என் ஆயுள் ரேகை நீயடி 17

Advertisement

Sagee Elumalai

Member
Member
Chapter 17
நீ கண்டது என்னவோ
அணை நிரம்பி வழியும்
உபரி நீரைத்தான்.
என் காதல் இன்னும்
அணைக்கட்டுக்குள் தேங்கி நிற்கிறது

உன்னை மூழ்க செய்ய..

குமுறி அழுது கொண்டிருந்த மகளை ஆதூரமாக தடவி கொண்டிருந்த அருணா, “கவி எதுக்கு இந்த அழுகை” என்றார் மகளிடம்.

அவர் கேள்வியில் விலுக்கென நிமிர்ந்த மேகவி, “ஏம்மா ஏன் இப்படி பண்ண” என்று தாயை பார்த்து கேட்டாள்.

அவள் கேள்வியில் கொஞ்சமும் அதிராமல் இருந்த அருணாவோ, மகள் தானே பேசட்டும் என்று அவளையே பார்த்தார்.

“உனக்கு எதுவுமே தெரியாதில்லை, எனக்கு வீராவை பார்த்தப்பவே பிடிச்சு போச்சு, அவர் இருந்த வரைக்கும், என்னவோ அவரை பிடிக்காத மாதிரி தான் இருந்தேன். ஆனா உள்ளுக்குள்ள, அவரோட மல்லுக்கட்டி சண்டை போடறதை கூட ரசிச்சேன். அவர் இங்கே இருந்தப்ப தான் நீ.. நீங்க சந்தோஷமா இருந்தீங்க, உங்க சந்தோஷத்துக்கு காரணமான அவரை எனக்கு ரொம்ப பிடிச்சது. அன்னைக்கு, என்னை அவர்கூட போக சொன்னீங்க உங்களையும் அவரையும் நம்பி மட்டும் தான் போனேன்னு பொய் சொல்ல மாட்டேன். எனக்கே அவர் கூட போக பிடிச்சிருந்தது. அதனால தான் போனேன். அங்கே போய்ட்டு வந்தப்ப எவ்வளவு சந்தோஷமா இருந்தேன் தெரியுமா. எப்பவும் ஒரு பொண்ணை தேவதையா நினைக்கிற ஒருத்தனை விட தனக்கு சமமா மதிக்கிற ஒருத்தனை தான் எந்த ஒரு பொண்ணும் விரும்புவா. நானும் அப்படித்தான் வீரா மேலே... அது என்னை அறியாம எல்லாம் விரும்பலைம்மா, எனக்கு நல்லா தெரிஞ்சே தான் அவரை விரும்பினேன். ரொம்ப நம்பிக்கையானவரா தெரிஞ்சார், அதனால கூட இருக்கலாம். ஆனா அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேருமே எனக்கு துரோகம் தான் செய்திருக்கீங்க. உங்களுக்கு பெத்த மகளை விட உங்களுக்கு உங்க அண்ணன் மகன் பெருசா இருக்கலாம், ஆனா என்னோட லைப் அதை நீங்க மட்டுமே, இல்லை இல்லை நீங்க ரெண்டு பேர் மட்டுமே எப்படி முடிவு பண்ணுவீங்க. அவர் அவர் என்னோட நம்பிக்கையை, அவரை நம்பி வந்த பொண்ணோட நம்பிக்கையை எப்படி உடைக்கலாம். அவரை நான் விரும்பினேன்றது வேற விஷயம் ஆனா, அதுக்காக ஏமாத்தி கல்யாணம் பண்ணலாமா சொல்லுங்க”.

“நான் உங்களுக்கு எல்லாம் ஒரு ஆப்ஜெக்ட் அ, ஒரு பொருளா என்னை அங்கேயும் இங்கேயும் தூக்கி போட்டு விளையாடுவீங்களா. உங்க ஃபேமிலிக்கு, அப்பாவுக்கு பிரெச்சனை அதனால என்னை யூஸ் பண்ணிக்கிட்டீங்கள்ள, ஆனா நான் ... ஆமா எனக்கு அப்பா தான் முக்கியமா தெரிஞ்சார், என்னோட அப்பாவை அவங்க அசிங்கப்படுத்த என்னை ஆயுதமா பயன்படுத்த நினைச்சா நான் எப்படி சும்மா இருப்பேன். அதனால தான் அப்படி செஞ்சேன். ஆனா அதை என்னால முழுசா ஏத்துக்க முடியலையே” என உடைந்து அழுதாள்.

