Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 02

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
Thanks for your wishes and encouragements dears!!!!!!!:love:

அத்தியாயம் 02

*2*

பார்க்கும் பொருளெல்லாம், ‘நீ’யாக தெரிகிறது!

விழிகளை மூடினேன்! நீ மட்டுமே தெரிகிறாய்!!



“ண்ணே!! எனக்கு பரமோசன் வேணுன்னே!” உம்மென்ற முகத்தோடு வெட்டுக்கிளி சொன்னான்.

பச்சைக்கிளி, “அசிங்கமா கேக்காத நாயே!” என வம்பிழுக்க, அவனை விடுத்து, “அண்ணே! எனக்கு இந்த நொட்டாங்கை பதவி வேணாமுண்ணே!! பதவியுயர்வு குடுத்து சோத்தாங்கை ஆக்கிடுங்க!” பேரின்பனிடம் முறையிட்டான் வெட்டுக்கிளி.



அவனை போலியாய் முறைத்து பார்த்த இன்பன், “இந்த நொட்டாங்கை, சோத்தாங்கை பதவி எல்லாம் நாந்தான் குடுத்தேனா உங்களுக்கு?” என கோவம் போல கேட்க, தயங்கியவன், “இ..இல்ல தான்! நாங்களா தான் வம்படியா வேலைல சேந்தோம்! அதுக்காக நானும் எவ்ளோ நாள்தான் நொட்டாங்கையாவே இருப்பேன்! எனக்கும் சோத்தாங்கை ஆகணும்ன்னு ஆசை இருக்காதா?” என்றான் வெட்டுக்கிளி.



தன் பதவிக்கு வெட்டுகிளி வேட்டு வைப்பதை உணர்ந்த பச்சைக்கிளி, “அண்ணே, குடுத்த பதவி குடுத்ததுதான்! சும்மா சும்மால்லாம் மாற முடியாது! சொல்லுங்க அவன்ட!” என்றான் மிடுக்காய்.



“ஹோ! அதுக்கு?? நீறு மட்டும் கெத்தா அண்ணனுக்கு சோத்தாங்கையே நான்தான்னு ஊருக்குள்ள சொல்லிக்குவீறு! நான்மட்டும் நொட்டாங்கையுனு சொல்லி கேலி பேச்சு வாங்கனுமா?” என எகிறினான் வெட்டுக்கிளி.

வெட்டுக்கிளி அப்படி சொன்னதும், “எவன் உன்னை கேலி பேசினது?” என்றான் இன்பன்.



அவன் தயங்கிக்கொண்டே, “இந்த பயலுவதாண்ணே!! சும்மா சும்மா நொட்டாங்கைன்னு கூப்பிட்டு பாக்கும்போதெல்லாம் வம்பு பேசுரானுவ!”



“கேலி பேசுறவன் நொட்டாங்கைய திருப்பி விடு! பத்து நாலு அந்த கை இல்லன்னா தான் அதோட அருமை புரியும் அதுங்களுக்கு!!” என்றிட, “சரிதாண்ணே! ஆனாலும், இப்படி வச்சுக்கலாமா? நான் ஒரு மாசம் சோத்தாங்கையா இருக்கேன், இவன் ஒரு மாசம் சோத்தாங்கையா இருக்கட்டும்!!” என விடாது சொல்ல, உடனே, பச்சைக்கிளி, “செல்லாது.. செல்லாது!!” என்றான்.



இருவரையும் ஒருசேர முறைத்த இன்பன், “எனக்கிருக்க ரெண்டு கையே எனக்கு போதும்! எந்த அல்லக்கையும் தேவையில்லை! ஒழுங்கா ஓடி போயிருங்க!!” என சொல்லிவிட, இருவரும் ஒரே சுருதியில், “ஹான்!! மாட்டோம்! மாட்டோம்!! நாங்க உங்ககூட இருப்போம்” என்றனர் ஒற்றுமையாய்.



“ஹும்ம்!! நீங்க என்னத்துக்கு என்கூட இருக்கீங்கன்னு எனக்கும் தெரியல! உங்களுக்கும் தெரியல!! போய் பந்தியை கவனிங்க, போய்தொலைங்க” என பொய்யடி அடித்து அனுப்பி வைத்தான் பேரின்பன்.



பின்பு, கரகாட்டம், ஒயிலாட்டம் என இளசுகளோடு சேர்ந்து பேரின்பனும் துள்ளலாய் ஒரு ஆட்டம் போட, ஒரு பாட்டில் பூஸ்ட்டை ஒரு மடக்கில் குடித்ததை போல படு உற்சாகமாய் ஆடிக்கொண்டிருந்தனர் அவனை கண்டோர். காலை உணவு அன்னத்தானத்தோடு அவனுக்கு முடிந்தது. ‘கொண்டம்’ முடித்து பக்தர்கள் ஓய்வெடுக்க இடம் ஏற்பாடு செய்து வைத்தவன், அவர்களை அலைய விடாது அங்கேயே உணவு வழங்க ஏற்பாடு செய்தான். மூன்று வேளையும் அன்னதானம் உண்டு என்பதால், வருவோருக்கு உணவு பரிமாறவே நேரம் இழுத்தது.



சளைக்காமல் அனைவருக்கும் கேட்டு கேட்டு பரிமாறினான் பேரின்பன். அவனை வால் பிடித்து சுற்றும் பயல்களும், அவனிடம் நற்பெயர் வாங்க, அவன் சொல்லாமலே வேலையை பகிர்ந்து கொண்டு செய்தனர். ஒண்டிவீரர் தன் மனைவியை கேள்வியாய் பார்க்க, “இனி அவன் கவனிச்சுப்பான்! நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்” என்றார் தன் மூத்த பேரனை மெச்சுதலோடு பார்த்துக்கொண்டே.



