பெண் மனம் -2

Advertisement

hema mani

New member
Member
தொடர்ச்சி . . . ‌ ‌ ‌ . . .



"ஏண்டி? ஒரு பார்வைல நீ கரைஞ்சா ஆ போயிருவ. .ம். .ம். . ? பெரிய மனுஷன். . .காசு பணம் கொஞ்சம் கைல புரளுது. . அப்டி இப்படி இருக்கிறதுதான். .! நமக்கு ஒரு காரியம் நடக்கணும்னா . .. பிடிக்கலைன்னாலும் மரியாதையா பேசத் தெரியாதா?
உன்னால என் பையன் என்ன சுகத்தைத் கண்டான்? எல்லாம் உன் அப்பனைச் சொல்லணும்.! என்னவோ அரண்மனையை எழுதி வச்ச மாதிரி , கைய கழுவிட்டு அவன் பாட்டுக்கு போய்ச் சேர்ந்துட்டான்.. . . எம்பையன் உன்கிட்ட என்னத்த கண்டானோ . . . ." ராகம் நீண்டு கொண்டே இருந்தது!

பொற்கொடி திகைத்து நின்றாள்.
ஏதோ மனதைப் பிசைந்தது! என்னவென்றே புரியவில்லை!

எப்போதுமான வசவும், அவமானமும் தானே..! புதிதாக என்ன?

வள்ளிக்கு சோற்றைப் பிசைந்து கொடுத்து விட்டு பாத்திரங்களைக் கழுவி விட்டு வந்தபோது, வள்ளி வீட்டுப்பாடம் எழுதியபடியே தரையில் சாய்ந்து தூங்கியிருந்தாள். ஏதோ சோர்வாக இருந்தாள்.சரியாக சாப்பிடவும் இல்லை.

பாயை விரித்து, வள்ளியைப் படுக்க வைத்து, போர்வையால் மூடிவிட்டாள்.



சுவற்றில் சாய்ந்து அமர்ந்திருந்தவளை, தட்டென்று ஒரு சத்தம் திடுக்கிட வைத்தது. கணேசன் தான்! நன்றாகக் குடித்திருந்தான். அப்படியே அவள் பக்கம் வந்தவன்,அவளைத் தூக்கி அப்படியே இழுத்தான்! தூக்கக் கலக்கத்தில் இருந்தவள் அப்படியே அவன் மீது சரிந்தாள்! அவன் வெறி கொண்டவன் போன்று, அவளது புடவையை விலக்கி,ரவிக்கையின் ஹீக்கைப் பிய்த்து எறியவும், வள்ளி தூக்கத்தில் முனகியபடி புரண்டவாறே,
"அம்மா. .
.!"என்று அனத்தினாள்.

"விடு. . .!" என பலகீனமாய் முனகியபடி, அவன் கைகளைத் தடுத்துக் கொண்டே, வள்ளியின் பக்கமாய் செல்ல ஓர் எட்டு எடுத்து வைத்தவளை, பலங்கொண்ட மட்டும் இழுத்து தள்ளி , ஆக்ரோஷமாய் அவள் மீது படர்ந்து, ஆவேசமாய் இயங்கினான். பொற்கொடி வலியிலும்,அவமானத்திலும் கண்களில் நீர் வடிய அப்படியே கிடந்தாள்.

சிறிது நேரம் கழித்து, மெதுவாய் எழுந்தவள், உடையை சீர் செய்து, மகளிடம் சென்றபோது, "அம்மா . . .!" என்று ஒரு வலி எழுப்பும் குரலில் மகளின் முனகல் சத்தம் கேட்டு, ஓடிப் போய் பார்த்தபோது, அவளின் ஆடையில் இரத்தக்கறை படிந்து, பாயிலும் லேசாகத் தெரிந்தது!

அப்படியே மகளை அணைத்துக் கொண்டு அழுதாள். சந்தோஷப்பட முடியவில்லை! எவ்வளவு நேரம் அழுதாளோ, உணர்வுகள் கட்டுக்குள் வந்ததும், மகளை எழுப்பி, தேவையானதைச் செய்து, ஓரமாய்த் தூங்க வைத்தாள்.

"கணேசனிடமும், கிழவியிடமும் எப்படி சொல்வது? அடுத்தது என்ன. . " பல மாதிரி சிந்தனைகள் அவளுள் முட்டி மோதின!



