Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Vaseegara Vanamaali - 1

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
வசீகர வனமாலி – சரயு

அத்தியாயம் – 1

“துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.....”

கசிந்துருகும் கந்த சஷ்டி கவசத்துடன் அன்றைய தினத்தின் சிவாகாமி அச்சகம் தன் வழக்கமான பணியினை தொடங்கிட, கமலி அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த தனியறையில் அமர்ந்து, அன்றைய தினத்தில் முடிக்கவேண்டிய வேலைகள் என்னவென்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சிவகாசி... தீப்பெட்டி, வெடிப் பொருட்களுக்கு மட்டும் பெயர்போனது அல்ல.. அச்சக தொழிலுக்கும் பெயர் போனது.
அதிலும் சிவகாமி அச்சகம் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாய் தங்கள் பணியை தரமாய் வழங்கும் அச்சகம்..

வருடங்கள் ஓடினாலும், தொழில்நுட்பங்கள் பெருகினாலும், அனைத்திற்கும் தன்னை ஈடு கொடுத்து, அச்சக தொழிலில் புதிது புதிதாய் வரும் அனைத்து விசயங்களையும் கற்று, ஏற்றுக்கொண்டு காலத்திற்கு ஏற்ப காலூன்றி நிற்கும் நிறுவனம் என்றுதான் சொல்லுதல் வேண்டும்.

சுமார் நாற்பது பணியாளர்களோடு அன்றைய தின வேலையை தொடங்கிய சிவகாமி அச்சகத்தின் புதிய தலைமை பொறுப்பு, அதாவது இந்த ஆறு மாத காலமாய் நீதான் இதனை இனிமேல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிவகாமி பிடிவாதமாய் சொல்லிட அம்மாவின் வார்த்தைகளை மீற முடியாது வந்து தன் பொறுப்பினை ஏற்றுகொண்டாள் கமலி.

பிறந்ததில் இருந்து பார்க்கும் ஒன்றுதான். இருந்தாலும் பொறுப்பில் என்று அமர்ந்த பின்னே தானே அதன் சுமைகள் தெரியும். ஆனால் வந்த சில நாளிலேயே கமலிக்கு இந்த வேலைகள் புரிந்துவிட, பிடித்தும் விட்டது.

“கமலி ம்மா...” என்று கதவு அவள் அறையின் கண்ணாடி கதவுகள் லேசாய் திறந்திருந்தாலும், அது தட்டி நின்றவரின் குரலில் நிமிர்ந்தவள்,

“உள்ள வாங்க தாத்தா...” என்று சங்கிலி நாதனை அழைக்க, அவரோ கொஞ்சம் நடக்க சிரமப்பட்டே உள்ளே வந்தார்.

“என்னை கூப்பிட்டா நானே வரப் போறேன்...”

“வேலையா இருப்பே...”

“வீட்ல ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னாலும் கேட்கிறது இல்லை. டெய்லி இங்க வந்து எல்லாரையும் அதட்டணும்...” என்று கண்டிப்பாய் பேச முயன்றாலும் கமலிக்கு ஒருபுறம் சிரிப்பு வேறு.

சங்கிலிநாதன், சிவகாமி அச்சகம் தொடங்கிய நாளில் இருந்து இங்கே பணியாற்றியவர். கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒருத்தர் போல.. எழுபது வயது தாண்டினாலும், தினம் ஒருமுறையாவது இங்கே வந்துவிடுவார். அப்போதுதான் அவருக்கு உறக்கம் வருகிறதாம்.

அதிலும் கமலி வந்து பொறுப்பேற்ற பிறகு சொல்லவே வேண்டாம், பாதி நேரம் இங்கேதான். அவருக்கு வயதாகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், கமலிக்கு அவரிடம் வேலைகள் சொல்வது என்பது எப்போதுமே பிடிக்காது. அவரோ,
‘நான் இத செய்றேன்.. அத செய்றேன்...’ என்று வருவார்.

“இங்க வராம தூக்கம் வராது கமலி..” என்று வழக்கமான பதிலை அப்போதும் சொல்ல,

“சரி சொல்லுங்க ஏன் வந்தீங்க??” என்று தலையை ஆட்டி கமலி சிரிக்க,

“அது.. நம்ம வனா பையன்...” எனும்போதே, கமலியின் முகம் மாறிவிட்டது.

