Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
Haaiii Friends..

Here is the Final episode of Vaseegara Vanamaali.. My hearty thanks for all ur love n support for this story.. though this story released on jan, i didnt expect this much love n expectations for VV..

My Heartfull thanks dearss :love:

WhatsApp Image 2018-12-12 at 10.06.51 PM.jpeg

அத்தியாயம் – 21

‘கருடா..’ திருமண மண்டபமே கூட்டத்தில் நிரம்பி வழிந்தது. வந்தனா – முரளியின் திருமணம், நல்ல முறையில் எவ்வித சலசலப்பும் இல்லாது, சந்தோசம் மட்டுமே நிரம்பி, நடந்தேறிக்கொண்டு இருந்தது. அதிலும் வனமாலியும் கமலியும் வந்தனாவை தாரைவார்த்துக் கொடுக்க, சிவகாமிக்கு இதனைக் காண்கையில் மனது நிறைந்துதான் போனது.

வந்திருந்த உறவினர்களுக்கு, கண்களுக்கு விருந்தாய் அமைந்தது வனமாலி கமலி ஜோடிதான். அவர்களின் திருமணம் நெருங்கிய உறவுகளை மட்டுமே அழைத்திருக்க, நிறைய பேருக்கு விஷயம் தெரிந்தாலும் இன்றுதான் அவர்களை காண்கிறார்கள்.

அதிலும் பத்திரிக்கை வைக்கப் போன போதோ ஒருசிலர் கேட்டேவிட்டனர் “வீட்ல சொல்லிட்டுத் தானே கல்யாணம் செஞ்சீங்க??!!” என்று..

திருமண மண்டபத்தில் சிவகாமியிடமும், மணிராதாவிடமும் கேட்காதவர்கள் பாக்கியில்லை. அதிலும் சிலரோ “நல்ல முடிவு இதுதான்..” என்றுசொல்ல, ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பாகவே பதில் சொன்ன மணிராதா கூட, ஒருநிலைக்கு மேல மகன் மருமகளின் ஜோடிப் பொருத்தத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்..

இருவரும் மற்றவரின் கண் பார்வையிலேயே அவர்கள்தம் எண்ணங்களை புரிந்து அதை மற்றவர் செய்வது என்பது காண்பதற்கே அழகாய் இருந்தது.. அதிலும் வந்தவர்கள் அதிகம் பேசியது இந்த பெண்களின் உடை பற்றிதான். பமீலா, கமலி இருவரும் ஒருபோலவே ஒரே நிறத்தில் ஒரே டிசைனில் சேலை கட்டியிருக்க, அது பார்க்கவே பாந்தமாய் இருந்தது.

அதிலும் வீட்டு பெரிய பெண்கள் மூவரும் ஒரே நிறத்தில் வெவ்வேறு டிசைனில் சேலை உடுத்தியிருக்க, அது இன்னமும் அனைவர்க்கும் ஆச்சர்யம் கொடுத்தது. கோவர்த்தனும் வனமாலியும் கூட ஒன்றுபோலவே உடுத்தியிருக்க,

மணிராதாவோ “வீட்டுக்குப் போகவும் முதல்ல என் பிள்ளைகளுக்கு சுத்தி போடணும்..” என்று இந்திராவிடம் சொல்ல,
அருகே இருந்தவரோ “அப்படியே உன் மருமகள்களுக்கும் சுத்தி போடு..” என்றார்..

உடைகள் தான் ஒரேதாய் ஒன்றுபோல.. ஆனால் யாரும் அப்படியொரு ஒட்டி உறவாடவில்லை. என்ன என்றால் என்ன என்ற பேச்சே.. இத்தனை வருட விரிசல் அல்லவா.. ஓட்டினாலும் கூட அதன் தடயம் தெரியுமே.. என்ன எதையும் வெளிக்காட்டவில்லை.

அவரவர் எல்லை, அவரவர் வேலை.. அவரவர் கடமை உணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்ள, அனைத்தும் சுமுகமாய் நடந்தேறியது.