காலையில் அவள் விழித்தெழும் போதே, கணேசனின் குரல் உரக்கக் கேட்டது!



"ஷ். .ஷ்.ஷு. . மெல்ல பேசுடா.! அவ வந்துடப் போறா!" கிழவி!



"வரட்டுமேம்மா! எனக்கென்ன பயமா?. எப்படியும் அவ கிட்ட சொல்லணும்ல!.கழுத பிறகு தகராறு பண்ணுச்சுன்னா எல்லாம் கெட்டு போயிடும்."



'இவன் யார பத்தி பேசறான்? இப்போ எப்டி போய் வள்ளி விஷயத்த சொல்றது?' யோசித்தபடி நின்றாள் பொற்கொடி.



நா என்ன அந்த கிழவனோட படுக்கவா சொல்றேன். அவனே ஒரு பொட்ட! அத தெரிஞ்சுதான் பொண்டாட்டி ஓடிப் போனா! அவனால ஒண்ணும் கிழிக்க முடியாது! சும்மா பாத்து ஜொள்ளு விடுவான். லேசா அங்கங்க தடவுவான்.நாதான் கூடயே இருப்பேனே! இல்லாட்டியும்,தனியா விட்டா மட்டும். . .?

அத அவனால வெளிய சொல்லவும் முடியாதும்மா. . ., சும்மா இரண்டு நாள் கூட கூட சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு, ஒட்டி ஒட்டி நடந்து ஏதோ சமாளிச்சுட்டு வந்தா. . . .!"



'ச்.ச்.ச்.ச்.சீய்.ய்.ய்.!" அடிவயிற்றிலிருந்து குமட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு! எவ்வளவு ஈனத்தனம். . .? கண்ணீர் வழிந்தது!

"ச்சே. .! நா ஏன் அழறேன்? இது என்ன அழுகை எதுக்கெடுத்தாலும் ? இப்போ என்ன . . .?

எ. . ன். . .ன. . .வா? உலகமே தலகீழா சுத்துது. . !

ம். .ம். . ம். .அப்படியே உலகமகா நல்லவங்க. . .திடீர்னு மாறிட்டாவ. . .போவியா. .?

நல்லவக இல்லைதான். . .அதுக்காக. . . . . .?



"ஏய். . .! கணேசனின் குரல் அவளை நடப்புக்கு இழுத்து வந்தது!



மெதுவாய் எட்டிப் பார்த்தாள். "எனக்கு சாப்பாடு வேண்டாம். கொஞ்சம் இரண்டு நாளைக்கு உடுப்பு எடுத்து வைச்சுக்கோ! வள்ளிக்கும்.!!அவ ஸ்கூல் போக வேண்டாம். எல்லோரும் அய்யா கூப்ட்டாகளே, அவங்க ஊருக்கு ஒரு நடை போய் பார்த்துட்டு வருவோம்.சாயங்கலாம் கிளம்பணும்!" என்றபடியே கிழவியிடம் தலையசைத்து விட்டு போய்விட்டான்.



'திக்' என்று இருந்தது அவளுக்கு.



"என்ன செய்யப் போற?" இப்போ மாதிரியே அமைதியா சகிச்சுட்டு இருந்துடுவியா?

ச்சீ! கருமம்! சாகலாம் அதுக்கு!

சரி ! செத்துப் போலாம்!

வள்ளி? குட்டிப் பையன்?

அவங்களையும் கொன்னுட்டா?

அய்யோ!

என்ன செய்ய?

நாளைக்கு வள்ளிக்கும் ஏதேனும் நடந்து விடுமா?

எங்காவது போய்விடலாம். . .வீட்டை விட்டே!

யாருக்கும் தெரியாமல்!

கண்காணாத தூரம்!



அந்த கணம் உறுதியுடன் முடிவெடுத்தாள்.இருந்து போராட தெம்பில்லை! நடக்க இருக்கும் அசிங்கத்தை அசம்பாவிதம் இன்றி தடுக்க முடியுமா? கணவனை இனியும் நம்ப முடியுமா?? பல்வேறு விதமாய் மனம் தத்தளித்தது!

