Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 15

பமீலாவின் நடவடிக்கைகளைப் பார்க்கவே வித்தியாசமாய் இருக்க, கமலியோ கேள்வியாய் வனமாலியைப் பார்த்தாள். அவனோ பமீலாவைப் பார்த்தவன், மணிராதாவிடம் “ம்மா தனாவை வர சொல்லுங்க...” என,

“அவன் இப்போதான் பேசி பேசி பார்த்து வெளிய போனான்டா..” என்றார்.

மணிராதா மறந்தும் கூட கமலி பக்கம் திரும்பவும் இல்லை, ஒருவார்த்தை பேசவும் இல்லை, அவர் பேசவேண்டும் என்று கமலியும் எதிர்பார்க்கவில்லை போல. ஆனால் வனமாலியோ “நீ போ கமலி.. போய் விளக்கேத்து... நான் வர்றேன்..” என்றவன்,

“வந்தனா... கமலிய பூஜை ரூம் கூட்டிட்டு போ..” என்றான் தங்கையை அழைத்து.

அறைக்குள் சென்றிருந்தவள் திரும்பி வந்து கமலியை அழைத்துக்கொண்டு பூஜையறை செல்ல, வனமாலியோ கோவர்த்தனுக்கு அழைத்தான்.

“எங்கடா இருக்க?? வீட்டுக்கு வா...” என்று.

“நான் வரலைண்ணா... சும்மா எனக்கு கடுப்பாகுது...”

“அதுக்கு.. அப்படியே கிளம்பி போவியா?? வா ஒழுங்கா...” என்றவன், பேசியபடி பூஜையறை செல்ல, “இல்ல நான் வரலை...” என்றான் கோவர்த்தனும்..

“டேய்.. சரியோ தப்போ.... நீ இப்போ பமீலா கிட்ட இருக்கணும்.. நீ வர்ற...” என்று சொல்லிவிட்டு போனை வைத்தவனை கொஞ்சம் வியந்து போய் பார்த்தாள் கமலி..

“என்ன பாக்குற... விளக்கேத்து..” என்று அவளிடம் சொன்னவன், “ம்மா...” என்று சத்தமாய் அழைக்க,

மணிராதாவோ “நீங்க கும்பிடுங்க...” என்று அங்கிருந்தே குரல் கொடுத்தார்.

இந்திராவோ அனைத்தையும் பார்த்தவர் “பமீ.. எந்திரி.. என்ன டி இதெல்லாம்.. உனக்கென்னாச்சு..” என்று மகளை சமாதானம் செய்ய, “முடியாது முடியவே முடியாது.. எனக்கொரு முடிவு தெரியாம நான் எங்கயும் நகர மாட்டேன்..” என்றாள் பிடிவாதமாய்.

மணிராதாவோ “உங்க ரெண்டு பேருக்கும் என்ன சொன்னாலும் புத்தியே வராது.. வந்தனா கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் பொறுமையா போங்கன்னு சொன்னா. கேட்கவே மாட்டீங்க...” என்று கடிய,

“ஓ..!!! சூப்பர்... ரொம்ப சூப்பர்... வந்தனா கல்யாணம் சொல்லி சொல்லி இதோ இப்போ வனா மாமா கல்யாணமே முடிஞ்சிடுச்சி.. இனியென்ன செய்ய போறீங்க.. அப்போ நானோ என் அம்மாவோ உங்களுக்கு முக்கியமில்லை அப்படித்தானே.. நாங்க எப்படி போனாலும் உங்களுக்கு ஒண்ணுமில்லை அப்படிதானே...” என்ற பமீலா சீறிக்கொண்டு எழுந்தவள்,

“பாக்குறேன்.. நானும் பாக்குறேன்.. வந்தனா கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குறேன்..” என்று காட்டு கத்தலாய் கத்த, உள்ளே பூஜையறையில் இருந்தவர்களுக்கு பகீரென்றது.

வந்தனாவோ திடுக்கிட்டு அண்ணன் முகம் பார்க்க, முதல் முறையாய் கமலிக்கு மனதில் சுருக்கென்று ஒரு வலி.. இது தான் ஆரம்பித்த ஒன்றுதானே என்று..

