Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே- பாகம் 7

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் - 7

இடம்: அமுதினி வீடு

நேரம்: குழப்பமான சமயம்

கதவைத் திறந்து, அர்ஜூனைக் கண்டதும், என் துயரமெல்லாம் ரப்பர் வைத்து அழித்தமாதிரி மறைந்துவிட்டது. ஆனா அவனோ, பேருந்தில் பக்கத்து இருக்கை பயணி போல, ‘ஹலோ’ என்றபடி உள்ளே வந்தவன்,

‘’உட்காரு, கால் வீக்கம் எப்படி இருக்குன்னு பார்க்கறேன்’’ என்றான்.

‘’அன்னிக்கு நான் என்ன சொல்ல வந்தன்னா?’’ என்று நான் சொல்லும்போது,

‘’குட் யூ பிளிஸ் பீ சீடட் மிசஸ் அமுதினி. ஐ ஜஸ்ட் வாண்ட் டூ செக் யுவர் னி’’ என்றான்.

‘க்கும், இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல, ரொம்ப பண்றடா’ என்று முனுமுனுத்தபடி சோபாவில் கால் நீட்டி அமர்ந்தேன்.

முட்டியைத் தொட்டுப் பார்த்தான். அவனைக் கண்ட சந்தோஷத்தில் வலியெல்லாம் பறந்தோடிவிட்டது.

‘’வீக்கம் இல்லங்க. பயிற்சி மட்டும் விடாமல் செய்யுங்க. இனி நீங்க எப்பவும் போல நடக்க முடியுங்க’’ என்றான்

“”ம்ம்ம்... தேங்கஸ்” என்று வாய் வார்த்தையில் சொன்னாலும் 'விறைச்சிக்கிட்டு நிற்கிறான். வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’’ன்னு ஏலம் போடுறான். இப்ப போய், அன்னிக்கு ஏன் அப்படி சொன்னேன்னு பேச ஆரம்பிச்சா, மறுபடியும் முருங்கைமரம் ஏறிக்குவான்.

அடுத்த என்ன செய்யப்போகிறான் இவன்? இன்னும் கொஞ்ச நேரம் இருப்பானா? இல்லை பேஷண்டை பார்க்க வந்தேன்னு முறுக்கிக்கிட்டு கிளம்பப் போறானா? ‘ எப்படி கேக்கறதுன்னு மனசுக்குள் மல்லுக்கட்டும்போது, அவனோ இயல்பாக சோபாவில் அமர்ந்தான்.

ரைட்டு... அவனே பேசட்டும், மறுபடியும் உளறி வாங்கிக்கட்டிக்க வேண்டாம் என அமைதியாய் இருந்தேன். அர்ஜூனோ சுவற்றில் இருக்கற பெயிண்ட், சோபா கவரு, டி.வி மேலயிருக்க போட்டோ, ஜன்னல் கம்பின்னு எல்லாவற்றையும் சுத்திச் சுத்தி பார்க்கிற மாதிரி சமாளிக்கிறான்.

என்ன பேசறதுன்னு யோசிக்கிறான். ‘நீயா ஆரம்பிக்கறவரைக்கும் தண்ணி குடிக்க கூட வாய் திறக்க மாட்டேன் ராசா' என்றபடி நானும் மெளனமாய் இருந்தேன்.

டிக்..டிக்..டிக்...நிமிடங்கள் கடக்கின்றன.

“சாப்பிட்டியா” என்று அமைதியைக் கலைத்தான்.

“ம்ம்ம்.”

“ அது நேற்றைக்கு... இன்னிக்கு சாப்பிட்டியா?” என்றான் விடாமல்.

................

“உன் மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுது. சாப்பிடலைன்னு, எந்த ஹோட்டலில் ஆடர் பண்ணட்டும்?” என்றான்.

“எனக்கு ஒன்னும் சாப்பாடு வேணாம்”ன்னு அடம் பிடித்தேன்.

‘’உடம்பு வேற லேசா சுடுது. ஒழுங்கா சாப்பிட்டு மாத்திரை போடு’’. அதட்டினான்.

‘’இவ்வளவு அக்கறை இருக்கவங்க ஏன் இத்தனை நாள் என்னை வந்து பார்க்கல?’’ என்றேன்.

……………………………………………..

‘’உங்களுக்கு, அன்னிக்கே என் நெம்பர் தெரியும். ஒரு மரியாதைக்காவது போன் பண்ணி எப்படி இருக்கேன்னு கேட்கலாமே? குறைந்த பட்சம் உங்க நெம்பர் தர்றதுக்காக வாட்ஸப்-ல ஒரு ‘ஹாய்’ சொல்லிருக்கலாமே?’’

