Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 4...

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 4.

ராணிக்குத் திடீர் திடீரென்று தான் ஏதாவது தோன்றும். 10ஆவது முடித்தவுடன் பாலிடெக்னிக்கில் சேருவது ஒன்றே தன் லட்சியம் இரு ஆண்டுகள் கழித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விடலாம் எனக் கனவு கண்டாள். அவளது அண்ணன்களும் தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற ஏகப்பட்ட காசு கொட்டிக்கொடுத்து பாலிடெக்னிக்கில் சேர்த்தார்கள். முழுதாக ஒரு ஆண்டு கூட முடியவில்லை. இனிமே எனக்கு அது வேண்டாம் என்றாள். பாடங்களே சரி வர நடத்துவதில்லை. அப்படியே நடத்தினாலும் மிகவும் கடினமாக இருக்கிறது. கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டும் என்றால் அவளது உடல் நிலை பாதிக்கும் இப்படி சாக்குப் போக்குகள் சொல்லி படிப்பை விட்டு விட்டாள். கண்டிக்க வேண்டிய தாயும் மகள் பாவம் இவள் படித்து என்ன ஆகப் போகிறது? எனச் சொல்லவே அனைவரும் பேசாமல் இருந்து விட்டார்கள். +2 படிப்பை தனித்தேர்வராகச் சென்று எழுதி பாஸ் செய்தாள்.

எனக்கு இலக்கியத்தில் தான் ஆர்வம். அதனால் பிஏ ஆங்கில இலக்கியம் சேர்கிறேனே! எனக் கெஞ்சி உள்ளூர் கலைக்கல்லூரியில் சேர்ந்தாள். இரு ஆண்டுகள் சென்றிருப்பாள். செமஸ்டர் தேர்வுகளில் ஏகப்பட்ட தாள்களில் தோல்வி அடைந்தாள். அதைச் சொல்லி அனைவரும் கிண்டல் செய்கிறார்கள் என அங்கிருந்தும் நின்று விட்டாள். அதற்கும் வீட்டினர் எதுவும் சொல்லவில்லை. இப்போது என்ன படிக்கப் போகிறாள் புதிதாக?" என்று எண்ணியபடி அவளை நோக்கினாள் சங்கரி.

"என்னம்மா படிக்கப் போற?"

"கலெக்டருக்குப் படிக்கப் போறேன்மா! நம்ம ஊருலயே பயிற்சி நிலையங்கள் இருக்கு. அதுல சேர்ந்து படிச்சு கலெக்டர் ஆகப் போறேன்" என்றாள் குழந்தையின் உற்சாகத்துடன். கேட்டுக் கொண்டிருந்த சங்கரிக்கு சிரிப்பு தான் வந்தது. அடேயப்பா! கலெக்டர் படிப்பா? அதற்கு எத்தனை திட்டமிடல்களும், கடின உழைப்பும், விடா முயற்சியும் தேவை? அந்தக் குணங்கள் இந்தப் பெண்ணிடம் இருக்கின்றனவா?" என்று யோசித்தாள்.

"ஏம்மா? கலெக்டர் படிப்பு ரொம்பக் கஷ்டமாச்சே? உன்னால முடியுமா?" என்றான் கடைசி அண்ணன் முத்தழகன்.

"என்னால முடியும் முத்தண்ணே! நம்ம வீட்டுல எல்லாரையும் விட நான் தான் புத்திசாலின்னு நீ கூடச் சொல்லுவியே?" என்றாள் உற்சாகமாக.

"உன்னோட புத்திசாலித்தனத்து மேல நம்பிக்கை இல்லாம இல்லம்மா! உனக்கு இது தேவையான்னு தான் யோசிக்கறேன்" என்றான் நடு அண்ணன் மாணிக்கவேலன்.

"போண்ணே! எனக்கு ஏன் வேண்டாம்? நம்ம வீட்டுல இருந்து ஒரு கலெக்டர்னா நமக்குப் பெருமை இல்லையா? ரொம்ப ரூவா ஆகும்னு யோசிக்கறீங்களா?" என்றாள் நெற்றியடியாக.

இந்த ஒரு வார்த்தையை மட்டும் அவள் அண்ணன்களால் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்பதை நன்கறிவாள் ராணி. வழக்கம் போல தலையாட்டினர். முதலில் அடிபப்டைத் தகுதியான பட்டப்படிப்பை முடித்த பிறகே கலெக்டர் படிப்புக்குப் படிக்க முடியும் என கோச்சிங்க் செண்டரில் சொல்லி விட்டார்கள். ஆகையால் ஒரு புறம் பி ஏ படித்துக்கொண்டே பயிற்சி வகுப்பிலும் சேர்ந்தாள்.