முரளியின் அப்பா கூட “இப்போதான் வனா சந்தோசமா இருக்கு.. எல்லாரயும் ஒரேதா பார்க்க..” என்றுசொல்ல,

நரசிம்மனோ “ரொம்ப சந்தோசம்..” என்றார் சிவகாமியிடம் வந்து.

ஆக மொத்தம் வந்தவர்களுக்கும் சரி, வீட்டினருக்கும் சரி, திருமண ஜோடிக்கும் சரி மனதில் நிறைவும் சந்தோசமும் நிறைந்து வழிந்தது.

“அப்புறமென்ன மணி.. மூணு பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக்கொடுத்துட்ட.. இனி என்ன அடுத்து சீக்கிரம் பாட்டி ஆகிடனும்..” என்று ஒரு பெண்மணி சொல்ல, இது சிவகாமி இந்திரா இருவரின் காதிலும் விழ, இருவரின் மனதிலுமே ‘ஆண்டவா நல்லதா செயப்பா..’ என்ற வேண்டுதல்..

திருமணம் முடிந்து, அடுத்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் முடிந்து, விருந்து மொய் என்று எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்ப, இறுதியில் நல்ல நேரம் பார்த்து கல்யாண ஜோடி மாப்பிள்ளை வீடு கிளம்ப, வனமாலியும் கமலியும் தான் சென்று விட்டு வருவதாய் இருந்தது.

இதே சிவகாசிதான் முரளியின் வீடும்.. அத்தனை நேரம் சந்தோசமாயிருந்த வந்தனா இப்போது கிளம்புகையில் முகம் வாடிட, மணிராதாவின் கண்களிலோ நீர் நிறைந்து போனது.

“ம்மா..” என்று வனமாலி அவரின் கைகளைப் பற்ற, “என்னம்மா ??!!” என்று கோவர்த்தனும் வந்து நின்றுகொண்டான்.

“ஒண்ணுமில்ல..” என்றவர், மகளிடம் “நல்லபடியா இருந்துக்கோ..” என்றுமட்டும் சொல்ல, வனமாலி எதுவும் பேசவில்லை என்றாலும் அவனின் உணர்வுகள் வந்தனாவிற்கு புரியாதா என்ன.

“நான் இல்லைன்னு வீட்ல ரொம்ப ஆட்டம் போடாதீங்க..” என்று உடன்பிறப்புகள் இருவரையும் பார்த்துசொல்ல, இருவருமே சிரித்துவிட,

“ஹ்ம்ம் இது தான் சரி..” என்றவள், பமீலா கமலியிடம் திரும்பி “நாத்தனார் சண்டைக்கு ரெடியாகுங்க..” என்றாள் சிரிப்போடு.

கோவர்த்தனோ “அட அடுத்த ரவுண்டா..” என்று பட்டென்று சொல்லிவிட, மணிராதாவோ “டேய்..!!!” என்று அதட்ட, “அட உன்ன இல்லம்மா..” என்றான் அவனும்.

கமலியோ “நான் எப்பவோ ரெடி.. வேணும்னா இன்னிக்கு இருந்துகூட ஸ்டார்ட் செய்யலாம்..” என்றாள் கிண்டலாய்.

பமீலாவும் “சண்டைன்னா எப்படி போடணும்?? அடிச்சு பிடிச்சா ???” என்று கேட்க, இப்படியாக அந்த பொழுது இனிமையான வழியனுப்புதலோடு நகர, முரளியோ “மச்சான்’ஸ் உங்களுக்கு நான் ஒருத்தன் தான் மச்சான்.. சோ தங்கச்சிய கவனிக்கிறீங்களோ இல்லையோ என்னை கொஞ்சம் கவனிங்க..” என்று தன் பங்கிற்கு கிண்டல் பேச,

“உங்களை கவனிக்கத்தானே எங்க தங்கச்சிய அனுப்புறோம்..” என்றான் வனமாலி..

பேசும் சிரிப்புமாய் அனைவரும் கிளம்ப, அவர்களை விட்டு வரவென முதலில் கமலியும் வனமாலியும் தான் செல்வதாய் ஏற்பாடு, ஆனால் வனமாலி என்ன சொல்லியிருந்தானோ, கோவர்த்தன் “பமீ வா போவோம்..” என்றழைக்க,

“நா... நம்மலா போறோம்??!!” என்றாள் கேள்வியாய்.

