Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 19

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 19

அன்று காலை பொழுது இனிதே விடிந்தது. பத்மா கண் விழிக்கும் போது, சமையலறையில் காலை உணவு சமைக்கும் மணம் அவர்களது படுக்கையறை வரை வந்தது. அந்த மணத்திலேயே பத்மா விழித்துவிட்டார். மெல்ல எழுந்து சமையலறை வந்து பார்த்தார். மது குளித்து முடித்து, காலை உணவை தயாரித்துக்கொண்டிருந்தாள்.

“மது, என்னமா பண்ணிட்டிருக்க.? எப்போ எழுந்திருச்ச.? ஏன் இவ்ளோ சீக்கிரமா எழுந்திருச்சு எல்லாம் பண்ணிட்டிருக்க.? வேலைக்காரி கூட 8 மணிக்கு மேல தான் வருவா. அவ வந்த்துக்கப்பறம் எல்லாம் பண்ணிக்கலாம். நீ வா. போதும். வந்து உட்காரு.” என்று அவள் கையைப் பிடித்து இழுக்க,

மதுவோ, “ஆண்ட்டி, நான் எப்பவும் சீக்கிரம் எழுந்து என்ன வேலை பண்ணனுமோ, எல்லாத்தையும் பண்ணி முடிச்சிடுவேன். இது என்னோட சின்ன வயசில இருந்தே பழக்கம். அம்மா இப்படித்தான். அவங்ககிட்ட இருந்துதான் இந்த நல்ல விஷயத்த கத்துக்கிட்டேன். வேலையாள் வரும் போது அவங்க என்ன வேலை பண்ணனுமோ, அதைப் பண்ணட்டும். நான் சமையல் வேலை மட்டும் பார்க்கறேன். அதுவும், நீங்க டைம்க்கு சாப்பிடணும் இல்ல. அதனால தான், இப்போவே டிஃபன் பண்ண ஆரம்பிச்சுட்டேன். நீங்க எதுவும் சங்கடமா நினைக்க வேண்டாம் ஆண்ட்டி. நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஒண்ணா இருக்கும் போது செய்யற விஷயம் தான். அப்போதானே காலேஜ்க்கு சீக்கிரம் கிளம்ப முடியும்.” என்று தன் கையைப் பிடித்து இழுத்தவரின் கையை மெல்ல விடுவித்துவிட்டுச் சொன்னாள்.

பத்மாவிற்கு, அவளை நினைத்து பெருமையாக இருந்தது. இந்த காலத்துப் பெண் என்றாலும், அவளின் தெளிவான பேச்சை நினைத்து ஆச்சர்யப்பட்டார். “சரி மா, நான் ஏதாச்சும் ஹெல்ப் பண்றேன்.” என்றவரை,

“ஆண்ட்டி., ப்ளீஸ். ஒரு ரெண்டு நாள் பொறுத்துகோங்க. நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும். அதனால தான் இவ்ளோ தூரம் நீங்க எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்றேன். என்னைத் தப்பா நினைக்காதீங்க, என்னாடா இவ நம்ம வீட்டுக்கு வந்து நம்மளையே அதிகாரம் பண்றாளேன்னு. எனக்கு நெருக்கமானவங்ககிட்ட என்னோட அக்கறைய சில சமயம் இப்படியும் காட்டுவேன். நீங்க புரிஞ்சுக்கோங்க ஆண்ட்டி.” என்றாள் மது.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல மது. எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தா, இப்படி தான் இருந்திருப்பான்னு தோணுது. நான் எதுவும் உன்னத் தப்பா நினைக்கல. சரியா.?” என்று அவர் பரிவுடன் பேசினார்.

“அப்போ, ஓகே ஆண்ட்டி. நீங்க போய் குளிச்சு ரெடியாகுங்க. அதே மாதிரி, அங்கிளையும் எழுப்பி குளிக்க சொல்லுங்க. நீங்க வரும் போது டிஃபன் ரெடியா இருக்கும். வந்ததும் நாம சாப்பிடலாம்.” என்றாள் மது புன்னகையுடன்.