அன்று இரவு கணவனோடு தனித்திருக்கும் போது தன் சந்தேகத்தைக் கேட்டாள் சங்கரி.

"என்னங்க? நம்ம ராணிக்கு வயசு 20 இருக்காது?"

"வர வைகாசி வந்தா 21 முடியுது. ஏன் கேக்குற?"

"காலா காலத்துல அவளைக் கட்டிக்கொடுக்க வேண்டாமா?"

"அவ தான் கலெக்டருக்குப் படிக்கறேன்னு சொல்றாளே சங்கரி? அது முடியட்டும். அப்போ நல்ல கலெக்டர் வரனாப் பார்த்து முடிச்சுடலாம்." என்றான் சபா.

சிரித்தாள் சங்கரி.

"இப்ப எதுக்கு சிரிக்குறே?"

"ஒண்ணுமில்லீங்க! ராணியால அதை முடிக்க முடியுமா? அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும் இல்ல? அதான் யோசிச்சேன்" என்றாள் மென்மையாக.

"ஓஹோ! என் தங்கச்சியால முடியாதுன்னு கேலி செய்யிறியா? உன்னால மட்டும் முடியுமா?"

"கட்டாயம் என்னாலயும் முடியாது தான். அதனால தான் சொல்றேன், எதுக்கு நேரத்தையும் பணத்தையும் வீணாக்கிக்கிட்டு அவளை பயிற்சி வகுப்புல சேர்க்குறீங்க?"

"ஆங்! அப்படி வா வழிக்கு. உனக்குப் பொறாமை தானே?"

"சேச்சே! எனக்கு என்னாங்க பொறாமை? ராணி சின்னப் பொண்ணு. நீங்களே நல்லா யோசிச்சுப் பாருங்க! இது வரையில அவ எந்தப் படிப்பையாவது முடிச்சிருக்காளா? ஏதோ வேகத்துல சேர்ந்துட்டு, பிறகு நின்னிருவா. அப்படித்தானே இது வரைக்கும் நடந்திருக்கு?" என்றாள் நிதானமாக.

ஆனால் புயல் வேகத்தில் எழுந்தான் சபா.

"எங்க வீட்டுல பெண்களை கை நீட்டி அடிக்குறது இல்ல. அதனால நீ தப்பிச்ச! என் தங்கையைப் பத்தி எங்கிட்டயேவா தப்பாப் பேசுற? அவளுக்கு என்ன இஷ்டம் இருக்கோ அவ அதைப் படிப்பா, இல்லை படிக்காம இருப்பா. உனக்கு என்ன? நாங்க சம்பாதிக்குறது எல்லாமே அவளுக்குத்தான்.. அவளுக்குப் போகத்தான் மிச்சம். புரியுதா? இனி இன்னொரு தடவை இந்தத் தலையணை மந்திரம் ஓதுற வேலையை வெச்சுக்கிட்டே, அப்புறம் உன்னை பிறந்த வீட்டுக்கு அனுப்பிருவேன். என்னக் குறை சொல்லாதே" என்று கத்தி விட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் சென்று விட்டான்.

கண்களில் நீர் கண்ணைக் கரித்தது.

"இப்போது என்ன சொல்லி விட்டேன் என்று அவர் இப்படிக் கோபமாகப் பேசுகிறார்? 21 வயதாகும் பெண் கலெக்டருக்குப் படிக்கிறேன் எனச் சொல்லி நேரத்தையும், பணத்தையும் வீணாக்க விடாதீர்கள் என்று சொன்னேன். அதற்கா இந்தப் பேச்சு? அவருக்கும் அவர் தங்கைக்கும் நடுவிலா நான் வந்தேன்? சாதாரணமாக ஒரு கருத்தைச் சொல்லக் கூட எனக்கு உரிமை இல்லையா? பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவாராமே? இது என்ன பேச்சு? திருமணம் என்ற சடங்குக்கு பிறகு என்ன மரியாதை?" என்று என்னென்னவோ எண்ணியபடி அழுது கொண்டிருந்தாள். இனி ராணியின் விவகாரம் எதிலும் தலையிடுவது இல்லை என்ற முடிவோடு சமையற்கட்டை நோக்கி நடந்தாள்.