“தாத்தா...!!!” என்று கண்டிப்புடன் அழைக்க,

“இருடா.. நான் பேசிக்கிறேன்...” என்றவர் “நம்ம வனா பையன் உன்னை பாக்கணும்னு சொல்றான்....” என,

“முடியாதுன்னு சொல்லிடுங்க..” என்றாள் பட்டென்று.

“வாசல் வரைக்கும் வந்தவனை அப்படி திருப்பி அனுப்ப முடியாதேடா...” என்றவரை இப்போது வெளிப்படையாகவே கமலி முறைக்க,

“அவன் நினைச்சா நேரா உள்ள வந்திருக்கலாம். மரியாதைக்காக காத்திட்டு நிக்கிறான். நம்மளும் அந்த மரியாதை செய்யணுமே...”

“நான் நினைச்சா அவரை அப்படியே வெளிய போன்னு சொல்லலாம்..”

“நீ அப்படி சொல்லமாட்ட.. நீதான் மரியாதை தெரிஞ்ச பொண்ணாச்சே...” என்று சங்கிலிநாதன் சிரிக்க,

“ஆ...!!!! தாத்தா...” என்று பல்லைக் கடித்தவள், “அம்மா ஒரு பக்கம்னா நீங்க அதுக்குமேல...” என்று கடிய,

“சரி சரி அப்புறம் திட்டு... அவனை வர சொல்லவா...” என்று எழுந்தே விட்டார்..

‘வேணாம் சொன்னாமாட்டும்....’ என்றெண்ணியவளுக்கு ஒருமுறை சொல்லிப் பார்ப்போமே என்றும் தோன்ற, அதன்பின் அவன் அந்த வனமாலி.. நேராய் அம்மாவின் முன் போய் நிற்பான்.. அதன்பின் அம்மா இவளை அழைத்து கண்ணா பின்னா கச்சேரி தொடங்கும்.. அது தேவையா??

‘அட போங்கய்யா...’ என்று சொல்லவேண்டும் போல் இருந்தது, ஆனாலும் முடியாதே..

கமலி அமைதியாக இருக்க, அவளைப் பார்த்து ஒரு புன்னகை சிந்திய சங்கிலிநாதனோ வனமாலியை அழைக்க வெளியேறிட, அடுத்த இரண்டே நிமிடத்தில் வனமாலி அவளின் முன்னே இருந்தான்.

வனமாலி வந்தமர்ந்த அடுத்த நொடி “என்ன விஷயம்??” என்று கேட்டவளை,

“வாங்கன்னு தான் சொல்ல முடியாது... அட்லீஸ்ட் தன்மையா பேசக்கூடவா முடியாது...” என்றான் கண்டிக்கும் விதமாய்.
“எனக்கு அட்வைஸ் பண்ணத்தான் வந்தீங்களா??”

“எனக்கு வேற வேலை இல்லை பாரு...” என்று வனமாலியும் பதிலுக்கு கொடுக்க, கண்களை இடுக்கி அவனைப் பார்த்தவள், நீ பேசு என்பதுபோல் அமைதியாகிப் போனாள்.

அவனுக்குத் தெரியும், இப்படி பேசினால் மட்டுமே கமலியின் வாய் கொஞ்சம் மூடும் என்று. இல்லையெனில் பதிலுக்கு பதில் ஒன்றை பேசி, அவன் பேச வந்த விசயத்தையும் பேச விடாது செய்து, இறுதியில் அவனே சண்டையிடும் அளவும் செய்துவிடுவாள்.

பின்னே எத்தனை வருடமாய் பார்க்கிறான். அவளுக்கு விபரம் தெரிந்ததில் இருந்து கமலியிடம் காண்பது எல்லாம் இதே கடுகடுப்புதான். அவள் மீதும் குற்றமில்லை.. அந்த ஒரு காரணம் மட்டுமே வனமாலி பொறுத்துப் போவது.










 
பெரியவர்கள் செய்த, செய்யும் தவறுக்கு சில நேரம் சிறியவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு கடின சூழல் சந்திக்கும் நிலை வந்துவிடுகிறது. அந்த நிலை தான் கமலிக்கு.. இன்று நேற்றில்லை. அவள் பிறந்ததில் இருந்து.. இருபத்தி நான்கு வருடங்களாய்.