“ஆமா.. நம்மதான் போறோம்.. நாளைக்கு இவங்க வந்து மறுவீட்டுக்கு அழைப்பு வைக்கவும் எல்லாம் ஒண்ணா திரும்பலாம்..” என்றுசொல்ல,

பமீலா சந்தோசமாகவே காரில் ஏறினாள். மனதில் அவளுக்கு ஆசை இருந்தது வந்தனாவை தானும் கோவர்த்தனும் சென்று விட வேண்டும் என்று. ஆனால் இந்திரா மகளிடம் உறுதியாய் சொல்லிவிட்டார்.

‘இனி உன்னால் எந்த பிரச்சனையும் வந்ததா இருக்கக் கூடாது பமீ.. வீட்டுப் பெரியவங்க என்ன சொல்றாங்களோ அதுபடி நட.. சிலது நம்மளும் விட்டுக்கொடுத்து தான் போகணும்... கமலி உனக்கு சின்னவன்னாலும் அவதான் மூத்த மருமக.. அவளுக்குன்னு இருக்க பொறுப்புகள் எல்லாம் அவதான் செய்யணும்.. அதுனால நீ தேவையில்லாம இனி எதுவும் செய்யக்கூடாது..’ என்று..

வந்தனா அனைவரையும் பார்த்து தலையாட்டிவிட்டு செல்ல, அவர்களின் காரும் கிளம்ப, மணிராதா சிறிது நேரம் நின்று அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தார். சிவகாமியும் இந்திராவும் சற்று தள்ளி நின்றே எல்லாம் பார்க்க,

வனமாலியோ “ம்மா நீங்க எல்லாம் பெரிய வண்டில கிளம்பிடுங்க.. நான் மீத வேலையை எல்லாம் முடிச்சிட்டு வந்திடுறேன்..” என,

பெண்கள் அனைவரும் கிளம்ப, வனமாலி மண்டபத்தில் வேலை செய்தவர்களுக்கு எல்லாம் பணம் பட்டுவாடா செய்யப் போக, அதேநேரம் நரசிம்மன் கிளம்பப் போனவர்

“வனா.. எப்போ ரெஜிஸ்டரேசன் வச்சிக்கலாம்..” என்றார் அவனிடம்.

“அடுத்த வாரம் நல்ல நாளா பார்த்து சொல்லுங்க மாமா..” என்றவன் “நல்லவேளை கமலி இல்லை..” என்று எண்ணிக்கொண்டான்..

“சரி வனா நீ சொன்னதுனால தான் அப்போ இருந்து வெயிட் பண்ணேன் தனியா கேட்கனும்னு..” என்றவர், “டேட் பார்த்துட்டு சொல்றேன்..” என்றுவிட்டு கிளம்பிப் போனார்.

வனமாலி, கமலி இருவருமே வாங்க நினைத்த காகித ஆலையை இப்போது வனமாலிதான் வாங்குகிறான். கமலி வேண்டாம் என்றுவிட்டாள், வனமாலி கூட கேட்டன் தான்,

“நீயும் ஆசைப்பட்ட தானே..” என்று.

“ஆசைப்பட்டேன் தான். அது கல்யாணத்துக்கு முதல்ல.. அந்த பணம் எல்லாமே அம்மாவோடது.. வாங்கிருந்தலும் அம்மா பேர்ல தான் வாங்கிருப்பேன்.. இப்போ அது சரிபடாது இல்லையா..” என்றவள், “நீங்களும் தானே ஆசைப்பட்டீங்க.. நீங்க வாங்குங்க..” என்றாள்.

“ம்ம்.. வேணும்னா பாதிக்கு பாதி போட்டு சேர்ந்து வாங்கலாமா?? எப்படியும் உன்கிட்ட தனியா பணம் இல்லாம இருக்காதே..”
“பணமெல்லாம் இருக்கு.. ஆனா இப்போ வாங்குற எண்ணமில்லை.. உங்களுக்கு வேணும்னா நீங்க வாங்குங்க இல்லையா விடுங்க..” என்றுவிட்டாள் கமலி முடிவாய்.

