து நீ என் கூடவே இருக்கிற ஃபீல் … அது தான் உன்னையப் பார்த்ததும் இப்படிலாம் நடந்துக்கிட்டேன்.… "வெகு நேரம் அமைதியாக இருக்கவும் ,

" நீ லைன்ல இருந்தா ஒரு உம் … சொல்லு"

அதுவரை கலக்கத்தோடு அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் அப்படிச் சொன்னதும் உதட்டில் புன்னகை அரும்பி விட ,

"ம்" என்றாள். அவளது , 'ம்' என்பதே அரவிந்தை வானில் பறக்க வைக்க , "அடடா… அரவிந்த் இந்த 'உம் 'சீக்கிரமா 'உம்மா' வா மாத்திடு ...." என்று நினைத்துக் கொண்டே ,

"தேங்க்ஸ் …. எங்க பாப்பாவுக்கு ஒரு பழக்கம் , அவளுக்கு ஒரு விஷயம் பிடிச்சுப் போனா அதை பத்தியே பேசி என்னையும் பிடிக்க வச்சிருவா … அவளுக்கு பிடிக்கலனா அமைதியா இருந்துடுவா …அப்படித்தான் உன்னைய பத்தி சொல்லி சொல்லி என் மனசு முழுதும் நீ நிறைஞ்சுட்ட ….இன்னொரு முக்கியமான காரணம் என்னைப் போல என் தங்கச்சிய பார்த்துக்கிற உன்னைய எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு … நான் பேசினத கேட்டதுக்கு தேங்க்ஸ்.. இனி நானா உனக்கு ஃபோன் பண்ணல …..அதுக்குப் பதிலா …நேர்லப் பேசுவோம் பை ...." என கைப்பேசியை வைத்து விட்டான்.

அவனறியாத ஒன்று தங்கை பிடிக்காததை மட்டுமல்ல பிடித்த ஒன்றையும் யாரிடமும் சொல்லாது நெஞ்சுக்குள் பூட்டி வைப்பாள் என்று .....
தூவும் ......



 
இத்தனை திறமைகள் இருப்பதை நினைத்து சந்தோஷப்படாமல் ,மற்றவர்கள் பேசுவதை நினைத்து வருத்தப்படுறீயே வருபாப்பா,அரவிந்தும்,வித்யாவும் சரியா சொல்லிட்டாங்க???.
அருமையான பதிவு ஷான்வி???.
 
Top