‘வந்தனா கல்யாணத்தை நிறுத்திட்டா..??!!’ என்று அவள்தானே முதல்முறையாய் இதை வனமாலியிடம் கேட்டாள்.. ஆனால் இப்போதோ அதையே பமீலா ஆயுதமாய் எடுத்துக்கொள்ள, அதைக் கேட்ட பிறருக்கோ சொல்லமுடியாத உணர்வுகள்.

அதிலும் கமலிக்கு சொல்லவே வேண்டியதில்லை.. வனமாலியை ஒருபார்வை பார்த்தவள், “வ.. வந்தனா ஐம் சோ சாரி...” என்றுபோய் அவளின் கரத்தினை பற்றினாள்.

வனமாலியோ கமலியை கண்டனமாய் ஒரு பார்வை பார்த்தவன், அப்படியே வெளியே வர, மணிராதா அதிர்ந்துபோய் நின்றிருக்க, இந்திரா செய்வதறியாது கைகளை பிசைந்து நின்றிருந்தார். பமீலாவோ பைத்தியம் பிடித்தவள் போல மூச்சு வாங்கி நிற்க, சரியாய் அதே நேரம் கோவர்த்தனும் வந்துவிட, அங்கே வந்தனாவோ இறைவன் முன்னே கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தாள்.

கமலியோ “நான் ஆரம்பிச்சது தான் இது.. ஒரு கோபத்துல இப்படி சொன்னது தான் வந்தனா.. பட் எதுவும் என் மனசுல இருந்து வரலை.. ஆனா கடைசில இதுவே ஒரு பேச்சாகும்னு நான் நினைக்கவேயில்லை..” என்று வருந்தி சொல்ல,

வந்தனாவோ “ம்ம்ச் என் தலையில என்ன இருக்கோ அதானே நடக்கும்..” என்றாள் கண்ணீர் துடைத்து.

“இல்லல்ல கண்டிப்பா நல்லதே நடக்கும்.. அது.. அவ எதோ..” என்று கமலி சொல்லும்போதே,

“அதுக்கு எல்லாருக்கும் என் கல்யாணம் தான் கிடைச்சதா??” என்றாள் வந்தனா பட்டென்று..

கோபமில்லை.. வேகமில்லை.. ஆனால் அவளின் வார்த்தைகளில் தெரிந்த வருத்தம் நிச்சயம் கமலியை வருத்தம்கொள்ள வைத்தது. தெரிந்தோ தெரியாமலோ தான் ஆரம்பித்த ஒன்று, எப்பாவமும் செய்யா இவளை இத்தனை வேதனைப் படுத்துமா என்று கண்ணெதிரே காணும்போது கமலிக்கு தன்னை நினைத்தே மனம் நொந்தது.. வந்தனா இதுவரை யாரிடமும் முகம் கோணி பார்த்ததில்லை.. நல்ல பெண்.. அப்படியொருத்தியின் மனம் நோக, கமலிக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை..

வந்தனவோ “இந்த பேச்சு இனிமே வேணாம்..” என்றுவிட்டு வெளியே வர, கமலிக்கு மிக மிக சங்கடமாய் போனது.
 
அங்கே கோவர்த்தனோ “என்ன?? என்ன சொன்ன நீ?? இப்போ என்ன சொன்ன??” என்று கோபமாய் பமீலாவிடம் நெருங்க, அவனின் இப்படியான ஒரு மாற்றத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே பொறுமையாய் செல்பவனின் முகத்தில் இன்று அது கிஞ்சித்தும் இல்லை.

“தனா.. வேணாம்டா..” என்று வனமாலி வர,

“இல்லண்ணா.. இவ ரொம்ப பண்றா.. இவளுக்கு இப்போ என்ன பிரச்சனை...” என்றவன் “ஏன் அத்தை நீங்க கூட சொல்லக் கூடாதா..” என்றான் இந்திராவை பார்த்து.

இந்திராவோ தயங்கி மணிராதாவை பார்க்க, அவரோ “யாரும் எதும் சொல்ல வேணாம்.. நான் பேசிக்கிறேன்.. எல்லாம் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு போங்க..” என்று பொதுவாய் சொல்ல,

“இன்னும் பாக்க என்னம்மா இருக்கு??” என்று கேட்டது வந்தனா.