ஆனால் அடுத்தநொடி வனமாலி ஒருமுடிவுக்கு வந்துவிட்டான் அந்த ஆலையை கமலி பேரில் வாங்குவது என்று. அதை நரசிம்மனிடமும் கூறியிருந்தான் ‘கமலிக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும் மாமா..’ என்று.

அடுத்து கமலியும் கேட்கவில்லை அதைப்பற்றி, ஆனால் மணிராதாவிடமும் கோவர்த்தனிடமும் வனமாலி சொல்லிவிட்டான்.. என்னதான் தனிப்பட்ட பணம் என்றாலும் பொதுக் குடும்பத்தில் நாளைக்கு கேள்விகள் வந்துவிடக்கூடாது என்று முன்னமே ஒரு வார்த்தையை போட்டுவிட்டான்..

மணிராதாவோ ‘கமலி பேர்லயா??!!’ என்று கேட்க, வனமாலி தீர்க்கமாய் ஆம் என்றதைப் பார்த்து “ம்ம் சரி வனா..” என்றுமட்டும் சொல்ல,

கோவர்த்தனோ “நல்லதுண்ணா..” என்றான் சந்தோசமாய்.

“கமலிக்குத் தெரியாது..”

“நான் வாயே திறக்கலை..” என்று மணிராதா சொல்லிவிட, “ரகசியமா இருக்கும்..” என்று கோவர்த்தனும் சொல்லிவிட, வனமாலிக்கு அவனின் அம்மா சொன்னது கண்டு இதழில் ஒரு மென்னகை.

இப்போதும் அதே மென்னகையோடு வேலைகளை முடித்துவிட்டு, வீடு செல்ல, வீட்டில் ஒருசில உறவினர்கள் இருக்க, அவர்கள் எல்லாம் மறுநாள் தான் கிளம்புவர் என்று தெரியும். கமலிக்கோ வந்ததில் இருந்து வேலை சரியாய் இருந்தது.

இருவருக்கும் பேசிக்கொள்ள கூட நேரமில்லை என்றுதான் சொல்லவேண்டும் கடந்த இரண்டு நாட்களாய். வேலை எல்லாம் முடித்து கமலி அறைக்கு வர, அவள் முகமே காட்டியது ‘நான் தூங்கவேண்டும்..’ என்று.

வனமாலிக்கும் அப்படியே, உடலில் அசதி நன்கு தெரிந்தது. ஆகமொத்தம் இருவரும் அடித்துப் போட்டது போல உறங்கிட, மறுநாள் திரும்பவும் வேலைகள் வந்து ஒட்டிக்கொண்டது.

இப்படியாக வந்தனாவின் மறுவீட்டு அழைப்பு, விருந்து அது இதென்று எல்லாம் முடிய, வனமாலியும் கமலியும் போய் சீர் எல்லாம் கொடுத்துவிட்டு வர, அதற்கு மறுநாளே சிவகாமி வனமாலியிடம் “வக்கீல் வச்சு எழுதிக்கலாம்..” என்றுவிட்டார்..

அதற்கேற்ப மறுநாளே, மகுடேஸ்வரன் வீட்டினில் வைத்து அனைவரும் பேச, சங்கிலிநாதன் அவர் பொறுப்பை முடிக்கும் பொருட்டு “மகுடேஸ்வரன் என்ன நினைச்சு இதை எழுதினான்னு எனக்குத் தெரியாது.. ஆனா தெளிவா தான் யோசிச்சு முடிவு பண்ணான்.. ஆனா இதுல உங்க யாருக்கும் உடன்பாடில்லை போல..” என்றார்.

சிவகாமியோ “உடன்பாடு இல்லைன்னு இல்லை. ஆனா எல்லாரையும் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம்.. அவ்வளோதான்..” என்றவர்,

“யாருக்கு உடன்பாடில்லை அப்படின்னாலும் அவரோட முடிவுக்கு நான் எப்பவுமே கட்டுபடுவேன்..” என, இந்திராவும் பமீலாவும் குழப்பமாய் பார்த்தனர்.

‘ஒருவேளை.. பேச்சை மாற்றிடுவாரோ..’ என்று.

