வரம் 14

Advertisement

Writer girl

Well-known member
Member
மகளின் கோரிக்கையைக் கேட்ட பின்னர், முதலில் தன் மகனிடம் அந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் பால்ராஜ்.

அவனும் கூட,”எனக்கும் ஊருக்குப் போக சம்மதம் தான்ப்பா. விடியற்காலையில் கிளம்புற மாதிரி மாமா கிட்ட டிக்கெட் புக் பண்ணச் சொல்லிடுங்க”என்று அவரிடம் மொழிந்தான் மகிழம்பூவன்.

உடனே சிறிதும் தாமதிக்காமல்,”நாங்க வீட்டுக்குப் போகலாம்னு நினைக்கிறோம் மாப்பிள்ளை, தங்கச்சிம்மா. அதனால் நாளைக்குக் காலையில் அஞ்சு மணி ரயிலுக்கு டிக்கெட் போட்றீங்களா?”என்று ரமணன் மற்றும் கஸ்தூரியிடம் தெரிவித்திருந்தார் பால்ராஜ்.

அதைக் கேட்டுத் தங்களது முகம் சுருங்கினாலும் கூடச்,”சரிங்க மாமா. நான் உங்க மூனு பேருக்கும் டிரெயின் டிக்கெட் புக் பண்ணிட்றேன்”என்றுரைத்தார் ரமணன்.

“இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு நம்மப் பிள்ளைங்களோட கல்யாணத்தைப் பத்திப் பேச்சு வார்த்தையை முடிச்சிட்டு அப்பறமாக கிளம்புவீங்கன்னு நினைச்சேன் அண்ணா”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டார் கஸ்தூரி.

“நாங்க ஊருக்குப் போயிட்டு எங்க மருமகன், சம்பந்திகிட்டே பேசிட்டுப் பொறுமையாக அந்தப் பேச்சு வார்த்தையை ஆரம்பிப்போமே? அப்போ தான் எல்லாம் சரியாக நடக்கும்மா”என்றுரைத்தார் பால்ராஜ்.

“அதுவும் கரெக்ட் தான் அண்ணா”என்றவரோ, தனது கணவரின் தங்கை குடும்பத்தினர் ஊருக்குக் கிளம்பும் விஷயத்தை மகளிடம் தெரிவித்து விட,

“அதுக்குள்ளே கிளம்புறாங்களாம்மா? இங்கே சுத்திப் பார்க்க வேண்டியது எல்லாம் நிறைய இருக்கே! உடனே கிளம்புறதுக்கு அவங்களுக்கு அப்படி என்ன அவசரம்?”என்று தாயிடம் விசாரித்தாள் சஹஸ்ரா.

“மதிக்கு அவ வீட்டாளுங்களை மிஸ் பண்றாள். அதே மாதிரி உங்க மாமாவுக்கும், மகிழுக்கும் அங்கே இருக்கிற பண்ணையை எல்லாம் பார்க்க வேண்டாமா? அதனால் தான் கிளம்புறாங்களாம்”என அவளுக்குத் தகவல் கூறினார் கஸ்தூரி.

“ஓஹ். சரிம்மா. எப்போ கிளம்புறாங்களாம்?”என்று கேட்க,

“நாளைக்குக் காலையில் அஞ்சு மணிக்குக் கிளம்புறதுக்கு டிக்கெட் புக் பண்ணச் சொல்லி இருக்கார் பால்ராஜ் அண்ணா”என்றதும்,

“ஓகேம்மா. நான் நாளைக்கு அவங்களை டிரெயின் ஏத்தி விட்டுட்டு அப்பறம் ஆஃபீஸூக்குப் போய்க்கிறேன்”என்று அன்னையிடம் அறிவித்து விட்டிருந்தாள் சஹஸ்ரா.

“சரி டி” என்று மகளிடம் சொல்லி விட்டு,

அவளது கூற்றை மற்றக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தார் கஸ்தூரி.

“சந்தோஷம்மா”எனக் கூறி விட்டார் பால்ராஜ்.

