Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 16

Advertisement

Aathirai

Well-known member
Member
Episode 16

அன்று அஞ்சலியை அவசரமாக அனுப்பிய தோழிகள், .இரண்டொரு நாட்களில் கிளம்பத் தயாராகினர். ரூபா, காலை 7 மணிக்கெல்லாம் பஸ் ஏறிவிட்டாள். மதுவும், ஷாலினியும் மதியம் 3.30 மணிக்கு செல்லும் திருவனந்தபுரம் விரைவு வண்டிக்கு முன்பதிவு செய்திருந்ததால் சற்று பொறுமையாகவே கிளம்பத் தயாராகினர்.

அஞ்சலியின் அப்பாவிற்கு என்ன ஆனதோ? அவள் என்ன செய்கிறாளோ என்று ஒவ்வொரு நிமிடமும் நினைத்துக்கொண்டிருந்தவள் அவளுக்கு போன் செய்யும் நோக்கில் வெளியே வந்தாள். அழைப்பு போய்க்கொண்டே இருந்தது, சிறிது நேரம் கழித்து எதிரில் அழைப்பை எடுத்தனர்.

“ஆங்.. ஹலோ.. அஞ்சலி.. என்ன பண்ற..?” என்றவள் குரல் கேட்டு எதிர்முனையில் “ஹலோ.. மது தானே.? நான் மீனா, அஞ்சலியோட அத்தை பேசறேன் மா. எப்படி இருக்க.?” என்றாள் மீனா.

“ஓ.. அத்தை.. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.? அப்பறம் மாமா, எல்லாம் எப்படி இருக்காங்க.?” என்று அக்கறையுடன் கேட்டாள் மது.

“எல்லாரும் நல்லா இருக்கோம் மா.. நீங்க எல்லாரும் ஊருக்கு கிளம்பியாச்சா.?” என்றாள் மீனா.

“ஆங்.. இனிமேல் தான் அத்தை.. மதியம் ட்ரெயின் புக் பண்ணிருக்கோம். கிளம்பணும். அஞ்சலி அப்பா இப்போ எப்படி இருக்கார்.? நானும், ரெண்டு நாளா அவ போனதுல இருந்து போன் பண்ணிட்டே இருக்கேன். ஆனா, அவ போனே எடுக்கல அத்தை.. என்னதான் ஆச்சு.. ஏன் இப்படிப் பண்றா அவ.?” என்று தன் ஒட்டுமொத்த வருத்தத்தையும் மீனாவிடம் கொட்டினாள் மது.

அஞ்சலியின் மனநிலைமை புரிந்தவளாக மீனா, “இல்ல மது. நேத்து தான் ஹாஸ்பிடல்ல இருந்து அவர டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு வந்தோம். அங்கிருக்கும் போது யாரையும் போன் யூஸ் பண்ண வேண்டாம்னு சொன்னதால, யாருமே போன எடுக்கல.. அதான், அவருக்கு இப்போ கொஞ்சம் பரவால்ல.. நல்லா பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க. அஞ்சலியும் கொஞ்சம் டயர்டா இருக்கா. இப்போ தூங்கறா.. அவ எழுந்திருச்சதும் உன்கிட்ட பேச சொல்றேன் மா.. சரியா..” என்று சமாளித்தாள்.

“ம்ம்.. சரி அத்தை.. அவள கண்டிப்பா எனக்கு கூப்பிட சொல்லுங்க.. ஓகே.” என்று அரை மனதுடன் போனை வைத்தாள் மது..

அவள் மனது வேறு எதையோ சொல்லியது.. அஞ்சலி எதனால் தன்னிடம் பேசாமல் இருக்கிறாள். மீனா, என்னதான் காரணம் சொன்னாலும், கண்டிப்பாக வேறு ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று யூகித்தாள்.

அங்கேயே சிறிது நேரம் யோசனையுடன் நின்றிருந்தவளுக்கு கீழ் வீட்டில் பாத்திரம் உருளும் சத்தம் பயங்கரமாகக் கேட்டது.. சத்தம் கேட்டவள் உடனே கீழே ஓடினாள். கதவு திறந்துதான் இருந்தது. வீட்டில் யாருமே இல்லை என்றே தோன்றியது.. சரி என்று சமையலறைக்கு ஓடினாள்.

அங்கே, வெங்கடேசனின் மனைவி பத்மா மயக்கமான நிலையில் கீழே விழுந்து கிடந்தார். ஓடிப் போய் அவரைத் தூக்கிவிட்டவள், அவர் உடம்பெல்லாம் சில்லென்று இருப்பதை உணர்ந்தாள்..