மகள் எதை சொல்கிறாள் எதற்காக இப்படி அழுகிறாள் என்றெல்லாம் அருணா கேட்கவில்லை அவள் போக்கில் சொல்ல விட்டார், அதே போல அழவும் விட்டார்.

“அப்பாவுக்காக வீராவை பழி வாங்கணும், எங்கப்பா எங்கேயும் தலை குனிய கூடாதுன்னு நினைச்சேன். எங்கப்பாவை அவங்க வீட்டு வாசல்ல நிக்க வைக்கனும்ற அவங்க எண்ணத்தை நடக்க விட கூடாதுன்னு நினைச்சேன். அதனால வீராவை விட்டு விலகனும், அதுவும் அவருக்கு சரியான பதிலடி கொடுத்து விலக நினைச்சேன். ஆனா ஆனா அது இவ்வளவு வலிக்கும்னு நான் நினைக்கலைம்மா, அவர் பக்கத்திலே இன்னொரு பொண்ணை அய்யோ.. என்னால.. நினைக்கவே.. முடியலையே” என கதறினாள்.

ஏதோ நடந்திருக்கிறது ஆனால் அது என்ன ஏது என்று கேட்கவில்லை அருணா, மருமகன் மீதான அவரது நம்பிக்கை என்றுமே வீண் போகாது என்று அவருக்கு தெரியும். மகள் இந்த அளவுக்கு கணவனை நேசிக்கிறாள் என்றாளே அதற்கு அவன் மீதான காதல் தானே காரணமாக இருக்க முடியும். அந்த விதத்தில் மகள் மனதில் அவள் கணவன் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறான் என்பது அவருக்கு சந்தோஷமே.

அழுதபடியே இருந்த மகளை மெதுவாக எழுப்பி அறைக்கு அழைத்து சென்றார். அங்கே அவளை படுக்க வைத்து அருகேயே அமர்ந்து இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அரட்டல் குறைந்து மெல்ல உறக்கத்தை தழுவினாள் மேகவி.

மெதுவாக அவள் அறைகதவை சாற்றி விட்டு வெளியே வந்தவர், போனை எடுத்து வீராவுக்கு அழைத்தார்.

முதல் ரிங்கிலேயே போனை எடுத்தவன், “சொல்லுங்க அத்தை” என்றான்.

“வீரா, என்னடா இது, என் பொண்ணு கதறி துடிக்கிறா அதை பார்க்கவா எல்லாத்தையும் மீறி உனக்கு கட்டி வச்சேன்”. என்றார் கலங்கிய குரலில்.

“அத்தை, இது எனக்கும் என்னோட பொண்டாட்டிக்குமான பிரெச்சனை. எது எப்படி இருந்தாலும் எனக்கு அவ அவளுக்கு நான் இதை யாராலயும் மாத்த முடியாது. நீங்க இதை எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க” என்றான் பொறுமையாக.

“வீரா, கவி இப்படி அழுததே இல்லைடா, ஆனா இன்னைக்கு உன்னை நினைச்சு உடைஞ்சு போய் அழறா”

“அத்தை, அவ என்னோட பொண்டாட்டி அத்தை நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன். காலையிலே அங்கே இருப்பேன் நீங்க அவளை கிளம்பி இருக்க சொல்லுங்க” என்றவன் வைத்து விட்டான்.

நிச்சயம் அண்ணன் மகன் சொன்னதை செய்வான் என்று அருணாவிற்கு தெரியும். இதில் நல்லதொரு விஷயம் என்னவென்றால் மேகவினி அவள் கணவன் மீது வைத்திருக்கும் காதலை புரிந்து கொண்டது தான். எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டவர் மீண்டும் ஒரு முறை மகளை பார்த்து விட்டு தனது அறைக்கு சென்றார்.

