Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 5...

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 5.

வீட்டு வேலை செய்யும் பெண்மணி ராணியைப் பற்றிச் சொன்ன தகவல் சங்கரியைக் கவலையில் ஆழ்த்தியது. இது என்ன புது குண்டு? இதை நான் எப்படிக் கையாளுவேன்? வீட்டில் இருப்பவர்களுக்கு ராணி மிகவும் செல்லம் தான். ஆனால் அவளது இந்த நடத்தையைப் பொறுத்துக்கொள்வார்களா? இப்படியே விட்டு விட்டால் என்ன? அப்படி நான் செய்து, பிறகு யார் மூலமாகவோ வீட்டுக்கு விஷயம் தெரிந்தால் என்ன ஆகும்? எனக்கு முன்பே தெரிந்திருந்தும் கண்டிக்கவில்லையே என்று குற்ற உணர்வு என்னை உறுத்ததா? எனப் பலவாறு யோசித்து குழம்பினாள் சங்கரி.

எதற்கும் மாமியார் காதில் இதைப் போட்டு வைக்கலாம். என்ன இருந்தாலும் தாய். அவளுக்குத் தெரியாதா என்ன செய்வதென்று? என எண்ணி, மதியம் டீ அருந்தும் வேளையில் வீட்டிலும் யாரும் இல்லாத நேரத்தைத் தெர்ந்தெடுத்தாள். ஹாலில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டிருந்தாள் தங்கம்மாள். மெல்ல அவளை அணுகினாள்.

"என்ன சங்கரி? ஏதேனும் சொல்லணுமா?"

பரவாயில்லையே சட்டெனக் கண்டு பிடித்து விட்டாளே? என்று எண்ணியபடியே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"ஒண்ணுமில்ல அத்த! வந்து எல்லாம் நம்ம ராணியைப் பத்தி யோசிச்சிக்கிட்டு இருந்தேன்"

"அவளுக்கு என்ன? பேருக்கேத்த மாதிரி ராணியா இருக்கா."

"ஆமா அத்தை! அவளுக்கு எப்போ வரன் பார்க்கப் போறீங்க?"

சிரித்தாள் தங்கம்மாள்.

"அவ சின்னக் குழந்தை சங்கரி. அவளுக்குப் போய் கல்யாணமா? வெளிய சொன்னா சிரிப்பாங்க. இப்பத்தானே கலெக்டருக்குப் படிக்க ஆரம்பிச்சிருக்கா. படிச்சு முடிச்சு கலெக்டராகட்டும். அப்ப பார்த்துக்கலாம்" என்று சொல்லி விட்டு பேச்சு முடிந்து விட்டது என்பதன் அடையாளமாக எழுந்து சென்று விட்டாள்.

விழித்தபடி அமர்ந்திருந்த சங்கரியை இரு மென்மையான கரங்கள் தழுவின. திரும்பிய போது முகமெல்லாம் சிரிப்பாக நின்றிருந்தாள் ராணி.

"என்ன ராணி? இன்னைக்கு ஒரே சந்தோஷம்? என்ன விஷயம்?" என்றாள் பேச்சுக் கொடுக்கும் போக்காக.

"போங்க அண்ணி! நான் எப்பவுமே சந்தோஷமாத்தான் இருப்பேன்." என்றாள் கொஞ்சலாக.

"சரி சரி! எப்பவும் நீ அப்படியே இரு. டீ கொண்டு வரவா? கூடவே கொஞ்சம் பஜ்ஜி செஞ்சேன். எடுத்துட்டு வரவா?"

"உம், பஜ்ஜி மட்டும் கொண்டாங்க அண்ணி. டீ வேண்டாம். இப்பத்தான் குடிச்சேன்"

பிடித்துக்கொண்டாள் சங்கரி.

"இப்பத்தான் குடிச்சியா? எங்கே? நீ இப்ப பயிற்சி நிலையத்துல இருந்து தானே வரே?" என்றாள் துளைக்கும் பார்வையோடு. ஆனால் ராணியா இதற்கெல்லாம் அசருவாள்?

