Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஒற்றை கால் மண்டபம் EPISODE 26 FINAL (PART 1)

Advertisement

niranjana subramani

Well-known member
Member
26.

(இறுதி அத்தியாயம்)



“ என்ன???. இவன் அரசனா!!!!..... நீ என்ன சொல்ற ஹர்ஷா???” என குழப்பத்துடனும் அதிர்ச்சியுடனும் கிஷோர் வினவ

“ ஆமா கிச்சா. இதோ இங்க நிற்குறானே வேலு இவன் தான் தில்லைராஜன் பையன் வேலரசன்” என ஹர்ஷா ஆதிலிங்கமூர்த்தியின் வீட்டில் வேலை செய்யும் வேலுவை பார்த்து கூற

“ வேலரசனா!!!!.... நீ எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற ஹர்ஷா???”

“ கிச்சா, பாண்டியன் பையன் சேகரன் இன்னைக்கு போன் பேசுனப்போ சொன்னாரு. தில்லைராஜன் பையன் அரசனோட முழு பெயர் வேலரசன்னு. இவன்தான் நாம பார்குறப்ப எல்லாம் பண்ணையார் புகழ் பாடிகிட்டு இருந்தானே. இருந்தாலும் எனக்கு பெயரை கேட்டவுடன் இவன் மேல சின்ன சந்தேகம்.

ஆனா அதுக்குள்ள விசித்ராவை வனிதான்னு நினச்சு கொல்லப்போறப்ப இவனோட குரலை வச்சு இவன்தான் வனிதாவை கொல்லப்பார்த்த, நாம தேடுற அரசன்னு தெரிஞ்சுகிட்டேன்”
என ஹர்ஷா கூறி முடிக்க

“ தம்பி நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறிங்க??. இந்த வேலுவை வேலரசன்னு சொல்றிங்க. யாரு அந்த தில்லைராஜன்???. இந்த வேலு எதுக்கு என மகளை கொல்ல பார்க்கணும்????.” என குழப்பமாக கேட்டு இறுதியாக கோவமாக முடித்தார் ஆதிலிங்க மூர்த்தி.

“ சார் தில்லைநாயகியோட அண்ணன் தான் தில்லைராஜன். அப்புறம் அவரோட பையன்தான் இவரு” என வேலுவை சுட்டிக்காட்டிவிட்டு,

“ இவரு எதுக்கு இங்க வேலைக்காரரா இருக்கார்??. எதுக்கு வனிதாவை கொல்ல பார்த்தாருன்றதை இப்போ அவரே சொல்லுவாரு” என ஹர்ஷா சிறு நக்கல் கலந்த குரலில் கூறிய ஹர்ஷா

வேலுவை பார்த்து “ என்ன சொல்லலாம்ல வேலரசன் இல்லயில்ல பண்ணையாரோட விசுவாசி வேலு அவர்களே ஹ்ம்ம்” என சற்றே கடின குரலில் ஹர்ஷா வேலுவிடம் கூறினான்.

அதுவரை இங்கு நடந்ததை அதிர்ச்சியாகவும் கோவமாகவும் சற்றே யோசனையுடனும் பார்த்துக்கொண்டிருந்த வேலு ஹர்ஷா தன்னிடம் நக்கலாக கேள்வி கேட்டதும்,

“ என்ன???... என்ன..... சொல்ல சொல்றிங்க. ஹ்ம்ம். ஆமா நான்தான் வேலரசன். தில்லைநாயகியோட அண்ணன் பையன்” என வேலு கோவமாக கத்தி கூறினான்.

தொடர்ந்து “ அப்புறம் என்ன கேட்டிங்க??. நான் எதுக்கு வனிதாவை கொல்ல பார்த்தேன்னுதானே. ஒரு கொலைக்காரியை கொல்லாம வேற என்ன செய்றது சொல்லுங்க” என மீண்டும் வேலு கத்த அனைவரும் அதிர்ச்சியாகவும் குழப்பமாகவும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“ கொலைக்காரியா!!!!..... அதுவும் வனிதாவா!!!!.... நீ என்ன சொல்ற?????.....” என ஹர்ஷா சற்றே அதிர்ச்சியாக வினவ

“ ஆமா சார். அவ மட்டும் இல்ல. இதோ இங்க நிற்குறாரே இந்த ஊரு பெரிய மனுஷன் அவரும், அவரு மகன் அதான் அந்த நிலவரசன் தறுதலையும்தான் என் அரசிமா இறப்புக்கு காரணம்.