இதை கவனித்துக்கொண்டிருந்த காண்டீபனுக்கு, தான் அங்கு இருப்பதே அதிகப்படி என தோன்ற தந்தையை திரும்பியும் பாராது விறுவிறுவென தங்கள் காரை நோக்கி சென்றுவிட்டான். ஆத்திரம் அனல் கக்கியது அவனுள்.

ஒண்டிவீரரும் சிவகாமியும் இரவு ‘முத்து பல்லாக்கு’ வைபவத்திற்கு வருவதாய் சொல்லி விடைபெற, சத்தியராஜும் அங்கிருந்து கிளம்பினார்.



ஒரு பந்தி முடிந்து அடுத்த பந்தி துவங்கும் சிறு இடைவெளியில் சுற்றிலும் வேடிக்கை பார்ப்பதை போல கண்காணித்துக்கொண்டிருந்த பேரின்பனை அணுகிய பச்சைக்கிளி, “ண்ணே, காண்டீபன்ணே கோவமா கிளம்பிட்டாரு” என்றான்.



பேரின்பன் தன் பார்வையை தொடர்ந்தபடி, “தெரியும்” என்றான் சுருக்கமாய். வெட்டுகிளியோ, “அவர் இங்க இருக்கலாம்ன்னு நினைச்சுருப்பாரோ என்னவோ? நம்ம இருக்கவும் போயிட்டாரு!” என்க, “நம்ம இருக்கவும் இல்ல, ‘நான்’ இருக்கவும்” என திருத்தி சொல்லியவன், “அவன் இருந்தா இங்க எது நடந்தாலும் சும்மா கைய நீட்டிடே இருப்பான். கோவக்காரன் திருவிழாக்கு ஒத்துவரமாட்டான்! அதான் அவன் போவட்டும்ன்னு நான் நின்னுட்டேன்” என்றான் ஜனத்திரளை பார்த்தபடி.



“எது செஞ்சாலும் தம்பியை மனசுல வச்சே பண்றண்ணே நீ!” பெருமையாய் சொன்ன வெட்டுகிளியிடம், “அது தெரிய வேண்டியவருக்கு எங்க தெரியுது! வேண்டாத ஆளா தான் இவரை பார்க்குறாரு” என்று நொந்துக்கொண்டான் பச்சைக்கிளி.



அதற்குமேல் அந்த பேச்சை நீட்டிக்க விடாது, “பந்தியை கவனி, எல்லாரும் உட்காந்துட்டாங்க பாரு” என அனுப்பி வைத்தான் பேரின்பன்.

தண்ணீர் பந்தல், மோர் பந்தலில் ‘வழங்கீடு’ எப்டி நடக்கிறது என பார்க்க அன்னதான கூடத்தில் இருந்து எதிர்புறம் அவன் நடையை போட, நடுவே கூட்டம் அதிகமாய் இருந்ததால், கோவிலின் பின் பக்கபாதை வழியே சுற்றிக்கொண்டு சென்றான். கோவில் வளைவில் அவன் திரும்புகையில் சட்டென இரு வளைகரம் அவன் இடக்கையை பற்றி இழுக்க, இதை எதிர்பாராததால் தடுமாறியவன் பின்னே சுதாரித்து நின்றான்.



இழுத்தவளை கண்டதும், “கிறுக்கச்சி, வாயால கூப்பிட்டா நிக்க மாட்டேனா? என்னத்துக்கு புடிச்சு இழுக்குற?” என்றான் காட்டமாய்.

அவன் காட்டம் அவளை வாட்டவில்லை. ‘நாங்கல்லாம் எதையும் தாங்குவோம்’ என்ற ரேஞ்சுக்கு அவனை பாத்த சுசீலா, “கட்டிக்க போற பொண்ணு கைய பிடிச்சு, நீதான் இழுக்கணும்! இங்க நான் இழுக்குறேன்! எல்லாம் நேரம்” என போலியாய் சலித்துக்கொண்டாள் அவனை ஓரகண்ணில் பார்த்தபடி.



“இன்னும் பரிசம் கூட போடல, அதுக்குள்ள என்ன ‘இது’ வேண்டிகடக்கு” பேரின்பனின் அசட்டை பேச்சுக்கூட அவளை எதுவும் செய்யவில்லை.



“பரிசம் போட்டாதானா? அதான் எல்லாரும் பேசி முடிச்சுட்டாங்கள்ள? இல்லன்னாலும் நீ தான் என் மாமன்!” உரிமையாய் அவனை நெருங்கும் சுசீலாவை விட்டு வேகமாய் இரண்டாடிகள் பின்னே சென்ற பேரின்பன், “எல்லாரும் சொன்னாலும் இன்னும் நான் சொல்லல, சரின்னு” என்றான் அவள் கண்களை நேரே பார்த்து.



“என்னை கட்டிக்க உனக்கு கசக்குதா?” இப்போது அவளுக்கு ரோஷம் வந்துவிட்டது.