காலையில் நேரமே எழுந்து அமர்ந்து இருந்தாள் மேகவி, இரவெல்லாம் நன்றாக உறங்கினாளா என்று கேட்டால் தெரியாது, ஆனால் இருந்த மனஉளைச்சலுக்கும், அழுததும் சேர்ந்து உடல் அசதியில் ஓய்ந்து இருந்தது. ஆனால் மனம் அது உறங்கி இருக்கவில்லை, அவன் நினைவுகளிலேயே உழன்று கொண்டிருந்தது.

காலையில் கண் விழித்ததில் இருந்து சூனியத்தை வெறித்தபடி அமர்ந்து இருக்கிறாள். கண்ணில் அவள் கண்ட புகைப்பட காட்சியே திரைப்படம் போல ஓடிகொண்டிருக்கிறது.

அம்மா வந்து அவளை பார்த்து விட்டு, “கவி எழுந்து குளிக்க போ” என்று கூறி விட்டு சென்றார்.

அப்பா வந்து பார்த்தவர், “மேகா என்னடா ஒரு மாதிரி இருக்க, டையர்டா இருந்தா இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு டா” என்று அவள் தலையை வருடி விட்டு சென்றார்.

சஞ்சு வந்து பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் சில நிமிடங்கள் நின்று விட்டு சென்று விட்டான்.

இது எல்லாமே அவள் கண்களில் பதிந்ததே தவிர கருத்தில் பதியவில்லை, அப்படியே அமர்ந்து இருந்தாள்.

சிறிது நேரத்திலேயே வாசலில் ஹாரன் ஒலித்தது, அப்போது தான் உள்ளே ஏதோ திடுக்கென்று பிறந்தது. கண்கள் சூனியத்தை விட்டு ஜன்னலுக்கு வெளியே பார்வையை செலுத்தியது. வீரா தான் வண்டியில் இருந்து இறங்கி கொண்டிருந்தான்.

அப்பாவும் சஞ்சயும் வாசலுக்கு விரைவது தெரிந்தது, இவளும் எழுந்து போக நினைக்கிறாள் ஆனால் அவனை எப்படி நேரில் எதிர்கொள்வது என்று மனம் முதல் முறையாக தடுமாறி நிற்கிறது.

“என்ன வேணும்” இது அப்பா.

“ம்ம், என் பொண்டாட்டி” இது வீரா

“அப்படி யாரும் இங்கே இல்லை”

“ஒரு வேளை உங்களுக்கு தெரியாம இருக்கலாம் மாமனாரே” என்றவன் காரில் இருந்த ஹொரணை அழுத்துகிறான்.

“இங்கே பாரு, என பொண்ணு இனி உன் கூட வர மாட்டா, முதல்ல இடத்தை காலி பண்ணு”

“அட, மாமனாருக்கு அன்னைக்கு இல்லாத வீரம் இன்னைக்கு வந்திருக்குனனா, பொண்ணு தந்த தைரியமா தான் இருக்கணும். ஆனா பாருங்க அதெல்லாம் இப்போ செல்லுபடி ஆகாது” என்றவன் தொடர்ந்து ஹொரணை அழுத்தினான்.

“இப்போ இங்கே இருந்து போக போறியா இல்லையா” என சுகுமார், கேட்கும் போதே வெளியே வந்திருந்தாள் மேகவினி.

இவர் மகளை பார்க்க, “அப்பா நான் கிளம்பறேன்” என்றாள் அவள்.

“மேகா நீ ஏன்மா போற” என்றவர் அதற்கு மேல் தங்கள் திட்டத்தை பற்றி விரிவாக பேச முடியாததில் அப்படியே நிறுத்தி மகளை பார்த்தார்.

“இல்லப்பா நான் போறேன்”
“ஆனா மேகா”, என்று அவர் துவங்கும் போதே “மேகவினி வீரா பத்ரன்” என்று திருத்திய வீரா, போலாம் என்று விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். சஞ்சு இவர்களையே பார்த்து நிற்க, அவனை பார்த்து மட்டும் தலையசைத்தவன், ஜன்னல் வழியே பார்த்து கொண்டிருந்த அத்தையிடம் ஒரு பார்வை பரிமாற்றத்துடன் வண்டியை கிளப்பி இருந்தான்.

