Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 80

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன்னுடைய பேருந்து பயணம் முடிவடையப் போகும் தருணத்தில், தான் ஊருக்கு வந்து விட்டதாக தன் அண்ணிக்குச் செல்பேசியில் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் தெரிவித்து விட்டவளோ,

ஊருக்குச் சென்று சேர்ந்தது அதிகாலை நேரம் என்பதாலேயே, மிகவும் புத்துணர்வான மனநிலையில் இருந்தாள் ருத்ராக்ஷி.

அதே சமயம், அவளது வீட்டிலோ,“மாமா! இன்னும் கொஞ்ச நேரத்தில் ருத்ரா ஊருக்குள்ளே வந்துருவா. அவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வர யாரையாவது அனுப்பி வைக்கனும்” என்றாள் மஹாபத்ரா.

“இதோ காரை அனுப்புறேன் ம்மா” என்று அவளிடம் கூறியவர்,‌ பேருந்து நிலையத்திலிருந்து மகளை அழைத்து வருவதற்குக் காரை அனுப்பி வைத்தார் சந்திரதேவ்.

இதையெல்லாம், காஷ்மீரனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். அவன் இன்னும் மேலே இருந்த அறையிலிருந்து வரவில்லை. இன்னும் உறக்கத்தில் தான் இருக்கிறான்.

அதனாலேயே, அவனது தங்கையை விரைவாக அழைத்து வரச் சொல்லி உத்தரவு பிறப்பித்து விட்டு, மாமனாரும், மருமகளும் ருத்ராக்ஷிக்காக காத்திருந்தார்கள்.

அங்கே பேருந்தை விட்டு வெளியேறி ஒரு ஓரமாக நின்றிருந்த ருத்ராக்ஷியோ, தன் வீட்டுக் கார் அவ்விடத்திற்கு வந்து நிற்பதைக் கண்டதும், அதை நோக்கிச் சென்றாள்.

“வாங்க ம்மா” என அவளை வரவேற்றார் அவளது வீட்டுக் கார் டிரைவர்.

“ஹாய் ண்ணா” என்றபடியே, அந்த வாகனத்தில் ஏறிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அதற்குள்ளாக, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு தன் அறையிலிருந்து வெளியேறி கீழே ஹாலிற்கு வந்தான் காஷ்மீரன்.

“ஹாய் குட்மார்னிங்!” என்று அவனை ஆரவாரத்துடன் வரவேற்றனர் சந்திரதேவ்வும், அவரது மருமகளும்.

“தூங்கி எழுந்திரிச்சு தானே வர்றேன்? ஏதோ அவார்ட் வாங்கிட்டு வர்றா மாதிரி கூப்பிட்டுட்டு இருக்கீங்க?” என்ற சந்தேகத்துடன் கேட்டவாறே அவர்களிடம் வந்தான்.

“ஹாஹா! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குடா! அமைதியாக வந்து உட்கார்” என்றார் அவனது தந்தை.

தன் மனைவியைப் பார்த்து என்னவென்று கேட்டுக் கொண்டே அவளுக்கு அருகே சென்று அமர்ந்து விட்டான் காஷ்மீரன்.

“சொல்ல மாட்டேனே ங்க!” என்று அவனிடம் கூறிக் கிளுக்கிச் சிரித்தாள் மஹாபத்ரா.

“அட போம்மா!” என்றதோடு அமைதியாக இருந்து விட்டான் அவளது கணவன்.

அப்போது அவர்களது போர்டிகோவில் கார் வந்து நின்று அதிலிருந்து இறங்கியவளோ, அவர்களுடைய வீட்டிற்குள் குஷியாக நுழைந்தாள் ருத்ராக்ஷி.

“எல்லாருக்கும் ஹாய்!” கூவிக் கொண்டே தங்களை நோக்கி வந்தவளைப் பார்த்ததும் ஆச்சரியத்திலும், ஆனந்தத்திலும் தன்னுடைய விழிகள் பெரிதாக அவளிடம் சென்று,”ஹேய்! ருத்ரா ம்மா!” என்று தன் ஆருயிர்த் தங்கையை அணைத்துக் கொண்டான் காஷ்மீரன்.

அதைப் பார்த்த மற்ற இருவருமே நெகிழ்ந்து போயினர்.

“என்னாச்சு ண்ணா? ரொம்ப எமோஷனல் ஆகுறீங்க?” என்று அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்டாள் ருத்ராக்ஷி.

“ஆமா டா. உன் ஞாபகமாகவே இருந்துச்சு. இப்போ உன்னைப் பார்த்ததும் என்னோட எமோஷனைக் கன்ட்ரோல் பண்ண முடியலை!” என்று அவளிடம் உரைத்தான் காஷ்மீரன்.

அவனது அன்பான அரவணைப்பில் இருந்து கொண்டே, மற்ற இருவரையும் பார்த்து,”நீங்க எப்படி இருக்கீங்க?” என்று அவர்களிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“நல்லா இருக்கோம் மா” என்றார்கள்.

உடனே தன்னுடைய தமையனிடம் இருந்து தந்தையிடம் சென்று அவரை அணைத்து விடுவித்தவளோ,”அண்ணி!” என்று மஹாபத்ராவிடம் போய், அவளை இறுக கட்டிப் பிடித்துக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“நீ வர்றேன்னு எங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணவே இல்லையே? காலையில் தான் பஸ்ஸில் வந்துட்டு இருக்கேன். வண்டி அனுப்பி விடுங்கன்னு சொன்ன!” என்று அவளிடம் வினவினார் சந்திரதேவ்.