அவளா பேசியது என்று அனைவருமே பார்க்க, வனமாலியோ கமலியை முறைத்துக்கொண்டு நின்றான்.. மணிராதாவோ மகளின் இக்கேள்வியில் ஆடிப் போய்விட,

“இல்ல இல்ல.. வந்தனா.. நான் இருக்க வரைக்கும் உனக்கும் உன் வாழ்க்கைக்கும் எதுவும் ஆகாது..” என்று ஒரு தாயாய் பதறிப் போய் மகளின் அருகே நிற்க,

“நீ பண்ணது தான் இப்போ எனக்கு வந்து விடியுது...” என்று வார்த்தைகளை துப்பிவிட்டு வந்தனா வேகமாய் உள்ளே போய்விட, ‘ஐயோ...’ என்றுதான் பார்த்து நின்றிருந்தார் மணிராதா.

கமலி.. அவள் செய்ய நினைத்த அனைத்தும் தானாய் நடந்துகொண்டு இருக்க, ஆனால் அவள் மனதோ அதெல்லாம் எண்ணி மகிழ்வுறாது, வாடிப்போய் நின்றது. வனமாலி அவளைப் பார்த்தவன் “நீ உள்ள போ..” என, ஒருமுறை தயங்கியே அவள் திரும்ப,

பமீலா மீண்டும் ஆரம்பித்தாள் “இவ இங்க இருந்தா நான் இங்க இருக்க மாட்டேன்..” என்று.

கமலியோ நின்று ஒருமுறை திரும்பிப் பார்க்க, வனமாலியோ “உன்னை உள்ளப் போன்னு சொன்னேன் கமலி...” என்றான் அதட்டலாய்.

அவ்வளவுதான்.. கமலி பதிலேதும் சொல்லவேயில்லை. அவன் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு உள்ளே அவன் காட்டிய அறைக்குள் சென்றுவிட, பமீலாவோ குதித்துக்கொண்டு இருந்தாள்..

வனமாலி கோவர்த்தனை பார்த்தவன் “நீ தான் பேசணும் அவக்கிட்ட.. நாங்க யாரும் எதுவும் சொல்ல முடியாது.. எது எப்படியா இருந்தாலும் சரி நீ அவளோட தான் இருக்கணும்.. இப்படி கிளம்பி வெளிய போறது எல்லாம் சரியில்லை தனா..” என்று சொல்ல,

“இல்லண்ணா..” என்று தலையை உருட்டியவன், பமீலாவை பார்த்து “நீ வா நம்ம கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்..” என்று சொல்ல,

“நான் எங்கயும் வர மாட்டேன்..” என்றாள் சட்டமாய்.

“அப்போ இங்கயும் இருக்கமாட்டேன்.. எங்கயும் வரவும் மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்..” என்று கோவர்த்தன் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, வனமாலி அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்.

இதற்குமேல் இனி அவர்கள் தான் பேசி தீர்க்கவேண்டும் என்று. அங்கே போனாலோ கமலி ஜன்னல் பக்கமாய் நின்று வெளியே பார்க்க, “இப்போ இப்படி நின்னு எதுவும் ஆகப் போறதில்லை..” என்றான் பொதுவாய்.

அவன் குரல் கேட்டும் அவன்பக்கம் திரும்பாதவள் “ம்ம்ம் நான் சொன்ன அதே வார்த்தைகள் தான்.. ஆனா இப்போ கஷ்டமா இருக்கு.. வந்தனா என்ன செய்வாங்க...” என,

“யாரும் தான் என்ன செய்ய முடியும்.. இப்பவும் சொல்றேன்.. நடந்த எதையுமே மாத்த முடியாது கமலி.. யாருக்காகவும் யார் மேலவும் வன்மம் வைக்கிறது கடைசில நம்மளையே அழிச்சிடும்..” என்றவன், “இனியாவது உனக்கு எல்லாம் புரியும்னு நினைக்கிறேன்...” என்ற கமலி மௌனமாகவே நின்றிருந்தாள்..

