Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 1

Advertisement

Aarpita

Active member
Member
கண்ணுக்கெட்டும் தூரம் வரை நீல நிற கம்பளி போர்த்தி அலைகள் எல்லாம் தன்னையே ஓடி வந்து முட்ட முயற்சித்து, தோற்றுப் போனாலும், மறுமுறை அதிக பலம் கொண்டு வேகமாக வந்து முட்டும் குழந்தை போல் தமக்குள்ளேயே விளையாடி கொண்டு இருக்கும் கடலின் அலைகளை கண் கொட்டாமல் கவனித்தபடியே அமர்ந்து இருந்தான் தர்ஷன்.

தான் வந்த காரை, நடைபாதை அருகே ஓரமாய் நிற்க வைத்தவன், கடலில் பயணம் செய்ய உதவும் படகு ஒன்றை பிடித்து, அதன் நிழலில் அமர்ந்து கொண்டவனுக்கு கடலே பார்வையாகி இருந்தது.

மனம் ஒரு போக்கில், அவன் ஒரு போக்கில் என்று அமர்ந்து இருந்தவனிடம், கரை ஒதுங்கிய நண்டுகளும் கூட, ஏதோ அருங்காட்சியக பொருள் போல, வந்து நின்று பார்த்து, சில நொடிகள் ரசித்து பின் அதன் போக்கில் கடலில் குதித்து விளையாட சென்று விடும்.

ஆனால் இவனோ, செதுக்கிய சிலை போல், எந்த வித அசைவும் இல்லாமல், உயிர் அற்ற ஜடம் போல அமர்ந்து இருந்தவன், உயிருடன் இருக்கிறானா இல்லை இறந்து விட்டானா, என்பது தான் அந்த நண்டுகளின் யோசனையாக இருந்தது.

ஒற்றை கண்ணில் இருந்து வடிந்து வரும் கண்ணீரை கண்டதும் தான், இவன் உயிர் இவனிடம் இருப்பது உறுதியாக, வந்த வழியே தன் வீட்டை நோக்கி சென்று விட்டன அந்த நண்டுகள்.

உயிர் இருந்தும் பிணமாய் இன்று தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவனுக்கோ, உயிரை சேரவும் இயலாமல், அதை வெறுத்து ஒதுக்கவும் இயலாமல் இருக்கும் திண்டாட்டம் தான், அவனின் ஐந்து வருட வாழ்க்கையின் அடி நாதம்.

ஐந்து வருடத்தில் எத்தனையோ மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டவனுக்கு, என்றும் மாறா அதே புதுமையுடன் தன் மனதை நித்தமும் வருத்தும் அவளும், அவள் விட்டு சென்ற காயமும் தான் அவனை இயங்க தடுத்து இம்சித்து கொண்டு இருக்கிறது.

எத்தனை மணி நேரம் கடந்து இருக்குமோ தெரியாது. அவ்விதம் அமர்ந்து இருந்தவனுக்கு மனம் மொத்தம் அவளின் நினைவுகள் மட்டும் தான். இன்று இல்லை, ஐந்து வருடமாய் மறந்தும் நினைத்தபடியே வாழ்ந்து வரும் அந்த வாழ்க்கையை தனக்கு தந்த அவளை, ஐந்து வருடம் கழித்து காண இருக்கும் நாள் இது.

கையில் இருக்கும் அலைபேசியில், விடாமல் அழைப்புகள் வந்து கொண்டே இருக்க, அதனின் எண்ணிக்கை கூட கூட, இவனின் வேதனை அதிகமாவதை தடுக்கவும் இயலாமல் அமர்ந்து இருப்பவன், இறுதியாய் வந்த அந்த அழைப்பை ஒற்றை ரிங்கில் மட்டும் எடுத்தான்.

"டேய் தர்ஷா, எங்கடா இருக்க. ஸ்ரீஜா உனக்கு ரொம்ப நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்காளாம், நீ என்ன பண்ணிட்டு இருக்க?" காட்டமாய் வந்தது குரல் சக்தியிடம் இருந்து.

அதை கேட்டும் தர்ஷனிடம் மௌனமே மொழியாய் இருக்க,

"டேய் இன்னைக்குமாடா.. வேணாம்டா.. ப்ளீஸ்.. நாம வந்து இருக்க விஷயம் வேற.. இந்த நல்ல நாள்ல, திரும்பவும் அதெல்லாம் வேணாம்டா.. நாம வந்த வேலையை முடிச்சிட்டு போயிடுவோம்... ப்ளீஸ் தர்ஷா" அவன் நிலை புரிந்தும் செய்வதறியாமல் பேசினான் சக்தி.