“ஆமாம். நானும் இதைக் கேட்கனும்னு நினைச்சேன்! ஏன்டா சொல்லாமல் கொள்ளாமல் வந்த? முதல்லயே எனக்குக் கால் செஞ்சு விஷயத்தைச் சொல்லியிருந்தா, நானே வந்து உன்னைப் பிக்கப் செய்து கூட்டிட்டு வந்திருப்பேன்ல?” என்று தங்கையிடம் கேட்டான் காஷ்மீரன்.

“ஹிஹி! அது உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் இப்படி பண்ணேன் அண்ணா” என்று அவனிடம் அதைக் கூறி விட்டுத் தன் அண்ணியைப் பார்த்துக் கண்ணடித்தாள் ருத்ராக்ஷி.

அதைப் புரிந்து கொண்ட மஹாபத்ராவும், தனது சிரிப்பை உதடுகளுக்குள் மறைத்துக் கொண்டாள்.

இவர்களது இந்தப் பாவனைகளை அவர்களுக்கே தெரியாமல் கண்டு கொண்டான் காஷ்மீரன்.

ஆனால், அவன் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.

அதன் பின்னர், நால்வரும் ஒவ்வொருவராக குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்து, ஒன்றாக அமர்ந்து உணவுண்டு முடித்தார்கள்.

“நாளன்னைக்கு மாமாவும், அத்தையும், ஆடிக்கு அழைக்க வர்றாங்க டா” என்ற செய்தியை அவளிடம் தெரிவித்தான் காஷ்மீரன்.

“அப்படியா ண்ணா? அப்போ அடுத்த ஒரு மாசத்துக்கு அண்ணி அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்களா?” என்று அப்போது தான் அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதைப் போல் அவனிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் டா” என்று தானும் அவளுடன் சேர்ந்து வருத்தப்பட்டான் அவளது தமையன்.

“ம்ஹ்ம்! விடுங்க அண்ணா. அவங்களை அப்பப்போ போய்ப் பார்த்துட்டு வந்துருங்க” என்று அவனுக்கு ஐடியா கொடுத்தாள் அவனது தங்கை.

“ஷூயர் மா” எனக் கூறிப் புன்னகைத்தான் காஷ்மீரன்.

“ஓகே. என் ரூமுக்குப் போய் நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்” என்று அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் அறைக்குப் போய் விட்டாள் ருத்ராக்ஷி.

“நாம மூனு பேரும் ஆடி அழைப்பு முடியிற வரைக்கும் ஆஃபீஸூக்கு லீவ் எடுத்துக்கலாம்” என்று தன் மகன் மற்றும் மருமகளிடம் கூறி விட்டு,

“ஓகே ப்பா. நானும் போய் கொஞ்ச நேரம் கண் அசந்துக்கிறேன்” எனத் தனது அறைக்குள் நுழைந்து கொண்டார் சந்திரதேவ்.

தன்னவளை இழுத்து அழுத்தமாக அணைத்துக் கொண்டான் காஷ்மீரன்.

அவளை விடுவிக்கும் எண்ணம் அவனுக்குக் கிஞ்சித்தும் இல்லை.

அந்த அணைப்பைத் தளர்த்தும் எண்ணமில்லை, அதை இன்னும் இறுக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன்.

அந்த மோன நிலையிலேயே,”என்னாச்சு ங்க?” என்று அவனிடம் வினவினாள் மஹாபத்ரா.

“இதுக்கு எல்லாம் நீ தானே காரணம் மா?” என்று தன் மனைவியிடம் கேட்டான் காஷ்மீரன்.

“எதுக்கு ங்க? என்னக் கேட்கிறீங்க? எனக்கு ஒன்னுமே புரியலையே!” என்று சிலிர்த்த தன் உடலின் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டே அவனிடம் வினா எழுப்பினாள்.

அவளைத் தன் அணைப்பிலிருந்து விடுவித்து விட்டு,”நீ தானே ருத்ராவை இங்கே வரவழைச்ச?” என்று அவளது கண்களைப் பார்த்துக் கேட்டான் அவளுடைய மணாளன்.

“இல்லையே ங்க! அவ இங்கே வர்றது எனக்கும், மாமாவுக்கும் இயர்லி மார்னிங் தான் தெரியும்” என்று கூறிச் சமாளித்தாள் மஹாபத்ரா.

“ஓஹ்! அப்படியா? சரிம்மா” எனச் சொல்லி விட்டு அவளது முகம் முழுவதும் முத்தங்களால் அர்ச்சிக்க ஆரம்பித்து விட்டான் காஷ்மீரன்.

- தொடரும்
 
நான் கேட்டது காஷ்மீரன், மாதிரி ஒரு அண்ணா. ஆனா கடவுள் கொடுத்தது,.அதுக்கு ஆப்போசிட்டா, ☹☹ ஆனாலும் கோணலாயிருந்தாலும், என்னோடதாக்கும்.🤷‍♀️
 
நான் கேட்டது காஷ்மீரன், மாதிரி ஒரு அண்ணா. ஆனா கடவுள் கொடுத்தது,.அதுக்கு ஆப்போசிட்டா, ☹☹ ஆனாலும் கோணலாயிருந்தாலும், என்னோடதாக்கும்.🤷‍♀️
நம்ம எல்லாருக்குமே அவங்க அவங்களோட கூடப் பிறந்தவங்க பெஸ்ட் தானே சிஸ்? Thank you so much ❤️
 
Top