……………………………………………………..

‘’கல்யாணம் ஆனதா, சொன்னவகிட்ட இனி என்ன பேசறதுன்னு நினைச்சிட்டிங்களா?’’ எனக் கேட்டதும்,

‘’வாட் த பக்’’ (அன்புள்ள அர்ஜூனா… தயவு செய்து கெட்ட வார்த்தை பேசாதே. அப்புறம் படிக்கிறவங்க தப்பா நினைப்பாங்க)

‘’சாரி… கல்யாணம் ஆன பொண்ணுகிட்ட, நட்போடு பேசக்கூடாதுன்னு எந்த நாட்டிலும் சட்டம் இல்லை. உனக்குத்தான் பேசத்தெரியும்ன்னு பேசாதே. வேலைல பிசியா இருந்தேன். அதான் வர முடியல. இன்னிக்குத்தான் ஹாஸ்பிட்டலில் இருந்து உன் நெம்பர் எடுத்தேன்’’ என அவன் சொல்லும் போது,

‘’நம்பிட்டேன்’’ என்றபடி அவன் முகத்தைப் பார்த்தேன்.

மை மைண்ட் வாய்ஸ் ‘அய்யோ, முறைக்கிறானே, முறைக்கிறானே! அமைதி அமுதினி அமைதி, அமைதிக்கெல்லாம் அமைதியா இரு’.

‘’சாப்பிட என்ன வேண்டும்’’ என்றான் மறுபடியும்.

‘’ஹோட்டல் சாப்பாடா சாப்பிட்டு போரடிக்குது’’

‘’சரி, எதாவது செய்றேன். முதல்ல போய் குளிச்சிட்டு வா. பஞ்சத்தில் அடிபட்டவ மாதிரி பரிதாபமா இருக்க’’ என்றான் அர்ஜூன்

‘தேங்க் காட், அவன் அன்பு அப்படியேதான் இருக்கு’ என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டபடி

குளித்துவிட்டு வரும்போது, யுடூயூப் பார்த்து தக்காளி ரசம் வைத்திருந்தான். ஆம்லேட் போட்டு இருவரும் சாப்பிட்டோம். அர்ஜூனுக்கு சமைக்கத்தெரியாதாம். அவசரத்துக்கு நூடுல்ஸ் போட்டு சாப்பிடுவானாம். எனக்காக மெனக்கெட்டு ரசம் வைத்திருக்கிறான் என்ற உணர்வே ஜிவ்வுன்னு இருந்தது.

‘’ஏங்க.அன்னிக்கு என்ன சொல்ல நினைச்சேனா?’’ என்று ஆரம்பிக்கும் போது,

‘’அமுதினி பிளிஸ், உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொல்றதை நான் நம்பறேன். இனி அதைப் பத்தி பேச வேண்டாம். மீறி நீ பேசினால், அதுதான் எங்கிட்ட கடைசியா பேசறதா இருக்கும். ரெண்டு பேரும் பக்கத்து ஊர்க்காரங்க. ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யற நண்பர்களா இருப்போம். அவ்வளவுதான்’’ என்று முடித்தான்.

மனதுக்குள், ‘உண்மையைச் சொன்னால் நிச்சயம் கோபப்படுவான். இப்போதைக்கு இப்படியே விடுவோம்’.

அர்ஜூனுக்கு விடுமுறை என்பதால், அன்று முழுவதும் என்னுடன் இருந்தான். என் குடும்ப ஆட்கள் தவிர்த்து, வெளி ஆள் ஒருவரோடு சோபாவில் ஒன்றாக அமர்ந்து சகஜமாக பேசுவது இதுவே முதல்முறை.

12 வது படிக்கும் போது, கூடப்படிக்கும் பொண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து, அந்தப்பொண்ணு அதை அவங்கம்மாகிட்ட தந்து, அவங்கம்மா இவங்கம்மாகிட்ட தந்து, அப்பா அடி பின்னி எடுத்திட்டாராம்.

அவன் சொல்லும் விதத்தைக் கேட்டு சிரித்ததில் கண்ணீரே வந்துவிட்டது. எந்தளவுக்கு விறைப்பா சீன் போடுறானோ, அந்தளவுக்கு சிரிக்கவும் வைக்கிறான். இவன் மட்டும் எப்படி, நண்பன், காதலன் என்று எல்லா காதாபாத்திரத்துக்கும் சிறப்பாக பொருந்திப் போகிறான்!

டி.வியில் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது,

‘மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமா

மணவறையில் நீயும் நானும்தான்

பூச்சூடும் நாளும் தோன்றுமா!

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்

உந்தன் உறவுதான் உறவு!

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்’
 
Top