சிவகாமியோ “நான் இங்கே வந்து இனி இருக்கிறது சாத்தியமில்லை. கமலிக்கு அவ புகுந்த வீடு இருக்கு.. அப்படியிருக்க, அவர் எழுதினது போல எங்க பேர்ல வீடு இருக்கட்டும். இந்த வீட்ல கடைசிவரைக்கும் இந்திரா இருக்கட்டும்..” என்றுவிட்டார் முடிவாய்..

“நீ என்னம்மா சொல்ற??!” என்று கமலியிடம் கேள்வி,

“உண்மையும் அதானே தாத்தா.. நான் இங்க வந்து தங்கிக்க முடியுமா..” என்றவள் “அம்மாவோட முடிவுதான்..” என்று சொல்லிவிட, சிவகாமியோ “ஆனா ஒரு விஷயம்..” என்றார் அனைவரையும் பார்த்து.

கமலிகூட இதோடு விஷயம் முடிந்தது என்றுதான் நினைத்தாள், ஆனால் சிவகாமி அப்படி சொல்லவும் என்னவென்று அவளும் பார்க்க, “எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிச்சுன்னா, கடைசில என்னோட உடம்பு இந்த வீட்ல இருந்துதான் வெளிய போகணும்.. அதுமட்டும் பண்ணிடுங்க..” என்று கமலி, வனமாலியிடம் சொல்ல,

“ம்மா...!!” என்றுபோய் கமலி அவரைக் கட்டிக்கொள்ள, “என்ன அத்தை..” என்றான் வனமாலியும் சங்கடப்பட்டு.

“இதுமட்டும் தான் என்னோட ஆசை..” என்று சிவகாமி முடித்துக்கொள்ள, அனைத்தும் ஒரு வக்கீல் வைத்து முறைப்படி பதிவு செய்யப்பட்டது.

அனைத்தும் முடிந்து அவரவர் கிளம்பிட, கமலி வனமாலியிடம் வந்தவள் “என் கார் சர்வீஸ் விடனும்.. என்னை ப்ரெஸ்ல டிராப் பண்ணுங்க..” என்று சொல்ல, இருவரும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினர்.

சிவகாமி அவரின் வீட்டிற்கு கிளம்பிவிட, மணிராதாவோ இந்திராவிடம் “இப்போவாது நிம்மதியா???!!” என்று கேட்க,

பமீலாவோ “ஹ்ம்ம் உங்க பேச்சை கேட்டு பயந்ததுக்கு ஆரம்பத்துலயே அவங்கக்கிட்ட நேரடியா கேட்டிருக்கலாம்..” என்றாள் இடக்காய்.

“ஏன்?? என் பேச்சை கேட்டு பயந்துக்கோன்னு நானா சொன்னேன்??”

“அதுசரி.. இப்போ நீங்க இப்படிதான் சொல்வீங்க அத்தை..” என்ற பமீலா மணிராதாவோடு அடுத்த சண்டைக்குத் தயாராக,

கோவர்த்தனோ ‘இவங்க திருந்த மாட்டாங்க..’ என்றெண்ணி “நான் தியேட்டர் போறேன்..” என்று கிளம்பிவிட்டான்.

கமலிக்கு மனதில் ஒரு நிறைவு வந்திருந்தது. இத்தனை வருடங்களாய் இல்லாத ஒரு அமைதியும் கிட்டியிருந்தது. மனது அமைதியாய் அது பல நல்லவைகளுக்கு காரணமாய் அமையும். அப்படியொரு உணர்வே கமலிக்கு. அச்சகத்தில் மீண்டும் அவள் பொறுப்பேற்றுகொள்ள, அவள் பார்த்து முடிக்கவேண்டிய வேலைகள் எல்லாம் முடித்து வீடு வர மாலை ஏழு மணியாகிவிட்டது.

மணிராதா மட்டுமே இருந்தார். பமீலா இன்னும் அங்கே இருந்து வரவில்லை என்று தெரிந்தது. இன்னமுமே கூட மணிராதாவோடு சகஜமாய் பேசும் நிலை கமலிக்கு வரவில்லை. ஆனால் இப்போதோ அவர் மட்டுமே இருக்க, முகம் கழுவிக்கொண்டு வந்தவள், அவளுக்கு குடிக்கவென காபி கலக்க, மணிராதாவோ சமையல் அறையை எட்டிப்பார்த்துவிட்டு போனார்.