அதான்….. அதான்…. பழிவாங்க இவுகளை எல்லாம் என் கையால கொல்லணும்ன்னு வந்தேன்” என வெறிபிடித்தவன் போல கத்தினான் வேலு.

வேலு கூறியதை கேட்ட அனைவரும் சற்றே அதிர்ச்சியாக ஆதிலிங்க மூர்த்தியை காண;

ஆதிலிங்க மூர்த்தி “ இல்ல…. இல்ல…. நா… நான் கொல்லல அந்த மயிலரசியை நான் கொல்லல… இவன் ஏதோ பொய் சொல்றான்” என பதட்டமாகவும் அவசரமாவும் மறுத்தார்.

ஹர்ஷா வேலுவை பார்த்து, “ நீ சொல்றதுக்கு ஆதாரம் இருக்கா???. நாங்க எப்படி நம்புறது மயிலரசி இறப்புக்கு இவுங்கதான் காரணம்ன்னு??” என கேட்க

“ ஆதாரம்தானே சார். நான் தான் ஆதாரம்.” என கூற சிறிது நேர அமைதிக்கு பின்னர் வேலு தொடர்ந்து

“ சார் நீங்க நான் வேலரசன்னு சொன்னதுலையே தெரியுது என்னைய பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கருக்கும்ன்னு.
ஆனா எவ்வளவு தூரம் என்னைய பத்தி, என் குடும்பத்தை தெரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியல.

எங்க ஊருல நாங்க நல்ல செல்வாக்கான குடும்பம் சார் எங்க தாத்தாவுக்கு எங்க அத்தைனா உயிரு. நான் பிறந்துல இருந்து எனக்கு நாலு வயசு வரைக்கும் எங்க அம்மாகிட்ட இருந்ததைவிட என் அத்தைகிட்ட அதிகம் வளர்ந்தேன்.

எனக்கு நாலு வயசப்போ தான் என் தாய்மாமாவை கல்யாணம் பண்ணாம வேற யார்கூடவோ ஓடி போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் குடும்பத்துல ஒரே சண்டைதான்.

எங்க அம்மா என் அத்தைக்கூட பேசக்கூடாது, பார்க்கக்கூடாதுன்னு சொல்லி திட்டுனாங்க. ஆனா நான் அதை எல்லாம் காதுல வாங்காம எங்க அம்மாவுக்கு தெரியாம போய் எங்க அத்தைய பார்த்துட்டு வந்துடுவேன். அத்தையும் அதே ஊருல இருந்தது எனக்கு வசதியா போச்சு.

அத்தை வீட்டுலயும் என்னைய நல்லா பார்த்துக்கிட்டாங்க நான் எங்க அத்தை பார்க்கபோறது என் அப்பத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.” என ஒரு விதமான அயர்வான குரலில் கூறிக்கொண்டிருந்த வேலு திடீரென,

“ சார் அப்புறம் ஒரு வருசத்துல என் தேவதை பிறந்துட்டா என் அரசிமா. அப்படியே பார்க்க பூ குவியல் மாதிரி இருப்பா.”
என மென்மையான ஒரு பரவச குரலில் கூற ஆரம்பித்தான்.

எப்படியும் வாரத்துக்கு நாலு நாள் எங்க அம்மாவுக்கு தெரியாம என் அரசிமாவ பார்க்க போயிடுவேன் சார். அரசி வளர வளர அவளுக்கு அவுங்க அப்பா அம்மாவுக்கு அடுத்து நான் தான் எல்லாம். ஏன்னா அரசி சின்ன பிள்ளையில இருந்தே அமைதிதான். என் அத்தை பண்ணுன காரியத்துக்கு ஊருல யாரும் அதிகம் பேசிக்குறது இல்ல

அதனால நான் எப்போ அவளை பார்க்கபோனாலும் என் கூடத்தான் விளையாடுவா. அந்த வயசுல அவளுக்கு இருந்த ஒரே நட்பு நான் தான்.

அரசி பிறந்து அஞ்சு வயசு வரை எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா அதுக்கப்புறம் ஒரு நாள் ஊரைவிட்டு என் அத்தை மயிலரசியை கூட்டிட்டு போய்ட்டாங்க. அப்போ எல்லாரும் என்னென்னமோ காரணம் சொன்னாங்க.

அத்தையோட புருஷன் ஏமாத்திட்டாரு. அதனால ஊரைவிட்டு போய்ட்டாங்களோ இல்ல இந்த உலகத்தை விட்டே போய்ட்டாங்களோன்னு. ஆனா நானும் என் அப்பத்தாவும் முழுசா நம்புனோம் நிச்சயம் அத்தை தப்பான முடிவு எடுத்துருக்கமாட்டாங்கன்னு.