"வந்து..இப்பல்லாம் எங்க பயிற்சி நிலையத்துலயே டீ கொடுத்துடறாங்க அண்ணி. " என்றாள்.

இது நல்லது இல்லையே? ஏன் பொய் சொல்கிறாள் என நினைத்துக்கொண்டே வாழைக்காய் பஜ்ஜி, உருளை பஜ்ஜிகளை ஒரு தட்டில் போட்டு சட்னி வைத்துக்கொடுத்தாள். சுவைத்து சாப்பிட்டு விட்டு மீண்டும் கேட்டாள்.

"வயசுப்பொண்ணுங்க, ரொம்ப சாப்பிடக் கூடாது ராணி. அடி வயிறு பெருத்துப் போச்சுன்னா பல பிரச்சனைகள் வரும். என்ன?" என்று சொல்லியபடியே மேலும் மூன்று பஜ்ஜிகளை வைத்தாள்.

"போங்க அண்ணி! உங்களுக்கு வேற வேலை இல்ல. எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு" அன்று அலட்சியமாக சொல்லி விட்டு உண்பதில் முனைந்தாள் ராணி.

"ஏன் ராணி? உனக்கு நண்பர்கள் இருக்காங்களா? பயிற்சி நிலையத்துல?"

"ஓ! இருக்காங்களே? பிரேமா, காவ்யா, அப்புறம் நிதி...இப்படி நிறைய இருக்காங்க அண்ணி"

"நீ அவங்க கூட எங்காவது வெளியில போவியாம்மா?"

விழித்து நோக்கினாள் ராணி. "உம்! போவேன்" என்று சுருக்கமாக முடித்துக்கொண்டு போய் விட்டாள். தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை, முயற்சி செய்து பார்த்து விட்டேன். இனி விதி விட்ட வழி என்று என்ணியபடி தன் வேலைகளைக் கவனிக்க முனைந்தாள் சங்கரி. அன்று ராணியிடம் பேசிய பிறகு, அவளிடம் அதிகமாகப் பேசுவதும் இல்லை, நெருங்குவதும் இல்லை. அத்தை எப்போதுமே தானுண்டு தன் அறையில் இருக்கும் டி வி உண்டு என்றிருப்பார். மாமனாரால் இப்போது நன்றாக நடமாட முடிவதால் அவரும் அவ்வப்போது வெளியில் செல்ல ஆரம்பித்தார். சங்கரியின் அப்பா அன்று வந்து போன பிறகு வரவே இல்லை. அண்ணனோ, அண்ணியோ ஃபோன் செய்வது கூட இல்லை.

ராணியின் பயிற்சியும் முடியும் நாள் நெருங்கியது. இன்னும் ஒரு வாரத்தில் நாட்களில் சென்னை சென்று ஐ ஏ எஸ் சுக்கான முதல் தேர்வு எழுத வேண்டும். சபா அதைக் குறித்து மிகவும் உற்சாகமாக இருந்தான்.

"நான் ராணியைக் கூடக் கூட்டிக்கிட்டுப் போய் தேர்வு எழுத வெச்சுக் கூட்டிக்கிட்டு வரேன். டிரெயின்ல ரெண்டு டிக்கெட் போட்டுட்டேன். இன்னும் மூணு நாள்ல கிளம்பணும். நீ எனக்கும் ராணிக்கும் தேவையானதை எடுத்து வை சங்கரி. " என்றான் சபா.

சரியனெத் தலையாட்டினாள் சங்கரி.

"என்ன அண்ணி? அண்ணன் என்ன சொன்னாலும் தலையாட்டுவீங்களா?" என்றார். சட்டெனக் கோபம் வந்தாலும் பேசாமல் இருந்தாள் சங்கரி.

"இப்ப எதுக்கு அண்ணியைத் திட்டுற கண்ணு?" என்றான் சபா.