மகள் ஏதும் பேசாமல் கிளம்பியதில் இருந்து, அவளுக்கு வேண்டிய ஆதாரங்கள் கிடைக்கவில்லையோ அதை சேகரிக்க தான் மீண்டும் அவனுடன் செல்கிறாள் போல என்று நினைத்து கொண்டாலும், மகள் தானாகவே சென்றது என்னவோ மனதை வருத்தி கொண்டே இருந்தது.

அந்த கோபத்தை கூட யாரிடமும் காட்ட முடியாமல் போனது தான் அவரின் துரதிஷ்டம், ஏனெனில் மனைவி மீது காட்ட முடியாதபடிக்கு மகன் குறுக்கே நிற்கிறானே.

காரில் அமர்ந்து இருந்த மேகவியால், அருகே இருந்த கணவன் முகத்தை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை. இதில் அவளாக ஏன் அவனுடன் வந்தாள் என்று அவளுக்கு கொஞ்சம் கூட தெரியவில்லை. ஆமாம் அப்படித்தான் செய்தேன் என்ன என்று கேட்டு விட்டு வீட்டிலேயே இருந்திருக்க முடியுமே, ஆனால் அந்த ஒற்றை புகைப்படத்தை பார்த்தே கதறி கதறி மடிந்து விடுவாளோ என்ற பயமே அவளை அவனுடன் கிளம்பி வர வைத்திருந்தது.

அவனோ இரும்பை உருக்கி வார்த்த சிலை போல அமர்ந்து காரை ஓட்டிக்கொண்டிருந்தான். சென்ற முறை காரில் பயணித்த போதும் கூட இதே போல ஒரு சூழ்நிலை தான் இருந்தது. ஆனால் அப்போது அவள் கோபத்தில் இருந்தாள், இப்போது இவன் கோபத்தில் இருக்கிறான். மொத்தத்தில் சுமூகமான மனநிலையில் அவள் வாழ்க்கை பயணம் செல்ல போவதே இல்லை போல, ஆயாசமாக இருந்தது அவளுக்கு. தலை சாய்த்து அப்படியே கண்களை மூடி கொண்டாள்.

கார் எவ்வளவு நேரம் சென்றதோ, ஓரிடத்தில் நிற்கவும் கண் திறந்து பார்த்தாள். வீரா இறங்கி ஹோட்டலை நோக்கி சென்று கொண்டிருந்தான். இவள் அமைதியாக அமர்ந்து இருக்கவும், அன்று போலவே சில திண்பண்டங்களை வாங்கி வந்து வண்டியின் பின் சீட்டில் போட்டு விட்டு அமர்ந்து வண்டியை மீண்டும் எடுத்தான்.

அவனையே பார்த்து கொண்டிருந்தவள் ஏதும் பேசவில்லை, மீண்டும் அவர்கள் பயணம் தொடந்தது. இனி நேரடியாக வீடு நோக்கி செல்லும் இந்த பயணம் என்று நினைத்திருக்க அவனோ வேறொரு இடத்தில் வண்டியை நிறுத்தி இருந்தான்.

இவள் விழி விரித்து பார்க்க, அவன் இறங்கி சென்று விட்டான். அவன் அழைப்பான் அல்லது மீண்டும் வந்து வண்டியை எடுப்பான் என்று நினைத்திருக்க, அவன் வரேவே இல்லை. வண்டியும் கேட் தாண்டி உள்ளே நின்று இருந்ததை அப்போது தான் கண்டவள் தானும் இறங்கி சென்றாள்.

இவள் உள்ளே நுழைய, யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான். இவளை பார்த்தவன் போனை அணைத்து வைத்து விட்டு அருகே வந்தான். “உன்னோட வேலை எல்லாம் நடக்கணும்னா அதுக்கு அந்த வீடு செட் ஆகாது, ஏன்னா அது நம்ம தாத்தா”, இல்லை என்பது போல இடவலமாக தலையசைத்தவன் “என்னோட தாத்தா அவங்க சந்ததிகள் நல்லபடியா வாழணும்னு கட்டி வச்ச வீடு, உன்னோட வேலைகள் எல்லாம் அங்கே நடத்த முடியாது அதனால இங்கே தான் தங்க போறோம்” என்றான் அறிவிப்பாக.