மணிராதா பார்த்துவிட்டு போனது கண்டு, வெளியே வந்தவள் “உங்களுக்கு என்ன கலக்க காபியா டீயா??!!” என்றவளை ‘எனக்கா??!!’ என்றுதான் பார்த்தார் மணிராதா..

கமலியும் நேருக்கு நேராய் பார்க்க, “உனக்கு எது போடுறியோ அதுவே கலக்கு..” என,

“ம்ம் நைட்டுக்கு எதுவும் செய்யனுமா??” என்று கேட்டபடி திரும்ப உள்ளே வந்துவிட்டாள்.

“சப்பாத்திக்கு மாவு பெசஞ்சு வச்சிருக்கேன்.. பமீலா சாப்பிட வருவாளான்னு தெரியாது.. சின்னவனுக்கு போன் பண்ணி கடைல குருமா எதுனா வாங்க சொல்லணும்...” என்று மணிராதாவும் அங்கிருந்தே பதில் சொல்ல,

கமலி கோவர்த்தனுக்கு அழைத்துப் பேச, அவனோ “நான் வீட்டு கிட்ட வந்துட்டேன்.. பமீய கூட்டிட்டு வந்திட்டு கடைக்கு போறேன்..” என்றான்..

“இல்லை வேணாம்.. நீங்க வந்திடுங்க.. அவர்கிட்ட சொல்லிக்கிறேன்..” என்றவள் வனமாலிக்கு அழைத்துச் சொல்ல, “சப்பாத்தி போட வரும்.. குருமா வைக்க வராதா..” என்றான் கிண்டலாய்.

“நான் சொல்லலை.. அத்தை சொன்னாங்க அவ்வளோதான்..” என்றவள் வைத்துவிட்டாள்.

மற்றவர்களிடம் பேசுகையில் அத்தை என்பது வருகிறது ஆனால் நேருக்கு நேர் பேசுகையில் அதெல்லாம் இல்லை. மணிராதாவும் அதெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

வனமாலியும் இப்படிதான் இருக்கவேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால் மனதில் தோன்றியதை

கமலியிடம் இரவில் கேட்டான் “இப்போ எல்லார் மேல இருந்த கோபமும் போயிடுச்சா??” என்று.

அவனின் தோளில் தலை வைத்துப் படுத்திருந்தவள் “என்ன கோபம்??” என்று கேட்க,

“அதான் எல்லாரையும் உண்டு இல்லைன்னு ஆக்கணும்னு ஒருத்தி வரிஞ்சு கட்டிட்டு நின்னாளே.. அவளோட கோபம்..” என்று வனமாலி கேட்க,

“இந்த நக்கல்தானே வேண்டாம் சொல்றது..” என்று அவனின் வயிற்றினில் கமலி கிள்ள, கிள்ளிய அவனின் கைகளையே பற்றிகொண்டவன் அதிலேயே முத்தமிட்டான்.

“என்னாச்சு இன்னிக்கு??!!” என்று அவளும் கொஞ்ச உற்சாகமாகவே கேட்க, “ஹ்ம்ம் மனசு இப்போதான் நிம்மதியா இருக்கு..” என்றவன் மேலும் அவளை நெருங்க,

“நான் ரொம்ப எதுவும் செஞ்சிடுவேன்னு நினைச்சீங்களா??” என்றாள் தெரிந்துகொள்ளும் எண்ணத்தில்.

“ஹா ஹா அது நான் இருக்க வரைக்கும் கண்டிப்பா நடந்திருக்காது..”