வனமாலியும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறான்.. குடும்பத்தில் நடந்தவைகளை.. நடப்பவைகளை.. ஆனால் இனி நடப்பவதாவது நல்லதாய் நடக்கவேண்டும் என்பது மட்டும்தான் அவனுக்கு.. அதன்பொருட்டே இப்போது கமலியை தேடி வந்ததும்.

அதிலும் இந்த ஆறு மாதங்களாய் வனமாலியின் நடவடிக்கை அனைத்தும் வித்தியாசமாய் இருக்கிறது என்று வீட்டினர் அனைவரும் சொல்லிட, அதெல்லாம் அவன் பொறுட்படுத்துவதாகவே இல்லை.
‘யார்வேணா என்னவேணா சொல்லிக்கோங்க.. ஆனா எனக்கு எது நியாயமோ அதான் செய்வேன்.....’ என்றுவிட்டான் முடிவாய்.

ஆனால் அவன் முடிவுகளை செயல்படுத்த பெரும் தடையாய் இருப்பது கமலியே.. அவள் ஒருத்தியை சரி கட்டுவது என்பதே வனமாலிக்கு பெரும்பாடு...

குடும்பத்தில் அத்தனை பேரை சமாளிப்பவன்.. அவன் நடத்திக்கொண்டு இருக்கும் தொழில்களில் எத்தனை ஆட்களை சந்திக்கிறான்... எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறான்.. ஆனால் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பதுபோல் தான் இருக்கும் கமலியின் செயல்பாடுகள்.

இவள் இப்படிதான் செய்வாள் என்றே யூகித்து வந்தவன், அவன் நினைத்தது போலவே அவள் அமைதியாகவிட,

“வர புதன் கிழமை, சாயங்காலம் ஆறு மணிக்கு மேல வந்தனாக்கு நிச்சயம்.. நம்ம மண்டபத்துல தான்.. கண்டிப்பா நீயும் அத்தையும் வரணும்..” என்றான் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தே..

“ம்ம்... எந்த மண்டபம்.. ஏன்னா உங்களுக்கு தான் ஆறு ஏழு கல்யாண மண்டபம் இருக்கே??” என்றாள் நக்கலாய்..
கமலிக்கு தெரியும், இவர்களின் குடும்பத்தில் ஒரு விசேசம் என்றால் அது எந்த மண்டபத்தில் நடக்கும் என்பது.

அப்படியிருந்தும் அவள் கேட்டது ஏன் என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை.. ‘நம்ம மண்டபத்துல...’ என்று சொல்லிவிட்டானாம். அதை குத்திக் காட்டவே அவள் அப்படியொரு கேள்வி கேட்டது.

“ஏன் உனக்குத் தெரியாதா???”

“ம்ம்ஹும்...” என்று தோள்களை குலுக்கிவிட்டு, பார்வையை கமலி அலட்சியமாய் திருப்ப, அதே நேரம் சிவகாமி
அழைத்துவிட்டார் அவளை..

அம்மாவிடம் இருந்து அழைப்பு என்றதுமே, வனமாலி முதலில் அங்கே சென்றுவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறான் என்பது புரிபட்டுவிட, வழக்கமாய் தன் கண் இடுக்கல் பார்வையை அவனை நோக்கி வீசியவள்,

“ஹலோ ம்மா...” என்றாள்.

“கமலி.. வனா அங்க வந்தானா???”

“ம்ம்..”

“கிளம்பிட்டானா??”

“ம்ம்ஹும்..”

“ஓ..!! பேசிட்டு இருக்கீங்களா???” என்று கேட்டவரின் குரலில் மெல்லிய நகை எட்டிப் பார்த்ததுவோ என்னவோ,

“இப்போ எதுக்கும்மா கால் பண்ண??” என்றாள் இவளோ குரலில் கடுப்பை தேக்கி.

“சரி சரி.. நான் தான் அங்க அனுப்பி வச்சேன்.. பார்த்துக்கோ கமலி.. கண்டிப்பா நம்ம போகணும்...” என்று சிவகாமி பேசிக்கொண்டே இருக்க,

“ம்மா மதியம் வீட்டுக்கு வந்துப் பேசிக்கிறேன்..” என்று வைத்துவிட்டாள்.