“ம்ம்.. சரி மா..” என்று கூறியவாறே சென்றார் பத்மா.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் சமைத்து முடிக்க, அவர்களும் குளித்து முடித்து சாப்பிட வந்தனர். சுடச்சுட இட்லியும், ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் தோசைகள். தொட்டுக்கொள்ள, பாசிப்பருப்பில் சாம்பாரும், கொஞ்சம் தேங்காய் சட்னியும் தயாராக டேபிளில் இருந்தது.

இருவரும் அவள் சமையலை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். வெங்கடேசன், “சூப்பர் மது, இந்த மாதிரி சாம்பார் இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல. இது நார்மலா சாப்பிடற சாம்பார விட, இன்னும் கொஞ்சம் டேஸ்டா இருக்கு. பத்மா நீ கவனிச்சியா.?” என்று அவர் கேட்க,

“ஆமாங்க. இது ரொம்ப நல்லா இருக்கு. நான் எப்பவும் துவரம் பருப்பு போட்டுதான் சாம்பார் வைப்பேன். ஆனா, இந்த சாம்பார் வேற. இது எப்படி பண்றது மது.?” என்று அவளிடம் பத்மா குறிப்பு கேட்க, மதுவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“ஆண்ட்டி நீங்க எவ்வளவு வருஷமா சமைச்சுட்டு இருக்கீங்க, எங்கிட்ட போய் டிப்ஸ் கேக்கறீங்களே.?” என்றாள்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல மா. இதுல என்ன இருக்கு, இப்போ டிவில ஏதாவது புதுசா சமைச்சா வீட்ல ட்ரை பண்ணிப் பாக்கறது இல்லையா, அது மாதிரி தான் இதுவும். நான் இந்த பருப்பே வாங்கறது இல்லையே. அப்பறம் எப்படி.? ஓ கடைல வாங்கிட்டு வந்தியா.?” என்றார் பத்மா.

“ம்ஹூம்.. அந்நேரத்தில எந்தக் கடை திறந்திருக்கும் ஆண்ட்டி.? இங்க தேடிப் பார்த்தேன். இல்ல. அதான் நான் மேல போய் எங்களோட கிட்சன்ல இருந்து எடுத்து வந்தேன். இது எங்க அம்மாவோட ஸ்பெஷல் சாம்பார் ஆண்ட்டி. ஃப்ரெண்ட்ஸ் கூட இத அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பாங்க.” என்றாள்.

“நிஜமாலுமே ரொம்ப நல்லா இருக்கு மா. எங்க பிரவீன் வந்தா இதே மாதிரி ஒரு நாள் செஞ்சு குடுக்கணும். எப்படின்னு சொல்லிக்கொடு.” என்றாள்.

தன்னை விட மது, சிறிய பெண்ணே என்றாலும் அவளிடம் கற்றுக்கொள்ளத் தயங்காத மனம் பத்மாவிடம் இருப்பதை உணர்ந்தாள் மது. அதே சமயம், அவர் தன் மகனின் மேல் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி வியந்தாள்.

“ஆங்க்.. ஆண்ட்டி, சொல்ல மறந்துட்டேன். உங்க பையன் நேத்து நைட் உங்களுக்கு போன் பண்ணினார். நீங்க அப்போ நல்லா தூங்கிட்டிருந்தீங்க. அதனால, நான் தான் பேசினேன். உங்களுக்கு இப்போ எப்படி இருக்குன்னு ரொம்ப அக்கறையா விசாரிச்சார். பரவால்லன்னு சொன்னேன்.” என்று மது சொல்லிக்கொண்டிருக்க, பத்மாவோ சாப்பிடாமல் தன் தட்டையே நோண்டிக்கொண்டிருந்தார்.