“என் வயசு என்ன தெரியுமா? எனக்கு முப்பத்தி ஒன்னு முடியுது! ஆனா உனக்கு? இப்போதான் பதினெட்டு. பெருசுங்களுக்கு தான் கூரு இல்ல! உனக்குமா இல்ல!?” அவன் அதட்ட, “சும்மா எகுறாத! என் அப்பாக்கும் அம்மாக்கும் கூட தான் பாஞ்சு வயசு வித்தியாசம், ஏன் அவங்க வாழல?” என்று குறுக்கு கேள்வி கேட்டவளை, உறுத்து பார்த்தவன், “நீ கிளம்பு” என்றான் அங்கிருந்து நகர்ந்தபடி.



ஓடி சென்று அவன் வழியை மறைத்து நின்ற சுசீலா, “ஏன், உனக்கு என்னை பிடிக்கலையா மாமா?” என்றாள் பாவமாய். கண்கள் கூட பனியிட்டிருந்தன.



அவளை பிடிக்காமல் போக ஒரு காரணமும் இல்லை. திருமணம் இப்போதைக்கு வேண்டாம் என சொல்லும் வயதும் அவனுக்கு இல்லை. அவளை விட சிறப்பாய் எந்த பெண்ணும் இந்த ஊரில் அவனுக்கு கிடைக்கவும்மாட்டாள் தான். ஒருவிதத்தில் சுசீலா அவனுக்கு அக்கா மகள் முறையும் கூட!!

ஆனாலும் ‘சம்மதம்’ என்று சொல்ல விடாமல் ஒரு விடயம் அவனை தடுத்தது. யாரிடமும் அதை சொல்ல முடியாமல் தவித்தான்.



தொடர்ந்து வீட்டில் அவனது திருமண பேச்சு தான் ஒரு மாதமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. பார்த்திருக்கும் பெண் ‘சுசீலா’ என சொன்னதில் இருந்து உழன்றுக்கொண்டிருக்கிறான் மனதில்.

சிந்தனைவயப்பட்டிருந்தவனை, “சொல்லு மாமா” என கத்தி எழுப்பினாள் சுசீலா.



“நம்ம அப்பறமா பேசலாம், நகரு!!” அவன் நகர பார்க்க, “முடியாது, இப்போவே சொல்லு மாமா” என்றாள் அவள் அடமாய்.



“என்ன சொல்லணும் இப்ப!?” அவன் கடுப்படிப்பது தெரிய, தன் பட்டு தாவணியை விளம்பரத்தில் வரும் பெண் போல விரித்து காட்டி, “நான் பார்க்க எப்படி இருக்கேன்!?” என்றாள் ஆசையாய். அவளை மேலும் கீழும் பலமுறை பார்த்த இன்பன், முகத்தில் இருந்த கடுப்பு மறைய, இதமான குரலில் “பார்க்க சும்மா சூப்பரா, அழகா, அம்சமா நம்ம மெர்சல் படத்துல வர.....” என்று அவன் இழுக்க, ஆர்வம் தாங்காமல் அவன் முகம் கண்டவள், “கோவைசரளா மாறியே இருக்க” என அவன் முடித்ததும்,, “மாமா...ஆஆ” என காலை உடைத்துக்கொண்டு குதித்தாள். அதை பார்க்க தான் அவன் இல்ல, ஓடியே விட்டான்.



ஓய்ந்து நிற்கவும் நேரமின்றி திருவிழா வேலை இன்பனை சுழற்றிக்கொண்டிருன்தது. ஒருவாறாய் பொழுது கவிழ, இரவு ‘முத்து பல்லக்கு’ வைபவத்திற்கான வேலைகள் நடைபெற, பேரின்பனின் தேவை அங்கே குறைந்தது. ஆய்ந்து ஓய்ந்து அவன் அமரும்போது அங்கே ஓடிவந்தது அவனது பட்டாளம்!



“என்னங்கடா?” தெரிந்துக்கொண்டே கேட்டான் இன்பன். தலையை சொரிந்துக்கொண்டே, “இருட்டிடுச்சுண்ணே!!” என்றான் ஒருவன்.



“அட, ஆமா! சரி எல்லாம் போய் தூங்குங்க” என்று இன்பன் நகர, “அண்ணே அண்ணே அண்ணே அண்ணே” என்று ஒன்று சேர்ந்து வந்த குரலில், சிறு முறுவலோடு, “என்னங்கடா?” என்றான் மீண்டும்.



‘நீ கேளுடா!’ ‘நீயே சொல்லுடா’ ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்வதை அடக்கப்பட்ட புன்முறுவலோடு பார்த்துக்கொண்டிருந்தான் இன்பன். ஒருவாறாய் தைரியம் வரபெற்ற ஒருவன், “நாங்கல்லாம் தோப்பு வீட்டுக்கு போலாமான்னு கேட்க வந்தோமுண்ணே!” என்றிட, “என்னாத்துக்கு?” என்றான் தெரியாதது போல்.



அவர்கள் பதில் சொல்ல முடியாமல் முனகிக்கொண்டே நிற்க, “என்கூட சேர்ந்து தான் எல்லாரும் குடிச்சு சீரழியுறீங்கன்னு உங்கம்மா ஆயாலாம் என்னை வசவு பாடுறதுக்கா?” என்று கோவமாய் கேட்டான் இன்பன். உடனே அதை மறுத்தவர்கள், “அண்ணே அண்ணே, நாங்க குடிக்குறதே வருஷத்துல இந்த ஒரு நாள் தானே! அதுக்கும் நீ இப்படி சொல்றியே!!” என்று வேகமாய் இறைஞ்ச, “நீங்கல்லாம் வருஷத்துக்கு ஒரு நாள் தான் குடிக்குறீங்க? இதை நான் நம்பனுமா?” என கூர்பார்வை பார்த்தவனை நேர்கொண்டு பார்க்காமல் குனிந்துக்கொண்டனர்.