வனமாலியும் அதற்குமேல் எதுவும் பேசாதவனாய் போய் கொஞ்சம் நேரம் கட்டிலில் படுத்திருக்க, கமலிக்கு இது என்னமாதிரி திருமணம்.. என்ன மாதிரியான ஒரு வாழ்வாய் இருக்கும் என்றெல்லாம் எதுவுமே புரியவில்லை.. எல்லாமே.. எல்லாமே ஒரு பார்மாலிட்டிக்காக நடந்ததாய் தான் இருந்தது. திருமணம் உட்பட,

இதோ இன்றுதான் முதல்நாள்.. நேற்று தான் திருமணம் முடிந்தது. ஆனால் அதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாது, புதுப்பெண்.. புது வீடு.. புது வாழ்வு என்று எதுவும் ஒரு வித ரசிப்பில்லாது இதெல்லாம் என்ன என்று தோன்ற, தானே தன் வாழ்வை இப்படியான ஒரு வண்ணமில்லா சுவராய் மாற்றுகிறோமோ என்றும் தோன்ற, திரும்பி வனமாலியைத்தான் பார்த்தாள்.

கண்களை மூடி சாய்ந்திருந்தாலும் அவன் மனதினில் எதுவோ யோசனைகளை ஓடுவது அவளால் கண்டுகொள்ள முடிந்தது. அதற்குமேல் இப்போது இந்த நேரத்தில் அவனிடம் என்ன பேச என்று தெரியாமல், கதவினை சாத்திவிட்டு அவளும் வந்து அவனருகே அமைதியாய் படுத்துக்கொண்டாள்.

வெளியே பமீலாவோ யார் சொல்லியும் எதுவும் கேட்காது போக, கோவர்த்தன் இழுக்காத குறையாய் அவளை இழுத்துக்கொண்டு போனான்.

“என்னை விடுங்க.. நான் இங்க இருக்கமாட்டேன்.. நான் போறேன்..” என, “எங்க போக போற நீ??” என்றான் கோவர்த்தனும்.
 
“எங்கம்மா கூட போறேன்.. அந்த வீடு தான் என் வீடு...”

“அது உன் வீடு இல்லை.. அதுவுமில்லாம இங்க இல்லாமா என் கூட இல்லாம எங்க போக போற நீ..”

“அப்போ.. நீங்களும் வாங்க போலாம்.. நமக்கு இவங்க யாரும் வேணாம்.. யாருமே வேணாம்.. எல்லாம் எப்படியோ போகட்டும்.. உங்கம்மா சரியான சுயநலம்..” என்று விடாது பேசிக்கொண்டு போனவளை என்ன செய்தால் வாய் மூடுவாள் என்றுதான் பார்த்தான் கோவர்த்தன்..

சத்தியமாய் அவனுக்கு பொறுமை கரைந்துகொண்டே போனது, “ஏய் வாய் மூடு.. அப்போ இருந்து சொல்றேன்..” என்று அதட்டல் போட்டவன்,

“இன்னொரு தடவ கத்தின கொன்னுடுவேன்..” என்று விரல் நீட்டி மிரட்ட, எப்போதுமே இப்படியெல்லாம் பேசாதவன் இப்போது இப்படி பேசவும் பமீலா திகைத்துப் போய் கணவனைப் பார்க்க,

“வாய் மூடிட்டு பேசாம இங்க இருக்கணும்..” என்றுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான்..

இந்திரா அப்போதும் கைகளை பிசைந்துகொண்டே நிற்க “அவதான் அப்படின்னா நீங்க ஏன் அத்தை எதுவும் சொல்ல மாட்டீங்களா??” என்று அவரிடம் கேட்க, அவரோ அப்போதும் பாவமாய் தான் மணிராதாவைப் பார்த்தார்..

நிச்சயமாய் இதெல்லாம் கோவர்த்தனுக்கு ஒரு எரிச்சலை தர, “ம்மா.. ஆனா ஒண்ணு.. நடக்குறது எல்லாத்துக்கும் வேற யாரும் காரணமில்லை.. அது உனக்கே தெரியும்..” என்று அவனும் தன் பங்கிற்கு சொல்லிவிட்டு செல்ல, இந்த வார்த்தைகள் எல்லாம் ஈட்டியாய் மணிராதாவை குத்த ஆரம்பித்தது..