அதனால பெரிய ஆளா வந்தவுடன் என் அரசிமாவை தேடணும்ன்னு நினைச்சேன். அதுக்கப்புறம் என் தாத்தா கவலையிலையே இறந்துட்டாரு. அப்புறம் என் அப்பத்தாவும் எனக்கு பதினஞ்சு வயசு இருக்கும் போது நான் மயிலரசியை கல்யாணம் பண்ணிக்கணும் நான் தான் என் அத்தை குடும்பத்தை பார்த்துக்கணும்ன்னு சொல்லி சத்தியம் வாங்கிட்டு செத்து போய்ட்டாங்க.

என் பத்து வயசுல என்னைய விட்டு போன மயிலரசியை எப்படியாவது கண்டு பிடிச்சு என் கூடவே வச்சுக்கணும்ன்னு நினைச்சேன். ஆனா என் அப்பத்தா சத்தியம் வாங்குனப்புறம்தான் எனக்கு மயிலரசியை கல்யாணம் பண்ணிக்கணும் அப்போ தான் ஆயுசுக்கு அவளை நான் பிரிய வேண்டியது இல்லன்னு தோணுச்சு. அரசி எனக்கு சொந்தமானவ அவளை நான் எப்படியாவது கல்யாணம் பண்ணனும்ன்னு முடிவு பண்ணுனேன்.

அதுக்கடுத்து எங்க தொழிலையும் நஷ்டம் ஏற்பட நாங்க பிழைப்புக்காக ஊரு ஊரா சுத்த ஆரம்பிச்சோம். அது எனக்கு ரொம்ப வசதியா போச்சு. என் அத்தை குடும்பத்தை கண்டுபிடிச்சுரலாம்லன்னு ஒரு நம்பிக்கை.

அப்புறம் எனக்கு பதினெட்டு வயசு இருக்குறப்போ நாங்க மாணகிரியூருக்கு வந்தோம். அங்க எங்க அப்பாவுக்கு மில்லுல வேலை கிடைச்சதால நாங்க அங்கையே தங்கிட்டோம். அங்கதான் என்னோட படிப்பையும் தொடர்ந்து என் கல்லூரி படிப்பையும் முடிச்சேன்.

அப்புறம் வெளியூருல நான் வேலை தேடிகிட்டு இருந்தேன் அப்படியே என் அத்தை குடும்பத்தையும். ஆனா எனக்கு ரெண்டுமே கிடைக்கல வருசமும் ஓடிருச்சு சார்.”
என வேலு கூறிவிட்டு அமைதியாக தரையில் அமர்ந்து விட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.

அதனை பார்த்த ஹர்ஷா “ அப்புறம் எப்படி தில்லைநாயகி இங்க இருக்குற விஷயத்தை தெரிஞ்சுக்கிட்ட???” என மெதுவாக வினவ

“ என்னோட இருபத்தி நாலாவது பிறந்தநாளுக்கு என் நண்பர்களுக்கு ட்ரீட் குடுத்துட்டு , மாணகிரியூருல இருந்த சந்தைக்கு எங்க அம்மா வாங்க சொன்ன காய்கறி வாங்க போனப்போ தான் என் அத்தையோட சாயல்ல ஒரு நாற்பத்தி ஐந்து வயசு மதிப்புள்ள ஒரு பெண்ணை பார்த்தேன்.

ஒரு வேளை எங்க அத்தையா இருக்குமான்னு அவுங்களை தொடர்ந்து போனப்போ அவுங்க அரங்கநாதபுரத்துத்துக்கு போற பேருந்துல போறதை பார்த்து நானும் அடுத்த நாளே அரங்கநாதபுரத்துக்கு வந்தேன்.

இங்க வந்தப்புறம் எங்க அத்தையோட பெயரை சொல்லி சும்மா ரெண்டு பேருகிட்ட விசாரிச்சப்போ. தில்லைநாயகி இந்த ஊரோட மருத்துவச்சின்னு சொன்னாங்க அப்போவே முடிவு பண்ணிட்டேன் என்னோட அத்தைதான் இங்க இருக்குற மருத்துவச்சின்னு.