அதேபோல்,’இனிமேல் நாங்களா உன்னைத் தேடி வரத் தேவையில்லை சங்குப்பூவழகி! நீயே எங்களைத் தேடி வருவ!’என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் வண்ணமதி.

ஆனால் தனது இத்தனை வருட கால ஏக்கமும், ஆசையும், தவமும் கை கூடி விட்டத் திருப்தியில் பளிச்சென்றப் புன்னகையுடன் வளைய வந்தான் மகிழம்பூவன்.

இதே சமயம், தன்னுடைய அலுவலகத்தில்,”மிஸ். மோனிகா”எனத் தன் காரியதரிசியை அழைத்தாள் சஹஸ்ரா.

“எஸ் மேம்”

“நான் கொஞ்ச நாளைக்கு ஆஃபீஸூக்குத் தினமும் வர முடியாது! அதனால் வீட்டிலிருந்தே எல்லாத்தையும் கவனிச்சுக்கப் போறேன்! அதே மாதிரி நம்மளோட புது ஃபேக்டரியோட கிளையைக் கூடிய சீக்கிரத்தில் திறக்கப் போறோம்! அதனால் இதை எல்லார் கிட்டேயும் சொல்லி இன்னும் ஒரு வருஷத்துக்கு அதில் கூடுதல் கவனம் செலுத்தனும்னும் தெளிவாகச் சொல்லி அதுக்கு அவங்களைத் தயாராக இருக்க சொல்லிருங்க”என்று அவளுக்கு கட்டளையிட்டு விடவும்,

“ஓகே மேம்”என்ற மோனிகாவிற்கோ,

அந்த தொழிற்சாலையின் கிளையைச் சீக்கிரம் திறப்பதற்கு தன் முதலாளிக்கு உதவிக்கரம் நீட்டி இருப்பது யார்? என்று எண்ணிக் குழம்பித் தனது புருவ முடிச்சிக்களுடன் அவளை ஏறிட,

அதன் பொருளைக் கச்சிதமாகப் புரிந்து கொண்டு,”இதில் எனக்கு யார் ஹெல்ப் பண்றாங்கன்னு நான் கண்டிப்பாக உங்க எல்லாருக்கும் தெரியப்படுத்துவேன் மிஸ். மோனிகா. அதனால் தேவையில்லாமல் நீங்க இதைப் பத்தி யோசிச்சுக் களைப்பாகாதீங்க!”என்று அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தாள் சஹஸ்ரா.

அதற்குப் பிறகுத் தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை ஒரு தரம் சரி பார்த்துக் கொண்டு அடுத்தக் கட்டத் திட்டத்தை வகுக்கத் தொடங்கி விட்டாள்.

அன்றைய இரவு உணவு நேரத்தில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் சந்தர்ப்பம் அமைந்து விட்டிருந்தது.

“இவங்க மூனு பேருக்கும் டிக்கெட் புக் பண்ணிட்டீங்களே அப்பா?”என்று அனைவரின முன்னிலையிலும் தந்தையிடம் விசாரித்தாள் சஹஸ்ரா.

“இன்னும் இல்லைம்மா. சாப்பிட்டுட்டுத் தான் புக் பண்ணனும்”என்றிருந்தார் ரமணன்.

“ஓகே ப்பா”என்றவளோ,

“ஏன்ம்மா, எனக்கும், பூவனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கான ஏற்பாடுகளைச் செய்யப் போறீங்க தானே? அதுக்கு முன்னாடியே நாம இவங்க ஊருக்குப் போய் நான் மருமகளாக வாழப் போற வீட்டைப் பார்த்துட்டு வரலாமா? அது நமக்கும் சொந்த ஊர் தானே? ஆனால் நாம எப்போதாவது தான் அங்கே போயிருக்கோம். அதான் கேட்கிறேன்”எனத் தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டாள் சஹஸ்ரா.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வணண்மதியோ, ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொண்டார்களே தவிர்த்து எதுவும் பேசவில்லை.