“ஓ.. சார் என்ன பண்ணிருப்பீங்க..??!!” என்றவள் அவனின் முகம்பார்க்க, இருவரின் முகமும் வெகு நெருக்கத்தில் இருக்க,

“அப்பவும் உன்னை கல்யாணம் பண்ணிருப்பேன்.. பட் எல்லாம் இவ்வளோ ஸ்மூத்தா போயிருக்காது.. நீ ஒன்னு பண்ணா அதுக்கு நானும் இன்னொன்னு செஞ்சிருப்பேன்.. எனக்கு எல்லாத்தையும் தாண்டி வந்தனாவோட கல்யாணம் முக்கியம்..” என்று வனமாலி உள்ளத்தை மறைக்காது உண்மையை சொல்ல,

“ம்ம்ம்... அப்போ என்னை கல்யாணம் பண்ணது??”

“அது ஏன் எதுக்குனு உனக்கே தெரியும்.. பட் நீ சரின்னு சொன்னதுதான் பெருசு.. நானுமே அப்போ நினைக்கல உன்னை கஷ்டப்பட்டு சம்மதிக்க வைக்கணும் நினைச்சேன்..”

“ம்ம்ம்.. நீங்க என் லைப்ல முக்கியமானவரா ஆகிட கூடாதுன்னு நானே என்னை ரொம்ப கண்ட்ரோல் பண்ணிருக்கேன் சில டைம்ஸ்..” என்று கமலி சொல்ல,

“என்ன?? என்ன இது புது கதை..” என்றான் ஆச்சர்யமாய்..

“புதுசு எல்லாம் இல்லை.. பழசு தான்.. அது... நீங்கமட்டும் தான் வீட்டுக்கு அடிக்கடி வருவீங்களா.. இவங்க எல்லாம் பேசக்கூட மாட்டாங்க. சோ உங்களோட மோட்டிவ் என்னன்னு கெஸ் பண்ணவே உங்களை ரொம்ப கவனிச்சேன்..”

“அட இதை நான் கவனிக்கலையே...”

“ஹா ஹா நீங்க கவனிக்கக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தேனா.. அப்போதான் சிலது இம்ப்ரெஸ் ஆச்சு..”

“எது.. அந்த மில்லிமீட்டர்கும் சென்ட்டிமீட்டருக்கும் நடுவில இருக்க சிரிப்பா??” என்று வனமாலி சிரித்தபடி கேட்க, “ச்ச்சோ.. இதெல்லாம் நீங்க சொல்லக் கூடாது..” என்றாள் கண்டிப்பாய்..

“பின்ன..??!!”

“நான் தான் சொல்லணும்..” என்றவளைப் பார்த்தவன், “நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் கமலி.. அதுக்கு நீ ஓகே மட்டும்தான் சொல்லணும்..” என்றான் அவளின் கழுத்தில் முகம் புதைத்தபடி..

“என்னை நேரா பார்த்து சொல்லுங்க..” என்று அவள் அவனின் முகத்தை நிமிர்த்த முயல,

“இது என் டைலாக்..” என்றவன் இன்னும் அதிகமாய் முகம் புதைத்து, “நாளைக்கழிச்சு நீ என்னோட மதுரைக்கு வரணும்..” என,

“ஓகே.. பட் எதுக்கு??” என்றாள்..

“பேப்பர் மில் ரெஜிஸ்டரேசன்.. உன்னோட பேர்ல வாங்குறேன்..” என்றவன் அதே வேகத்தோடு “வேணாம்.. முடியாது அது இதுன்னு சொல்லவே கூடாது.. உனக்குன்னு முதல் முதல்ல வாங்குறது நான்..” என்றுவிட்டான் அவள் மறுப்பேதும் சொல்லாத வகையில்..

“ம்ம் இப்படி சொன்னா எப்படி??”

“வேறெப்படி?? இப்படி சொல்லவா??” என்றான் அவளின் கன்னங்களில் இதழ் பதித்து..

கமலியோ கொஞ்சம் அவனைத் தள்ளிவைத்து, அவனின் முகம் பார்த்தவள் “வீட்ல எல்லாம் சம்மதிக்கணுமே..” என,

“எல்லாருக்கும் தெரியும்..” என்றான் இவனும்..

“ஓ...!!!” என்றவள் அதற்குமேல் ஒன்றும் சொல்லாது இருக்க, “என்ன கமலி??!” என்றான் வனமாலி ..