ஆயிரம் கேள்விகள் கேட்ட வள்ளியை அமைதியாய் இருக்கச் செய்து, சேர்த்து வைத்த கொஞ்சம் காசை பத்திரமாய் முடிந்து கொண்டு,குழந்தைகளை அழைத்துக் கொண்டு , இதோ தெற்கே வெகு தூரம் செல்லும் தொலை தூர இரயிலுக்காய் காத்திருக்கிறாள்.

வள்ளியையும், குட்டிப் பையனையும் ஆளாக்கி ஒரு நிலைக்கு கொண்டு வருவதே இனி வாழ்வின் லட்சியம்! எப்பாடு மட்டும் அதை நிறைவேற்றியே தீர்வது என்ற உறுதியுடன்!



பதினோரு வருடங்களுக்கு பிறகு;-

வள்ளி இப்போது எம் எஸ் சி பயாலஜி முடித்து காம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி, பயோடெக் அனலிஸ்ட் ஆக ஹைதராபாதில் வேலை பார்க்கிறாள். சின்னவன் பார்த்திபன் இப்போது செவன்த் ஸ்டேண்டர்ட். பைலட் ஆக வேண்டும் என்பதே அவனது கனவு. படிப்பு ஸ்போர்ட்ஸ் என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் மாணவன்.

வள்ளிக்கு தான் அப்பாவைப் பற்றிய நினைவுகள். ஊர் விட்டு வந்த புதிதில், எங்கே அப்பா வந்து விடுவாரோ, அடிப்பாரோ என தூக்கத்திலும் பயந்து படுக்கையை நனைத்து விடுவாள்.மூன்று வருடங்கள் ஆனது அவள் பயம் தெளிந்து தைரியம் பெற! சின்னவனுக்கு எதுவும் தெரியாது.அப்பா வெளியூரில் இருக்கிறார்.வருவார் என்றே சொல்லிக் கொண்டு இருக்கிறாள். அவனுக்கு இன்னும் கொஞ்சம் விபரம் தெரியும்போது சொல்ல வேண்டும். பெருமூச்சு ஒன்று எழுந்தது அவளிடமிருந்து.





இடைபட்ட காலம் அவள் மாமியார் இறந்து போனதாக் கேள்விப்பட்டாள். கணேசனும் ஏதோ ஒரு பெண்ணை தொடுப்பாக வைத்திருப்பதாக செய்தி வந்தது. எதற்கும் கவலைப்படவில்லை பொற்கொடி! எதற்காக கவலைப்பட வேண்டும். .?



எத்தனை போராட்டங்கள்! நல்லவேளையாக, கழுத்தில்,கைகளில்,காதில் இருந்தவற்றை கழற்றி ஒரு துணியில் சுற்றி பத்திரமாக வைத்திருந்தாள். இங்கு வந்ததும், தெய்வாதீனமாக ஒரு நல்ல குடும்பத்தின் அறிமுகம் கிடைத்தது. அவர்களது மகன் ஒரு டாக்டர்.அரசு மருத்துவமனையில் பணி. வள்ளி முன்தினம் தான் பெரியவளாகி இருந்தாள்.இந்த அலைச்சல்,சோர்வு,பயம் முதன்முதலாக வெளிப்பட்ட இரத்தப்போக்கு என கலவையான உணர்வுகளினால் பாதிக்கப்பட்டவள் இரயிலில் இருந்து இறங்கியதும், வாந்தி எடுத்ததில் பசியும் சேர மயங்கி விட்டாள். பொற்கொடி பயந்து போனவள் ஓவென்று அழ, கூடவே பயணம் செய்த புதிய பெண்மணியொருவர்,தன்னோடு வரச் சொல்லி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு அவர் மகன்தான் டாக்டர் என தெரிந்ததும் அப்படி ஓர் ஆசுவாசம். ,அங்கு அவர் பரிசோதித்து, மிகவும் அனீமிக்காக இருக்கிறாள் என மருந்து மாத்திரைகள் எழுதித் தந்ததோடு இலவசமாக சில டானிக்கும் தந்தார்.