ஏனெனில், அவள் சொல்வதை முழுமையாக கேட்டதற்குப் பின்னர் பேசுவோம் என்று காத்திருக்கலானார்கள் மூவரும்.

ஆனால் மகளது பேச்சைக் கேட்டு அதிசயித்துப் போயினர் சஹஸ்ராவின் பெற்றோர்.

ஏனென்றால் அவளைத் தங்களுடன் ஊருக்கு வருமாறு கெஞ்சிக் கேட்டால் கூட அதை நாசூக்காகவோ, நேரடியாகவோ தவிர்த்து விடுவாள்.

ஆனால் இப்போதோ தானே விரும்பிக் கேட்கிறாளே! என்றெண்ணி அவளை விநோதமாகப் பார்த்தார்கள் ரமணன் மற்றும் கஸ்தூரி.

“உங்க ரெண்டு பேருக்கும் என்னாச்சு? ஏன் என்னை இப்படி பார்க்கிறீங்க?”எனக் கேட்டாள் சஹஸ்ரா.

உடனே தங்கள் மனதில் நினைத்ததை அவளிடம் கூறி மகளை மற்றவர்கள் முன்னிலையில் இறக்கிக் காட்ட வேண்டாம் என்று முடிவெடுத்து,

“நீ எப்பவும் உன்னோட பிஸினஸை விட்டுட்டு எங்கேயும் வர மாட்டியே? இப்போ என்னப் புதுசு, புதுசாகப் பேசுற?”என்றார் ரமணன்.

ஆனால், தங்களது ஊருக்குச் சஹஸ்ரா அடிக்கடி வராமல் இருந்ததற்கான காரணத்தை அவளது பெற்றோர் சொல்லாமலேயே அறிந்திருந்தனர் பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வண்ணமதி.

தனது தந்தையின் கேள்விக்கு,”அதனால் என்னப்பா? நான் இனிமேல் அங்கே தானே கல்யாணம் பண்ணிப் போகனும்? அதே மாதிரி அங்கே என்னோட ஃபேக்டரியோட ஒரு கிளையைத் திறக்க முடிவு செய்து இருக்கேன். அதான்”என்று அதிரடியாகப் பதிலளித்து விட்டு உணவை உண்டு முடித்ததால் தனது கையைக் கழுவச் சென்று விட்டாள் சஹஸ்ரா.

அவளது பதிலைக் கேட்டதும்,“ஓஹ்ஹோ! அதானே பார்த்தேன்! இவளுக்குத் திடீர்னு எப்படி நம்ம ஊருக்கு வர ஆசை வந்துச்சுன்னு இப்போ தானே தெரியுது!”என உதட்டைச் சுழித்தாள் வண்ணமதி.

உடனே,”மதி! அமைதியாக இரு. சஹாவே ரொம்ப வருஷம் கழிச்சு நம்ம ஊருக்கு வர்றதுக்கு ஆசைப்பட்றாள்! அதை இப்படிக் கிண்டல் பண்ணக் கூடாது”என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார் பால்ராஜ்.

அதில்,”நீங்க எப்பவும் அவுகளுக்கே சப்போர்ட் பண்ணுங்கப்பா”எனச் சிறு பிள்ளையைப் போல் தந்தையிடம் கோபித்துக் கொண்டு உணவுத் தட்டை எடுத்துக் கொண்டுப் போய்க் கழுவி வைத்து விட்டு வந்தாள்.

அதே சமயம் அவளைச் சிறு குறும்புச் சிரிப்புடன் எதிர்கொண்டு விட்டுத் தனது இடத்திற்குத் திரும்பி விட்டிருந்தாள் சஹஸ்ரா.

