Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 7

Advertisement

கமலி சும்மா இருந்தே எல்லோரையும் டென்சன் படுத்துறா.
 
“அப்படியா???!!!!”

வனமாலி பதில் சொல்லும்முன்னே மணிராதா “வனா??!!” என்று மீண்டும் கத்த, கமலியின் சிரிப்போ இன்னும் விரிந்தது..

“இப்பவும் நானே எதுவுமே செய்யலை..” என்று தோள்களைத் தூக்கியவள், அவனின் பிடியில் இருந்த தன் கரத்தினை ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பவும் அவனைப் பார்க்க, அவனோ சட்டென்று கைகளை விட்டான்.

‘என்ன வனா செய்ற நீ?? மனசுல தேவையில்லாத எண்ணங்கள் வைக்காத...’ என்று வனமாலி தனக்குதானே சொல்லிக்கொள்ள, “உள்ள போவோமா??!!!” என்று கமலி சொல்லவும் இருவரும் நடக்க,

மணிராதாவோ “வனா என்னடா இதெல்லாம்...??” என்று மகனை பார்த்தவர், “ஏய் நீ ஏன் இங்க வந்த? மாப்பிள்ளை வீட்ல சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி??” என்று கமலியையும் சாடினார்.

கமலியோ எதற்கும் அசரவில்லை, இவர்கள் எல்லாம் பேசாது இருந்தால் அவள் வந்த வேலையை பார்த்துவிட்டு அவள்பாட்டில் செல்வாள். ஆனால் இவர்கள் ஒவ்வொருவரும் செய்வது எல்லாம் அவளைத் தூண்டிவிடுவதாகவே இருக்க, அவள் சும்மா இருந்தாலும் கூட இவர்களே ஏதாவது செய்துவிடுகிறார்கள்..

மணிராதாவின் இக்கேள்வியில் “அப்போ உங்க மாப்பிள்ளை வீட்டாளுங்களுக்கு புத்தியில்லைன்னு சொல்றீங்களா??” என்று கமலி ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாய்க் கேட்க,

“ஏய் ஏய்!!!” என்று மணிராதா இன்னும் சத்தம் எழுப்பவும், வனமாலி பக்கம் திரும்பியவள்

“இங்க பாருங்க நடந்தது உங்களுக்குத் தெரியும். நானா எதுவும் செய்யலை.. அப்படி செய்யனும்னு நினைச்சிருந்தா நேத்து உங்களை கூப்பிட்டே இருக்கமாட்டேன்.. பட் இப்போ பாருங்க இதான் உங்க வீட்டுக்கு வந்தவளுக்கு நீங்க கொடுக்கிற மரியாதையா?? நான் இப்படியே கிளம்புறேன் முரளி அப்பாக்கு நீங்களே பதில் சொல்லிக்கோங்க..” என்று பொரிந்துவிட்டு திரும்பப் போனவளை வனமாலி மீண்டும் கரம் பிடித்து நிறுத்த,

“அவளை விடு வனா போகட்டும்..” என்று மணிராதா சொல்ல, அதற்குள் வீட்டிற்குள் இருந்து முரளியின் அப்பா வெளியே வந்துவிட்டார்.

“அடடே வாம்மா.. இங்க நின்னு பேசிட்டு இருக்கீங்களா..” என்றவர் இவர்களை நோக்கி வர, வனமாலியோ அவனின் பிடியை விடவேயில்லை..

“ஒழுங்கா வீட்டுக்குள்ள வா...” என்று அவனின் இதழ்கள் முணுமுணுக்க,

“வந்தவளை நீங்கதான் உள்ள போக விடலை..” என்று புன்னகை மாறாது பதில் சொல்ல, இவர்கள் இருவரின் இந்த கோலம் மணிராதா மனதில் எச்சரிக்கை மணி அடித்தது..