"பின்ன என்ன அண்ணே? நீ எது சொன்னாலும் எதுக்கு? என்ன? ஏதுன்னு கேக்காம உடனே செய்யுறேன்னு தலையாட்டுது அண்ணி. தேவையானதை எடுத்து வைக்குறதுக்கு முன்னாடி உனக்குப் போக இஷ்டமான்னு எங்கிட்ட அண்ணி கேட்டுச்சா?" என்றாள் பட்டென.

அந்த வீடே அயர்ந்து போனது. ஆசை ஆசையாகப் பயிற்சிக்குப் போனதென்ன? இன்னும் இரண்டே ஆண்டுகளில் கலெக்டராக வருவேன் சொன்ன வேகமென்ன? இப்போது இவள் என்ன சொல்கிறாள்?

"என்னம்மா சொல்ற ராணி?" என்றான் முத்தழகன்.

"ஆமா முத்தண்ணே! நான் தேர்வு எழுதப் போறதில்ல. எனக்கு இந்தப் படிப்பு பிடிக்கல்ல" என்றாள். சங்கரிக்கு ஒரு பக்கம் சிரிப்பாகவும், மற்றொரு பக்கம் எரிச்சலாகவும் வந்தது. இவள் ஒரு மண் குதிரை இவளைப் போய் நம்பினார்களே? என்று எண்ணிக் கொண்டாள்.

"என்ன கண்ணூ சொல்ற? நீயாத்தானே படிக்கறேன்னு சொன்ன? இப்ப என்ன ஆச்சு செல்லம்?" என்றான் மாணிக்க வேலன்.

"அண்ணே! நான் நல்லா யோசிச்சுப் பார்த்தேன். கஷ்டப்பட்டு படிச்சு கலெக்டரானா இந்தியாவுல ஏதாவது ஒரு மூலையில தூக்கிப் போடுவான். நானோ பொண்ணு. என்னால தனியா சமாளிக்க முடியுமா? எனக்குத் துணைக்கு நீங்க யாராவது வருவீங்க? நம்ம குடும்பமே பிரிஞ்சு போயிருமே அண்ணே? என்னால அதை எப்படித் தாங்க முடியும்?" என்றால் நைச்சியமாக.

உடனே அண்ணன்மார்களும், அன்னையும் உருகி விட்டார்கள்.

"அடிக் கண்ணு! நீ எங்கேயும் போக வேண்டாம் செல்லம். உனக்குத்தான் நம்ம குடும்பத்து மேல என்ன ஆசை? பாசம்? நீ சம்பாதிச்சு என்ன ஆகப் போகுது?" என்றாள் தாய் தங்கம் மகளைத் தழுவியபடி.

இதை மாணிக்க வேலனும், முத்தழகனும் ஆமோதித்தார்கள்.

"ராணிக்கண்ணு! உன் ராசியோ என்னவோ? இன்னும் ரெண்டே நாள்ல நான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்த காண்டிராக்ட் என் கைக்கு வந்துரும். அது மட்டும் வந்ததுன்னா, உன்னை தங்காத்தாலேயே அலங்காரம் செஞ்சு பார்ப்பேனே? நீ எதுக்கு உன்னை வருத்திக்கிட்டு படிக்கணும்? சம்பாதிக்கணும்?" என்றான் சபா.

"அப்பா! நீங்க எதுவுமே சொல்லையே?" என்றாள் மகள்.

"ஏம்மா? பயிற்சி வகுப்புக்குப் போகும் போது இந்த புத்தி இல்லையா?" என்றார் சண்முகம்.

"அப்படிக் கேளுங்க மாமா" என்று சொல்லத் துடித்த நாவை அடக்கிக் கொண்டாள் சங்கரி. ராணியின் முகம் கோணலானது. அழுகைக்கு எத்தமானாள். பாய்ந்து வந்தா சபா.

"என்னப்பா நீங்க? பாவம் ராணிக்கு என்ன தெரியும்? சின்னக் குழந்தை தானே அவ? ஏதோ ஒரு ஆர்வத்துல சேர்ந்துட்டா, இப்பத்தானே நிலைமையோட தீவிரம் புரியுது. அதான் நம்ம கிட்ட சொல்றா. அவளை ஏன் திட்டுறீங்க?" என்றான்.