அப்புறம் அவுங்க வீட்டை கண்டுபிடிச்சு அவுங்களுக்கு தெரியாம பார்த்ததுல என்னோட அத்தைதான்னு உறுதியாகிடுச்சு. என்னோட மயிலரசியையும் இங்க ஒத்தை காலு மண்டபத்துலதான் முதல் முதலா பார்த்தேன் சார்.

அந்த மண்டபத்துல உட்கார்ந்து எதோ எழுதிக்கிட்டு இருந்தா. என் அத்தையையும் அரசியையும் பார்த்தவுடன் பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ற முடிவுல தான் இருந்தேன்.

ஆனா என் அரசிமாவை பார்த்தவுடன் என் மனசுக்குள்ள எதோ பரவசம். அவளை பார்த்துகிட்டே ரசிச்சுகிட்டே இருக்கனும் போல ஒரு எண்ணம். அன்றைக்கு ராத்திரி முழுக்க அரசியோட முகம் மட்டும் தான் என் கனவிலும் நினைவிலும் மனதிலும் இருந்துச்சு.

,
திடீர்ன்னு என் அரசிமாக்கிட்டயும் எனக்கான தேடல், எனக்கான காதல் இருக்குமான்னு ஒரு கேள்வி என் மனசில வந்துச்சு. அதனால ஒரு முடிவு எடுத்தேன் சார்” என வேலு கூறி முடிக்க

“ என்ன முடிவு???” என கிஷோர் வினவினான்

“ மயிலரசியை என்னோட அரசியா எனக்கான அரசியா முதல்ல மாத்தணும். அதாவது அவளை என்னைய காதலிக்க வைக்கணும்ன்னு முடிவு பண்ணினேன்.

வீட்டுல எனக்கு வெளி ஊருல வேலை கிடைச்சுருக்குறதா பொய் சொல்லி இங்க ஆதிலிங்க மூர்த்திக்கிட்ட வேலைக்குசேர்ந்தேன்”

“ நீ வேற வேலை எதாவது செஞ்சுருக்கவேண்டியதுதானே ஏன் ஆதிலங்க மூர்த்திக்கிட்ட வேலைக்கு சேர்ந்த???” என ஹர்ஷா காரணம் அறியும் பொருட்டு வினவ

“ அது நான் மயிலரசியை கவனிச்ச வரைக்கு அவள் வீட்டை தவிர அவள் அதிகம் இருக்குற இடம் அந்த ஒத்தை காலு மண்டபம் அப்புறம் வனிதாவை பார்க்க இங்க ஆதிலிங்க மூர்த்தி வீட்டுக்கு வந்துடுவா. அதான் இங்கையே வேலைக்கு சேர்ந்தா அடிக்கடி அவளை பார்க்கலாம் பழக ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு நினைச்சு சேர்ந்தேன் சார்”

“ ஓ!!!!”
என கூறிய ஹர்ஷா அடுத்து என்ன கேட்பது என புரியாது தயங்க வேலுவே தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.

“ ஆனா இங்க வேலைக்கு சேர்ந்து ஆறுமாசம் வரைக்கும் அரசிகிட்ட ஒருவார்த்தை கூட பேச முடியல சார். நானும் அவகிட்ட தனியா பேச வாய்ப்பு கிடைக்குமான்னு காத்துகிட்டு இருந்தேன்.

அப்போ ஒரு நாளு அந்த கோவில் குளகரையில உட்கார்ந்து சோகமா அழுதுகிட்டு இருந்தா. நான் பதறிப்போய் என்னனு விசாரிக்கலாம்ன்னு கிட்ட போக நினைக்கையில், வனிதா வந்து என்னனு கேட்டு விசாரிக்க ஆரம்பிச்சா.

நானும் என்ன விஷயம் எதுக்கு இவ்வளவு சோகமா இருக்கான்னு தெரிய மறைஞ்சு இருந்து அவுங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிச்சேன். அப்போதான் எனக்கு தலையில இடிவிழுற மாதிரி ஒரு விஷயத்தை பத்தி பேசிகிட்டு இருந்தாங்க.

அது நிலவரசனை மயிலரசி விரும்புறதாகவும் எங்க அத்தை அவுங்க காதலுக்கு ஒத்துக்கலைன்னு சொல்லி அழுதுகிட்டு இருந்தா. அப்போ இந்த வனிதா ஆதிலிங்க மூர்த்திக்கிட்ட பேசி கல்யாணம் நடத்தி வைக்குறேன்னு சொல்லி ஆறுதல் படுத்துறா சார்.

நீங்களே சொல்லுங்க யாருக்கு சொந்தமானவளை யாரு கட்டிக்குறது. அடுத்து என்ன செய்றதுன்னு எனக்கு தோணலை.

