Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 85

Advertisement

SHALU shalu

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே!
நான் திரும்ப வந்துட்டேன். இனிமேல் இந்தக் கதையைக் கண்டிப்பாக எழுதி முடிச்சதும் தான், அடுத்த வேலையைப் பார்க்கப் போறேன்! எனக்காக வெயிட் பண்ணிய உங்க எல்லாருக்கும் தாங்க்யூ சோ மச் ❤️

🌸🌸🌸🌸🌸

அதைப் பொறுமையாக கேட்டு முடித்தவளோ,”இது எப்போதிருந்து நடந்துக்கிட்டு இருக்குது?” என்று அவரிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

அதற்கும் பதில் கொடுத்து விட்டு அமைதியாக நின்றார் கவிபாரதி.

“நீங்க தான் அவங்களுக்குத் தேவையான பதிலடியை அப்பப்போ கொடுத்துட்டீங்களே? அப்பறம் ஏன் இப்படி முகத்தை வச்சிட்டு இருக்கீங்க?” என்றவளிடம்,

“அவங்கப் பேசுறது என்னைப் பத்தியும், என்னோட மகனைப் பத்தி மட்டும் ஆக இருந்திருந்தால், அதை தூசி மாதிரி தட்டி விட்டுட்டுப் போயிருப்போம்! ஆனால் உன்னையும் சேர்த்து வச்சுப் பேசுறது தான் கஷ்டமாக இருக்கு ம்மா” என்று அவளிடம் சொன்னார் கவிபாரதி.

“ம்ஹூம்! அதில் உங்கத் தவறு எதுவும் இல்லை ம்மா. எனக்கு என்னைப் பத்தியும் தெரியும்! உங்க ரெண்டு பேரைப் பத்தியும் தெரியும்! அப்படியிருக்கும் போது, அவங்களோட பேச்சால் எனக்கும், உங்களுக்கும் எந்தக் கெட்டப் பேரும் கிடைக்காது ம்மா! அதே மாதிரி, உங்களால் எனக்கு எந்த அவமானமும் எப்பவும் நேராது!” என்று அவரிடம் உறுதியுடன் உரைத்தாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா” என்று பதிலளித்தவருக்கு அடுத்து என்னப் பேசுவது எனத் தெரியாமல், அப்படியே நின்றிருந்தார் ஸ்வரூபனின் அன்னை.

“இப்போ நாம ரெண்டு பேரும் சேர்ந்து மிருதுளா அக்காவோட வீட்டுக்குப் போய் ஒரு விஷயத்தைப் பத்திப் பேசுவோமா?” என்று அவரிடம் வினவியவளிடம்,

“ம்ம். நான் வர்றேன்” என்று அவளிடம் ஒப்புக் கொண்டார் கவிபாரதி.

அத்தோடு, ருத்ராக்ஷியும், அவரும் இணைந்து மிருதுளாவின் இல்லத்திற்குச் சென்றார்கள்.

அவரோ, சற்று நேரத்திற்கு முன்னர் தான், தனது வீட்டிற்குச் சென்றிருந்ததால், கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு, எழுந்து சென்று, தான் குடிப்பதற்காகத் தேநீரைத் தயாரிக்கப் போனவரை,

வீட்டின் வாயிலில் இருந்து,”அக்கா!” என்றொரு குரல் கேட்கவும், அது ருத்ராக்ஷியுடையது என்பதை அறிந்து கொண்டதும், அங்கே சென்று பார்த்தார்.

அந்த இடத்தில், அவளுடன், கவிபாரதியும் இருப்பதைக் கண்டு,”என்ன நீங்க ரெண்டு பேரும் இங்கே வந்திருக்கீங்க? எதுவும் பேசலையா?” என்று அவ்விருவரிடமும் விசாரித்தார் மிருதுளா.