அப்படி என்ன அவள் செய்ய கூடாத வேலையை செய்து விட்டாள் என்று கேட்க முடியாத அளவுக்கு, அவள் செய்த, செய்ய நினைத்த வேலை இருந்ததில் வாயை மூடி கொண்டு அமைதியாக இருந்தே ஆக வேண்டிய நிலை அவளுடையது என்றானது.

“மேலே இருக்கிற ரூம்ல ரெஸ்ட் எடுததுக்கோ” என்றவன் மேலே சென்று விட்டான். இவளுக்கு தான் அங்கே இருக்க முடியாமல் இருதலை கொல்லி எறும்பாக மனம் துடித்து கொண்டிருந்தது.

இதை விட்டு விட மாட்டானா, இனி காலத்துக்கும் சொல்லி காட்டிக்கொண்டே தான் இருப்பானா என்று பயம் வந்தது. காலத்துக்கும் என்றால் நீ அவனோடு வாழ முடிவு செய்து விட்டாயா, அவனுடனான பந்தத்தை ஏற்று கொண்டு விட்டாயா. சட்டப்படி கணவன் என்று கூறிய போது ஏற்று கொள்ளாத மனது, அவனை இன்னொருத்தியுடன் இணைத்து பார்த்த தருணத்தில் எப்படி ஏற்று கொண்டது. அவளுக்கும் அது தான் புரியவில்லை. அந்த புகைப்படங்கள் வருவதற்கு சற்று முன் கூட அது கிடைத்து விட்டால் அவனிடம் இருந்து விடுதலை பெற்று விடலாம் என்று தானே நினைத்து கொண்டிருந்தாள். ஆனால் இப்போது அது முடியும் என்று தோன்றவில்லை. அவனுடன் வந்தது கூட ஏதோ குற்றவுணர்வில் என்று நினைத்து கொண்டிருந்தாள் ஆனால் இப்போது தான் புரிகிறது அவனை முழுவதுமாக ஏற்றுக்கொண்டதினால் தான் அவளால் அவனுடன் வர முடிந்தது போல. இதை அவனிடம் கூறினால் நிச்சயம் தன்னை, தான் செய்ய இருந்த தவறை மன்னித்து ஏற்று கொள்வான் என்று நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சில் இனிமை பொங்கியது.

உடனே மனது மாறிவிட்டாயே அப்போது உன்னுடைய தந்தையின் நிலை, அவரை அப்படியே விட்டு விட்டாயே அவ்வளவு தானா, நீ. மனசாட்சி கேள்வி கேட்டது. எப்படியாவது கணவனிடம் பேசி தந்தைக்கும் அவனுக்குமான சண்டையை சரி செய்து எல்லாரையும் ஒரே குடும்பமாக மாற்றி விட வேண்டும்.

நினைத்த மாத்திரத்தில் சூ மந்திர காலி என்று சொன்னதும் நடக்கும் மந்திர வித்தை போல எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்து கொண்டிருந்தாள். ஆனால் அப்படி சரியாகி விடும் என்றால் ஏன் அதற்கான முன்னெடுப்பை இத்தனை நாட்கள் ஒருவரும் எடுத்திருக்கவில்லை என்று அவள் யோசிக்கவில்லை.

யோசைனையுடன் அறைக்கு சென்றாள், அங்கே மெத்தையில் அமர்ந்து இருந்தான் வீரா. இவள் அவனிடம் பேச நெருங்கி செல்ல வாசலில் அழைப்பு மணி அடித்தது. இவளை ஒரு நொடி பார்த்தவன், போனை எடுத்து பேசியபடியே மேலே வாங்க என்று அழைத்தான்.

யாராக இருக்கும் என்று அவள் நினைத்துகொண்டு இருக்கும்போதே, ஒரு யுவதி வந்து நின்றாள்.

மனைவியை பார்த்து கொண்டே, அந்த பெண்ணிடம் “இந்த இடம் உங்களுக்கு ஓகே தானே” என்று கேட்டான் வீரா.

அவளோ “இதுக்கென்ன சார் ரொம்பவே தாராளமா இருக்கு” என்றாள் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டபடியே.