அப்போதான் கவனிச்சேன் என்னைய மாதிரியே மயிலரசியும் வனிதாவும் பேசிக்குறதை மாரியும் கவனிச்சதை. அதனால நான் போய் மாரிகிட்ட பேசி தூண்டிவிட்டு ஆதிலிங்க மூர்த்திக்கிட்ட சொல்ல வச்சேன்.

ஏனா இந்த பெரிய மனுஷன் மகன் ஒரு ஏழைவீட்டு பொண்ணை காதலிச்சா ஒத்துக்க மாட்டாரு நாசுக்கா சொல்லி புரிய வைப்பாருன்னு நினைச்சேன்.

அதே மாதிரி மயிலரசியை சந்திக்க ஒத்தை காலு மண்டபத்திற்கு வந்தாரு. ஆனா நான் நினைச்ச மாதிரி இல்லாம நிலவரசன் காதலுக்கு பச்சை கொடி காட்டுறாரு.

எனக்கு அன்னைக்கு வந்த ஆத்திரத்துக்கு அன்னைக்கே இந்த பெரிய மனுஷனை என் கையால கொன்னிருப்பேன். இருந்தாலும் எனக்கு ஒரு நம்பிக்கை நாம ஏன் நேரடியா மயிலரசிகிட்ட பேசி பார்க்க கூடாதுன்னு.

அதே மாதிரி ஆதிலிங்க மூர்த்தி கிளம்பி போனவுடன், இந்த உலகத்துலயே இவள்தான் ரொம்ப சந்தோசமா இருக்குறமாதிரி அப்படி பூரிச்சு போய் நின்னுகிட்டு இருந்தவ கிட்ட போய் பேச ஆரம்பிச்சேன் சார்” என அன்றைய நிகழ்வை நினைவு கூற ஆரம்பித்தான்.

“ அரசி……” என வேலு சற்று மெதுவாக அழைக்க

அதுவரை ஆதிலிங்க மூர்த்தி சம்மதம் கூறி சென்றவுடன் கனவில் நிலவரசனுடன் உலாவந்துகொண்டிருந்த மயிலரசி, கவனிக்காமல் இருக்க அதில் சற்று கடுப்பான வேலு

“ அரசி…” என உரக்க கடின குரலில் அழைத்தான்.

அதில் திடுக்கிட்ட மயிலரசி அங்கு யாரோ நிற்பதை பார்த்து யாரு என தன் புருவம் சுருக்கி யோசிக்க,

அவளின் யோசனையை பார்த்து மேலும் கடுப்பான வேலு,

“ என்ன தெரியலையாக்கும் எப்படி தெரியும் கண்ணுக்கு ஆகாதவங்க தானே உனக்கு தெரியும்” என வேலு கூற

எதுவும் புரியாமல் இருந்த மயிலரசி “ என்ன சொல்றிங்க??. எனக்கு புரியல” என கூற

“ புரியலையா???.. புரியாமத்தான் காதல் செய்றீங்களாக்கும்”
என நக்கலாக வேலு வினவ

வேலுவின் பேச்சில் கோவம் அடைந்த மயிலரசி,

“ என்ன உளறிக்கிட்டு இருக்கீங்க????. உங்களுக்கு தேவை இல்லாத விசயத்தில் தலையிடாதீங்க” என கோவமாக கூறிவிட்டு மயிலரசி அங்கிருந்து நகர,

“ என்ன நான் தேவை இல்லாத விசயத்தில் தலையிடுறேனா???. ஏம்மா சொல்லமாட்ட உன்னையே இத்தனை வருசமா மனசுல நினைச்சுகிட்டு கண்டவன்கிட்ட எல்லாம் வேலைக்காரனா இருக்கேன்ல. நீ இதுவும் சொல்லுவ இன்னமும் சொல்லுவ” என வேலு கடித்த பற்களுக்கிடையில் கூற,

அதனை கேட்ட மயிலரசி புரியாது ‘ வேலைக்காரனா!!!!’ என சற்றே யோசித்து ஆதிலிங்க மூர்த்தி வீட்டில் வேலுவை பார்த்தது நினைவு வர,

‘ ஓ இவரு ஆதிலிங்க மூர்த்தி ஐயா வீட்டுல வேலை பார்குறவருல பெயர் கூட அன்றைக்கு என்னமோ சொன்னாளே வனிதா??. ஹ்ம்ம்… ஹான்…!! வேலு.

