Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 107

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்களது பார்வையில் பிரம்மிப்பு இல்லையென்றால் தான் ஆச்சரியம். ஏனென்றால், தனது மனநிம்மதிக்காக வேண்டி இந்த ஊருக்கு வந்து தங்கிக் கொண்டு இருந்தவளோ, இப்போது இந்த ஊரில் வாழும் அதுவும் விவசாயக் குடும்பத்தில், சொத்துப், பத்து அதிகம் இல்லாமல் பிறந்தவனைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள் என்பதை எண்ணி அவர்களது விழிகள் அனைத்தும் வியப்பில் அநியாயத்திற்கு அதிக அளவிற்கு விரிந்தது.

“என்ன இப்படி ஆச்சரியமாகப் பார்க்கிறீங்க?” என அவர்களிடம் வினவினார் மிருதுளா.

அவர்களது பாவனைகளை ஏற்கனவே அவ்விடத்தில் இருந்த மொத்தக் குடும்பமும் பார்த்திருக்க, அது மட்டுமில்லாமல், உள்ளே வந்திருந்த ஸ்வரூபனும், அவனது அன்னையும் கூடப் பார்த்து அதன் பொருளைப் புரிந்து கொண்டார்கள் தான்!

ஆனால், மிருதுளாவின் கேள்வியே போதும்! தாங்கள் வீணாக வார்த்தையை விடத் தேவையில்லை என்று அமைதியாகி விடவும்,

“இதை நாங்க எதிர்பார்க்கலை! அதான்!” என்று அவர்கள் அனைவரும் பதிலளித்தனர்.

“ஓஹ்! ஏன் அப்படி?” என்ற வினாவுடன் முன் வந்தாள் ருத்ராக்ஷி.

அவளது தோரணையே இப்போது வேறு மாதிரியாக இருந்தது. ஏனெனில், தனது வருங்கால கணவன் மற்றும் மாமியாரைப் பற்றியப் பேச்சு எனும் போது அவள் தானே முன்னே வந்தாக வேண்டும்?

எனவே, பொறுப்பைத் தன்னிடம் எடுத்துக் கொண்டவளோ,

“ம்ம். சொல்லுங்க” என்று மீண்டுமொரு முறை குரலை உயர்த்தினாள் ருத்ராக்ஷி.

“இனிமேல் நாம் யாரும் பேசத் தேவையில்லை. அவளோட புகுந்த வீட்டுக்காக அவளே பேசிடுவா!” என்று தன் குடும்பத்தாரிடம் அறிவித்தார் காஷ்மீரன்.

“ஹாஹா! ஆமாம் ங்க” என்று தனது தனது நாத்தனாரின் இந்தப் புதிய அவதாரத்தை இன்னும் கொஞ்ச நேரம் பார்க்க ஆர்வமாக இருந்தாள் மஹாபத்ரா.

“இன்னும் நீங்க யாரும் என்னோட கேள்விக்குப் பதில் சொல்லலை?” என்று கேட்டபடியே கூட்டத்தாரைப் பார்த்துக் கேட்டாள் ருத்ராக்ஷி.

“அஃது! நீ எவ்வளவு பெரிய குடும்பத்தில் பிறந்து வளந்தவ! அப்படியிருக்கும் போது, இவ்வளவு எளிமையான ஊரில் இருக்கிற பையனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியே! அதைத் தான் எதிர்பார்க்கலைன்னு சொன்னோம்” என்று அவளுக்கு விளக்கம் அளித்தார்கள்.

அதைக் கேட்டதும், கவிபாரதி மற்றும் ஸ்வரூபனும் தாங்கள் இருவரும் ஒருவரையொருவர் சங்கடமாகப் பார்த்துக் கொண்டனர்.

“இந்தக் கேள்விக்கு நான் எத்தனை தடவை தான் பதில் சொல்றது? ப்பா! எனக்கு டயர்ட் ஆகுது!” என்று சலித்தவாறே கூறினாள் ருத்ராக்ஷி.

அது உண்மையிலேயே சலிப்பான வேலை தான் அவளுக்கு. ஏனென்றால், தான் என்னவோ, வானத்தில் இருந்து கீழே வந்த தேவதைப் போலவும், மற்றவர்கள் யாவரும் பூமியில் இருக்கும் சாதாரண உயிரினங்கள் போலவும் தன்னைப் பற்றித் தன்னிடமே புகழ் பாடுவதைக் கேட்டு களைத்துப் போய் விட்டது அவளுக்கு எனலாம்.

இதற்கு ஒரு முடிவு கட்டி விட வேண்டுமென்று எண்ணியவளோ,”நானும் சாதாரண மனுஷி தான் ங்க. இப்படி முகஸ்துதி நிறைய வரும்ன்னு தான், நான் இந்த ஊருக்கே வந்தேன். அதுவுமில்லாமல், இப்படியெல்லாம் பேச்சு வரக் கூடாதுன்னு தான், நான் என்னைப் பத்தின தகவல்களை மறைச்சுட்டு இருந்தேன். ஆனால், அந்தக் கிளாஸ் எடுக்கிறதால் தான், நான் உங்ககிட்ட என்னைப் பத்திச் சொன்னேன். அதுவே எனக்கு இப்படி ஒரு சங்கடத்தைத் தரும்ன்னு நினைக்கலை” என்று கணீர்க் குரலில் சொல்லி விட்டுச் சில மணித்துளிகளுக்கு மௌனித்து விட்டாள் ருத்ராக்ஷி.