பின் ‘பாவம்’ என நினைத்தானோ என்னவோ! “நான் வேண்டாம்ன்னு சொல்லி அனுப்பிட்டாலும், கழுத்து முட்ட குடிச்சுட்டு ரோட்ல ரகளை பண்ணதான் போறீங்க!! அதுக்கு என்கூடயே வந்து குடிங்க, அளவாவாது உள்ள போகும்!!” என்று இரவு கூத்திற்கு இன்பன் சம்மதம் சொல்லிவிட, ‘ஹேய்ய்ய்!’ என்ற கூச்சலோடு, “அம்மன் மெஸ்ல ஆர்டர் பண்ண ஐட்டத்தெல்லாம் பார்சல் கட்டின்னு வாங்கடா! நான் சரக்கு வாங்க போரேன்!” தலைமை பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டு அவர்களை வழிநடத்தினான் ஒருவன்.



ஆர்வமாய் ஓடும் அவனிடம், “டேய், அதிகமா வாங்கிட்டு வந்தன்னா, பாட்டில் தரையில தான் ஒடஞ்சு கிடக்கும், நினைப்பு இருக்கட்டும்!!” என்று எச்சரித்து அனுப்பினான் இனியன்.



இரவு சோமபானவிருந்து நடப்பது அந்த சோளக்காட்டின் மத்தியில் அனாதையாய் இருக்கும் வீட்டில்!! ஒரு முற்றம், ஒரே அரை, முற்றத்தின் முடிவில் அடுக்களை! பின்பக்கம் ஆழ்கிணற்றோடு கூடிய அவசர இடம்! அவ்வளவே! வீட்டின் வெளி திண்ணையில் இன்பன் அமர்ந்திருக்க, வாங்கி வந்த பண்டங்கள் எல்லாம் பகுந்தளிக்கப்பட்டது.



கோபியில் அசைவத்திற்கு புகழ்பெற்ற அம்மன் மெஸ்ஸில் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து பிரத்யேகமாய் வரவைத்திருந்தனர். இன்பனின் மேற்ப்பார்வையில், ‘சரக்கு கொஞ்சம், கறி அதிகம்’ என அவர்கள் உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, தனது அல்லக்கைகளின் கட்டாயத்தில் சிறிது குடித்தான் இன்பன்.



ஒருவன், “ண்ணே!! நீ வேற லெவலுண்ணே!! இப்படி எங்க எல்லாரையும் உன் தம்பியா நினைச்சு எங்களுக்கு வேண்டியதெல்லாம் செய்யுறியே!! நீ எங்கயோ போய்ட்டன்னே!!” உள்ளே சென்ற சோமபானம் வேலையை காட்ட தொடங்கியது.



“ஆமாண்ணே! உனக்கிருக்க நல்ல மனசு யாருக்காது வருமா!? அரண்மனை மாறி வீடு இருந்தாலும், வீடு நிறைய சொந்தம் இருந்தாலும் உனக்கு இந்த ஓட்டை வீடும், யாரும் இல்லாத தனிமையும் தானே கிடைக்குது!! காண்டீபன் அநியாயம் பண்ணுறான்னே!!” வேறொருவன் குடிபோதையில் பேச, மதுவின் பிடியிலும் தன் தம்பியை விட்டுக்கொடுக்காத பேரின்பன், “டேய், மரியாதையா பேசனும்ன்னு சொல்லிருக்கேனா இல்லையா!?” என்று மிரட்டினான்.



அவன் மிரட்டலில் அடங்காதவன், “அவன் உனக்கு மரியாதை குடுக்குறானா? உன்னைவிட ஆறு வயசு சின்னவன் தானே!? என்னைக்காவது உன்னை ‘அண்ணா’ன்னு கூப்புட்டுருப்பானா? அவனுக்கு போய் நீ சப்போர்ட் பண்ற!” மேற்கொண்டு அவன் பேச, இன்பனின் மூளை மரத்து போனது.



‘ஒரு முறையாவது அவன் உன்னை ‘அண்ணா’ன்னு சொல்லிருக்கானா?’ அடிக்கடி அவன் மனமே அவனிடம் கேட்கும் கேள்வி!



“சொல்லுண்ணே!! உன்னைமாறி எனக்கொரு அண்ணன் கிடைச்சா அவனுக்கு கோவில் கட்டி கும்புடுவேன்னே!!” பேசிக்கொண்டே சென்றவனை காலால் ஒரு எத்து எத்தினான் பச்சைக்கிளி.

“வாங்குன குவாட்டருக்கு காசு கட்டாம கடன் வச்சுட்டு வந்துட்டு, கோவில் கட்டுவேன்னு பினாத்திட்டு இருக்க! குடிக்குற வேலையை மட்டும் பாருடா எரும!” என்றான்.



தனது சட்டை பையில் இருந்து இரு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து கொடுத்த இன்பன், “யாருக்கு கடன் இல்லாம குடுத்துடு!” என்றான் பச்சைகிளியிடம்!



அதை கண்டதும் பச்சைகிளியிடம் அடி வாங்கி அடங்கி இருந்தவன் மீண்டும் ஆரம்பித்தான். “பாருண்ணே!! இந்த மனசு! இந்த மனசு வருமாண்ணே அந்த காண்டீபனுக்கு!!” என்று தொடங்க, “டேய், நீ அவர் மில்லுல தான் வேலைக்கு இருக்க, நினைப்பு இருக்கட்டும்!” என எச்சரித்தான் வெட்டுக்கிளி.