அவள் பேசும் வரைக்கும் காத்திருந்தவனோ, “உன்னோட கடுப்பை எல்லாம் ஏன் அத்தை மேல காட்டுற கமலி.. அவங்க இத்தனை வருசமா பட்டது எல்லாம் போதாதா..” என,

“இனியும் அப்படி பட்டுட கூடாதுன்னு தான்..” என்றவள், “தென்.. அவங்க என் அம்மா.. எனக்கு இருக்க ஒரே சொந்தம்.. என்னோட கோபமோ கடுப்போ இல்லை பாசமோ அவங்கக்கிட்ட மட்டும் தான் நான் காட்ட முடியும்..” என்றாள் முன்னிருந்த கடுப்பையும் அதிகரித்து..

அவளையே ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்தவன், “ம்ம்ம்ம்...” என்று ஒரு யோசனையோடு தலையை ஆட்டி,

“சரி.. நீயும் கண்டிப்பா வரணும்..” என்றான் திரும்ப.

“ம்ம்ம் சொந்த பந்தத்துக்கு எல்லாம் நீங்க மட்டும்தான் போய் இன்வைட் பண்றீங்களா??!!”
“இல்லை.. ஆனா முக்கியமானவங்களுக்கு நானும் போய் இன்வைட் பண்றேன்...” என்று அவள் பாணியிலேயே பதிலை சொல்ல,

“ஓகே...” என்றவள் திரும்ப மௌனமாகிவிட,

“ம்ம்ச் கமலி.... உன்னோட வலி எல்லாம் எனக்கு புரியுது.. ஆனா நீ இப்படி இருந்து என்னாகப் போகுது சொல்லு??” என்றான் கொஞ்சம் தன்மையாய்..

அவனின் குரலில் தோன்றிய இந்த மாற்றம், அவளுக்கு புதிது. ஏனெனில் பல வருடங்கள் விடுதி வாசத்தில் கழித்தவள், ஊருக்கு வரும்போது மட்டுமே இவர்களை எல்லாம் காண நேரும். அதிலும் வனமாலியை மட்டுமே அவளின் வீட்டில் காண நேரும். சொந்தம் என்பதில் அதாவது அவர்களின் குடும்பத்தில் ரத்த சொந்தத்தில் அவன் மட்டுமே வந்து செல்பவன்.

மகுடேஸ்வரன் இருக்கையில் எப்போதுமே வனமாலி அங்கே வந்து செல்வான். இப்போதும் அப்படித்தான். ஆனாலும் அப்போதும் சரி இப்போதும் சரி அவனின் வருகையோ பேச்சோ எதுவும் கமலிக்கு பெரியதாய் இருக்காது. அப்படி இருந்துவிடவும் கூடாது என்பதிலும் அவள் உறுதியாய் இருந்தாள்.

ஆனால் இன்றோ, வனமாலி அவனின் பாணியில் அல்லாது கொஞ்சம் இறங்கிவந்து தன்மையாய் ஏன் கரிசனமாய் கூட பேசிட,

‘என்னதிது...’ என்றுதான் பார்த்து வைத்தாள் கமலி..

“உன்னோட எல்லா கருத்தும் சரிதான்... பட் அத்தையை கொஞ்சம் நினைச்சு பாரேன்...”

“என்னோட இல்லை.. எங்களோட வலி.. நானும் என் அம்மாவும் அனுபவிச்ச.. அனுபவிக்கிற இந்த வலி, யாராலும் புரிஞ்சுக்க முடியாது.. அம்மாவுக்கு இதெல்லாம் கடந்த முப்பது வருசமா.. அதாவது அவங்களுக்கு கல்யாணம் ஆனதுல இருந்து. ஆனா எனக்கு?? நான் பிறந்ததுல இருந்து..

அப்போ எனக்கு உணர்ந்திருக்காது. ஆனா விபரம் தெரிய தெரிய.. நான் பார்த்தது எல்லாம்...” என்று பேசிக்கொண்டே போனவள், இதெல்லாம் ஏன் இவனிடம் நான் சொல்லிட வேண்டும் என்ற எண்ணம் எழவும் அப்படியே வார்த்தைகளை விழுங்கி, கண்களை இறுக மூடிக்கொள்ள, அவளின் வேதனையை அப்படியே வனமாலியால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

“என்னால புரிஞ்சுக்க முடியும் கமலி.. நான்...” என்று ஆரம்பித்தவனை, கைகளை நீட்டி அவனின் பேச்சை நிறுத்தியவள்,

“இன்வைட் பண்ண வந்தீங்க... முடிஞ்சதுல்ல...” என்றாள் கிளம்பு என்ற தோரணையில்..