“நாங்கப் பேசிட்டோம். இப்போ உங்க கூடவும் சேர்ந்து பேச வந்திருக்கோம்” என்றுரைத்தாள் ருத்ராக்ஷி.

“ஓஹ். சரி. முதல்ல உள்ளே வாங்க” என அவர்களை வீட்டினுள் நுழைய அனுமதித்து விட்டு, அவர்கள் வந்ததும்,

“எனக்கு டீ போடப் போனேன். உங்களுக்கும் சேர்த்துப் போட்டுட்டு வர்றேன். அதைக் குடிச்சிட்டே பேசலாம்” என்று அவர்களிடம் தெரிவித்து விட்டு, சமையலறைக்குள் நுழைந்து கொண்டார் மிருதுளா.

“என்ன விஷயம் மா?” என்று தனக்கு அருகில் இருந்தவளிடம் வினவினார் கவிபாரதி.

“கொஞ்சம் காத்திருங்க ம்மா. அக்கா வந்ததும் சொல்லிடறேன்” என்று அவரிடம் கூறி விட்டாள் ருத்ராக்ஷி.

அதற்குள்ளாக, மூன்று கோப்பைகளில் தேநீரை நிரப்பி எடுத்துக் கொண்டு வந்து விட்டவரோ,

“இந்தாங்க” என அவ்விருவருக்கும் கொடுத்துப் பருகச் சொல்லி விட்டுத் தானும் தேநீரைக் குடிக்கத் தொடங்கினார் மிருதுளா.

“இப்போதாவது சொல்லு ம்மா” என ருத்ராக்ஷியை ஊக்கப்படுத்தினார் கவிபாரதி.

மிருதுளா,“என்னாச்சு ம்மா? அவ என்ன சொல்லனும்?” என்று அவரிடம் கேட்கவும்,

“உன்னையும் கூட, வச்சிட்டுத் தான், அதைப் பத்திப் பேசனும்னு இருக்கா! அதான், நீ வந்ததும் கேட்டேன்” என்றார் கவிபாரதி.

“ஆஹான்! ஏன் இப்படி அவங்களை அலைக்கழிக்கிற ருத்ரா? விஷயத்தைத் தான் சொல்லேன்” என்று அவளை ஊக்கினார் மிருதுளா.

“இப்போ சொல்றேன் க்கா” எனச் சிறிது நாட்களுக்கு முன்பு, தனது சொந்த ஊருக்குச் சென்ற போது, அங்கே தன் அண்ணன், அண்ணி மற்றும் தந்தையிடம் பேசிய அனைத்தையும் அவர்களிடம் உரைத்து முடித்தாள் ருத்ராக்ஷி.

“ஹேய்! உண்மையாகவா சொல்ற?” என அவளிடம் கேட்டு ஆனந்தப் புன்னகை உதிர்த்தார் கவிபாரதி.

“ம்ஹம். நிஜமாகவே இதெல்லாம் நடந்தது ம்மா. எங்க வீட்டில் இருக்கிற மூனு பேருக்குமே இந்தக் கல்யாணத்தில் பரிபூரண சம்மதம். அதை உங்ககிட்ட சொல்லலாம்னு வரும் போது தான், உங்க முகத்தைப் பார்க்கிறப்போ ஏதோ வித்தியாசமாக இருக்கேன்னு நினைச்சிட்டுக் கேட்டேன்” என்று அவருக்கு விளக்கம் கொடுத்தாள்.

உடனே தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்த ஸ்வரூபனின் தாயோ,”ரொம்ப நன்றி ம்மா. எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்குத் தெரியுமா?” என்று அவளது தலையில் கையை வைத்து ஆசீர்வாதம் செய்தார்.

உடனே அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டாள் ருத்ராக்ஷி.

இந்தக் காட்சியைப் பார்த்து நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார் மிருதுளா.