“ஹான்! அது அவருக்கு மட்டுமா சொந்தம், இந்தா இருக்காரே, எங்கண்ணன்! பேரின்பன்! அவருக்கும் தான் சொந்தம்!” என்றதும், அருகே இருந்த வேறொருவன், “டேய், பேரின்பன் அம்.ஏ பிலாசுப்பின்னு சொல்லுடே” என்றான் கோழி காலை காவு வாங்கிக்கொண்டு கூடவே அவன் படிப்பையும்.



இன்பனின் முகம் அசாத்திய அமைதியை காட்ட, வெட்டுகிளிக்கு சிக்னல் கொடுத்தான் பச்சைக்கிளி. அவன் முகம் தெளிவாய் இருப்பதே அவன் கோவத்தை அடக்குகிறான் என்பதை தெளிவாய் அவர்களுக்கு புலப்படுத்த, போதையில் புலம்புபவனை அவனிடம் இருந்து காக்க வேண்டி, “நீ வாயை மூடிகிட்டு இருடா போதும்!!” என்றான் வெட்டுக்கிளி.



“நான் ஏன் வாயை மூடனும்!! நான் சொல்லுவேன்! எல்லாத்தையும் சொல்லுவேன்!!” மிக்சர் பொட்டலத்தை விசிறியடித்து அவன் வீராவேசம் பேச, “சரி சாவு” என்றுவிட்டுவிட்டன கிளிகள்.



“இம்புட்டு படிப்பு படிச்ச எங்க அண்ணனை சொந்த மில்லுலையே வேலை பார்க்க வைக்குறான் அவன்!! உருப்படுவானா?” என்றிட, இன்பன் எழுந்துவிட்டான்.

அதை கவனியாதவன், “இதுல இவருக்கு கல்யாணம் பண்றேன்னு, அந்த சூசி புள்ளைய பரிசம் போட பார்க்குறானுங்க! என் அண்ணன் அழகுக்கும் ஸ்டைலுக்கும் நயன்தாரா மாறி பொண்ணு பார்க்கணும், இப்படி நசுங்குன தாரா மாறி பார்த்து வைச்சுருக்காங்க!” காலையில் அவன் சுசிலாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்தது மறந்துபோனது அவனுக்கே!



இரு கைகளை முன்னே நீட்டி சொடக்கு எடுத்து நெட்டி முறித்த இன்பன், பேசுபவனின் அருகே சென்றான். அதை உணர்ந்தபின்னும், “நீ உள்ளுக்குள்ள எவ்ளோ மருகுறன்னு எனக்கு தெரியுமுண்ணே!” என்றான் பாவமாய்.



‘அநியாயத்துக்கு பொங்குறானேடா!’ என நடக்கப்போவதை எண்ணி சிரித்துக்கொண்டனர் கிளிகள்.

இன்பன் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, “என்னாண்ணே?” என்றான் சற்றே கிலி பிறக்க.



“சரக்கடிச்ச வாயும், சண்ட போட்ட நாயும் அடிப்படாம வீடு போனதா சரித்திரமே இல்ல!!” இன்பனின் பிஃலாசபி புரியாது ‘அப்டின்னா?’ என கேட்டவன் மறுநாள் காலை இரு பற்கள் தொலைத்து வீங்கிய கன்னத்தோடு தான் இருப்பான் என எல்லோருக்கும் புரிந்தது.
 
இரவு மணி பதினொன்றை கடந்தது. அந்த காலத்து கட்டுமானத்தில் சிற்றரசர் கோட்டை போல பிரமாண்டமாய் நின்ற தங்கள் வீட்டின் ஈராளுயர கேட்டை திறந்து உள்ளே நுழைந்தான் பேரின்பன்.



ஒரு திருமணமே நடத்தும் அளவு பெரிதாய் அகண்டிருந்த முன்கூடத்தை தாண்டி, அடுக்களையோடு இருந்த உணவறைக்கு சென்றான் இன்பன். சுவரோரமாய் சாய்ந்து அமர்ந்து காலை நீட்டியவன், தன் கைகளாலேயே காலை பிடித்துவிட்டுக்கொண்டு, “அத்தே, அத்தே!!” என குரல் கொடுத்தான்.



அவன் குரலில் வேகமாய் வந்த அவன் அத்தை தங்கம், அவன் தரையில் அமர்ந்திருப்பதை கண்டதும், “ஏன் கண்ணு தரையில உட்காந்துட்ட? யாராது ஏதும் பேசுனாங்களா?” என்றார் பதட்டமாய் அவன் அருகே வந்தபடி.



‘குடிச்சுருக்கேன்னு தெரிஞ்சா கொன்னுடுமே அத்தே!’ என்று பயந்து சட்டென விலகியவன், “யாரும் ஒன்னும் சொல்லல அத்தே, கால் வலிக்குது, அதான் கீழ உட்காந்தேன்!” என்றான் அவசரமாய்.



“சாப்பிட்டியா கண்ணு?” இப்போதைக்கு அவன் வயிற்ரை எண்ணி கவலைக்கொள்ளும் ஒரே ஜீவன் அவனது தங்கம் அத்தை மட்டுமே. அவன் தாய் இறக்கும்போது ஆறு வயது சிறுவனாய் ஆதரிக்க ஆளின்றி நின்றவனை அணைத்துக்கொண்டவர், இன்றுவரை அந்த அணைப்பின் கதகதப்பை அவனை உணரவைக்கிறார் ஒரு தாயாய்.