"சபா! உங்க மூணு பேருக்கும் தங்கச்சி மேல இருக்குற பாசம் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா! ஆனா கண்மூடித்தனமா இருக்காதீங்க. அவளுக்கும் வயசாகுது. நல்லது கெட்டது யோசனை பண்ணிச் செய்யணும்னு சொல்லிக்குடுங்க. அதை விட்டுட்டு இப்படி அசட்டுச் செல்லம் குடுக்காதீங்க." என்றார்.

"ஆமாங்க!நாளைக்கே இவ வேற வீட்டுக்குப் போக வேண்டிய பொண்ணு,. அங்கே போயி அவ எப்படி நடந்துக்கணும்னு சொல்லிக் குடுத்தா நல்லது தானேங்க?" என்றாள் சங்கரி, இது தான் சாக்கென.

"நீ கவலையே படாதே சங்கரி. இனிமே நமக்கு நல்ல காலம் தான். இப்ப நான் எடுத்துருக்குற காண்டிராக்ட்ல மாசம் அஞ்சு லட்சம் லாபம் வரும். அதோட முத்து, மாணிக்கம் இவங்க பேர்லயும் லைசன்ஸ் எடுத்துஇருக்கேன். லாரி சர்வீஸ் ஆரம்பிச்சிருவேன். உன்னால பணத்தை எண்ணவே முடியாது போயேன்" என்றான் உற்சாகமாக சபா.

"ரொம்ப நல்லதுங்க! மகிழ்ச்சி தான். ஆனா அதுக்கும் நம்ம.."

"இரும்மா! முழுக்க சொல்லிடறேன். நம்ம வீடு உயரும் போது அந்தஸ்தும் உயரும் இல்ல? அப்ப ராணிக்கு வீட்டோட மாப்பிள்ளையாப் பார்த்தா போச்சு" என்றான் முத்தாய்ப்பாக.

"என் தங்க அண்ண, வைர அண்ணன்" என்று கொஞ்சினாள் ராணி.

யாரும் எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டாள் சங்கரி. ஆனாலும் ராணி வீட்டில் உண்பதும், உறங்குவதும் மாலையானால் வெளியில் நன்றாக அலங்கரித்துக்கொண்டு செல்வதும் சங்கரிக்குப் பிடிக்கவில்லை.

"ராணி! கொஞ்சம் எங்கூட வந்து சமையல் பழகலாம் இல்ல? உன் புருஷனுக்கு நீ சமைச்சுப் போட வேண்டாமா?"

"அதான் அண்ணனே சொல்லிட்டாரே அண்ணி! எனக்கு வீட்டோட மாப்பிள்ளை தான். அதுவும் போக சமையல்ல நான் உன்னோட போட்டி போட முடியுமா? அதனால என்னை விட்டுரு அண்ணி" என்று கொஞ்சி விடுவாள்.

ஒரு நாள் மாலை நான்கு மணி வாக்கில் மிகவும் பரபரப்பாக இருந்தாள் ராணி. இந்த டிரெஸ் பொடலாமா? இன்னொன்றைப் போடலாமா? என அலை பாய்ந்து கொண்டிருந்தாள். அலங்காரம் வேறு பிரமாதமாக இருந்தது. சங்கரியையும் நைட்டியை விட்டு சேலைக்கு மாறச் சொன்னாள். கேசரி செய்யச் சொன்னாள்.

"எதுக்கு ராணி இந்தப் பரபரப்பு? யாராவது வரப் போறாங்களா?" என்றாள் சங்கரி பொறுக்க முடியாமல்.

"வந்து...ஆமாண்ணி, என் ஃபிரெண்ட்சுங்க வரேன்னு சொல்லியிருக்காங்க அதான்" என்று அசடு வழிந்தாள். என்னவோ இருக்கிறது, தானாகத் தெரியும் என நினைத்து ராணி சொன்னபடி கேசரி செய்து வைத்து விட்டு சேலையையும் மாற்றிக் கொண்டாள்.

"அண்ணி! அண்ணனுங்க எப்ப வருவாங்க?"