எத்தனை சொன்னாலும் இவள் கேட்கப் போவதில்லை. இப்போது தானே இங்கே வந்து உட்காந்து இருக்கிறாள், போக போக எல்லாம் புரியும்.. முக்கியமாய் என்னை புரியும்.. அப்போது இவளின் மனதும் மாறும் என்று வழக்கம்போலவே தனக்குள் சொல்லிக்கொண்டவன்,

“ஆனா நீ அத்தையோட வரணும்...” என்று விரல் நீட்டி சொல்லிவிட்டு செல்ல, அமர்த்தலாய் பார்த்துகொண்டு இருந்தாள் கமலி.

வனமாலி கிளம்பிச் சென்ற ஐந்தாவது நிமிடம், எழுந்து வெளியே வந்தவள் சங்கிலிநாதனிடம் “பார்த்துக்கோங்க...” என்றுமட்டும் சொல்லிவிட்டு தான் காரில் கிளம்பிட,

“ஆண்டவா நீதான் இவங்களைப் பார்த்துக்கணும்.. இனியாவது ஒரு நல்லது செய்யேன் ப்பா...” என்று இறைவனை துணைக்கு அழைத்தார் சங்கிலிநாதன்.

கமலிக்கு காலையில் இருந்த அமைதி இப்போதில்லை. முற்றிலும் இல்லை.. ‘நான் கேட்டேனா?? இல்லை நான் கேட்டேனா?? இவங்க எல்லாம் வந்து கூப்பிடலைன்னு யார் அழுதா...’ எனும்போதே,

‘பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ இவங்க எல்லாம் நாம குடும்பம் டா... அதை ஏத்துக்கிட்டு தான் ஆகணும்...’ எனும் சிவகாமியின் குரல் அவளுள் ஒலிக்க,

“சொந்தமாம் சொந்தம்... எங்க போச்சு இந்த சொந்தம் எல்லாம் இத்தனை வருசமா.. ஒரே ஊர்ல.. ஒரே தெருவில இருந்தாலும் கூட எங்க போச்சு இதெல்லாம் இத்தனை வருசமா.. ஒருத்தர் வீட்டுக்கு ஒருத்தர் போகாம வராம.. என் அம்மாக்கு ஒண்ணுன்னா ஏன்னு கூட கேட்காம. ச்சே...” என்று கடிந்தவளின் கையில் ஸ்டியரிங் படாத பாடு பட்டது.

மகுடேஸ்வரன் – சிவகாமி தம்பதியினரின் அருந்தவ புதல்வியே கமலி.. வனமாலி மகுடேஸ்வரனின் உடன் பிறந்த அக்கா மணிராதாவின் மகன்.. தம்பி மற்றும் தன்கையுண்டு. வந்தனா, கோவர்த்தன்.. இரட்டையர்கள். கோவர்த்தன்.. அவன் மனைவி பமீலா..

பமீலா வேறாரும் இல்லை.. மகுடேஸ்வரன் – இந்திரா தம்பதியினரின் புதல்வி.. இந்திராவோ, மணிராதாவின் கணவன் வழி உறவு.. ஆக அனைவரும் ஒன்றுக்குள் ஒன்று..

சிவகாமி.. கமலி தவற...

உறவுகள்... பிணைப்போடு இருந்தால் அது யாவர்க்கும் நலம்.. பிணக்குகளோடு இருந்தால் அது யாருக்குத்தான் நலம்.. இவர்களுக்குள் இருக்கும் பிணக்குகள் எல்லாம் மாறி என்றுதான் ஒரு பிணைப்பு வரும்..

வனமாலியின் ஒவ்வொரு முயற்சிகளும் வெற்றிபெறுமா?? இல்லை வழக்கம் போலவே கமலி அதனை சுலபமாய் உடைத்துவிட்டு, தானும் தன் தாயும் என்ற கூண்டில் இருந்துவிடுவாளா??

யாரறிவார்... காலம் மட்டுமே பதில் சொல்லும்..
 
Hai sarayu kaa.. :love::love::love:
Intha novel name sooper... Unga stories ellame manusangaloda feelings kooda pugunthu vilayaadum paapom ithu eppadi nu.. athu ennamo teriyala unga stories aa follow panna mudiyaama late aagiruthu enaku.. ini follow panniralaam.. ;);)

And teaser illama potathuku thank youuuuu.. achoo niyabaga paduthiteno.. :D:p
 
Top