முதல்நாள் திருமணம் நடந்த வீடு போலவே இல்லை அங்கே. ஆளாளுக்கு ஒரு அறையில்.. ஒவ்வொரு நிலையில்... மனதில் இருந்த திடம் இழந்து, என்னால் எதுவும் செய்ய முடியும் என்ற எண்ணம் இழந்து, உடலில் உள்ள மொத்த பலமும் இழந்தது போல் உணர்ந்து தோய்ந்து போய் சோபாவில் பொத்தென்று அமர்ந்தார் மணிராதா..

மனதிற்குள்ளே பல நூறு எண்ணங்கள்.. அனைத்துமே முன் நடந்தவை.. இதெல்லாம் என்ன பெரிய விசயமா என்று எண்ணியது எல்லாம் இப்போது பூதாகாரம் கொண்டு இருக்க, மகுடேஸ்வரன் தனக்குத் தெரியாமல் இப்படியொரு உயில் எழுதியது வேறு பெரும் அதிர்ச்சி அவருக்கு..

அனைத்தும் சேர்த்து அவரை அமைதி கொள்ள செய்ய, இந்திராவோ “ அண்ணி...” என்றார் மெதுவாய்..

“கொஞ்ச நேரம் தனியா இருக்க விடு இந்திரா.. நீயும் போய் கொஞ்சம் தூங்கு...” என்றவர் அப்படியே அமர்ந்துவிட, வாசலில் ஆட்களின் சப்தம் கேட்கவும், என்னவென்று போய் பார்த்தார்..

வீட்டின் வெளியே சிவகாமியும் ராணியும், சங்கலிநாதன் என்று அனைவரும் நிற்க, ஆட்கள் சீர் கொண்டு வந்துகொண்டு இருந்தனர்.... ஆனால் யாரும் உள்ளே வரவில்லை. ‘கடவுளே இது வேறயா..’ என்று மணிராதா பார்க்கும் போதே, சத்தம் கேட்டு வனமாலி எழுந்து வந்துவிட, “அட உள்ள வாங்க..” என்றபடி வேகமாய் அவன் வாசல்பக்கம் செல்ல,

மணிராதாவோ “இந்திரா நீ போய் பமீலா கூட இரு..” என்று அவரை அனுப்பினர்.

சிவகாமி தயங்கி அப்படியே நிற்க “அத்தை உள்ள வாங்க..” என்று வனமாலி அவரை அழைக்க,

அவரோ “இல்.. இல்ல வனா..” என்று லேசாய் தயங்க, வனமாலி திரும்பி மணிராதாவைப் பார்த்தான்.

அவரோ வேடிக்கை பார்ப்பதுபோல் நிற்க, “ம்மா...” என்று கடிந்து அவன் பார்த்த பார்வையில், அவருக்கு தன்னையும் அறியாது “வா.. வாங்க.. எல்லாம் வாங்க..” என்று சொல்ல வந்திட, அதன் பின்னே தான் அனைவரும் உள்ளே வந்தனர்.

சிவகாமி உள்ளே வந்தவர் மகளைத் தேட “இப்போதான் தூங்கினா..” என்றவன் “கமலி...” என்று வேகமாய் அவளைப் போய் எழுப்ப, அவளோ “என்னாச்சு..??!!” என்று பதறி எழ,

“ஹேய் ஹேய் ஒண்ணுமில்ல.. அத்தை.. எல்லாரும் வந்திருக்காங்க.. வா..” என,

“அ.. அம்மாவா...” என்று வேகமாய் வெளியே வந்தவள், “ம்மா..” என்று வேகமாய் அவரின் அருகே போக,

“கமலி...!!!!” என்று வனமாலி அழைத்தவனைப் பார்த்து புன்னகைதவள் “வாங்க தாத்தா.. வாங்க அத்தை..” என்று மற்றவர்களையும் வரவேற்க, நிஜமாகவே மணிராதாவிற்கு இவர்களின் திருமணம் திடீர் திருமணம் போன்றே தெரியவில்லை.