"ஹூம்! புதுசா பிசினஸ் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க, உங்க அண்ணனுங்க ராத்திரி பத்து மணிக்குக் குறைஞ்சு எங்கே வீட்டுக்கு வராங்க?" என்றாள் சங்கரி அலுப்பாக. ராணியின் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியைக் கவனித்துக்கொண்டாள்.

"அம்மா? அவங்க என்ன செய்யுறாங்க?"

"இன்னைக்கு பக்கத்து ஊர்க் கோயில்ல ஏதோ திருநாளாம் அதுக்குப் போயிருக்காங்க. வர நேரம் தான்." என்றாள் சங்கரி. வாசலுக்குப் போவதும், மீண்டும் கூடத்துக்கு வருவதுமாக அலை பய்ந்தாள் ராணி. சுமார் ஐந்து மணி இருக்கும் ராணியின் உரத்த குரல் கேட்டது.

"வாங்க! உள்ளே வாங்க நிதி! இது தான் எங்க வீடு! எங்க அண்ணி மட்டும் தான் இருக்காங்க! வாங்க" என்று அழைக்கும் குரல் கேட்டது.

பயிற்சி வகுப்பில் படிக்கும் ஒரு தோழியின் பெயர் தானே நிதி என்றாள்? அவளையா வரச் சொன்னாள்? அதற்கா இத்தனை பரபரப்பு? என எண்ணிக் கொண்டே வாசல் வராந்தாவுக்கு வந்தவளுக்கு அதிர்ச்சி. ஒரு இளம் வாலிபன் ராணியின் கரங்களைப் பற்றியிருந்தான். இவளைக் கண்டதும் கையை உருவிக்கொண்டான். கண்களில் பூச்சி பறந்தது சங்கரிக்கு.

"இவன் யார்? இவன் வரவையா ராணி இப்படி எதிர்பார்த்தாள்? ஏன்?" என்ற கேள்விகள் குடைந்தன.

"யாரும்மா ராணி இந்தப் பையன்?" என்றாள்.

"சொல்றேன் அண்ணி! உள்ளே போய்ப் பேசுவோமே?" என்றாள் ராணி. அவனை வரவேற்று அழைத்துப் போனாள் சங்கரி. அமர வைத்து தண்ணீர் கொடுத்து விட்டு, ராணியை மெதுவாக உள்ளே அழைத்தாள்.

"என்ன ராணி இது? எதுக்கு சின்ன வயசுப் பசங்களை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வரே? இது உங்கண்ணனுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்?" என்றாள் கோபமாக.

"அதுக்குத்தான் அண்ணி நான் அவங்க இல்லாத நேரத்துல வரச் சொன்னேன். நீ தப்பா நினைக்காதே! நான் இவனைக் காதலிக்கல்ல. ஆனா காதலிக்கலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்" என்றாள் ராணி அதிரடியாக.

திகைத்துப் போய்ப் பார்த்தாள் சங்கரி. அவளை நோக்கி புன்சிரிப்பை சிந்தி விட்டு கேசரியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு கூடத்துக்கு விரைந்தாள் ராணி.
 
Inda loose ah avan emathitu poga poran, inda loose panna velai ah innum irukura loose umga kitta solluma shankar avanimga enna solluvamga thangachi ku pudicha love pannatum nu sollitu povanumga loose pasamga nalla kudumbam nice update dear thanks.
 
என்ன பொண்ணு இவ
அப்பா பொண்டாட்டி சொல்றத
சபா கேக்காம இருக்கான்

இப்ப எவனோ வந்து இருக்கான்
 
Inda loose ah avan emathitu poga poran, inda loose panna velai ah innum irukura loose umga kitta solluma shankar avanimga enna solluvamga thangachi ku pudicha love pannatum nu sollitu povanumga loose pasamga nalla kudumbam nice update dear thanks.
Thanks a lot! ஆனா நீங்க நினைக்குறா மாதிரி இல்ல! ஏமாத்த மாட்டான் அவன். வேணும்னா பாருங்களேன்!
 
Top