காலையிலும் மாலையிலும் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்தாள் ராணி. சபாவும் அவனது சகோதரர்களும் ஏதோ பெரிய காண்டிராக்ட் பிடிக்க வேண்டும் என அலைந்து கொண்டிருந்தார்கள். மாமாவின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம். வேளா வேளைக்கு வீட்டு சாப்பாடு, நல்ல கவனிப்பு என சண்முகமும் உடல் நலம் தேறினார். இதன் நடுவில் ஒரு முறை அப்பா வந்து பார்த்து விட்டுப் போனார். ஒரு டஜன் வாழைப்பழம், கொஞ்சம் ஆப்பிள், மாதுளை என்று வந்தார். வீட்டிலுள்ளோர் அனைவரும் வாவென வரவேற்றதோடு சரி. சபா கூட அமர்ந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை. இது கொஞ்சம் அவமானமாகப் பட்டது சங்கரிக்கு. கணவனுக்கும், மைத்துனர்களுக்கும் நிறைய வேலை, ராணி படிக்கிறாள் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தாள்.

"பரவாயில்லம்மா! பொண்ணைக் கொடுத்த இடத்துல மரியாதை கெடச்சா சந்தோஷம். இல்லைன்னா அதுக்காக சண்டையா போட முடியும்? நீ நல்லா இருந்தாப் போதும்" என்றார் தலையை வருடியபடி.

"நான் நல்லாத்தான் இருக்கேன்ப்பா" என்றாள் முழு மனதோடு.

"அதை நீ சொல்லவே வேண்டாம்மா! பார்த்தாலே தெரியுது. இங்கேயும் உனக்கு அதே வேலைகள் தான் இல்லையா? எப்படியோ? எல்லாம் நல்லா இருக்கு. அப்ப நான் கிளம்பட்டுமா?" என்றார் துண்டை தோளில் போட்டவாறே.

"நல்ல வெயிலா இருக்குப்பா! மதியம் சாப்பிட்டுட்டு, நல்லா தூங்கி எழுந்து டீ குடிச்சுட்டுப் போங்களேன்ப்பா!" என்றாள் அன்பாக.

"இல்லம்மா! அதுக்கெல்லாம் நேரமில்ல. உங்கண்ணன் வீட்டுக்கும் போகணும். அங்கே தான் சாப்பாடு. ரயிலை விட்டு இறங்கி நேரா உன்னைப் பர்க்கத்தான் வந்தேன். வரட்டுமா கண்ணு? எதுன்னாலும் அப்பாவுக்கு ஃபோன் பண்ணு" என்றவர் கையில் 2000 ரூபாய் நோட்டை வைத்து அழுத்தினார்.

"இது எதுக்குப்பா?"

"செலவுக்கு வெச்சுக்கம்மா! எல்லாத்துக்கும் உன் புருஷனையா கேக்க முடியும்? வெச்சுக்கோ! நான் வரேன் கண்ணு! நீயா ஃபோன் பண்ணும்மா. இந்தக் கிழவனை மறந்துடாதே" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு போனார்.

மதிய உணவுக்கு வீட்டு வந்த கணவனைப் பிடித்துக்கொண்டாள் சங்கரி.

"எங்கப்பா கிளம்பிப் போயிட்டாரு"

"ஏன் சங்கரி? ரெண்டு நாளைக்குத் தங்கியிருப்பாருன்னு இல்ல நெனச்சேன்?" என்றான் சபா.

"நான் அவரைப் பார்க்க கூட இல்லியே அண்ணி." என்றான் மாணிக்க வேலன்.

கோபம் வந்தது சங்கரிக்கு.

"அவரு எப்படி இருப்பாரு? வீட்டுக்கு வந்தவரை வாங்க உக்காருங்க! சாப்பிட்டு ரெண்டு நாள் தங்கிட்டுப் போங்கன்னு சொல்ல ஆள் இல்ல இந்த வீட்டுல. அவரு தங்குவாரா?" என்றாள் ஆத்திரமாக.

அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர் சகோதரர்கள் மூவரும்.

"ஏன் சங்கரி? நீ சொல்லலியா? அவரை தங்கச் கொல்லி?" என்றான் சபா.

"ஆங்! எல்லாம் சொன்னேன். சொல்ல வேண்டியவங்க சொன்னாத்தானே அவருக்கு திருப்தி?"

"யாரு அது?" என்றான் முத்தழகன்.

அவர்களைப் பார்த்தாள் சங்கரி. இவர்கள் தெரிந்து பேசுகிறார்களா? இல்லை தெரியாமல் விளையாடுகிறார்களா? இல்லை ஆழம் பார்க்கிறார்களா? என யோசித்தாள்.

"சொல்லு சங்கரி? யாரு சொல்லணும்?"