அவளது பேச்சுத் திறமையைக் கண்டு, அவளது குடும்பம் மட்டுமின்றி, மற்றவர்களும் கூட ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“இல்லை ம்மா…” என்று அந்தப் பெண்மணிகள் தயங்கிய போது,

“ம்ம். இருங்க. நான் இன்னும் பேசி முடிக்கலை” என்றவளோ,

“பணக்கார குடும்பத்துப் பொண்ணுக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளைப் பணக்காரராக இருக்கிறாரா? ஏழையான்னுப் பார்க்கக் கூடாது! மாப்பிள்ளை யாராக இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக வாழ்றாங்களான்றது தான் முக்கியம்!” என்று அவர்களுக்குப் புத்திச் சொன்னாள் ருத்ராக்ஷி.

“சரிம்மா. நாங்க இப்படி பேசினதுக்கு எங்களை மன்னிச்சிடு!” என்று அவளிடம் தலைகுனிந்தபடியே மன்னிப்புக் கேட்டனர்.

அதில் சீற்றம் குறைந்து போனவளோ,”நீங்க என்னை உயர்த்தி, அவங்களைத் தாழ்த்திப் பேசி இருக்கீங்க! அதனால், அவங்ககிட்ட மன்னிப்புக் கேளுங்க” என்று அவர்களிடம் கறாராக மொழியவும்,

அதைப் பின்பற்றி,”மன்னிச்சிருங்க கவியம்மா! ஸ்வரூபா” என்று அவ்விருவரிடமும் சொன்னவர்களிடம்,

“இனிமேல் இப்படி யாரையும் குறைச்சுப் பேசாதீங்க” என்று கேட்டுக் கொண்டவளோ,

இத்துடன் இந்த மாதிரியான பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்ட நிம்மதியில் தன் குடும்பத்தினரைப் பார்த்தாள் ருத்ராக்ஷி.

“நாம எல்லாரும் என்னென்னப் பேசனும்ன்னு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வச்சா, இவ என்ன எல்லாத்தையும் சுயமாகவே பேசிட்டா!” என்று அவளைப் பாராட்டிப் பேசினார் கனகரூபிணி.

“சூப்பர்ல?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொள்ளவும்,

அவர்களை விடப் பெருமிதத்தில் மிளிர்ந்தது வேறு யாருமில்லை கவிபாரதி மற்றும் ஸ்வரூபன் தான்!

அவர்களுக்கு ருத்ராக்ஷியைப் பற்றி நன்றாகவே தெரியும். ஆனால், அவள் இந்தளவிற்குத் தங்களுக்காக ஏற்றுப் பேசுவாள் என்பதை இப்போது ஆணித்தரமாகப் புரிந்து கொண்டனர் இருவரும்.

அதன் பின்னர்,”உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத் தானே கூப்பிட்டேன்?” என்று சொன்னவளோ,

“ஏங்க! இங்கே வாங்க” என ஸ்வரூபனைத் தன்னருகே அழைத்தாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டு வெட்கத்தில் தயங்கி நின்றான் ஸ்வரூபன்.

“ஹலோ சார்! ப்ளீஸ் வாங்களேன்” என்று கூறவும், அதைக் கேட்டுப் புன்னகைத்தார்கள் அனைவரும்.

அதற்குப் பின்னரும், அவளருகே செல்லாமல் இருப்பானா?

அங்கே போனதும்,”எனக்கும், இவருக்கும் நிச்சயத்தார்த்தம் நடக்கப் போகுது. அதுக்கு நீங்க எல்லாரும் கண்டிப்பாக வரனும்” என்று அவர்களை முறையாக வரவேற்றாள் ருத்ராக்ஷி.

அவர்களது ஜோடிப் பொருத்தத்தைக் கண்டுத் தங்களது எண்ணம் அனைத்தும் தவறென்று உணர்ந்து கொண்டு,”கண்டிப்பாக வர்றோம் மா” என ஒரு மனதாக ஒப்புதல் அளித்தனர்.

இன்றோடு தங்களுடைய குதர்க்கமானப் பிற்போக்கு சிந்தனைகளுக்கு முழுக்குப் போட்டு விட்டார்கள். அதனால் மனமொத்து ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனுக்கு வாழ்த்துக்களையும் கூடத் தெரிவித்து விட்டனர்.

“டிரெஸ்ஸும் எடுத்துக் கொடுக்கனும்னு நினைச்சு இருக்கோம். நாளைக்கு அதுக்கான நேரத்தைச் சொல்றோம். எல்லாரும் வந்துருங்க” எனக் கூறி விட்டுத் தனது குடும்பத்துடன் அங்கேயிருந்து விடைபெற்றுக் கொண்டு,

வீட்டிற்குச் சென்றதும், ஆஹா, ஓஹோவென்றப் பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டவளோ,”போதும் ப்பா. எனக்கு ரொம்ப பசிக்குது! நாம சமைக்க வேண்டாமா?” என்று அனைவரும் சேர்ந்து அன்றைய மதிய உணவைத் தயாரித்து முடித்து சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்து விட்டனர்.

- தொடரும்
 
Top