அவர் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நீ சாப்பிட்டியா அத்தே?” என்றான் இன்பன். அவன் கேள்வியில் சிரித்தவர், “நீ சாப்பிடாம நான் என்னைக்கு சாப்பிட்டுருக்கேன்?” என்றார். அவனோ, “அட அட அட! சும்மா நடிக்காத! ஏதாவது வேலை செஞ்சுட்டே சாப்பிடாம இருந்துட்டு என்னை காரணம் காட்டி செண்டிமெண்ட் ஸீன் போடுற” என்றான் கிண்டலாய்.



அவன் சொன்னதும் உண்மைதான். இரவு முத்துபல்லாக்கு வைபவத்திருக்காக, ‘மாவிளக்கு’ செய்துக்கொண்டிருந்தார் தங்கம். அந்த வேலையில் உணவு வேளை கடந்துபோனது. அதை மறையாமல் அவனிடம் சொல்ல, “எல்லா வேலையும் செய்யுற, அப்படியே திருவிழாக்கும் வந்தாதான் என்னவாம்?” என்றான் மனதாங்கலாய்.



“அதான் நீ போனியே, போதாதா?” தட்டில் நான்கு சப்பாத்திகளோடு வந்தவர், கடலை குருமாவோடு தொட்டு அவனுக்கு ஊட்ட துவங்கினார். இது அடிக்கடி நடப்பது தான் என்பதால் இன்பன் இன்னும் சௌகர்யமாய் சாய்ந்து கொண்டு தன் அத்தையின் கையால் உணவருந்த தொடங்கினான்.



“நல்லா சாப்புடு டா!!” வாஞ்சையாய் அவனுக்கு ஊட்டிக்கொண்டிருந்த தங்கத்தை, “மாவிளக்கு எடுத்து வச்சுட்டியா தங்கம்? ராத்திரி சாமி ஊர்வலம் வரப்போ தடுமாறாம இருக்கணும்!” என்று கேட்டுகொண்டே வந்தார் சிவகாமி.



அங்கே இன்பனை கண்டதும், “அட பயலே, இப்போதான் திங்குரியா நீ? இவ்ளோ நேரம் அந்த வெட்டி பயலுவளோட ஆட்டமா?” என அதட்ட, “ஈஈ” என்றான் இன்பன். அதற்குமேல் அவனை அதட்ட தெரியாத சிவகாமி, அவன் தாடை கிள்ளி முத்தம் வைத்தார்.

“புள்ள இன்னைக்கு எத்துனி வேலை பார்த்துருக்கு! சுத்தி போடணும்! கண்ட கண்ணும் இவன்மேலதான்” என்றார்.



ஊட்டுவதை நிறுத்தாமலே, “போட்டுடலாம் அம்மா! அப்புறம், பூஜைக்கு எல்லாம் தயாரா இருக்கு, பட்டம்மாவ வாசலுக்கு கொண்டு வந்துவைக்க சொல்றேன்!!” என்ற தங்கத்தை, “நீயே கொண்டு போய் வையேன் அத்தே!?” என்றான் பேரின்பன்.



அவனை உரிமையாய் முறைத்தவர், “வேணுன்னே கேப்பியே நீ!!” என்றார்.



“ப்ச்!! என்னத்தே! இந்தகாலத்துல போய் விதவை, அபசகுனம்ன்னு பேசிட்டு இருக்க! நீங்களாது சொல்லக்கூடாதா அம்மாயி?” அத்தையை கேட்டவன், பாட்டியிடம் முறையிட்டான். திருமணம் முடித்து கொடுத்த இரண்டே மாதத்தில் கணவனை இழந்த தங்கம், அதன் பின், தாயின்றி தவித்த பேரின்பனை மட்டுமே வாழ்வின் பற்றுகோலாய் எண்ணி, பிறந்த வீட்டிலேயே காலம் கழிக்கிறார்.



சிவகாமி, “இல்லடா! நம்ம ஊருல இன்னும் இதெல்லாம் இருக்கதான் செய்யுது! நல்ல காரியத்துல முன்னுக்கு நிக்க கூடாது!!”



பேரின்பன், “ஹும்! நம்ம வீட்டு பொண்ணுங்களை நம்மளே ஒதுக்குனா, ஊரு ஒதுக்கி வைக்காம என்ன செய்யும்?” வருத்தமாய் சொன்னவனின் வாயருகே சென்ற தங்கத்தின் கையை ‘வேண்டாம்’ என விலக்கி விட்டான்.



தங்கம், “ரெண்டு சப்பாத்தி தான் சாப்பிட்டுருக்க இன்பா!”

சிவகாமி, “எடேய், ஒழுங்கா தின்னுடா”

தங்கம், “இன்னும் ஒன்னாவது சாப்பிடேன்டா!”



இன்பன், “போதும்!”

அங்கே வந்த ஒண்டிவீரர் இருவரும் இன்பனிடம் உண்ண சொல்லி மல்லுக்கட்டிக்கொண்டிருப்பதை கண்டு, “திங்குறதை மட்டும்தான் சரியா பண்ணிட்டு இருக்கன்னு உன் அப்பன் பெருமையா சொல்லிட்டு இருப்பான், இப்போ அதுவும் போச்சா!” என்று சத்தமாய் சிரித்தார்.



அதை கேட்ட பெண்கள் வாயை மூடி சிரிக்க, “என் பொழப்பு உங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கா!” என்றான் இன்பன் போலி கோவத்தோடு!