ஒருவேளை அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம். எங்கே கடைசி நேரத்தில் முடியாது என்றுவிட்டால் அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டு பின் வீணாய் போகும் என்றெண்ணிதான் இப்போதே வனமாலி சொன்னது. ஆனால் அவன் எதிர்பார்த்த ஒரு உற்சாகம் கமலியின் முகத்தில் தெரியவில்லை என்றதும்,

“உனக்கு பிடிக்காட்டின்னா வேணாம் கமலி..” என்றான் கொஞ்சம் கமரிய குரலில்..

“நான் எப்போ பிடிக்கலை சொன்னேன்..” என்றவள், “வேற யோசிச்சேன்..” என,

“நான் உன்கூட இருக்கப்போ உனக்கேன் வேற யோசனை??” என்றான் வனமாலி கொஞ்சம் கோபமாய்..

“ஹா ஹா அதில்லை அம்மா ஒன் டைம் சொன்னாங்க .. உனக்குன்னு ஒருத்தர் வர்றபோ எல்லாம் தெரியும்னு.. அதை நினைச்சேன்..” என்றவள், “நான் ரொம்ப மாறிட்டேன்ல...” என்று அவனைப் பார்த்துக் கேட்க,

“தெரியலையே???!!” என்றான் விஷமமாய் அவளைப் பார்த்து.

“என்ன பார்வை இது??!!!”

“ம்ம் கொடைக்கானலா?? காஷ்மீரா??” என்று வனமாலி கேட்டதும், “வாவ் நிஜமாவா??!!!” என்று கேட்டவள் எழுந்தே அமர்ந்துவிட,

“அடிப்பாவி... மில் வாங்கறேன் சொன்னா அதுக்கு ஒரு ரியாக்சனும் இல்லை.. இதுக்கு எந்திரிச்சே உக்காந்துட்ட..” என்றவன் மீண்டும் அவளைப் பிடித்து தன் மீது சாய்த்துக்கொண்டான்.

“ஹா ஹா.. எனக்கு இதுதான் நிஜமான சந்தோசம்..” என்றவள், “இந்த மாசம் கொடைக்கானல்.. அப்புறம் அடுத்த மாசம் காஷ்மீர்..” என,

“ஆமா அதுக்கு அடுத்த மாசம், நீ கன்சீவாகிடுவ....” என்று அவனும் அவளைப் போலவே ஒரு வேகத்தில் சொல்லி சிரித்தான்.

“எது?? என்னது??!!” என்று கேட்டவளும் சிரிக்க, “நீதானே சொன்ன, நம்ம சீக்கிரம் குழந்தை பெத்துக்கணும்னு..”

“ஆ..!! அது அப்போ சொன்னேன்..” என்றாள் நீட்டி முழக்கி..

“ஏன் இப்போ என்னவாம்??”

“முன்னாடியெல்லாம் கமலியா மட்டும் யோசிச்சேன்.. இப்போ கமலி வேற வனா வேற இல்லன்னு ஆகியாச்சா.. சோ உங்களுக்கும் சேர்த்து உங்க இடத்துல நின்னும் யோசிக்கவேண்டி இருக்கு.. குழந்தை எப்போ பிறக்கனும்மோ அப்போ பிறக்கட்டும்.... அந்த டென்சன் இப்போ இருந்தே இருக்க கூடாது..” என்று கமலி பேசிக்கொண்டே போக, வனமாலியிடம் பதிலே இல்லை.

அவன் பதிலே சொல்லாது இருக்கவும், கமலி என்னவென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவன் முகத்தில் ஒரு புன்னகை.. அவள் எப்போதுமே அவனிடம் எதிர்ப்பார்க்கும் அந்த சிரிப்பு. வார்த்தைகள் கொடுக்காத அர்த்தங்களை அவனின் அந்த வசீகர புன்னகை கொடுக்க, என்றென்றும் அவளை தன் மென்னகையால் வசீகரம் செய்பவனாய் வனமாலியும், இன்றும் சரி என்றும் சரி இனி எப்போதும் சரி, வனமாலியின் புன்னகையில் வசீகரிக்கப் படுபவளாய் கமலியும் இனி வரும் காலங்களை தங்கள் வசமாக்கி இல்லறத்தில் நல்லறம் சேர்க்கப் போகின்றனர்..
 
Top