இவரு எதுக்கு என்கிட்ட இப்படி கோவமா லூசு மாதிரி பேசிகிட்டு இருக்காரு??’ என மனதில் யோசித்துக்கொண்டு,

‘ என்னவா இருந்தால் என்ன இவரோட பேச்சும் தோரணையும் சரி இல்ல இதை நாம அப்புறம் வனிதா கிட்ட சொல்லிக்கலாம். இப்போ இங்க இருந்து கிளம்பிரலாம்’ என ஒற்றை கால் மண்டபத்தில் இருந்து மயிலரசி கிளம்ப எத்தனிக்க,

அவளின் முகபாவனைகளை வைத்தே அவளின் எண்ணத்தை புரிந்துகொண்ட வேலு,

“ என்ன இங்க இருந்து கிளம்ப பார்க்கிறியாக்கும்???. ஆனா நான் உன்னைய அத்தனை சுலபமா விட்டுறமாட்டேன். நீ எனக்குதான் எனக்கு மட்டும்தான்” என வேலு கூறிக்கொண்டே வழியை மறிக்க

அதனை கேட்ட மயிலரசி சற்றே பயந்து, “ நீங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க???. முதல்ல வழிய விடுங்க” என கூறி வேலுவை சுற்றிக்கொண்டு நகர பார்க்க

உடனே அவளின் கையை பிடித்த வேலு,

“ பேசிக்கிட்டு இருக்கேன்ல. நீ என்ன என்னைய கொஞ்சம் கூட மதிக்காம போக பார்க்குற. இது சரி இல்ல என் அத்தை பெத்த மகளே” என கோவ குரலில் கூற

“ என்ன???. அத்தையா!!!!.....” என அதிர்ந்து விழித்தாள் மயிலரசி

பின் “ நீங்க என்ன சொல்றிங்க???”

“ ஆமா, உன் அம்மாவோட கூட பிறந்த அண்ணன் தில்லைராஜன் பையன் வேலரசன்” என தன்னை வேலு அறிமுகபடுத்த,

அதில் இதுவரை வேலு பேசியதை அனைத்தையும் சற்றே ஒதுக்கி வைத்து விட்டு தன் அன்னையின் உறவு என அறிந்ததில் மகிழ்ந்து.,

“ நீ…. நீங்க… என் மாமா பையனா!!!...... உங்கள பார்த்தா அம்மா ரொம்ப சந்தோசம் படுவாங்க” என படபடவென பரபரப்பாக மயிலரசி பேச

“ அப்போ உனக்கு என்னைய பார்த்ததுல சந்தோஷம் இல்ல அப்படித்தானே” என வேலு கேட்க

' இவரு என்ன இப்படி பேசுறாரு' என மனதில் எண்ணிக்கொண்டு,

“ என்ன நீங்க இப்படி சொல்றிங்க. எனக்கும் உங்கள பார்த்ததுல சந்தோசம்தான். இத்தனை வருசத்துல எங்களை தேடி வந்த சொந்தம்ல. எப்படி சந்தோசம் இல்லாம இருக்கும்” மயிலரசி உண்மையான மகிழ்ச்சியுடன் கூற

“ உனக்கு சொந்தம் அப்படின்றதால நீ சந்தோச படக்கூடாது. உனக்கு மட்டுமே சொந்தமாக போறவன் அப்படின்றத்துல சந்தோசபடனும்” என வேலு கூற அதைக்கேட்டு விழித்த மயிலரசி

“ சொந்தமாக போறவனா!!!!......” என அதிர

“ ஆமா உன்னைய கட்டிக்கிட்டு உனக்கு சொந்தமாகி உன்னைய சொந்தம் கொண்டாட போறவன்” என இதுவரை இருந்த கடுமை மறைந்து உல்லாச மனநிலையுடன் வேலு கூற,

அதனை கேட்டு “ இல்ல….. இல்ல….. இது நடக்காது” என அதிர்ச்சியில் கத்தினாள் மயிலரசி.