ஒன்டிவீரர், “சும்மா சொன்னேன்டா! ஆமா, பல்லக்கு எங்க வந்துகிட்டு இருக்கு? பார்த்தியா?” என்றார்.



இன்பன், “பாரியூர் ரோட்டை தாண்டிடுச்சு! இன்னும் அரைமணி ஆகும் நம்ம வீட்டுகிட்ட வர! நம்ம தெரு வரும்போது போன் பண்ண சொல்லிருக்கேன், அதனால அங்கயும் இங்கயும் அலையாம ஓரடமா உட்காருங்க” என்றிட, நிறைவான புன்னகை புரிந்தார் ஒன்டிவீரர். சிவகாமி கண்களாலேயே, ‘எப்புடி என் பேரன்?’ என கேட்க, ‘அப்படியே என்னைமாறி’ என்று சைகை செய்த கணவனை நொடித்துக்கொண்டார் சிவகாமி.



தங்கம், “இன்னும் ஒன்னு சாப்பிடுடா, இந்த அத்தைக்காக” என்று கெஞ்சிட, அதற்குமேலும் மறுக்காமல் வாய் திறந்தான் இன்பன். தங்கம் சந்தோசமாய் சப்பாத்தியை பிட்டு அவன் வாயருகே கொண்டு செல்லும்போது, “இன்னும் இடுப்புல தூக்கி வச்சு ஊட்டுங்க” என்று வந்து நின்றான் காண்டீபன். வாயருகே சென்ற கை தன்னால் கீழிறங்கியது.



சிவகாமி, “இப்போதான் சாப்புட உட்காந்தான், ஏதாவது சொல்லிடாத! நீ போடா!” என்றார் காண்டீபனை.



அதில் மேலும் எரிச்சலுற்ற காண்டீபன், “ம்ம்! இப்படியே அவனை தாங்கி தாங்கி தான் இந்த அளவுக்கு இடம் குடுத்து வச்சுருக்கீங்க!” என்று சூடாய் சொல்ல, “என்னடா இடத்தை குடுத்துட்டோம்? உனக்கு இந்த வீட்ல இருக்க உரிமையில கால்வாசியாவது அவனுக்கு இருக்கா? இல்ல, என்னைகாது உரிமை பத்தி அவன் பேசிருப்பானா?” சிவகாமி மூத்த பேரனுக்காக இளைய பேரனிடம் மல்லுக்கு நின்றார்.



இன்பனுக்காக அந்த வீட்டில் வாதாடும் ஒரே நபர் சிவகாமி தான். அவருக்கு துணையாய் ஒன்டிவீரர் கூட வர மாட்டார். இரு பேரன்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு யார் பக்கம் செல்வது என தெரியாமல் தவிக்கும் நிலை தான் அவருக்கு எப்போதும். அதனாலேயே வாக்குவாதமோ, உரிமைவாதமோ, வாய்க்கு பூட்டிபோட்டு கொண்டு தன் ஆசனத்தில் அமர்ந்துவிடுவார். இன்றும் அப்படியே!!



ஆனால், சிவகாமி அப்படியில்லை. இன்பன் சிறு வயதாய் இருக்கும்போது சத்தியராசுக்கும் காண்டீபனுக்கும் அவன்மேல் இருந்த கோவத்தை போலவே அவருக்கும் இருந்தது. நாள் ஆக ஆக, இன்பனின் குணத்திலும், ரத்த சொந்தமே அவனை ஒதுக்கும் நிலையையும் கண்டு, மெல்ல மெல்ல அவன் பக்கம் போனவர், சிறிது காலமாய் அவன் பக்கமே அரியாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.

தங்கம் இன்பனை என்னதான் தாங்கினாலும், அவனுக்காக குரல் கொடுக்க மாட்டார். தன் வீட்டில் தானே அகதி என்ற நிலையில் இருக்கும்போது எந்த உரிமையில் அண்ணன், அண்ணன் மகனை எதிர்த்து பேச என்ற ஐயம்!!



யாரை பற்றிய பேச்சு நடக்கிறதோ அவன் ‘எனக்கும் அதற்க்கும் சம்பந்தமே இல்லை’ என தன் அத்தையின் கையை பற்றி தானே தனக்கு ஊட்டிகொண்டான். அது மேலும் காண்டீபனின் சினத்தை சீர,

“உரிமை கொடுக்குற அளவுக்கு இவன் இல்ல! பொறுப்பான ஆளா இருந்தா திருவிழாக்கு நேரத்துக்கு வந்துருக்கணும்! வந்ததே லேட்டு, இதுல இவனுக்கு ஆர்ப்பாடம், பில்டப்பா பாட்டு போட்டு படம் காட்ட ஒரு கோஷ்டி!” சிவகாமியிடம் சீறினான் காண்டீபன்.

சிவகாமி மறுத்து ஒன்றும் சொல்லவில்லை.



காண்டீபன், “இப்போகூட ஊர் பொறுக்கிங்க எல்லாம் ஒன்னு சேர்ந்து சோளக்காட்டு வீட்ல குடிச்சு கூத்தடிச்சுட்டு தான் இருக்குங்க! இவனும் அங்க குடிச்சுட்டு தான் இப்போ வந்துருப்பான்! வீட சாராயக்கடை மாறி வச்சுருக்கானுங்க! அதுக்கெல்லாம் யார் காரணம்!?” என்றவன் ‘நீதான்!’ என குற்றம்சாட்டும்படி அவனை பார்த்தான்.