அதை அறிந்தவராய் வெங்கடேசன், “ஹூம்ம்.. இவ்ளோ பெரிய வீடு, சொத்து இருந்து என்ன பிரயோஜனம் மா. எங்களுக்கு அவன் கூட இருந்தா அதுதான் சந்தோஷமே. அவனையும் குறை சொல்ல முடியாது. அங்க அவனோட வேலை அப்படி. அவ்ளோ சீக்கிரம் லீவ்வெல்லாம் தரமாட்டாங்க. நாங்க போய் ஒரு மாசம் இருப்போம். ஆனாலும், அவனோட சரியா ஸ்பென்ட் பண்ண முடியாத அளவுக்கு அவனுக்கு அடிக்கடி கால் வந்துட்டே இருக்கும். சரின்னு நாங்களும் புரிஞ்சுக்கிட்டு விட்டுருவோம். இவளுக்கு அவன் எப்பவும் கூடவே இருக்கணும்னு ஆசை, அதுக்காகத்தான் கடவுள் கிட்ட விரதம் இருக்கறேன்னு எல்லாத்தையும் பண்ணிட்டு, இப்போ உடம்ப கெடுத்துட்டு நிக்கறா. எனக்கு தான் என்ன பண்றதுன்னு தெரியல.” என்று புலம்பினார்.

“அங்கிள். ஆண்ட்டியோட ஆங்கிள்ல இருந்து பார்த்தா, அவங்க பண்ணது ஒண்ணும் பெரிய தப்பில்ல. தன்னோட பையன் எப்பவும் கூட இருக்கணும்னு நினைக்கறது ஒண்ணும் தப்பில்லையே. அதுவும் ஒரே பையன். சும்மாவா.? கடவுள் மேல நம்பிக்கை வைச்சு அவங்களுக்காக வேண்டிருக்காங்க. அந்த நம்பிக்கை வீண் போகாது.” என்று சொல்லி முடிக்க, வெளியே கார் சத்தம் கேட்டது.

வெங்கடேசன் யார் என்று வெளியே எட்டிப்பார்க்க, சந்தோஷத்தில் திளைத்தார். “ஏ. பத்து, யார் வந்திருக்கா பாரு. மது உன்னோட வாய்க்கு சர்க்கரை தான் போடணும். பிரவீன் தான் வந்திருக்கான்.” என்று அவர் சொல்ல, டைனிங் டேபிளில் இருந்த சாரை நகர்த்திவிட்டு, ஓடிவந்தார் பத்மா.

அவருக்கு சந்தோஷம் தாளவில்லை. அங்கே பிரவீன் தன் லக்கேஜை எடுத்துக்கொண்டு உள்ளே வந்துகொண்டிருந்தான். இருவரும் அவசர, அவசரமாக கையைக் கழுவிக்கொண்டு அவனிடம் ஓடினர். அவர்களின் பாசத்தையும், ஏக்கத்தையும் உண்ந்தாள் மது.

“டேய், பிரவீன் என்னடா, திடுதிப்புன்னு வந்து இறங்கிருக்க. எதுவுமே சொல்லல. முன்னாடியே சொல்லிருந்தா, நான் கார எடுத்துட்டு ஏர்போர்ட்டுக்கு வந்திருப்பேன்ல.” என்றார் வெங்கடேசன் அவன் வந்ததும், வராததுமாக.

“ஏங்க, அவனே இவ்ளோ தூரம் கலைச்சுப்போய் வந்திருக்கான். இப்போதான் இதெல்லாம் கேட்டுட்டிருப்பீங்களா.? மொதல்ல நீ வாடா ராஜா. இப்போதான் உன்னப் பத்தி பேசிட்டிருந்தோம். மது தான், நீங்க இவ்ளோ தூரம் சாமி கும்பிட்டது வீண் போகாதுன்னு சொல்லிட்டிருந்தா. அது நிஜமாலுமே நடந்துருச்சு.” என்று பத்மா மதுவைப் பார்த்து சொல்ல,

பிரவீன் அப்போதுதான் மதுவைப் பார்த்தான். மதுவோ, அவனைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து தலையசைத்தாள். அவனும், பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்த்தான்.

“சரி, எப்போ கிளம்பின.? எப்படி ஆபீஸ்ல லீவ் குடுத்துட்டாங்களா.?” என்றார் வெங்கடேசன்.