‘இதை நீடிக்க விடக்கூடாது...’ என்று யோசித்தவர், “என்னண்ணா இதுக்கேன் நீங்க எழுந்து வரணும்.. நாங்களே உள்ள வந்திருப்போமே..” என்றவர் வேகமாய் “வாங்க எல்லாம் உள்ளப் போவோம்..” என்று பொதுவாய் சொல்லிவிட்டு முன்னே நடக்க,

“அதுவும் சரிதான் நல்ல நேரம் முடியுபோகுது.. அதுக்குள்ள பத்திரிக்கை பார்த்துட்டா நல்லது..” என்று அவரும் சொல்ல, வனமாலி பிடித்த கரம் விடாது அவளை கரம் பற்றியே அவனின் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான்.

கமலிக்கு வீட்டினுள் நுழைய, அவளைப் பார்த்ததும் அதிர்ச்சியில் அனைவரும் எழ, அதிலும் வனமாலி அவளின் கரம் பற்றி அழைத்து வருவது கண்டு மேலும் ஒரு திகைப்புக் கூட, வந்தனாவும், முரளியும் அவன் அம்மாவும் சந்தோசமாய்

“வா கமலி...” என்று வரவேற்க, அங்கே யாராலும் எதுவுமே பேச முடியவில்லை.

பமீலாவும் இந்திராவும் ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொள்ள, மணிராதாவோ ‘எதுவும் பேசாதீர்கள்..’ என்று கண்களில் எச்சரிக்கை காட்ட, பமீலாவோ “என்ன இதெல்லாம்...” என்று கோவர்த்தனைப் பார்த்தாள்.

அவனோ, இவர்களைப் போலவே ஒரு அதிர்வில் இருந்தாலும் பின் சுதாரித்து “வா.. வா கமலி..” என்று லேசாய் திணறி வரவேற்க, வந்தனாவோ அவளிடம் சென்று “நீ வந்ததுல ரொம்ப சந்தோசம்...” என்றுசொல்ல, அப்போதும் வனமாலி அவளின் கரங்களை விட்டானில்லை..

அனைவருக்கும் தன் சிரிப்பையே பதிலாய் கொடுத்தவள், “இப்போவாது கையை விடுங்களேன்..” என்று வனமாலியிடம் சொல்ல, ‘ச்சே...’ என்று நொந்து வேகமாய் அவன் பிடியை விட்டான்..

அதன்பின் அங்கே பேச்சோடு பேச்சாய் பத்திரிக்கை தேர்வு நடக்க, முரளியின் அப்பாவோ “கமலி அம்மா வரலையாம்மா??” என்று கேட்க, ‘என்ன சொல்ல போறாளோ..’ என்று மணிராதாவும் வனமாலியும் பார்க்க,

கமலியோ “கோவிலுக்குப் போயிருக்காங்க பெரியப்பா...” என்றவள் “நீங்க எது பிடிக்குதோ பாருங்க..” என்று பேச்சினை மாற்றினாள்.

அவளுக்குத் தெரியும் இவர்கள் எப்படியான திருமண பத்திரிக்கைகளை விரும்புவார்கள், எப்படி விலையில் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஆக அதை வைத்து பல மாதிரிகளை கொண்டு வந்திருக்க, பெரியவர்கள் அந்த வேலையை தொடர, பமீலா எழுந்து உள்ளே போய்விட்டாள்.. இந்திராவும் கூட.

‘என்ன உள்ள போயிட்டாங்க..’ என்று முரளியின் அம்மா கேட்டதற்குக் கூட, “இந்திரா மாத்திரை போடல போல லேசா தலை சுத்துதாம்..” என்று மணிராதா கொஞ்சம் சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி இருந்தது.

வந்தனவோ இதெல்லாம் கவனித்தாலும் இப்போது எதுவும் கேட்க முடியாது என்பதால் அமைதியாய் இருக்க, வனமாலி தன் தம்பியை பார்த்தான் ‘இதெல்லாம் சரியில்லை..’ என்பதுபோல்.