“ ஏன் நடக்காது???. ஹ்ம்ம்… ஓ!!... நீ அந்த நிலவரசனை விரும்புரில. ஆனா பாரேன் நீ எனக்குதான்னு நான் முடிவு பண்ணிட்டேன். அதனால அவனை நீ மறந்துட்டு என்னைய கல்யாணம் பண்ற வழிய பாரு. என்ன??” என்ற வேலுவின் பேச்சில் கோவம் அடைந்த மயிலரசி,

“ உங்க பேச்சு ஒன்னும் சரி இல்ல நீங்க அம்மாவை பார்க்கணும்ன்னா வீட்டுக்கு போய் பார்த்துக்கோங்க. அப்புறம் என் வாழ்க்கையில என்ன நடக்கணும்ன்றதை நான் தான் முடிவு பண்ணனும் நீங்க இல்ல” என கூறி மயிலரசி அங்கிருந்து ஒரு இரண்டடி எடுத்து வைக்க

“ நான் இவ்வளவு சொல்றேன் நீ கண்டுக்காம போனா என்ன அர்த்தம் அரசி. இப்போ நீ நிக்கல நான் என் கையில் இந்த கத்தியை வைத்து குத்திக்குவேன்” என வேலு உறுதியான குரலில் கூறினான். அந்த உறுதியை பார்த்து பதட்டம் அடைந்த மயிலரசி தன் நடையை நிறுத்தி வேகமாக திரும்பி வேலுவை கண்டாள்.

அங்கு கையில் கத்தியை வைத்துக்கொண்டு இடதுகையில் மணிக்கட்டில் அறுக்க தயாராக நின்றுகொண்டிருந்தான். அதில் பதட்டம் அடைந்த மயிலரசி வேகமாக அவனின் அருகில் சென்று,

“ ஏன் இப்படி பண்றீங்க????. நான் வேற ஒருத்தரை விரும்புறதை தெரிஞ்சும் நீங்க உங்களைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு மிரட்டுறீங்க” என கலங்கிய விழிகளோடு வினவ

அதில் “ என்ன அரசிமா எதுக்கு இப்போ கண்ணு கலங்குற நான் நீ ஒருத்தரை விரும்புறதுக்கு முன்னாடி இருந்து உன்னைத்தான் விரும்பினேன். அப்போ என்னோட நேசம் தானே உண்மை .

கொஞ்ச நாள் பழகுனதுக்காகவே அவனை விட்டு தரமாட்டேன்னு சொல்ற. அப்போ கிட்டத்தட்ட பதிநாலு வருசமா உன் நினைப்பா, உன்னையை தேடுறதுதான் என் குறிக்கோளா வாழ்ந்துருக்கேன். அப்படி இருக்குறப்போ எப்படி நான் இன்னொருத்தனுக்கு உன்னையே விட்டுக் குடுக்கமுடியும் சொல்லு”

“ தயவு செய்து இப்படி எல்லாம் பேசாதீங்க நீங்க மனசுல நினைச்சு ஆசைப்பட்டதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். எனக்கு யாரை பிடிச்சுருக்கோ, யார் மேல காதல் இருக்கோ அதே நேரம் அவுங்களும் என்னையை விரும்பிறதாலதான் கல்யாணம் பண்ண முடிவு செஞ்சோம்.

அதேநேரம் ஒரு வேளை நிலவனுக்கு என் மேல காதல் இல்லாம இருந்தால் நிச்சயம் நான் அவரோட வாழ்க்கையில குறுக்க போயிருக்கமாட்டேன். அதே மாதிரி நான் உங்கள விரும்பாத பட்சத்துல நீங்க தேவை இல்லாம குளறுபடி பண்ணாம போய் உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்க” என பொறுமையாக கூறிவிட்டு அங்கிருந்து நகர பார்த்தாள் மயிலரசி.

“ என்ன பேசி முடிச்சிட்டியா இங்க பாரு நான் ஆயுசுக்கு உன் பேச்சை கேட்கனும்னுதான் ஆசைப்படுறேன். அதுக்கு நீ என்னையை கல்யாணம் பண்ணிட்டு தாராளமா எவ்வளவு வேணும்னாலும் பேசு சரியா” என வேலு கூற

மயிலரசி கூற வருவதை புரிந்துகொள்ளாது வேலு பேச கோவமான மயிலரசி,

“ ஏய்!!!... நீ என்ன லூசா????.. கத்தியை வச்சுருக்கியே என்னால நீ உன்னைய எதுவும் காயப்படுத்திடுவன்னு நினைச்சு பொறுமையா பேசுனா, நீ சும்மா சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்க. நீ என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ அதை பத்தி எனக்கு கவலை இல்ல” என கத்திவிட்டு அங்கிருந்து நகர பார்க்க

“ என்ன வேணும்னாலும் பண்ணிக்கவா???. அப்போ எனக்கு என்ன நடந்தாலும் உனக்கு கவலை இல்லையா???. ஆனா உனக்கு ஒன்னுனா நான் எப்படி துடிப்பேன் தெரியுமா???.பாரு எப்படி துடிக்குறேன்னு….” என வேகமாக தன் கையில் இருந்த கத்தியை வைத்து வேலு மயிலரசியை தாக்க போக,

அதனை தடுக்க மயிலரசி முயற்சி செய்தாள். அதில் கத்தி மயிலரசியின் வலது கையின் மணிக்கட்டில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி அதிகப்படியான ரத்தம் வெளியேற ஆரம்பித்தது.