அவன் பார்வையை எதிர்க்கொண்ட இன்பன், “அந்த வீடு என்னுதுதானே?” என்றான் மிக சாந்தமாய்.



“கண்டிப்பா! அது மட்டும் தான் உனக்கு! நீ பாவம் சேர்த்த இடத்துல நீ மட்டும் தானே இருக்க முடியும்!!” குத்தீட்டியாய் இன்பனை குத்தின காண்டீபனின் சொற்கள்.

அவன் சொன்ன வார்த்தைகளின் ரணம் இன்பனை அசைத்து பார்த்தது. அத்தனையும் தாங்கிக்கொண்டு நிர்மலமாய் நின்றான் இன்பன். அவன் தம்பி, தந்தையை தாண்டி அவனை காயப்படுத்துவோர் யாருமிலர்.



“எம்.ஏ பிஃலாசபி-ன்னு பட்டம் வைச்சுகிட்டா மட்டும் போதாது! ஏதாவது வேலை செஞ்சு பொழைக்கணும்! உன்னை என் மில்லுல மூட்டை தூக்க விட்டதே பெரிய அவமானம் எனக்கு! என்னவோ நான் பெரிய கொடுமைக்காரன் மாறி எல்லாரும் என்னை பார்க்குறாங்க!” என்று காண்டீபன் சொல்ல, “நீ பண்றதை தானே டா எல்லாரும் சொல்றாங்க!!” என்றார் சிவகாமி.



சிவகாமி, “நமக்கு என்ன ஒரு தொழிலா சொல்லு? நகைக்கடை, ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, அரிசிமில்லு, என்னை செக்கு, கோழி பண்ணை அதுபோக தென்னந்தோப்பு, வயக்காடுன்னு கணக்கில்லாம கடக்கு! எல்லாத்தையும் நீயும் உன்கொப்பனுமே ஆளுறீன்களே! ஏதாவது ஒன்ன, இவன் பொறுப்புல குடுதா தான் என்னவாம்? முறைப்படி அவன்தான் எல்லாத்தையும் பாக்கணும், அவன் பார்த்து குடுக்குறது தான் உனக்கு! இங்க எல்லாம் நியாயமாவா நடக்குது!! நம்ம வீட்ல எடுப்பு வேலை செய்யவே பத்து பேரு இருக்காங்க, அவங்கள்ள ஒண்ணாதானே என் பேரனும் இருக்கான்!” கலங்கிய கண்ணை அவர் சரிசெய்ய, ஒன்டிவீரர் கலங்கி போனார்.



காண்டீபன் விரல் நீட்டி எச்சரிப்பது போல, “இதெல்லாம் எங்க அப்பா சொல்லட்டும், தாத்தா சொல்லட்டும், நீங்க சொல்லாதீங்க!!”



“காண்டீபா!!!!!!!!!!!” ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் இருந்து இரு வேறு குரல்கள் ஒன்றாய் ஒலித்தது. மனைவியை ஒரு சொல் சொன்னதும் எழுந்துவிட்டார் ஒன்டிவீரர். மற்றொரு குரலோ, அவன் தந்தையுடையது.



நெடுநெடுவென அவன் அருகே வந்த சத்தியராஜன், மகனை அடிக்க கை ஓங்க, காண்டீபன் கன்னத்தில் இறங்க வேண்டிய அவரது கை, பேரின்பனால் அந்தரத்தில் நின்றது.



தன் தந்தையை நேருக்கு நேர் பார்த்து, “காண்டீபன் பேசுனதும் தப்பு, நீங்க அடிக்குறதும் தப்பு!” என்றான் நிதானமாய். சத்தியராஜின் கையை பிடித்திருந்த இன்பனின் கையை தட்டிவிட்ட காண்டீபன், அவனுக்கும் தந்தைக்கும் இடையே வந்து, “அவரு என்னோட அப்பா! எனக்கும் அவருக்கும் நடுல நீ வராதன்னு ஒருமுறை சொன்னா புரியாதா? சோத்துல உப்பு போட்டு தானே தின்னுகுற?” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்க, இம்முறை இரு பெண்களும், “காண்டீபா!!!!!!!!!!!” என்றனர்.



பேரின்பன் அவனை மேலும் நெருங்கி, “குழம்புல இருக்க உப்பே சரியா இருக்குறதால நான் சோத்துல உப்பு போடுறதில்ல! நீயும் போட்டுக்காத! இப்படி அடிக்கடி பிபி வரது குறையும்” என்று சொல்லி தன் அறைக்கு புகுந்துவிட்டான்.



சண்டைக்கு நின்றவனுக்கு அவன் பேசியது சில நிமிடங்களுக்கு பிறகே விளங்க, “ச்சை!!” என்று நகர்ந்துவிட்டான்.

-தொடரும்...

ஒரு சின்ன விஷயம் பிரண்ட்ஸ்! இந்த கதைல ஹீரோ பேர நான் இன்பன்-ன்னு டைப் பண்ணும்போதெல்லாம் defaultஆ, 'இனியன்' ன்னு தான் வருது! அதை கரெக்ட் பண்ணவே எனக்கு போதும் போதும்ன்னு ஆகிடுச்சு!! என் கண்ணையும் தப்பி எங்கயாது 'இனியன்' எட்டிபார்த்தா, அது யாருடா புது கேரக்டருன்னு பீதி ஆகாம, கடந்து போய்டுங்க!!!


"இதழினி" முடிஞ்சும் இனியன் தொல்லை தாங்கல முருகேசா!!!!!:LOL::love:
 
Top