இதற்கும் பதில் வராமல் போகவே, உடனே கைபேசியை சக்தியிடம் இருந்து வாங்கிய ஸ்ரீஜா,

"ஹலோ தர்ஷன்.. எங்க இருக்க? எவ்ளோ நேரமா உனக்கு நான் கால் பண்றது.. ஒரு தடவை கூட எடுக்க மாட்டியா?" கேட்டாள் ஸ்ரீஜா.

"அவ வந்துட்டாளா?" இது மட்டுமே அவனுக்கு தெரிந்து கொள்ளும் விஷயமாய் இருந்தது போல் தர்ஷன் கேட்க,

"நீ இன்னும் திருந்தவே இல்லையா தர்ஷன்.. இன்னும் அவளை தான் நெனச்சுக்கிட்டு இருக்கியா? உனக்காக நாங்க எல்லாரும் இங்க கவலைப்பட்டுக்கிட்டு இருக்கோம், நீ என்னடானா அவளை பத்தியே கேக்குற??!!!" முதல்ல இருந்து நிதானம் தவறி போனது ஸ்ரீஜாவிற்கு.

அவன் அப்போதும் அமைதி காக்க,

"நீ தெரிஞ்சிக்க நினைக்குறத நான் சொல்ல மாட்டேன்.. இதுக்கு மேலயும் நீ செய்யுற தப்பை கண்டுக்காம இருக்க முடியாது" ஆவேசமாய் அவள் பேசினாலும், இவனோ கடலை தான் வெறித்து கொண்டு இருந்தான்.

இது சரி வராது என்பதை உணர்ந்த சக்தி,

"டேய்.. இதோ வர்ஷா உன் கிட்ட பேசணுமாம்.. இரு தரேன்" என்றவன் வர்ஷாவிடம் கொடுக்க.

"தர்ஷா, எப்படிடா இருக்க? நல்லா இருக்கியா?" இருவரும் கேட்க தவறியதை கேட்டாள் அவள்.

அவள் குரலும், உரிமையும் உணர்ந்தவனால், அதற்கு மேல் தன் சோகத்தை மறைத்து வைக்க இயலாமல்,

"என்னால முடியல வரு. கஷ்டமா இருக்கு. எதுக்கு ஏன்னு தெரியாம பைத்தியம் பிடிக்குற மாதிரி இருக்கு. அவ்ளோ உண்மையா அவளை காதலிச்சதுக்கு அவ குடுத்த இந்த பரிசை ஏத்துக்க முடியல. அதுவும் அவளை பாக்கணும்னு நினைக்கும் போது, பயம் தான் அதிகம் வருது. மறுபடியும் தடுமாறிடுவேனோனு" குரல் தழுதழுக்க அவன் பேச கேட்டவளுக்கோ, இதயம் கணக்க தான் செய்தது.

அனாதையாய் வளர்ந்த தனக்கு, இந்த உலகில் கிடைத்த முதல் உறவே தர்ஷன் தானே. ஒரு அண்ணனாய் இதுவரை அவன் தனக்கு துணையாய் நின்று இருக்கும் போது, அவன் வாழ்க்கையின் இந்த நொடி தன்னால் அவன்பால் முழுதாய் இருக்க இயலவில்லை என்ற கவலை அவளுக்கும் உண்டு.

தன் உயிர் தோழியாய், தன்னிடம் அனைத்தையும் கூறி பேசி மகிழ்ந்த தன் தோழி, அன்று செய்த காரியத்தின் அர்த்தம் இதுவரை தனக்கே விளங்காத போது, தர்ஷனுக்கு என்ன ஆறுதல் கூறி விட முடியும் அவளால்.

அதனால் தானே இது நாள் வரை, தர்ஷனையோ, தன் தோழியையோ அழைக்கவோ பேசவோ கூட தவிர்த்து வந்து, வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.

ஆனால் இன்று வேறு வழி இல்லை. ஐந்து ஆண்டுகள் முன்பு, எதையோ எண்ணி போடப்பட்ட பிள்ளையார் சுழி, இன்று முற்றில் வந்து நிற்க, துவக்கிய இவர்கள் தானே முடித்தும் வைக்க வேண்டும். அதன் பொருட்டு தான் தர்ஷனை இத்துணை சிரமப்படுத்தி அழைத்து கொண்டு இருக்கின்றனர் நால்வரும்.

“தர்ஷா, எனக்கு புரியுது. பட் இன்னைக்கு எல்லாருமே இங்க இருக்கனும். அது உனக்கே நல்லா தெரியும். எல்லாரும் வர ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. ஃபங்ஷன் வேற ஆரம்பிக்க போகுது. ப்ளீஸ் வந்து கொஞ்ச நேரம் மட்டும் இருந்துட்டு போடா. எனக்காக வரமாட்டியா?" அவனை வரவழைக்க தன்னிடம் இருக்கும் கடைசி ஆயுதத்தையும் பயன்படுத்திய படியாய் பேசினாள் வர்ஷா.