அவரை முன்னே உள்ள ஷோஃபாவில் படுக்க வைத்துவிட்டு, திரும்பவும் சமையலறைக்கு ஓடி அங்கே உள்ள டப்பாவை எல்லாம் தேடினாள்.. அவள் தேடியது சர்க்கரை, எடுத்து வந்து பத்மாவின் வாயில் கொஞ்சமாக திணித்தாள்..

திரும்பவும் வெளியே ஓடினாள். “ஏ.. ஷாலு.. ஏ.. ஷாலு.. சீக்கிரம் இங்க வா..” என்று கீழே இருந்து ஷாலினியை அழைத்தவள், அப்பொழுதே தன் போனில் இருக்கும் வெங்கடேசனின் எண்ணிற்கு அழைத்தாள்.

மதுவின் பதட்டமான குரல் கேட்டு ஷாலினியும் ஓடி வந்தாள். “எந்தா டி மது.” என்று வீட்டிற்கு உள்ளே வந்தவள், பத்மா அருகே மது பதட்டமாக இருப்பதைப் பார்த்து நிலைமையை புரிந்துகொண்டாள்.

“ஷாலு.. ஆண்டிக்கு லோ பி.பி னு தோணுது. அதான், மயக்கமாயிட்டாங்க.. அங்கிள்க்கு இப்போதான் போன் பண்ணேன். அவர் வரதுக்கு டைம் ஆகும்னு நெனைக்கறேன். அதனால, நாம பேசாம ஆட்டோ பிடிச்சு ஆண்டிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம். சரியா.” என்றாள் மது அந்தப் பதட்டத்திலும் தெளிவாக.

ஷாலினிக்கும் அதுவே சரியென்று பட, அருகில் இருக்கும் ஆட்டோவை வரவைத்து வீட்டை பூட்டிக் கொண்டு இரண்டு தெரு தள்ளி இருக்கும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர் இருவரும்.. மது, வெங்கடேசனுக்கு போன் செய்து ஹாஸ்பிடலுக்கு நேரே வந்துவிடுமாறு கூறினாள்.

ஹாஸ்பிடலில் அவரை எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.. சரியான நேரத்தில் பத்மாவை அழைத்து வந்ததாக டாக்டர் தெரிவித்தார். அப்போது தான் மதுவுக்கும், ஷாலினிக்கும் உயிரே வந்தது.

சிறிது நேரத்தில் வேங்கடேசன் வந்து சேர்ந்தார். பதட்டமாக இருந்தவரை, மதுவும், ஷாலினியும் ஆறுதல் கூறி தேற்றினர்.

“எனக்கு நீ போன் பண்ணதும் ஒரு மாதிரி ஆயிடுச்சு மது. இதுக்குத்தான் இவளை வீட்ல தனியா விட்டுட்டு போறதுக்கே பயமா இருக்கு. அவளுக்கு ரொம்ப நாளாவே பி.பி இருக்கு. ஒரு சில டைம் திடீர்னு மயக்கமாயிடுவா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியாது..” என்று தன் வருத்தத்தைத் தெரிவித்தார் வெங்கடேசன்.

“ஒண்ணும் பயப்படாதிங்க அங்கிள்.. ஆண்டிக்கு ஒண்ணும் இல்ல.. சரியாகிடுவாங்க..” என்றாள் மது..

“இங்க, பத்மாங்கிற பேஷண்ட் கூட வந்திருக்கிறது யாரு.? டாக்டர் கூப்பிடறார்.” என்ற நர்ஸின் குரல் கேட்டு திரும்பிய மூவரும் அவரிடம் ஓடினர்.

“வாங்க.. உட்காருங்க..” என்று தன் புன்னகை சிந்திய முகத்துடன் வரவேற்றார் டாக்டர் ராமநாதன்.

“டாக்டர். என் வைஃப்க்கு ஒண்ணும் பிரச்சினை இல்லையே.. இப்போ எப்படி இருக்காங்க..? நான் பார்க்கலாமா.?” என்றார் பதட்டத்துடன்.

“ஒண்ணும் பதட்டப்படாதிங்க சார்.. அவங்களுக்கு இப்போ பரவாயில்ல.. மெடிசின்ஸ் குடுத்திருக்கோம். ட்ரிப்ஸ் போட்டிருக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல எழுந்திருச்சு உட்கார்ந்துடுவாங்க.. சரியா. ஒண்ணும் வொர்ரி பண்ணிக்க வேண்டாம்.” என்றார் அதே புன்னகை மாறாமல்.