“அப்போ சரி, மேகவி உன்னோட ஃபோன் எடுத்துக்கோ இப்போ இங்கே நடக்க போறதை வீடியோவா ரெகார்ட் பண்ணிக்கோ, நடுவிலே போட்டோ வேணும்ணா கூட சொல்லு முக்கியமான போஸ் எல்லாம் கொடுக்கிறேன், அவங்கக்கிட்டே பேசிட்டேன் அவங்களுக்கு ஓகே தான்” என்றான்.

இவளுக்கு திக்கென்று ஆனது என்ன பேசுகிறான் இவன், என்று யோசிக்க முடியாமல், “என்னோட பெட்ரூம்ல உன்னோட இடத்திலே இன்னொருத்தி என் கூட எவ்வளவு நெருக்கமா இருக்க போறாங்கறதை நீயே வீடியோவா எடுத்துக்கோ, அப்போ நீ நினைச்சதும் நடந்த மாதிரி ஆகும் உன்னோட ஆசையும் நிறைவேறின மாதிரி ஆகும்” என்று அவன் கூறியது நினைவில் வர, ஒரு அடி பின்னே நகர்ந்து இருந்தாள் பெண்.

திகைத்து விழித்த அவள் விழிகளை பார்த்து கொண்டிருந்தவனோ, “நாம ஸ்டார்ட் பண்ணலாம்” என்று அந்த பெண்ணை பார்த்து கூறினான்.

அவளோ இவளது அதிர்ந்த பார்வையை பார்த்தவள், “சார் இவங்க” என்று சங்கடமாக கேட்டாள்.

“அவங்க ரொம்ப புரட்சிகரமான ஆள், அவங்களுக்கு தான் முக்கியமா இந்த வீடியோ எல்லாம் தேவையே. அது உங்களுக்கு சொன்னா புரியாது. அதனால நாம தொடங்கலாம்” என்று கூறியவன் அணிந்திருந்த சட்டையை களைய முற்பட அய்யோ என்று கத்தி இருந்தாள் மேகவினி.

அய்யோ அய்யோ என்று அவள் தலையில் அடித்து கொண்டு அழ, சட்டையின் பட்டனில் கை வைத்தவன் அப்படியே நின்றபடி அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

தலையில் அடித்து கொண்டு அழுதவளோ அப்படியே அங்கேயே மடிந்து சரிந்து அமர, அந்த பெண் தான் அவளை தாங்கி பிடிக்க முயன்றாள். ஆனால் வீராவோ அவளை வேண்டாம் என்பது போல கையை காட்டி தடுத்து விட்டான்.

முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவளை, அந்த பெண் பாவமாக பார்த்து நிற்க, அவளை கிளம்புமாறு சைகை செய்தவன், மனைவியின் அருகே வந்து, ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்தான்.

“இங்கே பாரு மேகவி” என்றான்.

ஆனால் அவளோ நிமிர்ந்து பார்க்கவில்லை, “நீ கேட்ட போட்டோ வீடியோ எடுக்க போற நேரத்திலே இப்படி கண்ணை மூடிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம். ஒரு முறைதான் சான்ஸ் கிடைக்கும். அப்படி எல்லாம் எடுத்தா தானே என்னை விவாகரத்து பண்ணிட்டு உங்க அப்பாகிட்டே போக முடியும். கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்றியே. மேகவி வா வந்து உன்னோட போன்ல எல்லாத்தையும் எடுததுக்கோ, இல்லைன்னா பரவையில்லை நானே ஃபோன்ல காமிரா செட் பண்ணிட்டு வீடியோ வா, எடுத்து தரவா” என்று கேட்டவுடன் வெடுக்கென நிமிர்ந்தவள் அவனை பிடித்து தள்ளி விட்டாள்.

இதை நான் எதிர்பார்த்தேன் என்பது போல இருந்தவன் அவள் பிடரி முடியை கொத்தாக பற்றி தன்னை பார்க்க வைத்தான்.

“ஏண்டி உனக்கே இவ்வளவு கோபமும் ஆத்திரமும் வருதே, உன்னையே விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்ட எனக்கு எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும்” என்றான்.

அவன் கேள்வியில் மேகவி திகைத்து விழிக்க, ச்சீ என்றபடி அவளை உதறி விட்டு எழுந்திருந்தான் அவள் கணவன் வீரபத்ரன்.
 

Advertisement

Advertisement

Back
Top