“இல்லப்பா, திடீர்னு எமர்ஜென்ஸின்னு சொல்லிதான் ஒரு வாரத்துக்கு லீவ் கேட்டுட்டு வந்திருக்கேன். அங்கே 1.40க்கு ஃப்ளைட். அதுவும், திருச்சிக்கு தான் இருந்தது. சென்னைக்கு டிக்கெட் கிடைக்கல. அதான், திருச்சி வந்து அங்கிருந்து சென்னைக்கு ஃப்ளைட்லயே வந்துட்டேன்.” என்றான் பிரவீன்.

“சரி ராஜா, நீ போய் குளிச்சிட்டு வா. டிஃபன் சாப்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுப்பியாம். உங்க அப்பா விட்டா இன்னும் கேள்வி கேட்டுட்டே தான் இருப்பார். நீ போ..” என்று பத்மா, அக்கறையுடன் அவன் தலையை வருடிவிட்டவாறே சொல்ல, வெங்கடேசன் அவரை ஏற, இறங்கப் பார்த்து விட்டு, “ஹூம்ம். உன் புள்ள வந்துட்டான்ல, இனி உன்ன கைலயே புடிக்கமுடியாது.” என்றார்.

வெங்கடேசன் அவன் லக்கேஜை எடுத்துக்கொண்டு கீழே இருக்கும் அவனது அறைக்குப் போக, பிரவீனும் அவருக்குப் பின்னால் சென்றான்.

சிறிது நேரத்தில் குளித்து முடித்து சாப்பிடத் தயாராகி வந்தான். அனைத்தும் தயாராய் இருக்க, பத்மா அவனது அருகில் அமர்ந்து அவனுக்கு அன்புடன் பரிமாறினார். இவை ஒவ்வொன்றையும் மது பார்த்து பூரித்துக்கொண்டிருந்தாள்.

“ம்ம்ம்.. சாம்பார் ரொம்ப டேஸ்ட்டா இருக்கு மா. சான்ஸே இல்ல. எவ்ளோ நாள் ஆச்சு. உன் கையால சமைச்சத சாப்பிட்டு. ரொம்ப மிஸ் பண்றேன் தெரியுமா.? இதுக்கு உனக்கு ஒரு பிரஸன்ட்டே குடுக்கலாம்.” என்று புகழ்ந்து கொண்டிருக்க,

பத்மாவோ, “அப்போன்னா, அந்த பிரஸன்ட்ட நீ மதுவுக்குத் தான் குடுக்கணும்.” என்று சொல்ல, பிரவீனோ விழித்தான்.

“ஆமாண்டா, மது தான் நேத்திலிருந்து சமையல். உங்கம்மாவ, கிச்சன் பக்கமே போக விடல. எவ்ளோ நல்லா சமைக்கறா தெரியுமா.? அதுவும், நேத்து நைட் கொத்தமல்லிச் சட்னி செஞ்சா பாரு, அப்படியே உங்கம்மா கைப்பக்குவம்.” என்று சொல்லிக்கொண்டே போனார் வெங்கடேசன்.

“ஆமாடா ராஜா, மது தான் இந்த ரெண்டு நாளா என்ன ரொம்ப நல்லா பாத்துக்கறா. நேத்தில இருந்து எல்லா வேலையும் செஞ்சிட்டு இருக்கா. அவ மட்டும் இல்லன்னா, நேத்து எனக்கு என்ன ஆயிருக்கும்னே நினைச்சுப் பார்க்க முடியல.” என்று குரல் தழுதழுக்க விம்மினார் பத்மா.

“ஆண்ட்டி, சும்மா இருங்க. இப்போ எதுக்கு அத நினைச்சு ஃபீல் பண்றீங்க. கெட்டதிலயும், ஒரு நல்லது நடந்திருக்கு. அதனால தான, இன்னைக்கு உங்க பையன் வந்திருக்காரு. அத நினைச்சு சந்தோஷப்படுங்க.” என்றாள் மது ஆறுதலாக.

மது சொன்ன வார்த்தைகளில் எத்தனை அன்பு, தெளிவு என நினைத்தான் பிரவீன். அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். அவனின் மனதில் பட்டென்று பதிந்துவிட்டாள் மது.


(தொடரும்...)
 
Top