“சார்.. ரொம்ப பயந்துட்டேன். வீட்ல நான் இல்லாத நேரத்துல இந்த மாதிரி ஆயிடுச்சு. கேள்விப்பட்டதும் தான் ஓடி வரேன் டாக்டர்.” என்றார் வெங்கடேசன்.

“பரவால்ல. இந்தப் பொண்ணுக தான் அவங்கள கரெக்ட் டைம்க்கு கூட்டிட்டு வந்தாங்க.. அட் த சேம், அவங்க வாயில சர்க்கரை இருந்தத பார்த்தேன்.. யார் குடுத்தாங்க.?” என்றார் டாக்டர்.

“நான் தான் டாக்டர் குடுத்தேன்.. எங்க அம்மாவுக்கும் இதே பிரச்சனை இருக்கு.. லோ பி.பி ஆகும் போது எமர்ஜென்சிக்கு சர்க்கரை சாப்பிட சொல்லி என் பாட்டி அம்மாகிட்ட அடிக்கடி சொல்லுவாங்க.. அதான் டாக்டர் ஞாபகம் வந்து ஆண்டிக்கு குடுத்தேன்.” என்றாள் மது..

“உங்க பாட்டிக்கு தான் நீ தேங்க்ஸ் சொல்லணும் மா.. அது சரியான ஃபர்ஸ்ட் எய்ட் ட்ரீட்மெண்ட் தான். அவங்க காலைல இருந்து எதுவுமே சாப்பிடலன்னு நெனைக்கறேன். அதான், லோ பி.பி அதிகமா இருக்கு.. காலைல சரியான நேரத்துக்கு சாப்பிடணும், இல்லன்னா இந்த மாதிரி பிரச்சினைகள் வரத்தான் செய்யும். சோ, கொஞ்சம் கேர் பண்ணுங்க.. டென் டேஸ்க்கு டேப்லட்ஸ் எழுதித் தரேன். சரியான ஆகாரம் எடுத்துட்டு சாப்பிட சொல்லுங்க.” என்றார் டாக்டர் ராமநாதன்.

“ஓகே.. டாக்டர்.. ரொம்ப நன்றி..” என்றார் வெங்கடேசன்.

அவரைப் பார்த்து சிரித்தவர், “எனக்கு சொல்றது இருக்கட்டும்.. உண்மையில் அந்தப் பொண்ணுகளுக்குத் தான் நீங்க தேங்க்ஸ் சொல்லணும். சரியான நேரத்துக்கு கூட்டி வந்து உங்க வைஃப காப்பாத்திருக்காங்க..” என்றபடியே சென்றார்..

அவர் சென்றதும், வெங்கடேசன் அவர்களிடம் “ரொம்ப நன்றி மா.. நீங்க மட்டும் இன்னைக்கு இல்லன்னா.. நான்.. நான்..” என்று தழுதழுத்தவரைப் பார்த்து மதுவும், ஷாலினியும்

“அங்கிள்.. எதுக்கு எங்களுக்குப் போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க.. இந்த உதவி கூட செய்யலன்னா நாம இவ்வளவு தூரம் பழகுனதுல அர்த்தமே இல்லாம போய்டும்.” என்றாள் மது.

அதை ஆமோதித்தாள் ஷாலினி.. “அங்கிள்.. இன்னு 3.30க்கு ட்ரெயின் புக் செய்து.. இப்போ எந்து செய்யும்.?” என்றாள் ஷாலினி.

“ஆமா, அங்கிள். ஊருக்கு கிளம்பணும்னு 3.30க்கு ட்ரெயின் புக் பண்ணிட்டோம். அதான் என்ன பண்றதுன்னு தெரியல.” என்றாள் மதுவும்.

“ஓ.. அப்படியா மா..” என்று கவலையுடன் அவரைப் பார்த்த்தும் சற்று யோசித்த மது.. “அங்கிள் இருங்க.. நான் ஒரு நிமிஷம் அப்பாக்கு போன் பண்ணிட்டு வந்திடறேன்.” என்று கூறிவிட்டு சற்று அந்தப் பக்கமாக சென்று போன் செய்து விஷயத்தை அவள் அப்பாவிடம் கூறினாள்..

சிறிது நேரத்திலேயே வந்த மது, “அங்கிள், இந்தாங்க அப்பா லைன்ல இருக்கார். உங்ககிட்ட பேசணும்னு சொன்னார்.” என்று அவரிடம் போனைக் கொடுத்தாள்.

“ஹலோ.. சொல்லுடா..” என்றார் வெங்கடேசன்.