அவனோ ‘வேலை முடியட்டும்..’ என்று சைகை செய்ய, கமலியோ “வீட்டுக்கு பார்ஸ்ட் டைம் வர்றேன் எதுவும் கொடுக்க மாட்டீங்களா??” என்று வனமாலியிடம் ரகசியம் பேசுவதுபோல் கேட்க, இவர்களின் இந்த புது நெருக்கம் அனைவர்க்கும் ஒரு காட்சியாய் அமைந்தது.

என்னவோ கேட்கிறாளே என்று வனமாலி லேசாய் அவளின் புறம் சாய்ந்து கேட்க, பார்ப்பவர்களுக்கு இவர்கள் இருவரும் ரகசியமாய் எதுவோ பேசுவதுபோல் இருக்க முரளியோ “மச்சான்.. கொஞ்சம் எங்களையும் கவனிங்க..” என்று கிண்டல் அடிக்கவும்தான் வனமாலி லேசாய் அசடு வழிவது போல் சிரித்து,

“ம்மா கமலிக்கு ஏதாவது கொடுங்க..” என, அவரோ மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க, “தேங்க்ஸ்...” என்றவள் வாங்கி மறுக்காமல் குடித்தும்விட்டாள்.

கமலிக்கு நன்கு தெரியும், தான் இங்கே சும்மா அமர்ந்திருப்பதே அனைவரும் நெருஞ்சியாய் மனதில் குடையும், ஆக நாம் எதுவும் செய்யாமலேயே எல்லோரும் என்னாகுமோ என்ற ஒரு அச்சத்தில் இருப்பார்கள் என்று. ஆக அவள் வந்த வேலையை மட்டுமே பார்த்தாள்.

அவள் சரியாய் தானே இருக்கிறாள் என்ற எண்ணம் வனமாலிக்குள் வர, ‘நம்மதான் தப்பா யோசிக்கிறோமோ??’ என்றும் தோன்ற, அதற்குள் முரளியின் அப்பா ஒரு பத்திரிகை காட்டி “இது நல்லாருக்கே..” என்றுசொல்ல, அனைவரின் கவனமும் அங்கே திரும்பியது.

கமலி விபரங்கள் சொல்ல, பின் இருவீட்டு அழைப்பிற்கு என்று பொதுவாய் ஒரு பாத்திரிக்கையும், முரளி அவனின் நண்பர்களுக்கு கொடுக்கவென ஒரு பத்திரிக்கையும், பின் வனமாலி கோவர்த்தன் அவர்கள் தனியே அழைக்கவென்று வேறு வேறு பத்திரிகைகள் என்று எல்லாம் தேர்வாக, கவனித்துப் பார்த்தால் அனைத்துமே கமலி சொன்ன யோசனைகளின் படி முடிவு செய்ததாகவே இருந்தது.

உள்ளிருந்தே இவர்கள் பேசுவது அனைத்தையும் கேட்ட பமீலாவோ “ம்மா இப்படியே போனா ஒருநாள் இல்லை ஒருநாள் இவ இங்க வந்து ராஜ்ஜியம் பண்ணுவா, அத்தையும் வாய் மூடி இருப்பாங்க இதோ நம்ம இப்படிதான் வந்து தனியா உக்காந்து இருக்கணும்..” என்று கறுவிக்கொண்டு இருக்க,

“அண்ணியும் வந்தனா கல்யாணத்துக்காக பாக்குறாங்க..” என்று இந்திரா மகளுக்கு சமாதானம் சொல்ல,

“சும்மா இரும்மா.. இதெல்லாம் அவங்களுக்கு ஒரு விசயமா?? அவங்க நினைச்சா அந்த வீட்டுக்கு போயி சத்தம் போட்டு வரலாம்.. ஆனா இப்போ வரைக்கும் எதுவும் செய்யலை.. இந்த வனா மாமா வேற.. ச்சேய்...” என்று நொந்தவள் இங்கேயும் இருக்க முடியாது எழுந்து வெளியே போக, அங்கேயோ அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க, இவளின் மனதோ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.



தொடரும்..............................
Nice Ep
 
Top