"ஹ்ம்ம்ம்" என்பது மட்டுமே பதிலாய் வர, அத்துடன் இணைப்பையும் அவன் துண்டித்து விட்டான்.

"என்னவாம். எங்க இருக்கானாம். என்ன சொன்னான்?" அழைப்பு துண்டிக்க பட்டதை உணர்ந்த உடனே சக்தி கேள்விகளை எழுப்ப.

"தெரியல.. ஹ்ம்ம்ம்-னு மட்டும் சொன்னான்.. வருவான்னு தான் நினைக்குறேன்" யோசனையுடன் கூறினாள் வர்ஷா.

"நல்ல விஷயம். வரட்டும். பட் நீ எதுக்கு இவ்ளோ யோசனையா இருக்க?" கேட்டான் சக்தி.

"ஒரு வேளை ரெண்டு பேரும் ஒரே நேரத்துல எதிர் எதிரே வந்துட்டா. என்ன பண்றது? அவ எங்க இருக்காளாம்?" வர்ஷா.

"எப்படி இருந்தாலும் ரெண்டு பேரும் சந்திச்சி தானே ஆகணும். அதுவும் இன்னைக்கு முக்கியமான ஆட்களே அவுங்க தானே. தவிர்க்க முடியாதுல.." சக்தி.

"அதானே, எஸ்கேப் ஆக ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைச்சாலும் உங்க தங்கச்சி தான் நமக்கு நாமத்தை போட்டுட்டு போயிருப்பாளே. அவளே வரேன்னு சொல்ற அப்போவே தெரியலையா, இது அவளுக்கு எவ்ளோ முக்கியம்னு" வெறுப்பு தான் வர்ஷாவிற்கு.

"எத்தனை தடவை சொல்லி இருக்கேன். என்ன நடந்ததுன்னு தெரியாம யாரையும் தப்பா பேசாதேனு. அதுவும் அவ உன்னோட ஃப்ரண்ட். என்னை விட நீ தான் அவளை அதிகமா புரிஞ்சி இருப்ப. இருந்தும் எதுக்கு இப்டி பேசுற?" சக்தி.

"அவ பேசுறதுல என்ன தப்பு சக்தி. அவளை ஒரு முறை பார்க்க வந்ததுக்கே, ஒருத்தனை நடை பிணமாய் மாத்திட்டாள். இப்போ ரெண்டாவது தடவை என்ன என்ன பண்ண காத்து இருக்காளோ??!!!" ஆவேசம் இன்னும் அடங்கவில்லை ஸ்ரீஜாவிற்கு.

அவர்கள் பேச்சில் வருத்தம் கொண்டாலும், அன்று விழுந்த முடிச்சை அவிழ்க்க அவளே நேரில் வந்தால் தான் இயலும் என்று உணர்ந்த சக்தி, அவளுக்காய் காத்திருக்க,

நாமும் காத்திருப்போம்...
 
தர்ஷன் இந்த அளவுக்கு உடைந்து போய் இருக்கான் 🙁🙁🙁🙁பார்க்கவே கஷ்டமா இருக்கு..

ஐந்து வருடத்திற்கு முன்னாடி அப்படி என்னதான் நடந்தது?
காத்திருக்கிறோம் அறிய நாங்களும்..
 

"ஒரு வேளை ரெண்டு பேரும் ஒரே நேரத்துல எதிர் எதிரே வந்துட்டா. என்ன பண்றது?

So.... so.... இது தான் கதையோட twistஇன் ஆரம்பமா? வேதனையோடு தொடங்கினாலும் interestingஆஹ் இருக்கு..... 💞 💞 💞
 
தர்ஷன் இந்த அளவுக்கு உடைந்து போய் இருக்கான் 🙁🙁🙁🙁பார்க்கவே கஷ்டமா இருக்கு..

ஐந்து வருடத்திற்கு முன்னாடி அப்படி என்னதான் நடந்தது?
காத்திருக்கிறோம் அறிய நாங்களும்..
நன்றிகள் தோழி
 
"ஒரு வேளை ரெண்டு பேரும் ஒரே நேரத்துல எதிர் எதிரே வந்துட்டா. என்ன பண்றது?

So.... so.... இது தான் கதையோட twistஇன் ஆரம்பமா? வேதனையோடு தொடங்கினாலும் interestingஆஹ் இருக்கு..... 💞 💞 💞
Thank you sis.. Keep supporting
 
Nice start 🤩🤩🤩
யார் அவள்....???!!! என்ன செய்தாள் என்பதனை அறிந்து கொள்ள நாங்களும் காத்திருக்கிறோம் 🥺🥺🥺
Thank you sis.. Keep supporting
 
Top