அதை கவனிக்காத வேலு “ இல்ல நான் உன்னைய காயப்படுத்த மாட்டேன். நீ அழுதா எனக்கு தாங்காது” என கூறி கொண்டே பெரிய தூணின் அருகில் போய் நின்றுகொண்டான்.

“ அரசிமா நீ ஏன் என்னையை புரிஞ்சுக்க மாட்டேங்குற???. நீ இல்லைனா எனக்கு ஒண்ணுமே இல்ல வாழ்க்கையில. நான் என்ன செய்யட்டும் சொல்லு??” என கத்திக்கொண்டிருந்தவன்,

திடீரென அந்த தூணை பார்த்து, “ அன்றைக்கு அந்த வனிதா என்ன சொன்ன??. இந்த ஒத்தைக்காலு மண்டபத்துல உன் பெயரும் அந்த நிலவரசன் பெயரும் எழுதணும்ன்னுதானே. ஆனா பெயருல கூட உன் பெயர் பக்கத்துல என் பெயருதான் வரணும்” என கூறி தன் கையில் இருந்த கத்தியை வைத்து அரசன் அரசின்னு கிறுக்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே முதல் நாள் தில்லைநாயகியுடன் சண்டையிட்டு சாப்பிடாதது, அதோடு ரெண்டு நாளாக தன் காதல் கைகூடுமா என்ற கவலையில் தூக்கம் இல்லாமல் தந்த சோர்வு, திடீரென ஏற்பட்ட காயம், அதிகப்படியான ரத்தம் என மயிலரசியை கத்தவிடாமல் மயக்க நிலைக்கு இழுத்துச்சென்றது. இதனால் இங்கு மயிலரசி உயிருக்கு போராடுவது தெரியாது கிறுக்கிக்கொண்டிருந்தான் வேலரசன்.

பிறகு ரொம்ப நேரம் சென்று வேலு மயிலரசியை காண அதுக்குள் அவளின் உயிர் உடலைவிட்டு பிரிந்திருந்தது. அதனை கண்ட வேலு கதறி அழுது அவன் உயிரையும் விட எண்ணுகையில் திடீரென “ இல்ல இல்ல நான் சாக மாட்டேன். நம்மள சேரவிடாம பண்ண நிலவரசன்,வனிதா, ஆதிலிங்க மூர்த்தி எல்லாரையும் பழிவாங்கிட்டு உன் கூடவே வந்துடுறேன்” என முடிவெடுத்து ஆதிலிங்க மூர்த்தி வீட்டிற்கு மீண்டும் வேலைக்காரனாக வந்தான் என வேலு கூறி முடித்தான்.

இதனை கேட்ட அனைவரும் அமைதியாகவும் கோவமாகவும் வேலரசனை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஹர்ஷா “ அப்போ நிலவரசனோட இன்றைய நிலைமைக்கும் நீ தான் காரணமா???” என
கேட்க

“ நானா!!!... ஹா… ஹா…” என சத்தமாக சிரித்த வேலு,

“ அவனோட இந்த நிலைமைக்கு என் அத்தை தான் காரணம்” என கூற

“ என்ன???... மருத்துவச்சி தில்லைநாயகியா!!....” என ஆதிலிங்க மூர்த்தி அதிர்ச்சியாக

அங்கிருந்தவர்களுக்கு அதே கேள்வியுடன்தான் வேலரசனை நோக்கினர்.

“ ஆமா என் அத்தை தில்லைநாயகிதான்” என வேலரசன் கூற

“ தில்லைநாயகி என்ன பண்ணுணாங்க??.இப்போ அவுங்க எங்க??...” என ஹர்ஷா கேள்வி எழுப்பினான்.



இதற்கான பதிலை அடுத்த பகுதியில் பார்க்கலாம்

( ஒத்தை கால் மண்டபம் முடியமாட்டேன்னு ஒத்தை காலுல நிக்குது நான் என்ன செய்யட்டும்.sorry for the delay friends.and thanks for the supporting சீக்கிரம் அடுத்த பகுதியையும் குடுத்துடுறேன் )























 
Top