அதற்குள் வந்தனாவும் வந்திட, அவளும் வந்தவர்களை வரவேற்க, அறைக்குள்ளே இவர்களின் பேச்சு கேட்டாலும் இந்திராவும் பமீலாவும் ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்க வேண்டியதாய் இருந்தது..

“பாத்தியா ம்மா.. கடைசியில எல்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்க..”

“ம்ம்ச்.. நீதான் தேவையில்லாம பேசுற பமீலா..” என்றவர் “நீ பாட்டுக்கு இரேன்..” என, “என்னால உன்னை மாதிரி எல்லாம் இருக்க முடியாது..” என்றாள் வெடுக்கென்று..

“என்னடி சொல்ற???”

“ஆமா இத்தனை வருஷம் அப்படிதானே இருந்த.. அத்தை சொல்ற எல்லாத்துக்கும் தலையை தலையை உருட்டி.. கடைசியில என்னாச்சு.. இதோ அவங்களே அங்க வாய் மூடி நிக்கிறாங்க.. என்னால உன்னை மாதிரி இப்படி பொம்மையாட்டம் ஒரு வாழ்க்கை வாழ முடியாது..” என்றாள் அம்மாவிடம் பேசுகிறோம் என்றில்லாது..

நிஜம்தானே.. இந்திரா இப்போது வரைக்கும் அப்படிதானே.. இல்லை அவரது குணமே அதுதானோ என்னவோ.. அதற்காகத்தான் மணிராதா இவரை மகுடேஸ்வரனுக்கு மணம் முடித்தாரோ என்னவோ. ஆனால் அந்த நிமிர்வு மட்டும் இந்திராவிற்கு இப்போது வரைக்கும் வரவேயில்லை..

அதை மகளின் வார்த்தைகளாய் கேட்கும்போது அவருக்கு இன்னும் மனம் வலிக்க, “நான் என்ன டி செய்ய..??” என்றார் பாவமாய்.

“என்ன செய்ய.. இதோ இப்படிதான் உக்காரணும்...” என்றவள் வெளியே பேசும் பேச்சை கவனிக்க,

அங்கே சிவகாமியோ “மறுவீட்டுக்கு அழைக்க வந்திருக்கோம்...” என்றார் பொதுவாய்.

இவர்கள் பேசுவதற்குள் வந்தனாவோடு, கமலியும் அடுக்களை போய் அனைவர்க்கும் குடிக்க ஜூஸ் போட்டுக்கொண்டு வர, சிவகாமிக்கு ஒரு திருப்தி மனதினுள்..

அங்கே எப்படித்தான் கமலி இருக்கப் போகிறாளோ என்று நினைத்து வந்தவருக்கு, அவள் அங்கே இயல்பாய் பொருந்திப் போனது இன்னமுமே ஆச்சர்யம்.. அதற்கு காரணம் வனமாலி என்று தெரியும் இருந்தாலும் மகளின் குணமும் அறிந்தவர் தானே..

மணிராதா வாயே திறக்கவில்லை, ராணிதான் “அக்கா.. இதுல நகை எல்லாம் இருக்கு..” என்று ஒரு நகைப் பெட்டியைக் கொடுக்க,

அவரோ வீம்பையும் விடாது, மகன் முன்னே மறுத்தும் பேச முடியாது என்ன செய்வது என்று திணறி, “அ.. இதெல்லாம்.. அ.. அது. இதெல்லாம் எதுக்கு..” என்றார் பெயருக்கேனும்.

“முறைன்னு ஒண்ணு இருக்குல்ல மணி..” என்று சங்கிலிநாதன் சொல்ல, அதற்குமேல் பேசாது, அதனை வாங்கியவர் மகனைப் பார்த்து “இந்தா வனா..” என்று சொல்ல,

“ம்மா இதெல்லாம் கமலிக்கு..” என்றான் லேசாய் சிரித்து.

மணிராதாவோ சரியாய் இவர்கள் முன்னே மாட்டிக்கொண்ட உணர்வில் “ம்ம்” என்று முகத்தை தூக்கியவர், “இந்தா...” என்று கமலியைப் பார்த்து சொல்ல, அவளும் வனமாலி போலவே மெதுவாய் சிரித்தவள், ஒன்றும் சொல்லாது நகைப் பெட்டியை வாங்கிக்கொள்ள, சிவகாமியோ “போய் பூஜை ரூம்ல வை..” என்றார் மகளிடம்..