அதில் தனது கோபம் இன்னும் அதிகரித்ததால் காலை நிலத்தில் உதைத்து விட்டு,”நான் தூங்கப் போறேன்”என்க,

“அக்கா!”என்ற மகிழம்பூவனை எரித்து விடுவதைப் போல் பார்த்தவளோ,

“நீ இப்போ மட்டும் எதுக்குடா வாயைத் திறக்குற? இவ்வளவு நேரமாக அமைதியாகத் தானே இருந்த? நீங்க எல்லாருமே எப்போ பார்த்தாலும் இவளுக்கோ சப்போர்ட் செய்றீங்க! எனக்காகப் பேச யாரு இருக்கா?”என்று கலங்கியவளை,

“அச்சோ! மதிம்மா! உனக்காக நாங்கப் பேசுறோம். இதுக்காக எல்லாம் போய் இப்படிக் கலங்கலாமா?”எனச் சமாதானம் செய்ய முயன்றார் கஸ்தூரி.

“விடுங்கத்தை”என்றவளோ,

“நீங்க சீக்கிரம் டிரெயின் டிக்கெட் புக் பண்ணிட்டு அதை எனக்கு வாட்சப் பண்ணி விடுங்க”என்று ரமணனிடம் கூறி விட்டுத் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து விட்டாள் வண்ணமதி.

“நீங்க ஏன் அண்ணா மதியையே அதட்டுறீங்க? அந்தப் பொண்ணுப் பாவம்! என்றைக்காவது தானே நீங்க எல்லாரும் இங்கே வந்துட்டுப் போறீங்க? அவ ஏதோ சஹாவைச்
சும்மா கிண்டல் செய்றா மாதிரி பேசினாள். அவ்வளவு தான்! அதுக்குப் போய் இப்படி அதட்டலாமா?”என்று பால்ராஜ்ஜிடம் கேட்டிருந்தார் கஸ்தூரி.

“என்னது சும்மா கிண்டல் பண்ணாங்களா? நான் எவ்வளவு சீரியஸாக ஒரு விஷயத்தைப் பேசிட்டு இருந்தேன்னு உங்களுக்கும் தெரியும் தானேம்மா? அதைப் போய் இப்படிக் கிண்டல் பண்ணிப் பேசியது தப்பு தான்! மாமா அவங்களைக் கண்டிச்சது கரெக்ட் தான்”என அன்னையிடம் வாதம் செய்தாள் சஹஸ்ரா.

“நீ பேசாமல் இரு சஹா”என்று மகளைக் கடிந்து கொண்டார்.

“நான் சாப்பிட்டு முடிச்சிட்டேன். நான் போய் அக்காவைச் சமாதானப்படுத்துறேன்”என்று நால்வருக்கும் பொதுவாக உரைத்து விட்டுத் தனது தமக்கையின் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றான் மகிழம்பூவன்.

அவனைப் பார்த்தும், பார்க்காததைப் போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வண்ணமதி.

அவளுக்குச் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டு,”என்னக்கா? உனக்கு என்னாச்சு? மறுபடியும் அந்தச் சங்குப்பூவழகி கூடச் சரிக்குச், சமமாகச் சண்டைப் போட்ற அந்தச் சின்ன வயசு மதிக்குட்டி வெளியே வந்துட்டாங்க போலவே?”என்று அவளைச் சீண்டினான் தம்பி.

“போடா!”என்று அவனை முறைத்து விட்டு மீண்டும் தனது முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டவளைக் கண்டவனின் இதழ்களில் புன்னகை பூத்தது.

“அக்கா!”என்று ஆதூரமாக அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான் மகிழம்பூவன்.

உடனே,”எனக்கு அவ கூட எப்பவுமே ஒத்துப் போகாது போலிருக்கேடா!”என அவனிடம் கலக்கத்துடன் மொழிந்தாள் வண்ணமதி.

அதைக் கேட்டதும் மென் புன்னகை உதிர்த்து,”அதெல்லாம் எங்க கல்யாணத்துக்கு அப்பறம் நீங்க ரெண்டு பேரும் ராசியாகிடுவீங்க!”என்று தமக்கைக்கு நம்பிக்கை அளித்தான்.

- தொடரும்
 

Advertisement

Advertisement

Back
Top