அழுதுகொண்டே இருந்த பொற்கொடியைப் பார்த்த அந்த அம்மாள்," நல்லவங்க நிறைய பேர் இன்னும் இருக்காங்க நாட்ல.ஆனாலும் நீ ரொம்ப கவனமா இருக்கணும். பிள்ளை மயங்கினதும், உனக்கு சுற்றுப்புறமே ஞாபகம் இல்லையே! அதைக் கவனிச்சு தான் நா கூப்பிட்டேன். ஆனா சந்தேகமே படாம என் கூட வந்தியே! நானே கெட்டவளா இருந்திருந்தா என்னென்ன நடந்திருக்கும் தெரியுமா? நீயும் சின்ன வயசுதான்.பொம்பளைப் பிள்ள கூட கைக் குழந்தையும் வைச்சு கிட்டு. . . . . எவ்ளோ சுதாரிப்பா இருக்கணும் தெரியுமா?" என கடிந்து கொள்ளவும், பொற்கொடி தன்னைப் பற்றிய அனைத்தையும் மறைக்காமல் கூறினாள்.

மனமிரங்கிய அவர் தன் வீட்டிற்கு கூட்டிப் போய், அவளுக்கு ஒரு கார்மெண்ட் ஃபேக்டரியில் வேலை வாங்கி தந்து, தன் வீட்டிலேயே பின்பக்கம் இருந்த ஒரு குட்டி சாமான் போடும் அறையை தங்க கொடுத்தார்.

பொற்கொடியும் அயராமல் உழைத்தாள் .ஃபேக்டரி நேரம் போக வீட்டிலேயும் அவருக்கு அனைத்து வேலைகளும் செய்தாள். அந்தம்மாவுக்கு உடம்பு முடியாமல் போக சமையலும் பொறுப்பேற்றாள்.கிடைக்கும் அத்தனை காசையும் சேமித்தாள். உலகை, மக்களை நன்றாக புரிந்து கொண்டாள். தனக்கு என்னென்ன ஆபத்துகள் நேர்ந்திருக்கக் கூடும் என இப்போது புரிந்தது. உடல் நடுங்கியது.

தோன்றா துணையாய் காத்தருளிய தெய்வத்திற்கு நன்றி சொன்னாள். பிள்ளைகளின் படிப்பு டாக்டரின் உதவியால் நன்றாக நடந்தது. வள்ளியும் சரி, பார்த்திபனும் சரி நன்றாகப் படித்து உபகாரச் சம்பளத்திலேயே படித்தனர். அது கிடைப்பதற்கும் வழி வகை செய்தது டாக்டர் தான். இடைப்பட்ட காலங்களில் டாக்டருக்கும் திருமணம் முடிந்து, இரண்டு குழந்தைகள். மனைவியும் டாக்டர். குழந்தைகள் பொற்கொடியின் பொறுப்பிலேயே வளர்ந்தனர். வள்ளியும், பார்த்திபனும் கூட அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வர். டாக்டரின் அம்மா இப்பொழுது அவ்வளவாக நடமாட்டம் இல்லை. பொற்கொடி தான் உதவி. இன்னும் அதே அறைதான் அவளுக்கு.

"வெளியே கொஞ்சம் வசதியான இடமா பக்கத்திலேயே பார்க்கலாமா?" என்றதற்கு மறுத்துவிட்டாள் பொற்கொடி!

பிள்ளைகள் வளர்ந்து விட்டனர்.பார்த்திபன் படித்து வேலைக்கு போய்விட்டால், அவ்வளவுதான்.வள்ளி வேலையில் நிலைத்து கொஞ்சம் பணம் சேர்த்தபின் திருமணம் செய்து கொள்கிறேன் என்றிருக்கிறாள்.

பொற்கொடிக்கு சம்மதமே! தன்னைப் போல் இல்லாமல் பிள்ளைகள் தன் காலில் நிற்க நினைத்து சாதித்தும் காட்டியது பெருமிதம் அவளுக்கு. அதற்கெல்லாம் காரணமே டாக்டரும் அவங்க அம்மாவும் அல்லவா? நன்றிப்பெருக்கில் கண்கள் குளமாகின.

"பொற்கொடி. . . .!" அம்மாள் அழைக்கும் சப்தம்.

"இதோ வரேன் மா. . .! என்றபடியே வீட்டினுள் சென்றாள்.



--------------நிறைவுற்றது_____________



நன்றி

@ஹேமாமணி
 

Advertisement

Advertisement

Back
Top