“ஹலோ, என்னாச்சுடா தங்கச்சிக்கு.? மது எல்லா விஷயத்தையும் சொன்னா.. இப்போ பரவாயில்லையா.? எப்படி இருக்காங்க.?” என்று அக்கறையுடன் விசாரித்தார் மதுவின் அப்பா விநாயகம்.

“ம்ம்.. பரவாயில்ல டா. இப்போ, ட்ரிப்ஸ் போட்டிருக்காங்க. பிரஷ்ஷர் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு. அதான் மயக்கமாயிட்டா. நான் வெளியே போயிருந்தேன். நல்லவேலையா, மதுவும், ஷாலினியும் பார்த்து தான் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. இல்லன்னா நான் என்ன பண்ணிருப்பேன்னு தெரியல.” என்று தழுதழுத்த குரலில் பேசினார்..

“சரிடா. ஒண்ணும் பயப்படாத. தங்கச்சிக்கு சீக்கிரமே சரியாயிடும். மது அங்கயே இருக்கட்டும். அவ, தங்கச்சிய நல்லா பார்த்துக்குவா. நான் நாளை மறுநாள் வந்து கூட்டிப் போய்க்கிறேன்.” என்றார்.

வெங்கடேசன் கிட்டத்தட்ட அழுதே விட்டார்,“ரொம்ப நன்றி டா. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. ஹாஸ்பிடல்ல இருக்கறவரைக்கும் ஓகே. அதுக்கப்பறம் யார் அவள பார்த்துக்குவான்னு நெனைக்கும் போதே கஷ்டமா இருந்த்து.. மது கூட இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஆனா, நீ என்ன சொல்வயோன்னு தான் தயக்கமா இருந்தது. இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. என்ன சொல்லு வீட்டுக்கு ஒரு பொம்பளப் புள்ள வேணும் டா.” என்றார்..

“சரி டா. நீ ஒண்ணும் ஃபீல் பண்ண வேண்டாம். மது தான் இருந்துட்டு வரேன்னு சொன்னா.. நானும் யோசிச்சு தான் சரின்னு சொன்னேன். சரி, தங்கச்சிய பார்த்துக்கோங்க. போனை வைச்சிடறேன்.” என்றார் விநாயகம்.

அப்போது தான் அவருக்கு உயிரே வந்தது.. மதுவை நினைத்து பெருமிதம் கொண்டார். தான் பெறாத மகள் போல் நினைத்தார்.

அவளிடம் போனைக் கொடுத்தவர், “அப்பாகிட்ட பேசிட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் மா. எங்களுக்காக நீ இங்க இருக்கன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம். என்ன பண்றதுன்னு தெரியாம இருந்தேன். அப்போ ஷாலினி..?” என்றார் கேள்விக்குறியுடன்.

“ஒண்ணும் பிரச்சினை இல்ல அங்கிள். அவ, தனியாவே கிளம்பிக்கிறேன்னு சொல்லிட்டா. அவங்க வீட்ல ட்ரெயின் புக் பண்ணீட்டு திடீர்னு கிளம்பலன்னா ஏதாவது சொல்வாங்க அதான்.” என்றாள் மது.

“ஆமா, அங்கிள். அச்சன் கொறைச்சு ஸ்ட்ரிக்ட். அதான்.” என்றாள் ஷாலினி.

“பரவாயில்ல மா. நீ கிளம்பு. நான் வேணும்னா உன்ன ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடறேன். டைம் ஆச்சு தானே.?” என்றார்.

“கரெக்ட் அங்கிள். நீங்க, இப்போ போய் ட்ராப் பண்ணா டைம் சரியா இருக்கும். நான் ஆண்டிய பாத்துக்கறேன்.” என்று அக்கறையுடன் கூறினாள் மது.

“சரி மா.. கிளம்பு..” என்று வண்டியை எடுக்கச் சென்றார் வெங்கடேசன்.

வீட்டில் இருக்கும் லக்கேஜை எடுத்துக்கொண்டு புறப்படத் தயாரானாள் ஷாலினி. இதுவே முதல் முறை, அவள் மது இல்லாமல் தனியே பாலக்காடு செல்வது. ஒவ்வொரு முறையும் மதுவுடன் செல்லும் போது, அவளுக்கு தைரியமாக இருக்கும். ஆனால், இம்முறை அவள் இல்லாமல் தான் மட்டும் செல்வது அவளுக்கு என்னவோ செய்தது. ஏதோ ஒரு தைரியத்தில் வெங்கடேசனுடன் சென்ட்ரல் புறப்பட்டாள் ஷாலினி.





 
Top