"வீட்டு சொந்தக்காரங்க நீங்களோ, இல்லை உங்கம்மா அப்பாவோ சொல்லணும்" என்றாள் வெடுக்கென.

முத்தழகனும் மாணிக்க வேலனும் சிரித்தார்கள்.

"ஏண்ணி? அப்ப நீங்க இந்த வீட்டு சொந்தக் காரங்க இல்லியா? உங்களை விடவா எங்களுக்கு உரிமை?" என்றான் முத்து.

பேச்சிழந்து போனாள் சங்கரி. இப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா? நான் தான் தவறாகப் புரிந்து கொண்டேனா? என்று எண்ணிக் கொண்டாள் மெல்லிய புன்சிரிப்புப் பரவியது.

மதிய உணவுக்குப் பிறகு சற்றே ஓய்வாகப் படுப்பது சபாவின் பழக்கம். அன்றும் அப்படிப்படுத்திருந்தான். சாப்பிட்டுட்டு விட்டு சங்கரி வரவும் எழுந்து அமர்ந்தாள். அவன் முகத்தில் ஏதோ யோசனை.

"என்னங்க?"

"உங்கப்பாகிட்ட நான் பேசலைன்னு உனக்குக் கோபம். அதானே?"

"முன்ன இருந்தது இப்ப இல்ல"

"இதைப் பாரு சங்கரி. எங்க வீட்டுல இருக்குறவங்களுக்கு நாகரீகமா, நாசூக்கா நடந்துக்க தெரியாது. ஏன்னா எங்கம்மாவுக்கு அது தெரியாது. காலையில உங்கப்பாவைப் பார்த்தப்ப மதியம், இல்லை இரவுல அவர்ட்ட நிதானமாப் பேசிக்கலாம்னு தான் நான் நினைச்சேன். இது உன் வீடு சங்கரி. நீ சொல்லியே கேக்காத உங்க அப்பா, நாங்க சொல்லியா கேப்பாரு?" என்றான்.

விக்கித்துப் போனாள் சங்கரி. இவர்களது மன நிலை வேறு. இவர்களது பழக்க வழக்கம் வேறு. இந்த வீட்டையே என் வீடு என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்றால் எந்த அளவு பரந்த மனம் இருக்கும்? என்று எண்ணிக் கொண்டாள்.

"நீ இந்த வீட்டுக்கு வந்து நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தியே? இது உன் வீடுன்ற உரிமையில தானே? அந்த உரிமை இப்ப மட்டும் எங்கே போச்சு?" என்றான் சற்றே எரிச்சலாக.

"சாரிங்க! ஆனா பொதுவா பொண்ணைக் கொடுத்த வீட்டுல சம்பந்தகாரங்களை வீட்டுக்குரியவங்க வரவேற்கணும், பேசணும்னு எதிர்பார்ப்பாங்க. இது உலக வழக்கம் தான்" என்றாள்.

"ஓ! அப்படியா? அது எனக்குத் தெரியாது. இனிமே உங்க அப்பா வந்தா உபசாரம் செஞ்சு அவறைத் திணற அடிச்சுடறேன். போதுமா?" என்று சிரித்தான்.

மனதில் பெருகிய மகிழ்ச்சியோடு கணவனை அணைத்துக்கொண்டாள் சங்கரி.

மறு வாரமே ராணி மேலும் ஒரு இடியைப் போட்டாள். ஏதோ ஒரு இளைஞனோடு அவளை மார்க்கெட்டில் பார்த்ததாக வந்து சொன்னாள் வேலை செய்யும் பெண்மணி. இதை கணவன் எப்படி எடுத்துக்கொள்வான்? வீட்டிலுள்ள மற்றவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்? விஷயத்தைச் சொல்வதா? வேண்டாமா? எனத் தெரியாமல் குழம்பினாள் சங்கரி.
 
Inda kudumabathula yaarai um thirutha mudiadu ellame loose pakkimgala irukumga konja naal ah ivalum loose agiduva nu thonudu enda veetuku vanda ippadi dan irupimgala inda araloose rani enna velai parthu irukalo nice update dear thanks.
 
Inda kudumabathula yaarai um thirutha mudiadu ellame loose pakkimgala irukumga konja naal ah ivalum loose agiduva nu thonudu enda veetuku vanda ippadi dan irupimgala inda araloose rani enna velai parthu irukalo nice update dear thanks.
கொஞ்சம் வித்தியாசனாமன குடும்பம் தான். ராணி கொஞ்சம் அரை லூசு! என்னென்ன செய்யப் போகுதோ?
 
Top