அதன் பிறகுத், தங்களுடைய இடத்தில் அமர்ந்து கொண்டவர்களோ,”அப்படின்னா, நான் இதை என் பையன் கிட்ட சொல்லிடவா ம்மா?” என்று அவளிடம் வினவினார் கவிபாரதி.

“அவர்கிட்ட கண்டிப்பாக சொல்லிடுங்க ம்மா. ஆனால், இதில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு” என்றாள் ருத்ராக்ஷி.

“அது என்ன?” என்று அவளிடம் கேட்டார் மிருதுளா.

“எங்க அண்ணி மறுவீட்டுக்குப் போயிருக்காங்கள்ல? அதெல்லாம் முடிஞ்சு அவங்க எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறம் தான் எல்லாத்தையும் நடத்த முடியும்!” என்று அவர்களிடம் தீர்க்கமாக உரைத்தாள் காஷ்மீரனின் தங்கை.

“ஆமாம். அது தான், சரியாக இருக்கும். உன்னோட அண்ணி உங்களோட வீட்டுக்கு வந்ததுக்குப்‌ பிறகே எல்லாம் பாத்துக்கலாம்” எனக் கவிபாரதியும் அதை ஏற்றுக் கொண்டார்.

“உன் கல்யாணத்துக்கும் இந்த ஊர் ஆளுங்களைக் கூப்பிடுவியா ருத்ரா?” எனக் கேட்டார் மிருதுளா.

“இல்லையா பின்னே? முடிஞ்சளவுக்கு எல்லாரையும் கூப்பிடுவேன் க்கா. வர்றவங்க வரட்டும்” என்று தெரிவித்து விட்டாள் ருத்ராக்ஷி.

மிருதுளா,“சரிடா”

“ரொம்ப நேரமாச்சே க்கா? இன்னும் அண்ணாவைக் காணோம்? நாங்க வர்றப்போ அவர் இங்கே இருப்பாருன்னு நினைச்சிட்டுத் தான் வந்தோம்” என்று வித்யாதரனைப் பற்றி விசாரித்தவளிடம்,

“நான் வீட்டுக்கு வந்துட்டு இருந்த டைமிலேயே கால் செஞ்சு லேட் ஆகும்ன்னு சொல்லிட்டாரு. அதான், சாவகாசமாக டீ போட்டுக் குடிக்கலாம்னு இருந்தேன்” என்று அவளுக்குப் பதில் சொல்லவும்,

“அப்படியா? சரிக்கா” என்றவளோ,

“நானும் கிளம்பறேன்” என்று கூறி எழுந்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதே மாதிரி, கவிபாரதியும் எழுந்து கொண்டுத், தானும் புறப்படுவதாக சொல்லி விடவும்,

“சரி. சந்தோஷமான விஷயத்தைப் பத்திப் பேசி இருக்கோம். அதனால், சந்தோஷமாகப் போயிட்டு வாங்க” எனச் சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார் மிருதுளா.

அங்கேயிருந்து வெளியேறி வந்த கவிபாரதியோ, தனது வருங்கால மருமகளிடம் கனிவாய் நான்கு வார்த்தைகள் பேசி விட்டே புளகாங்கிதத்துடன் தன்னுடைய இல்லத்திற்குப் போய் விட்டார்.

அதே மகிழ்வுடன், தனது வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள் ருத்ராக்ஷி.

அவள் தனது வீட்டிற்குத் தகவல் தெரிவிக்க வேண்டியது உள்ளது, அதே போலவே, கவிபாரதியும் தன் மகனிடம் அந்தச் சந்தோஷமான செய்தியைப் பகிர்ந்து கொள்வதற்காக அவன் வயலில் இருந்து வருவதற்காக காத்திருந்தார்.

எனவே, கூடிய சீக்கிரத்திலேயே, ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் திருமணம் நடந்தேறப் போகிறது!

- தொடரும்
 
ருத்ராக்ஷியோட கல்யாண வைபோகத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறோம் 😍😍😍😍😍😍😍
 
Top