வனமாலியோ “எல்லாருக்கும் லஞ்ச் சொல்றேன்..” என்று சொல்ல,

“அதெல்லாம் வேணாம் வனா... அங்க எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டுதான் வந்தோம்.. மறுவீட்டுக்கு கூப்பிடனும் இல்லையா..” என்ற சிவகாமி,

“அண்ணி.. பொண்ணையும் மாப்பிள்ளையும் நாளைக்கு மறுவீட்டுக்கு அனுப்பி வைங்க..” என்று மணிராதாவைப் பார்த்து நேருக்கு நேர் சொல்ல,

தன்னிடம் சிவகாமி நேருக்கு நேர் பேசுவார் என்று நினைக்காத அவரோ, “ஆ..” என்று திடுக்கிட்டு,

“ச.. சரி...” என்றவர், பின் என்ன நினைத்தாரோ “கல்யாணம் எல்லாம் என்னை கேட்டா நடந்துச்சு..” என்றார் வெடுக்கென்று.

“ம்மா..” என்று வனமாலி சொல்ல,

சிவகாமியோ “நடக்கனும்னு இருந்திருக்கு நடந்திருக்கு..” என்றவர், வந்தனாவிடம் “உன் கல்யாணத்துக்கு என்ன வேணும் சொல்லு..” என, அப்படியே பேச்சு வளர்ந்தது.

கமலி அனைத்தையும் அமைதியாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.. மணிராதாவும் அதே தான்.. என்னவோ தன் வீட்டிலே அந்நியமாய் அமர்ந்திருக்கும் ஓர் உணர்வு அவருக்கு.. எப்படி சிவகாமியை அவர் வாழ வேண்டிய வாழ்வில் இருந்து அந்நியப் படுத்தினரோ இப்போது அதுபோலவே.

ஒருவழியாய் அனைவரும் கிளம்ப, வனமாலி கோவர்த்தனுக்கு அழைத்து அனைவர்க்கும் மதிய உணவு வாங்கி வர சொல்ல, அப்படியே நேரம் போனதுதான் மிச்சம்.. கோவர்த்தன் வரவும், அவரவர் தட்டில் போட்டு உண்டுவிட, கமலியும் வனமாலியும் மட்டும் ஒன்றாய் அமர்ந்து கடைசியில் உண்ண,

வந்தனா வந்தவளோ “நானே உங்களை சாப்பிட கூப்பிட நினைச்சேன்..” என்றுவிட்டு போக, “எனக்கு நிஜமாவே கஷ்டமா இருக்கு..” என்றாள் கமலி..

வாயில் உணவை வைக்கப் போனவன் அவளைப் பார்த்துவிட்டு “நீ எதுவும் நினைச்சுக்க வேணாம்..” என்றவன், “எங்காவது வெளிய போலாமா??” என்றான் திடீரென..

“நா.. நாளைக்கு அம்மா வீடு போகணுமே..” என்று எதுவும் யோசிக்காது கமலி சொல்ல, அவள் சொன்னதில் வனமாலிக்கு சிரிப்பு வந்திட்டது..

“என்ன??!!” என்றாள் வாய் கொணட்டி..

“இல்ல இதுதான் உன் வீடுன்னு உனக்கு புரிய வைக்க நாளாகுமோன்னு நினைச்சேன்.. பரவாயில்ல.. நான் நினைச்சது மாதிரி இல்ல நீ..” என்று அவனும் சொல்ல,

“ஓ..!! அப்போ நீங்க என்னை என்ன நினைசீங்க??” என்றாள் இவளும்.

“இல்ல எப்படியும் நிறைய சண்டை வரும்னு நினைச்சேன்..”

“ஹா டொன்ட் வொர்ரி உங்களோட எண்ணத்தை நிறைவேத்திடலாம்..” என்று அவள் சொன்னதும் இருவருக்குமே சிரிப்பு வந்திட, அந்த பக்கம் எதேர்ச்சையாக வந்த மணிராதாவிற்கு இவர்களை கண்டு இப்போதும் ஆச்சர்யமாய் தான் போனது.
 
Top